துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

31.12.09

புத்தாண்டுச் சிந்தனைகள்உலக நலவேட்பு

’’உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம்
உயிரறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும்
உலகனைத்து நாடுகளின் எல்லை காக்க
ஓருலகக் கூட்டாட்சி வலுவாய் வேண்டும்

உலகில் போர்பகை அச்சமின்றி மக்கள்
உழைத்துண்டு வளம் காத்து வாழ வேண்டும்
உலகெங்கும் மனிதகுலம் அமைதி என்னும்
ஒரு வற்றாத நன்னிதி பெற்றுய்ய வேண்டும்’’


உலக நலவாழ்த்து

‘’உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்!
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்!
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்!
பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டைப் பெருக்கட்டும்!

கலகங்கள் போட்டிபகை கடந்தாட்சி நடக்கட்டும்!
கல்லாமை,கடன்,வறுமை களங்கங்கள் மறையட்டும்!
நல வாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞான ஒளி வீசட்டும்!
நம் கடமை அற வாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்!
’’

1955ஆம் ஆண்டில் தத்துவ ஞானி திரு வேதாத்திரி மகரிஷிகள் அருளிய இக் கவிதை வரிகள் , போரும், பகைமையும் ,பூசலும்,போட்டியும் உலகெங்கும் தலை விரித்தாடும் இன்றைய சூழலுக்கும் பொருத்தமாக இருப்பது அந்த மகானின் தீர்க்க தரிசனத்தை ஒரு புறம் எடுத்துக் காட்டி நம்மை வியப்பில் ஆழ்த்தினாலும்,50 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த நிலைமையில் மாற்றம் எதுவுமில்லை என்பதும், நாளுக்கு நாள் மனித மனதின் வன்மங்களும்,குரூரங்களும் இன்னும் கூடக் கூடுதலாகிக் கொண்டே செல்கின்றன என்பதும் மனச்சாட்சி கொண்டோரை முள்ளாக வதைக்கும் ரணங்கள்.

ஒரு பகல்...ஓரிரவில் மாற்றங்கள் - அதிலும் முழுமையான நன் மாற்றங்கள் சாத்தியமில்லாமல் இருக்கலாம்.ஆனால் மனித குலத்தின் நூற்றாண்டுத் துயில்கள் என்றுதான் கலையும்?

அந்த விடியலின் வெளிச்ச ரேகைகள், புலரும் இந்தப் புத்தாண்டிலாவது ஒளியைக் கூட்டுமென்ற
நம்பிக்கையோடு புத்தாண்டின் வரவை எதிர் கொள்வோம்.

‘’போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாக’’ட்டும்!

17.12.09

ஆண்டாளின் ’பெண்பேச்சு’ஆணின் எழுதுகோலை இரவல் வாங்கி,அவன் உருவாக்கி வைத்த மதிப்பீடுகளையே வழிமொழிந்து கொண்டிருந்த சில சங்கப் பெண்பாற்புலவர்களைப் போலன்றி,
(சான்று; ‘ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’
என்ற பொன்முடியாரின் புறப்பாட்டு)
இயல்பான சுயேச்சையுடன்,தனித்த ஆளுமையுடன் தமிழ்க் கவிதை வெளியில் முகம் காட்டியவள் ஆண்டாள்.

பெண்ணின் அகவெளியைக் கட்டற்றுப் பதிவு செய்த அவள் பாடல்கள்
(காண்க;
ஆண்டாளின் பெண்மொழி -1
ஆண்டாளின் பெண்மொழி -2
ஆண்டாளின் பெண்மொழி -3)
பெண்கள் சஞ்சரிக்கும் புற வெளிகளையும்,அவ் வெளிகளில் கேட்கும் சிறு சிறு ஒலிகளையும் ,அங்கே பெண்களுக்கே உரியதாய் நிகழும் உரையாடல்கள்,கேலிப் பேச்சுக்கள்,சீண்டல்கள் ஆகியவற்றையும்,அவர்கள் மேற்கொள்ளும் சடங்குகள்,தயாரிக்கும் உணவுகள்,அணியும் அணிகலன்கள்,ஈடுபடும் தொழில்கள் ,அவர்களுக்கே உரிய கலைத் திறன்கள் ஆகியவற்றையும் மிக நுட்பமாகப் படம் பிடித்திருப்பதைத் திருப்பாவைப் பாடல்கள் வழி அறிய முடிகிறது.

‘’ உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்...’’-தி.பாவை,7
‘’முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட..
’’- 11
(பெண்ணின் வெளி)

’புள்ளும் சிலம்பின காண்’’ -6
‘’கீசுகீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ.....
’’ -7
(வெளியின் ஒலிகள்)

‘’நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்’’
-5
(பெண்ணின் சடங்குகள்)

’’...பாற்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழி வார....’’ -27
‘’காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிரரவம்....’’ -7
‘’வெள்ளை நுண்மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதிவாய்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம்’’
(நாச்சியார்திருமொழி -2.5)
(பெண்ணின் கலைத் திறன்,அவள் ஈடுபடும் தொழில்கள்)

‘’பெண்மொழியை உருவாக்கப் பேச்சுமொழி மரபில் தோய்வது பயனுள்ளதாக அமையலாம்’’
என்ற நவீனப் பெண்ணியக் கருத்தாக்கத்தை ஒட்டித் திருப்பாவைப் பாடல்களில் ’பெண்பேச்சு’என்பது மிக மிக இயல்பாக அமைந்திருப்பதைக் காண முடிகிறது.
ஒத்த வயதுள்ள இளம் சிறுமியர் ஒருவரை ஒருவர் செல்லமாகப் ‘பிள்ளை’ என அழைத்துக் கொள்ளும் தென்பாண்டித் தமிழும்,
’பிள்ளைகளெல்லாம் பாவைக் களம் புக்கார்’’-தி.பா-13
‘’மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை’’
-8

‘எலே’என்ற பழகு தமிழ் விளியை ’‘எல்லே இளங்கிளியே’’ என ஆக்கி,அந்தப் பாடல் முழுவதையுமே இரண்டு பெண்களுக்கு இடையே நடைபெறும் உரையாடலாகவே அமைத்திருப்பதும் பேச்சுமொழி மரபில் ஆண்டாள் கொண்டிருந்த ஈடுபாட்டைக் காட்டும்.

‘பெண் பேச்சு’க்குரியதாகச் சுட்டப்படும் மற்றொரு பண்பான எளிமைத் தன்மையினையும் ஆண்டாளின் கவிதைகள் பெற்றிருக்கின்றன.

ஔவையின் கவித்திறன் பற்றித் தன் கட்டுரை ஒன்றில் விளக்கும் பாரதி,
’சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் கவிதைத் தொழிலில் ஔவை ஒப்பற்றவள் ....அவள் நூல் ‘மிகத் தெளிந்த , மிக எளிய தமிழ் நடையில் எல்லா ஜனங்களுக்கும் பொருள் விளங்கும்படியாக எழுதப்பட்டிருக்கிறது’’என்பார்.

இதே தன்மைகளை ஆண்டாள் பாடல்களுக்கும் பொருத்திக் காட்ட முடியும்.
’கூட்டில் இருந்து கிளி எப்போதும்
கோவிந்தா கோவிந்தா என்றழைக்கும்
ஊட்டக் கொடாது செறுப்பனாகில்
உலகளந்தான் என்று உயரக் கூவும்’’
(நாச்சியார்திருமொழி-12.9)
என்ற நாச்சியார் திருமொழி வரிகளும்,பாவைப்பாடல்களின் பல பகுதிகளும் ஆண்டாளின் கவிதை எளிமைக்குக் கட்டியம் கூறுபவை.

ஆண்டாளின் கவிதைகள் தன்னுணர்வு வெளிப்பாட்டைப் பெரிதும் தாங்கியுள்ளபோதும்,உலகப் பொது நலன்,சமுதாயப் பொது நோக்கம் ஆகிய கருத்துக்களும் அவற்றில் தென்படாமலில்லை.
பாவை நோன்பு நோற்பதால், கண்ணனுக்கு ஆட்செய்யும் சுய லாபம் தனக்குக் கிடைப்பதோடு,
நீர்வளம்,பயிர்வளம்,பால்வளம் ஆகிய மூன்றும் உலகிற்குக் கிட்டவேண்டுமென்ற தணியாத வேட்கையையும் பாவைப் பாடல்களில் பதிவு செய்கிறாள் ஆண்டாள்.
’தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ்செந்நெல்’’ விளைந்திடவும்,
’வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்க’’ ளின் வழியே‘’நீங்காத செல்வம்’’
நிறைந்திடவும் அவாவுகிறது அவள் மனம்.(தி.பா-30)

மழை வேண்டி ‘’ஆழிமழைக் கண்ண’’னைப் பாடும்பொழுதும் கூட,மிகக் கவனமாக அந்த மழை ,அழிக்கும் மழையாக இருந்து விடாமல்,‘ஆக்கும் ‘மழையாகவே இருக்க விரும்பி,
’வாழ உலகினில் பெய்திடாய்’’(தி.பா-4)
என்று உலகைச் செழிக்க வைக்கும் மழையையே மனமார வரவேற்று வாழ்த்துப் பண் பாடுகிறாள் அவள்.

நோன்பு முடிந்து பாற்சோறு உண்ணும் கட்டத்திலும் கூட அனைவருமாய்க் ‘’கூடியிருந்து குளி’’ர்வதையே அவள் விரும்புகிறாள்.
’கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்’’(தி.பா -27)

ஆண்டாளின் உலகளாவிய இந்தப் பார்வையே அவளது தனித்த ஆளுமைக்கு மேலும் வலுச் சேர்க்கிறது.

மதமும்,சடங்குகளும் கடந்த புரிதலோடு ஆண்டாளின் பாடல்களை அணுகும்போது மேலும் புதிது புதிதான வாயில்கள் நமக்காகத் திறக்கும்.

15.12.09

சுகந்திடீச்சருக்கு வீரவணக்கம்


கல்விக் கொள்ளையர்கள் பிஞ்சுக் குழந்தைகளின் வாழ்வோடு விளையாடும் சாஸ்வதமான அவலம்,கும்பகோணத்தைப் போலவே நாகப்பட்டினத்துக்கு அருகே நிகழ்ந்த ‘வேன்’விபத்தின் மூலமும் சம்பவித்திருக்கும் சூழலில்,இன்னமும் கூட மனிதப் பண்புகள் உயிர்ப்போடுதான் இருக்கின்றன என்பதை மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது அந்த விபத்தில் தன் உயிரைத் துறந்திருக்கும் ஆசிரியை சுகந்தியின் வீர மரணம்.

உண்மையில் சொல்லப்போனால்,அந்த ஆசிரியை ,தன் உயிரை வலியத் துறந்திருக்கிறார்என்றுதான் கூற வேண்டும்;அவர் நினைத்திருந்தால் வேன்,குளத்தில் நிலை தடுமாறி விழுந்த மறு விநாடியே அதிலிருந்து வெளிப்பட்டுத் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும்.ஆனால் அவரது தாய் மனம்- மாணவர்கள் மீது மெய்யான நேசம் கொண்டிருந்த அந்த நிஜமான ஆசிரிய உள்ளம் ,தன் துன்பத்தைவிட அந்தக் குழந்தைகளுக்கு நேர்ந்த அவலத்தை எண்ணியே கசிந்தது; கள்ளக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்காமல் காரியத்தில் முனைப்போடு இறங்கித் தன் உயிரையே காணிக்கையாக்கியது.

‘’கட்டளைவெளி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியை சுகந்தி ,பள்ளியில் சேர்ந்து ஒன்றரை வருடங்கள்தான் ஆகிறது.தினமும் அந்த வேனிலேயே செல்லும் அவர் அந்தக் குழந்தைகள் மீது கொள்ளைப் பிரியம் கொண்டவராம்.வேன் குளத்தில் விழுந்ததுமே நீந்தி வெளியே வர முயன்றிருக்கிறார்.குழந்தைகள் தண்ணீருக்குள் சிக்கியிருப்பதைப் பார்த்துப் பதறி..அடுத்த கணமே உள்ளே மூழ்கியவர் , நான்கு குழந்தைகள் வரை வெளியே கொண்டுவந்து காப்பாற்றி விட்டார்.ஐந்தாவது தடவை உள்ளே போனவர் ...இரண்டு குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வெளியே வருவதற்குள் மூச்சு முட்டி உயிரை விட்டுவிட்டார்.உடலைக் கரையேற்றும்போதும் அந்த இரு குழந்தைகளையும் கையில் இறுகப் பிடித்தவாறே சுகந்தி டீச்சர் இருந்த காட்சியைப் பார்த்துக் கிராமமே விம்மியது’’- ஜு.வி.09.12.09

’மகராசி!சுகந்தி ஆசிரியை மட்டும் குப்புறக் கவிழ்ந்த வேனுக்குள்ள இல்லன்னா இன்னைக்கு எங்க எல்லாப் புள்ளைகளையும் இழந்துட்டு நாங்க அனாதையாயிருப்போம்.பாவம் அந்தப் பொண்ணு உசிரக் கொடுத்து எங்க புள்ளகளக் காப்பாத்தியிருக்கு’என,குழந்தைகள் பலரையும் உயிரோடு மீட்ட ஆசிரியை சுகந்தியைப் பற்றிப் பெற்றோர் பலரும் கண்ணீர் ததும்பப் பேசுகின்றனர்.’’-குமுதம்,16.12.09

மிக எளியதொரு வாழ்க்கைப் பின்னணியிலிருந்து கல்வி என்ற பிடிமானத்தால் ஆசிரிய நிலைக்குத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டு படிப்படியாகத் தானும் உயர்ந்து,தன் குடும்பத்தையும் உயர்த்துவதற்கு ஆயத்தமாகி வந்த சுகந்தியின் மரணம்,அந்தக் குடும்பத்திற்கு மட்டும் நேர்ந்த ஒரு இழப்பல்ல;மாணவர்களை மரக்கட்டை போல நடத்தி வரும் பல ஆசிரியக் கொடுமனங்களுக்கிடையே அத்தி பூத்தாற்போல எப்போதாவது தோன்றும் இப்படிப்பட்ட நல்லாசிரியர்களின் மறைவு கல்வித் துறைக்குமே கூட ஒரு பேரிழப்புத்தான்.

பள்ளியிலும்,கல்லூரியிலும் முதல் மாணவி என்ற பெருமை பெற்றிருந்த சுகந்தி,
’’உண்டாலம்ம இவ்வுலகம்.....
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே’’

(தனக்காக மட்டுமே வாழாமல் மற்றவர்களுக்காகவும் வாழும் ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்’களால்தான் இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது)
என்ற புறநானூற்று வரிகளைப் படித்திருக்கலாம்;படிக்காமலும் இருந்திருக்கலாம்.
அது இங்கே முக்கியமில்லை.

வாழ்க்கையை வெறும் ஏட்டுச் சுரைக்காயாக மட்டும் ஆக்கிக் கொண்டு விடாமல் தன் இன்னுயிரையே விலையாய் ஈந்து பல இளம் மழலைகளைக் கரை சேர்த்துக் குறைவான தன் ஆயுளுக்கு நிறைவான ஒரு பொருளை...அழியாத ஒரு புகழைத் தேடிக் கொண்டுவிட்டார் சுகந்தி.

வார்த்தைக்குள் அடங்காத அவரது மகத்தான தியாகத்துக்கு முன்பு மண்டியிட்டுக் கண்பனிக்க அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் இந்த வேளையில்.....இப்படிப்பட்ட இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும் நாளும் விடியாதோ என்ற சிந்தனையில் இதயம் கனக்கிறது.

11.12.09

பாரதியின் உரைவீச்சுநன்றி;
பாரதி பிறந்த நாளை ஒட்டி இந்த வலைப் பதிவை இட எண்ணியபோது என் நெஞ்சிற்கு மிகவும் நெருக்கமான பாரதியின் ஓவியம் இப் பதிவில் இடம் பெற வேண்டுமென்று விழைந்தேன்;அது திரு ஞாநியின்(’தீம்தரிகிட’,பரீக்‌ஷா’,’ஓ பக்கம்’) பாரதியன்றி வேறெதுவுமில்லை.அந்த ஓவியம் முறையான ஒப்புதலின்றிப் பலராலும் பயன்படுத்தப்படுவதும்,விருப்பம் போல மாற்றியமைக்கப்படுவதும் ஞாநியின் உள்ளத்தைப் பலமுறை புண்ணாக்கிக் காயப்படுத்தியிருப்பதை அறிந்திருக்கிறேன்.அதனால் மின் அஞ்சலில் அவரது முழு ஒப்புதலைப் பெற்ற பிறகே என் தளத்தில் அதை வெளியிட முனைந்தேன்.
பாரதியின் சமூகக் கோபத்தை வாழையடி வாழையெனத் தொடர்ந்து, அவன் கொளுத்தி வைத்த ‘அக்கினிக் குஞ்சுக்கு’ எழுத்து நெய் ஊற்றிப் பெருந்தணலாக்கப் பல தடைகளுக்கிடையிலும் இடைவிடாது முயன்றுவரும் சமூகச் சிந்தனையாளரும்,பத்திரிகையாளரும்,நாடக,ஓவியக்கலைஞருமான ஞாநிக்கு-அவர் தந்த ஒப்புதலுக்காக நன்றி.

இனி...கட்டுரை....
கல்வித் தளத்திலும்,அறிவுசார் ஆய்வுத் தளங்களிலும் சிறந்த கட்டுரையாளனாகவும்,உரைநடைப் படைப்பாளியாகவும் அறியப்பட்டுள்ள பாரதியை வெகுஜனத் தளத்தில் அவ்வாறு முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்றே தோன்றுகிறது.ஓரளவு படிப்பறிவு பெற்ற மக்கள் மத்தியிலும் கூட மகாகவிஞன் என்ற பாரதியின் பிம்பமே அழுத்தமாகப் பதிவாகி இருக்கிறது.

மேற்குறித்த நிலைப்பாட்டுக்கு நேர்மாறாகப் பாரதியின் சமகாலத்தில் வாழ்ந்த பொதுமக்கள்,அவனது உரை வீச்சை நுகரும் பேறு பெற்றிருந்தனர்.பாரதி ஒரு பத்திரிகையாளன் என்பதும்,நாளிதழ்களுக்காக அன்றாட அரசியல்,சமூக நடப்புக்களையும் ,பரவலான பிற செய்திகள் பலவற்றையும் எழுதியாக வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்ததுமே அதற்கான முதன்மைக் காரணங்கள்.
’சக்கரவர்த்தினி’,’விஜயா’ எனப் பல இதழ்களிலும் பொறுப்பேற்றுப் பணியாற்றிக் கொண்டிருந்த பாரதிக்குத் தான் சொல்ல நினைத்த செய்திகளை உரைநடை என்ற ஊடகம் வழியே கொண்டு சென்றாக வேண்டிய கடப்பாடு இருந்தது.
கவிதைக்கு உரிய இயல்புகளான இறுக்கம், செறிவுஆகியவற்றைத் தளர்த்திக் கொண்டு,நேரடியான நடையில் , மிக எளிமையான போக்குடன் தன் கருத்துக்களை இதழ்க் கட்டுரைகளில் முன் வைத்தாக வேண்டிய பொறுப்பைப் பாரதி மிகத் தெளிவாக உணர்ந்திருந்ததை வசன நடை குறித்த கீழ்க்காணும் அவனது விளக்கம் எடுத்துக் காட்டுகிறது.

’தமிழில் வசன நடை இப்போதுதான் பிறந்து பல வருஷமாகவில்லை....ஆதலால்,இப்போதே நமது வசனம் உலகத்தில் எந்த பாஷையைக்காட்டிலும் தெளிவாக இருக்கும்படி முயற்சிகள் செய்ய வேண்டும்.கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என் கட்சி.எந்த விஷயம் எழுதினாலும் சரி,ஒரு கதை அல்லது தர்க்கம்,ஒரு சாஸ்திரம்,ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது.....கோணல்,திருகல் ஒன்றுமில்லாமல் நடை நேராகச் செல்ல வேண்டும்.....வசன நடை, கம்பர் கவிதைக்குச் சொல்லியது போலவே தெளிவு,ஒளி,தண்மை,ஒழுக்கம் இவை நான்கும் உடையதாக இருக்க வேண்டும்.இவற்றுள் ஒழுக்கமாவது தட்டுத் தடையில்லாமல் நேரே பாய்ந்து செல்லும் தன்மை’’(பாரதி கட்டுரைகள்-பக்.232-233)

பிறவிக் கவிஞனாகவே அமைந்திருந்த பாரதி மேற்சொன்ன அளவுகோலின்படி அமைந்த நெகிழ்வான உரைநடையையும் - கவிதையோடு சேர்ந்தாற்போல் -அதே காலகட்டத்திலேயே லாவகமாகக் கையாண்டிருப்பது , மொழியைத் தன் வசமாக்கி வைத்திருந்த அவனது மேதமையினையே எடுத்துக்காட்டுகிறது.

மிக இறுக்கமாகப் பின்னிக்கொண்டுபோகும் கவிதைவரிகள், கூடியவரை வடசொற்கலப்பைத் தவிர்த்தனவாய் அவற்றில் காணக் கிடைக்கும் தமிழ்ச்சொற்கள் எனக் கவிதையில் தான் கையாளும் போக்குக்குக் கொஞ்சம் கூடத் தொடர்பே இல்லாதபடி
’ஜீவ ஹிம்சை கூடாது;மதுமாம்ஸங்களால் பெரும்பான்மையோருக்குத் தீங்கு உண்டாகிறது.மது மாம்ஸங்கள் இல்லாதிருத்தல் ...பெரிய தவம்.அது கிருத யுகத்துக்கு வேராகக் கருதக்கூடிய அநுஷ்டானம்’’
(பாரதிகட்டுரைகள் பக்.289)
எனச் சரளமாக வட சொற்கள் வந்து விழுவதைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல் சிறு சிறு வாக்கியங்களில் தன் கட்டுரைகளை நேராகக் கட்டமைக்கிறான் பாரதி.

கவிதை அழகியலுக்காகவும்,அதன் வடிவச் சுருக்கத்திற்காகவும் நுட்பமாகவும்,குறிப்பாகவும் கூறிய செய்திகளை எந்தப் புறப்பூச்சும் இல்லாமல் பட்டவர்த்தனமாகப் பிரகடனம் செய்யவும்,உள்ளது உள்ளபடி நேரடியாக முன் வைக்கவும் கூடப் பாரதிக்குக் கட்டுரை என்ற ஊடகம் கை கொடுக்கிறது.
''ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால்
அப்போது பெண்மையும் கற்பழிந்திடாதோ?
நாணமற்ற வார்த்தையன்றோ வீட்டைச் சுட்டால்
நலமான கூரையும்தான் எரிந்திடாதோ..
’’
என்று தான் முன்வைத்த கவிதை வரிகளுக்குத் தன் கட்டுரை வழி மிக விரிவான-மிகக்கடுமையான விளக்கத்தைப் பின்வருமாறு அளிக்கிறான் பாரதி.

‘’ஸ்த்ரீகள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமென்று எல்லோரும் விரும்புகிறார்கள்.அதிலே கஷ்டம் என்னவென்றால் ஆண்பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை.ஆண்மக்களில் ஒவ்வொருவனும் தம் மனைவி மக்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமென்பதில் எத்தனை ஆவலோடு இருக்கிறானோ அத்தனை ஆவல் இதர ஸ்த்ரீகளின் பதி விரத்யத்திலே காட்டுவதில்லை....அட பரம மூடர்களா ! ஆண்பிள்ளைகள் தவறினால்,ஸ்த்ரீகள் எப்படி பதிவிரதைகளாக இருக்க முடியும்?.....பெரும்பாலோர் வ்யபசாரிகளுடனேதான் வாழ்கிறார்கள். இதனிடையே பதிவ்ரத்யத்தைக் காப்பாற்றும் பொருட்டாக ஸ்த்ரீகளைப் புருஷர்கள் அடிப்பதும்,திட்டுவதும்,கொடுமை செய்வதும் எல்லையின்றி நடைபெற்று வருகின்றன’’
(பாரதி கட்டுரைகள் பக்.293-294)

சமூகச் செய்திகளை எழுதும்போது இவ்வாறு சினத்தோடு வெடித்துக் குமுறும் பாரதியின் உரைநடை , இயற்கை சார்ந்த..ஆன்மீகம் சார்ந்த கருத்துக்களை மையப்படுத்துகையில் கவித்துவம் பெற்றுவிடுவதையும் காண முடிகிறது.
சிட்டுக் குருவியைப் போல ‘விட்டு விடுதலை’யாகி நிற்க வேண்டுமென்று பெரிதும் விரும்பி,விடுதலையின் குறியீடாகவே அதைக் கொண்டாடிய பாரதி,
‘’சிறிய தானியம் போன்ற மூக்கு;சின்னக் கண்கள்;சின்னத்தலை;அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு;கருமையும்,வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப்போர்த்த முதுகு;சிறிய தோகை;துளித்துளிக் கால்கள்’’
எனச் சிறு சிறு சொற்றொடர்களைத் தொடுத்தபடி தனது உரை வருணனையாலேயே சிட்டுக் குருவிக்கு ஒரு தூல வடிவத்தை அளித்து விடுகிறான்.

தமிழ்ப் புதுக் கவிதைக்கு அடித்தளம் அமைத்துத்தந்த வசன கவிதையின் முன்னோடி,பாரதி.வசன கவிதைக்கான அந்த வித்துக்களைத் தத்துவம் சார்ந்த அவனது கட்டுரைகளில்தான் மிகுதியாகக் காண முடிகிறது.

’’நான் அமரன்;எனக்குச் சாவு கிடையாது. நாழிகைகள் கழிக...,நாட்கள் ஒழிக...,பருவங்கள் மாறுக...,ஆண்டுகள் செல்க...,நான் மாறுபட மாட்டேன்.நான் என்றும் உயிர்வாழ்வேன். எப்போதும் ஸத்யமாவேன்.எப்போதும் களித்திருப்பேன்....
நான் கடவுள் , ஆதலால் சாக மாட்டேன்....
நான் எப்போதும் வீர்யமுடையேன்;ஜாக்ரதை உடையேன்;
எப்போதும் தொழில் செய்வேன்;எப்போதும் காதல் செய்வேன்;
அதனால் சாதல் இல்லேன்.......
நான் தீராத இளமை சார்ந்தேன்.....
நான் கவலையை ஒழித்தேன்
ஆதலால் எப்போதும் வாழ்வேன்...எப்போதும்
வாழ்வேன்’’
(பாரதி கட்டுரைகள்-பக்.172,173.)
என்பது போன்ற பாரதியின் கட்டுரை வரிகளை அவனது வசன கவிதை வரிகளுக்குப் பக்கத்தில் நிறுத்திப் பார்க்கும்போது இரண்டுக்கும் இடையிலுள்ள கட்டமைப்பு ஒற்றுமை மிகத் தெளிவாகப் புலப்படுவதோடு,பாரதியின் தத்துவ வேட்கையும்,அதன் மீதான அவனது தேடல்களும் ,தரிசனங்களுமே மரபார்ந்த எல்லைக் கோடுகளை மீறி வசன கவிதைக்கு அவன் வாயில் அமைத்துக்கொண்டதற்குக் காரணம் என்பதையும் புரிய வைக்கின்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும்,இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழில் செல்வாக்குப் பெறத் தொடங்கியிருந்த தமிழ் உரைநடையின் புனைகதை வடிவங்களாகிய சிறுகதை,நாவல் ஆகிய உரை ஊடகங்களிலும் பாரதியின் எழுதுகோல் குறிப்பிடத்தக்க முத்திரைகளைப் பதிக்கத் தவறவில்லை.

தமிழ்ச் சிறுகதையின் தளர்நடைப் பருவத்தில் அதன் முன்னோடிகளில் ஒரு சிறப்பிடம் பெற்றவனாகப் பாரதி திகழ்ந்திருக்கிறான். மேலை இலக்கிய அளவுகோல்களை அவனது சிறுகதை வடிவங்களுக்குப் பொருத்திப் பார்க்க முடியாதென்றபோதும் - இந்திய வாய்மொழி மரபின் வழிவந்த புனைகதைப் பாணியை உட்செரித்துக்கொண்டு,பஞ்ச தந்திரக்கதைகளின் போக்கைத் தழுவி ‘நவதந்திரக் கதை’களையும்,சிறு சிறு வேடிக்கக்கதைகள் பலவற்றையும் உருவகப் போக்கில் உருவாக்கிக் கதை இலக்கியம் சார்ந்த உரைநடைப் பரப்பை விரிவும்,ஆழமும் பெறச் செய்திருக்கிறான் பாரதி.

தலித்தியம்,பெண்ணியம் ஆகிய நவீன இலக்கியக் கோட்பாடுகள் பரவலாக அறியப்பட்டிருக்காத காலகட்டத்தில் அவனது ‘பஞ்ச கோணக் கோட்டை’யும்,’சந்திரிகையின் கதை’யும் முறையே அவ்விரு கோட்பாடுகளையும் மக்களிடம் கொண்டு சென்றிருக்கின்றன.நவீன,பின் நவீன இலக்கியத் தளங்களில் இன்று முன்னிறுத்தப்படும் மீயதார்த்த,மாய யதார்த்தக் கூறுகளின் சில சாயல்கள் , பாரதியின் மிகு கற்பனை உரைநடைக் காவியமான ‘ஞான ரத’த்தில் காணக் கிடைக்கின்றன.

விதவை மறுமணத்தை வலியுறுத்துவதற்காகவே பாரதி எழுதத் தொடங்கிய ‘சந்திரிகையின் கதை’என்ற நாவலும்,அவனது தன் வரலாற்றைக் கூறும் ‘சின்னச் சங்கரன் கதை’யும் அரைகுறையாக முடிந்து விடாமல் அவனால் முழுமைப்படுத்தப்பட்டிருக்குமானால்,நாவலாசிரியன் என்ற பரிமாணத்தையும் பாரதி குறைவறப் பெற்றிருக்கக்கூடும்.

பாரதியின் பாடல்களில் ஆங்காங்கே தலை காட்டும் அங்கதச்சுவை , அதன் முழுமை குன்றாமல் விரிவாக வெளிப்பட அவனது கதை இலக்கியம் துணை செய்திருப்பதைப் பல இடங்களில் காண முடிந்தாலும் அவனது ‘சின்னச் சங்கரன் கதை’அங்கத உரைநடையின் உச்சமாகவே விளங்குவதை எடுத்துக் காட்டக் கீழ்க்காணும் ஒரு சான்றே போதுமானது.

‘’....வெளி முற்றத்தில் கோழிச் சண்டை நடக்கும்.வெளியூரிலிருந்து யாரேனுமொரு கவுண்டன் ஒரு நல்ல போர்ச் சேவல் கொண்டு வருவான்;அரண்மனைச் சேவலுக்கும் அதற்கும் சண்டை விட்டுப் பார்ப்பார்கள்....பெரும்பாலும் சண்டை முடிவிலே அரண்மனைக் கோழிதான் தோற்றுப் போவது வழக்கம்....பிறகு பழைய அரண்மனைச் சேவலைத் தள்ளிவிட்டுப் புதிதாக வந்த சேவலைச்’சமஸ்தான வித்வா’னாக வைப்பார்கள்....எத்தனை வீரமுள்ள சேவலாக இருந்தாலும் கவுண்டனூர் அரண்மனைக்கு வந்து ஒரு மாதமிருந்தால் பிறகு சண்டைக்குப் பிரயோஜனப்படாது.ஜமீன் போஷணையிலேயே அந்த நயம் உண்டாகிறது’’
(பாரதியார் கதைகள்-’சின்னச் சங்கரன் கதை’ப.278)

தமிழ்க் கவிதைப் பரப்பைச் செழுமைப்படுத்தியது போலவே தமிழ் உரைநடையிலும் வீரியத்தோடும்,முழுவீச்சோடும் முனைந்து இயங்கியிருக்கிறான் பாரதி என்பதற்குக் கட்டியம் கூறிக் கொண்டிருப்பவை அவனது உரைநடை ஆக்கங்கள் என்பது உண்மை..வெறும் புகழ்ச்சியில்லை.

(04.12.,09 அன்று,மதுரை பாத்திமாக் கல்லூரித் தமிழ்த் துறையும்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸும் இணைந்து நடத்திய ’பாரதியின் பன்முகப் பார்வை’குறித்த தேசியக் கருத்தரங்கிற்கு அனுப்பப்பட்ட கட்டுரை)

5.12.09

மனவளக்கலைக்கு மாண்பு சேர்த்த தமிழ்ச்சங்கம்தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தொப்பியில் மேலும் ஒரு இறகு...


'கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என்று காந்தியடிகள் அடிக்கடி குறிப்பிடும் வாசகம்,சமூக,பொருளாதார,வாழ்வியல் முன்னேற்றம் சார்ந்தது மட்டுமல்ல;
ஆன்மீக முன்னேற்றத்தையும் கூட உள்ளடக்கியதாகத்தான் அந்தத் தொடர் அமைந்திருக்கிறது.

ஆன்மீகம் எனப்படும் மெய்ஞ்ஞானம்,காட்டில் சென்று கடுந்தவம் புரிபவர்களுக்கும்,வேத உபநிடதங்களையும்,அவற்றின் சாரங்களையும் கற்றுக் கரை தேர்ந்த பண்டித விற்பன்னர்களுக்கு மட்டுமே சொந்தமானது...,அது அவர்களுக்கு மட்டுமே தேவைப்படுவது..., அல்லது அது அவர்களால் மட்டுமே சாத்தியமாகக் கூடியது ஆகிய மாயைகளெல்லாம் தகர்ந்து கொண்டிருக்கும் யுகம்,இன்றைய காலகட்டம்.

தன்னை அறிவதும்,தன்னில் இறைநிலை உணர்வதும்..படிப்பறிவில்லாத சாமானியன் முதல் லௌகீக வாழ்க்கைப் போராட்டங்களில் நாளும் சிக்கித் தவிக்கும் நடுத்தர..உயர் வர்க்க மனிதன் வரை அனைவருக்குமே இன்று தேவையாக இருப்பவைதான்!

இந்த மகத்தான உண்மையை ஐயமற உணர்ந்திருந்த காரணத்தினாலேதான்,எதிர்ப்புச் சக்திகள் பல இடைமறித்தபோதும் தான் கண்டுகொண்ட மெய்ப்பொருளின் சாரம் சகலருக்கும் போய்ச் சேரவேண்டும் என்று, திருக்கோஷ்டியூர்க் கோயிலின் கூரை மீது நின்று கூவி அழைத்தார் இராமானுஜர்.

’’தாமின்புறுவது உலகு இன்புறக் கண்டு’’ மகிழும் அத்தகைய சான்றோர்கள் எல்லாக் காலங்களிலும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள் என்பதற்குக் கண் கூடான சான்றாக - மிக அண்மைக் காலத்தில் நம்மிடையே வாழ்ந்து மறைந்தவர் , அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

வறுமையானதொரு குடும்பப் பின்னணியில்,ஏழை நெசவாளர் குடும்பத்தில் வாழ்வைத் தொடங்கி, ஏட்டுக் கல்வியில் மூன்றாம் வகுப்பையே எட்டிய அவர்,மெய்ஞ்ஞான அனுபவ சித்தியில் பல சிகரங்களைத் தொட்டவர். அந்தச் சிகரங்களை நோக்கிய பாதையில் அனைவரும் பயணிப்பதற்காகவே
‘எளிய முறைக் குண்டலினி யோகம்’(Simplified kundalini yoga- SKY ),மற்றும் உயிருக்கு உரமூட்டும் ’காயகல்பயோகம் ’ ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கும்
’மனவளக் கலை’ என்னும் அரிய கலையை மிக மிக எளிய வழிமுறைகளால் இலகுவாக்கி உலகுக்குத் தனது அருங்கொடையாக நல்கிச் சென்றிருக்கும் மகான் அவர்.

‘ஒரு நாமம் ஓருருவம் இல்லாத’ கடவுளுக்கு ஆயிரம் கோயில்கள் சமைக்கும் இந்த மண்ணில் , ‘அறிவுத் திருக் கோயில்’என்ற பெயரில் அறிவுக்கென்றே ஒரு கோயிலை ஆழியாற்றில் அமைத்து , அதன் சேவைகள் தனிமனித அகமுக நோக்குடன் முடங்கிப் போய்விடக்கூடாது என்பதற்காகவே ,தான் நிறுவிய அமைப்புக்கு ‘உலக சமுதாய சேவா சங்கம்’ என்ற பரந்த தளத்திலான அடையாளத்தை அளித்தவர்; எல்லாத் தரப்பினரையும் எளிதாகச் சென்று சேர்வதற்காக ’வாழ்க வையகம் வாழ்க வளமுடன்’என்ற எளிதான தாரக மந்திரத்தை வழங்கியிருப்பவர்.

தானுரைத்த செய்திகள் தில்லி வாழ் மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் காட்டிய மகரிஷி அவர்கள், தனது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் அடியெடுத்துக் கொடுத்துத் தொடங்கி வைத்த புது தில்லி மண்டல உலக சமுதாய சேவா சங்கம், பல மனவளக் கலை மன்றக் கிளைகளோடு வளர்ச்சி பெற்று 2004 ஆம் ஆண்டு முதல் இந்தியத் தலைநகரில் சிறப்பாகச் செயலாற்றி வருகிறது.
இம் மன்றத்தின் செயல்பாட்டுக்கு ஊக்கமும் ஆக்கமும் சேர்க்கும் வகையில்,புது தில்லி தமிழ்ச் சங்கம் அண்மையில்-நவ.8ஆம் தேதி ஞாயிறு மாலையில் - மிகச் சிறப்பான ஒரு நிகழ்ச்சியை வெகு விமரிசையாக நடத்தி, அனைவரின் நெஞ்சையும் நெகிழச் செய்து விட்டது.

மகரிஷியின் அணுக்கத் தொண்டராக விளங்கியவரும், கொங்கு மண்டலத்தின் சிறந்த தொழிலதிபர்களில் ஒருவரும்,
மகரிஷிக்குப் பிறகு அவரது பணியைத் தொடர்ந்து ஆற்றி, உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவராக விளங்குபவருமான திரு எஸ்.கே.எம்.மயிலானந்தன் அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு,
‘அறிவுத் திருக்கோயில்’, மற்றும் ‘தியானம்’ முதலியவை குறித்த ஆவணப் படங்களின் திரையிடல் ஆகியவற்றை அற்புதமாக நடத்திக் காட்டியதன் வழி, மகரிஷி அவர்கள் அருளிய ’மன வளக்கலை’ க்குத் தில்லியில் வலுவானதொரு அடித்தளத்தைத் தமிழ்ச்சங்கம் அமைத்துத் தந்து விட்டதென்றே கூறலாம்.
அதற்கு உறுதுணையாக விளங்கிய தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களும்,பொதுச் செயலாளர் திரு.பெருமாள் அவர்களும் பெரிதும் பாராட்டுக்குரியவர்கள்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றிய மையப் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் திரு.டி.ஆர்.கார்த்திகேயன் அவர்கள்,உலகளாவிய ஆன்மீக இயக்கங்கள் பலவற்றிலும் தொடர்பு கொண்டிருப்பவர் ; அவற்றிலெல்லாம் காணக் கிடைக்காத எளிமையும்,நேரடித்தன்மையும், பகைவனையும் நெஞ்சில் நிறுத்திப் பாசத்தோடு வாழ்த்துரைக்கும் பண்பும் வேதாத்திரி மகரிஷிகள் அருளிய யோகக் கலையில் செறிந்திருப்பதை உணர்ந்து தெளிந்து, மகரிஷி வாழ்ந்த காலம் முதலாகவே அறிவுத் திருக்கோயிலோடு நெருக்கமான உறவைப் பேணி வருபவர்.

தனது தலைமை உரையில் மகரிஷியின் பாடல்கள் சிலவற்றின் வழி அவரது மேன்மையைக் கோடிட்டுக் காட்டிய திரு கார்த்திகேயன்,காமம்,குரோதம் ஆகிய அறுகுணங்களையும் சீரமைக்கும் அற்புத மருந்தை அறிவியல் அடிப்படைகளோடு நல்கியிருக்கும் ‘மன வளக் கலை’இன்னும் விரிந்த தளத்தில் உலகெங்கும் பரவலாக எடுத்துச் செல்லப்பட வேண்டுமென்ற தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.

திரு கார்த்திகேயனின் தலைமை உரைக்குப் பின்பு சிறப்புச் சொற்பொழிவாற்றிய உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் திரு எஸ்.கே.எம்.மயிலானந்தன் அவர்கள்,
‘’வாழ்வில் வளமை,சிந்தையில் இனிமை’’என்ற பொருளில் மகரிஷியின் கோட்பாடுகளை அடிநாதமாகக் கொண்டு அற்புதமாக உரையாற்றினார். மரபார்ந்த சொற்பொழிவாக அடுக்கு மொழியிலோ,அலங்கார நடையிலோ பேசாமல்,நெஞ்சுக்கு நெருக்கமான எளிமையான நடையில்,மிகவும் யதார்த்தமான பாணியில்,அன்றாட உலகியல் நடப்பை ஒட்டிய செய்திகளை நகைச்சுவையோடு கலந்து அவர் சொல்லிக் கொண்டு போன பாணி,ஆழ்ந்த ஆன்மீக விசாரங்கள் பாமரனையும் சென்று சேர வேண்டும் என்று மகரிஷி கொண்டிருந்த பேரவாவைப் பெருமளவில் நிறைவு செய்தது; தமிழ்ச்சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கம் முழுவதும் திரண்டிருந்த மக்கள் கூட்டம் ,கொஞ்சமும் கலைந்து போகாமல் - குன்றாத ஆர்வத்துடன் அவரது உரையைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்த ஒன்றே அதற்குச் சிறந்த அத்தாட்சி.

‘வடக்கு வாசல்’ ஆசிரியர் திரு பென்னேஸ்வரன்,பிறகு மேடையில் குறிப்பிட்டதைப் போல நமக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் நம் பக்கத்திலிருந்து பேசிக் கொண்டிருந்ததைப் போன்ற மனம் திறந்த ஒரு பேச்சாகக் கபடற்ற எளிமையுடன் -அதே வேளையில் தலைப்பை விட்டு விலகிப் போகாமல் அமைந்திருந்தது திரு மயிலானந்தன் அவர்களின் உரை.
தில்லியில் மண்டலக் கிளை தொடங்கும் ஆர்வத்தை மகரிஷியிடம் தோற்றுவித்தது திரு டி.ஆர்.கார்த்திகேயன் அவர்கள் அளித்த உந்துதலேஎன்பதைக் குறிப்பிட்ட திரு மயிலானந்தன், தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் கிளை பரப்பி விரியவும்,தமிழகப் பள்ளி,மற்றும் பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களில் மனவளக்கலை இடம் பிடிக்கவும் ,தான் மேற்கொண்ட முயற்சிகள் பலவற்றுக்கும் திரு கார்த்திகேயன் அளித்த வழிகாட்டுதல்களே உறுதுணையாக விளங்கியதென்பதை மறவாமல் குறிப்பிட்டார்.
இன்று பாரதியார் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ’யோகமும் மனித மாண்பும்’ என்ற பெயருடன் பட்டயப்படிப்பில் தொடங்கிப் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு,முதுநிலை,மற்றும் முனைவர் பட்ட ஆய்வு வரை மகரிஷியின் கருத்துக்கள்,கல்வி நிலையங்களின் வழி கொண்டு செல்லப்படுவதைப் பெருமிதத்துடன் குறிப்பிட்ட அவர், தில்லி வாழ் மக்கள் இந்த யோகக் கலையால் மேலும் பயனுற வேண்டும் என்ற நோக்குடன் - ஆர்.கே.புரம் பகுதியில் விரைவில் அதற்கான அறக்கட்டளை ஒன்று தொடங்கப்படவிருக்கும் நற்செய்தியினையும் மகிழ்ச்சியோடு அறிவித்தார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கூட்டத்தினர் அனைவரையும் சிறு தியானம் ஒன்றில் ஈடுபடச் செய்து அதை வழிப்படுத்தி நடத்தியவர்,தில்லி மண்டல மனவளக்கலை அமைப்பின் பொறுப்பாளர் அருள்நிதி திரு பாலச்சந்திரன் அவர்கள்.

தில்லித் தமிழர்கள் மட்டுமன்றி உலகத் தமிழர் அனைவரும் தம் கருத்துக்களைப் பதிவு செய்யத் தமது ‘வடக்கு வாசல்’இதழ் வழியாக வாயில் அமைத்துத் தந்திருக்கும் வடக்குவாசல் இதழின் ஆசிரியர் திரு பென்னேஸ்வரன் அவர்கள்,பார்வையாளர்களின் சார்பில் கருத்துப் பகிர்வு செய்யவருமாறு அழைக்கப்பட்டார்; மகரிஷியின் யோகக் கலையில் பெரும் ஈடுபாடு கொண்டு,தான் உட்படப் பலரையும் அதன்பால் ஈர்த்தவரும்,அண்மையில் காலம் சென்றவருமான திருமதி கலா கார்த்திகேயனை (திரு டி.ஆர்.கார்த்திகேயன் அவர்களது மனைவி) நினைவு கூர்ந்து,மேடையிலும்,அவையிலும் இருந்தோரைக் கண நேரம் மனம் நெகிழ்ந்து போகுமாறு செய்து விட்டார் திரு பென்னேஸ்வரன்.

மதம்,சாதி,இனம்,மொழி ஆகிய எல்லைக் கோடுகள் கடந்து மனதுக்கு நெருக்கமாக இதம் தரும் இது போன்றதொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்காகத் தில்லித் தமிழ்ச்சங்கத்தார்க்குப் பாராட்டுத் தெரிவித்த அவர், இம்மாதிரியான நல்ல நிகழ்ச்சிகளுக்குச் சங்கம் அடிக்கடி ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

தில்லித் தமிழர்கள் ‘கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும்’ வகையில் வாய்த்த குளிர் விருட்சம் தில்லித் தமிழ்ச்சங்கம். முத்திரை பதிக்கும் தமிழர்களையும், தமிழ்க் கலைகளையும் என்றென்றும் வாழ்த்தி வரவேற்றுச் சிறப்புச் செய்து பாராட்டி மகிழும் தமிழ்ச் சங்கம் , அண்மையில் தனது புறத் தோற்றத்திலும் புதுப் பொலிவு பெற்றுள்ளது;பழைய கட்டிடங்களும்,நூலகமும் சீரமைக்கப் பெற்றுத் தமிழ் ஆர்வலர்களுக்குப் பல்சுவை விருந்து படைத்துக் கொண்டிருக்கின்றன.

தன்னை முன்னிறுத்தாமல்.. தன் செயல்களை மட்டுமே முன்னிறுத்தும் எளிமையான உள்ளம் படைத்த திரு பெருமாள் அவர்களைப் பொதுச் செயலாளராகவும்,பல்லாண்டுக் காலமாகத் தமிழ்ச்சங்கப் பணியே தன் மூச்செனக் கொண்டு வாழ்ந்து வரும் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களைத் தலைவராகவும் பெற்றிருக்கும் தில்லித்தமிழ்சங்கத்திற்கு
அந்த வேண்டுகோளை நிறைவேற்றுவதில் எந்தத் தடையுமிருக்காது என்பதோடு...
இன்னும் பல உயரங்களையும் கூட அது எட்டும் காலம் வெகு தொலைவில் இல்லையென்றே தோன்றுகிறது.

நன்றி;
கட்டுரையை வெளிட்ட ‘கலைமகள்’(டிச.’09)இதழுக்கு


இணைப்புக்கள்;
'வாழ்க வளமுடன்..!'
ஆழியாறு தந்த அமுதம்

19.11.09

உழைப்பின் தன்வரலாறுஒரு முன் குறிப்பு:
கொல்கத்தா கிருஷ்ணமூர்த்தி என்று இலக்கிய வட்டாரங்களில் பரவலாக அறியப்பட்டுள்ள திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள்,வங்க இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க பல படைப்புக்களை- குறிப்பாக மஹாசுவேதாதேவி,ஆஷா பூர்ணாதேவி ஆகியோரின் படைப்புக்களைத் தமிழாக்கம் செய்திருப்பதன் வழி ,வங்க இலக்கியத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்திருப்பவர்;அரசுப் பணியில் இருந்து கொண்டு...தீராத உடற்குறையுடனும் போராடியபடி,36 நூல்களை வங்க மொழியிலிருந்து மொழியாக்கம் செய்திருப்பதோடு,ஆங்கிலம் ,இந்தி மொழிகளிலிருந்தும் பல மொழிபெயர்ப்புக்களைச் செய்திருப்பவர்.மொழியாக்கத் துறையோடு நின்றுவிடாமல் பல அருமையான சிறுகதைகளையும்,வாழ்க்கை வரலாற்று நூல்களையும் தந்திருப்பவர்.

1084இன் அம்மாஎன்னும் அற்புதமான நாவலையும்(மஹாசுவேதாதேவி),
கருப்பு சூரியன் என்ற ஆஷா பூர்ணாதேவியின் சிறுகதைத் தொகுப்பையும்(அண்மையில் அந்தத் தொகுப்பிலிருந்து ஒரு சிறுகதை பற்றி என் வலையில் ஒரு பதிவு எழுதியிருந்தேன் - ரீபில் தீர்ந்து போன பால்பேனா)அவரது மொழியாக்கம் மட்டும் இல்லையென்றால்,வங்காள மொழி அறியாத இலக்கிய ஆர்வலர்கள் படித்திருக்க முடியாது.அவை இரண்டும் எவரும் தவற விடாமல் படித்தாக வேண்டிய படைப்புக்கள்.
தற்பொழுது பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் திரு கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்று நூலை,வடக்கு வாசல் இதழுக்காக மதிப்புரை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது;
தன் வாழ்க்கையைப் பொருளுடையதாக ஆக்கிக் கொள்ள சற்றும் அயராது உழைத்த ஒரு மனித ஜீவியின் அற்புதமான வரலாறு அது...


மதிப்புரை
மனிதப் பிறவியின் மகத்துவத்தை உணர்ந்து, அதை அர்த்தச் செறிவுள்ளதாக ஆக்கிக் கொண்டிருக்கும் சான்றோர்களின் "தன் வரலாறு'’களே வாசிப்பதற்கேற்ற தகுதி படைத்தவை; படிப்பவர் உள்ளங்களில் புதிய உள்ளொளிகளைப் பாய்ச்சவும், ஆக்க பூர்வமான மன எழுச்சிகள் பலவற்றைக் கிளர்த்தி விடவும் வல்லமை பெற்றவை அவை. அத்தகையதொரு படைப்பாக அண்மையில் வெளிவந்திருக்கிறது, பன்மொழி எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான கொல்கத்தா திரு.சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "நான் கடந்து வந்த பாதை’' என்னும் தன் வரலாற்று நூல்.

தமிழிலும், ஆங்கிலத்திலும் பல சிறுகதைகளையும், கட்டுரைகளையும், வாழ்க்கை வரலாற்று நூல்களையும் படைத்துள்ள போதும், திரு.சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களது அழுத்தமான சிறப்பான முத்திரை பதிந்திருப்பது, மொழிபெயர்ப்புத் துறையின் மீதுதான்!

"இயன்ற அளவு பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் பெயர்ந்துள்ளேன்.... தமிழிலக்கியத்தையும் பிறமொழிகளுக்குக் கொண்டு சென்றுள்ளேன்.''
என்று நூலின் நிறைவுரையில் அவரே குறிப்பிடுவது போலத் தமிழ் இலக்கிய உலகில், இறவாப் புகழோடு அவரை என்றென்றும் நினைவு கூரச் செய்பவை, இந்தி, ஆங்கிலம், வங்க மொழிகளிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலம், வங்கம் ஆகிய மொழிகளுக்குமாக அவர் மொழி பெயர்ப்புச் செய்து வழங்கியிருக்கும் பெருங் கொடைகளான அரிய பல நூல்களே!

சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்திலும், குறளை வங்காளத்திலும் மொழி பெயர்த்து - இந்திரா பார்த்தசாரதியின் "குருதிப் புனல்' நாவலை வங்கத்தில் கொண்டு சென்றமைக்காக சாகித்திய அகாதமி விருதையும் வென்றிருக்கும் திரு. சு.கிருஷ்ணமூர்த்தியின் மொத்த நூலாக்கங்களையும், அவற்றுக்காக ’இலக்கியச் சிந்தனை' முதலிய அமைப்புக்கள் பலவற்றிலிருந்து அவர் பெற்றுள்ள அங்கீகாரப் பரிசுகளையும் நூலின் பின்னிணைப்பில் பார்வையிடும்போது மனதிற்குள் ஒரு பிரமிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

"எங்கள் வாழ்க்கையில் சராசரி நடுத்தரக் குடும்பத்தில் நேர்வதைவிட அதிகத் துன்பங்கள் நேர்ந்தன. இளம் பிராயத்தில் பணத் தட்டுப்பாடு, நடு வயதில் குழந்தைகளின் உடல் நிலையை, அதன் பிறகு மகளின் குடும்ப வாழ்வில் பிரச்சினைகள்...'' என்றும்,
"அலுவலகப் பணிகளை, குடும்பத் தேவைகளைக் கவனித்துக் கொண்டு தொடர்ந்து படிப்பதற்கும், எழுதுவதற்கும் ஒரு கழைக் கூத்தாடியின் திறன் தேவைப்பட்டது''
என்றும் தான் எதிர்ப்பட நேர்ந்த வாழ்க்கை நெருக்கடிகளைத் தனது வரலாற்றில் ஆங்காங்கே பதிவு செய்து கொண்டு போகிறார் கிருஷ்ணமூர்த்தி; ஆனாலும் கூட இவற்றையெல்லாம் மீறிக் கொண்டு முன் குறிப்பிட்ட வெற்றி இலக்குகளை அவரால் எவ்வாறு எட்ட முடிந்தது என்பதற்கான விடையையும் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது. அவரது நூல்.

மிக இளம் வயதிலேயே தன்னுள் பதிந்து, ஊறி, உட்கலந்து விட்ட இலக்கிய வாசிப்பையும், தொடர்ந்ததொரு சாதகமாக எழுத்தைப் பயிலும் முயற்சியையும் வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் - நெருக்குதலான சூழல்களுக்கு நடுவிலும் - ஒரு போதும் கைவிடாமல், ஏதாவது ஒரு வகையில் அவர் தொடர்ந்து கொண்டே வந்திருக்கிறார் என்பதே அவரது தன் வரலாற்றிலிருந்து நாம் பெறும் மையச் செய்தி.

தான் வசிப்பது அன்னவாசலோ..., புதுக்கோட்டையோ..., விஜய வாடாவோ..., கொல்கத்தாவோ - அது எதுவாக இருந்தாலும் அங்குள்ள பள்ளி நூலகத்தையோ, பஞ்சாயத்து நூலகத்தையோ, தேசிய நூலகத்தையோ தேடிப் போய்க் கொண்டே இருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. அச்சகத்தில் வேலைபார்க்கும் சகோதரன், சுடச்சுடக் கொண்டு வரும் மெய்ப்புப் பிரதிகளாலும் கூடத் தன் அறிவுப்பசியை ஆற்றிக் கொள்கிறார் அவர்.

"இயற்கையாகவே மொழி களிலும், இலக்கியத்திலும் ஆர்வம்'' கொண்டவராக - அவற்றின் "தீராக் காதல'னாகவே வாழ்ந்த திரு.கிருஷ்ணமூர்த்தி, இளமையில் பயின்ற இந்தியோடும், சமஸ்கிருதத்தோடும் நின்று விடாமல் - வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தனது பன்மொழி பயிலும் ஆர்வத்தை நிறைவு செய்து கொண்டிருக்கிறார். பணி நிமித்தம் கொல்கத்தாவில் வாழும் சூழலில் வங்கமொழியைத் தீவிரமான நாட்டத்துடன் கற்றுத் தேர்ச்சி பெற்றதனாலேயே வங்கமொழி சார்ந்த இலக்கிய மொழிபெயர்ப்புப் பங்களிப்பில் அவரால் தனித்ததொரு இடத்தைப் பெறமுடிந்திருக்கிறது. ஜெர்மன், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கற்கும் முயற்சியிலும் கூட அவர் ஈடுபட்டதை அவரது தன் வரலாறு முன்வைக்கிறது.

கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உருவாக்கிய நூல்களின் எண்ணிக்கை ஒருபுறமிருக்க - அவை ஒவ்வொன்றையும் இழைத்து, இழைத்து உருவாக்கவும், அவற்றை வெளியிடவும் அவர் மேற்கொண்ட கடுமையான முயற்சிகளும், ஆத்மார்த்தமான அர்ப்பணிப்போடு கூடிய முனைப்பும் நம்மை மலைப்பில் ஆழ்த்துகின்றன.

வங்காளப் போராளிகளின் - வங்கப் போராட்டங்களின் வரலாறுகளை எழுதும் போது - தனக்குக் கிடைத்த நூல்களிலிருந்து திரட்டிய செய்திகளை மட்டும் வைத்துக் கொண்டு மேலோட்டமாக அவற்றை எழுதுவது அவருக்கு உகப்பானதாக இல்லை. பனை ஓலைகளைத் தேடிப் பயணப்பட்ட உ.வே.சா.வைப் போல இவரும், அந்தச் செய்திகளின் மூலவேர்களை இனம் காண்பதற்காக அந்தப் போராளிகளின் நண்பர்களை..., உறவுகளை.... வாரிசுகளைத் தேடிப் பயணப்படுகிறார்.
"மொழி பெயர்ப்பைப் படிக்கும் வாசகன், மூலப் படைப்பைப் பற்றி, அதன் படைப்பாளியைப் பற்றித் தவறாக எண்ணிக் கொள்ள வாய்ப்பு''த் தராதபடி - மஹாசுவேதா தேவியைத் தமிழில் தரமுற்படும் வேளையில், அவரையே நேரில் சென்று பார்த்துப் பல இடங்களைத் தெளிவுபடுத்திக் கொள்கிறார்;
"குறுகத் தரித்த குற'ளை, அதன் சீர்மை குலையாமல் அதே போன்ற கவித்துவத்துடன் வங்காளத்தில் அளிக்க - வங்கமொழி மோனையைத் துணைக்குச் சேர்த்துக் கொண்டு கடுமையாக உழைக்கிறார்.
தான் மேற்கொண்டிருக்கும் இலக்கியப் பணியை நுனிப்புல் மேய்ந்து, நீர்த்துப் போக விட்டு விடாதபடி - உண்மையான தீவிரத்துடன் எடுத்துக் கொள்ளும் திரு. கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கையை இன்றைய இலக்கியவாதிகள் ஒரு பாடமாகக் கொண்டால் தமிழிலக்கிய வளர்ச்சியின் முன்னகர்வுகள் மேலும் கூடுதலாக வழி பிறக்கும்.

எழுத்தாளனின் கடின உழைப்பு விரயமாவதையும், பத்திரிகைகளாலும், பதிப்பகங்களாலும் அது சுரண்டப்படுவதையும் திரு.கிருஷ்ணமூர்த்தி, தனது வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வந்திருப்பதையும் அவரது நூலின் பல பகுதிகள் எடுத்துக் காட்டுகின்றன.

தனது படைப்பு பிரசுரமாகாத போது எழுத்தாளனுக்கு ஏற்பட்டு விடும் கடுமையான மனச்சோர்வுக்கு மாற்றாக - அதைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் - ஒரு நூலைத் தொடங்குவதற்கு முன்பே - அதை வெளியிடக் கூடிய பதிப்பாளர்களை உறுதி செய்து கொண்ட பிறகே அந்த முயற்சியில் இறங்குகிறார் இவர்; சில வேளைகளில் அதையும் மீறிச் சில குறிப்பிட்ட நூல்களை வெளியிட்டே ஆக வேண்டும் என்ற மன எழுச்சி மேலோங்குகையில் தானே செலவழித்து அவற்றை வெளியிட்டு விடவும் செய்கிறார்.

தனது சிறுகதைகளுக்கான சன்மானத்தை நினைவுப்படுத்தப்போய், அதன் பிறகு அந்த இதழில் பிரசுரிப்புக்கான வாய்ப்பையே முற்றாக இழந்ததையும், அனைத்திந்தியத் தொகுப்பு ஒன்றில் தன் சிறுகதையைச் சேர்த்து விட்டு, அது குறித்த விவரத்தைக் கூட அறிவிக்காமல் - புத்தகப் பிரதிகளோ, சன்மானமோ எதுவும் அளிக்காமல் விட்டு விட்ட பதிப்பகத்தை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தியதால் தொகுப்பாளரின் நட்பையே இழக்க நேர்ந்த சம்பவத்தையும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. ஆனால் இவற்றாலெல்லாம் "நேர்படப்' பேசும் தனது இயல்பை அவர் ஒருபோதும் மாற்றிக் கொள்ளவே இல்லை.

பிரசுரிக்கப்படாத தனது கட்டுரையைத் திரும்பத் தராததற்காகத் தான் பெருமதிப்பு வைத்திருக்கும் திரு. கி.வா.ஜ. அவர்களுக்குக் கூடக் கடுமையாகக் கடிதம் எழுதியிருக்கிறார் இவர்.

பாரதியின் படைப்புக்களில் தோய்ந்து கலந்தவராயினும் - தாகூரை அரைகுறையாக அறிந்த சிலர், பாரதிக்கு ஏற்றம் தருவதான எண்ணத்துடன் தாகூரைக் குறைத்துப் பேச முற்படுகையில் அதை எதிர்த்து "ரவீந்திரரின் படைப்பில் வீச்சு அதிகம்'’ என்று பேட்டி அளிக்கிறார்; அதற்குக் கண்டனக் கணைகள் எழும் போது "பாரதியும் ரவீந்திரரும்' என்று நீண்ட கட்டுரை எழுதி விளக்கமளிக்கிறார்.

குறுகிய மொழி, இனச் சார்புகளிலும் சிக்கி உண்மையை மழுப்புவதிலும், அறிவுக் கலப்படம் செய்வதிலும் சம்மதம் இல்லாதவராய் - எந்த நிலையிலும் - எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாத திண்மை கொண்டவராக விளங்கியிருக்கும் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் - தன் "சிறுசெந்நாபொய் கூறாது' என்று நெஞ்சு நிமிர்த்திக் கூறிய சங்கப் புலவனின் இன்றைய பதிப்பாகவே காட்சியளிக்கிறார்.

பரந்த வாசிப்பும், பழுத்த வாழ்க்கை அனுபவமும் - தன்னைத் தானே ஒரு புறநிலைப் பார்வையாளனாக விலகி நின்று பார்க்கும் பார்வையைத் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் ஏற்படுத்தி விட்டிருப்பதை அவரது நூலின் பல இடங்களில் காண முடிகிறது.

மூன்று வயதில் பெரியம்மை நோய் தாக்க, மரணப் படுக்கையில் கிடக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. அவர் இறந்து போவது நிச்சயம் என்று உறுதிப்படுத்திக் கொண்டு விட்ட - ஆசாரத்தில் ஊறிய அவரது தந்தை வழிப்பாட்டி, குழந்தைக்கு மேலே உலர்ந்து கொண்டிருக்கும் துணிகளில் சாவுத் தீட்டுப்பட்டு விடாமல் அவற்றை எடுக்கச் சொல்கிறாள்; அதைக் கேட்டு எரிச்சலடைந்து கத்துகிறார் கிருஷ்ணமூர்த்தியின் தந்தை.

"நல்ல வேளை துணிகள் தீட்டுப்படவில்லை; நான் பிழைத்து விட்டேன்''என்று, தான் உயிர் தப்பிய நிகழ்வை, வெகு இயல்பாக - வியாக்கியான மற்ற எளிமையுடன் "சட்'டென்று முடித்து விடுகிறார் கிருஷ்ணமூர்த்தி. "நீர்வழிப்படடூஉம் புணை' போல, மனிதர்களையும், வாழ்க்கையையும் உள்ளபடி ஏற்றுக் கொள்ள மனதைப் படிக்கப் பழக்கப்படுத்தி விட்டதாலோ என்னவோ..., சொந்த வாழ்வின் நெருக்கடியான தருணங்களைக் கூட அதிக உணர்வுக் கலப்பின்றிச் சொல்லிக் கொண்டு போவது அவருக்குச் சாத்தியமாகியிருக்கிறது.

வார்த்தை சாகசங்கள் அற்றமிக எளிமையான நேரடியான நடையில், செட்டான சொற்களோடும், சிறு சிறு வாக்கிய அமைப்புக்களோடும் தனது வரலாற்றைப் படிப்பதற்கு எளிதாக்கி விறுவிறுப்பாகக் கொண்டு சென்றிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

கதைகளையும், பிற படைப்புக் களையும் உருவாக்குவது கூட ஒரு வகையில் எளிதானது தான். ஆனால், தன்னிடமிருந்து ஜனித்த ஒவ்வொரு படைப்பிற்கான பொறியும் எங்கிருந்து கிடைத்ததென்ற விரிவான விளக்கங்கள்..., அவற்றுக்கான எதிர்வினைகள், பல மொழி இலக்கியவாதிகளுடனும், பத்திரிகையாளர்களுடனும் தான் கொண்டிருந்த தொடர்புக்கும், நட்புக்கும் சான்றாகப் பல கடிதங்கள் என அளவற்ற பல ஆவணங்களைத் தன் ஆயுள் முழுவதும் பொன்போலப் பாதுகாத்து, இந்தத் தன் வரலாற்றில் அவர் பயன்படுத்தியுள்ள முறை அசாதாரணமானது; சராசரி மனித முயற்சிகள் எட்டக்கூடிய உயரங்களை விடப் பல மடங்கு மேலானது.

திரு.கிருஷ்ணமூர்த்தி தன் வரலாறு, வெறும் டைரிக் குறிப்புக்களால் மட்டும் நிரம்பியதாக இல்லை. ஒரு கர்மயோகியைப் போன்ற சலியாத உழைப்பு, இலக்கியத் துறையின் மீது குன்றாத ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்ட அவரது வாழ்வை, அவர் "கடந்து வந்த பாதை'யின் மூலம் அறிந்து கொள்வது, இலக்கியத்தை மட்டுமே சுவாசித்து... அதில் மட்டுமே ஜீவித்திருக்கும் அற்புதமான ஓர் ஆத்மாவின் தேடலை அறிந்து கொள்ளும் பரவசப் பேரானந்தத்தையே கிளர்த்துகிறது.

நன்றி:
மதிப்புரையை வெளியிட்டு இணையத்திலும் ஏற்றியவடக்கு வாசல் இதழுக்கு.
http://www.vadakkuvaasal.com/

'நான் கடந்து வந்த பாதை'
சு.கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு:
பாரதி புத்தகாலயம்
421, அண்ணாசாலை
தேனாம்பேட்டை, சென்னை-600 018.
போன்: 044-24332424
விலை ரூ.100/-

13.11.09

கசங்கும் ரோஜாக்கள்’’உமது குழந்தைகள் உம்முடையவை அல்ல
வாழ்க்கையை விரும்பி வரவேற்கும் வண்ணக் களஞ்சியங்கள்

அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம்...உங்கள் பாதுகாப்பிலும் இருக்கலாம்
ஆனாலும் உங்களுக்குச் சொந்தமல்ல அவர்கள்...

உங்கள் அன்பைப் பொழிய முடியும் அவர்களிடம்...
ஆனாலும் உங்கள் சிந்தனைகளைப் புகுத்த முடியாது

உங்களை இருப்பிடமாகக் கொண்டது அவர்களின் உடல்தான்...உள்ளங்கள் அல்ல

நாளை என்ற வீட்டில் வாழ்பவை அந்த உள்ளங்கள்

உங்களைப் போல அவர்களை மாற்றாதீர்கள்...
அவர்களைப்போலிருக்க நீங்கள் முயற்சி செய்யுங்கள்..

ஏனெனில்..
வாழ்க்கை என்றும் பின்னோக்கிப் போவதில்லை
நேற்றுடனும் ஒன்றி இணைவதில்லை

-கலீல் கிப்ரான்

சிறுவர் இலக்கியம் என்ற துறையே படிப்படியாக வீழ்ச்சி பெற்று,ஊடக ஆக்கிரமிப்புக்களாகிய கார்ட்டூன் தொலைக்காட்சிகளும்,கணினி விளையாட்டுக்களுமே சிறுவர் உலகில் முதன்மை பெற்று வரும் இன்றைய சூழலிலும் கூடத் குழந்தைகளையும்,சிறுவர்களையும் கரிசனத்தோடு புரிந்து கொண்டு அவர்களைப் பற்றியும்...அவர்களுக்காகவும் எழுதும் எழுத்தாளர்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரேயடியாக இல்லாமல் போய்விடவில்லை என்பது,சற்று ஆறுதலளிக்கிறது.

அந்த வரிசையில்...இன்றைய சூழலில் தனித்த கவனம் பெறுவதற்குரிய ஒரு படைப்பாளி,ஆயிஷா என்ற அற்புதமான தனது குறுநாவலால் இன்றைய சிறுவர் இலக்கியத்தின் போக்குக்குத் திசைகாட்டியாக அமைந்து ஆயிஷாநடராசன் என்றே பெயர் பெற்றிருக்கும் திரு.இரா.நடராசன் அவர்கள்.

சிறந்த கல்வியாளரும்,டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றுத் தலைமை ஆசிரியராகப் பணி புரிபவருமான திரு நடராசன் அவர்கள் ஒரு சிறந்த படைப்பாளி;
மனித வாழ்வின் அக,புறச் சிக்கல்கள்,மனித மனத்தின் ஆழங்காண முடியாத சுழல்கள் ஆகியவை குறித்துப் புதிய உத்திகளைக் கையாண்டு நவீன புனைவு மொழியில் எண்ணற்ற சிறுகதைகளையும்,நாவல்களையும்(மொழிபெயர்ப்பு நூல்களையும்,அறிவியல் கட்டுரை நூல்கள் மற்றும் புனைகதைகளையும் கூட)உருவாக்கியவர் அவர்.அவற்றையெல்லாம் விட ஒரு நவீனத் தமிழ் எழுத்தாளராகச் சிறுவர் இலக்கியத்திற்கு அவர் செய்திருக்கும் பங்களிப்பு அபாரமானது.

இன்றைய காலகட்டத்தின் உலகமயமாதல் சூழலில் குழந்தைகளுக்கும்,மாணவர்களுக்கும் நேரும் பன்முகச் சிதைவுகளை உள்ளார்ந்த அக்கறையுடன் அவதானித்துத் தமது ‘ஆயிஷா’,’ரோஸ்’ ஆகிய குறுநாவல்களில் பொறுப்போடு பதிவு செய்திருக்கிறார் அவர்.
எதையோ விடுத்து எதையோ துரத்தும் இக்கால நவீன வாழ்வியலை அவ்விரு புனைவுகளுமே கேள்விக்குள்ளாக்குகின்றன.

கல்வி வணிகமயமாக்கப்படும் சூழ்நிலையில்,
’’புத்தகங்களே கவனமாய் இருங்கள்,குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்’’
என்ற அப்துல் ரகுமானின் கவிதையைப் போலப் பலிக்கூடங்கள் போல ஆகும் பள்ளிக்கூடங்கள், சிறு குழந்தைகளின் அறிவை மட்டுமன்றி,அவர்களையே வேட்டையாடி விடுவதை வெளிச்சத்துக்குக் கொணர்ந்து மனித மனச் சாட்சியை உலுக்கும் நீள்கதை,’ஆயிஷா’.


'ஆயிஷா’ குறும்படத்திலிருந்து ஒரு காட்சி

குறும்படமாகவும் ஆக்கம் பெற்றுள்ள இப் புனைவு,வகுப்பறைகள் குறித்தும்,ஆசிரியர்கள் குறித்தும் காலங்காலமாக நிலவிவரும் சில தெய்வீக பிரமைகளையும்,புனிதங்களையும் கட்டுடைத்துப் போடுகிறது.வகுப்பறை வன்முறை குறித்த பிரக்ஞையும்,அது குறித்த விவாதங்களும் மிகுதியாகிக் கொண்டு வரும் சமகாலச் சூழலில்,வகுப்பறைக் களங்களில் பிஞ்சு மாணவர்களுக்கு நேரும் மனக் காயங்களைக் கசப்பான நிதரிசனங்களாக இப் படைப்பு முன் வைக்கிறது.
புதியனவற்றைக் கற்பதிலும்,தேடுவதிலும் ஆர்வமின்றி எப்போதோ தயாரிக்கப்பட்ட குறிப்புகளையும்,மலிவான சந்தை நோட்ஸுகளையும் இயந்திர கதியில் எடுத்துரைக்கும் ஆசிரியர்கள்.....
வகுப்பு எண்,வரிசை எண் ,தேர்வு எண்,அதில் பெறும் மதிப்பெண் என எண்களாக மட்டுமே உரு மாறிப் போன மாணவர்கள்...
என்ற செக்குமாட்டுச் சூழலின் நெடுநாள் நெட்டை உறக்கத்தை அறிவுத் தாகம் கொண்ட ஆயிஷா எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள் கலைத்துப் போடுகின்றன.
மாணவர்களின் ‘சுய அறிவு’ என்பது மறுக்கப்பட்டே வந்திருக்கும் நிறுவனமாக்கப்பட்ட கல்வி அமைப்பில்,ஆசிரியர்களின் அதிகாரம் தகர்க்கப்பட...சராசரியான ஆசிரியர்களுக்கு ஆயிஷா ஒரு அச்சுறுத்தலாகவே மாறிப் போகிறாள்.
உடல்,உள்ள ரீதியான வன்முறைகள் அவள் மீது ஒருசேரத் தொடுக்கப்பட,அடியின் வலியை மரக்கடிக்க விஞ்ஞானப் பரிசோதனையை மேற்கொள்ளும் ஆயிஷா அதற்கே பலியாகிப் போகிறாள்.
உண்மையான அறிவுத் தேடல் என்பது பள்ளிகளுக்கு வெளியிலேதான் இருக்கிறது என்பதை உணர்த்தித் துருப்பிடித்துப்போன இன்றைய கல்விமுறை ,அறிவு மரத்துப்போன இயந்திர மனிதர்களுக்கு மட்டுமே பொருத்தமானது என்பதைப் பொட்டில் அடித்துப் புரிய வைக்கிறாள் ஆயிஷா.

நாளும் புதுப்புது அறிவுத் துறைகள் முளைத்துப் பெருகிக்கொண்டுபோகும் போட்டிகள் மலிந்த நவீன யுகத்தில்,தங்களையும் வருத்திக் கொண்டு குழந்தைகளின் இயல்பான ஆளுமை வளர்ச்சிக்கும் இடம் தராமல் அவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும் பெற்றோரை யதார்த்தமாகச் சித்தரிக்கிறது இரா.நடராசனின் ‘ரோஸ்’என்னும் குறுநாவல்.

சமைப்பதும்,சாப்பிடுவதும்,உடுப்பதும்,ஓடுவதுமாய் ஓர் ஓட்டப்பந்தயத்தில் முனைந்திருக்கும் பெற்றோர், தங்கள் வீட்டுத் தோட்டத்தில் காலையில் மலர்ந்திருக்கும் ரோஜாவின் அழகைத் தாங்களும் ரசிப்பதில்லை;தங்கள் குழந்தையையும் ரசிக்க விடுவதில்லை.
பள்ளிக்குச் சென்ற பிறகும் வகுப்பறையில் அன்று நடக்கும் மொழிப்பாடம்,அறிவியல்,ஓவிய வரலாற்று வகுப்புக்கள் என அனைத்துமே ஏதோ ஒரு வகையில் ரோஜாவை நினைவூட்டுவதாகவே அந்தக் குழந்தைக்கு அமைந்து விடுகின்றன; ஆனாலும் அது எழுப்பும் அடிப்படையான சில கேள்விகளுக்கும்,ரசனை வெளிப்பாடுகளுக்கும் உரிய வடிகால் கிடைக்க வழியே இல்லாமல் போய் விடுகிறது.
பள்ளி முடிந்த பிறகும் தனிப் பயிற்சி வகுப்பு,கராத்தே,கணினிப் பயிற்சி என்று எல்லாம் முடிந்து தாய் தந்தையருடன் உணவு விடுதிக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்புகையில் காலையில் புது மலர்ச்சியுடன் பார்த்த ரோஜா வாடியிருப்பதைக் கண்ட குழந்தையின் முகமும் கூம்பிப் போகிறது.

குழந்தை உளவியலின் குறியீடாக’ரோஜா’வைக் கதை நெடுகிலும் பயன்படுத்தியுள்ள கதாசிரியர்,நுகர்வுக் கலாசாரமும்,அது சார்ந்த வெறியும் மனிதனிடமிருந்து பறித்துக் கொண்டுவிட்ட நிதானத்தையும்,நிம்மதியையும் -முழுக்க முழுக்கக் காட்சித் துணுக்குகள் வழியாகவும்,அவற்றில் நிகழும் உரையாடல் வழியாகவுமே சொல்லியபடி கதையை நகர்த்திச் செல்கிறார்.

’அன்றாட வாழ்க்கை என்னும் முரட்டு இயந்திரம்,குழந்தைகளின் மேல் கதறக்கதற ஏறி அரைக்கும் அவல’மும்.’அது குறித்து எழுந்த பதற்றமு’மே தன்னை இவ்வாறான நீள்கதைகளை எழுதத் தூண்டியதாகக் குறிப்பிடும் இப் படைப்பாளி,வெறும் புனைகதைக் கலைஞராக மட்டும் இருந்து விடாமல் ஒரு நல்லாசிரியராகவும் இருந்த காரணத்தினாலேயே
கசங்கிக் கொண்டிருக்கும் இந்த ரோஜாக்களை அவரால் இனங்கண்டு கொள்ள முடிந்திருக்கிறது.


ஆயிஷா பற்றி மேலும் சில குறிப்புக்கள்;
தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு.
குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த கதை.
கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல்.
ஸ்நேகா பதிப்பகம் இரண்டு ரூபாய்க்கு ஒரு சிறு தனி நூலாகக் கொண்டு வர ஒரே வருடத்தில் ஒன்பது பதிப்புகள் கண்டது.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்புகளின் போது ஆயிஷா கட்டாய பாடமாக்கப்பட்டது.அதைத் தவிர ஏழு தன்னதிகார கல்லூரிகள், மூன்று பல்கலைகழகங்கள் ஆயிஷாவைப் பாடமாக வைத்துள்ளன.
ஆயிஷா மன்றங்கள் என்று மதுரை மற்றும் கோவையில் கிராமப்புற குழந்தைகளால் தொடங்கப்பட்டு அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
(காண்க:http://eranatarasan.com/
பி.கு;
எங்கள் தன்னாட்சிக் கல்லூரியின் பாடத் திட்டக்குழுவிலும்,மதுரை காமராசர் பல்கலைக்கழக இளங்கலை-பி.ஏ.-பாடத் திட்டக் குழுவிலும் நான் பங்கேற்றிருந்த காலகட்டத்தில்,அந்தப் பாடத் திட்டங்களில் ஆயிஷா குறுநாவலைச் சேர்க்க முயற்சி மேற்கொண்டு வெற்றியடைந்திருக்கிறேன்.
தில்லி தமிழ்ப் பள்ளிகளில்,ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சி அளிப்பதற்காக அண்மையில்(ஜூலை’09) அழைக்கப்பட்டபோது,ஆயிஷா,ரோஸ் ஆகிய இரு நாவல்களையும் அவர்களை வாசிக்க வைத்ததோடு,ஆயிஷா குறும்படத்தையும் திரையிட்டுக் காட்டினேன்.அவர்களில் பலருக்கும் ஆயிஷா பற்றிய முதல் அறிமுகம் அதுதான் என அறிய நேர்ந்தபோது வாசிப்புப்பழக்கத்திலிருந்து ஆசிரியர்கள் எந்த அளவுக்கு அந்நியமாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்ற கசப்பான நிஜம் என் நெஞ்சைச் சுட்டது.

8.11.09

18நாட்கள்,10நாடுகள்..(6)

நாட்கள்2,3,4-பிரான்ஸ்-பாரீஸ்(தொடர்ச்சி)

சீன் நதி ஓரத்தில்.....

பாரீஸ் நகரத்தை ஒரு பாம்பைப் போலச் சுற்றி வளைத்தபடி ஓடுவது சீன் நதி.
2000 ஆண்டுகளுக்கு முன் பாரிஸீயன்கள் என்னும் பழங்குடிமக்களின் குடியேற்றம் சீன் ஆற்றின் கரையில் நிகழ்ந்ததால் அவர்களது பெயரைக் கொண்டே அந்த நகரமும் பாரீஸ் என்று பெயர் பெற்றிருக்கிறது .
(இலத்தீன் மொழியில் சீன் என்ற சொல்லுக்குப் பாம்பு என்று பொருள் இருப்பதாக எங்கள் வழிகாட்டி சொல்ல,வேறு சில கலைக் களஞ்சியங்களின் வழியே அதற்குப் புனிதம் என்ற பொருளும் இருப்பதை நான் அறிந்து கொண்டேன்)

சீன் நதியில் மேற்கொண்ட உல்லாசப் படகுப் பயணத்தோடு எங்கள் பாரீஸ் சுற்றுலா தொடங்கியது.
சுற்றுலாப் பயணிகளுக்கான இவ்வாறான படகுப் பயணத்தைப் பல ஐரோப்பிய நகரங்களிலும் காண முடிகிறது.(சிங்கப்பூரிலும் கூட இது உண்டு).
நெதர்லாண்ட்ஸின்(ஹாலந்து)ஆம்ஸ்டர்டாம் நகரிலும்,லண்டனின் தேம்ஸிலும் கூட இவ்வாறான படகுப் பயணங்கள் மிக நேர்த்தியாக ஊரைச் சுற்றிக் காட்டி விடுகின்றன.


River Cruise என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் இப்படிப்பட்ட படகு சவாரிகளின் மூலம் நகரை வேறொரு கோணத்தில் அறிமுகம் செய்து கொள்ள முடிகிறது;ஒரு நகரத்தைப் பற்றிய தொடக்க கட்டச் செய்திகளை....,அங்குள்ள முதன்மையான இடங்களை ,முன்னோட்டம் போல ஓரளவுக்குத் தெரிந்து கொண்டு விடுவதால் குறிப்பிட்ட அந்த நகரத்தில் எதையெல்லாம் பார்க்கப் போகிறோம் என்ற தெளிவான பார்வை கிடைத்து விடுகிறது.சென்னையின் குறிப்பிட்ட சில இடங்களைப் பார்க்கக் கூவத்திலும் கூட (-நாற்றமில்லாமல்தான்-) ஒரு River Cruise மேற்கொள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்கம் நெஞ்சின் ஒரு மூலையில்.......!
(சில நகரங்களில் அப்படிப்பட்ட படகு சவாரியுடன் மட்டுமே ஊரைச் சுற்றிக் காட்டி விட்டதாக முடித்து விடுவதும் உண்டு.
எங்களுக்கு நல்ல காலமாக அப்படிப்பட்ட சுற்றுலா நிறுவனம் வாய்க்கவில்லை).

மதியம் இரண்டு மணிக்கு மிதமான குளிரில்...இலேசான மழைச் சாரல் பன்னீர் தூவிக் கொண்டிருக்க,எங்கள் படகுப் பயணம் தொடங்கியது.படகினுள்ளேயே ஒலிபெருக்கி வழியாக நாம் கடந்து செல்லும் இடங்கள்,அவற்றின் வரலாற்றுச் சிறப்புக்கள் ஆகிய எல்லா விவரங்களையும் தொடர்ந்து நேர்முக வருணனை போலச் சொல்லிக் கொண்டே வருகிறார்கள்.ஒரே ஒரு சிக்கல்..,அவர்கள் பேசும் ஆங்கிலம் நமக்கு விளங்க வேண்டும்...அவ்வளவுதான்!

படகுத் துறையை ஒட்டியே ஈபில் கோபுரம் அமைந்து விட்டதால் அதை முதலில் மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டோம். படகு தொடர்ந்து செல்லச் செல்லப்..பாரீஸின் முக்கியமான இடங்களாகிய லூவர் அருங்காட்சியகம்,நோட்ரடாம் ஆலயம்,இன்வேலிட்ஸ் நினைவுச் சின்னம்,பிரெஞ்சுப் புரட்சியின்போது மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்(சிரச் சேதத்துக்கு உட்படுத்தப்படுவதற்கு முன் மேரி அண்டாய்நெட் போன்றவர்கள்)சிறை வைக்கப்பட்டிருந்த பழைய அரண்மனை , பாதாளச் சிறை வடிவிலான சில சிறைக்கூடங்கள் ,
பாரீஸ் பல்கலைக்கழகம் ஆகியவை ஆங்காங்கே எங்களுக்கு இலேசாகத் தரிசனம் தந்து மறைந்து கொண்டிருந்தன.
நதிக் கரை ஓரத்தில் பழைய அரண்மனை..தொலைவில் ஈபில்..


பாதாளச் சிறைக்கூடங்கள்

பலப் பல நூற்றாண்டுகளைச் சேர்ந்த மிகப் பழமையான பாலங்களுக்கு அடியில் எங்கள் படகு சென்று கொண்டிருந்தபோது....அந்தந்தக் காலத்தின் உணர்வுகள், உள்ள வேட்கைகள்,ஆற்றாமைகள்,ஆதங்கப்பெருமூச்சுக்கள்,குமைச்சல்கள்,குதூகலங்கள் ஆகியற்றுக்கிடையே ஊர்ந்து செல்வது போன்றதொரு சிலிர்ப்பு......!

பயண வழியில் வியப்படையச் செய்த குறிப்பிட்ட ஒரு காட்சி, நியூயார்க்கின் சுதந்திர தேவி சிலையைப் போலச் சற்றும் மாறாமல்- அதே வடிவத்தில் அதே போலக் கொஞ்சம் சிறியதாகக் காட்சியளித்த சிலைதான்!பாரீஸுக்குப் பதிலாக நியூயார்க்குக்கு வந்து சேர்ந்து விட்டோமோ என்று மலைப்புத் தட்ட வைக்கும் வகையில் இருந்தது அந்தச் சிலையின் தோற்றம்.

அந்தச் சிலை பற்றிய கதை சற்றுச் சுவாரசியமானது.
நியூயார்க்கின் சுதந்திரதேவி சிலையை உருவாக்கிய சிற்பி,பிரடெரிக் அகஸ்டி பர்தோல்டி,பாரீஸச் சேர்ந்தவர்;
காப்பரில் உருவாக்கப்பட்ட அந்தச் சிலை, சிறுசிறு துண்டு வடிவங்களில் செய்யப்பட்டுப் பாரீஸிலிருந்து அமெரிக்காவுக்குக் கப்பலில்
அனுப்பப்பட்டுப் பிறகு அங்கே ஒருங்கிணக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க நாட்டின் அடையாளமான அந்தச் சிலையைத் தங்களுக்குத் தந்த(1886இல்)பிரெஞ்சுக்காரர்களுக்குச் செலுத்தும்
நன்றிக் கடனாக,மூலச் சிலையில் பத்தில் ஒரு பங்கு அளவில் வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட அதே போன்றதொரு சுதந்திர தேவியின் சிலை,இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நட்புப் பிணைப்பின் குறியீடாக,பாரீஸ் வாழ் அமெரிக்கர்களால் பாரீஸுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கிறது.ஈபில் கோபுரத்திலிருந்து ஒன்றரை கி.மீ.தொலைவில் அமெரிக்கா இருக்கும் திசையை நோக்கியபடி நிறுவப்பட்டிருக்கும் இந்த 35 அடி உயரச் சிலை சுதந்திரத்தின் செய்தியை மட்டுமல்லாமல் உலக நாடுகள் நேசத்தால் நெருங்கி வாழவேண்டும் என்ற உண்மயையும் உரத்து முழங்கியபடி சீன் நதிக் கரையில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது.


பாரிஸுக்குள் நாங்கள் நுழைந்ததுமே எங்கள் வழிகாட்டியாக வந்த பெண்மணி,இது கிறுக்குத்தனமான ஒரு நகரம்(It is a crazy city)என்று குறிப்பிட்டார்.அவர் எதை மனதில் கொண்டு எந்தப் பொருளில் அவ்வாறு சொன்னாரோ தெரியாது;
வேக வரையறை எதுவுமின்றி விரைந்தோடும் வாகனங்கள்,விரும்பியதை..விரும்பிய நேரத்தில் எந்த மனத்தடையுமின்றிச் செய்து கொண்டிருக்கும் சுதந்திரமான மக்கள் கூட்டம் ஆகியவற்றை மனதில் கொண்டு அவர் ஒருவேளை அவ்வாறு சொல்லியிருக்கலாம்.
ஆனால் என் பார்வையில் பட்டதெல்லாம்...அந்த ஊர் மக்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும்....ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து ரசித்தபடி.... சொட்டுச் சொட்டாகப் பருகிக் கொண்டிருக்கும் காட்சிதான்.

நம்மூர் ரோட்டோரக் கடைகளைப் போலத் தெரு நடைபாதைகளிலுள்ள கபேக்கள் அங்கே பிரபலம்;

நாங்கள் சென்ற பல ஐரோப்பிய நாடுகளிலும்,இப்படிப்பட்ட தெருவோரக் கபேக்களுக்குத் தரப்படும் முக்கியத்துவத்தைக் காண முடிந்தது.
(ஆனால் இங்கே மொய்க்கும் ஈ,கொசுக்களையோ,கசக்கிப் போட்டுவிட்டுப் போகும் காகிதப் பொட்டலங்கள் மற்றும் பாலிதீன் குப்பைகளையோ அங்கே மருந்துக்கும் கூடப் பார்த்துவிட முடியாது)
ஓட்டலின் உள்ளே கூட இடம் கிடைத்து விடலாம்;ஆனால் அந்தத் தெரு நடைபாதைகளின் இருக்கைகள் சுலபமாகக் கிடைத்து விடாது;மிடறு மிடறாகப் பானங்களை உள்ளிறக்கியபடி...,விதவிதமான உணவு வகைகளை ரசனையோடு மெதுவாக உண்டபடி...நேரப்பிரக்ஞையின்றி உரையாடிக் கொண்டிருப்பதே அவர்களின்பாணி.
பிரெஞ்சுக்காரர்கள் யாராவது நம்மை விருந்துக்கு அழைத்து ,நாமும் போக நேர்ந்து விட்டால் அவசரத்தில் அள்ளிப் போட்டுக் கொண்டு போகும் கதையெல்லாம் அங்கே நடக்காது;மதியம் 11 மணி விருந்து மாலை 4,5 மணி வரையிலும் கூட நீளுவதுண்டாம்

இளைப்பாறல்(Relaxation )என்ற சொல்லுக்குச் சரியான உதாரணம் பிரெஞ்சுக்காரர்கள்தான் என்பதைப் படகுப் பயணம் சென்றபோதும் எங்களால் அறிந்து கொள்ள முடிந்தது.
சீன் நதியின் இருபுறக் கரைகளிலும் நின்றும்,இருந்தும்,கிடந்தும் அவர்கள் உல்லாசமாக இளைப்பாறிக் கொண்டிருந்த அந்தக் கோலம்!
குடும்பம் குடும்பமாக,ஜோடி ஜோடியாக-அங்கேயே சாய்வு நாற்காலிகளையும்,பிற வசதியான இருக்கைகளையும் அமைத்துக் கொண்டபடி,கணவனும்,மனைவியும் பத்திரிகையிலோ,புத்தகத்திலோ மூழ்கிக் கிடக்க ஆற்றின் கரையோரம் அவர்களுக்கு முன்பாக விளையாடும் குழந்தைகள்;தங்கள் அன்பை அறுதியிட்டு உறுதி செய்தபடி இருக்கும் காதலர்கள்! இதமான குளிரை ரசித்தபடி ஓய்வெடுக்கும் முதியவர்கள்...!
நின்றும்...இருந்தும்...கிடந்தும்....பாரீஸில் கடற்கரை இல்லாததால் சீன் நதிக் கரையில்,செயற்கையாக மணலைக் கொட்டிக் குவித்து,அதையே ஒரு கடற்கரை போலப் பாவித்துச் சூரியக் குளியல் போன்றவை நடத்தி செய்து அந்த நதியை மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தக் கரையோரமாகப் பின்பு பேருந்தில் சென்றபோது,நதிக் கரையில் பச்சை நிறப்பெட்டிகள் பலவும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.’அவை என்ன தெரியுமா?’என்று புதிர் போட்ட எங்கள் வழிகாட்டி அதற்கு விடை சொல்லவும் தவறவில்லை.பாரீஸ் நகரின் புத்தகக் காதலர்கள் பலரும் தங்கள் சொந்த சேமிப்புக்களான விலை மதிப்பற்ற பல புத்தகங்களை அவற்றில் சேமித்துப் பூட்டுப் போட்டு வைத்திருக்கிறார்களாம்;நேரம் கிடைக்குபோது இனிமையான சீன் நதிச் சூழலில் அமர்ந்தபடி புத்தகங்களை ரசிப்பார்களாம்;அவை இது வரை கொள்ளை போனதும் இல்லையாம்....(எல்லாம் சரிதான்...ஆனால் அந்தக் குளிருக்கும்,மழைக்கும் அவை எப்படித்தான் அங்கே தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கின்றனவோ?)

சீன் நதியை விடவும் கூட அற்புதமான,ஆர்ப்பரிப்பான கொள்ளை அழகான கணக்கற்ற ஆறுகள் நமக்கும் உண்டு.....’மேவிய ஆறு பல ஓடி மேனி செழித்த’ நம் தாய்த் திருநாட்டில் அவற்றைக் கொண்டாடுவதாக எண்ணிக் கொண்டு....மேலும் மேலும் குப்பைகூளங்களையும் கழிவுகளையும் கொட்டிக் குவித்து நாசப்படுத்திக் கொண்டிருக்கிறோமே என்ற ஏக்கம்,
அங்கே பளிங்கு போல் ஓடிய சீன் நதியையும்,
ஜனத் திரள் கூடிக் குவிந்திருந்தாலும் தூய்மை கெடாத அதன் சுற்றுப்புறங்களையும் கரைகளையும் பார்க்கப் பார்க்க என்னுள் கிளர்ந்தது.

5.11.09

'வாழ்க வளமுடன்..!'

புது தில்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவிருக்கும் ஆழியாறு மனவளக்கலை சிறப்பு நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு:

வேதாத்திரி மகரிஷிகள் அருளிய மனவளக்கலை வழிமுறைகளில்
-தவம்,அகத்தாய்வு,எளிய குண்டலினி முறை உடற்பயிற்சிகள் -
ஆர்வம் கொண்டிருக்கும் அன்பர்களும்,அவற்றைப் பற்றி அறிந்து கொள்ள விழையும் நண்பர்களும் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவிருக்கும் கீழ்க்காணும் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்து சிறப்பிக்கலாம்.


நிகழ்ச்சி விவரம்;

நாள்;08.11.2009,மாலை மணி 5.30
இடம்;தில்லி தமிழ்ச் சங்கம்-திருவள்ளுவர் கலையரங்கம்

’தியானம்’என்ற ஆவணப்படம் முதலில் திரையிடப்பட இருக்கிறது.
தொடர்ந்து நிகழ்ச்சிகள்....
சிறப்புரை
‘’வாழ்வில் வளமை...சிந்தையில் இனிமை’’
உரையாற்றுபவர்;திரு எஸ்.கே.எம்.மயிலானந்தன்
தலைவர்,உலக சமுதாய சேவா சங்கம்

தலைமை
திரு.டி.ஆர்.கார்த்திகேயன்,
முன்னாள் இயக்குநர்,மையப் புலனாய்வுத்துறை

அனைவரும் வருக...மன வளம் பெறுக என உலக சமுதாய சேவா சங்கத்தின் தில்லி மண்டலக்கிளை அனைவரையும் அன்புடன் அழைக்கிறது....
வாழ்க வையகம்..!வாழ்க வளமுடன்...!
இணைப்பு;
ஆழியாறு தந்த அமுதம்

2.11.09

ஓராண்டின் முடிவில்...

நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது.

இந்த வலைப்பூ தொடங்கி இன்றோடு சரியாக ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது.

இணையம் பற்றியோ ,அதில் தமிழில் எழுதும் முறை பற்றியோ ,வலைப்பூ தொடங்கி அதில் இடுகை இடுவது பற்றியோ எதுவுமே அத்தனை தெளிவாகத் தெரியாமல் ஏதோ குருட்டுத் துணிச்சலில் ஒரு ஆசைக்காகத் தொடங்கிய இந்த முயற்சியில் படிப்படியாக ஒவ்வொரு கதவாகத் திறந்து கொண்டே போனதும் ...வலைப்பூ எழுதுவதாலேயே அவற்றைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை நான் பெற முடிந்ததும் வாழ்வில் கிடைத்த அரிய அனுபவங்கள்;கற்றலும்,தேடலும் நமக்குள் கிளர்த்தும் சுவாரசியமான தரிசனங்களைப் பெறுவது எந்த நாளிலும் இதமூட்டும் ஒன்றுதானே?

இன்று...இந்த வலைப்பூ,ஓராண்டை எட்டும் இந்த நிலையில், பெரிதாக எதையும் நான் சாதித்துவிடவில்லையென்றாலும்,நான் அறிந்த தமிழை..நான் அறிந்த சமூகத்தை...நான் ரசிக்கும் தகவல்களை உலகெங்கும் உள்ள பல தமிழ் அன்பர்களோடும்,இலக்கிய ஆர்வலர்களோடும் இணையத்தின் வழி பகிர்ந்து கொள்ள முடிந்திருப்பது எனக்கு மிகுந்த ஆத்ம திருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.வலைப்பூவின் வழி சில வேளைகளில் உடனுக்குடன் கிடைக்கும் எதிர்வினைகளும்,நட்புமுறைக்கடிதங்களும் மேலும் மிகுதியான ஊக்கத்தோடும்,உற்சாகத்தோடும் செயல்பட என் உந்து சக்திக்கு எரிபொருளாகின்றன.

இந்த வலைப்பூ,உலகத்தோடும்....முகம் தெரியாத பல மனிதர்களோடும் எனக்கு நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது;

நேசமான பல அரிய நட்புக்களையும் பெற்றுத் தந்திருக்கிறது.

இது வரை...50க்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து பலவகை எதிர்பார்ப்புக்களோடும்....ஆர்வங்களோடும்,என் வலையின் பல ஆக்கங்களுக்கும் வருகை புரிந்த வாசகர்களுக்கும்....இத் தளத்தை மேம்படுத்த ஆலோசனை வழங்கிய அனைவருக்கும் இத் தருணத்தில் மனம் நெகிழ்ந்த நன்றி.....

29.10.09

18நாட்கள்,10நாடுகள்..(5)

நாட்கள்2,3,4-பிரான்ஸ்-பாரீஸ்

ஸ்றீலங்கன் விமானம்-UL563 ,கொழும்பை விட்டுப் பாரீஸுக்குக் கிளம்புகையில் நள்ளிரவு 2.45 மணிக்கு மேல் ஆகியிருந்தது.
சற்று உறங்கினால்தான் மறுநாளைய காட்சிகளை நன்றாக ரசிக்க முடியும் என்பதால் எப்பொழுது உறங்கலாம் என்று காத்துக்கொண்டிருந்தேன் நான்.ஆனால்,விமானத்திற்குள் ஜகஜ்ஜோதியாய் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கப் பழரசங்களும்,வேறு பலரக உற்சாக பானங்களும் நிதானமாகப் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தன.அதற்குப் பிறகு சாவதானமாக இரவு உணவு என்றால் உறங்குவது எப்படி?கொழும்புஓட்டலின் தயிர் சோறு மட்டுமே போதும் என்று முடிவுகட்டிக் கொண்ட நான் ஆரஞ்சுப்பழச் சாற்றை மட்டும் குடித்து விட்டு,அடுத்த உணவு வகைகளுக்காகக் காத்துக் கொண்டிருக்காமல்,கண்களை ஒரு துணியால் இறுகக் கட்டிக் கொண்டு உறங்கிப் போனேன்.
4,5 மணி நேர உறக்கத்துக்குப் பிறகு,நான் கண் விழித்தபோது,என்னைத் தவிர எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்திலிருப்பதும்,இந்திய நேரத்திலிருந்து பின் தங்கிப் போய்விட்டதால் இன்னும் பொழுது விடியவில்லை என்பதும் எனக்குப் புரிந்தது.
காலையில்கண் விழித்ததும் காப்பியைத் தேடியே பழக்கப்பட்டுப் போயிருந்த எனக்கு நேரக்குழப்பத்தின் காரணமாக,அது தாமதமாகிக் கொண்டே போனது பெரிதும் மனச்சோர்வை அளித்தது.

ஜன்னல் அருகிலுள்ள இருக்கை வேண்டும் என்று குறிப்பாகக் கேட்டுக் கொண்டும் அது கிடைக்காமல் போனதால் ஒரே வரிசையின்மூன்று பிரிவுகளில்,நடுவிலுள்ள இருக்கையில் மாட்டிக்கொண்டிருந்தேன் நான்.
கூட்டம் அதிகமில்லை என்பதால் என் அறைத்தோழி, 3 இருக்கைகளை ஆக்கிரமித்தபடி ஆனந்த சயனத்தில் ஆழ்ந்திருந்தார்.
எனக்குத் தூக்கம் முற்றாகக் கலைந்து விட்டிருந்தது.
வேறு காட்சிகளைப் பார்க்க வழியில்லாததால் உடன் கொண்டு சென்ற புத்தகங்களைப் படித்துப் பொழுதை ஓட்டினேன்.
இருக்கைக்கு மேலே உள்ள காட்சித்திரையில் விமானத்தின் பாதை,அதுகடந்து செல்லும்-(மற்றும் அருகிலுள்ள) நகரங்கள்,கடல்கள்,மகாசமுத்திரங்கள் முதலிய விவரங்கள் வரைபடமாக விரிந்து கொண்டே வந்தது எனக்குச் சுவாரசியமூட்டுவதாக இருந்தது.பன்னாட்டு விமானப் பயணங்களில் வாய்க்கும் இந்த அனுபவம் ,மிகவும் ருசிகரமானது..
கரீபியக் கடல்,கருங்கடல்,மத்தியதரைக் கடல்...ஆகிய பல கடல்களும் , கராச்சி,பாக்தாத்,இஸ்தான்புல்,புடாபெஸ்ட்,ஏதன்ஸ்,பிராங்பர்ட்,வியன்னா,பிரேக் முதலிய நகரங்கள் பலவும் மாறி மாறி வரைபடத்தில் வந்துகொண்டே இருக்க அவற்றின் அருகாமையில்..அண்மையில் சென்று கொண்டிருப்பதான உணர்வு மனச் சிலிர்ப்பூட்டியது.
ரஷிய இலக்கியங்களின் பால் ஈர்ப்புக்கொண்ட எனக்கு,அந்த வரைபடத்தில் மாஸ்கோவும்,பீட்டர்ஸ்பர்க்கும் கூட அந்த வரைபடத்தில் சற்றுத் தொலைவில் சுட்டப்பட்டிருந்தது...ஏதோ நாம் அங்கிருந்து கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறோம் என்பது போன்ற பேரானந்தத்தை அளித்தது.

விமானத்துக்குள் வரைபடத்திரை

இந்திய நேரப்படி 11 மணியளவில் ஒரு வழியாக சிற்றுண்டி என்ற பெயரில் ஏதோ ரொட்டியும்,தேநீரும் வந்து சேர்ந்தது. சைவ உணவைக் கேட்டுப்பெறுவதற்குள் பெரும்பாடுதான்.

பிரான்ஸ் நேரப்படி காலை 10.05க்குப்பாரீஸின் சார்லஸ் டிகால் விமான நிலையத்தை வந்தடைந்தோம் நாங்கள்.கோலாலம்பூர்,சிங்கப்பூர் போன்ற நாடுகளின் விமான நிலையங்களில் காணப்படும் அட்டகாசமான தோற்றம் எதுவுமின்றி அமைதியான அழகுடன் -கச்சிதமான நேர்த்தியுடன் சுத்தமாகக் காட்சியளித்தது பாரீஸ் விமான நிலையம்.அநாவசியமான கெடுபிடிகள் ,அலட்டல்கள் அங்கே எதுவுமில்லை;அதே வேளையில் நவீன கருவிகளின் துணையுடன்,பயணிகளுக்கு நேரடியாகத் தெரியாத வகையில் ஒரு புறம் அவர்களின் பொருள்களும்,உடைமைகளும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டுதான் இருந்தன.

பாரீஸ் விமான நிலையத்திற்குள்.....

இங்கும் எங்களுக்குச் சற்றுத் தவிர்க்க முடியாத தாமதங்கள்தான்.
பாரீஸிலிருந்துதொடங்கி,ஐரோப்பா முழுவதையும்,சாலைவழியே சென்று பார்ப்பதற்கான ஏற்பாடு ,லண்டனிலுள்ள மற்றொரு சுற்றுலாக் குழுவுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டிருந்ததால் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பேருந்து சாலை நெரிசல்களில் மாட்டிக் கொண்டு லண்டனிலிருந்து வந்து சேர... அந்த ஊர் நேரப்படி பகல்
12 மணிக்கு மேலாகி விட்டது.

மும்பையைச் சேர்ந்தவரும்,தற்போது லண்டனில் இருப்பவருமான ஷெரீன் என்ற பெண்,அந்தப் பேருந்துடன் வந்து பாரீஸின் முதல் இரண்டு நாட்களும் எங்களுக்கு வழிகாட்டி உதவினார்.

பாரீஸுக்குள் கால்வைப்பதற்கு முன்பே மதிய உணவு நேரம் வந்து விட்டதால்,எங்களை அவர் முதலில்கூட்டிச் சென்ற இடம் தமிழர்கள் நடத்தும் ஒரு உணவு விடுதி.
பாரீஸ் ரயில்நிலையத்துக்கு மிக நெருக்கமாக இருந்த அந்தப்பகுதியின் பெயர் ‘லிட்டில் இந்தியா’(சிங்கப்பூர்,மலேசிய நாடுகளிலும் இந்தியர்கள்-குறிப்பாகத் தமிழர்கள் வாழும் பகுதிக்கு இவ்வாறுதான் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது).

உணவு விடுதிக்குச் செல்லும் வழி நெடுகிலும்,ஈழத் தமிழர்கள் நடத்தும் கடைகள் பலவும் இருப்பதால்....கடைப்பெயர் தாங்கிய பலகைகளும் தமிழில் இருப்பதைப் பார்த்துப் பாரீஸின் தமிழ்முழக்கத்தில் மகிழ்ந்து கொண்டே வந்தேன் நான்.
கடைப்பெயர் தாங்கிய பலகைகள் தமிழில்....


அப்போது அங்கிருந்த ஒரு சில கடைகளில், பிரபாகரனின் புகைப்படமும் அதற்குக்கீழே எழுதப்பட்டிருந்த பின் வரும் வாசகமும் கண்ணில் பட ஒரு கணம் அப்படியே உறைந்துபோய் நின்றேன் நான்.

‘’எம் தேசத்தின் ஒளியை யாராலும் அழிக்க முடியாது..
காலத்தின் நேரத்தில் எம் கரிகாலன் தோன்றுவார்’’
கொழும்பில் பார்த்த கொய்யாப்பழக்காரரும் சரி ,பாரீஸிலிருக்கும் பல்பொருள் அங்காடிக்காரரும் சரி....உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இலங்கைத் தமிழர்கள் பலரும் இந்த விஷயத்தைப்பொறுத்தவரை பெரும்பாலும் ஒரே மாதிரிதான் சிந்திக்கிறார்கள் என்பது....,குறிப்பிட்ட ஒரு நபரின் ஆளுமை அவர்களிடம் ஏற்படுத்திவிட்டிருந்த நம்பிக்கை எத்தனை அழுத்தமானது என்பதைப் புரிய வைத்தது.(பிற்பாடு நாங்கள் வெனிஸ் நகரத்தில் சந்தித்த ஒரு தமிழ்க் குடும்பத்தினரிடமிருந்தும் கூட-அவர்கள் வெரோனாவிலிருந்து வெனிஸச்சுற்றிப் பார்க்க வந்தவர்கள்- இதே போன்ற எதிர்வினைதான் எங்களுக்குக்கிடைத்தது.)

இலங்கையைத் தாண்டி வெகு தொலைவு வந்து விட்டாலும் கூட இந்தப்பயணத்தின் பல இடங்களிலும்,இலங்கைத் தமிழ் மணம் எங்களைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டேதான் இருந்தது.

இணைப்பு;
18நாட்கள்,10நாடுகள்..(1,2,3,4)

25.10.09

18நாட்கள்,10நாடுகள்..(4)

முதலாம் நாள்:
இலங்கை-கொழும்பு(தொடர்ச்சி)


கொழும்புவின் பல்பொருள் அங்காடியில் பயணிகளை விட்டுவிட்டு,ஓய்வாகத் தேநீர் பருகிக் கொண்டிருந்த எங்கள் உள்ளூர் வழிகாட்டி , தனியாக என்னிடம் மாட்டிக் கொண்டு விட...,ஈழப் புலிகளின் அழிவைப் பற்றியும் ,புலித் தலைவரின் மரணம் குறித்தும் அவர் அறிந்திருக்கும் செய்திகளைக் கேட்டேன்;பிரபாகரனின் மரணம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப் படாத மர்மம் பற்றியும் அவரிடம் வினவினேன். பிறவற்றை மிக இலேசாக மழுப்பிவிட்ட அவர்,பிரபாகரனின் உடலை மட்டும் தானே நேரில் பார்த்ததாகக் கதை விடத் தொடங்கினார்.அவரிடம் அதைத் தவிர வேறதையும் எதிர்பார்க்க முடியாதென்ற சலிப்புடன் மெல்ல அங்கிருந்து நழுவி...எதிர்ப் புறம் அங்காடிக்கு அருகே சாலையோரத்தில் இருந்த கொய்யாப்பழ வண்டியை நாடிச் சென்றேன்.

சராசரியாக நாம் பார்க்கக் கூடிய கொய்யாக்களை விட அளவில் பல மடங்கு பெரிதாக இருந்த அந்தப் பழங்களின் விலை -( இந்திய மதிப்பை விட சிங்களப் பணத்தின் மதிப்பு குறைவுதான் என்றபோதும்)-மிக மிக அதிகமாகவே இருந்தது.ஆனாலும் சீன உணவு விடுதியில் நான் உட்கொண்டிருந்த பற்றாக்குறையான உணவின் காரணமாகப் பசி,என் வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்தது.மேலும் பழம் விற்றுக் கொண்டிருந்த தமிழ்ப்பையனின்(அவனுக்கு 18,19 வயதிருக்கலாம்)களையான சிரித்த முகம் ,அவனுடன் கொஞ்ச நேரம் உரையாடும் ஆவலையும் என்னுள் தூண்டி விட்டிருந்தது.
பழம் உண்மையிலேயே அபூர்வமான சுவையுடன் மிக மிக நன்றாகத்தான் இருந்தது(பாரீஸ் வரையிலும் கூட அந்தப்பழங்கள் சில நேரங்களில் எனக்குப் பசியாற்றி உதவின).

அவற்றைத் தினந்தோறும் தலை மன்னாரிலிருந்து கொண்டு வருவதாகச் சொன்ன அந்த அந்த முஸ்லிம் பையன்,நாங்கள் தமிழர்கள் என்பது தெரிந்ததும் ,எங்களிடம் பிரியத்தோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவற்றை அழகாகக் கூறு போட்டு, உப்பு,மிளகாய் தூவித் தந்தான்.
அவனிடமும் பிரபாகரன்பற்றி நான் பேச்செடுக்க....சட்டென்று ஒரு கணம் என்னை ஏறிட்டுப் பார்த்துவிட்டு,
’’காந்தியைக் கூடத்தான் சுட்டுட்டாங்க’’
என்றான்.
அடுத்த கணமே
‘’இதோட நாலு தடவ சுட்டாச்சு’’
என்றும்சேர்த்துக் கொண்டான்.

இவன் ,புலித் தலைவரைக் காந்தியோடு சமநிலப்படுத்துகிறானா அல்லது அப்படி ஒரு மரணத்தையே நம்ப மறுக்கிறானா....,புரியவில்லை.
ஆனால்....சில பிம்பங்கள் நமக்குள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள்,எந்தச் சக்தியாலும் அழிக்க முடியாத வலுவான பதிவுகள் என்பது மட்டும் எனக்கு அப்போது தெளிவாகப் புரிந்தது.

பேருந்தில் ஏறத் தயாராக வந்த சக பயணிகள் சிலரிடமும் கொய்யாவின் சுவை பற்றிச் சொல்லி,அவனது விற்பனைக்கு ஓரளவு உதவ முற்பட்டேன். அப்போதைய நிலையில் என் இலங்கைத் தமிழ்ச் சகோதரனுக்குஎன்னால் செய்ய முடிந்தது அவ்வளவுதான்.

இரவு மணி 1.30க்குப் பாரீஸ் கிளம்பும் விமானத்தைப்பிடிக்க வேண்டுமென்பதாலும்,ஆறு மணிக்கு மேல் அடங்கி விடும் அந்த ஊரில் அதற்குமேல் எதையும் பார்க்க இயலாது என்பதாலும்,வெள்ளவத்தையிலுள்ள ஒரு விடுதியில் (Global tower hotel)ஆறு மணி முதல் இரவு ஒன்பதரைவரை நாங்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
என் கேள்விகள் எழுப்பிய தூண்டுதலாலோ,நாங்கள் தமிழ்ப் பயணக் குழு என்று கருதியதனாலோ....போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை அவரவர் இருப்பிடங்களில் மீள் குடியமர்த்தும்பணி மும்முரமாக நடந்து வருவதாக (அவர் சொன்ன கணக்கு 4 லட்சம்.இக்கட்டுரை எழுதும் இந்த அக்டோபர் மாதம் வரையிலும் கூட அந்தப் பணி இன்னும் சரியாக முழுமை பெறவில்லை) விடுதிக்குச் செல்லும் வழி நெடுகச் சொல்லிக் கொண்டே வந்தார் அஜித்.

தமிழ் மக்களுக்குச் சொந்தமான கடைகள்,அவர்கள் வழிபடும் கோயில்கள் என்று அந்தவெள்ளவத்தைப் பகுதி முழுக்கத் தமிழர்களே அதிகம் நிறைந்திருப்பதால் அதற்குக் ‘குட்டி யாழ்ப்பாணம்’என்ற பெயர் கூட உண்டென்று சொல்லி எங்களைக் கொஞ்சம் குளிர வைக்க முற்பட்டார் அவர்.’சிங்களவரான எங்களுக்கு எல்லாத் தமிழரோடும் பகையில்லை...தீவிரவாதிகளோடு மட்டும்தான்’ என்று,தன்னிடம் கேள்வி எழுப்பியவர்களுக்கெல்லாம் ஏதேதோ பதில்களை..சமாதானங்களைச் சொல்லிக் கொண்டே வந்தார்.அவர் நிலையில் அவரால் வேறு எதைத்தான் சொல்லிவிட முடியும்?

கடற்கரைச் சாலையில் அமைந்திருந்த அந்த விடுதியிலிருந்து புலப்பட்ட சுற்றுப் புறமும் இயற்கைக் காட்சியும் அற்புதமாக இருந்தன.

இலங்கைக்குள் நுழைந்தது முதல் ‘இலங்கையில் இருக்கிறோம்’என்ற உணர்வு(feel)எனக்கு அவ்வளவாகக் கிடைக்கவே இல்லை;அத்தகையதொரு உணர்வு கிடைத்த முதல் தருணம் அது.

ஆனாலும் ’கடல் வாசல் தெளிக்கும் அந்த வீட்டின்’(நன்றி-வைரமுத்து-கன்னத்தில்முத்தமிட்டால்) முற்றத்தில் நின்று , மறிந்து வரும் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது...இனம்விளங்காத கனமும்,துயரமும் இதயத்தைப் பிசைந்ததென்னவோ உண்மை.

’’தெற்குமாகடலுக்கு நடுவினிலே அங்கோர் கண்ணற்ற தீவினிலே..............
‘’நாட்டை நினைப்பாரோ-எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ அவர்
விம்மி விம்மி அழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே’’


என்று பீஜித்தீவின் கரும்புத்தோட்ட அழுகுரலைப்பற்றிப் பாரதி பதிவு செய்த வரிகளே அந்தக்கடலலை முழக்கத்திலும் கலந்து வருவதைப் போல எனக்குத் தோன்றியது.

பிற பயணிகள் ஓய்வெடுப்பதிலும்,குளித்து முடித்துத் தங்களை அடுத்த பயணத்துக்குஆயத்தம் செய்து கொள்வதிலும் முனைந்திருந்தனர்.
உறைந்து போன மனத்தோடு , விடுதியின் மூன்றாவது மாடியில் அமைந்திருந்த அறையின் ஜன்னல் வழியே,கடலையே வெகு நேரம் வெறித்துக் கொண்டிருந்த நான் என்னையும் அறியாமல் சற்றுக் கண்ணயர்ந்தபோது..இரவு உணவுக்கான அழைப்பு..!
அந்த உணவும் எனக்கு ஏற்றதாக இல்லாமல் போகவே,வெறும் சோறும்,தயிருமாவது கிடைக்குமா என்றுதேடிப்போன எனக்கு இரண்டு தமிழ்ப் பணியாளர்கள் ஓடோடி வந்து உதவினர்.அன்போடு உபசரித்த அவர்களோடுசற்றுப்பேச்சுக் கொடுத்தபோது,கொழும்பிலுள்ள சொத்துசுகங்களையெல்லாம் விட்டு விட்டு ஓடிய தமிழர்கள் சிலரின் கண்ணீர்க் கதைகளைச் சுற்றுமுற்றும் பார்த்தபடி சிறிது தயக்கத்துடன் என்னிடம் பகிர்ந்து கொண்டனர்.

இரவு உணவோடுஎங்கள் இலங்கைத் தங்கல் முடிந்து விட, இரவு ஒன்பதரை
மணி அளவில் பண்டாரநாயகா விமன நிலையம் நோக்கிஎங்கள் பேருந்து கிளம்பியது.

இலங்கைப் பயணம் அப்படிக் ’குறுகத் தறித்த குறள்’போலச் சுருக்கமாக முடிந்து போனதில் எனக்குச் சற்று வருத்தம்தான்.ஆனால் உள்ளபடி,எங்கள் ஐரோப்பியச் சுற்றுப் பயணத்தில் இலங்கை முதலில் இடம்பெற்றிருக்கவே இல்லை.இணைப்பு விமானத்திற்காகக் காத்திருக்கும் நேரத்தை
மிகச் சிறிய ஒரு கொழும்புச் சுற்றுலாவுக்குப் பயன்படுத்தி நாங்கள் இன்னொரு நாட்டையும் கொஞ்சம் காண்பதற்கு வழியமைத்துக் கொடுத்திருந்தது எங்கள் சுற்றுலா அமைப்பு.(Shalom travels,Chennai).
ஏதோ சிறிது நேரமாவது இலங்கையின் ஒரு சிறு பகுதியையாவது காண முடிந்ததே ...அது வரையில் மகிழ்ச்சிதான்.

ஆனாலும்....
இலங்கையின் அழகை...அதன் ஜீவனை ...அதன் உயிர்த்துடிப்பை உள்ளபடி உணர்ந்து ரசித்து உள்வாங்கிக்கொள்ள.....
முதலாவது....இன்னும் சில நாட்களாவது கட்டாயம் வேண்டும்;

இரண்டாவது,கொழும்பை மட்டும்...அதன் ஒரு சில பகுதிகளை மட்டும் ஒரு அரை நாள் அவகாசத்தில்பார்த்து முடிவுக்கு வந்து விடாமல், தீவின் முக்கியமான வேறு சில இடங்களையாவது பார்க்க வேண்டும்;

இதையெல்லாம் விட முக்கியமாக....அதற்கான நல்ல மனநிலை வாய்த்திருக்கவும் வேண்டும்.(துரதிருஷ்டவசமாக நான் எத்தனை முயன்றும் தற்போதைய இலங்கைச் சூழல் அப்படிப்பட்ட மனநிலையிலிருந்து என்னை அன்னியப்படுத்தியே வைத்து விட்டது)

என்றாவது ஒரு நாள்,காலம் கனியும்போது....
தமிழர் உரிமையோடு சமத்துவம் பெற்று வாழும் அந்தத் திருநாளில் இலங்கையை மட்டுமே சுற்றிப்பார்க்க மகிழ்வான மன நிலையோடு நிதானமாக அங்கு வந்தே தீருவேன் என்று எனக்கு நானே சூளுரைத்துக்
கொண்டபடி,

கால்செருப்பிலிருந்து,கை வளையல் வரை கழற்றி வைக்கும் கடுமையான விமானநிலையப் பரிசோதனைகளுக்கு உட்பட்ட பிறகு, பாரீஸ் செல்லும் ஸ்றீலங்கன் விமானத்தில் ஏறிஅமர்ந்தேன்.
(பயணம் தொடரும்)

இனணைப்புக்கள்;

18நாட்கள்,10நாடுகள்.(1)

18நாட்கள்,10நாடுகள்(2)

18நாட்கள்,10நாடுகள்(3)

24.10.09

18நாட்கள்,10நாடுகள்.......(3)

முதலாம் நாள்:
இலங்கை-கொழும்பு(தொடர்ச்சி)


சீதை சிறையிருந்த அசோகவனம்,இலங்கையிலுள்ள நுவரேலியாவில் இருப்பதாகவும்,இராமாயண காவியத்துடன் தொடர்பு கொண்டவைகளாகக் கிட்டத்தட்ட 50 இடங்களை இலங்கையில் காண முடியும் என்றும் விவரித்துக் கொண்டே வந்தார் வழிகாட்டி அஜித்.
அவற்றில் இயற்கை இறந்த பல அதிபுனைவுகளும் கலந்தே இருந்தன.

-சீதைக்கு முன்பாகத் தன் விசுவ ரூப தரிசனத்தைக் காட்டித் தான் இராமதூதன் என்பதைப் புரிய வைத்த அனுமனின் பாதச் சுவடுகளை இன்னும் அங்கே காண முடிகிறது....

-சீதை விட்ட கண்ணீர், எந்தப்பஞ்ச காலத்திலும் கூட வற்றாமல் ஒருபொய்கையைப் போலத் தேங்கியபடி,சாஸ்வதமாய் அப்படியே இருக்கிறது; அந்த நீரை ஒரு பிரசாதமாகக் கருதிப்போற்றும் மக்கள் கூட்டமும் இருக்கிறது....

-இராவணன் சீதையைத் தூக்கிச் சென்ற அந்தக் குறிப்பிட்ட பாதையில் இப்போதும் ஒரு புல் கூடமுளைப்பதில்லை...

-இராம-இராவண யுத்தம் நடந்த போர்க் களத்தில் உள்ளங்கையை வைத்துப்பார்த்தால் அது சிவப்பாகி விடுகிறது......

இந்த ரீதியில் அவர் கதைத்துக் கொண்டே போன செய்திகள் பகுத்தறிவுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ...,இன்றைய சமகால நிகழ்வுகளோடு ஏதோ ஒரு வகையில் ஒத்துப் போவதை உணர்ந்த என் மனம், அந்தச் செய்திகள் எல்லாவற்றையும் அந்தப் போக்கிலேயே முடிச்சுப் போட்டுப் பொருத்திப் பார்த்து ஆராய்ந்தபடி இருந்தது.(சிறைக் கூடங்களும்,கண்ணீர்ப் பெரு மூச்சுக்களும் எந்த நாளிலும் சிங்களத்திற்கே உரிய தனிச் சிறப்பாக அல்லவா ஆகி விட்டிருக்கிறது?)

உணவுக்குப் பின் முதன் முதலாகப்பேருந்திலிருந்து எங்களை இறக்கிவிட்ட இடம்,ஒரு பௌத்தக் கோயில்.
இந்தியாவிலுள்ள சாரநாத்தில்,பல நாட்டுப் புத்தர் ஆலயங்களையும் விரிவாகப் பார்த்து முடித்து விட்டிருந்ததால் குறிப்பிட்ட இந்தக் கோயில் என்னை மிகுதியாகப் பாதிக்கவில்லை.
ஆனால், அங்கேயும் சில செய்திகள் காத்திருந்தன.
நாளும் அரங்கேறிக்கொண்டிருக்கும் கொடுமைகளுக்குச் சாட்சியாக இருக்க விருப்பமில்லாதவை போல, அங்கே இருந்த சில புத்தர் சிலைகள் உறங்கும் கோலத்தில் இருந்தது,எனக்குச் சற்று ஆறுதலாகக்கூட இருந்தது.

அந்தக் கோயிலின் வேறுபாடான அம்சமாக நான் உணர்ந்தது,புத்தர் சிலைகளைச் சுற்றிலும் உள்ள சுவர்களில் தென்பட்ட -இந்துக் கடவுளரை நினைவுறுத்தும் பல உருவங்களைத்தான்...பிள்ளையாரையும்,முருகனையும்,விஷ்ணுவையும், இலக்குமி,சரசுவதி போன்ற பெண் கடவுளரையும் ஒத்திருக்கும் பற்பல சுதை உருவங்கள் புத்தரைச் சுற்றிச் சூழ்ந்திருந்தது எனக்கு வியப்பாகவே இருந்தது.யானையின் துதிக்கை,நெகிழ்ச்சியின்குறியீடு;

பருந்துப் பார்வை ,கூர்மையின்குறியீடு;

மயில்,அழகின் குறியீடு;

பன்றியின்காது,புலனறி திறனின்குறியீடு;

யாளி (dragon )யின் வாய்,உறுதிப்பாட்டின் குறியீடு

என்று அவற்றுக்கான தொன்மக் குறியீட்டு விளக்கங்கள் தரப்பட்டபோதும்,அந்தக் கோயிலும் அதிலுள்ள சிற்பங்களும் இன்னும் ஆழ்ந்த பார்வையுடன் நோக்கப் பட வேண்டியவை என்றே எனக்குப் பட்டது.அந்தக் கோயிலின் பருத்தமேற்கூரை(dome),
கருவுற்ற பெண்ணை நினைவுபடுத்துவதாக உள்ளதால்,கருவுற்ற பெண்கள் அந்தக் கோயிலைச் சுற்றி வந்து வழிபட்டால் சுகப் பிரசவம் ஆகக் கூடும் என்ற நம்பிக்கையும் கூட அங்கே நிலவி வருவதை அறிய முடிந்தது.
புத்தர் கோயிலை ஒட்டியே இருந்த சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்ல நேரம் ஒதுக்கப்படவில்லை என்பதால் தேர்த் திருவிழாக் கோலாகலத்தில் இருந்த அதை வீதியிலிருந்தபடியே தரிசித்து முடித்து வண்டியில் ஏறிக்கொண்டோம்.

தொடர்ந்து ,

-அனுராதபுரத்தில் இருக்கும் புத்தர் சிலையைப் போல ஒற்றைக்கல்லில்(monolithic) உருவாக்கப்பட்ட பெரிய புத்தர் சிலை,

-இன்று அருங்காட்சியகங்களாகவும்,காவல்துறை மற்றும் பிற அரசு அலுவலகங்களாகமாறிப் போயிருக்கும் அந்தக்காலத்துக் காலனிஆதிக்கக் கட்டிடங்கள்,

-சிங்களத் தொலைக்காட்சி நிலையமாகிய ரூபவாஹினி,

-வழி நெடுகத் தென்படும் அசோகமரங்கள், ஆல மரங்கள்....
என்று பேருந்து ஓட்டத்திலேயே பல காட்சிகளைப் பார்த்துக் கொண்டே சென்றோம்....

ஒரு நாட்டின் தலைநகரம் என்பதற்கான கட்டமைப்புக்களை....சீரான நேர்த்திகளை இந்தக்குறுகியபயணத்தில் எதிர்ப்படும் வாய்ப்பு மிகுதியாகக் கிடைக்காததனாலோ அல்லது சாஸ்வதமான பதட்டமும் போர்ச்சூழலுமே நிலவி வந்த காரணத்தால் தலைநகரின் மேம்பாட்டுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போனதாலோ .....,தமிழ் நாட்டின் ஒரு சாதாரண நகரத்தை விடவும் கூடச் சுமாரானதாகவே கொழும்பு என் கண்களுக்குப்புலப்பட்டது.

அடுத்தாற்போல எங்களை இறக்கிய இடம் இலங்கையின் சுதந்திர சதுக்கம்.

அங்கேயும் கூட சேனநாயகாவின் சிலைப் பீடத்தில் பொறிக்கப்பட்டிருந்த தமிழே கண்ணில்பட்டு என்னை நீர் மல்கச் செய்தது.

காலங்காலமாய் ஒருதாய்ப் பிள்ளைகளாக ஒன்றி வாழ்ந்த இரு இனங்களுக்குள் தூர்க்க முடியாதபடி இன்று எத்தனை அகழிகள்!
சாமானியச் சிங்களனும் சாமானியத் தமிழனும் இப்பொழுதும் கூடக் கை குலுக்கி வாழ ஆசைப்படுவது ஒரு புறம் இருந்துகொண்டுதானிருக்கிறது என்றபோதும் சுலபத்தில் ஒருவரை ஒருவர் அணுக முடியாமல் எத்தனை மனத் தடைகள்!

கிரிக்கெட் பந்து வடிவிலிருக்கும் மங்குஸ்தான் பழங்களையும்,
‘ருசியில் சொர்க்கம்,வாசனையில் நரகம்’என்று கூறப்படும் துரியன் பழங்களையும் சிங்கப்பூர்,மலேசியாபோன்றே இங்கும் அதிகமாகக் காண முடிந்தது.
(சிங்கப்பூரின் சில பொது இடங்களில் துரியன் பழத்தைக்கொண்டு செல்லக்கூடாது என்ற விசேட அறிவிப்புக் கூடக்காணப்படுவதுண்டு;காரணம் அதன் ’வாசனை’யிலுள்ள மகிமைதான்.)

‘ஆஷ் பனானா’ என்று சொல்லப்படும் சற்றே சாம்பல் நிறத்தில் இருக்கும் வாழைப் பழங்கள் அங்கே குவிந்து கிடப்பதை எங்களுக்குச் சுட்டிக் காட்டிய அஜித் ,அதனுடன் கூடவே அதிர்ச்சியான வேறொரு தகவலையும் அஞ்சல் செய்தார்;அந்தப்பழங்கள் மனித சக்தியைக்குறைப்பவை என்பதால் சிறையிலுள்ள கைதிகளுக்கு அவை தரப்படுவது அங்கே வழக்கமாம்.(சிறைப் பட்டவர்களுக்கு எப்படியெல்லாம் துன்பம் தரலாம் என்று இவர்கள் உட்கார்ந்து யோசிப்பார்கள் போலிருக்கிறது)

மாலை ஆறு மணிக்கெல்லாம் ஊர் அடங்கிவிடும் (அதைக் கூட dead city ஆகி விடும் என்றுதான் அமங்கலமாக வருணித்தார் அவர்) என்று சொன்னபடி,பொருட்கள் வாங்க விரும்பினால் வாங்கலாம் என்று மிகமிகச் சாதாரணமான வணிக வளாகம் ஒன்றில் எங்களைக் கொண்டுபோய் இறக்கி விட்டார் வழிகாட்டி.நானும்,இப் பயணத்தில் என்னைப் போல ஒற்றை ஆளாக வந்து என் அறைத் தோழியாக வாய்த்த சென்னையைச் சேர்ந்த சாரதாவும் அந்த வளகத்தை வெறுமே ஒரு முறை சுற்றி வந்துவிட்டு எதிரிலிருந்த நம்மூரைப் போன்ற டீக் கடையில் காப்பி குடிக்கச் சென்றோம்.

(பயணம் தொடரும்)

22.10.09

18நாட்கள்,10நாடுகள்.......(2)

முதலாம் நாள்:
இலங்கை-கொழும்பு(தொடர்ச்சி)


சென்னையிலிருந்து கிளம்பிய இலங்கைவிமானத்தில்(ஸ்றீலங்கன் விமானம்-UL122)ஏறியது முதலாகவே (பின்பு பாரீஸ் சென்ற ஸ்றீலங்கன் விமானத்திலும் கூட)என்னை ஈர்த்த ஒன்று,விமானத்திற்குள்ளும்,பிறகு இலங்கை விமான நிலையத்திலும் நிரம்பித் தளும்பிய தமிழ்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று பல கோஷங்களை முழங்கியபடி இருந்தாலும்,தமிழ்நாட்டுக்குள் இயங்கும் விமான சேவைகளில் கூடக் காணவும் கேட்கவும் கிட்டாத தமிழ் அறிவிப்புக்கள் இலங்கை விமானசேவைகளில் நிறைந்து கிடப்பதைக் காணமுடிந்தது.

சிங்களம்,ஆங்கிலம் இவற்றோடு தீந்தமிழிலும் அறிவிப்புச் செய்து செவி குளிரச் செய்யும் விமானப் பணிப் பெண்கள்!
இருக்கைகளிலும்,விமான நிலையத்தின் மையமான பல இடங்களிலும்

’’அமர்ந்த வண்ணம் ஆசனப்பட்டியைப் பூட்டுங்கள்’’(seat belt)

‘’உயிர் காப்புச் சட்டை உங்கள் ஆசனத்தின் கீழ்’’(live vest)

‘’பயணப்பொதி’’(conveyar belt)

‘’குடிவரவுத் திணைக்களம்’’(department of immigration)பயணம்-புகைப்படங்கள்

‘’குடிஅகல்வுத் திணைக்களம்’'(department of emigration)

என்று அழகழகாகத் தமிழில் எழுதப்பட்டிருக்கும் அருமையான வாசகங்கள்...!

தமிழுக்குத் தரப்பட்டிருக்கும் முதன்மை சற்று மகிழ்ச்சியளித்தபோதும், தமிழுக்கு இடம் தரும் இடத்தில் தமிழருக்குமட்டும் இடமின்றிப் போனது ஏன் என்ற அடிப்படையான வினாவும்,இந்தச் சொற்களை இந்த அளவுக்குச் சிறப்பாகத் தமிழ்ப்படுத்திக் கொடுத்த தமிழ் ஆர்வலர்களும்,வல்லுநர்களும் உலகின் எந்தெந்தப் பகுதிகளிலெல்லாம் சிதறிக் கிடக்கிறார்களோ என்ற ஏக்கமும் உள்ளத்தின் ஒரு மூலையில் வலியோடு எழுவதைத் தவிர்த்துக் கொள்ள இயலவில்லை.

பண்டாரநாயகா பன்னாட்டு விமான நிலத்திலிருந்து 27 கி.மீ.தள்ளியிருந்த கொழும்பு நகரத்துக்கு எங்களை அழைத்துச் செல்வதற்காகக் காத்திருந்த விசேடப்பேருந்தில் நாங்கள் ஏறிக் கொள்ள ,உள்ளூர் வழிகாட்டி மைக்கைப்பிடித்தபடி இலங்கையின் சிறப்புக்களை வரிசையாக அடுக்கத் தொடங்கினார்.சிறிது நேரம் அந்த வருணனைகளுக்குள் செல்ல முடியாமல்-அவற்றில் கருத்துச் செலுத்த முடியாதபடி சொந்த சகோதரர்களின் துயரங்களை அசைபோட்டபடி, மனம் மரத்துப்போனவளாக உறைந்து போய்க் கிடந்தேன் நான். பயணத்தின் மகிழ்ச்சியைக் கூடத் தொலைத்து விட்டவளாகச் சாவு விசாரிக்க வந்திருப்பது போன்றதொரு கனத்த வெறுமை உணர்வு என்னை அப்போது பற்றிக் கொண்டிருந்தது.பேருந்து ஜன்னலில் முகத்தை அழுந்தப் பதித்தபடி நெடுஞ்சாலையை வெறித்துக் கொண்டுவந்த எனக்கென்னவோ அங்கே நிலவிய அமைதி ,ஒரு மயான அமைதியாக-செயற்கையான முறையில் வலிந்து வலிந்து உண்டாக்கப்பட்ட ஒன்றாகவே தோன்றிக் கொண்டிருந்தது.

வளைவுகள் அதிகமின்றி நீண்டுகொண்டே சென்ற அந்தக் குறுகிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென்றுஒரு சலசலப்பு எழவே என் சிந்தனை ஓட்டத்திலிருந்து உலுக்கப்பட்டவளைப் போல விழித்துக் கொண்டேன் நான்.வழிகாட்டியும்,ஓட்டுநரும் உரத்த சிங்களத்தில் சத்தம் போட்டுக்கொண்டிருக்க...., வண்டி நேராகப் போகாமல் ஏதோ அலைபாய்வதைப்போலக் குறுக்கு நெடுக்காக மறுகிக் கொண்டிருந்தது.எங்கள் பேருந்துக்கு முன்பாகச் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று ,மடங்கி மடங்கிப் போக்குக் காட்டிக் கொண்டிருந்ததால் அதன் போக்கிற்கேற்பவே எங்கள் வண்டியும் சென்றாக வேண்டிய கட்டாயம்.

அந்த மண்ணுக்குள் அடியெடுத்து வைத்தது முதல் கலவையான பல உணர்வுகளின் பிடியில்சிக்கிப்போயிருந்த எனக்கு ,அந்த வேளையில் விபரீதமான கற்பனை ஒன்று தலையெடுக்கத் தொடங்கியிருந்தது.
சொந்த இனத்தின் அழிவு சம்பவித்த அதே இடத்தில்...இதோ..இப்பொழுதே நமக்கும் ஒரு முடிவு நேரிட்டு விடப் போகிறது!ஒன்று வண்டி விபத்துக்குள்ளாகும்...இல்லையென்றால் பேருந்துக்கு முன்பாகக் கோணல் பாய்ச்சல் காட்டிக் கொண்டிருக்கும் அந்த இரு சக்கரவாகனத்திலிருந்து மனித வெடிகுண்டொன்று கிளம்பி வந்து நம்மைத் தூள்தூளாக்கிப் போட்டு விடப் போகிறது....!

ஆனால்...., அப்படியெல்லாம் ஒன்றும் நேர்ந்து விடவில்லை.அந்த வாகனத்தில் சென்ற இளைஞர்கள் குடித்துவிட்டு வண்டி ஓட்டிச்செல்வதாக ,வழிகாட்டியும் ஓட்டுநரும் சிங்களத்தில்(ஏதோ கெட்ட வார்த்தையில்)வசைமாரி பொழிந்து கொண்டிருக்க அந்த மோட்டார் சைக்கிளும் வேகமெடுத்து வெகுதொலைவு சென்று மறைந்தது.
இதற்கும் தமிழர்கள் மீது பழியைப் போட்டு விடாமல்,குடிகாரர்கள் என்று சொன்னதோடு எங்கள் வழிகாட்டி நிறுத்திக் கொண்டதில் ஒரு சின்ன ஆறுதல்!
பயணிகள் நிம்மதிப் பெருமூச்சுவிட...ஊடகங்களும்,அவை தரும் செய்திகளும் நம்மிடையே ஏற்படுத்தி விட்டிருக்கும் மனப்பிரமைகள் குறித்து வெட்கிப்போனேன் நான்.

’’இந்தியா விடும் கண்ணீர்த் துளி’’(like a tear drop falling from India)யைப் போல இலங்கையின் நில அமைப்பு வாய்த்திருப்பதான வருணனையோடு மீண்டும் தன் பேச்சைத் தொடர்ந்தார் எங்கள் வழிகாட்டி அஜித்.அது ஒரு கவித்துவத்துக்காகவே சொல்லப்பட்டபோதும் - குறிப்பிட்ட இந்தத் தருணத்தில் அதில் பொதிந்து கிடந்த நகை முரண் (irony)நெஞ்சைச் சுட்டது.சொல்வது இன்னதென்பதை உணராமலே .... மகத்தானதொரு உண்மையை அவர் பேசி விட்டாரென்றே எனக்குப் பட்டது.

சிங்களர்கள்,தமிழர்கள்,டச்சுக்காரர்கள் எனப்பல இனத்தவர்களும்,
இந்துக்கள்,பௌத்தர்கள்,இசுலாமியர்கள்,கிறித்துவர்களெனப் பல மதத்தவரும் இலங்கையில் வாழ்ந்தபோதும் மே 18 முதல் சிறுபான்மை என எவருமில்லை...எல்லோரும் இலங்கைக்குடிகளாக மட்டுமே ஆகி விட்ட நாள் அது என்று அவர் அழுத்திச் சொன்னபோது அவர் எதைக் குறி வைக்கிறார் என்பதை எங்கள் எல்லோராலுமே புரிந்து கொள்ள முடிந்தது.

அதற்கு இன்னும் கூடக் கூடுதல் அழுத்தம் சேர்ப்பதைப்போல
’’சிங்கம் போன்ற வலிமை என்பதைவைத்துத்தான் சிங்களம் என்ற சொல் வந்தது;ஆனால் இங்கே சிங்கமும் இல்லை,இப்போது புலிகளும் கூட இல்லை!’’
என்று ஏதோ ’பன்ச்’வைப்பதைப் போலப் பல தடவைகள் அவர் சொல்லிக் கொண்டே சென்ற விதம்,மனதை மிகவும் காயப்படுத்தியது.

‘’இங்கே சிங்கமும் இல்லை புலிகளும் இல்லை’’-வழிகாட்டி அஜித்


இலங்கை விமான நிலையத்தில் நேர்ந்த தேவையற்ற தாமதத்தால்,கொழும்பு நகரத்துக்குள் நுழைவதற்குமுன்பே மதிய உணவுக்கான நேரம் வந்துவிட , ஒரு சீன உணவகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டோம் நாங்கள்.
தமிழும்,தமிழரும் உள்ள நாட்டில் தமிழ் உணவுக்கா பஞ்சம்?(பாரீசில் கூடத் தமிழ் உணவத்துக்குச் சென்றவர்கள் நாங்கள்)எங்கள் வழிகாட்டியின் மனப் போக்கு புரிந்து விட வேறு வழியின்றி.....சுத்த சைவ உணவுக்காரியான நான் பயந்து பயந்து இலை தழை காய் கனி என்று எதையோ கொறித்துப் பசியாறி விட்டதாகக் கற்பிதம் செய்து கொண்டேன்.

இலங்கையில் எங்கள் ஓட்டுநரைப்பார்த்தபோது எனக்கென்னவோ அவர் இலேசாகப் பிரபாகரன் ஜாடையில் இருப்பதாகத் தோன்ற ,அவரை ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.என் நோக்கம் புரியாத அவர் முகமெல்லாம் சிரிப்பாக ஒரு சிறிய தலையசைப்போடு அதை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டார்.என் உள் மன ஓட்டம் மட்டும் அவருக்குப் புரிந்திருந்தால்.....?

இலேசாகப் பிரபாகரன் ஜாடையில்....


உணவு முடிந்தபின் எங்கள் மிகச் சிறிய அரை நாள் கொழும்புச் சுற்றுலா தொடங்கியது.

மீண்டும் ஒரு நகை முரணாக(irony )என் கண்ணில் பட்ட முதல் இடம்...எல்லா இனத்தவர்க்கும்,மதத்தவர்க்கும் பொதுவான ஒருமயானம். மரண பூமியாகவே மாறிப்போய்விட்ட அந்ததேசத்தில் என் முதல் தரிசனமும்கூட ஒரு மயானத் தலமாகவே அமைந்து போனது.

(பயணம் தொடரும்)

இணைப்பு காண்க:
18நாட்கள்,10நாடுகள்.......(1)

15.10.09

18நாட்கள்,10நாடுகள்.......(1)

பயணத் தொடருக்கு ஒரு கட்டியம்:

பதினெட்டு நாட்கள்!
நான் நானாக மட்டுமே இருந்த பொன்னாட்கள்!

இந்தப் பிரபஞ்சத்தோடு...அதுகாட்டும் புதுமைகளோடு...உலகத்தின் தலை சிறந்த பல அதிசயங்களோடு,இயற்கை அற்புதங்களோடு,மனித அறிவின் உச்சகட்ட ஆக்கங்களோடு உறவாடிய நாட்கள்!

அவை ஏற்படுத்தும் மாயக் கவர்ச்சிகளோடும் -
இனிமையானதும் ......சிலபொழுதுகளில் கிலேசமானதுமான மனக் கிளர்ச்சிகளோடும் செலவிட்ட நாட்கள்!

அவற்றின் பின்னணியிலிருக்கும் வரலாறு,புவியியல்,மற்றும் சமூகத் தகவல்களோடு மட்டுமே ஊன் கலந்து உயிர் கலந்து ஒன்றிப் போயிருந்த நாட்கள்!

இறந்த காலம் மறந்து ,எதிர்காலம் தொலைத்து, நிகழ்கால நொடிகள் ஒவ்வொன்றையும் ஜென் கதையில் இடம்பெறும் தேநீர் பருகும் சடங்கைப்போலச் சொட்டுச் சொட்டாக ரசித்தபடி அவற்றில் மட்டுமே தோய்ந்து கரைந்து வாழ்ந்திருந்த நாட்கள்!

வாயிலில் அலறும் அழைப்பு மணிகளுக்கும்,அலைபேசிகளுக்கும் பதிலளிக்க அவசியமின்றி உள்ளுக்குள் மட்டுமே மூழ்கிக் கொண்டு புறத்தை ரசிக்கப் பாதை வகுத்துக் கொடுத்த பொன்னாட்கள்!

அடுத்தடுத்த வேலை என்று மனம் அடுக்கடுக்காக ஆணையிட்டுக் கொண்டே வரும் அன்றாடநியதிகளிலிருந்து சற்றே விலகி நின்று,அப்போதைய கணத்தை மட்டுமே ஆசை தீரப் பருகி மகிழ்ந்த அரிய நாட்கள்!

நினைவு மலர்ந்த நாள் முதல் தொடர்ச்சியாக இத்தனை நாட்கள் - கணநேரப்பதட்டமோ..கவலையோ இல்லாமல் இருந்ததே இல்லையே என்பதை ஆச்சரியத்தோடு நினைவுபடுத்திக்கொள்ள வைத்த அதிசய நாட்கள்!

இனியொரு முறை இது வாய்க்குமோ என எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் வைக்கும் இனிய நாட்கள்!


என் ஐரோப்பியப் பயணத்தில் எனக்கு வாய்த்த அற்புத நாட்கள் அவை!

கடமைகள்...பொறுப்புக்கள்...சுமைகள் என ஏதுமின்றிப் பதட்டங்கள் சிறிதுமின்றிப் பயணப்பொறுப்பாளர்களிடம் முழுமையாக ஒப்புக்கொடுத்துவிட்டுப் புறக் காட்சிகளைக் காணுவதும்....அவற்றைப் புகைப்படக்கருவியில் பதிவதும் மட்டுமே தொழிலாக.....
அறுபது வயதில் ஆறு வயதுக் குழந்தையாக நான் மாறிப் போய்விட்டிருந்த அந்த அபூர்வக் கணங்களை ......
நாள் வரிசைப்படி தொடர்ச்சியாக வலையில் முன் வைக்கிறேன்.

முதலாம் நாள்:
இலங்கை-கொழும்பு


இலங்கை,பிஞ்சுப் பருவம் முதலாகவே என் நெஞ்சுக்கு நெருக்கமாகியிருந்த ஒரு நாடு.தமிழகத்து மக்களுக்குக்கதை படிப்பதைத் தவிர வானொலி மட்டுமே வீட்டுப் பொழுதுபோக்காக இருந்த ஐம்பதுகளில்,இலங்கை வானொலியே என் உற்ற துணையாகவும்,தோழமைக்கான கருவியாகவும் இருந்து வந்திருக்கிறது.
இலங்கைத் தமிழும், இலங்கையின் பல ஊர்ப்பெயர்களும் நினைவு தெரிந்த நாளிலிருந்தே இலங்கை வானொலியின் அப்போதைய மதுரத் தமிழ்க்குரல்கள் வழி (முதல் கட்டத்தில் மயில் வாகனன்,பிறகு கே.எஸ்.ராஜா) எனக்கு நன்கு அறிமுகமாகி நேசத்திற்குரிய இடத்தைப் பெற்றிருக்கின்றன.
பிறகு, தமிழ் இலக்கியத் துறையில் கால் பதித்த பிறகு,கம்பன் காட்டிய இலங்கை, அடுத்த கட்ட வளர்ச்சியாக நவீன இலக்கிய ஈடுபாட்டுக்குப்பின்பு இலங்கைப் படைப்பாளிகள் , திறனாய்வாளர்கள் ஆகியோரின் எழுத்துக்களில்கொண்ட ஆர்வம்,சமூக அக்கறை கொண்ட நபராக இலங்கை அரசியலின் மீதுகுறிப்பிட்ட கவனம் என இலங்கையைப் பற்றிய என் பார்வைகள் விரிவடைந்துகொண்டே வந்தபோதும்,அங்கே கால் பதிக்கும் வாய்ப்பு மட்டும் வாய்க்காத ஒன்றாகவே இருந்து வந்தது.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கொண்ட மலேசியா,சிங்கப்பூர் பயணத்தின்போதுதான் முதன்முதலாக இலங்கையை நான் எட்டிப் பார்த்தேன்.அப்போதும் கூட அது,விமானம் மாறுவதற்கான இடைப்பட்ட சிறிதுநேரத் தங்கல்தானே ஒழிய விமான நிலையம் தாண்டி,இலங்கைக்குள் செல்ல வாய்ப்பிருந்திருக்கவில்லை.கண்ணடிக்கதவுகள் வழியே இருட்டாகத் தெரியும் இலங்கை மண்ணையும்,கட்டுநாயகாவிலுள்ள பண்டாரநாயகா விமானநிலையப் பெயர்ப்பலகையையும் வெறித்துக் கொண்டிருக்கத்தான் முடிந்தது.

ஈழவிடுதலையின் இறுதிக் கட்டப் போர் உக்கிரமாகத் துவங்கியிராத அந்த டிசம்பர் மாத நள்ளிரவுப் பொழுதொன்றில்-கிட்டத்தட்ட மூன்று மணிநேரக்காத்திருப்பில்....விமான நிலையத்திற்குள்ளாகவே சுற்றி வந்து கொண்டிருந்தேன் நான்.தமிழ் தெரிந்த சிங்களக் காவலர் ஒருவரோடு சகபயணி ஒருவர் உரையாடிக்கொண்டிருக்க அதில் நானும் போய்க் கலந்து கொண்டேன்.அதற்குச் சற்று முன்புதான் மும்பை தாஜ் ஓட்டல் முற்றுகை நடந்து முடிந்திருந்ததால் அதைச் சுட்டிக் காட்டிய அந்தக் காவலர் ‘’உங்கள் நாட்டில் மட்டும் குண்டு வெடிப்புக்கள் இல்லாமலிருக்கிறதா என்ன?’’என்று மடக்கிவிட்டுப் பொதுமக்களாகிய தாங்களெல்லாம் தமிழர்,சிங்களர்,இசுலாமியர் என்ற பேதம் கொஞ்சமுமின்றி வாழ்ந்து வருவதாகவே உணர்ச்சி பொங்கக் கூறினார்.
அவர் கூறியதை எப்படி நம்பாமலிருக்க முடியும் என்று தெரியவில்லை.ஆட்சியிலுள்ளவர்களின் ஆதிக்கப் போக்குக்கும் சராசரி மனித மனப்போக்குக்கும் இடையே இட்டு நிரப்பமுடியாத இடைவெளி இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
அப்போது கிறிஸ்துமஸ் விழாத் தருணமென்பதால் விமான நிலையம் மிக அழகாகவும்,ஆடம்பரமாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
டிசம்பர் மாத நள்ளிரவுத் தங்கலில்....


அந்த அலங்காரங்களை விடவும் அங்கிருந்த குழந்தை ஏசுவின் குடிலும்,அருகிலிருந்த புத்தர் சிலையும் எனக்குள் என்னென்னவோ ரகசிய செய்திகளை ஓதிக் கொண்டிருந்தன.


அன்பையும் அகிம்சையையும் உயிராய்க் கொண்ட அந்தத் திரு உருவங்கள் அங்கே மௌனசாட்சியாக இருந்தது எதற்காக என்பது...,பொருள் விளங்காத ஒரு புதிராகவே எனக்குப்பட்டது.

அந்த நள்ளிரவுத் தங்கலுக்குப் பின்--மிகக் கடுமையான பாதுகாப்புக் கெடுபிடிகள் பலவற்றைக் கடந்து அடுத்த விமானம் நோக்கிச் சென்று விட்டதால் ஓரளவு ஆற அமரக் கூட இலங்கையைக் காணவும் அசைபோடவும் அப்போது சமயம் வாய்த்திருக்கவில்லை.

தற்பொழுது ஆகஸ்டில் மேற்கொண்ட ஐரோப்பியப் பயணத் திட்டத்தில்-இலங்கைக்கென்றே ஒரு நாள் ஒதுக்கப்பட்டிருப்பதைக் கண்டதும் -என் மனம் சற்றே ஆறுதல் கொண்டது.
இங்கும் கூடச் சென்னையிலிந்து பாரீஸ் செல்லும் வழியில் ஒரு இடைத் தங்கல் மட்டும்தான்.ஆனாலும் பாரீஸ் விமானம் நடு இரவு ஒரு மணிக்கு மேல்தான் என்பதாலும் நாங்கள் சென்னையிலிருந்து காலை பதினொன்றரைக்கே இலங்கையை அடைந்து விடுவதாலும் ஒரு கூடுதல் போனஸாகக் கொழும்புப் பயணம் எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தியாவிலிருந்து...அதுவும் தமிழகத்திலிருந்து அங்கே வரும் எங்களுக்கு ஆயிரம் கெடுபிடிகள்...சோதனைகள்...உடல்நலப்பரிசோதனைகள்....! ஒருவழியாக எல்லாம் முடிந்து 06.08.09 நண்பகல் பன்னிரண்டு மணியளவில் கலவையான பல உணர்வுப் போராட்டங்களுடன்...சற்றுக்கனத்த நெஞ்சுடன் இலங்கை மண்ணில் கால் பதித்தேன் நான்.
இலங்கையை நோக்கி....
தமிழினத்தை ஒட்டுமொத்தமாகக் கையசைத்து வழியனுப்பி விட்டேன் என்கிறாரோ?
(விமான நிலையத்திற்கு வெளியே ராஜபக்‌ஷேயின் கட்அவுட்)(பயணம் தொடரும்)

இணைப்பு பார்க்க:

ஐரோப்பியப் பயணம்
’ஷாலோமுக்கு ஒரு சலாம்’

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....