துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

16.3.18

இருத்தலியலின் இலக்கிய முன்னோடி- நிலவறைக்குறிப்புகள்மதிப்புரை







உங்கள் நூலகம் மார்ச் 2018 இதழில் நிலவறைக்குறிப்புகள் குறித்து வெளியாகி இருக்கும் மதிப்புரை
நிலவறைக்குறிப்புகள் [Doestoevsky, F. Notes from the Underground, 1863]
[தமிழில் ;எம் ஏ.சுசீலா.
வெளியீடு; நற்றிணை பதிப்பகம்]
மதிப்புரை[உங்கள் நூலகம்-மார்ச் 2018]
இருத்தலியலின் இலக்கிய முன்னோடி
பேரா. முனைவர்.வை.காதம்பரி
தத்துவமும் இலக்கியமும் ஆதி காலம் தொட்டே பிரித்துப்பார்க்கமுடியாத சிக்கலான சவால்களாகவே இருந்து வந்துள்ளன.  தஸ்தோவ்ஸ்கியின் படைப்புக்கள் எல்லாமே இவ்வாறான சிக்கலான அமைப்பு கொண்டவையாக இருந்தாலும் 1863 இல் எழுதப்பட்டநிலவறைக்குறிப்புகள்’ [1863, Notes From The Underground] என்னும் இச்சிறு புதினம் தன் வடிவத்திலும் இச்சவாலை எதிர்கொண்டிருக்கிறது. இரு பாகங்களாகப் பகுக்கப்பட்டிருக்கும் இப்புதினம்இருத்தலியலில் [Existentialism] ஒரு இலக்கிய முன்னோடியாக  அறியப்பட்டுள்ளது. முதல் பாகம் தத்துவ விசாரமாகவும், இரண்டாம் பாகம் கதை சொல்லியின் தன்கதைச்சுருக்கமாகவும் அமைந்துள்ளது இதன் சிறப்பு..
பாகம் ஒன்று, எலிவளை போன்றதொரு நிலவறைக்குள் தன் எண்ணங்களுடன் தன்னைப் புதைத்துக்கொண்டநோயும் சிடுசிடுப்புமான - வேலையை விட்டு விட்ட, ஓரளவு சொத்துள்ள நாற்பது வயது மனிதனின் எண்ணச்சிதறல்கள்,- இருத்தலியலின் அவதி (Existentialist Angst) யை விவரிக்கும் தன்முகத்தர்க்கம் (Monologue). அறிவியலின் தாக்கத்தால் உருவானநியதிவாதத்திற்கும் [Determinism born out of scientific reasoning] “புனைவிய லுக்கும் [Romanticism] இடையேயான வாதப்பிரதிவாதங்களைத் தனிமையில் வெளிப்படுத்தும் புதினத்தின் எதிர்மறைநாயகனுக்கு [Antihero] பெயர் இல்லை. பெயர் அவசியமும் இல்லை. அவன், தான் சார்ந்த சமூகம் மற்றும் நாவலாசிரியரின் பிரதிபலிப்பு; இரண்டும் இரண்டும் நான்கு - நான்குதான்அதற்கு மேல் ஒன்றுமே இல்லை எனும் அறிவியலின்நியதி வாதத்தில் சிக்குண்டு சீரழிந்து போயிருக்கும் கற்பனாவாத சமூகத்தின் பிரதிநிதி, ‘’என் இருத்தல் என் சிந்தனைகளின் பொருட்டே [Cogito,Ergosum] என்னும்இருத்தலியல்தத்துவம், புதினத்தின் எதிர்மறைநாயகனை சீற்றம் கொண்டவனாகவும் அறிவியலால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தை நொறுக்கித் தள்ள வேண்டும் எனும் ஆத்திரம் கொண்டவனாகவும் காட்டுகிறது.
நிலவறை மனிதன் உண்மையில் ஆங்கிலக்கவி பைரனின் மான்ஃப்ரெட்டைப் [Manfred] போலக் கற்பனாவாதி; அறிவியலுக்கு உட்பட்ட சமூகசிந்தனையிலும்  அகப்பட்டுக்கொண்டவன். ஆகவே சமதளமற்ற – 1. உண்மையான [Real] புறந்தள்ள இயலாத நியதிகள் கொண்ட உலகம், 2. ஏற்றதான [Ideal] -அதாவது அழகும் உன்னதமுமான கற்பனைக்கெட்டா உலகம் என்ற இரண்டு உலகங்கள் உரசும் இடத்தில் மனிதனின் சிந்தனைகள் எவ்வாறு இருக்கலாம் என்பதை சித்தரிக்கும் புதினமாக இதை ஏற்றுக்கொள்ளலாம்.
நமக்குப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும் ஒவ்வொரு வாக்கியமும் உலகம் முழுமையுள்ள சிந்தனாவாதிகளால் சிலாகித்துப் பேசப்படுவது என்பது நினைவுகூரத்தக்கது. மொத்தத்தில் தஸ்தோவ்ஸ்கியின் எதிர்மறைநாயகன் வசிக்கும் இருட்டு நிலவறை , தன் மாறுபட்ட சிந்தனைகளில் சிக்கித் தவிக்கும் மனிதர்களையும், சமூகத்தையும் அடையாளம் காட்டும் ஓர் உருவகம். தஸ்தோவ்ஸ்கியின் எழுத்துக்கள்நவீன இயலுக்கு [Modernism] முன்னோடியாகும். எழுத்து என்பது நேரியல்’ [Linear] முறையில் இருக்க வேண்டும் என்னும் விதியைப் புறந்தள்ளும் இப்புதினத்தைசுய ஓட்டத்தின் [Stream Of Consciousness] முன்னோடியாகக் கொள்ளலாம்.
ஈரப்பனிப்பொழிவின் பொருட்டுஎன்னும் இரண்டாம் பாகம், இருபது வருடங்கள் பின்னோக்கிச்சென்று நாயகனை புத்தகங்கள் வாசிப்பவனாக, கற்பனாவாதியாக, அரசு அலுவலகம் ஒன்றில் சாதாரணவேலை பார்க்கும், எவராலும் ஏறெடுத்துப் பார்க்கப்படாத, சீண்டப்படாத இளைஞனாக சித்தரிக்கிறது. இவ்விளைஞனுக்குத் தான் கவனிக்கப்படவேண்டும், கேட்கப்பட வேண்டும் என்ற அவாவும் வேட்கையும் மிகுதியாகவே இருக்கிறது. இராணுவ உயர் அதிகாரியால் அலட்சியப்படுத்துவதை ஏற்காத அவன் உள்ளம், ஏதோ ஒரு விதத்தில்இலக்கியம், தத்துவம் மற்றும் ஒற்றையர் சண்டை [Duel] யின் மூலம் தான் அங்கீகரிக்கப்பட வேண்டும் என விழைகிறது. தன் நண்பர்களாலும் ஏற்கப்படவேண்டும் எனும் அவா நிறைவேறாத நிலையில் தான் சந்திக்க நேரும் லிசா என்னும் விலைமாதுவின்பால் பரிவு கொண்டு தன்னுடன் அழைக்கிறான். ஆனாலும் அவள் அவனிடம் வந்து சேரும்போது விரட்டி விடுகிறான்.
இப்புதினம்நான்கு தளங்களில் இயங்குகிறது. முதலாவதாக - நிலவறை நாயகன், உயர்ந்த, சமநிலையான [சமமான], தாழ்ந்த என்ற மூன்றுவிதமான உலகங்களில் வாழ்கிறான். அறிவியலின் நியதிவாதத்தால் இரண்டும் இரண்டும் நான்கு என்று கட்டமைக்கப்பட்ட உலகம் வெளிப்பார்வைக்கு ஒன்றுபோல் இருந்தாலும் எஜமான் வேலையாள் எனும் பாகுபாடு இதனூடே ஒவ்வொரு விஷயத்திலும் இருப்பது திண்ணம். ஒருவர் அவமானப்படுத்துவதும் மற்றவர் காழ்ப்புணர்ச்சி கொள்வதும் சமமற்ற நிலையிலேயே. இராணுவக் கனவானுக்கு  நிலவறை மனிதன் பொருட்டல்ல; நிலவறை மனிதன் ஸ்வெர்கோவ் மற்றும் நண்பர்களால் புறக்கணிக்கப்படுகிறான்; தன் வேலையாள் அப்போலானாலும் புறக்கணிக்கப்படுகிறான்;  நிலவறை மனிதன் அப்போலோனுக்கு சம்பளத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்து அவமானப்படுத்துகிறான்; லிசாவை உதாசீனப்படுத்துகிறான். ஆக, சமமின்மை போகும் வரை சமநிலை சாத்தியம் அல்ல [Equality cannot be established without getting rid of inequality] எனும் கோட்பாடு நிலைநிறுத்தப்படுகிறது
இரண்டாவதாக புதினத்தின் பின்புலமாக இருக்கும் புற அறிவுக்குட்பட்ட அப்போலோனியன் மற்றும் அக அறிவுக் குறியீடான டயானிசியன் [Appollonian and Dyonisian] எனும் கிரேக்க வாழ்வியல் கோட்பாடுகள்.
மூன்றாவதாக தஸ்தோவ்ஸ்கி, தன்னுடைய ஒரு பேட்டியில் கூறியுள்ளது போல, ‘’தணிக்கை செய்யப்பட்ட பக்கங்களுடன் சேர்த்து வாசித்தோமானால்இருத்தலியலியலின் மறுபக்கமான இறைநம்பிக்கையின் இன்றியமையாத் தன்மையை அறிய முடியும். “நிலவறை நரகத்துக்கு ஒழியட்டும் [பாகம் 1, அத் 11]
சே! இப்போது கூட நான் பொய்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன் பாருங்கள். நிலவறைக்குள் மற்றும் பதுங்கி வாழும் வாழ்வு அவ்வளவு நல்லதில்லை என்பதும் அதிலிருந்து மாறுபட்டமிகவும் வித்தியாசமான வேறு ஏதோ ஒன்றைத் தேடி அதைக்கண்டடைய முடியாமல்தான் நான் தவித்துக்கொண்டிருக்கிறேன் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். [பாகம்-2]
நிலவறை மனிதனின் மேற்கூறியசொற்களில் ‘’நிலவறை நரகத்துக்கு ஒழியட்டும் [To Hell With The Mouse Hole] எனும் சொற்றொடர் ‘’நான் ஒரு நோயாளி என்பதுடன் பொருத்திப்பார்க்கப்பட்டுத் திரும்பத் திரும்ப மறு வாசிப்புக்கு உட்படுத்தப்பட்ட ஒன்றாகும்.
தஸ்தோவ்ஸ்கியை - குறிப்பாக அவரது Grand Inquisitor எனப்படும்பெரும்புலன் விசாரணை அதிகாரியை வாசித்தவருக்கு ’‘எலிவளை நரகத்திற்கு ஒழியட்டும் என்னும் சொற்றொடர், அறிவியல் மோகத்தின் வெளிப்பாடான பொருளாதார சிந்தனைகளால் இருளில் மூழ்கியிருக்கும் மனிதனது ஆன்மா ,நம்பிக்கை எனும் வெளிச்சத்தால் இலகுவாக்கப்பட வேண்டும் என்பது புரியும். மேற்கூறிய இதுவே.
 நான்காவதாக இப்புதினம் ஒரு ஒப்புதல் பாணியில் [Confessional mode] எழுதப்பட்டுள்ளது என்பதையும் விளக்கும். புனிதர் அகஸ்டின் [St Augustine’s Confessions] தொடங்கி, ஒப்புதல்கள் மனித மனதின் இருட்டு மூலைகளை- எலிவளைகளை ஆராய்வதாகவே இருந்து வந்துள்ளன. இம் மரபின் நீட்சியே இப்புதினம்.
இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையைக் கூர்படுத்தி செம்மைப்படுத்தியதில் தஸ்தோவ்ஸ்கியின் பங்கு பெரிது என்றால் மொழிபெயர்ப்பாளர் எம்..சுசீலா இலக்கிய உலகிற்கு அளித்திருக்கும் இக்கொடை மிகப்பெரிது. தஸ்தோவ்ஸ்கி எனும் மலைப்புத் தரும் இலக்கிய மேதைமையைத் தெளிவானநடையில் தொய்வு இல்லாமல், சரியானபுரிதலுடன், தேர்ந்தெடுத்த பொருத்தமான சொற்களில் மொழியாக்கம் செய்வதென்பது ஒரு சாதனை. ருஷ்ய மொழியிலிருந்து ஆங்கில மொழியாக்கம் செய்வதற்குக் குறைந்தது 100 வருடங்கள் பிடித்திருந்த இந்நூல் [முதல் ஆங்கில மொழியாக்கம் -1968], வெகு சீக்கிரத்திலேயே தமிழ் வாசகர்களை வந்தடைந்திருக்கிறது. அதுவும் ஒரு வருடகாலத்தில். நூலாசிரியரின் கனமான சிந்தனைகளை வெளிப்படுத்துவதற்காக கூடியவரை நேரடிமொழிபெயர்ப்பு என்ற வகையைக் கையாண்டு எளிய நடையில் மொழிமாற்றம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. எளிய அடிக்குறிப்புகள் மொழிபெயர்ப்புக்கு வலுச்சேர்க்கின்றன. மொத்தத்தில் மலைப்பைத் தரும் இம்மொழியாக்கம், ’அசடன்மொழியாக்கத்துக்காக மூன்று விருதுகள் பெற்றிருக்கும் சுசீலாவுக்கு மேலும் விருதுகளைப் பெற்றுத் தரலாம்.
என்னுடைய இருபதுகளில் இருத்தலியல் குறித்த என் தேடுதலில் எனக்குப் பொக்கிஷம் போலக்கிடைத்தநிலவறைக்குறிப்புக ளை- ஆங்கில மொழியாக்கத்தில் நான் படித்த தரம் மற்றும் சுவை குறையாமல் என் தமிழில் நான் வாசிக்க உதவி புரிந்த சுசீலாவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றி. குறைந்தது மூன்று ஆங்கில மொழியாக்கங்களை ஒப்புநோக்கி செய்யப்பட்டிருக்கும் இம்மொழியாக்கம் பன்முகத்தன்மை கொண்ட எம்..சுசீலாவின் எழுத்தாற்றலுக்கு ஒரு சிறந்த சான்றாகும்.


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....