துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

30.12.12

2012 இல்.....

31/12/12 குங்குமம் தமிழ் வார இதழ் வெளியிட்டிருக்கும் 2012 க்கான 10 முக்கியமான நூல்களில் [டாப் டென்] -என் மொழிபெயர்ப்பான ’அசடனு’ம்’ இடம் பெற்றிருக்கிறது.

இலக்கியம்,அரசியல்,பொருளியல் எனப்பல தளங்களிலும் வெளிவந்த முக்கியமான சில நூல்களை எழுத்தாளர் திரு ஜெயமோகன் இப்பட்டியலில் தன் கணிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். 

2012ம் ஆண்டில் எனக்குப் பிடித்தவை என்ற தலைப்பில் எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்திருக்கும் பட்டியலிலும் அசடன் இடம் பெற்றிருக்கிறது.

மூலநூலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கியின் மொழியை என் சொற்களில் வைத்தது மட்டுமே நான் செய்தது. இவ்வாண்டில் இம்மொழிபெயர்ப்பைப் பெருமளவில் வரவேற்று வாசித்த இலக்கிய ஆர்வலர்களுக்கும்,விமரிசகர்களுக்கும்-  அளவில் மிகப்பெரியதான இந்த நூலைப் பல வகைச்சிக்கல்களுக்கு நடுவிலும் பிரம்மாண்டமாக வெளியிட்ட மதுரை பாரதி புத்தகநிலைய உரிமையாளர் திரு துரைப்பாண்டி அவர்களுக்கும் என் நன்றி....

2012 இல் என் நூலுக்கும் ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்ததை நிறைவுடன் ஏற்று....அடுத்த அடி எடுத்து வைக்க இன்னும் பொறுப்புடன் ஆயத்தமாகிறேன்.

இ பாவின் கண்ணன்


கையில் எடுத்து விட்டால் படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாதபடி விறுவிறுப்போடும்...அதே நேரம் ஆழமான தகவல்களைக்  கூட மெல்லிய கிண்டலோடும்,நகைச்சுவையோடும் சேர்த்துத் தரும் ஒரு நூலை வாசித்துப் பல நாட்களாயிற்று. அந்தக்குறையைப்போக்குவது, இந்திரா பார்த்தசாரதியின் நாவலா..கட்டுரை நூலா என்று பிரித்துச் சொல்ல முடியாத ஆக்கமான ’’கிருஷ்ணா..கிருஷ்ணா...’’

இந்துக்கடவுளரில் கண்ணன் மதம் கடந்த பிரியத்துக்கும் நேசத்துக்கும் உரியவன்.பயபக்தியோடு செய்யப்படும் வழிபாட்டை விடவும் ஒரு குழந்தையைச் சீராட்டுவது போன்ற வாஞ்சையே அதில் எப்போதும் ததும்பிக் கொண்டிருக்கும். கண்ணனின் பிள்ளைக் குறும்புகளை அதிகம் கேட்டே அவனைக் குழந்தையாக வரித்துக் கொண்டு விட்ட நம் மனங்களில் அந்தச் சித்திரத்தை இன்னும் அழுத்தமாகத் தீட்டியிருக்கிறது பாரதியின் கண்ணன் பாட்டு.

கண்ணன் ஒரு குழந்தையாக நம் மனங்களில் பதிவாகியிருந்தாலும் அவனுக்குப் பல முகங்கள்,பரிமாணங்கள் உண்டு.இராமனைப்போன்ற ஒற்றைப்படைத் தன்மை கொண்டவன் அல்ல அவன். பாகவதத்தில் தீராத விளையாட்டுப்பிள்ளையாகத் திரியும் அவன், பாரதத்திலோ அரசியல் விளையாட்டில் முக்கியமான அங்கம் வகிக்கும் மதியூகியாகிறான். கண்ணனைக் கடவுளாகவே ஏற்றிருப்பவர்களுக்கும் கூட அவனது செயல்பாடுகளில் பல கேள்விகளும் ஐயங்களும் தலைநீட்டும் இடங்கள் பாரதம்,பாகவதம் இரண்டிலுமே ஏராளமாக உண்டு.அவற்றுக்கெல்லாம் விடை தேட இந்நூல் மூலம் ஒரு முயற்சி மேற்கொண்டிருக்கிறார் இ.பா. அந்த விடைகளை மிக இலகுவான மொழியில்,அவருக்கே உரிய அங்கத நடையில் சொல்லிச் செல்வதால் நூற்றுக்கணக்கான கிளைக்கதைகளும்,தத்துவ விளக்கங்களும் இதில் இடம் பெற்றாலும் கூட அவை துருத்திக் கொண்டோ,எளிதான வாசிப்புக்குத் தடையாக உறுத்திக் கொண்டோ நிற்காமல் ஒரு நாவலுக்குரிய சுவாரசியத்தோடும் வேகத்தோடும் இந்த நூலைப்படித்து விட முடிகிறது.

‘’உபதேசம் என்று எதுவுமில்லாமல் கவனமாக எழுதியிருக்கிறேன்’’என்கிறார் இ.பா.

கண்ணன் என்னும் அந்த அவதாரத்தின் முடிவு ஜரா என்னும் வேடனால்,அவன் எய்யும் அம்பால்  நேர்கிறது.அந்த இறுதிக்கணத்தில் அவன் கேட்கும் கேள்விகளுக்கு விடையாகக் கண்ணன் பல தன்னிலை விளக்கங்கள் அளிக்கிறான்; அதை நாரதர் தனக்கே உரிய பாணியில் விவரிப்பதாக இந்த நூலின் வடிவைக் கட்டமைத்திருக்கிறார் இ.பா.[நாரதரைத் தகவல் கடத்தும் ஒரு நபராக- எல்லாக் காலங்களிலும் சஞ்சரிக்கக்கூடிய ஒரு பத்திரிகையாளராக ஆசிரியர் வடிவமைத்திருப்பதால் பத்திரிகைக்காரருக்கே உரிய,நையாண்டி,விமரிசனம்,மாடர்னிஸம்,போஸ்ட்மாடர்னிஸம்,எக்ஸிஸ்டென்ஷியலிஸம் எனத் தற்காலப்போக்குகளை ஒன்றுகலந்து சொல்வதற்கான வாய்ப்பு இந்தப்படைப்புக்குக் கிடைத்து விடுகிறது]

’700 சுலோகங்களாக விரியும் கீதையைப் போர்முனையில் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா....?’- அதற்கு இப்படி விளக்கம் தருகிறது இந்நூல். நாரதர் சொல்கிறார்...’’எதிர்த்தாற்போல் பகைவர்கள் போராடத் தயாராக நின்றுகொண்டிருக்கும்போது கிருஷ்ணன் மணிக்கணக்கில் இவ்வாறு அருச்சுனனிடம் பேசியிருப்பான் என்பது சாத்தியமா என்பது நியாயமான கேள்வி.நானே கிருஷ்ணனிடம் இது பற்றிக்கேட்டேன்.கிருஷ்ணன் சொன்னான்,’நாரதா வார்த்தைகள் உதவியின்றி மனமும் மனமும் வெறும் எண்ண மொழியில் பேசினால் இந்த உரையாடல் நிகழ அதிகபட்சம் ஐந்து நிமிஷங்களாகும் என்று....நீங்கள் இப்போது சொல்லுகிறீர்களே     அதுவேதான் கிருஷ்ணன் சொல்லும் எண்ண மொழி-telepathy’’

போர் முனைக்கு வந்தபோது அர்ச்சுனனுக்கு நேர்வது  ஓர் existentialistic dilemma என்று கூறும் இ.பா.,
‘செய்கைதான் எல்லாவற்றுக்கும் தீர்வு,மனப்போராட்டம் என்பது,காரியம் மேற்கொள்ளாமல் இருப்பதற்கான மனச்சமாதானம்’என்பதையே கண்ணன்
கீதையாக உரைப்பதால், அது எந்தக்காலத்துக்கும் பொருந்தி வரும் ஓர் அரசியல் manual ஆவதையும், அதனாலேயே கம்யூனிஸ்ட் தோழர் டாங்கே போன்றவர்களும் கூட அதிலிருந்து மேற்கோள் காட்டுவதையும் சுட்டிக்காட்டிச் செல்கிறார்.

ஜராசந்தனின் உடல் எப்படிக்கூறு போட்டாலும் ஒட்டிக்கொள்ளும் என்பதால் துரும்பைக்கிள்ளித் தலை கீழாக மாற்றிப்ப்போட்டு சங்கேதம் காட்டியது...., மற்போர் விதிகளுக்கு மாறாக துரியனின் தொடையில் அடிக்குமாறு பீமனைத் தூண்டியது...,கர்ணனின் தேர்ச்சக்கரங்கள் இறங்கி விட்ட நிலையில் அவன் மீது அருச்சுனனை அம்பு தொடுக்கச் செய்தது என தர்மத்துக்கு மாறான பல செயல்களுக்குத் தான் தூண்டுதல் தந்ததற்கான காரணம் பற்றி பீஷ்மர் துரியோதனன் ஆகியோரிடம்
‘’யுத்தம் என்கிறபோது தர்மம் அதர்மம் என்று எதுவுமில்லை;அநியாயத்தை நியாயத்தால் வெல்ல முடியவில்லையென்றால் அநியாயத்தை அநியாயத்தால் வெல்வதில் தவறேதுமில்லை....நீ ஆடும் ஆட்டத்தைப்பார்த்து அதற்கேற்ப ஆட்ட விதிகளைப்புதுப்பித்துக் கொண்டு ஆடுகின்றேன் நான்...இதுதான் என்னுடைய இப்பொழுதைய தர்மம்..உன் தர்ம விதிகளுக்கு ஏற்பத்தான் நான் என் தர்மவிதிகளை அமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது;இதில் தவறேதுமில்லை...வாழ்க்கை என்பது ஒரு சதுரங்க ஆட்டம்.நீ காய்களை நகர்த்துவதற்கு ஏற்பத்தான் நானும் காய்களை நகர்த்தியாக வேண்டும்.....இதில் உணர்ச்சிகளுக்கு இடமே இல்லை....இதைத்தான் நான் போர்த் துவக்கத்தில் அருச்சுனனிடம் சொன்னேன்..’’என்று குறிப்பிடுகிறான் கண்ணன்.

பெண்ணினத்தின் மீது கண்ணன் கொண்ட பெருங்கருணையே அவர்களுக்கு விடுதலையளிக்கும்  ராச லீலையாக மலர்கிறது.
‘’ஒவ்வொரு கோபிகையும் அவரவர் கற்பனையில் விரிந்த இலட்சிய புருஷனை அவளுடன் குழல் இசைத்து நடனமாடிய கிருஷ்ணனிடம் கண்டாள்’’என்று சொல்லும் இ பா.,
‘’அந்தக்காலத்தில் ஒவ்வொரு ஆணுக்கும் எத்தனை மனைவிகள் தெரியுமா......ஆண்கள் இப்படியிருக்கும்போது பெண்களுக்குத் தங்கள் விருப்பப்படி கற்பனை செய்து கொள்ளக்கூடவா உரிமையில்லை...? அவர்கள் கற்பனையின் வடிகாலாகத் தன்னை அவர்களுக்கு அர்ப்பணித்தான் கண்ணன்’’என்று அதற்கு மேலும் விளக்கம் தருகிறார்.

கௌரவர் அவையில் பாஞ்சாலிக்கு இழைக்கப்பட்ட அநீதியே எந்த தர்ம வரம்பையும் கடந்து தீயதை மாய்க்க வேண்டும் என்னும் உத்வேகத்தைக் கண்ணனுக்கு அளிக்கிறது...! மரணப்படுக்கையில் இருக்கும் பீஷ்மர் ‘நீ நினைத்திருந்தால் இந்தப்போரைத் தடுத்திருக்க முடியாதா’’என்று கேட்கும்போது,
‘’அரை நிர்வாணத்துடன் ஒரு பெண் உன்னிடம் நியாயம் கேட்டபோது உன்னால் என்ன செய்ய முடிந்தது.....? இப்பொழுது நினைத்தாலும் அந்தக்காட்சி என் மனத்தை உலுக்குகிறது.பெண்களுக்குக் கொடுமையிழைத்து விட்டு யாராலும் தப்பித்துக் கொள்ள முடியாது;இதைத் தவிர வேறு தர்மம் எனக்குத் தெரியாது’’என்பதே கண்ணன் சொல்லும் விடை.
நூல் முழுவதும் கண்ணன் வருவது பெண்களின் உற்ற தோழனாகவே....

பீஷ்மன்,கர்ணனாகிய ராதேயன் இருவரையும் கிட்டத்தட்ட ஒரே தட்டில் நிறுக்கிறார் இ பா. இருவரும் சூழ்நிலைக் கைதிகளாகித் தங்கள் மனச்சாட்சியின் உட்குரலைக்கடந்து செல்பவர்கள். அநீதியான செயல் என்று உணர்ந்தாலும் அரச நீதியைக் காப்பதற்காகவே பிறந்தவனாகத் தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் பீஷ்மன் அநீதியின் பக்கம் நின்று போராடுகிறான்;அதே போல நட்புக்காக அநியாயத்தின் பக்கம் சேர வேண்டியதாகி விடுகிறது கர்ணனுக்கு.
‘’பீஷ்மன்,ராதேயன் இருவருமே கிரேக்கத் துன்பவியல் நாடகங்களில் வரும் கதாநாயகர்கள் போன்றவர்கள்’’என்னும் இ பாவின் அவதானிப்பு மிகக்கூர்மையானது.

’’கிருஷ்ணன் ஒவ்வொரு காலத்துக்கும் அந்தந்தக் காலத்துக்கேற்ப அர்த்தப்படும்படியான பல பரிமாணங்களையுடைய மஹாபுஷன்.நீ இந்தக் கதையைச் சொல்லும்போது இந்த அர்த்தப்பரிமாணங்கள் கேட்கின்றவர்களுக்குப் புலப்பட்டால்தான் கிருஷ்ணனைப்புரிந்து கொண்டதாக அர்த்தம்..’’என்று ஜரா, நாரதரைப் பார்த்துச் சொல்லும் வார்த்தைகள் இந்த நூலை எழுதும்போது இ.பா.,தனக்குத்தானே வகுத்துக் கொண்ட நியதியாகவே ஒலிக்கிறது.அந்த நியதியை மிகத் துல்லியமாக இப்படைப்பில் செயலாக்கி எல்லாக் காலங்களுக்கும் உரிய நாயகனாகக் கண்ணனை நிலை நிறுத்தியிருக்கிறார் இ பா.

கண்ணனின் கதை ஜராவின் அம்பினால் முடிவதற்கு முன் தன் அன்புக்காதலி ராதாவை இறுதியாகத் தேடிப் போகிறான் கண்ணன்.அங்கே அவன் காண நேர்வது ராதைப் பாட்டியையைத்தான்..இளமைப்பருவத்தில் அவனோடு கொஞ்சி விளையாடி,மழலை பேசி மகிழ்ந்திருந்த அந்த இளைய ராதையை அல்ல...அவனுள் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த இளம்பெண்ணைத் தொலைத்துக் கொள்ளவிரும்பாமல் அவளைப்பார்க்காமலே திரும்பி விடுகிறான் கண்ணன். மூப்பு இளமை இவையெல்லாம் சரீரத்துக்குத்தான்..ஆத்மாவுக்கில்லை என்று அர்ச்சுனனுக்கு உபதேசித்த தானே இவ்வாறு நடந்து கொண்டதை ஒரு கணம் நினைத்துப் பார்க்கவும் செய்கிறான். துண்டு துண்டான நிகழ்வுகளும் குட்டிக்கதைகளும் நிறைந்த இந்நூலின் ஒருமுகத்துக்கு உதவி இதற்கு ஒரு  நாவல் வடிவு தர உதவுகிறது இந்த இறுதிக்கட்டம்.

இ.பா.,இயல்பிலேயே ஒரு நல்ல கதை சொல்லி...
எள்ளலும்,எளிமையான கதை மொழிபும் அவரது எழுத்துக்கு வாய்த்த ஒரு வரம்; கூடவே கண்ணனின் கதைகளும் சேர்ந்து கொள்ள சுவாரசியத்துக்குப் பஞ்சமில்லாதபடி விறுவிறுப்புடன் செல்கிறது கிருஷ்ணா கிருஷ்ணா...
க்‌ஷத்திரிய வம்சத்தையே பூண்டோடு அழிப்பதுதான் உன் இலக்கா என்கிறாள் காந்தாரி..அதற்கு இவ்வாறு விடை சொல்கிறாணன் இ பாவின் கண்ணன்.
’’பிறவியினால் யாரும் எந்த ஜாதியுமில்லை..குணத்தினால் வருவது ஜாதி..அரசியலில் ஆக்கிரமிப்பு மனப்பான்மை உடையவர்கள் க்‌ஷத்திரியர்கள்; அறிவினாலும் கலாசாரத்தினாலும் ஆக்கிரமிப்பு மனப்பான்மை உடையவர்கள் பிராமணர்கள்....எந்த விதமான ஆக்கிரமிப்பாக இருந்தாலும் அதை எதிர்க்கின்ற கலகக்காரன் நான்...’’

‘’எந்தக்கோட்பாடாக இருந்தாலும் சரி அது காலத்துக்கு ஏற்றவாறு தன்னைப்புதிப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்’’
என்று நூலின் ஓரிடத்தில் கண்ணன் குறிப்பிடுவது போலவே வழக்கமான காலட்சேப பாணிகளிலிருந்து மாறுபட்ட ஒரு நவீன,பின் நவீன கண்ணனை நமக்குப் படிக்கத் தந்திருக்கிறார் இ பா.

கண்ணனின் கதைகள் முழுவதையும் ஒரே இடத்தில் தொகுத்துப்பார்க்கவும்,சமகாலநோக்கில் அவை மறு ஆக்கம் செய்யப்படுவதை மனதுக்குள் அசை போட்டு உள்வாங்கவும் இந்நூலை விட்டால் வேறு புகல் இல்லை என்ற அளவுக்குக் கண்ணனின் அனைத்துப் பரிமாணங்களின் இண்டு இடுக்குகளுக்குள்ளெல்லாம் பயணப்பட்டிருக்கிறார் இ.பா.

கிருஷ்ணா கிருஷ்ணா இப்போது ஒலிப்புத்தகமாகவும் கிடைக்கிறது.
இதைப் படிக்கவோ..கேட்கவோ தவறினால் இழப்பு நமக்குத்தான்....
‘’

29.12.12

கண்ணீர் விடை!

தில்லி பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவந்த பெண் இன்று காலை மரணமடைந்த செய்தி வந்திருக்கிறது.

பொதுவாக இத்தகைய கொடுமைகளுக்கு -அதிலும் கூட்டான பாலியல் வல்லுறவுக்கு- ஆளாகும் பெண்கள் மரிக்கவே விரும்புவார்கள்; மாறாக இந்தச் சகோதரி வாழ விரும்பி மன திடத்தோடு போராடியிருக்கிறார். தான் உயிரோடு எழுந்து வந்து குற்றவாளிகளை இனம் காட்டி அவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென்றே துடித்திருக்கிறார்; நினைவு வரும் நேரங்களிலெல்லாம் அதையே எழுதி எழுதிக் காட்டியுமிருக்கிறார். அவரது குடும்பமும் கூட இந்தக்கருத்தையே கொண்டிருந்தது வித்தியாசமானது...

அவரது மன உரம் அவரை மீட்டுவிடும் என்னும் நமது நம்பிக்கை பொய்த்துப்போக அவர் இன்று காலை மரணம் எய்தி விட்டார்.கோழையைப் போலக் கண்ணீர் சிந்தியபடி இறக்காமல் நெஞ்சுரத்துடன் வாழத் துடித்த அவருக்கு நேர்ந்திருப்பது நிச்சயமாக வீர மரணம்தான்...

இந்தவாரக் குமுதத்தில் நண்பர் ‘தீம்தரிகிடஞாநி’ அந்தச்சகோதரிக்கு எழுதியிருக்கும் மனம் திறந்த மடலில் குறிப்பிட்டிருப்பது போல அழுகிப்போன இந்தச் சமூகத்தில் அங்கம் வகிக்கும் நாம் ஒவ்வொருவருமே இந்தக் குற்றத்துக்குப் பொறுப்பானவர்கள்தான்...

‘’இந்த நாட்டில் பிறந்ததற்காக முதன்முதலாக வெட்கப்படுகிறேன்,அவமானம் கொள்கிறேன்..’’
இன்று விடியலில் என் தோழியின் மகளிடமிருந்து எனக்கு வந்த குறுஞ்செய்தி இது..

இந்த நாட்டில் பிறந்ததற்கு நாண வேண்டாம் பெண்ணே! நல்லதொரு நாட்டை மிருகங்கள் உலவும் காடாக மாற்றி வைத்திருக்கும் அரசியல்,சமூக அமைப்புக்களுக்காக வெட்கப்படுவோம்...!
மரித்துப்போன அந்த ஆத்மாவிடம் அவர்கள் அனைவர் சார்பிலும் நாணித் தலை குனிந்தபடி பாவ மன்னிப்புக்கோருவோம்..!


28.12.12

ஆணின் பார்வை....


வாய்ச்சொல் அருளாதீர் எனச் சென்ற பதிவில் நான் சொன்னதில் சற்றும் மிகை இல்லை என்பதைத் தொடர்ந்து வரும் செய்திகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

பொறுப்பான பதவியும் பாரம்பரியமும் கொண்ட குடியரசுத் தலைவரின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான அபிஜித் முகர்ஜி அளித்திருக்கும் பேட்டி இன்று கடும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
‘’மாணவியர் என்ற பெயரில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அழகான பெண்கள்; அவர்கள் வர்ணம் பூசிக்கொண்டு,பற்களைக்காட்டியபடி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்’’- 28.12.12/ தினமணி,தில்லி பதிப்பு

அபிஜித்தின் திருவாயிலிருந்து உதிர்ந்திருக்கும் இந்த முத்தான கருத்தை அவரது சகோதரியும்  குடியரசுத் தலைவரின் மகளுமான சர்மிஷ்டாவே கடுமையாக எதிர்த்திருப்பதோடு அதிர்ச்சியோடு கூடிய தனது வேதனையை வெளிப்படுத்தியிருப்பதும்,அபிஜித்தின் சார்பில் மன்னிப்புக் கோரியிருப்பதும் சற்றே ஆறுதலளித்தாலும்

Sharmishtha said she was highly embarrassed with this remark. "I don't know in what context my brother said that, it's highly insensitive. I'm embarrassed," she said.]

சமூகத்தில் பெண் சார்ந்த ஆணின் கண்ணோட்டங்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

என்னதான் நினைக்கிறார் அந்தப் ‘’பெரிய மனிதர்’’?
அழகான பெண்களென்றால் அவர்கள் முட்டாக்குப்போட்டபடி மூலையில் முடங்க வேண்டும்,இப்படி வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடக்கூடாதென்கிறாரா?
தில்லிக் குளிருக்குக் கம்பளி எப்படி அவசியமோ அதுபோலவே ஒரு அவசியப்பொருளாக ஆகிப்போன உதட்டு வண்ணத்தை அவர்கள் பூசியிருப்பது தவறென்கிறாரா?

குழந்தைகளோடு கூட சில பெண்கள் வருகிறார்கள்,அவர்கள் மாணவியரா என்பது சந்தேகமாக இருக்கிறது என்று வேறு சொல்லியிருக்கிறார்....
இளம் தாய்மார்களாக இருந்தால்தான் என்ன...தில்லியின் இப்போதைய நடுக்கும் குளிரில் தங்கள் ஒருமித்த உணர்வைக்காட்ட அவர்கள் ஒன்றுகூடுகிறார்களே....அதுவே பெரிய விஷயம் இல்லையா..
மாணவியர் நடத்தும் போராட்டத்தில் இவர்கள் கலந்து கொள்வதால் என்ன நேர்ந்து விடும் என்று இப்படிப்பதைக்கிறார் இவர்?

அண்மையில் ஒரு நண்பர் கீழ்க்காணும் வாசகங்களை எனக்கு அனுப்பி மொழியாக்கம் செய்யக் கோரியிருந்தார்...
ஏதோ ஒரு சலிப்பிலும் மனச்சோர்விலும்- நம் ஆண்மக்கள் ஒன்றும் இந்த அளவு மோசமானவர்கள் அல்ல என்ற நம்பிக்கையிலும் அதைச் செய்ய அப்போது மனம் வரவில்லை.
அதை இங்கே தந்திருக்கிறேன்.
[ஆனாலும் இப்போதும் கூட மனிதத்தின் மீது...ஆணினத்தின் மீதான நம்பிக்கை என்னுள் எஞ்சியிருக்கவே செய்கிறது...அதைச் சற்று உலுக்கி விடவே இதை இங்கே தந்திருக்கிறேன்]

’’Don't go out alone at night - That encourages men
இரவில் தனியே செல்லவேண்டாம்-அது ஆணைச் சபலப்படுத்தும்

Don't go out alone at any time - Any situation encourages some men
எந்த நேரமென்றாலும் தனியே செல்லவேண்டாம்-எந்தச் சூழ்நிலையும் ஆணை சபலத்துக்குள்ளாக்கும்

Don't stay at home - Intruders and relatives can both rape
வீட்டில் இருக்க வேண்டாம்-உறவுக்காரர்களும் உள்ளே வருபவர்களும் கூடப்பாலியல் சேட்டைகள் செய்து விடலாம்

Don't go without clothes - That encourages men
சரியாக ஆடை அணியாமல் வெளியே செல்ல வேண்டாம்-அது ஆணைச் சபலப்படுத்தும்

Don't go with clothes - Any clothes encourage some men
ஆடைகளை அழகுற அணிந்தும் செல்ல வேண்டாம்-அதுவும் ஆணைச் சபலப்படுத்தும்

Avoid childhood - Some rapists are turned on by little girls
குழந்தைப்பருவத்தைத் தவிர்த்து விடலாம்-சிலரின் குறி சின்னப்பெண்களின் மீதுதான்


Avoid old age - Some rapists prefer aged women
வயோதிகத்தையும் தவிர்ப்பதே நல்லது-சிலரது கண் வயதான பெண்கள் மீதுதான்


Don't have father, grandfather, uncle or brother - These are the relatives that often rape young women
அப்பா,தாத்தா,மாமா,சித்தப்பா,சகோதரன் என யாருமே வேண்டாம்-இவர்களிலும் கூட இளம் பெண்களைக் குறி பார்ப்பவர்களே அதிகம்


Don't have neighbours - They often rape
அண்டை வீட்டாருடன் பழக வேண்டாம்-அங்கும் ஆபத்து காத்திருக்கிறது


Don't marry - Rape is legal within marriage
திருமணம் வேண்டாம்-அது சட்டஅங்கீகாரமுள்ள பாலியல் குற்றம்


To be quite sure - DON' T EXIST !
எதைச் செய்தால் எதுவும் நடக்காது என்று உறுதியாக இருக்கலாம்?
பேசாமல் ......பெண் என்பவள் இல்லாமலே போய்விடலாம்..அதுதான் நல்லது.’’

இன்னும் ஒன்று....
வாய்ச்சொல் அருளாதீர் பதிவில் நான் சொன்னவற்றை வேண்டுமென்றே புரிந்து கொள்ள மறுத்து அதிலுள்ள நியாயத்தை ஏற்கத் துணிவின்றிக் கீழ்க்காணும் பின்னூட்டம் ஒன்று ’குலசேகரன்’என்பவரால்
[மேல்விவரம் தெரிந்து கொள்ள முடியாமல் மறைந்து எழுதுபவர்]
எனக்கு அனுப்பப்பட்டிருந்தது.அதை அந்தப்பதிவிலேயே வெளியிட்டாலும் அதற்கான மறுமொழியைஎல்லோரும் காணும் வகையில் இங்கு விரிவாக அளிக்க விரும்புகிறேன்.

குலசேகரன் மொழி....
காந்தி சொன்னது, உண்மையான சுதந்திரம் என்பது இரவில் ஒரு பெண் அணிகலன்களோடு தன் வீடு திரும்ப எப்போது முடியுமோ அப்போதுதான். ஆந்திர அமைச்சர் சொன்னது: நள்ளிரவில் பெண்கள் நடமாட வேண்டாம்.
இரண்டையும் நீங்கள் உய்த்துணரவில்லையென்பதே என் அச்சப்பாடு.
காந்தி சொன்னது நாம் ஆகஸ்து 1947 ல அடைந்த சுதந்திரம் வெள்ளைக்காரனிடமிருந்து மட்டும்தான். அது நாட்டுச்சுதந்திரம். மக்கட் சுதந்திரமன்று. என்று நம் நாட்டில் பெண்கள் பயமில்லாமல் வாழ்கிறார்களோ அன்றுதான் நமக்கு உண்மைச்சுதந்திரம்.
இதையே ஆனந்தப்பள்ளு பாடும்போதுபாரதியார் குறிப்பிட்டார். அப்பாட்டில், முதலில் பறையருக்கும் புலையருக்கும் சுதந்திரம். பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே என்று கற்பனையாகக் குறிப்ப்ட்டார். அதாவது எப்படிப்பட்ட சுதந்திரம் வரவேண்டும்? தீண்டாமையில்லா ஏற்றத்தாழ்வுகளில்லாச்சுதந்திரமனைவருக்கும். வந்துவிட்டதா? இல்லையென்பதை உங்கள் ஊரே நிருபித்துக்கொண்டு வருகிறது. மொததம் 12 பேர் தேவர் குருபூஜையின் போது மதுரை சிந்தாமணியில் கொல்லப்பட்டார்கள். மூவர் பரமக்குடிக்கருகில் கொல்லப்பட்டார்கள். ஒரு போலீசு ஆய்வாளர் அடித்துக்கொல்லப்பட்டார் சாதிவெறியர்களால். இருவர் என்கவுன்டரில் டிஎஸ்பி வெள்ளைத்துரையால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். வந்ததா பாரதி சொன்ன சுதந்திரம் உங்கள் ஊரில்? இல்லை. அதே போல,
காந்தி சொன்ன அந்தச்சுதந்திரம் இன்று வந்துவிட்டதா? பெண்களுக்குப் பாதுகாப்பு வந்துவிட்டதா? இல்லையென்பதை தில்லிச்சம்பவமட்டுமன்று; நாடோறும் நடக்கும் பல பெண்ணெதிர் வன்கொடுமைகள் நிருபிக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் பெண்கள் முன்னெச்சரிக்கையாக வாழ வேண்டும் என்கிறார் ஆந்திர அமைச்சர்.
ஐயமேயில்லை. அவர் வாக்குச்சரியே. 
பெண்கள் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளைத் தாங்களே எடுத்துக்கொண்டு காப்பாற்றிக்கொள்ளட்டும். All other helps from other sources are secondary.

என் மறுமொழி
இதைப்படிக்கநேரும் வாசகர் எவருக்காவது குலசேகரன் சொல்வது,சொல்ல வருவது என்னவென்று புரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள்....
நான் சொல்ல வருவதையே தன் வார்த்தைகளில் சொல்லி விட்டுக் கடைசியில் ஆந்திர அமைச்சர் சொன்னது சரி என்கிறாரே....இதை எங்கே போய்ச் சொல்ல?

காந்தியடிகள் விரும்பியது அரசியல் விடுதலை மட்டுமல்ல....

சமூக விடுதலையும்தான்.அதைத்தான் நானும் சொல்லியிருக்கிறேன்.
சமூக விடுதலை பெறாத நாட்டில் அரசியல் விடுதலைக்கு அர்த்தமில்லை என்பதாலேயே நாடு விடுதலை பெற்ற தருணத்திலே கூட  மதப்பூசல்கள் மலிந்து கிடந்த கொடுமையைப்பார்த்துப்பார்த்து மனம் குமுறிக்கொண்டு தவித்தபடி இருந்தார் அவர்.

நள்ளிரவில் பெண்கள் நடமாடலாகாது எனப் பெண்களின் தனி உரிமையைப் பறித்தவரில்லை காந்தி. நள்ளிரவில் பெண்களும் அச்சமின்றி நடமாடும் வண்ணம் நம் நாடு பக்குவம் பெற வேண்டும் என்பதே அவர் விரும்பியது.


நாடு அரசியல் சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும்- 
உயர் அதிகார மையங்களில் இருந்து கொண்டு காந்தியாரின் ஒரு சின்னக்கனவைக் கூட நனவாக்காமல் இருந்து விட்டு....-அதை நிறைவேற்றும் பொறுப்பிலிருந்தும் நழுவி விட்டுப் பெண்களுக்குப் புத்திமதி சொல்ல முன் வருகிறார்களே இந்தப்போலி உபதேசிகள்...அதைச் சுட்டிக் காட்ட மட்டுமே நான் நினைத்தேன்;ஏதோ பெண்கள் எச்சரிக்கையாக இருந்து விடால் ஏதுமே நடக்காது என்பது போன்ற பூச்சாண்டித்தனங்களை எவரும் காட்ட வேண்டாம் என்பதற்காகவே மேலே என் நண்பர் அனுப்பிய வாசகங்களையும் தமிழில் தந்திருக்கிறேன்....

குலசேகரனுக்கு மற்றும் ஒன்று..
அந்தப்பெண் சென்றது ஆந்திர அமைச்சர் சொன்னது போல நள்ளிரவில் இல்லை.இரவு ஒன்பதரைக்கு.
//பெண்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தாங்களே எடுத்துக்கொண்டு காப்பாற்றிக்கொள்ளட்டும்.//
இதற்குப்பெண்கள் தயார்.....ஆனால் அதற்கான வயது வருவதற்கு முன்பே ஏற்படும் அசம்பாவிதங்களால் செய்தித் தாள்களின் பக்கங்கள் நாளும் நிரம்பிக் கொண்டிருக்கின்றனவே....அதற்கு என்ன பதில் சொல்ல முடியும்?
ஏற்கனவே பச்சைப்புண்ணிலிருந்து குருதி ஆறாய் ஓடிக்கொண்டிருக்கிறது....
அதில் வேல்பாய்ச்சும் வேலையைச் செய்வதை விட்டு விட்டு உருப்ப்படியாக வேறு ஏதாவது இருந்தால் செய்யுங்கள்...

இல்லையென்றால் அரசியல்வாதிகளே..அரட்டையாளர்களே....எங்கள் பாட்டை நாங்கள் பார்த்துக்கொள்ள விட்டுவிட்டு வாயையாவது தயவு செய்து மூடிக்கொள்ளுங்கள்...
நாங்கள் வேண்டுவது அது ஒன்றைத்தான்...!
25.12.12

வாய்ச்சொல் அருளாதீர்!

அண்மையில் தில்லியில் நடந்த குரூரமான பாலியல்தாக்குதலும் அது தொடர்பாக நிகழ்ந்து வரும் தொடர் போராட்டங்களும் அனைவரும் அறிந்ததுதான்...அவை எழுப்பி வரும் ஆத்திர அலைகளே அடங்காமலிருக்கையில், ஒரு சில பெரிய மனிதர்கள் திருவாய்மலர்ந்து அருளும் உபதேசங்களும் ஆலோசனைகளும் பெண்களை மட்டுமல்ல....கொஞ்சநஞ்சம் மனச்சாட்சி மீதமுள்ள எவரையுமே கோபப்படுத்துபவை;காயப்படுத்துபவை...

நள்ளிரவில் நம் நாடு சுதந்திரம் பெற்றதென்பதற்காக நள்ளிரவில் பெண்கள் நடமாடலாமா என்று கேட்டிருக்கிறார் ஓர் ஆந்திர அமைச்சர்...

அனைத்து ஆடை ஆபரணங்களுடன் கூடிய-சர்வாலங்கார பூஷிதையான- அழகான இளம்பெண் ஒருத்தி நள்ளிரவில் தனியே நடந்து போகும் நாளே நாம் சுதந்திரம் பெற்ற நாளென்று சொன்ன மகாத்மாவின் வாக்கு...பாவம் அவருக்கு   மறந்து போயிருக்கலாம்....
அல்லது ....மகாத்மாவே யாரென்று கூட அவர் அறியாமலும் இருக்கலாம்..
அறியாமைதானே இன்றைய அரசியலின் அணிகலன்?

முன்பு ஒரு முறை  பெண்கள் வேலைக்குப் போவது தவறென்று ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியே கூறிய உதாரணம் கூட நம்மிடம் இருக்கிறது....

நம் வீட்டுப் பெண்களை சொகுசுக்கார்களிலேயே அனுப்பிப் பத்திரப்படுத்திவிட்டோம்...
அயல்நாடுகளுக்கெல்லாம் அனுப்பிப் படிக்கவும் வைத்து விட்டோம்....

நகரப்பேருந்துகளில் போகும் சாமானியர்களைப்பற்றி நமக்கென்ன கவலை?

அது கூட எப்படியும் போய்த் தொலையட்டும்..
அவர்கள் தாக்குதல்களுக்கு ஆளாகும்போது ஆதங்கமோ அனுதாபமோ கொள்ள வேண்டாம்...
எதிர்ப்புக்குரல் எழுப்பிக்கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டாம்..

கருத்துச் சொல்வதாக இப்படிக் கண்டதையும் உளறாமலாவது இருக்கலாமல்லவா?
நல்லதைச் செய்யாவிட்டாலும் பரவாயில்லை,பாதகமான கெட்டதைச் செய்யாமலிருந்தாலே போதும் !
’’நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்’’
என்று பழந்தமிழ் இலக்கியம் சொல்கிறது.
காந்தி சொன்னதையே தெரிந்து வைத்துக் கொள்ளாதவர்களுக்கு இது எங்கே தெரியப்போகிறது?

தவறு செய்பவர்களைச் சிறையில் அடைத்துப் பூட்டுப்போடுவதோடு இப்படிப்பட்ட ’பெருமக்களின்’வாய்க்குப்  பூட்டுப்போடுவதும்   இப்போது   தேவைதான்! காரணம் சமூகத்தின் பொதுப்புத்தியில் விஷவிதைகளை உடனடியாகத் தூவும் திருப்பணியைச் செய்பவை இப்படிப்பட்ட கருத்துப்பரப்பல்கள்தான்...நல்லவற்றை விடவும் வெகுவேகமாகச் சென்று தைக்கும் நச்சு அம்புகள் இவையே !

நல்ல சமூகப்பணிகளுக்குப் பணம் படைத்தவர்கள்  பொற்குவையாகவும்,காசுகளாகவும் தாருங்கள்...மற்றவர்கள் நன்மொழிகளைத் தாருங்கள் என்ற பொருளில் 
‘வாய்ச்சொல் அருளீர்’
என்றான் பாரதி.
மேலே குறிப்பிட்டிருக்கும் நாகரிகக் கோமாளிகளை நாம் கரம் கூப்பிக் கேட்பதெல்லாம் அவர்கள் தங்கள் வாயிலிருந்து எந்தச்சொல்லும் அருளி விடாமல் இருக்க வேண்டும் என்பது மாத்திரமே...!

பி.கு;
நாளும் செய்தித் தாளில் குளிர்தில்லியின் கொதிப்புக் கண்டு கசியும் நெஞ்சங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கி இந்தியக்குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் கண்டன மனுவில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்..
முடிந்தால் உங்கள் இணைய தளங்கள்,முகநூல்களில் இணைப்பையும் கீழுள்ள படத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சமூக மாற்றத்துக்கு நம் எழுதுகோல்களும் சிறு நெம்புகோல்களாகட்டும்....20.12.12

விஷ்ணுபுரம் விழா-கோவையில்..


விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 / 2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெறுகிறது.
கவிஞர் தேவதேவன்
நிகழ்ச்சியில் தேவதேவனின் கவிதைகள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘ஒளியாலானது’என்னும் நூலும் வெளியிடப்படவிருக்கிறது.

                                   தலைமை- எழுத்தாளர் நாஞ்சில்நாடன்                                            பரிசளிப்பு- இசைஞானி இளையராஜா
நூல் வெளியீடு- கல்பற்றாநாராயணன் (மலையாளக் கவிஞர்)
பெற்றுக்கொள்பவர் - கோபி ராமமூர்த்தி
தொகுப்புரை-செல்வேந்திரன்
வரவேற்புரை- கே.வி.அரங்கசாமி
வாழ்த்துரைகள்
                                                     எழுத்தாளர் ஜெயமோகன்

விமர்சகர் மோகனரங்கன்
இயக்குனர் சுகா
ஏற்புரை - கவிஞர் தேவதேவன்
          நண்பர்கள் அனைவரையும் விழாவிற்கு அன்புடன் அழைக்கிறோம் .

 தேவதேவன் கவிதை ஒன்று

’இக்கூழாங்கற்கள் கண்டு
வியப்பின் ஆனந்தத்தில் தத்தளிக்கும்
உன்முகம் என
எவ்வளவு பிரியத்துடன் சேகரித்து வந்தேன்.
“ஐயோ இதைப்போய்…” என
ஏளனம் செய்து ஏமாற்றத்துடன்
என்னை சரித்துவிட்டாய்
சொல்லொணா
அந்த மலைவாச ஸ்தலத்தின்
அழகையும் ஆனந்தத்தையும்
சொல்லாதோ இக்கூழாங்கற்கள் உனக்கு
என எண்ணினேன்.
இவற்றின் அழகு
மலைகளிலிருந்து குதித்து
பாறைகளினூடாக ஓடும் அருவிகளால்
இயற்றப்பட்டது
இவற்றின் யௌவனம்
மலைப்பிரதேசத்தின் அத்தனை செல்வங்களாலும்
பராமரிக்கப்பட்டது
இவற்றின் மௌனம்
கானகத்தின் பாடலை உற்றுக் கேட்பது
மலைப்பிரதேசம் தன் ஜீவன் முழுதும் கொண்டு
தன் ரசனை அனைத்தும் கொண்டு
படைத்த ஓர் அற்புத சிருஷ்டி
நிறத்தில் நம் மாமிசத்தையும்
பார்வைக்கு மென்மையையும்
ஸ்பரிசத்திற்குக் கடினத்தன்மையும் காட்டி
தவம் மேற்கொண்ட நோக்கமென்ன என்றால்
தவம்தான் என்கிறது கூழாங்கற்களின் தவம்’

(கூழாங்கற்கள்)

தொடர்புள்ள இணைப்புக்கள்;

விஷ்ணுபுரம் விருது விழா-2012

விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுவிழா16.12.12

நாஞ்சிலுக்கு இயல்விருது


நாற்பது ஆண்டுக் காலமாக இடைவிடாமல் எழுதி வரும் நாவலாசிரியர்,சிறுகதையாசிரியர்,கட்டுரையாளர் என்ற பெருமைகளுக்குரியவர் நாஞ்சில் நாடன். அவரது முதல் நாவலான ‘தலைகீழ் விகிதங்க’ளைப் படித்தபோது நான் அடைந்த கொந்தளிப்பான உணர்வுகள் இன்னும் கூட என் நினைவில் எஞ்சியிருக்கின்றன.[சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமானது அந்த நாவலே]

அலுவல் காரணமாக மும்பையில் புலம்பெயர்ந்து வாழ்ந்ததால் விளைந்த மன உளைச்சல்களை..சொந்த மண்ணின் மீதான ஏக்கத்தைத் தனது ‘மிதவை’நாவலிலும்,சிறுகதைகளிலும் சிறப்பாகப் பதிவு செய்திருக்கும் இவரது புகழ் பெற பிற நாவல்கள்
சதுரங்கக்குதிரை,
என்பிலதனை,
எட்டுத்திக்கும் மதயானை
ஆகியன.
இவரது சிறுகதைகளும் இரு பெரும் பகுதிகளாக- முழுமையான தொகுப்பாக வெளிவந்திருக்கின்றன.’சூடிய பூ சூடற்க’என்னும் இவரது சிறுகதைத் தொகுப்பு 2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது.சிறுகதைகளுக்கான இலக்கியச் சிந்தனை விருது (1975, 1977, 1979), தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருது (1993), கண்ணதாசன் விருது (2009), கலைமாமணி விருது (2009) எனப் பல்வேறு விருதுகளையும் இவர் பெற்றிருக்கிறார்.

நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கைத் தமது புனைவுகளில் பெரிதும் கையாண்டு வரும் ஜி.சுப்பிரமணியம் என்னும் புனைபெயர் கொண்ட நாஞ்சில் நாடன், கட்டுரைகளைக் கூடக் கதைக்குரிய புனைவுத் தன்மையோடு முன்வைத்து வருபவர்; சங்க இலக்கியத்திலும், கம்பனிலும் தேர்ந்த புலமை படைத்தவர். விரைவில் வெளிவரவிருக்கும் இயக்குநர் பாலாவின் பரதேசி படத்துக்கான உரையாடல்களையும் நாஞ்சில் நாடன் எழுதியிருக்கிறார்.

இந்த ஆண்டு கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012ஆம் ஆண்டுக்கான இயல் விருது, நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்படவிருக்கிறது. கேடயமும் 2500 கனடிய டாலர்கள் மதிப்பும் கொண்ட இந்த விருது, சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி, எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரைத் தொடர்ந்து, இவ்வருடம் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

நாஞ்சில் நாடனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...!

இணைப்புக்கள்;

நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா-தில்லியிலிருந்து (3)  

நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா-தில்லியிலிருந்து (2)10.12.12

பாரதி பிறந்த திருநாளில்

என் எழுத்தின் ஆதர்சம்...,என் தமிழின் ஆதர்சம்..,என் ஆளுமையின் ஆதர்சம் மகாகவி பாரதி. பாரதி பிறந்த இந்தத் திருநாளில் அவன் சார்ந்த ஒரு நூல்,ஒரு ஓவியம்,ஒரு பாடல்...ஒரு காணொளி...இங்கே பகிர்வுக்கு..

வலைச்சரப்பதிவுகள்


வலைச்சரம் இணைய இதழில் -ஒரு வார காலம் 3/12 முதல் 9/12 வரை- சில வலைப்பதிவுகளையும்,தளங்களையும் பகிர்ந்து கொள்ள நண்பர் சீனா அழைப்பு விடுத்திருந்தார்.அங்கே நான் இட்ட பதிவுகள் இங்கே பார்வைக்கு....

8.12.12

விஷ்ணுபுரம் விருது விழா-2012

ஜெயமோகனும்,தேவதேவனும்...
தமிழ்ப் புனைகதை இலக்கியத்தின் முதன்மையான ஆக்கங்களில் ஒன்றான 'ஜெயமோகனின் ’விஷ்ணுபுரம்' நாவலின் பெயரால் உருப்பெற்றுள்ள இலக்கிய நண்பர்களின் வட்டம் 'விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்'.ஜெயமோகனின் படைப்புக்கள் தங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தாலும்,அவரது இலக்கிய ஆளுமையின் பால் விளைந்திருக்கும் ஈர்ப்புக் காரணமாகவும்  பலப் பல ஊர்களிலும் நாடுகளிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒத்த மனம் கொண்ட நண்பர்களின் குழு ஒருங்கிணைந்து ஏற்படுத்தியிருக்கும் அமைப்பு இது.  

இலக்கியக் கூட்டங்கள்,சந்திப்புக்கள்,நிகழ்வுகள் ஆகியவற்றை அவ்வப்போது நடத்துவதன் வழி இலக்கிய வாசிப்புப் பயிற்சியை மேம்படுத்திக் கொள்வதோடு, பிற இலக்கிய,சமூக அமைப்புக்கள் கௌரவிக்கத் தவறிய..அல்லது உரிய வகையில் அங்கீகாரம் தந்திராத இலக்கியப் படைப்பாளிகளுக்கு விழா எடுத்துச் சிறப்பிப்பதையும்,ஒவ்வொரு ஆண்டும் ஜெயமோகன் அவர்களால் அடையாளப்படுத்தப்படும் சிறந்த படைப்பாளி ஒருவருக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருது’என்ற ஒன்றை (ரூ.50,000)அளிப்பதும் இவ்விலக்கிய வட்டத்தின் குறிப்பான இலக்குகள்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் திரு ஆ.மாதவனுக்கு இவ் விருது முதன் முறையாக 2010ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற விழாவில் அளிக்கப்பட்டது.2011ஆம் ஆண்டுக்கான ‘விஷ்ணுபுரம் விருது’கரிசல் இலக்கியப் படைப்பாளியாகிய திரு பூமணிக்கு வழங்கப்பட்டது.

2012-ஆம் ஆண்டிற்கான விருது கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்பட இருக்கிறது. 
டிசம்பர் 22-ஆம் தேதி கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் இசைஞானி இளையராஜா அவர்களின் முன்னிலையில் விழா நடைபெற இருக்கிறது.

விழாவில் நாஞ்சில் நாடன், கல்பற்றா நாராயணன், ஜெயமோகன், விமர்சகர் மோகனரங்கன், இயக்குனர் சுகா, ராஜகோபாலன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு தேவதேவனை வாழ்த்த இருக்கிறார்கள்.


விஷ்ணுபுரம் விருதைப் பெறும் கவிஞர் தேவதேவனை வாழ்த்துவதோடு கலை,இலக்கிய ஆளுமைகள் பலரும் பங்கேற்கவிருக்கும் இவ் விழாவுக்கு இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் வருகை புரிந்து சிறப்பிக்க வேண்டும் என,'விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட'த்தின் ஓர் உறுப்பினர் என்ற உரிமையோடு அனைவருக்கும் அன்பான அழைப்பு விடுக்கிறேன்.

பி.கு;ஆர்வமுள்ள நண்பர்கள் இந்த அழைப்பிதழைத் தங்கள் வலைத் தளங்களிலும்,முகநூலிலும் வெளியிடக் கோருகிறேன்.


7.12.12

தில்லிகை-டிச.நிகழ்வுதில்லிகை
தில்லி இலக்கிய வட்டம்
மற்றும்
தில்லித் தமிழ்ச் சங்கம்

கலை
இலக்கியச் சந்திப்பு: 2012/10

27.11.12

ஒரு பாலைப்பயணம்-3


புல் பூண்டுகள் கூட அற்ற - வெறுமையும்,முழுமையுமான மணல்வெளிப்பரப்பைக் காண ஏற்றதாக ஜெய்சால்மர் நகருக்கு அண்மையில் அமைந்திருக்கும் இடமே சாம் மணல் மேடுகள்.  தார் பாலைவனத்தின் முகப்புக்களில் ஒன்றாகவும் இந்த இடத்தைக் கொள்ளலாம். நகரிலிருந்து அந்த மணல்மேடுகளை நோக்கிச் செல்லும் வழியெங்கும் பாலைக்குள்ளேயே தங்கியிருக்க வசதி செய்து தரும் பாலைவன ரிசார்ட்டுகள்...மற்றும் ஆங்காங்கே அவை அமைத்திருக்கும் கூடாரங்கள்.
கோட்டை வடிவில் ஒரு தங்கும் விடுதி

பாலைக்கூடாரங்கள்...
படிப்படியாக எங்கள் ஆர்வம் கூடிக்கொண்டே செல்ல....சாலையின் இரு பக்கங்களிலும் தாவரங்களின் பரவல் படிப்படியாகக்குறைந்து மணல் மேடுகள் கண்ணுக்குத் தென்படத் தொடங்கியிருந்தன.குறிப்பிட்ட ஒரு இடத்தோடு அங்கிருந்த காவலர்கள் வாகனத்தை நிறுத்தி விட.....அங்கே பார்த்தால் தேர்த் திருவிழா போன்ற மக்கள் கூட்டமும் வாகனக் குவியல்களும்....! சற்று தூரத்தில் பெரிய மணல் மேடுகளும் அங்கே ஒட்டகங்களிலும்,ஒட்டக வண்டிகளிலும் சவாரி செய்யும் மனிதர்களும்...!

பாலையின் ஏகாந்தத்தையும்....தனிமையான சூழலையும் கற்பனை செய்து கொண்டு வந்திருந்த எனக்கு வித்தியாசமான இந்தக் காட்சி சிறிது அதிர்ச்சி ஊட்டியபோதும் ‘பாலையைக்காணும் ஆர்வம் எல்லோருக்கும்தானே  இருக்கும்’என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.....ஆனாலும் அந்தக் கூட்டத்துக்குள் இருந்தபடி பாலைமணல்வெளியின் அழகைப்பருகுவதென்பது....அத்தனை எளிதானதாக இல்லை.ஒட்டகங்களிலும்,ஒட்டக வண்டிகளிலும் ஏறிச் சவாரி செய்யுமாறு நம்மைக் கையைப்பிடித்து இழுக்காத குறையாக வற்புறுத்தும் ஒட்டகக்காரர்கள் ஒரு புறம்....மனிதர்களைச் சுமந்தபடி நம் மீது மோதி விடுவது போல ஓடி வரும் ஒட்டகங்கள் இன்னொரு புறம்....பாலை மணலுக்குள் இருந்தபடி தன் பாட்டையும் நடனத்தையும் ரசிக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்த பெண்கள் மறுபுறம்... [’பத்தே பத்து ரூபாதான்....ஒரே ஒரு பாட்டு..ஒரே ஒரு நடனம் மண்ணுக்குள்ள உக்காந்து பாருங்க தீதி...உங்க வம்சமே நல்லா இருக்கும்..’’’  -  இதைத்தான் இந்தியில் சொல்லியிருப்பார்கள் என்பது என் புரிதல்!?].
இந்தக் கூட்ட நெரிசலில் என் அழகியல் உணர்வு கொஞ்சம் கொஞ்சமாய்க் கழன்று கொள்ள...அங்கிருந்து தப்பித்து வெளியேறினால் போதும் என்னும் மனநிலைக்குக் கூடத் தள்ளப்பட்டிருந்தேன் நான். இருந்தாலும் அத்தனை தொலைவு பயணப்பட்டு வந்து விட்டு வெறுமே போக முடியுமா என்ன..? பாவப்பட்ட ஒட்டகம் ஒன்று எனக்காகவே காத்துக்கொண்டிருக்க அதன் முதுகை முறிக்கும் இறுதித் துரும்பாக...நானும் பேத்தியும் அதில் ஏறிக்கொண்டோம்; மகள்,மருமகன்,பேரன் இன்னொரு ஒட்டகத்தில். 

அங்கே ஒட்டகச்சவாரி செய்கிறவர்களெல்லாம் ஆனந்தக் கிளர்ச்சியிலோ...அச்சத்தை மறைப்பதற்கோ ...கண்டபடி கூச்சலிட்டுக்கொண்டு வந்தபோதும்....எனக்கென்னவோ அந்த ஒட்டகச்சவாரி எந்த வகை அச்சத்தையும்,.கிளர்ச்சியையும் ஊட்டவில்லை என்பதே உண்மை.... !

சுற்றுப்புறத்தில் காண்பவைகளை முடிந்தவரை மனதுக்குள்ளும்,புகைப்படக்கருவி மூலமும்[ ’ஒட்டகத்தின் மேலிருந்து விழுந்து அதன் காலுக்கு இரையாகித் தொலையப் போகிறீர்கள்’ என்று கத்திக் கொண்டே வந்த மகளின் எச்சரிக்கையையும் மீறி] தொடர்ந்து பதிந்து கொண்டே வருவதில் மட்டுமே என் கவனம் லயித்துக் கிடந்தது.மங்கிவரும் கதிரவனின் பொன்னொளியில் ’’தங்கம் உருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி’’யதைப்போல [நன்றி;பாரதிதாசன்] மின்னும் மணல் பரப்பு...பல்வேறு உயரங்களில் தாழ்ந்தும் உயர்ந்தும் நிற்கும் மணல் மேடுகள்....இடையே சமவெளியாகவும்,உட்குழிந்தும் இருக்கும் மணல் வெளிகள் என்று காட்சியெல்லாம் மணலாகவே நிறைந்து துளும்ப .....என் பேரன் விளையாடித் தூற்றிய மணல் துகளும் என்னில் வந்து அப்பிக் கொண்டது.... ஒட்டகச் சவாரி ஐந்தே நிமிடங்களில் முடிந்து விட....மாலைச் சூரியன் மறையும் காட்சியைக்காண மணல் திட்டுக்களில் மக்கள் குவியத் தொடங்கியிருந்தனர்... மலை...கடல்...பாலை என எல்லா நிலப்பரப்புக்களிலுமே அஸ்தமனக்காட்சி அழகானதுதான்.
இரவுக்கூடாரங்களுக்கு மேல்
முழுகும் சூரியன்...


‘’செங்கதிர் மாணிக்கத்துச் செழும்பழம் முழுகும் மாலை’’
என்று அழகின் சிரிப்பில் பாரதிதாசன் சொல்லும் வருணனையை முழுவதும் உணர முடியும் சந்தர்ப்பங்கள் இவ்வாறானவையே......

மாலை மறையத் தொடங்கியதுமே மக்கள் கூட்டமும் கலையத் தொடங்க  வாகனநிறுத்தத்திற்கருகே தேநீர் குளிர்பானம் தண்ணீர் விற்பனைக்கடைகள் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தன...

சாம் மணல் திட்டுக்களிலிருந்து ஜெய்சால்மர் செல்லும் பாதையில் குல்தரா என்னும் கைவிடப்பட்ட கிராமம்[abandoned village] ஒன்றும் பார்க்கத் தகுந்த சுற்றுலா இடமாக இருப்பதை எங்கள் விடுதிக்காப்பாளர் கூறியிருந்தது நினைவுக்கு வந்ததால்...இரவு படர்வதற்குள் அதையும் காணும் ஆவலில் அப்போதைக்கு அந்தப்பாலை மண்ணிலிருந்து விடை பெற்றோம்...

[பயணம் தொடரும்]

இணைப்புக்கள்;
ஒரு பாலைப்பயணம்-1
ஒரு பாலைப்பயணம்-2

ஒரு பாலைப்பயணம்-2கோட்டை
பத்வா ஹவேலி

ஜெய்சால்மர் நகரின் பிரதானக் கவர்ச்சியாகச் சொல்லப்படுபவை கோட்டையை ஒட்டி ஆங்காங்கே காணப்படும் கலையழகு மிளிரும் பிரம்மாண்டமான மாளிகைகள். ஹவேலி என்ற சொல்லால் வழங்கப்படும் அவை 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை; ஜைன மதத்தைச் சேர்ந்த பத்வாக்கள் எனப்படும் மிகப்பெரிய தனவணிகர்களுக்குச் சொந்தமாக இருந்தவை.ராஜஸ்தானத்தில் இயல்பாகவே மிகுதியாகக்கிடைக்கும் மணல்கற்களையும் -sandstones-[மணல்மேடுகளும்,குன்றுகளுமே காலப்போக்கில் இறுகி மணல்கற்களாக,சலவைக்கற்களாக மாறுகின்றன] சலவைக்கற்களையும் கொண்டு இழைக்கப்பட்டிருக்கும் வசந்த மாளிகைகள் அவை .

18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜெய்சால்மர் நகரில் தங்கள் வர்த்தகத்தைத் தொடர முடியாத சிக்கல் ஏற்பட்டுத் தவிக்கும் நிலை பத்வாக்களுக்கு நேர்ந்தபோது அங்கிருந்த சமண ஆலயத்தில் பூசை செய்யும் குரு ஒருவரின் அறிவுரைப்படி அவர்கள் அந்நகரை விட்டு வெளியேறியதாகவும் ,பிறகு வெள்ளி,சரிகை,ஓபியம்[கஞ்சா போன்ற ஒருவகை போதைப்பொருள்] ஆகிய வணிகங்களின் வழியாகவும்,நிதிநிறுவனங்களை நடத்துவதன்  மூலமும் பெரும்செல்வந்தர்களாக உயர்நிலை அடைந்தபின் ஜெய்சால்மர் நகரின் பொருளாதாரத்தைச் சீர்படுத்துவதற்கென்றே அவர்கள் திரும்ப அழைக்கப்பட்டதாகவும் செய்திகள் வழங்கி வருகின்றன.

குறிப்பிட்ட காலகட்டம் வரை ஜெய்சால்மர் நகரம் முழுவதுமே கோட்டைக்குள் உள்ளடங்கியதாகத்தான் இருந்திருக்கிறது. பத்வாக்களில் மூத்தவரான குமன் சந்த் பத்வா[Ghuman Chand Patwa], தன் ஐந்து மகன்களுக்கும் மாளிகை -ஹவேலி- கட்ட முடிவு செய்தபோது கோட்டைக்குள் இடம் போதாது என்பதால், கோட்டைக்குக் கீழ்,கோட்டையை நோக்கியதாக அவற்றை அமைத்தார்.காலப்போக்கில் பல கைகள் மாறிப்போன அந்த மாளிகைகள் பழைய கலாசாரத்தைப் பறைசாற்றும்  எச்சங்களாக,சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்திழுக்கும் அருங்காட்சியகங்களாக மட்டுமே தற்போது விளங்கி வருகின்றன.

நாங்கள் சென்றது...அவ்வாறான ஹவேலிகளில் ஒன்றான 
பட்வோன்-கி-ஹவேலி. ஜெய்சால்மர் மாளிகைகளில் மிகப் பெரியதென்றும், மிகச் சிறப்பு வாய்ந்த‌ விரிவுபடுத்தப்பட்ட மாளிகை என்றும் சொல்லப்படும் இதன் அழகுபடுத்தப்பட்ட ஐந்து-மாடி வளாகத்தை முடிக்க ஐம்பது வருடங்கள் தேவைப்பட்டதாகக்கருதப்படுகிறது.

குறுகலான சந்துப்பகுதியில் அமைந்திருந்த அந்த மாளிகைக்கு முன் கலைப்பொருள்களையும்,ராஜஸ்தானிப்பாணியிலான தலைப்பா குல்லாய்,பைகள்,உடைகள் ஆகியவற்றை விற்கும் அங்காடிகள்...சுற்றுலா இடங்களுக்கே உரிய உள்நாட்டு,வெளிநாட்டுப்பயணிகளின் நெரிசல்....
உள்ளே செல்லவும்,படம் எடுக்கவும்  நுழைவுச்சீட்டுகள். ஜெய்ப்பூர் அரண்மனை போலவே இவைகளும் கூட அரசின் அல்லது தொல்பொருள்துறையின் கட்டுப்பாட்டில் இன்னும் வந்திராததால் தனியார் நிர்வாகத்தில் அவர்கள் வைத்ததே சட்டம் என்பதோடு...மட்டுமல்லாமல்...பயணிகளை உள்ளே சீராக அனுப்புவதிலும்,வெளியேற்றுவதிலும் கூடக்குழப்பம்தான்....!


நான்கு கைத் தாழ்வாரம் வைத்த பழங்கால வீடுகள் போலச் சதுரம் சதுரமாக அடுக்கடுக்கான 5 தளங்களோடு ஒடுக்கமாகவும்,உயரமாகவும் அமைந்திருந்தது அந்த ஹவேலி. 

பத்வாக்கள் வாழ்ந்த ராஜபோக வாழ்க்கைக்கு அடையாளமாக அவர்கள் உடுத்த ஆடை அணிகலன்கள்,பயன்படுத்திய சமையல் சாதனங்கள், 


போர்க்கருவிகள்,தளவாடங்கள்,சேகரித்திருக்கும் ஓவியங்கள்,படங்கள்,
பாலை மணலூடே குழலூதும் இசைக்கலைஞர்

மிகப்பெரிய ஹுக்கா குழல்
சிற்பங்கள்,வீட்டுக்குள்ளேயே கோயில்கள் என ஒவ்வொரு தளமும் ஒரு அருங்காட்சியகத்தின் பாணியிலேயே அமைந்திருந்தது....4,5 தளங்களுக்கு மேலேறிப்பார்த்தபோது கோட்டையின் காட்சி மிகத் தெளிவாகப்புலப்பட்டது.கோட்டையில் மியூசியமாக்கப்பட்டிருக்கும் ஒரு சில பகுதிகளைத் தவிரப் பிற பகுதிகளில் அரசுக்குடியிருப்புக்களும்,தனியார் குடியிருப்புக்களும் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டில் தற்போது உள்ளதாகக் கூடவந்த எங்கள் விருந்தினர் விடுதியின் காப்பாளர் கூறினார்.அது உண்மைதான் என்பதைக் கோட்டையை ஒட்டிய  கீழே உள்ள வீடுகளில் உலர்ந்து கொண்டிருந்த துணிகள் மெய்ப்பித்துக்கொண்டும் இருந்தன.தொல்பொருள்துறை இதில் ஏன் கருத்துச் செலுத்திக் காக்கத் தவறியது என்னும் கேள்விக்கு மட்டும் எங்குமே விடை கிடைக்கவில்லை.

பத்வா ஹவேலி மேல்தள உச்சியிலிருந்து....
தில்லி வந்தது முதல் கடந்த 6,7 ஆண்டுகளாக இது போன்ற அரண்மனைகள்,அருங்காட்சியகங்கள் போன்றவற்றையே மிகுதியாகப் பார்த்துப்பார்த்து அலுத்துப்போயிருந்த குழந்தைகள் இயற்கையான மணல் மேட்டுக்குப்போவது எப்போது என நச்சரிக்கத் தொடங்க....பாலைமணலிலிருந்து சூரிய அஸ்தமனம் காணும் அரிய காட்சியைத் தவற விட்டுவிடக்கூடாதே என்ற பதைப்பும் கூடவே சேர்ந்து கொள்ள.....ஜெய்சால்மரிலிருந்து கிட்டத்தட்ட 42 கி.மீ தொலைவில் இருப்பதும் தாவரங்கள் சிறிதும் அற்ற தார்ப்பாலை மணல்குன்றுகளுமான
சாம் மணல் திட்டுக்களை நோக்கி விரைந்தோம்.
சாம் மணல் திட்டு[நான் எடுத்த படம்]

[பயணம் தொடரும்..]

இணைப்பு;
ஒரு பாலைப்பயணம்-1
LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....