துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

13.11.09

கசங்கும் ரோஜாக்கள்



’’உமது குழந்தைகள் உம்முடையவை அல்ல
வாழ்க்கையை விரும்பி வரவேற்கும் வண்ணக் களஞ்சியங்கள்

அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம்...உங்கள் பாதுகாப்பிலும் இருக்கலாம்
ஆனாலும் உங்களுக்குச் சொந்தமல்ல அவர்கள்...

உங்கள் அன்பைப் பொழிய முடியும் அவர்களிடம்...
ஆனாலும் உங்கள் சிந்தனைகளைப் புகுத்த முடியாது

உங்களை இருப்பிடமாகக் கொண்டது அவர்களின் உடல்தான்...உள்ளங்கள் அல்ல

நாளை என்ற வீட்டில் வாழ்பவை அந்த உள்ளங்கள்

உங்களைப் போல அவர்களை மாற்றாதீர்கள்...
அவர்களைப்போலிருக்க நீங்கள் முயற்சி செய்யுங்கள்..

ஏனெனில்..
வாழ்க்கை என்றும் பின்னோக்கிப் போவதில்லை
நேற்றுடனும் ஒன்றி இணைவதில்லை

-கலீல் கிப்ரான்

சிறுவர் இலக்கியம் என்ற துறையே படிப்படியாக வீழ்ச்சி பெற்று,ஊடக ஆக்கிரமிப்புக்களாகிய கார்ட்டூன் தொலைக்காட்சிகளும்,கணினி விளையாட்டுக்களுமே சிறுவர் உலகில் முதன்மை பெற்று வரும் இன்றைய சூழலிலும் கூடத் குழந்தைகளையும்,சிறுவர்களையும் கரிசனத்தோடு புரிந்து கொண்டு அவர்களைப் பற்றியும்...அவர்களுக்காகவும் எழுதும் எழுத்தாளர்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரேயடியாக இல்லாமல் போய்விடவில்லை என்பது,சற்று ஆறுதலளிக்கிறது.

அந்த வரிசையில்...இன்றைய சூழலில் தனித்த கவனம் பெறுவதற்குரிய ஒரு படைப்பாளி,ஆயிஷா என்ற அற்புதமான தனது குறுநாவலால் இன்றைய சிறுவர் இலக்கியத்தின் போக்குக்குத் திசைகாட்டியாக அமைந்து ஆயிஷாநடராசன் என்றே பெயர் பெற்றிருக்கும் திரு.இரா.நடராசன் அவர்கள்.

சிறந்த கல்வியாளரும்,டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றுத் தலைமை ஆசிரியராகப் பணி புரிபவருமான திரு நடராசன் அவர்கள் ஒரு சிறந்த படைப்பாளி;
மனித வாழ்வின் அக,புறச் சிக்கல்கள்,மனித மனத்தின் ஆழங்காண முடியாத சுழல்கள் ஆகியவை குறித்துப் புதிய உத்திகளைக் கையாண்டு நவீன புனைவு மொழியில் எண்ணற்ற சிறுகதைகளையும்,நாவல்களையும்(மொழிபெயர்ப்பு நூல்களையும்,அறிவியல் கட்டுரை நூல்கள் மற்றும் புனைகதைகளையும் கூட)உருவாக்கியவர் அவர்.அவற்றையெல்லாம் விட ஒரு நவீனத் தமிழ் எழுத்தாளராகச் சிறுவர் இலக்கியத்திற்கு அவர் செய்திருக்கும் பங்களிப்பு அபாரமானது.

இன்றைய காலகட்டத்தின் உலகமயமாதல் சூழலில் குழந்தைகளுக்கும்,மாணவர்களுக்கும் நேரும் பன்முகச் சிதைவுகளை உள்ளார்ந்த அக்கறையுடன் அவதானித்துத் தமது ‘ஆயிஷா’,’ரோஸ்’ ஆகிய குறுநாவல்களில் பொறுப்போடு பதிவு செய்திருக்கிறார் அவர்.
எதையோ விடுத்து எதையோ துரத்தும் இக்கால நவீன வாழ்வியலை அவ்விரு புனைவுகளுமே கேள்விக்குள்ளாக்குகின்றன.

கல்வி வணிகமயமாக்கப்படும் சூழ்நிலையில்,
’’புத்தகங்களே கவனமாய் இருங்கள்,குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்’’
என்ற அப்துல் ரகுமானின் கவிதையைப் போலப் பலிக்கூடங்கள் போல ஆகும் பள்ளிக்கூடங்கள், சிறு குழந்தைகளின் அறிவை மட்டுமன்றி,அவர்களையே வேட்டையாடி விடுவதை வெளிச்சத்துக்குக் கொணர்ந்து மனித மனச் சாட்சியை உலுக்கும் நீள்கதை,’ஆயிஷா’.


'ஆயிஷா’ குறும்படத்திலிருந்து ஒரு காட்சி

குறும்படமாகவும் ஆக்கம் பெற்றுள்ள இப் புனைவு,வகுப்பறைகள் குறித்தும்,ஆசிரியர்கள் குறித்தும் காலங்காலமாக நிலவிவரும் சில தெய்வீக பிரமைகளையும்,புனிதங்களையும் கட்டுடைத்துப் போடுகிறது.வகுப்பறை வன்முறை குறித்த பிரக்ஞையும்,அது குறித்த விவாதங்களும் மிகுதியாகிக் கொண்டு வரும் சமகாலச் சூழலில்,வகுப்பறைக் களங்களில் பிஞ்சு மாணவர்களுக்கு நேரும் மனக் காயங்களைக் கசப்பான நிதரிசனங்களாக இப் படைப்பு முன் வைக்கிறது.
புதியனவற்றைக் கற்பதிலும்,தேடுவதிலும் ஆர்வமின்றி எப்போதோ தயாரிக்கப்பட்ட குறிப்புகளையும்,மலிவான சந்தை நோட்ஸுகளையும் இயந்திர கதியில் எடுத்துரைக்கும் ஆசிரியர்கள்.....
வகுப்பு எண்,வரிசை எண் ,தேர்வு எண்,அதில் பெறும் மதிப்பெண் என எண்களாக மட்டுமே உரு மாறிப் போன மாணவர்கள்...
என்ற செக்குமாட்டுச் சூழலின் நெடுநாள் நெட்டை உறக்கத்தை அறிவுத் தாகம் கொண்ட ஆயிஷா எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள் கலைத்துப் போடுகின்றன.
மாணவர்களின் ‘சுய அறிவு’ என்பது மறுக்கப்பட்டே வந்திருக்கும் நிறுவனமாக்கப்பட்ட கல்வி அமைப்பில்,ஆசிரியர்களின் அதிகாரம் தகர்க்கப்பட...சராசரியான ஆசிரியர்களுக்கு ஆயிஷா ஒரு அச்சுறுத்தலாகவே மாறிப் போகிறாள்.
உடல்,உள்ள ரீதியான வன்முறைகள் அவள் மீது ஒருசேரத் தொடுக்கப்பட,அடியின் வலியை மரக்கடிக்க விஞ்ஞானப் பரிசோதனையை மேற்கொள்ளும் ஆயிஷா அதற்கே பலியாகிப் போகிறாள்.
உண்மையான அறிவுத் தேடல் என்பது பள்ளிகளுக்கு வெளியிலேதான் இருக்கிறது என்பதை உணர்த்தித் துருப்பிடித்துப்போன இன்றைய கல்விமுறை ,அறிவு மரத்துப்போன இயந்திர மனிதர்களுக்கு மட்டுமே பொருத்தமானது என்பதைப் பொட்டில் அடித்துப் புரிய வைக்கிறாள் ஆயிஷா.

நாளும் புதுப்புது அறிவுத் துறைகள் முளைத்துப் பெருகிக்கொண்டுபோகும் போட்டிகள் மலிந்த நவீன யுகத்தில்,தங்களையும் வருத்திக் கொண்டு குழந்தைகளின் இயல்பான ஆளுமை வளர்ச்சிக்கும் இடம் தராமல் அவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும் பெற்றோரை யதார்த்தமாகச் சித்தரிக்கிறது இரா.நடராசனின் ‘ரோஸ்’என்னும் குறுநாவல்.

சமைப்பதும்,சாப்பிடுவதும்,உடுப்பதும்,ஓடுவதுமாய் ஓர் ஓட்டப்பந்தயத்தில் முனைந்திருக்கும் பெற்றோர், தங்கள் வீட்டுத் தோட்டத்தில் காலையில் மலர்ந்திருக்கும் ரோஜாவின் அழகைத் தாங்களும் ரசிப்பதில்லை;தங்கள் குழந்தையையும் ரசிக்க விடுவதில்லை.
பள்ளிக்குச் சென்ற பிறகும் வகுப்பறையில் அன்று நடக்கும் மொழிப்பாடம்,அறிவியல்,ஓவிய வரலாற்று வகுப்புக்கள் என அனைத்துமே ஏதோ ஒரு வகையில் ரோஜாவை நினைவூட்டுவதாகவே அந்தக் குழந்தைக்கு அமைந்து விடுகின்றன; ஆனாலும் அது எழுப்பும் அடிப்படையான சில கேள்விகளுக்கும்,ரசனை வெளிப்பாடுகளுக்கும் உரிய வடிகால் கிடைக்க வழியே இல்லாமல் போய் விடுகிறது.
பள்ளி முடிந்த பிறகும் தனிப் பயிற்சி வகுப்பு,கராத்தே,கணினிப் பயிற்சி என்று எல்லாம் முடிந்து தாய் தந்தையருடன் உணவு விடுதிக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்புகையில் காலையில் புது மலர்ச்சியுடன் பார்த்த ரோஜா வாடியிருப்பதைக் கண்ட குழந்தையின் முகமும் கூம்பிப் போகிறது.

குழந்தை உளவியலின் குறியீடாக’ரோஜா’வைக் கதை நெடுகிலும் பயன்படுத்தியுள்ள கதாசிரியர்,நுகர்வுக் கலாசாரமும்,அது சார்ந்த வெறியும் மனிதனிடமிருந்து பறித்துக் கொண்டுவிட்ட நிதானத்தையும்,நிம்மதியையும் -முழுக்க முழுக்கக் காட்சித் துணுக்குகள் வழியாகவும்,அவற்றில் நிகழும் உரையாடல் வழியாகவுமே சொல்லியபடி கதையை நகர்த்திச் செல்கிறார்.

’அன்றாட வாழ்க்கை என்னும் முரட்டு இயந்திரம்,குழந்தைகளின் மேல் கதறக்கதற ஏறி அரைக்கும் அவல’மும்.’அது குறித்து எழுந்த பதற்றமு’மே தன்னை இவ்வாறான நீள்கதைகளை எழுதத் தூண்டியதாகக் குறிப்பிடும் இப் படைப்பாளி,வெறும் புனைகதைக் கலைஞராக மட்டும் இருந்து விடாமல் ஒரு நல்லாசிரியராகவும் இருந்த காரணத்தினாலேயே
கசங்கிக் கொண்டிருக்கும் இந்த ரோஜாக்களை அவரால் இனங்கண்டு கொள்ள முடிந்திருக்கிறது.


ஆயிஷா பற்றி மேலும் சில குறிப்புக்கள்;
தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு.
குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த கதை.
கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல்.
ஸ்நேகா பதிப்பகம் இரண்டு ரூபாய்க்கு ஒரு சிறு தனி நூலாகக் கொண்டு வர ஒரே வருடத்தில் ஒன்பது பதிப்புகள் கண்டது.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்புகளின் போது ஆயிஷா கட்டாய பாடமாக்கப்பட்டது.அதைத் தவிர ஏழு தன்னதிகார கல்லூரிகள், மூன்று பல்கலைகழகங்கள் ஆயிஷாவைப் பாடமாக வைத்துள்ளன.
ஆயிஷா மன்றங்கள் என்று மதுரை மற்றும் கோவையில் கிராமப்புற குழந்தைகளால் தொடங்கப்பட்டு அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
(காண்க:http://eranatarasan.com/
பி.கு;
எங்கள் தன்னாட்சிக் கல்லூரியின் பாடத் திட்டக்குழுவிலும்,மதுரை காமராசர் பல்கலைக்கழக இளங்கலை-பி.ஏ.-பாடத் திட்டக் குழுவிலும் நான் பங்கேற்றிருந்த காலகட்டத்தில்,அந்தப் பாடத் திட்டங்களில் ஆயிஷா குறுநாவலைச் சேர்க்க முயற்சி மேற்கொண்டு வெற்றியடைந்திருக்கிறேன்.
தில்லி தமிழ்ப் பள்ளிகளில்,ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சி அளிப்பதற்காக அண்மையில்(ஜூலை’09) அழைக்கப்பட்டபோது,ஆயிஷா,ரோஸ் ஆகிய இரு நாவல்களையும் அவர்களை வாசிக்க வைத்ததோடு,ஆயிஷா குறும்படத்தையும் திரையிட்டுக் காட்டினேன்.அவர்களில் பலருக்கும் ஆயிஷா பற்றிய முதல் அறிமுகம் அதுதான் என அறிய நேர்ந்தபோது வாசிப்புப்பழக்கத்திலிருந்து ஆசிரியர்கள் எந்த அளவுக்கு அந்நியமாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்ற கசப்பான நிஜம் என் நெஞ்சைச் சுட்டது.

3 கருத்துகள் :

தமிழ் உதயம் சொன்னது…

வலைப்பூக்களிலும் பொழுது போக்கே பிரதானமாக இருக்க- இங்கேயும் நல் முத்துக்களை தேடித்தான் எடுக்க வேண்டி உள்ளது. வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் தளத்துக்கும். வாருங்கள் என் தளத்துக்கு.. மனதுக்கு பிடித்த விஷயத்தை எழுதுங்கள்.

தமிழ் உதயம் சொன்னது…

வலைப்பூக்களிலும் பொழுது போக்கே பிரதானமாக இருக்க- இங்கேயும் நல் முத்துக்களை தேடித்தான் எடுக்க வேண்டி உள்ளது. வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் தளத்துக்கும். வாருங்கள் என் தளத்துக்கு.. மனதுக்கு பிடித்த விஷயத்தை எழுதுங்கள்.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

தமிழ் வலைப்பதிவுகளில் முத்தெடுப்பது போலத்தான் மிக அரிதாகவே சமூக சிந்தனையுள்ள பதிவுகள் வருகின்றன. வாழ்த்துக்கள் அம்மா!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....