துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

14.10.12

கன்னிமை

னம் புரியாத இனிமையான ஓர் உணர்வு அடிவயிற்றிலிருந்து பீறிட்டுக் கிளம்பி உடல் முழுவதும் வினோதமாக..வித்தியாசமாக வியாபிப்பதை உணர்கிறாள் கல்யாணி.பரவசமா,பயமா,அதிர்ச்சியா ஆனந்தமா என்று பிரித்துப்பார்க்க முடியாதபடி தன்னை ஆட்கொண்டு கிளர்ச்சியூட்டும் அந்த உணர்வுக்கான காரணம்...அதுதானா?அதுவேதானா?அதுதானென்றால் இத்தனை சீக்கிரத்திலா?ஆனாலும் காலண்டர் பொய் சொல்லுமா?ஆண்டுக்கணக்கில் சிலரை ஏங்க விடுகிற இந்த பாக்கியம் தனக்கு அதற்குள்ளாகவா சாத்தியமாகியிருக்கிறது..? மனசுக்குள் ஆயிரம் குடைச்சல்கள் அரித்தாலும் இதைப்போய் வெளிப்படையாக யாரிடம் சொல்லி விடை கேட்பது..

‘நீயே ஒரு குழந்தை...உனக்கு அதுக்குள்ளே ஒரு குழந்தையா..’
-காதருகே அம்மா கேட்பது போன்ற கற்பனையில் அகம் மலர்ந்து போய் முகத்திலும் புன்னகைப்பூவை அரும்ப விட்டு விடுகிறவள் தானாகச் சிரித்துக் கொண்டதை யாரும் பார்த்து விட்டார்களோ என்ற பயத்தில் உதட்டுக்குள்ளேயே அதை மடிய விடுகிறாள்.

இந்த விஷயத்தை யாருடனாவது பகிர்ந்தே தீர வேண்டும் என்கிற தாபமும்,யாருடன் பகிர்வது என்ற தயக்கமும் ஒரே நேரத்தில் அவளுக்குள் ஜனிக்கின்றன.திருமணம் முடிந்த கையோடு உறவினர் வீட்டு விருந்துகள்,சுற்றுப்பயணங்கள் எல்லாம் முடிந்து இந்த வீட்டில் அவள் நிலையாகக் காலூன்றி இருக்கிற இந்தக் கொஞ்ச நாட்களில்...அவளது வேர்கள் இன்னும் அந்த மண்ணில் முழுமையாக ஊன்றப்படாத வேளையில் யாருடனும் சகஜபாவம் இன்னும் ஸ்தாபிக்கப்பட்டிராத இந்த நிலையில் ....தனக்கு ஏன் இந்த அவசரம் என்று ஒருகணம் அவள் தன் மீதே கூடக் கோபப்படுகிறாள்.

அந்த வீட்டின் நிலையான உறுப்பினர்கள் அவள்,கணவன் ரகு,மாமியார்..இவர்கள் மட்டுமே. வாரம் தவறாமல்...சில வேளைகளில் வாரம் இரண்டு மூன்று தடவைகள் கூட வருகை தந்துவிட்டுப்போகும் கௌரவ உறுப்பினர்,உள்ளூரில் தனிக்குடித்தனம் செய்யும் நாத்தனார். இவர்களில் யாரைத் தேர்ந்தெடுக்கலாம்....கணவன் இதுவரை கடுமையோ எரிச்சலோ காட்டியிருக்காவிட்டாலும் கூட மனதளவில் தோழமை உணர்வுடன் இன்னும் நெருங்கியிருக்கவில்லை என்பதை அவள் ஒருகணம் நினைத்துப் பார்க்கிறாள்.மாமியாரோ கல்யாணி அந்த வீட்டுக்கு வந்து விட்டதைத் தன்னுடைய பதவிக்கு அளிக்கப்பட்ட கௌரவ ஓய்வாகவே எண்ணிவிட்டவள் போல இருபத்துநாலு மணி நேரமும் விசிறியும் கையுமாக ஊஞ்சலில் வாசம் செய்கிறவள்.அவ்வப்போது வந்து போகிற மகளிடமும் வீட்டிலிருக்கும் மகனிடமும் வண்டி வண்டியாக விஷயங்களைக் கொட்டத் திறக்கிற அவளது திருவாய், மருமகள் விஷயத்தில் மட்டும் கௌரவம் காட்டிப் பாதிநேரத்துக்கு மேல் மௌனித்துக் கிடக்கிற விந்தை கண்டு அவள் வியப்பதுண்டு.நாத்தனார் பாதிநேரம் அங்கே வருவதே தன் பட்டையும் தங்கத்தையும் பரிசோதிக்கத்தானோ என்று கல்யாணிக்கு அடிக்கடி தோன்றும்.சங்கிலியும் வளையும் எத்தனை பவுன் என்று எத்தனை முறை கேட்பாள்...? இவள் ஞாபக சக்தியில் ஏதேனும் கோளாறு இருக்குமோ...? இல்லை..தன்னிடம் பேச ஏதும் விஷயமில்லையோ...? இருக்கிற மூன்றுபேர் மீதும் இன்னும் நம்பிக்கை பிறந்திராத சூழலுடன் ஒருவேளை ‘அது’இல்லையென்றால் அவர்கள் முன்பு பரிகாசமாய்ப்போகுமே என்ற பயமும் ஒருங்கிணையத் தன் பகிர்தல் ஆசையை மேலும் கொஞ்ச நாட்களுக்கு ஒத்திப்போடுகிறாள் கல்யாணி.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ன்று பிற்பகல் ஓய்வாக ஒரு வார இதழைக் கல்யாணி புரட்டிக் கொண்டிருக்கையில் மாமியார் குரல் கொடுக்கிறாள்.
‘’கல்யாணி..ஒரு டம்ளர் தண்ணி கொண்டு வா’’
‘’இதோ வரேன் அத்தை’’
‘’தண்ணீரைக்கொடுத்து விட்டு அவள் ஓரமாக நிற்கையில் திடீரென்று நினைத்துக் கொண்டாற்போல அந்தக் கேள்வி அவளிடமிருந்து பிறக்கிறது.

‘’ஆமாம்..இந்த வீட்டுக்கு வந்தப்பறம் நீ ஒதுங்கவே இல்லை இல்லை..’’
மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்த பிரச்சினை, தானாகவே முடிவுக்கு வந்து விட்ட திருப்தியில்,’’ஆமாம் அதுக்கப்பறம் இல்லை’’என்று நாணம் கலந்த தயக்கத்துடன் கல்யாணி திக்கித் திக்கிச் சொல்லி முடித்ததும் டம்ளரைத் திருப்பிக் கொடுத்து விட்டுத் தன் வேலை முடிந்து விட்டதைப்போல ஊஞ்சலில் சாய்ந்து கொள்கிறாள் மாமியார்.அடுத்த கேள்வியை ஆர்வத்தோடு எதிர்நோக்கிய கல்யாணி ‘சரி நீ போகலாம்’என்பது போன்ற அந்த பாவனையில் முகம் சாம்பிப்போனவளாய் அங்கிருந்து நகர்கிறாள்.

மாலையில் வீட்டுக்கு வந்த நாத்தனாருடன் தணிந்த குரலில் அந்த விஷயம் அலசப்படுவதை சமையலறையிலிருந்தபடியே அவளால் ஊகிக்க முடிகிறது.இடையே காப்பி,டிஃபன் கொடுப்பதற்குத் தான் அங்கே சென்றபோது தடைப்பட்ட பேச்சு மீண்டும் கிணற்றடித் தனிமையில் அவர்களிடையே தொடர்கிறபோது கல்யாணி ஆச்சரியப்பட்டுப் போகிறாள்.

‘இந்த சந்தோஷ செய்திக்கு இத்தனை ஒளிவு மறைவு எதற்கு..’அன்று திரும்பிப்போகும்போது நாத்தனார் பட்டையும் தங்கத்தையும் அளவெடுப்பதை விட்டுவிட்டு அவளைப் புதிதாகப் பெண் பார்ப்பது போல்..அளவெடுக்கிற தினுசில் பார்க்கிற பார்வையில் அவள்கூசிப்போகிறாள்.
‘என்ன கல்யாணி....எனக்கு மருமகனா மருமகளா என்ன தரப்போறே..’
-கல்யாணி எதிர்பார்க்கிற இந்த வினாவை மட்டும் உதிர்க்காமலே தன் வீட்டுக்குப் புறப்பட்டுப் போகிறாள் நாத்தனார்.

‘இவங்க ரெண்டு பேருக்கும் விஷயம் தெரிஞ்சாச்சா....இனிமே இவர் கிட்டேயும் சொல்லிட வேண்டியதுதான்..’என்ற முடிவுடன் இரவு எல்லா வேலைகளும் முடிந்த பிறகு ரகுவை எதிர்கொள்கிறாள். விஷயத்தை..நாசூக்காய்..நயமாய் அவனிடம் சொல்லி ..அந்த முகம் மலருவதைப்பார்க்க மனசுக்குள் ஆயிரம் ஒத்திகை நடத்திப் பார்த்து அவள் ஆரம்பிப்பதற்குள்..
‘’ஆமாம்..அம்மா என்னவோ சொன்னாங்களே’’என்று அவனே ஆரம்பிக்கிறான்.மகிழ்வோ...பரபரப்புக் கலந்த உற்சாகமோ ஏதுமற்ற சமநிலைக்குரலில் அவன் அப்படிக்கேட்டதும் பொங்கிய பாலில் தெளித்த நீராக அவள் உற்சாகம் வடிந்து போகிறது.இருந்தாலும் அவன் மனநிலை எப்படித்தான் இருக்கிறதென்று பார்க்கும் ஆசையில் வலிய வரவழைத்துக்கொண்ட ஆர்வத்தோடு,
‘’எதுக்கும் டாக்டரைப்பார்த்திட்டாத் தேவலை..நாளைக்கு சாயங்காலம் போகலாமா..’’என்று கேட்க,அவன் ‘ம்..ம்..’என்று அரைகுறையாக முனகியபடி செய்தித் தாளில் முகம் புதைத்துக் கொள்கிறான்.

என்ன மனிதர்கள் இவர்கள்..! குடும்பத்தில் முதன்முதலாக ஒரு புது ஜீவனின் வருகை இவர்களைத் துளிக்கூடவா பதிக்கவில்லை?ஒருவேளை பிறப்பையும்,இறப்பையும் சமமாக பாவிக்கிற திரிகால ஞானிகளோ?கல்யாணிக்கு ஆத்திரம் குமுறிக்கொண்டு வந்தாலும் இதில் ஏதோ நெருடல் இருப்பதாகவும் அடி மனதுக்குப் படுகிறது.இத்தனை சீக்கிரம்’அது’வேண்டாமென்று ஒத்திப்போட நினைத்திருந்தால் அதையாவது வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாமே?பல்வேறு சிந்தனைகளில் குழம்பியபடியே அவள் உறங்கிப்போகிறாள்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

தற்கு முன்பிருந்த கொஞ்சநஞ்சம் சகஜமான நிலையும் இப்போது அடைபட்டுப் போக...இன்னுமொரு வாரம் இறுக்கமான சூழ்நிலையில் கழியத் தரையிலிட்ட மீனாய்த் தான் தனியாக்கப்பட்டு விட்டதாய் உணர்கிறாள் கல்யாணி.

‘என்னவோ ஊரிலே உலகத்திலே நடக்கக்கூடாத தப்புக்காரியம் நடந்திட்ட மாதிரி இவங்க ஏன் இப்படி ஒதுக்கிறாங்க...இப்பக் கொஞ்ச நாள் அம்மாவோட போய் இருக்க முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்?’

அன்று காலை அலுவலகம் கிளம்பு முன் ரகு அவளை அழைக்கிறான்.
‘’இன்னிக்கு சாயங்காலம் உன்னை உங்க வீட்டிலே கொண்டு போய் விடறதா இருக்கேன்....சாமான் எல்லாம் ரெடி பண்ணி வச்சுக்கோ’’

நெஞ்சுக்குள் சந்தோஷம் படர்ந்தாலும்முகத்தில் வியப்பு விரியக்கல்யாணி கேட்கிறாள்.
‘’திடீர்னு என்ன?’’
‘’அதெல்லாம் எனக்குத் தெரியாது...அம்மாதான் நேத்து கூப்பிட்டு சொன்னாங்க...அவ அங்கே போய் ஒரு வாரம் இருந்திட்டு வரட்டுமேடான்னாங்க’’
-என்னதான் பாராமுகமாக இருந்தாலும் ஒரு பெண்ணின் மனம் பெண்ணுக்குத்தானே தெரியும்...தான் அதற்குள் அவசரப்பட்டு மாமியாரைத் தவறாக எடை போட்டு விட்டதற்கு வெட்கிப்போகிறாள் அவள்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ன் வாய்க்கு வேண்டியதைஎல்லாம் கைமணத்தோடு ஆசை ஆசையாச் செய்து தருகிற அம்மா,அக்கறையோடு டாக்டரிடம் அழைத்துக் கொண்டுபோய் அவள் நல்ல பதில் சொல்கிற வரையில் கவலை தோய்ந்த முகத்துடன் நிற்கிற அப்பா, நினைத்ததையெல்லாம் நிறைவேற்றித் தருகிற சகோதரர்கள் என்று களிப்பான சூழ்நிலையில் காலம் போக்குகிற கல்யாணிக்குப் புக்ககத்தாரின் ஒட்டாத போக்கும் கூடத் தற்காலிகமாக மறந்து போகிறது.

‘’ஏண்டிகல்யாணி..நீ வந்து ஒரு வாரம் ஆச்சு...அவங்ககிட்டேயிருந்து ஒரு ஃபோனோ லெட்டரோ எதுவுமே வரலியே...நீ அங்கே எப்ப வரணும்னு மாப்பிளை ஏதாவது சொல்லியிருக்காரா...அவர் வந்து அழைச்சுக்கிட்டுப் போவாரா..இல்லே நாங்க கொண்டு போய் விடணுமா எதுவும் தெரியலியே..’’-என்று அம்மா அங்கலாய்க்கக் கல்யாணி குறும்பாய்க் கேட்கிறாள்.
‘’ஏம்மா..உனக்கு அதுக்குள்ளே நான் அலுத்துப் போயிட்டேனா..’’
‘’போடீ அசடு...நாங்க பாத்துப்பாத்து ஆயிரம் செஞ்சாலும் சீராட்டினாலும் இனிமே அங்கே இருக்கறதுதான் உனக்கு மதிப்பு...சரி சரி...என்னிக்கு அங்கே வரணும்னு கேட்டு உடனே மாப்பிளைக்கு எழுதிப்போடு’’

கல்யாணி எழுதிய கடிதத்திற்குப் பதிலாக ரகுவிடமிருந்து அவள் அப்பா பெயருக்கு வருகிற சுருக்கமான அந்தக்கடிதம்,வீட்டில் விவரிக்க முடியாத திகிலையும்,பரபரப்பையும் விளைவிக்கிறது.
‘கல்யாணியை இப்போது அனுப்ப வேண்டாம்.அவள் அம்மாவுடன் என் தாயார் முக்கியமான சில விஷயங்களைக் கலந்து ஆலோசிக்க வேண்டியிருப்பதால் இந்தக்கடிதம் கிடைத்ததும் அவர்களை அனுப்பி வைக்கவும்’
‘’கலந்து பேசறதுக்கு இப்ப என்ன இருக்கு...பணம்,நகை கொடுக்கிறதிலேயோ சீர்வரிசை செஞ்சதிலேயோ நாம எந்தக்குறையும் வைக்கலையே..பேசினதைச் செஞ்சிட்டோமே..’’
-அம்மா அதிசயப்பட்டுப்போக,
‘’நீயா கண்டதையும் எதுக்கு ஊகிக்கணும்..நேரே போய் அவங்க என்ன சொல்றாங்க எதுக்குக் கூப்பிடறாங்கன்னு கேட்டுட்டுத்தான் வாயேன்..’’
என்று அப்பா முற்றுப்புள்ளி வைக்கக் கல்யாணிக்கு மட்டும் உள்ளத்தில் முன்பு பிறந்த  நெருடல் உணர்வு இப்போது மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ருக்குப் போன வேகத்திலேயே திரும்பி வரும் அம்மாவின் முகம் பேயறைந்தாற்போல இருண்டிருக்கிறது. கல்யாணியின் சரமாரியான வினாக்களுக்கெல்லாம் ஒற்றை வார்த்தையில் விடை தந்து விட்டுச் சமையலறை இருட்டுக்குள் அவள் முடங்கிக் கொள்கிறாள்.அம்மா-அப்பாவின் ரகசிய உரையாடல்கள், 
இடையில் தான் வந்தவுடன் அங்கே அவசரமாகத் தொங்க விடப்படுகிற மௌனத் திரை,
தன்னைப்பார்க்கும்போது அவர்கள் விழிகளில் தொக்கி நிற்கும் தன்னிரக்க பாவனை 
இவற்றுக்கெல்லாம் என்ன அர்த்தம் என்பது புரியாவிட்டாலும் ஏதோ ஒரு வலுவான பிரச்ச்சினை அந்த வீட்டை ஆட்டி அலைக்கழிப்பதைக் கல்யாணியால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

‘’இப்படியே இருந்தா எப்படி..அவங்களுக்கு ஏதானும் முடிவாச் சொல்ல வேண்டாமா..’’
-அன்று அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்த அம்மா ,கோயிலுக்குப் போயிருந்த கல்யாணி வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்ததும் பேச்சின் இழையை அறுக்க முயல்கிறாள்.இனியும் இந்த ஊமை நாடகத்தின் அழுத்தத்தைப்பொறுக்க முடியாத ஆத்திரத்துடன் கல்யாணி ஆவேசமாக வெடிக்கிறாள்.
‘’அம்மா..அங்கே என்னதான் நடந்தது...ஏன் இப்படி மூடி மூடி வைக்கறீங்க எல்லாரும்?நான் இனிமே அவங்க வீட்டைச்சேர்ந்தவன்னு நீதானே சொன்னே...அப்ப அவங்க என்ன சொல்லியிருந்தாலும் அது உங்களை விட என்னைத்தானே அதிகம் பாதிக்கும்....என்னிக்கு இருந்தாலும் எனக்கும் தெரிஞ்சாக வேண்டியதுதானே....எதுவானாலும் வெளிப்படையா சொல்லிடும்மா’’
சூழ்நிலையின் சுமையை இருவருமே சமாளித்துக் கொள்ளட்டும் என்று எண்ணிய அப்பா வெளியே போகிறார்.

‘’நான் என்னத்தன்னு சொல்லுவேன்...நீ...நீ...இத்தனை சீக்கிரம் உண்டாயிருக்கிறதை அவங்க சந்தேகப்படறாங்கடீ....எங்களை ஏமாத்தி ஏற்கனவே கெட்டுப்போன பெண்ணைத் தலையிலே சுமத்திட்டீங்கன்னு உன் நாத்தனாரும் மாமியாரும் நாக்கிலே நரம்பில்லாம பேசறாங்க....என் போதாத காலம்....இதை எல்லாம் அவங்க வாயாலே கேட்டு உன்கிட்டேயும் சொல்லணும்னு விதிச்சிருக்கு பாரு’’--அம்மா புடவைத் தலைப்பைப் பந்தாய் சுருட்டி வாயில் அடக்கியபடி விம்முகிறாள்.
ஆரம்பத்திலிருந்தே தன் அடிமனதுக்குப் புலப்பட்டுக் கொண்டிருந்த சிறு நெருடல்,இத்தனை வீரியம் வாய்ந்ததொரு வெடிகுண்டைத் தன்னுள் அடக்கி இருக்கும் என்று எதிர்பார்த்திராத கல்யாணி அடி வயிற்றிலிருந்து ஓலமிட்டபடி தாய் மடியில் முகம் புதைக்கிறாள்.
வினாடிகளும்,நிமிடங்களும் மட்டுமல்லாது யுகங்களும் அங்கே கண்ணீரில் கரைகின்றன.

சிறிது நேரம் அழுது கலங்கிய பிறகு தெளிவான ஒரு முடிவுக்கு வந்தவளாய் முகத்தை அழுந்தத் துடைத்தபடி அம்மாவிடம் கேட்கிறாள்.
‘’சரி..அப்பறம் என்ன நடந்தது....நீ என்ன சொல்லிட்டு வந்தே அவங்ககிட்டே..’’
‘’நான் என்னடீ சொல்ல முடியும்...என் பொண்ணு உத்தமி,பத்தினினு நானே அவங்ககிட்டே நிரூபிக்க வேண்டிய நிலைமை....ஆனா நான் என்ன சொல்லியும் அவங்க பிடிச்ச பிடியை விடறதா இல்லே..’சரி இந்தக் காலத்திலே இதெல்லாம் சகஜம்தான்.அதுக்காக நாங்க ஒண்ணும் அவ வாழ்க்கையைப் பாழடிசிற மாட்டோம்..ஆனா’அந்த’க் குழந்தை மட்டும் எங்களுக்கு வேண்டாம்..அதைக் கலைச்சிட்டு அவளைக் கொண்டு வந்து விடுங்க நாங்க ஏத்துக்கறோம்’னு ரொம்பப்பெருந்தன்மையா இருக்கிற மாதிரி வேஷம் போடறாங்க’’

'முன்னை விட சக்தி வாந்த அடுத்த குண்டும் வெடிக்கிறது....ஆனால் இம்முறை அதனாலும் தகர்க்க முடியாத உறைநிலைக்குப் போயிருக்கிறாள் கல்யாணி.கண்ணீரை உள்ளுக்குள் ஜீரணித்துக் கல்லாய் இறுகியிருக்கிற மகளின் தோற்றம் அம்மாவை அச்சுறுத்த அவள் வயிறு கலங்குகிறது.

‘’அவங்க சொன்னதுக்கு நீ ஒத்திக்கிட்டு வந்திருக்கியாம்மா..’’
-இப்போது கல்யாணி குரலை உயர்த்தி கம்பீரமாகக் கேட்கிறாள்.
‘’அதெப்பிடிம்மா உன்னைக்கேக்காம ஒத்துக்க முடியும்...இந்த விஷயத்திலே நீ சொல்றதை வச்சுத்தானே முடிவு செய்யணும்..’’

‘’அப்ப.....இந்தக்கொடுமைக்கு நான் ஒத்துப்போய் உடன்பட்டாகணும்னு நீயும் நினைக்கிறே..அப்படித்தானேம்மா....அங்கே அபவாதத்துக்கு ஆளாகிறது உன் பொண்ணோட நடத்தைங்கிறது உனக்குப்படலையாம்மா....அப்படீன்னா நீயுமா என்னைச் சந்தேகப்படறே..’’

‘’அசட்டுத்தனமா உளறாதே கல்யாணி...எனக்கு உன்னைத் தெரியாதா....ஆனா,என்னம்மா பண்றது நாய் வேஷம் போட்டா குரைச்சுத்தானே ஆகணும்..’’

‘’அம்மா..நீயே ஒரு தாயா இருந்துக்கிட்டு இதைச் சொல்ல உனக்கு எப்படிம்மா மனசு வருது..’’

’’தாயா இருக்கிறதனாலேதாண்டி இப்படிச் சொல்றேன்.எப்படியாவது,எதையாவது செஞ்சு தன் குழந்தையை வாழ வைக்கணும்னுதாண்டி ஒவ்வொரு தாய் மனசும் நெனைக்கும்’’

அதே மாதிரி நானும் என் குழதையை வாழ வைக்கணும்னுதாம்மா ஆசைப்படறேன்..’’
-தர்க்கபூர்வமான அந்த பதிலின் குரூரமான யதார்த்தத்தில் அடிபட்டுப்போனவளாய்...ஆற்றாமை பொங்கத் தன் மகளை ஏறிட்டுப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடி அங்கிருந்து உள்ளே நகர்கிறாள் அம்மா.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ரு மாதத்துக்கு மேலாகியும் கல்யாணி வீட்டாரிடமிருந்து எந்த பதிலும் வராததால் அன்று ரகுவே வீடு தேடி வந்திருக்கிறான்.வீட்டில் உபசாரம் தூள் பறக்க..கல்யாணி மட்டும் தன் அறையை விட்டு வெளியிலேயே  வராமல் முடங்கிக் கிடக்கிறாள்.

‘’கல்யாணி..ஒரு அஞ்சு நிமிஷம் ரகு உன் கிட்டே பேசணுமாம்மா..’’-அப்பா தயங்கியபடி அவளிடம் அனுமதி கேட்க ரகு உள்ளே வருகிறான்.நாற்காலியை விட்டு எழுந்திருக்கக் கூட  மனமில்லாத அவள் எதிரே தானும் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டுக் கொண்டு உட்காருகிறான்.

‘’கல்யாணி..உனக்கு என் மேலே கோபம் இருக்கறது நியாயம்தான்...இந்த விஷயத்தைப்பொறுத்த வரைக்கும் நான் நம்பறதோ நம்பாததோ பிரச்சினையில்லை.சின்ன வயசிலேயிருந்து எங்கம்மா,அக்கா இவங்களோட பேச்சைத் தட்டி நடந்து எனக்குப் பழக்கமில்லை.இதிலேயும் அப்படித்தான்....இப்பவும் நாங்க ஒண்ணும் உனக்குக் கொடுமை செஞ்சிடலை.இதை ஊரறியச் சொல்லி உன் மானத்தை வாங்கறதோ உன்னைத் தள்ளி வைக்கிறதோ எங்க நோக்கமில்லை...இந்தக்குழந்தை மட்டும் வேண்டாம்..அவ்வளவுதான்..’’

தொடர்ந்து அவன் பேசிக்கொண்டு போக வாய்ப்புத் தராமல் வேகமாக நாற்காலியைப்பின்னுக்குத் தள்ளி விருட்டென்று எழுந்திருக்கிறாள் அவள்.
‘’இதோட கொஞ்சம் நிறுத்திக்கிறீங்களா....அக்கினி சாட்சியா..இன்பத்திலேயும் துன்பத்திலேயும் துணையிருப்பேன்னு கைப்பிடிச்ச மனைவி கிட்ட இப்படிப்பேச உங்களுக்கு வெக்கமாயில்லை...? குழந்தை நம்மோடதுதாங்கிற நம்பிக்கை உங்களுக்கு இருந்தா....நான் நரகத்திலே கூட உங்களோட வாழ்க்கை நடத்தத் தயாரா இருக்கேன்...ஆனா அது உங்ககிட்டே இல்லாதப்ப நான் அந்தக் குழந்தையைக் கலைச்சுக்கிறதும் ஒண்ணுதான்.....நான் கெட்டுப்போனவங்கிற உங்க குற்றச்சாட்டைப்பகிரங்கமா ஒத்துக்கிறதும் ஒண்ணுதான்..’’

அவள் குரல் கேட்டு ஓடி வந்த அப்பா ஆதரவாய் அவள் முதுகை நீவி விட்டு அமைதிப்படுத்த 
‘’சும்மா இரு கல்யாணி’’
என்கிறாள் அம்மா.

‘’சும்மா இருந்ததெல்லாம் போதும்மா...இவங்க வீட்டிலே குனிஞ்ச தலை நிமிராம..கர்ப்பமானதைச் சொல்றதுக்குக்கூடக் கூச்சப்பட்டுக்கிட்டு இருந்தவதான் நான்....ஆனா..என்னை இப்ப விஸ்வரூபம் எடுக்க வச்சிருக்கிறதும் இவங்கதான்! ஒரு பொண்ணு கணவன் வீட்டிலே நுழைஞ்சதும் முதல்லே தன்னோட கன்னித் தன்மையை நிரூபிச்சிட்டுஅப்பறம்தான் கருவையே ஏத்துக்கணும் போல இருக்கு..இல்லேன்னா.....நன்னடத்தை சர்டிஃபிகேட் கொடுக்கிற மாதிரி கல்யாணம் ஆகும்போது ’வர்ஜினிடி சர்டிஃபிகேட்’கொடுக்கணும்...அப்பதான் இவங்க எல்லாம் நம்புவாங்க..’’
-தலையைத் தொங்க விட்டபடி வாசலை நோக்கி நடக்கிற ரகுவைக் கணீரென்று ஒலிக்கும் கல்யாணியின் குரல் மீண்டும் கட்டி இழுத்து நிறுத்துகிறது.

‘’கடைசியா இதையும் கொஞ்சம் கேட்டுட்டுப் போயிடுங்க...எங்கம்மா உங்க வீட்டிலே இருந்து திரும்பி வந்து அந்த விஷயத்தை என் கிட்டே சொன்னதுமே அந்த அதிர்ச்சியிலேயே உடனே எனக்கு அபார்ஷன் ஆகி அந்தக் கரு கலைஞ்சு போயிடிச்சு.அதை மறுநாளே உங்க கிட்டே சொல்லியிருந்தால் கூட நீங்க சொன்ன ‘ஸோகால்ட்’ வாழ்க்கை எனக்கு அப்பவே கிடைச்சிருக்கும்.ஆனா...சந்தேக நெருப்பிலே ஒவ்வொரு நிமிஷமும் குடியிருந்து உங்களோட சம்சார வாழ்க்கை நடத்தறதை விட தனிமைத் தவத்திலே என்னையே நெருப்பாக்கிக்கிறதைத்தான் நான் விரும்பறேன்..’’

தீர்க்கமான தன் முடிவைத் திடமாய்ச் சொல்லி முடித்த கல்யாணி, ரகு வெளியேறியபின் கதவை அழுந்தச் சாத்தித் தாளிடுகிறாள்.

(’ஆனந்த விகடன்’ - 24/5/1987  )
ஒரு பின் குறிப்பு;
இதழ்களிலோ புத்தகத் தொகுப்பிலோ கிடைக்காத ஒரு நன்மை இணையத்தில் கிடைக்கிறது. குறிப்பிட்ட கதை சார்ந்த பின்னணியையும் பகிர்ந்து கொள்ள முடிவதே அது...

இந்தக்கதை நான் கேள்விப்பட்ட-என் கவனத்துக்கு வந்த ஓர் உண்மை நிகழ்வு. அதில் ஓரளவு என் கற்பனை கலந்து புனைவாக்கியிருக்கிறேன்.

உண்மைச்சம்பவத்தில் அந்தப்பெண், கருவைக்கலைத்துக் கொண்டு கணவனோடு போய்ச் சேர்ந்து விட்டாள்; 
என் கல்யாணி அதை உறுதியாக நிராகரிக்கிறாள்.
‘’கருப்பை பெண்ணின் வயிற்றில் இருக்கலாம்;ஆனால் அது அவள் வசத்தில் இருப்பதில்லை’’என நான் அடிக்கடி கூறுவதுண்டு.இதுவும் அதை மெய்ப்பிக்கும் ஓர் உண்மை நிகழ்வே....






கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....