துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

9.10.12

’’யாம் துஞ்சலமே..’’

''உண்மையான காதலின் பரிதவிப்போடு..சின்னச்சின்ன ஓலிகளைக் கூடக் கேட்டபடி தூக்கம் தொலைத்தபடி உழன்று கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் தரிசனம்தான் அது....''

பயணம் இதழ்-கட்டுரைத்தொடர்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-8

பூப் பூக்கும் ஓசையைக் கேட்கவும்,பூக்கள் பூக்கும் தருணத்தைக் காணவும் நம்நெஞ்சங்கள் விரும்புவதன் வெளிப்பாடே குறிப்பிட்ட வரி கொண்ட அந்தப்பாடல்களின் மீது நமக்குள்ள ஈடுபாடாகவும் மலர்ந்திருக்கிறது.அது இயற்கையானதும் கூடத்தான்...அதே போலப் பூக்கள் மடிந்து விழும் சத்தத்தை..மென்மையான கிளைகளிலிருந்து அவை  கீழே உதிரும் ஓசையைக் கேட்டிருக்கும் தலைவி ஒருத்தியின் சோகம் கலந்த தவிப்பான உணர்வுகளை நமக்குக் காட்சிப்படுத்தி அளிக்கிறது கொல்லன் அழிசியின் குறுந்தொகைப்பாடல் ஒன்று.


’’கொன்னூர் துஞ்சினும் யாம் துஞ்சலமே
எம் இல் அயலது ஏழில் உம்பர்
மயிலடி இலைய மா குரல் நொச்சி
அணிமிகு மென் கொம்பு ஊழ்த்த
மணிமருள் பூவின் பாடு நனி கேட்டே’’-குறுந்தொகை 138, கொல்லன்அழிசி.

பூ மலரும் ஓசையைப்போலவே அது மடிந்து விழும் ஓசையும் நம் காதுக்கு எட்டாத நுட்பமான ஒன்று...அதை சங்கக் கவிஞன் இங்கே ஒரு குறியீடாக மட்டுமே கையாண்டிருக்கிறான்.

ஊரும் உலகமும் உறக்கத்தில் ஆழ்ந்து விட்ட நள்ளிருள் யாமம். கானுறங்கிக் காற்றும் உறங்கிவிட்ட நடுநிசிப்பொழுது. அப்பொழுது தலைவி மட்டுமே தனித்தும் விழித்தும் இருக்கிறாள்.அவள் வீட்டுக்குப் பக்கத்தில் ஏழிலைப்பாலை என்ற மரம் ஒன்று இருக்கிறது. அதற்கு அடுத்தாற்போலவே நொச்சிமரம் ஒன்றும். 
மயிலின் கால்பாதங்களைப்போன்ற இலைகளைக் கொண்டிருக்கும் அந்த நொச்சி மரத்தின் கொம்பிலிருந்து நீலமணிநிறம் கொண்ட [மணிமருள் பூ] பூக்கள் உதிரும் ஓசையைக் கேட்டபடி இரவு முழுவதும் தலைவி தூக்கமற்றவளாய் இருந்தாள் என்கிறது பாடல்.
மயிலின் பாதங்களிலுள்ள விரல்களையும் ,உள்ளங்காலையும் நொச்சி இலைகளோடு ஒப்பிட்டிருப்பது இயற்கையுடன் இணங்கி வாழ்ந்து இயற்கையை வாழ்வின் அன்றாட அம்சமாகவே கொண்டிருந்த சங்க மனநிலைக்கு எடுத்துக்காட்டு.

பகலிலும் இரவிலும் மாறி மாறி நிகழும் தலைவன் தலைவியரின் சந்திப்புக்களைப் பகற்குறி,இரவுக்குறி எனக் கலைச் சொற்களாக்கித் தந்திருக்கின்றனர் சங்கப்பாடல்களின் உரையாசிரியர்கள். இரவுக்குறி எனப்படும் அவ்வாறான இரவுச்சந்திப்பு ஒன்றில் அதற்கான இடமும்,நேரமும் இந்தப்பாடல் வரிகளின் வழியே தலைவனுக்குப் பூடகமாகச் சுட்டப்பட்டிருக்கின்றன 

பகல் சந்திப்பு என்பது பலவகையான இடைஞ்சல்களுக்கும் வம்புப் பேச்சுக்களுக்கும்[அலர்] இடமளிப்பது.ஊர் அசந்து போயிருக்கும் அமைதியான ஓசைகளற்ற இரவுப் பொழுதே அதற்கு வசதிப்படக்கூடியது.எல்லோரும் உறங்கி விட்டாலும் தலைவி கொண்ட காதல் அவளை ஆட்டிப்படைத்து அலைக்கழிவுகளுக்கு ஆட்படுத்துவதால் நடு இரவு நேரத்தில் அவள் உறங்காமல்தான் விழித்திருப்பாள்.அப்பொழுது அவளைச் சந்திக்கலாம்..அதிலும் கூட வீட்டுக்கு வெகுதொலைவு வருவதென்பது அவளுக்கு சாத்தியமில்லாதது. அவள் வீட்டுக்குப்பக்கத்திலிருக்கும் ஏழிலைப்பாலைக்கு அருகிலுள்ள நொச்சி மரத்தின் அருகே நீ வந்தால் அவளைச் சந்திக்க முடியும்...அங்கு வந்த பிறகு அதற்கு அடையாளமாக ஏதாவது ஒரு ஓசையை எழுப்பினால் தூங்காமல் படுத்திருக்கும் அவள் அதைக்கேட்டவுடன் அங்கு வந்து விடுவாள்..நீங்கள் தடைகளின்றிச் சந்திக்கலாம் என்று தோழி  தலைவனுக்கு வழி காட்டியிருக்கிறாள்..ஆனால் தலைவன் தன் பதட்டத்தில் அந்த ஓசையை எழுப்பாமல் விட்டு விட்டதாலோ,அல்லது முன்பே ஏதேனும் ஓர் ஓசை கேட்டு விட அதைத் தலைவன் செய்த ஓசையாக எண்ணி அங்கே வந்து விட்டு தலைவி வெறிதே திரும்பிச் சென்று விட்டதாலோ - எந்தக் காரணத்தினாலோ அந்தக் குறி தவறிப்போய் விடுகிறது; தவறிப்போய் விட்ட அந்தச் சந்திப்புக்காக வருந்தும் தலைவனிடம் தோழி கூறும் மறுமொழியாக இப்பாடலை வகைப்படுத்துகிறார்கள் உரையாசிரியர்கள்.

இருவருக்கும் இடையே நடந்திருக்க வேண்டிய இனிமையான அந்தச் சந்திப்பு தவறிப்போனதற்கு நாங்கள் காரணமில்லை என்று கூறும் தோழி..பூ உதிருகிற ஓசையைக் கூடக் கேட்கும் அளவுக்குத் தன் செவிப்புலனை அவள் நுண்மையாகத் தீட்டித்தான் வைத்திருந்தாள் என்று அந்தச் சூழலின் பின்னணியில் வைத்தே அதைக் குறிப்பிடுகிறாள்..

வழி மேல் விழி வைத்து வரவு பார்த்திருப்பது போலக் குறிப்பிட்ட ஓசையின் மீது மட்டுமே காது பதித்து வைத்திருந்தும் அந்த சந்திப்பு தவறிப்போய்விட்டதே என்ற அவலத்தை இதன்வழி வெளிப்படுத்துகிறாள் அவள்.

குறி தவறிப்போனபோது தோழி சொல்லும் கூற்றாக அல்லாமல்,எங்கே சந்திப்பது என்று குறி கூறும் பாடலாக இதைக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

ஆனாலும், இரவுக்குறி போன்ற விளக்கங்களைப் பற்றியெல்லாம் யோசித்துக் கொண்டிருக்காமல், பாடலின் மையப் பொருளை மட்டுமே உள்வாங்கியபடி மூலத்துக்குள் மட்டுமே ஆழ்ந்து போக முடிந்தால் அற்புதமான காட்சி ஒன்று நம்முள் விரியும்; உண்மையான காதலின் பரிதவிப்போடு..சின்னச்சின்ன ஓலிகளைக் கூடக் கேட்டபடி தூக்கம் தொலைத்தபடி உழன்று கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் தரிசனம்தான் அது....அதுவே இந்தப்பாடலின் மெய்யான சாரமும் கூட.

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....