துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

27.3.18

’’கம்பன் தொட்ட சிகரங்கள்’’-கம்பன் விழா உரை,நூல் வெளியீடு







1939 ஆம் ஆண்டு தொடங்கி 80 ஆண்டுகளாக இடையறாது நடந்து வரும் காரைக்குடி கம்பன் விழாவில் இரண்டாம் நாள் மாலை 29/3/18 5 மணி அளவில் 

                  கம்பன் தொட்ட சிகரங்கள் 

என்ற தலைப்பில் என்ற தலைப்பில் [கம்பனடி சூடி திரு பழனியப்பன் அவர்கள் தன் பெற்றோர் நினைவாய் நிறுவி இருக்கும்][  அறக்கட்டளைச் சொற்பொழிவை ஆற்ற இருக்கிறேன். தொடர்ந்து அதே மேடையில் கோவை விஜயா பதிப்பகத்தாரின் தயாரிப்பாக - உரையின் நூல் வடிவமும்  வெளியிடப்படுகிறது
 தமிழ்நாடு  இசை மற்றும் கவின்கலைப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் பிரமிளா குருமூர்த்தி அவர்கள் நூலை வெளியிடுகிறார்கள் தமிழ் ஆர்வலர்களும் கம்பன் கவி கேட்கும் ஆவல் கொண்டோரும் விழாவுக்கு வருகை புரிந்து சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறேன்.







’’கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்த்த காரைக்குடியில் கம்பன் புகழ் கேட்டுக் கன்னித்தமிழின் கரம் பிடித்தவள் நான் என் தாய் சோபனாதேவி அவர்கள் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றியதும் நான் உயர்நிலைக்கல்வி வரை பயின்றதுமான மீனாட்சி பெண்கள் உயர்நிலைப் ( இப்போது மேல்நிலைபள்ளியில் நடைபெற்றுவந்த கம்பன் விழாச்  சொற்பொழிவுகளே தாய்ப்பாலுக்கு நிகரான தமிழ்ப்பாலை  ஊட்டி என்னை வளர்த்திருப்பவை இளம் வேதியியல் பட்டம் பெற்ற நான் முதுகலைப் படிப்பைத் தமிழாக வரித்துக்கொள்ளவும், தொடர்ந்து இன்று வரை என் தமிழ்க்காதலைத் தொடரவும் எனக்கு அடித்தளம் இட்டவை கம்பன் விழாமேடைகள் மட்டுமே

பார்வையாளர் அரங்கிலிருந்து நான் வியந்து பார்த்துக்கொண்டிருந்த கம்பன் மேடை ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர்கம்பனடிப்பொடி சா கணேசன் அவர்களின் அணுக்கச் சீடராய்த் தேனீயைப்போன்ற சுறுசுறுப்போடும் கம்பன் மீது கொண்ட கரை காணா பக்தியோடும்  கம்பன் விழாக்களில் செயலாற்றிக்கொண்டிருந்த  கம்பன் அடிசூடி திரு பழ பழனியப்பன் அவர்கள். எங்கள் குடும்ப நண்பரான அவரோடும் அவர் துணைவி தெய்வானை ஆச்சி அவர்களோடும் நெடுநாள் இடைவெளிக்குப்பின் எங்கள் தொடர்பு புதுப்பிக்கப்படகடந்த சில மாதங்களாக அவ்வப்போது தொடர்ந்து என்னோடான இலக்கிய உரையாடலில் இருந்து வந்தார் அவர்.  தற்போது காரைக்குடி கம்பன் கழகச்செயலாளராகவும் இருக்கும்  அவர்இந்த ஆண்டு கம்பன் விழாவில் தன் பெற்றோரின் பெயரால் தான் அமைத்திருக்கும் அறக்கட்டளைச் சொற்பொழிவை நான் ஆற்ற வேண்டுமென்றும் அந்த உரையை நூலாகவும் வெளியிடுவதால் அதை உடன் எழுதித் தர வேண்டும் என்றும் நானே எதிர்பாராத ஒரு நேரத்தில் ஓர் அன்புக்கட்டளை விடுத்தார்

அது செயல்வடிவம் பெற்று நூலாவதிலும் காரைக்குடி கம்பன் விழா மேடையில் வெளியிடப்பெறுவதிலும் அளப்பரிய மகிழ்வு கொள்வதோடு வாழ்க்கை எனக்கு நல்கிய பெரும் பேறுகளில் ஒன்றாகநான் கற்ற தமிழுக்குக் கிடைத்த கௌரவமாக அதனை ஏற்றுத் தலை தாழ்த்தி வணங்குகிறேன்.

காரைக்குடி கம்பன் விழாவின் சீர்மை குறித்து 
காரைக்குடி கம்பன் விழா-ஒரு முன்னோட்டம் என்ற தலைப்பில்
 பின் வரும் என் கட்டுரை தினமணி.காமில் வெளிவந்திருக்கிறது.


காரைக்குடி கம்பன் விழா - ஒரு முன்னோட்டம்
எம். ஏ.சுசீலா

வளமான நிலங்கள் இல்லாத வறட்சி மண் என்றாலும் வற்றாத அன்பை கபடமற்ற பிரியத்தை மழையெனப்பொழியும் மண் செட்டி நாட்டு மண். .சைவமும் தமிழும் தழைத்தோங்கி வளர்ந்த அந்தக் காரைக்குடி மண்தான் கம்பன் புகழ் பாடிக்கன்னித் தமிழ் வளர்ப்பதில் இன்றுவரை தமிழகத்துக்கே முன்னோடியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது, இது,உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை.

முதன் முதலாக  1939 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காரைக்குடி கம்பன் விழா என்னும் இலக்கியத் திருவிழா, தொடர்ச்சியாக எண்பது ஆண்டுகளை நிறைவு செய்து தன் முத்து விழாவைக்காணும் மைல்கல்லான ஆண்டு இது.

 ’’கம்பநாடன் கவியிற்போல் கற்றோர்க்கிதயம்’’ வேறெதிலும் கனிவதில்லை என்பதாலேயே புகழ்க்கம்பன் பிறந்த தமிழ்நாடு என்றும் ‘’கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்..’’ என்றும் கம்பனின் புகழை வானளவு உயர்த்துகிறான் பாரதி. அத்தகைய மகா கவியான கம்பன் - பங்குனி அத்தத் திருநாளன்று , திருவெண்ணெய் நல்லூரில் தன் காப்பியமான இராம காதையை அரங்கேற்றியதை நினைவு கூரும் வகையில்- ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மகம் தொடங்கி பூரம் ,உத்தரம், அத்தம் வரை தொடர்ச்சியாக முதல் மூன்று நாட்கள்  காரைக்குடியிலும், இறுதி நாளன்று நாட்டரசன் கோட்டை கம்பன் சமாதியிலும் நிகழும் வகையில் வடிவமைக்கப்பட்டு அதே பாரம்பரியம் இப்போது வரை தொடர்ந்து பின்பற்றப்பட்டும் வருகிறது.. கம்பனடிப்பொடியின் பாசறையில் பயின்று வளர்ந்த அணுக்கத் தொண்டரும் தீவிர கம்பன் பக்தருமான தற்போதைய காரைக்குடி கம்பன் கழகச்செயலர் திரு பழ பழனியப்பன் அவர்கள், திரு சா கணேசன் அவர்கள் கட்டிக்காத்த அதே தரத்தோடு சமகால கம்பன் விழாக்களை அமைக்க, தீவிர அர்ப்பணிப்புடன் இயங்கி வருகிறார்.

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் புகழ் பரப்புவதொன்றையே தன் வாழ்நாள் இலக்காகக்கொண்டு கம்பனின் மேல் கொண்ட தீராக்காதலால் தன் பெயரையே கம்பன் அடிப்பொடி என்று மாற்றிக்கொண்டவர்
 ( விடுதலைப்போராட்டத்தின்போது சட்டை அணிவதைத் துறந்து சட்டை அணியாத சா கணேசன் என்று பெயர் பெற்ற ) திரு சா கணேசன் அவர்கள்.  கம்பன் அடிப்பொடி அவர்கள் முன்னெடுத்து நடத்திய அந்தக்கம்பன் விழாக் காலங்கள் மேடைத் தமிழின் பொற்காலங்கள்கொஞ்சமும் நீர்த்துப்போகாத செறிவான - ஆழமான -விரிவான சொற்பொழிவை நயத்தக்க நாகரிகத்தோடு ஆற்றும் ஜாம்பவான்களால்  மட்டுமே  எழிலூட்டப்பட்ட தமிழ் இலக்கியஅரங்கு ,கம்பன் விழா அரங்கமும் அதன் மேடைகளும்..!  உரையின் தலைப்பை விட்டு இம்மியும் பிசகாத பேச்சாளர்களுக்கு மட்டுமே இடமளிக்கும் கறாரான கம்பன் அரங்கம் அதுஎத்தனை எத்தனையோ  மேதைகளும், முன்னோடித் தலைவர்களும்,தமிழ் அறிஞர்களும்  கம்பன் பால்  தாங்கள் கொண்ட ஆழங்காற்பட்ட புலமையால்  அந்த மேடைகளை அலங்கரித்திருக்கிறார்கள்

கம்பன் விழாவின்  ஒரே  இலக்கு  கம்பனின் தமிழ்.. முன்னிறுத்தப்பட வேண்டும் என்பது மட்டுமே. புலவர் என்றும் அரசியல் தலைவர் என்றும் சமயவாதி என்றும் பிற சமயத்தவர் என்றும் எந்த பேதமும் பாராட்டாத மேடை அது.   கம்யூனிஸ்ட் கட்சியின் பெருந்தலைவர் ஜீவானந்தம், சிலம்புச்செல்வர் பொ சிவஞானம், வாகீச கலாநிதி கி வா ஜகந்நாதன், தமிழ்க்கடல் இராய சொக்கலிங்கனார், குன்றக்குடி அடிகளார் [முன்னவர்],பன்மொழி அறிஞர் தெ பொ மீனாட்சி சுந்தரனார் [ம கா பல்கலைக்கழகத் துணைவேந்தராய் இருந்தவர்],  மார்க்சிய அறிஞரும் கம்பனில் பெரும் தேர்ச்சி கொண்டவருமான எஸ் ஆர் கே [ எஸ் ராமகிருஷ்ணன் -மதுரையில்  ஆங்கிலப்பேராசிரியராக இருந்தவர்;   கம்பனும் மில்டனும், கம்பனும் ஷேக்ஸ்பியரும், அரசியர் மூவர், தம்பியர் இருவர் என்று கம்பனைப்பற்றிய பல நூல்கள்படைத்தவர்] , தூத்துக்குடி ஆங்கிலப் பேராசிரியர் சீனிவாச ராகவன், பெரும் பேராசிரியர் ஞானசம்பந்தம் அவர்கள் [ இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் என்ற அரிய கம்பன் சார்ந்த நூலின் ஆசிரியர்; கா பல்கலத் தமிழ்த் துறையின் தலைமைப்பொறுப்பேற்றவர்] , திருச்சி பேராசிரியர்கள் இராதாகிருஷ்ணன்,சத்திய சீலன்,சென்னை பேராசிரியர் ரா இந்திரா, கோவைப்பேராசிரியர் சிவகாமசுந்தரி, புலவர் கீரன், நீதியரசர்கள் எஸ் மகராஜன், மு மு இஸ்மாயில், கவிக்கோ அப்துல் ரஹ்மான் என்று தங்கள் சொல் வளத்தால் நா நயத்தால் கருத்துச்செறிவால் கம்பன் விழா மேடைகளை மெருகூட்டாத தமிழ் அறிஞர் எவரும் அன்று இல்லை...


காரைக்குடி கம்பன் விழா நிகழ்வுகளில்  பெரியோர்- சிறியோர்,  பதவியில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பேதம் பேச்சாளர்களுக்குள் என்றுமே பாராட்டப்பட்டதில்லைகருத்தை ஒட்டியும் காலக்கணக்கை ஒட்டியும் பேச்சு அமையாவிட்டால் மேடையிலேயே அவர்கள் நிறுத்தப்பட்டு, தடுக்கப்பட்ட சம்பவங்களும் கூட இங்கே அரங்கேறி இருக்கின்றன. முற்பகல் நிகழ்வு காலை 9 30க்கு என்றால் கம்பனடிப்பொடி அவர்களின் கணீர்க்குரல் 
‘’கம்பன் வாழ்க ! கம்பன் புகழ் வாழ்க ! கன்னித் தமிழ் வாழ்க!’’
என்ற முழக்கத்தை 9 15க்கே தொடங்கி விடும்.  பார்வையாளர்களும் அவ்வாறே எதிர் முழக்கமிட, அடுத்த முழக்கம்  5 மணித்துளி முன்புஇறுதியாக மிகத் துல்லியமாக 9 30.க்கு - மேடையில் தலைமை ஏற்பவரே வராமல் போனாலும் - எவருக்காகவும் காத்திராமல் விழா நிகழ்ச்சிகள் தொடங்கி விடும். .[நாம் அதை வைத்து கடிகாரத்தைக்கூட சரி செய்து கொண்டு விடலாம்.அத்தனை கறாரான நேரக்கணக்கு]..

கம்பகாவியத்தை எரிக்கத் துணிந்த மாற்றுத் தரப்புக்கும்  கூடத் தமிழ் என்னும் தகுதிக்காகவே இடமளித்த காரைக்குடி கம்பன்கழகத்தினர் ,கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல்வராய் இருந்த காலகட்டத்தில் ஒருமுறை கவியரங்கத் தலைமைக்கு  அவரை அழைத்திருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் வர இயலாமல் அவர் சற்று தாமதமாக வந்து சேர முதல்வர் என்றும் பாராமல், அவருக்காகக் காத்திராமல் விழா தொடங்கப்பட்டதும் திரு கருணாநிதி அவர்களும் அதை இலகுவாக ஏற்றுக்கொண்டதும் தமிழ் இலக்கிய மேடையின் தகுதிக்கு அளிக்கப்பட்ட முன்னுதாரணமான கௌரவங்கள்.

 காரைக்குடி கம்பன் விழாவோடு தொடர்பு கொண்ட எம் ஜி ஆர் குறித்த ஒரு சுவையான சம்பவமும் உண்டு.  1967ஆம் ஆண்டு! அப்போதுதான் எம் ஆர் ராதாவோடான துப்பாக்கிச்சூடு சம்பவத்திலிருந்து மீண்டிருந்த எம் ஜி ஆர்., தற்செயலாகக் காரைக்குடிக்கு வருகை தந்திருந்தார். சா கணேசன் அவர்களின் அழைப்பை ஏற்று அவர் விழாவுக்கு வந்து விட, பள்ளி முகப்பிலிருந்து கூட்டம் பாய்ந்து சூழ்ந்தபடி அவரை நெருக்கி  அழுத்தியது ..ஒரு வழியாக  விழா நிகழும் இடத்துக்கு  வந்து சேர்ந்தார் எம் ஜி ஆர். அவரைக்காண அலைமோதிய மக்கள் திரளை சமாளிக்க வழி தெரியாமல் தங்கள் கொள்கையைக்கூடச் சற்றே தளர்த்தியபடி ஒரே ஒரு நிமிடம் மேடையில் ஏறி மக்களுக்குக் காட்சி அளிக்குமாறு கம்பன் கழகத்தார் அவரை வேண்டிக்கேட்கும் நிலை; எம் ஜி ஆரோ, அந்தத் தமிழ் மேடையில் ஏறும் தகுதியும் புலமையும் தனக்கில்லை என்று மறுத்தபடி மேடைக்குக் கீழுள்ள தரைப்பகுதியில் மட்டுமே இரு முறை  குறுநடை போட்டு  மக்களைப்பார்த்து விட்டுத் தன் ரசிகர் கூட்டத்தால் - தன் புகழ் வெளிச்சத்தால் அந்த இலக்கிய அரங்கத்துக்கு எந்தக் குறைவும்  ஏற்படலாகாது என்று  விரைவாக அங்கிருந்து விலகிச் சென்றார். அதற்கு எம் ஜி ஆரின் பெருந்தன்மை மட்டும் காரணம் அல்ல; அந்த அளவுக்குத் தன்னைத் தகுதிப்படுத்தி உயர்ந்த தளத்தில் வைத்துக்கொண்டிருந்த அந்த அரங்கின் தனித் தன்மையே அவரிடமிருந்தும் அந்தப்பெருந்தன்மையை வருவித்திருக்கிறது.

சோழனோடு ஏற்பட்ட பிணக்கில்
’’மன்னவனும்   நீயோ?  வளநாடும்   நின்னதோ?
உன்னையறிந்  தோதமிழை  ஓதினேன்? – என்னை
விரைந்தேற்றுக்  கொள்ளாத  வேந்துண்டோஉண்டோ
குரங்கேற்றுக்  கொள்ளாத  கொம்பு!’’
 என்று புலமைச்செருக்கோடு பாடிச்சென்ற கம்பனின் கவிப்பாரம்பரியத்தை மட்டுமன்றி அவனது தன்மதிப்பைக் காப்பதையும்  தங்கள் கடமையாய்க்  கைக்கொண்ட சான்றோர் நடத்திய விழா அது என்பதாலேயே அங்கே அரசியல்வாதிகள் துதி பாடப்படாமல் - அதே அரசியல்வாதிகள் மதிப்போடு அணுகும் அரங்காக அந்த விழாக்கள் அமைந்தன என்பதை இந்தக்காலச்சூழலில் நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்

‘’ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்
பட்டிமண் டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்;
பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமுஞ் செய்யாது அகலுமின்’’

என்று பட்டிமண்டபம் என்னும் சொல்லை முதலில் ஆளுகிறது தமிழின் முதல் காப்பியமான சிலம்பு. இரட்டைக்காப்பியங்களின் பின்புலமாக அமைந்த குறிப்பிட்ட காலச்  சூழலில் பட்டிமண்டபம் என்பது ஒன்றுக்கொன்று மாறுபட்ட இரு சமயங்கள் - குறிப்பாக சமண பௌத்த சமயங்கள், சற்றுப்பிற்பட்ட காலத்தில்  சைவ வைணவ சமயங்கள்-  தங்கள் கோட்பாடுகளை தருக்கங்களை முன் வைத்து வாதிடும் மேடையாகவே அது இருந்திருக்கிறது.
அப்போதும் கூட நம் கருத்துக்கு ஒத்து வராதவரோடு- அதை  உடன்படாதவர்களோடு சீற்றமோ பூசலோ கைக்கொள்ளாமல் வாதிடுக’ 
பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமுஞ் செய்யாது அகலுமின்  
என்றபடி மேடை நாகரிகத்தையும் அது கூடவே கற்றுத் தருகிறது.

தமிழக  அரங்குகளைப்பொறுத்தவரை பட்டிமண்டபம் என்னும் வாதப்போரை  இலக்கிய மேடைகளில் முதன்முதலாக அறிமுகம் செய்து, காலப்போக்கில் அது பரவலாகப் பல இடங்களில் நிலைபெற அடியெடுத்துக்கொடுத்ததும் கூட காரைக்குடி கம்பன் விழாக்களே. 

பட்டிமண்டபம் என்ற பெயரில் இலக்கியத்தையும் மனித வாழ்வியலையும் கொச்சைப்படுத்தியபடி நடந்தேறும் அருவருப்பும் ஆபாசமும் மலிந்த பல மேடைகள் உண்மையான தமிழ் ஆர்வலர்களை வெட்கித் தலை குனிய வைத்துக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் எஸ் முத்திரை வழங்கும் அளவுக்கு மிகத் தரமான பட்டிமண்டபங்களை நடத்திக்காட்டியிருக்கிறது காரைக்குடி கம்பன் விழா.  துணுக்குத் தோரணங்களுக்கோ , கிச்சு கிச்சு மூட்டும் மூன்றாந்தரமான நகைச்சுவைக்கோ, சரக்கில்லாமல் பூ சுற்றுவதற்கோ அங்கே இடமோ அனுமதியோ என்றுமே வழங்கப்பட்டதில்லை. 10 மணித்துளி என்றாலும் செறிவான அடர்த்தியான கருத்துக்களுக்கு மட்டுமே இடம் என்ற தெளிவான இலக்கும் வரையறையும் அமைப்பாளர்களால் வகுக்கப்பட்டிருக்க,, அந்த எல்லைக்கோட்டைத் தாண்டாமல் அந்த அரங்குக்குள் வட்டாட வல்ல பேச்சாளர்களே அழைக்கப்பட்டார்கள். அவர்களால் விழாவும் விழாவின் தரத்தால் அவர்கள் புகழும் உயர்ந்ததற்கான அடிப்படை அதுவே.


பட்டிமண்டபத்தின் அடுத்த பரிணாமப்படிநிலையான வழக்காடு மன்றம்,சுழலும் சொற்போர் போன்ற இன்றைய மேடை நாடகங்களுக்குக்  கால்கோள் அமைத்துத் தந்ததும் காரைக்குடி கம்பன் விழாவே. பட்டிமண்டபத்தில் தீர்ப்பு சொல்லப்பட்ட மறு நாள் அல்லது அடுத்த அரங்கில் அது மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் ’’மேல் முறையீட்டு அரங்கம்’’ என்ற  ஒன்றைப் புதுமையாக அறிமுகம் செய்து இலக்கிய ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தினார் கம்பன் அடிப்பொடி சா கணேசன் அவர்கள். பெரும்பாலும் நீதியரசர்கள் மகராஜன், இஸ்மாயில் போன்றோர் நடுவராய் அமையும் அந்த மன்றத்தில் இரு தரப்புக்களிலிருந்தும்  சிறந்த பேச்சாளர்கள் இருவர் [முதல்நாள் பங்கு கொள்ளாத வேறு அறிஞர்கள்] தொடர்ந்த வாதங்களை முன் வைக்க , இறுதித் தீர்ப்பு வழங்கப்பெறும்.

பண்டைக்காலத்தில் நூல் அரங்கேற்றங்கள் மிக உயர்ந்த தரத்தில் நடந்தேறி இருக்கின்றன. கற்றறிந்த சான்றோர் பலர் முன் நூல்களை வாசித்து  அரங்கேற்றி அவர்கள் எழுப்பும் ஐயங்களுக்கும் வினாக்களுக்கும் ஏற்ற விடைகளை வழங்கிய பின்னரே அந்த நூலின் தகுதிப்பாடு உரைத்துப்பார்க்கப்பட்டு ஏற்கப்பட்டிருக்கிறது. கம்பனின் இராம காதை அரங்கேற்றம் நிகழ்ந்ததும் அப்படித்தான்..தன் தகுதியை உரைத்துக்காட்டிய கம்பனைப் பேசும் பேச்சாளர்களின் தரத்தையும் உரைத்துப்பார்த்த பிறகே கம்பன் விழா மேடையில் ஏறி சொற்பொழிவாற்றும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்திருக்கிறது. இதுவும் காரைக்குடி கம்பன் விழாவின் தனித்துவங்களில் ஒன்று.

தாய்க்கழகமான காரைக்குடி கம்பன் கழகம் நிகழ்த்திய பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளே பின்னாளில் சென்னை கோவை ஆகிய பல நகரங்களிலும்- வெளிநாடுகளிலும் கூட- கம்பன் கழகங்கள் அமையவும், கம்பன் விழாக்கள் நடைபெறவும் பல புதிய இரண்டாம் கட்டப் பேச்சாளர்கள் உருபெறவும் அடித்தளம் இட்டன.

ஓர் ஊடகத்தை மலினமாக்குவதை நியாயப்படுத்திக்கொள்ள, பேச்சரங்கம் தொடங்கித் திரையரங்கம் வரை நாம் செய்து கொள்ளும் சமரசம்...சமாதானம்.
மக்கள் விரும்பவதை நாங்கள் கொடுக்கிறோம்என்பதே . கம்பன் விழா நிகழ்வுகள் இத்தகைய சமரசங்களுக்கு எப்போதுமே தங்களை உட்படுத்திக்கொண்டதில்லை. அடர்த்தியான ஆழமான சொற்பொழிவுகளைத் தந்தால் மக்கள் ஆரவாரத்தோடு அதை எதிர்கொள்வார்கள் என்பதற்கு சாட்சியாகவே கம்பன் திருநாள் நிகழ்வுகள் நடந்தேறி இருக்கின்றன.
’’வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும்’’ என்பது போல் தரமானவற்றைக்கொடுத்தால் பார்வையாளர்கள் ஒருபோதும் அவற்றைப் புறமொதுக்குவதில்லை. தரமானதைத் தரத் தெரியாமல் –அதைத் தருவதற்கான அடிப்படை முயற்சியைக்கூட மேற்கொள்ளாமல்  நுனிப்புல் மேய்ந்தபடி - என்றோ புளித்துப்போன மாவை மலிவான வாய்ச்சாதுரியங்களோடு பரிமாறியபடி தமிழை விற்றுப்பிழைக்கும் சொல் வியாபாரிகளின் கூட்டமே இடறி விழுந்த இடமெல்லாம் நிறைந்திருக்கும் இந்நாளில்‘‘அந்த நாளும் வந்திடாதோ ‘ என்று  ஏங்க வைத்து விடும் கம்பன் விழாத் திருநாள் நினைவுகள் இன்றைய தலைமுறைக்கு  ஓர் உயர்கனவு [ UTOPIAN DREAM] போலக் கூடத் தோன்றலாம்.

இன்றைய கல்வி நிறுவனங்கள் பலவற்றில் மேடைத்தமிழ் என்றே கூட ஒரு பாடப்பிரிவு இடம் பெற்றிருக்கிறது. அதைப்பாடமாகக்கற்பிப்பதை  விட இத்தகைய தரமான இலக்கிய விழாக்களுக்கு ஒரு கல்விச்சுற்றுலா போல அவர்களை அழைத்துச்சென்றால் லகர ளகர ழகர உச்சரிப்பில் தொடங்கித் தமிழ் பேசுவதற்கே தடுமாறித் தத்தளிக்கும் இன்றைய இளம் தலை முறைக்கு சரளமான இலக்கியத் தமிழ் மீது ஒரு தூண்டுதல் பிறக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பொருளில் தொடர்ந்து 20 முதல் 40 மணித்துளி வரை நூல் பிசகாமல் கருத்துச்செறிவோடு உரையாற்றுவது எப்படி என்பதை அனுபவ பூர்வமாய்க் கற்றுத் தெளிய அதை விட மேலான வேறு வழி ஏதும் இல்லை.  

தளர்நடைப்பருவம் தொடங்கி என் தமிழ்க்காதலை வளர்த்தெடுத்ததும் தமிழ் உயர்கல்வியின்பால் என்னை ஆற்றுப்படுத்தியதும் தொடர்ந்து தமிழ் சார்ந்த என் உருவாக்கத்துக்கும் காரணமாக அமைந்தவை, காரைக்குடி மண்ணில் பிறந்து வளர்ந்த நான் கேட்டுப்பழகிய கம்பன் விழாக்களே. காரைக்குடி செக்காலையில் கம்பன் மணிமண்டபம் அமையும் வரை நான் பயின்ற மீனாட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் - மிக நீண்ட கால கட்டம்  நிகழ்ந்த கம்பன் விழாவைக்கேட்கும்  பெரும் பேறு வாய்த்தது,  நான் முன் செய்த தவப்பயன்


கம்பன் புகழும் தமிழும் வாழ்வதோடு அடுத்த தலைமுறையின் தமிழும் தழைக்க காரைக்குடி கம்பன் விழாக்கள் போன்ற தரமான இலக்கிய விழாக்கள் மட்டுமே துணை வரக்கூடும். 






LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....