துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

21.7.14

ஆடிப் பாவை போல

சங்கச் சமூகத்தில் தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தைப் பற்றித் தலைவி உட்படப் பெரிதாக எவரும் அலட்டிக் கொள்வதில்லை; பரத்தமைஒழுக்கம் ன்பதாக- ஒழுக்கம் என்ற சொல்லாலேயே அதைக் குறிப்பிடும் அளவுக்கு மக்களின் அன்றாட வாழ்வில் .எந்த மனத்தடையும் இன்றி இயல்பாக.ஏற்கப்பட்ட ஒரு சமூக நிறுவனமாகவே அது இருந்து வந்திருக்கிறது.
இற்பரத்தை..சேரிப் பரத்தை என்றெல்லாம் சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கும் குறிப்புக்கள்,பரத்தையர் வீதி பற்றிய செய்திகள் ஆகியவை இதற்கான சான்றுகள்.

இவையனைத்தும் ஒரு புறமிருக்க...
பரத்தையாக வாழ நேர்ந்த ஒரு பெண்ணின் மன நிலை எப்படி இருந்திருக்கிறது..,
அவளது அந்தரங்கம் இதை எப்படி உள் வாங்கிக் கொண்டிருக்கிறது,
என்னதான் அது ஒரு சமூக வழக்கமாகி நிலைபெற்றுப் போயிருந்தாலும் அவளது ஆன்மத் தவிப்பு எத்தகையதாக இருந்திருக்கிறது..
என்பது குறித்த உணர்வுகளையும் மிக நுட்பமாகச் சில சங்கப் பாடல்கள் தொட்டுச் செல்லாமல் இல்லை.

குறுந்தொகையில் இடம் பெறும் ஆலங்குடி வங்கனார் என்னும் புலவரின் கீழ்க் காணும் பாடல் அத்தகையது.
கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம் 
  பழன வாளை கதூஉம் ஊரன் 
  எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
  கையும் காலும் தூக்கத் தூக்கும்
  ஆடிப் பாவை போல
  மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே
’ 
-ஆலங்குடி வங்கனார் (குறுந்தொகை-8)


’’கையும் காலும் தூக்கத் தூக்கும்
  ஆடிப் பாவை ’’
இது,மருதத் திணையில் அமையும் பாடல்.
மருதத்தின் உரிப் பொருள் ஊடலும் ஊடல் நிமித்தமும்.
(நிமித்தம் என்பது,சார்ந்தது-ஊடல் தொடர்பானது என்று பொருள்)
செல்வ வளம் மிகுந்த மருதநிலத்தில் பிற நிலங்களைக் காட்டிலும் பரத்தமை ஒழுக்கம் கூடுதலாக இருந்த காரணத்தாலேயே
(சங்கத்தைத் தொடர்ந்த சிலம்பின் காலத்தில் காவிரிக் கரையின் செழுமையிலேதான் கரை புரண்டு ஓடியிருக்கிறது பரத்தமை)
தலைவியின் ஊடலும் கூடுதலாகிறது.
அதனாலேயே மருத உரிப் பொருளாகவும் அது ஆகிறது.

குறிப்பிட்ட இந்தக் குறுந்தொகைப்பாடல் பரத்தையின் கூற்றாகச் சொல்லப்படுகிறது.
தலைவி தன்னைப் பழித்தாள் என்பதைக் கேட்ட பரத்தை தலைவனை எள்ளிநகையாடுவது போன்ற தொனியில் மறைந்தபடி..தன் ஆற்றாமையைச் சொற்களில் வடிக்கிறாள்.

மருதநில வயல் வரப்புகளில் உள்ள மாமரங்களில் இருந்து தானாய்க் கனிந்து கீழே விழுகிற மாங்கனிகளை,வயல்களின் அருகிலுள்ள பொய்கைகளிலுள்ள வாளை மீன்கள் கவ்வும் ஊரைச் சேர்ந்தவன் தலைவன் என்ற முன் குறிப்புடன் தொடங்குகிறது பாடல்.
’’கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉம் ஊரன்’’
ஊரன் என்பது மருதநிலத் தலைவனுக்கு அளிக்கப்படும் சுட்டுப் பெயர்.
இந்த வரிகளில் சங்கப் பாடல்களுக்கே உரிய உள்ளுறை பொதிந்து கிடக்கிறது.
வயல் வரப்பு என்பது நெறிப்படுத்தப்பட்ட இல் வாழ்வு.
அதிலிருந்து தானாக விலகி வழுவிப் போகும் தலைவனை- மாம்பழத்தைக் கவ்வும் வாளை மீன்களைப் போலத் தங்கள் பிடிக்குள் இறுக்கிக் கொள்கிறார்கள் பரத்தையர்கள்.
அவர்களாக அவனைத் தேடிச் செல்வதில்லை.
தானாய்க் கனிந்து கீழே உதிரும் பழத்தைப் போல அவனாகவே அவர்களிடம் வசப்படுகிறான் என்கிறது பாடல்.
அடுத்தாற்போல எம்மில்,தம்மில் என்று ஒரு முரணைச் சுட்டுகிறாள் பரத்தை.
எம் இல் என்பது, பரத்தையர் இல்லம்.
தம் இல் என்பது,தலைவன் தன் மனைவியோடு கூடி வாழும் வீடு.
எங்கள் வீட்டில் எங்களோடு கூடியிருக்கையில் தன் வாய் சாதுரியத்தால் எங்களைப் புகழ்ந்து பேசியும் தன்னைப் பற்றிய பெருமிதத்தை வெளிக் காட்டியும் ...
’’எம்மி(ல் )ற் பெருமொழி கூ’’றுபவனாக நடந்து கொள்கிறான் அவன்..
எங்களுடன் இருக்கையில் மேற்படி முகம் காட்டித் தன் ஆண்மையின் கம்பீரத்தை வெளிப்படுத்தும் தலைவன் தனது இல்லத்துக்குச் சென்றதும் அடியோடு மாறிப்போய் விடுகிறான்..
தன் மனைவி என்ன சொன்னாலும் அதை உடனடியாகச் செய்து முடிக்க ஆயத்தமாகி விடுகிறான் அவன்..
கண்ணாடியில் தெரியும் நமது பிம்பம் நாம் செய்வதையெல்லாம் செய்வதைப்போல அவள் சொன்னபடியெல்லாம் நடந்து கொண்டு-
அவள் ஆட்டுவிக்கும் ஒரு பொம்மையைப் போலவே ஆகி விடுகிறான் அவன்.
இதை,
’’தம்மி( ல்)ற் கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே’
என்னும் வரிகளின் மூலம் இகழ்ச்சியாக..முன் வைக்கிறாள் அவள்.
பொதுவாக இப்பாடலை மேற்கோள் காட்டும் கட்டுரைகள்,நூல்கள்(மற்றும் வகுப்பெடுக்கும் பேராசிரியர்களும் கூடத்தான்)இதிலுள்ள நகைச் சுவையைச் சுட்டிக் காட்டுவதோடு வேலை முடிந்து விட்டதாக நினைக்கிறார்களே தவிரப் பரத்தையாக வாழ நேர்ந்த ஒரு பெண்ணின் ஆழ்மனச் சோகமும்,அவளுக்குள் ஏற்பட்டுப் போயிருக்கும் உட்காயமும் இதில் பதிவாகியிருப்பதைப் பற்றி எவரும் அக்கறை கொள்வதில்லை.

இந்தச் சங்கப் பாடலுக்குள்- ’’மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே’’என்னும் உச்ச வரிகளுக்குள் தலைமுறை தலைமுறையாய்ச் சொல்லப்படாது போன பெண்ணின் சோகமல்லவா புதையுண்டு கிடக்கிறது?
இப் பாடலில் பரத்தை தலைவனை நையாண்டி செய்கிறாள் என்பது உண்மைதான்..
ஆனாலும் இதிலுள்ள எள்ளல் ஒரு புறம் இருக்க.,.இதன் பின்னணியிலுள்ள ஆற்றாமையே அவளது அடிமன ஆழத்தின் பதிவாக வெளிப்படுகிறது.
தலைவியிடம் கிடைக்காத தோழமையையும்,கலை ஆர்வத்துக்கான வடிகால்களையும் நுகர மட்டும் பரத்தையிடம் சென்றாலும்,தலைவன் தரும் முறையான அங்கீகாரம் தலைவிக்கு மட்டும்தான்!.
அதற்கான காரணம் அவள்,அவனது ’’புதல்வன் தாய்’’என்பதே!. .
அவனுக்குச் சட்ட பூர்வமான வாரிசைப் பெற்றுத் தரும் அவளே அவனுக்கு நிரந்தரமானவள்.
’பூத்த கரும்பில் காய்த்த நெல்லில் கழனி ஊரன்’
என மற்றொரு சங்க அகப்பாடலும் தலைவியைக் 
காய்த்த நெல்லாகவும்(குழந்தைப் பேற்றினால்)
பரத்தையைப் பூத்த கரும்பாகவும் சுட்டுவதைக் காண முடியும்.

ஏதோ ஒரு வகையில் இரு பெண்களையும் சுரண்டலுக்கு உள்ளாக்கித்தான் தலைவன் பொழுதை ஓட்டிக் கொண்டிருக்கிறான் என்றபோதும் 
புதல்வனுக்குத் தாயாகும் பேறும் அதனால் கிடைக்கக் கூடிய சமூக அங்கீகாரமும் தனக்குக் கிடைக்காமல் தவறிப் போய்விடுகிறதே என்ற பரத்தைப் பெண்ணின் அடிமனப் பொருமலே இப் பாடலில் வெளிப்பாடு கொண்டிருக்கிறது.


12.7.14

எண்களின் உலகில்....


’’சராசரி மனித வாழ்விலிருந்து மேதைகளின் அறிகுறிகளோடு சிலர் எழுந்து வருகையில் அவர்களை உரிய முறையில் அங்கீகரிக்க வேண்டுமென்பதே ’ராமானுஜ’னும் ‘பாரதி’யும்  அளிக்க எண்ணும் மெய்யான தூண்டுதல்.’’

ஒற்றை இலக்கை மட்டுமே குறியாய்க்கொண்டு அதிலேயே முழுவதுமாய்ச் சஞ்சாரம் செய்து…… அதன் உச்சபட்ச சாத்தியங்களை எட்டத் தவிக்கும் மனித மேதைகள் எங்கோ…..எப்பொழுதோ சுயம்புவாய் ஜனிக்கிறார்கள்; ஆனால் நடப்பியல் வாழ்க்கை அவர்களையும் மண்ணுக்கிழுத்து சராசரிகளில் ஒருவராக்கிவிடத் துடிக்கிறது,அந்த நேரத்தில் அவர்களுக்குள் விளையும் சீற்றமும் சலிப்பும் ஆயாசமும் சொல்லுக்கடங்காதவை.

உப்புக்கும் புளிக்குமாய் அன்றாட வாழ்வு தன்னை அலைக்கழிக்கிறதே என்றும் ’’என்னைக் கவலைகள் தின்னத் தகாதெ’’ன்றும் பாரதி துடித்தது அதனாலேதான். அவனுக்குத் தன்னிடமிருந்த மேன்மை, தன்னுள் குடி கொண்டிருந்த கனல் இன்னவென்று புரிந்திருந்தது. அது, தன்னகங்காரமில்லை; தன்னைப்பற்றிய புரிதல். தன்னிடமிருந்து வர வேண்டிய கூடுதல் விளைச்சலைக் கொட்ட முடியாதபடி அன்றாட வாழ்க்கை நடைமுறைகள் போடும் தடைகளை விலக்கவே பராசக்தியை நோக்கி அவ்வாறு அவன் கதறினான்…

பாரதி போலவே தன்னிடமிருந்து பீறிடத் துடிக்கும் அளப்பரிய ஆற்றலின் வீச்சை…அதன் முழுப் பரிமாணத்தோடு புரிந்து வைத்திருந்த மற்றொரு மனிதர் கணித மேதை ராமானுஜம். அதை உரிய முறையில் வெளிப்படுத்தும் வாய்ப்புக் கிடைக்கும் வரை அவர் பித்தாகிப்போகிறார். வாய்ப்புக் கிட்டுகிற தருணத்திலோ மனம் வேண்டியபடி செல்லும் உடல் வாய்க்காமல் போகிறது. வறுமையும் வளமான ஆகாரமின்மையும் நோயின் பிடியில் சிக்க வைத்து அவரைக்காவு கொள்கின்றன. 

கணிதத்தையும் கவிதையையும் பாரதியும்,ராமானுஜமும் - அவரவர் வாழ்வில் எதிர்முனையில் நிறுத்தியிருந்தாலும் அவர்களின் வாழ்க்கைப் போக்கை ஒரு சரட்டில் இணைப்பது இந்த ஒற்றுமைக்கூறுதான். தங்கள் மேதமைக்கு உரிய இடத்தில் - சரியான வேளையில் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பில்லாத ஒரு சமூக அமைப்பின் குரூரமான போக்குக்குக் கள பலிகளாய் நம் முன் நிற்பவர்களும் அவர்கள்தான்.

தான் விரும்பும் எண்களின் உலகத்தில் மட்டுமே வாழ வேண்டுமென்ற தீராத ஏக்கம் - அதை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் விளையும் நடப்பியல் வாழ்க்கைச் சிக்கல்கள், அதனால் விளையும் மன உளைச்சல்கள் இவற்றை மட்டுமே மிகுதியாக முன்னிலைப்படுத்தி ராமானுஜத்தின் வாழ்வைப் படமாக்கியிருப்பதற்காகவே திரு ஞான ராஜசேகரன் அவர்களைப் பாராட்டலாம். ஒரு கணித விற்பன்னரின் வாழ்வைத் திரையில் காட்டுகையில் அவர் வழங்கிவிட்டுப்போயிருக்கும் சிக்கலான கணிதத் தேற்றங்களாலும் சூத்திரங்களாலும் பார்வையாளர்களை அலுப்படையச்செய்து விடாமல் அவரது வாழ்விலிருந்து பெற்றாக வேண்டிய மையச்செய்தியை மட்டுமே இலக்காக்கியபடி திரைப்படம் பயணிப்பது மிகவும் பொருத்தமானது. கணிதம் தெரியாத..அல்லது கணிதத்தில் ஆர்வமில்லாத ஒரு பார்வையாளனும் கூட ராமானுஜத்தின் வாழ்விலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய செய்தியும் சாரமும் அதுவாக மட்டுமே இருக்க முடியும்.[படம் முடிந்தபின் ராமானுஜ கணிதம் குறித்த பொதுவான ஆர்வமூட்டும் செய்திகள் சிறு குறிப்புக்களாக வந்து செல்கின்றன]

ராமானுஜத்தின் மேதைக்கிறுக்குகளையும்,மன உளைச்சல்களையும் உள்வாங்கிச்செய்திருக்கிறார் அபிநவ்; குட்டி ராமானுஜமும் பாராட்டுக்குரியவர்.


தேசிய விருது பெற்றிருக்கும் சுகாசினி மிகை நடிப்பை நோக்கிச்செல்கிறாரோ என்ற உணர்வை இந்தப்படத்தின் வழி தோற்றுவித்திருப்பது வருத்தமளிக்கிறது.


எல்லாக் கல்விநிலையங்களிலும் இந்தத் திரைப்படம் திரையிடப்பட வேண்டுமென்பதோ, இதற்கு வரிவிலக்கும் விருதும் அளிக்கப்பட வேண்டுமென்பதோ இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட வேண்டியவை. சராசரி மனித வாழ்விலிருந்து இத்தகைய மேதைகளின் அறிகுறிகளோடு சிலர் எழுந்து வருகையில் அவர்களை உரிய முறையில் அங்கீகரிக்க வேண்டுமென்பதே ’ராமானுஜ’னும் ‘பாரதி’யும்  அளிக்க எண்ணும் மெய்யான தூண்டுதல்.


10.7.14

சில சிறுகதைகள்,சில செய்திகள்

1.‘கன்னிமை’சிறுகதை வங்க மொழியில்

மிகச்சிறந்த வங்கமொழி மொழிபெயர்ப்பாளரான திரு கல்கத்தா சு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் புதுதில்லியில் இருந்தபோது எனக்கு அறிமுகமானவர்; என் மீதும் என் படைப்புக்கள் மற்றும் மொழிபெயர்ப்புக்கள் மீதும் ஒரு தகப்பனைப்போன்ற கரிசனம் காட்டி என்னை ஊக்கப்படுத்துபவர்.அவர் வழியாகவே மகாஸ்வேதா தேவியின் ‘1084இன் அம்மா’ மற்றும் அதீன் பந்த்யோபாத்யாயாவின் ‘நீலகண்டப்பறவை’போன்ற மிகச்சிறந்த வங்க மொழிப் படைப்புக்களின் வாசிப்பனுபவத்தை நான் பெற்றேன். 

தில்லியிலிருந்து வடக்கு வாசல் இலக்கிய இதழ் வந்து கொண்டிருந்தபோது திரு கிருஷ்ணமூர்த்தியின் தன் வரலாற்றுப்படைப்பான ‘நான் கடந்து வந்த பாதை’நூல் குறித்து நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்...
இலக்கிய சிந்தனை பரிசுக்குத் தேர்வாகும் பல தகுதிகள் அந்நூலுக்குத் தானாகவே இருந்தும் அது குறித்து நான் எழுதிய அந்தக்  கட்டுரையே அப்பரிசுக்கு வித்தாயிற்று என்று என்னைப்பார்க்கும்போதெல்லாம்...சொல்லிச்சொல்லி மகிழும் எளிய தற்பெருமை அற்ற குணம் அவருடையது. அவரது பரந்த மொழிபெயர்ப்பு அனுபவத்துக்கு முன்பு, அப்போதுதான் அந்தத் துறையில் கால் பதித்திருந்த என்னைத் தனக்கு நிகராக நடத்தும் பண்பாளரான அவர், ஆண்டுக்கு ஒரு முறை தில்லியில் உள்ள தன் சகோதரி இல்லத்துக்கு வரும்போதெல்லாம் தொலைபேசியில் அழைத்து நேரில் வரச்சொல்லி என்னைச்சந்திக்காமல் போனதில்லை.

இன்று அவர் சென்னையிலும் நான் கோவையிலுமாய் இருக்கும் நிலை; அவரது முதுமை காரணமாய்க் கடும் நோவுகளுக்கு ஆட்பட்டிருக்கும் சூழலிலும் கூட தொலைபேசியில் என்னிடம் நலம் விசாரித்து நீண்ட கடிதங்கள் எழுத அவர் தவறுவதில்லை.அண்மையில் அவரிடமிருந்து வந்த கடிதமும் புத்தகப்பொதியும் என்னை இனம் விளங்காத மகிழ்ச்சிப்பரவசத்திலும், ஆனந்த அதிர்ச்சியிலும் ஆழ்த்தி விட்டன.
வங்க மொழியில் வெளியாகும் ’ரவிவாஸர்’இதழில் என் ‘கன்னிமை’சிறுகதை யை மொழிபெயர்ப்புச்செய்து அந்த இதழின் பிரதியையும் எனக்கு அனுப்பி வைத்திருந்தார் அவர்.  எப்போதோ...என்னிடம் அவர் சில கதைகளைக்கேட்டிருந்த நினைவு மட்டும்  இருந்ததே தவிர அவர் அதை ஒரு பொருட்டாக எண்ணிச்செயல்படுத்தியும் காட்டியது என்னை மெய்சிலிர்க்கச்செய்து விட்டது.

புத்தகத்தோடு கூடவே அவர் கைப்பட விரிவான ஒரு கடிதம், அதில்,
‘’இதழின் ஆசிரியர் ஒரு தவறு செய்து விட்டார்;கதையின் தலைப்பில் என் பெயரை [கிருஷ்ணமூர்த்தியின் பெயர்] அச்சிட்டு விட்டு அதன் இறுதியில் இது எம்.ஏ.சுசீலாவின் கன்னிமை சிறுகதையின் வங்காள மொழிபெயர்ப்பு என்று அச்சிட்டிருக்கிறார். நான் இந்தத் தவறுக்காக அவரைக் கடிந்து கொண்டேன்’’
என்ற குறிப்புடன்...! இலக்கியத் திருட்டுக்கள் எப்படி எப்படியெல்லாமோ மலிந்து வரும் இந்த நாளில் இவ்வாறான ஒரு மேன்மகன்...

வயதின் தளர்ச்சி தன் இலக்கிய ஆர்வத்துக்கும் உழைப்புக்கும் தடையில்லை என்பதை ஒவ்வொரு கணமும் மெய்ப்பித்துக்கொண்டே இருக்கும் திரு கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களே நான் சோர்ந்து போகும் நேரங்களில் எனக்குப்புத்துயிர் ஊட்டி என்னை விழித்துக் கொள்ளச் செய்கிறார்கள். அவர் மொழிபெயர்க்குமளவு என் சிறுகதைக்குத் தகுதி உண்டா என்ற நெருடல் உள்ளத்தின் ஒரு மூலையில் தலைகாட்டினாலும் அந்த எளிய படைப்புக்குத் தாகூரின்  வங்க மாநிலத்தில் நிலையான ஓரிடத்தைத் தன் மொழிபெயர்ப்பால் பெற்றுத் தந்திருக்கும் அவருக்கு நான் என்றென்றும் நன்றிக்கடன்பட்டவள் என்பதை உணர்ச்சிப்பெருக்கோடு இங்கே பதிவு செய்கிறேன்.

திரு கிருஷ்ணமூர்த்தி குறித்து மேலும் அறிய எண்ணுபவர்கள் 

திரு ஜெயமோகன் தளத்தில் வெளியாகியிருக்கும் 

சு.கிருஷ்ணமூர்த்தி எனும் தனிநபர் இயக்கம்

நேற்றைய புதுவெள்ளம்,என்ற இரு கட்டுரைகளை வாசிக்கலாம்..
’உழைப்பின் தன்வரலாறு’என்ற என் கட்டுரை இணைப்பையும் காணலாம்.

2."காலத்தை வென்ற கதைகளில்  'ஊர்மிளை' சிறுகதை 

குங்குமம் தோழி இணைய இதழ் , "காலத்தை வென்ற கதைகள்" என்ற தலைப்பில்  பெண் எழுத்தாளர்களின் சிறுகதை ஆக்கங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் நான் எழுதி 'தினமணி கதிர்'இதழில் முன்பு வெளிவந்த 'ஊர்மிளை' சிறுகதை அத்தளத்தில் மீள்பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது.

குறிப்பிட்ட சிறுகதையைத் தேர்வு செய்து என் ஒப்புதலோடு வெளியிட. முன் வந்ததுடன் தரமான ஆக்கங்களைத் தேர்வு செய்வதிலும் ஆர்வம் காட்டி வரும் நண்பர்,குறிப்பிட்ட இணைய இதழ்ப்பகுதியின் பொறுப்பாளர் திரு பாலுசத்யாவுக்கு என் நன்றி.

இணைப்பு

காலத்தை வென்ற கதைகள்-33


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....