துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

26.2.21

சௌவாலி-மொழிபெயர்ப்புச்சிறுகதை.சொல்வனம் இணைய இதழில் வெளியாகியிருக்கும் என் மொழிபெயர்ப்புச்சிறுகதை.

வங்க மூலம்: மஹாஸ்வேதாதேவி


 விளிம்பு நிலையிலிருக்கும் மனிதர்கள், நகரத்தின் வெளியே ஒதுக்குப்புறமாக வாழ்ந்து வந்தார்கள். அந்த இடம் உயிரோட்டமுள்ள இரைச்சல் மிகுந்த பகுதி. குறுகிய சந்துகள், சின்னச் சின்ன வீடுகள். மரங்கள் சூழ்ந்தபடி அங்கும் இங்குமாய்ச் சிறு சிறு குளம் குட்டைகள். குடிசைகளுக்குப் பின்னால் மாட்டுத் தொழுவங்கள். சற்றுப் பெரிதாக இருந்த ஒரு குடிசையின் வாசற்படியில் உட்கார்ந்திருந்தாள் சௌவாலி. வயதாகியிருந்தாலும் அவள் இன்னும் தளர்ந்து போயிருக்கவில்லை. இளம் பழுப்பு நிறத்தில் இருந்த அவள், ஆங்காங்கே நரையோடியிருந்த தன் கூந்தலை நீளமாகப் பின்னித் தொங்க விட்டிருந்தாள். கறுப்பு வண்ண ரவிக்கை. பச்சை நிறத்தில் ’காக்ரா’பாவாடை. தோளின் ஒருபுறம் தொங்கிய மஞ்சள் வண்ணத் துப்பட்டாவால் தன் மார்பை மூடி அதன் நுனியை இடுப்பில் இறுகச் செருகியிருந்தாள்.

“என்ன மாஷி இது? இன்னுமா காத்திருக்கிறீர்கள்?’’ என்றாள் பக்கத்து வீட்டுப்பெண்.

“அவன் இன்னும் வரவில்லை’’

“அப்படியென்றால், சௌவால்யா இங்கே வருகிறானா என்ன?’’

“அப்படித்தான் சொல்லியிருக்கிறான்’’ 

“இதற்கு முன்னாலும் கூட இங்கே வந்திருக்கிறானல்லவா?’’ 

“சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவன் இங்கே வந்து கொண்டுதான் இருக்கிறான். இன்று கொஞ்சம் அதிக நேரம் உட்கார்ந்திருந்தான். ஆனால் ஒரு வார்த்தை கூடப் பேசவே இல்லை…இறுதியில்…, சரி, அது இருக்கட்டும், நீ போய் உன் வேலையைப்பார் ’’

“அஹானா திரும்பி வந்து விட்டாளா?”’

“ஹ்ம்.. அஹானா மட்டுமா..! அவளுடைய அம்மாவும் கூடத்தான் அங்கே போவதற்குத் துடித்தாள். அஹானா, வருண்யா யாருமே இன்னும் திரும்பி வரவில்லை. அவர்களெல்லாம் இறந்தவர்களுக்குச் செய்யப்படும் ஈமச்சடங்கை… அந்த மஹாதர்ப்பணத்தைப் பார்ப்பதற்காகப் போயிருக்கிறார்கள்.’’

“சரி.. நான் போகிறேன் அம்மா. இனிமேல்தான் தண்ணீர் எடுத்து வர வேண்டும்’’

“ நீ போய்க்கொள் அம்மா’’


சௌவால்யா முற்றத்தில் ஏறி வந்தான். சூரியன் மறையத் தொடங்கியிருந்தாலும் இன்னும் இருட்டு வந்திருக்கவில்லை. ஆஷாட மாதம் என்று சொல்லப்படும் ஆடிமாதத்தின் மாலைப்பொழுதுகள் நீளமானவை.

“அம்மா’’ என்றழைத்தான் சௌவால்யா.

“வா மகனே. கொஞ்சம் அப்படியே இரு. உன் கால்களைக் கழுவிக்கொள்ளத் தண்ணீர் ஊற்றுகிறேன்.’’

“வேண்டாம் அம்மா. நான் குளித்து விட்டேன்’’

“ஆமாம்.. நீ கட்டாயம் குளியலை முடித்திருக்கவேண்டும்.சரி,, வா, உள்ளே வந்து காய்ந்த உடைகளை அணிந்து கொண்டு சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொள்’’

“இரவு இங்கேயே தங்கி விடவா?’’

“அதுதான் நல்லது மகனே, உள்ளே வா’’

நல்ல விசாலமான குடிசை. ஜன்னல் வழியே வேம்பின் மணத்தைச் சுமந்து வரும் தென்றல் காற்று. வீட்டுக்குப் பின்னால் நிறைய வேப்ப மரங்களை வைத்து வளர்த்திருந்தாள் சௌவாலி. அவற்றோடு மா, நாவல் என்று வேறு சில பழ மரங்களையும் கூட. உறுதியான பச்சைப்பசேலென்ற அந்த மரங்கள் போர்வீரர் களைப்போல அந்தக் குடிசையைக் காவல் காத்துக்கொண்டிருந்தன.

சௌவால்யா அங்கிருந்த மரத்தாலான இருக்கையில் அமர்ந்து கொண்டான். சற்று உயரம் கூடுதலுள்ள இத்தகைய மரத்தாலான இருக்கைகளை நாடோடிகளாய்ச் செல்லும் வியாபாரிகளிடமிருந்து வாங்கியிருந்தாள் சௌவாலி. இனிப்பான லட்டு உருண்டைகள், நெய்யில் சுட்ட சோள ரொட்டி, தேன் முதலியவற்றை எடுத்துக்கொண்டு வந்த அவள்,

“ஏதாவது கொஞ்சம் சாப்பிடு மகனே’’ என்றாள்.

“நீங்கள்..’’

“நானும்தான்…! எனக்கென்ன வந்தது? நான் ஏன் சாப்பிடாமல் இருக்க வேண்டும்’’

“நான் தர்ப்பணம் செய்து விட்டு வந்திருக்கிறேன்… நீங்கள்…’’

சௌவாலி புன்னகையோடு பேசினாள்.

“நீ மகன் , உன் கடமையை நீ செய்திருக்கிறாய். முதல் உரிமையை இன்று அவர்கள் உனக்குக் கொடுத்தே ஆக வேண்டியிருந்தது. திருதராஷ்டிரரின் மகனான உன்னை அதைச் செய்யாமல் தடுத்திருந்தால் அவர்கள் தர்மத்துக்கு மாறானவர்களாக ஆகியிருப்பார்கள்.’’

சௌவால்யாவின் முடியும் நரைத்துக்கொண்டுதான் வந்தது. அவன் சௌவாலியின் மகன். இந்த வீட்டைப் பொறுத்தவரை அவன் யுயுத்சு இல்லை. சௌவால்யா !  யுயுத்சு என்ற அந்தப்பெயரைக் கேட்டாலே அவனுடைய தாய்க்கு சினம் குமுறிக்கொண்டு வந்துவிடும். அவன், யுயுத்சுதான்…! ஆனால் மகனுக்கு ஒரு பெயரை மட்டும் தந்து விட்டால் போதுமா, அதோடு எல்லாப் பொறுப்பும் முடிந்து விட்டதா என்ன?

சௌவாலி தன்னிடம் முதலில் பேசியதற்கு பதில் சொன்னான் சௌவால்யா.

“இல்லை அம்மா. யுதிஷ்டிரர் அதில் மிகவும் கவனமாக நடந்து கொண்டார்’

“ம்..பீமன்’’

“அவனைப்பற்றிப் பேசுவதில் என்ன பயன் இருக்கிறது?’’

“மகனே, குந்திக்கும் காந்தாரிக்கும் கூடவா நீ தர்ப்பணம் செய்தாய்?’’

“இல்லை அம்மா. அதற்கு நான் முயற்சித்திருந்தாலும் என் நாக்கு ஒத்துழைத்திருக்காது.’’

சௌவால்யா பெருமூச்சு விட்டபடி பேசினான்.

“நான் சுதந்திரமாய் சுவாசிக்கக்கூடிய ஒரே இடம் இதுதான். ஆமாம்.., அஹானாவும் வருண்யாவும் இன்னும் திரும்பி வரவில்லையே. நீங்கள் மட்டும் தனியாக..’’

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை மகனே. பக்கத்தில் குடியிருக்கும் எல்லா ஜனங்களுமே நல்லவர்கள்தான். நான் ஒரு குரல் கொடுத்தால் போதும், அப்படியே ஓடி வந்து விடுவார்கள். பாண்டவர்களின் வெற்றிக்குப் பிறகு நாம்…, சரி,போகட்டும்… இன்று நடந்ததெல்லாமே வெறும் கேலிக்கூத்துதான் இல்லையா? வெகு காலத்துக்கு முன்னால் அவர்களது வனவாசம், பிறகு, காட்டுத் தீயில் அவர்கள் இறந்தாகச் சொல்லப்பட்ட செய்திகள், அப்புறம்…இத்தனை நாட்கள்…, ஆமாம் இத்தனை நாட்களுக்குப் பிறகு ‘மஹாதர்ப்பணம்’ என்ற பெயரில் இப்படி ஒன்று !  நீ வேண்டுமால் பாரேன், யுதிஷ்டிரன் அவர்களது அஸ்தியை சேகரித்து ஆற்றில் விடப்போகிறான். அஹானாவும் வருண்யாவும் அதை வேடிக்கை பார்க்கத்தான் போயிருக்கிறார்கள்’’

“நான் என் தந்தையின் பக்கத்தில் கூடப் போனதில்லை, அவரை அப்பா என்று ஒருபோதும் கூப்பிட்டதும் இல்லை. ஆனால், இன்று நான் அவருக்குத் தர்ப்பணம் செய்து விட்டு வந்திருக்கிறேன்’’

“இல்லையென்றால் அவருடைய ஆன்மாவுக்கு முக்தியும் விடுதலையும் கிடைக்காதே?  தாதிபுத்ரா ! ஓர் அடிமையின் குழந்தை நீ..! ஆனால் இன்று இந்தத் தாதிபுத்திரன் வழியாகத்தான் அவருக்கு ஒரு மகன் கையிலிருந்து எள்ளும் தண்ணீரும் கிடைத்திருக்கிறது. ஹ்ம்…குந்தி…காந்தாரி ! இத்தனை வருடங்களில் காந்தாரி ஒரு தடவை கூட உன்னை ஒரு கௌரவனாக நினைத்ததே இல்லையே. அவள் எப்படி நினைப்பாள்? அவளைப் பொறுத்தவரை  நீ ஒரு தாதிபுத்திரன்தான்’’ 

சௌவால்யா இலேசாகப் புன்னகைத்தான்.

“நான் என் தந்தைக்கு மட்டும்தான் தர்ப்பணம் செய்வேன் என்றும் குந்திக்கோ காந்தாரிக்கோ செய்ய மாட்டேன் என்றும் அவர்களிடம் சொல்லி விட்டேன்.’’

“இதைக் கேட்கும்போது எனக்கு உண்மையிலேயே திருப்தியாக இருக்கிறதப்பா’’

“நான் அப்படிச்சொன்னதும் பாண்டவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். கடைசியாக வறண்ட குரலில் யுதிஷ்டிரர் என்னை அழைத்தார்.’திருதராஷ்டிரரின் மகனே ! நீ மனச்சாட்சியுள்ள ஒரு மனிதன் என்பது எனக்குத் தெரியும். நீ ஒரு நல்ல தாய்க்குப் பிறந்தவன்..’ என்றார்’’

“எனக்கு அவனை ஞாபகம் கூட இல்லை’’

“அம்மா! மூத்த பாண்டவரான அவர் எப்போதுமே மற்றவர்களிலிருந்து வேறுபட்டவர். ‘உனக்கு எது சரியென்று படுகிறதோ அதைச் செய்’ என்றார் அவர். நான்…, நான் என் தந்தைக்கு மட்டுமே தர்ப்பணம் செய்து முடித்தேன். நான் மட்டும் அதைச் செய்யாமல் விட்டுவிட்டால், பிற இறுதிக்கடன்களையெல்லாம் அவர்களால் தொடங்கியிருக்கவே முடியாது. அதன் பிறகு நான் அங்கிருந்து வந்து விட்டேன்’’

“நீ செய்தது சரிதான்…! ஆனால்… நீ அப்படிச் செய்யாமலே  போனாலும்தான் என்ன? அதனால் என்ன வந்தது? எப்படியோ நீ உன் கடமையைச் செய்தாய் ‘’

“ஆனால்..நீங்கள்..’’

“எனக்கு அப்படி எந்த ஒரு கடமையும் இல்லை மகனே. நான் ஒரு வைசிய குடும்பத்தில் பிறந்தவள். குழந்தைப்பருவம் முதலாகவே எங்களை அவர்களுக்குத் தாதிகளாக்கிக்கொண்டார்கள். காந்தாரி கருவுற்றிருந்தபோது நானும் உன்னைக் கருச் சுமந்திருந்தேன். நான் பட்ட துன்பங்களையெல்லாம் நீ பிறந்த உடனேயே நான் மறந்து விட்டேன். ஆமாம்…விதுரனுக்கு மட்டும் ஏன் அப்படிப்பட்ட ஒரு தனி மதிப்பு மகனே.. ? அவனும் கூட உன்னைப்போல ஒரு தாதிபுத்திரன்தானே, பணிப்பெண்ணின் மகன்தானே?’’

“அது எப்படியோ போகட்டும் அம்மா. என்னை நீங்கள் விட்டு விட்டுப் போனீர்களே? அது ஏன் அம்மா ? எதற்காக?’’

“என்னோடு நீயும் உடனிருக்க அவர்கள் சம்மதித்தவரை நான் அங்கேதான் இருந்தேன். அரச நியதிகளின்படி ஆண்குழந்தைகள் அதிக காலம் தாயுடன் விடப்படுவதில்லை. அவர்களுக்குப் பாலூட்டும் தாய்மார்கள் உண்டு, பணிப்பெண்கள்தான் அவர்களை வளர்ப்பார்கள். நான் என் அன்பையும் அக்கறையையும் உன் மீது பொழிந்தபடி உன்னைப் பத்திரமாக என்னோடு வைத்துக்கொண்டிருந்தேன்’’

“அப்புறம் ஏனம்மா என்னை விட்டுச் சென்றீர்கள்’’

“உனக்கு ஐந்து வயது கூட நிரம்பாத நிலையில் அவர்கள் உன்னை குருகுலத்துக்கு- உன் ஆசிரியர் இருக்கும் அந்த இடத்துக்கு- அனுப்பி விட்டார்கள்.. நான் அப்போது எப்படி அழுது கரைந்தேன் தெரியுமா சௌவால்யா? அரசிகளின் அந்தப்புரங்களில் வசிக்க பச்சைக் குழந்தைகளுக்குக்கூட அனுமதி இல்லை’’

“நானும் கூட அழுதேன் அம்மா, சுற்றுமுற்றும் உங்களைத் தேடிக்கொண்டே இருந்தேன். தாதிபுத்திரர்களுக்கென்று தனியாக  வேறொரு குருகுலம் இருந்து. அங்கேதான் நானும் முதலில் அனுப்பப்பட்டேன். படைக்கலப்பயிற்சி பெறுவதற்கான வயது வந்த பிறகு,…ஏதோ ஒரு காரணத்துக்காக கௌரவர்கள் பயிற்சி பெற்றுவந்த அந்த குருகுலத்துக்கே என்னையும் மாற்றி விட்டார்கள்’’ என்று மென்மையாகச் சொன்னான் சௌவால்யா.

“என்ன சொல்கிறாய் சௌவால்யா? அப்படியென்றால் நீயும் ஆயுதப்பயிற்சி எடுத்துக்கொண்டாயா என்ன?’’

“அவர்கள் எறியும் அம்புகளை வேறு யார் பொறுக்கிக் கொண்டு வருவார்கள்?  அவர்கள் வீழ்த்தும் பறவைகளை எடுத்துக்கொண்டு  வந்து தருவது யார்?’’

சௌவாலி பேச்சைத் தொடர்ந்தாள்..

“நீயும் குருகுலம் சென்றபிறகு நான் காந்தாரியிடம் சென்றேன். அடிமை நிலையிலிருந்து என்னை விடுவிக்குமாறு அவளிடம் கேட்டுக்கொண்டேன். அவள் எந்த பதிலும் சொல்லவில்லை. அரண்மனைப் பணிப்பெண்களான எங்களுக்குத் தலைவியாக இருந்த த்ரூவாவிடம் போய் நகரத்துக்கு வெளியே வாழ விரும்புவதாகச் சொன்னேன். என் மகன் என்னைத் தேடி வந்தால் என் இருப்பிடத்தை அவனிடம் தெரிவிக்குமாறும் கூறினேன்’’

“அப்புறம் வெளியே வந்து விட்டீர்கள்,,அப்படித்தானா’’

“வேறென்ன செய்வது? அப்போது அங்கே இருந்த தாதிப்பெண்களுக்கெல்லாம் இப்போது மிகவும் வயதாகி இருக்கும், ஆதரவற்ற நிலையிலேதான் அவர்கள் இருப்பார்கள். அரண்மனை அந்தப்புர மூலைகளில் இன்னும் கூட எங்காவது அவர்கள் படுத்துக் கிடக்கலாம். நான் வேறு எவருக்காகவும் காத்திருக்கவில்லை. உன் தந்தையிடம் கூட அது பற்றிச் சொல்லவில்லை. அவர் பலத்த கட்டுக் காவலுக்கிடையே – கழுகுக்கண் கொண்ட  காந்தாரியின் கண்காணிப்பில்  இருந்தார். அவரிடம் பேச வாய்ப்புக் கிடைத்திருந்தால் ‘நீங்கள் என் இளமைப்பருவத்தைக் கவர்ந்து கொண்டீர்கள், என் மகனைப் பறித்துக்கொண்டீர்கள், உங்கள் சொந்த இரத்தமும் சதையுமான அவனை ஒருபோதும் நீங்கள் அவ்வாறு கருதியதில்லை நீங்கள் உங்கள் துரியோதனனுடன் மட்டுமே இருந்து கொள்ளுங்கள், நான் போகிறேன்’ என்று நேருக்கு நேராகச் சொல்லியிருப்பேன்’’

“ஒரு தகப்பனின் அன்பு எப்படிப்பட்டதென்பதை ஒருபோதும் அறிந்திராதவன் நான்’’

“அவருக்கு எல்லாமே துரியோதனன் மட்டும்தான். த்ரூவாவிடம் சத்தமில்லாமல் எப்போதாவது ஒன்றிரண்டு முறை உன்னைப்பற்றிக் கேட்பார், அவ்வளவுதான். ஆனால்..சௌவால்யா, என் அன்பு மகனே, நான் உன்னைப்பற்றி நினைக்காமல் இருந்ததே இல்லை’’

நகரத்துக்கு வெளியே இருந்த எல்லோருக்குமே சௌவாலி யாரென்று  தெரியும். த்ரூவாவின் சகோதரன் திவ்யா அந்த சமயத்தில் அவளுக்குப் பெரும் உதவியாக இருந்தான். கௌரவனின் தாய் என்பதால் சௌவாலிக்கு எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை. அவள் வசிப்பதற்கு ஏற்ற வகையில் உடனே ஒரு குடிசை அமைத்துத் தரப்பட்டது. அஹானா, வருண்யா ஆகியோரின் பாட்டி சௌவாலியின்  பணிப்பெண்ணாக இருக்க வலிய முன்வந்தாள். ‘நீ இதை மறுத்து விட்டால் நான் எங்கே போவது’ என்று அவள் வற்புறுத்திச் சொன்னபிறகு அதை ஏற்றுக்கொண்டு அவளுக்கும் ஒரு குடிசை அமைத்துத் தரப்பட்டது.

“உங்களை மீண்டும் கண்டுபிடிப்பேன் என்று நான் நினைக்கவே இல்லை,’’ என்றான் சௌவால்யா.

“ஆனால்..நீதான் கண்டுபிடித்து விட்டாயே’’என்றாள் அவள்.

அம்மா தன்னை மறந்து விட்டாளோ என்று ரகசியமான ஏதோ ஒரு சோகத்தை மனதுக்குள் வளர்த்துக்கொண்டு வந்திருந்தான் சௌவால்யா. ஆனால் குழந்தைப்பருவத்தில் தான் விளையாடிய பொம்மைகள், குட்டிக்குட்டி வளையல்கள், தங்கத்தாலான சீப்பு என்று எல்லாவற்றையும் இத்தனை வருடங்களாக  அவள் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்ததைப் பார்த்தபோது அவனால் அவளைத் திரும்பிப்பார்த்து அம்மா என்று அழைக்காமல் இருக்க முடியவில்லை.

சௌவாலி தொடர்ந்து பேசினாள்..

“திருமணம் செய்து கொள்ளச்சொல்லி எத்தனை பேர் என்னிடம்  கேட்டார்கள் தெரியுமா. ‘நீ மிகவும் அழகாக இருக்கிறாய்,எங்களோடு வந்து விடு, உன்னை நாங்கள் தஷர்ணாவுக்கு அழைத்துச்செல்கிறோம்’’ என்று அங்குமிங்கும் போய் வந்து கொண்டிருக்கும் பல வியாபாரிகளும் என்னைக்கூப்பிட்டார்கள். ஆனால் தஷர்ணா எத்தனை தொலைவில் இருக்கிறது? நான் அங்கே போய்விட்டால் அவ்வளவுதான்.., அதற்குப்பிறகு உன்னைப்பற்றிய செய்தி கிடைக்க வழியே இல்லாமல் போகும். அதனால்..நான் காத்திருந்தேன் மகனே. உன்னைப்பற்றி திவ்யா கொண்டு  வரும் செய்திகளுக்காகக் காத்திருந்தேன். அஹானாவின் தாயும், அவளது இளைய மகளும் இங்கே என்னோடு இருந்தது, அலை பாய்ந்து கொண்டிருந்த என் மனதுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. அதற்கப்புறம்…, ம்..அதெல்லாம்தான் உனக்கே தெரியுமே’’

“அவர்கள் உங்களோடு இருப்பதில் நானும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தேன்.’’ 

“ஆமாம்..நீ ஏன் இன்னும் ஈரத் துணிகளை மாற்றிக் காய்ந்த துணிகளை உடுத்திக்கொள்ளாமல் இருக்கிறாய்?’’

“தேவையில்லை அம்மா. நான் போட்டிருப்பதே இப்போது காய்ந்து போய்விட்டது. வாருங்கள்,நாம் இரண்டு பேரும் உட்கார்ந்து கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருப்போம்.’’

சௌவாலி வெளியே ஒரு விளக்கை எடுத்துக்கொண்டு வந்தாள்.

“அஹானாவும் மற்றவர்களும் திரும்பி வந்தபின் நேரே தூங்கப்போய் விடுவார்கள்,’’ என்றாள்.

“இரவில் நீங்கள் மட்டும் தனியாகவா இருப்பீர்கள்? அது பாதுகாப்பானதுதானா?’’

“இந்தக் குடிசைக்குள் ஒரு திருடன் கூட வரத் துணிவதில்லை. யாரும் என்னைத் தொட மாட்டார்கள். ஒரு போர்வீரனின் தாய் என்ற மதிப்போடு எல்லோரும் என்னை நடத்தி வருகிறார்கள்.’’

“போரில் நான் பாண்டவர்களின் பக்கம் நின்றதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. கௌரவர்கள் எப்போதும் என்னைத் தாதிபுத்திரன் என்றுதான் அழைத்தார்கள்; அப்படியேதான் நடத்தவும் செய்தார்கள்.’’

சௌவாலி, மகனின் முன் நெற்றியை வருடித் தந்தாள்.

“யாருக்கு விருப்பமோ அவர்கள் தங்கள் பக்கம் சேர்ந்து கொள்ளலாம் என்றும், அவர்களைக் கௌரவத்தோடு நடத்துவதாகவும் யுதிஷ்டிரர் அறிவித்தபோது நான் எந்தத் தயக்கமும் இல்லாமல் அந்தப்பக்கம் தாண்டிப்போனேன்.. ஆனால்……யுயுத்சு – சே, அந்தப்பெயரைக்கூட நான் எப்படி வெறுக்கிறேன் – பாண்டவர்களின் பக்கம் போய்விட்டானாமே என்று அதற்குத்தான் ஊரில் எப்படிப்பட்ட ஏச்சு பேச்சுகள்! நான் அவர்களோடு சேரப்போவது தனக்குத் தெரியும் என்று துரியோதனன் வெறுப்போடு சொன்னான். 

அம்மா ! அப்போது எந்தப்பக்கம் ஜெயிக்கும், எந்தப்பக்கம் தோற்கும் என்பது யாருக்குமே தெரியாதுதான். ஆனால் ஒருக்கால் போர் செய்யும்போது இறக்க நேர்ந்தால் நான் அமைதியாக இறக்க முடியும் என்பதை மட்டும் அப்போது அறிந்திருந்தேன். நான் ஏன் அவர்களோடு சேர்ந்து கொண்டேன் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா அம்மா.’’

ஒருகாலத்தில் எழிலோடு விளங்கிய சௌவாலியின் இதழ் வெறுப்பில் சுளித்துக்கொண்டது.

“வேறென்ன? இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டே வந்திருப்பதும்…நீ சுமக்க நேர்ந்த அவமானங்களும்தான் அதற்குக் காரணம்,’’என்றாள் அவள்.

“ஆமாம் அம்மா. போரின்போது நான் தங்கள் தரப்பில் இருப்பதையோ, எதிரிகளின் பக்கம் போவதையோ கௌரவர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. அது எத்தனை கேவலம்? ஆனால் நீங்கள் அதை எப்படி எடுத்துக்கொள்வீர்களோ என்பதுதான் என் கவலை.’’

“நான் நிம்மதியாகத்தான் இருந்தேன்.’’

“ஆனால்…போருக்குப் பிறகு…..எரியூட்டும் இடத்தில்…!..அம்மா உண்மையில் சொல்லப்போனால் துரியோதனன் எப்படிப்பட்ட  மனிதனாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப்போகட்டும்…ஆனால் அவன்தான் எத்தனை காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லப்பட்டிருக்கிறான்?’’

“அது , போர் குழந்தாய்.! மூர்க்கமும் மிருகத்தனமும் இரண்டு பக்கங்களிலுமே இருந்தன. பீமனைப்பற்றி யோசித்துப்பார்’’

“முடிவில், பீமன்தான் தந்தையை எவ்வளவு சிறுமைப்படுத்தி விட்டான். போர் மனிதத்தன்மையையே களைந்தெடுத்து விடுகிறது. வெற்றி பெற்றவர்கள்தான் எப்படிப் பெருமையடித்துக்கொண்டார்கள்? எத்தனை ஆணவத்தோடு நடந்து கொண்டார்கள் அவர்கள்.’’

“ஆமாம் மகனே. எனக்கும் அது தெரியும். இப்போது நீ போய் உறங்கு.’’

“உங்களோடு ஒரு இரவு!’’

“நான் உன்னை என் பக்கத்தில் நெருக்கமாக அணைத்துக்கொள்ளப் போகிறேன் மகனே. குழந்தைப்பருவத்திலிருந்து நீ எனக்குக் கிடைக்கவே இல்லை.’’

“நான் இங்கே வழக்கமாக வருவது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் என்னைப் பரிகசிப்பார்கள். ஆண்மைக்குப் பொருந்தாத இப்படிப்பட்ட தேவைகளும் அம்மாவை எண்ணிக்கரைவதும் தாதிபுத்திரர்களுக்கு மட்டுமே உரிய வழக்கம் என்று எள்ளி நகையாடுவார்கள்.’’

“அது என்னவோ உண்மைதான். பொதுவான மனிதநியதியின்படி சாமானிய மக்களான நாமெல்லாம் பரிவு,  இரக்கம், அன்பு, ஆதரவு, காதல், கோபம், பொறாமை என்று இயல்பான, இயற்கையான உணர்ச்சிகளோடு இருக்கிறோம். ஆனால் அரசகுலநியதியின்படி பார்த்தால் இயற்கையான உணர்ச்சிகளைக்கூட அவர்கள் எப்படிக் கஷ்டப்பட்டுக்  கட்டுப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது உனக்குத் தெரியும்.’’

“ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான்.’’

“ஆனால்…அதுதான் அவர்களுடைய வீழ்ச்சியுமே கூட! அரசகுலத்தைச் சேர்ந்தவர்களின் அழிவுக்கு எப்போதுமே அதிகாரம், பேராசை, ஆணவம், பகைமை இவையெல்லாம்தான் காரணங்களாக இருக்கின்றன.’’

“உங்களோடு இப்படிப் பேசிக்கொண்டிருப்பது நன்றாக இருக்கிறது அம்மா.’’

“பொழுது விடிந்ததும் நீ போயாக வேண்டுமா மகனே?’’

“ஆமாம் அம்மா. ‘திருதராஷ்டிரரின் மகனே, தர்ப்பணம் சரியான முறையில் கொடுக்கப்பட்டு விட்டது என்பதை உன் தாயிடம் போய்ச்சொல். ஒருவேளை அது அவளுக்குத் தெரியாமல் இருக்கலாம்,’என்று யுதிஷ்டிரர் என்னிடம் சொல்லி அனுப்பினார்.’’

சௌவால்யா அப்படியே உறக்கத்தில் ஆழ்ந்தான். அவன் கரத்தைத் தூக்கிப் படுக்கை மீது வைத்தாள் சௌவாலி. அவனது தலைக்கடியில் வசதியாகத் தலையணையை நகர்த்தி வைத்தாள். அவனது தலைமுடிதான் எப்படி நரைத்துப்போய் விட்டது? அவனுடைய நெற்றியிலேதான் எத்தனை சுருக்கங்கள்? இவ்வளவு ஆண்டுகளாக அவன் அனுபவிக்க நேர்ந்த அவமதிப்புகள், இரக்கமற்ற கொடுமைகள், கீழ்மைகள் என்று எல்லாமாய்ச் சேர்ந்து உழுது விட்டுப்போயிருக்கும் அடையாளங்கள் அவை.

கதவை யாரோ மெள்ளத் தட்டினார்கள். அஹானாவாகத்தான் இருக்கும்.தனக்குத் துணையாகப் படுத்துக்கொள்ள வந்திருப்பாள். கதவை மிக இலேசாகத் திறந்தபடி,

“இன்று இரவு வேண்டாம் அஹானா. சௌவால்யா இங்கேதான் தூங்கிக்கொண்டிருக்கிறான்’’

“பாட்டி, அம்மா உங்களிடம்..’’

சௌவாலி வெளியே சென்று கதவைச் சார்த்தினாள்.

“போ கண்ணே. போய் உன் அம்மாவை அழைத்துக்கொண்டு வா’’

அஹானாவின் தாய் அங்கே வந்து சேர்ந்தாள்.

“நான் படுக்கப்போவதற்கு முன்பு உனக்கு நான் செய்ய வேண்டியது ஏதாவது இருக்கிறதா.’’

“எந்த மாதிரி..? குறிப்பாக எதைச் சொல்கிறாய் நீ’’

‘’“இறந்தவர்களுக்காகச் செய்யும் சடங்குகள் சம்பந்தமாகத்தான்!  பார்க்கப்போனால் தர்ப்பணம் செய்திருப்பவனே உன் மகன்தானே.’’

“பேசாமல் படுக்கப் போ சந்திரா. என்ன பெரிய இறுதிச்சடங்கு வேண்டியிருக்கிறது? அந்த திருதராஷ்டிரர்.., யார் அவர் எனக்கு?’’

“நீ என்ன சொல்கிறாய்.. அவர்தானே உன்னுடைய..’’

“என் மகனுக்குத் தந்தை, அவ்வளவுதான். என் மகனும் அந்தக் கடமையைச் செய்து முடித்து விட்டான்.’’

“ஆனாலும் கூட..’’

“இதோ பார், நான் வெறும் ஒரு தாதி,பணிப்பெண். அவருடைய மரணம் தொடர்பான இறுதிச்சடங்குக்கு உட்படுத்திக்கொள்ள  அது என்னைக் கட்டுப்படுத்த நானென்ன அவர் தாலி கட்டித் திருமணம் செய்து கொண்ட மனைவியா? அரண்மனையில் என்னைப்போல ஏராளமான எத்தனையோ பணிப்பெண்கள் வருவதும் போவதுமாய் இருப்போம்; குழந்தைகளைக் கருச்சுமப்போம்; அதற்காக இப்படிப்பட்ட சடங்குகளுக்கு உட்படுத்திக்கொள்வதோ தர்ப்பணம் செய்வதோ வெள்ளை ஆடை உடுப்பதோ சே… அதெல்லாம் எதற்கு?’’

சௌவாலியின் கண்கள் பிரகாசமாக ஜொலித்துக்கொண்டிருந்தன.

“நான் இனிப்பான லட்டு, நெய் வடியும் சோள ரொட்டி,   பொன்னிறமான தேன் என்று நன்றாக ஒரு விருந்துச் சாப்பாடு  சாப்பிடப்போகிறேன். வயிறு நிறைய சாப்பிட்டு முடித்ததும் என் மகனின் கையோடு கை கோர்த்துக்கொண்டு அமைதியாக – நிம்மதியாகத் தூங்கப்போகிறேன்.’’

சௌவாலி கதவை அடைத்து மூடினாள். இறந்து போன திருதராஷ்டிருரக்குத் தான் அடிபணிந்து விடவில்லை என்ற நினைப்பு அவளுக்கு ஆறுதலாக இருந்தது. அரண்மனை அந்தப்புரங்களில் இருக்கும் மற்ற தாதிகள் எல்லோரும் வெள்ளை ஆடை உடுத்தியபடி … அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மிகக் குறைந்த பட்ச உணவோடு இப்போது அங்கே சஞ்சரித்துக்கொண்டிருப்பார்கள்.

“இதற்காக சௌவாலி நரகத்துக்குப் போய்விட வேண்டியிருக்குமோ?’’

அல்லது சொர்க்கத்துக்கா?

சௌவாலி தனக்குள்ளேயே இப்படிச் சொல்லிக்கொண்டாள்.

“அதைப் பற்றியெல்லாம் நான் ஏன் கவலைப்பட வேண்டும். எனக்குப் பசிக்கிறது, நான் சாப்பிடுகிறேன். அவ்வளவுதான். என் சுய விருப்பத்தோடுதான் அந்த இடத்தை விட்டு விலகி வந்தேன். இன்றைக்கும் கூட எது சரியானது என்பதை என் சுயதர்மமே முடிவு செய்து கொள்ளட்டும். அதற்கே இதை விட்டு விடுகிறேன்’’

சௌவாலி , மகிழ்ச்சியோடு தன் முகம் கை கால்களைக் கழுவிக்கொண்டாள். இந்த ’நேர்மையான’ யுத்தத்தைப் பற்றி கிருஷ்ண துவைபாயன வியாசர் எழுதப்போவதாய்ச் சொல்லிக்கொள்கிறார்கள்…

எழுதி விட்டுப்போகட்டுமே! அதில் எந்த ஓர் இடத்திலும் தன் பெயர் குறிப்பிடப்படுவதில் கூட சௌவாலிக்கு விருப்பம் இல்லை.

அவளது மகன் ஒரு முட்டாள். அவனும் கூட சாமானிய மக்களில் ஒருவன்தான் என்றபோதும் அரசகுலத்துக்குரிய நெறிகளையும் நியமங்களையும் போய்க் கடைப்பிடித்துக்கொண்டிருக்கிறான். 

அவள் தனக்குள் இவ்வாறு நினைத்துக்கொண்டாள்.

“நீ எதையாவது கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் உன் தாயிடமிருந்து அதைக்கற்றுக்கொள். அங்கே அரண்மனையில் நான் ஒன்றுமில்லாத வெறும் பணிப்பெண்ணாகத்தான் இருந்தேன். இங்கே சாதாரண மக்களுக்கு நடுவே சுதந்திரமான ஒரு மனுஷியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்’

அவள் சாப்பிடத் தொடங்கினாள். அவள் சமைத்த உணவு இன்றைய தினத்தைப்போல அவளுக்கு இதுவரை இத்தனை ருசியாக ஒருபோதும் இருந்தில்லை. 

பாண்டவர்களுமே கூடத் தங்களில் ஒருவனாகத் தன்னை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை இந்த சௌவால்யா எப்போதுதான் உணர்ந்து கொள்ளப்போகிறான்…?

***

குறிப்பு: 

காந்தாரி கருவுற்றிருந்த நேரத்தில் திருதராஷ்டிரனின் பணிப்பெண்ணாக ஒரு வைசியகுலப்பெண் இருந்தாள்; அவள் வழியே பிறந்தவனே யுயுத்சு.–மஹாபாரதா சரன்யுபாத், ராஜ்சேகர் பாசு.

யுயுத்சுவின் தாய் சௌவாலி — பௌர்ணிக் அபிதான், சுதின்சந்திர சர்க்கார்

5.2.21

’தடங்கள்’ மதிப்புரை-கல்கி இதழில்..

07.02.21 கல்கி வார இதழில் வெளியாகியிருக்கும் தடங்கள் மதிப்புரை


 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....