துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

8.11.09

18நாட்கள்,10நாடுகள்..(6)

நாட்கள்2,3,4-பிரான்ஸ்-பாரீஸ்(தொடர்ச்சி)

சீன் நதி ஓரத்தில்.....





பாரீஸ் நகரத்தை ஒரு பாம்பைப் போலச் சுற்றி வளைத்தபடி ஓடுவது சீன் நதி.
2000 ஆண்டுகளுக்கு முன் பாரிஸீயன்கள் என்னும் பழங்குடிமக்களின் குடியேற்றம் சீன் ஆற்றின் கரையில் நிகழ்ந்ததால் அவர்களது பெயரைக் கொண்டே அந்த நகரமும் பாரீஸ் என்று பெயர் பெற்றிருக்கிறது .
(இலத்தீன் மொழியில் சீன் என்ற சொல்லுக்குப் பாம்பு என்று பொருள் இருப்பதாக எங்கள் வழிகாட்டி சொல்ல,வேறு சில கலைக் களஞ்சியங்களின் வழியே அதற்குப் புனிதம் என்ற பொருளும் இருப்பதை நான் அறிந்து கொண்டேன்)

சீன் நதியில் மேற்கொண்ட உல்லாசப் படகுப் பயணத்தோடு எங்கள் பாரீஸ் சுற்றுலா தொடங்கியது.
சுற்றுலாப் பயணிகளுக்கான இவ்வாறான படகுப் பயணத்தைப் பல ஐரோப்பிய நகரங்களிலும் காண முடிகிறது.(சிங்கப்பூரிலும் கூட இது உண்டு).
நெதர்லாண்ட்ஸின்(ஹாலந்து)ஆம்ஸ்டர்டாம் நகரிலும்,லண்டனின் தேம்ஸிலும் கூட இவ்வாறான படகுப் பயணங்கள் மிக நேர்த்தியாக ஊரைச் சுற்றிக் காட்டி விடுகின்றன.


River Cruise என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் இப்படிப்பட்ட படகு சவாரிகளின் மூலம் நகரை வேறொரு கோணத்தில் அறிமுகம் செய்து கொள்ள முடிகிறது;ஒரு நகரத்தைப் பற்றிய தொடக்க கட்டச் செய்திகளை....,அங்குள்ள முதன்மையான இடங்களை ,முன்னோட்டம் போல ஓரளவுக்குத் தெரிந்து கொண்டு விடுவதால் குறிப்பிட்ட அந்த நகரத்தில் எதையெல்லாம் பார்க்கப் போகிறோம் என்ற தெளிவான பார்வை கிடைத்து விடுகிறது.சென்னையின் குறிப்பிட்ட சில இடங்களைப் பார்க்கக் கூவத்திலும் கூட (-நாற்றமில்லாமல்தான்-) ஒரு River Cruise மேற்கொள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்கம் நெஞ்சின் ஒரு மூலையில்.......!
(சில நகரங்களில் அப்படிப்பட்ட படகு சவாரியுடன் மட்டுமே ஊரைச் சுற்றிக் காட்டி விட்டதாக முடித்து விடுவதும் உண்டு.
எங்களுக்கு நல்ல காலமாக அப்படிப்பட்ட சுற்றுலா நிறுவனம் வாய்க்கவில்லை).

மதியம் இரண்டு மணிக்கு மிதமான குளிரில்...இலேசான மழைச் சாரல் பன்னீர் தூவிக் கொண்டிருக்க,எங்கள் படகுப் பயணம் தொடங்கியது.படகினுள்ளேயே ஒலிபெருக்கி வழியாக நாம் கடந்து செல்லும் இடங்கள்,அவற்றின் வரலாற்றுச் சிறப்புக்கள் ஆகிய எல்லா விவரங்களையும் தொடர்ந்து நேர்முக வருணனை போலச் சொல்லிக் கொண்டே வருகிறார்கள்.ஒரே ஒரு சிக்கல்..,அவர்கள் பேசும் ஆங்கிலம் நமக்கு விளங்க வேண்டும்...அவ்வளவுதான்!

படகுத் துறையை ஒட்டியே ஈபில் கோபுரம் அமைந்து விட்டதால் அதை முதலில் மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டோம். படகு தொடர்ந்து செல்லச் செல்லப்..பாரீஸின் முக்கியமான இடங்களாகிய லூவர் அருங்காட்சியகம்,நோட்ரடாம் ஆலயம்,இன்வேலிட்ஸ் நினைவுச் சின்னம்,பிரெஞ்சுப் புரட்சியின்போது மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்(சிரச் சேதத்துக்கு உட்படுத்தப்படுவதற்கு முன் மேரி அண்டாய்நெட் போன்றவர்கள்)சிறை வைக்கப்பட்டிருந்த பழைய அரண்மனை , பாதாளச் சிறை வடிவிலான சில சிறைக்கூடங்கள் ,
பாரீஸ் பல்கலைக்கழகம் ஆகியவை ஆங்காங்கே எங்களுக்கு இலேசாகத் தரிசனம் தந்து மறைந்து கொண்டிருந்தன.
நதிக் கரை ஓரத்தில் பழைய அரண்மனை..தொலைவில் ஈபில்..


பாதாளச் சிறைக்கூடங்கள்

பலப் பல நூற்றாண்டுகளைச் சேர்ந்த மிகப் பழமையான பாலங்களுக்கு அடியில் எங்கள் படகு சென்று கொண்டிருந்தபோது....அந்தந்தக் காலத்தின் உணர்வுகள், உள்ள வேட்கைகள்,ஆற்றாமைகள்,ஆதங்கப்பெருமூச்சுக்கள்,குமைச்சல்கள்,குதூகலங்கள் ஆகியற்றுக்கிடையே ஊர்ந்து செல்வது போன்றதொரு சிலிர்ப்பு......!

பயண வழியில் வியப்படையச் செய்த குறிப்பிட்ட ஒரு காட்சி, நியூயார்க்கின் சுதந்திர தேவி சிலையைப் போலச் சற்றும் மாறாமல்- அதே வடிவத்தில் அதே போலக் கொஞ்சம் சிறியதாகக் காட்சியளித்த சிலைதான்!பாரீஸுக்குப் பதிலாக நியூயார்க்குக்கு வந்து சேர்ந்து விட்டோமோ என்று மலைப்புத் தட்ட வைக்கும் வகையில் இருந்தது அந்தச் சிலையின் தோற்றம்.

அந்தச் சிலை பற்றிய கதை சற்றுச் சுவாரசியமானது.
நியூயார்க்கின் சுதந்திரதேவி சிலையை உருவாக்கிய சிற்பி,பிரடெரிக் அகஸ்டி பர்தோல்டி,பாரீஸச் சேர்ந்தவர்;
காப்பரில் உருவாக்கப்பட்ட அந்தச் சிலை, சிறுசிறு துண்டு வடிவங்களில் செய்யப்பட்டுப் பாரீஸிலிருந்து அமெரிக்காவுக்குக் கப்பலில்
அனுப்பப்பட்டுப் பிறகு அங்கே ஒருங்கிணக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க நாட்டின் அடையாளமான அந்தச் சிலையைத் தங்களுக்குத் தந்த(1886இல்)பிரெஞ்சுக்காரர்களுக்குச் செலுத்தும்
நன்றிக் கடனாக,மூலச் சிலையில் பத்தில் ஒரு பங்கு அளவில் வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட அதே போன்றதொரு சுதந்திர தேவியின் சிலை,இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நட்புப் பிணைப்பின் குறியீடாக,பாரீஸ் வாழ் அமெரிக்கர்களால் பாரீஸுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கிறது.ஈபில் கோபுரத்திலிருந்து ஒன்றரை கி.மீ.தொலைவில் அமெரிக்கா இருக்கும் திசையை நோக்கியபடி நிறுவப்பட்டிருக்கும் இந்த 35 அடி உயரச் சிலை சுதந்திரத்தின் செய்தியை மட்டுமல்லாமல் உலக நாடுகள் நேசத்தால் நெருங்கி வாழவேண்டும் என்ற உண்மயையும் உரத்து முழங்கியபடி சீன் நதிக் கரையில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது.


பாரிஸுக்குள் நாங்கள் நுழைந்ததுமே எங்கள் வழிகாட்டியாக வந்த பெண்மணி,இது கிறுக்குத்தனமான ஒரு நகரம்(It is a crazy city)என்று குறிப்பிட்டார்.அவர் எதை மனதில் கொண்டு எந்தப் பொருளில் அவ்வாறு சொன்னாரோ தெரியாது;
வேக வரையறை எதுவுமின்றி விரைந்தோடும் வாகனங்கள்,விரும்பியதை..விரும்பிய நேரத்தில் எந்த மனத்தடையுமின்றிச் செய்து கொண்டிருக்கும் சுதந்திரமான மக்கள் கூட்டம் ஆகியவற்றை மனதில் கொண்டு அவர் ஒருவேளை அவ்வாறு சொல்லியிருக்கலாம்.
ஆனால் என் பார்வையில் பட்டதெல்லாம்...அந்த ஊர் மக்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும்....ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து ரசித்தபடி.... சொட்டுச் சொட்டாகப் பருகிக் கொண்டிருக்கும் காட்சிதான்.

நம்மூர் ரோட்டோரக் கடைகளைப் போலத் தெரு நடைபாதைகளிலுள்ள கபேக்கள் அங்கே பிரபலம்;

நாங்கள் சென்ற பல ஐரோப்பிய நாடுகளிலும்,இப்படிப்பட்ட தெருவோரக் கபேக்களுக்குத் தரப்படும் முக்கியத்துவத்தைக் காண முடிந்தது.
(ஆனால் இங்கே மொய்க்கும் ஈ,கொசுக்களையோ,கசக்கிப் போட்டுவிட்டுப் போகும் காகிதப் பொட்டலங்கள் மற்றும் பாலிதீன் குப்பைகளையோ அங்கே மருந்துக்கும் கூடப் பார்த்துவிட முடியாது)
ஓட்டலின் உள்ளே கூட இடம் கிடைத்து விடலாம்;ஆனால் அந்தத் தெரு நடைபாதைகளின் இருக்கைகள் சுலபமாகக் கிடைத்து விடாது;மிடறு மிடறாகப் பானங்களை உள்ளிறக்கியபடி...,விதவிதமான உணவு வகைகளை ரசனையோடு மெதுவாக உண்டபடி...நேரப்பிரக்ஞையின்றி உரையாடிக் கொண்டிருப்பதே அவர்களின்பாணி.
பிரெஞ்சுக்காரர்கள் யாராவது நம்மை விருந்துக்கு அழைத்து ,நாமும் போக நேர்ந்து விட்டால் அவசரத்தில் அள்ளிப் போட்டுக் கொண்டு போகும் கதையெல்லாம் அங்கே நடக்காது;மதியம் 11 மணி விருந்து மாலை 4,5 மணி வரையிலும் கூட நீளுவதுண்டாம்

இளைப்பாறல்(Relaxation )என்ற சொல்லுக்குச் சரியான உதாரணம் பிரெஞ்சுக்காரர்கள்தான் என்பதைப் படகுப் பயணம் சென்றபோதும் எங்களால் அறிந்து கொள்ள முடிந்தது.
சீன் நதியின் இருபுறக் கரைகளிலும் நின்றும்,இருந்தும்,கிடந்தும் அவர்கள் உல்லாசமாக இளைப்பாறிக் கொண்டிருந்த அந்தக் கோலம்!
குடும்பம் குடும்பமாக,ஜோடி ஜோடியாக-அங்கேயே சாய்வு நாற்காலிகளையும்,பிற வசதியான இருக்கைகளையும் அமைத்துக் கொண்டபடி,கணவனும்,மனைவியும் பத்திரிகையிலோ,புத்தகத்திலோ மூழ்கிக் கிடக்க ஆற்றின் கரையோரம் அவர்களுக்கு முன்பாக விளையாடும் குழந்தைகள்;தங்கள் அன்பை அறுதியிட்டு உறுதி செய்தபடி இருக்கும் காதலர்கள்! இதமான குளிரை ரசித்தபடி ஓய்வெடுக்கும் முதியவர்கள்...!
நின்றும்...இருந்தும்...கிடந்தும்....



பாரீஸில் கடற்கரை இல்லாததால் சீன் நதிக் கரையில்,செயற்கையாக மணலைக் கொட்டிக் குவித்து,அதையே ஒரு கடற்கரை போலப் பாவித்துச் சூரியக் குளியல் போன்றவை நடத்தி செய்து அந்த நதியை மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தக் கரையோரமாகப் பின்பு பேருந்தில் சென்றபோது,நதிக் கரையில் பச்சை நிறப்பெட்டிகள் பலவும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.’அவை என்ன தெரியுமா?’என்று புதிர் போட்ட எங்கள் வழிகாட்டி அதற்கு விடை சொல்லவும் தவறவில்லை.பாரீஸ் நகரின் புத்தகக் காதலர்கள் பலரும் தங்கள் சொந்த சேமிப்புக்களான விலை மதிப்பற்ற பல புத்தகங்களை அவற்றில் சேமித்துப் பூட்டுப் போட்டு வைத்திருக்கிறார்களாம்;நேரம் கிடைக்குபோது இனிமையான சீன் நதிச் சூழலில் அமர்ந்தபடி புத்தகங்களை ரசிப்பார்களாம்;அவை இது வரை கொள்ளை போனதும் இல்லையாம்....(எல்லாம் சரிதான்...ஆனால் அந்தக் குளிருக்கும்,மழைக்கும் அவை எப்படித்தான் அங்கே தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கின்றனவோ?)

சீன் நதியை விடவும் கூட அற்புதமான,ஆர்ப்பரிப்பான கொள்ளை அழகான கணக்கற்ற ஆறுகள் நமக்கும் உண்டு.....’மேவிய ஆறு பல ஓடி மேனி செழித்த’ நம் தாய்த் திருநாட்டில் அவற்றைக் கொண்டாடுவதாக எண்ணிக் கொண்டு....மேலும் மேலும் குப்பைகூளங்களையும் கழிவுகளையும் கொட்டிக் குவித்து நாசப்படுத்திக் கொண்டிருக்கிறோமே என்ற ஏக்கம்,
அங்கே பளிங்கு போல் ஓடிய சீன் நதியையும்,
ஜனத் திரள் கூடிக் குவிந்திருந்தாலும் தூய்மை கெடாத அதன் சுற்றுப்புறங்களையும் கரைகளையும் பார்க்கப் பார்க்க என்னுள் கிளர்ந்தது.

1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

பிரான் ஸுக்குப் போகணும்கிற ஆசையை உங்க இடுகை தூண்டி விட்டிருச்சும்மா ..அருமையான பகிர்வு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....