சொல்வனம் 4.10.12 இதழில் வெளிவந்திருக்கும் காவேரி லக்ஷ்மி கண்ணனின்,‘ஆத்துக்குப் போகணும்’பற்றிய என் கட்டுரை...
காவேரி என்னும் புனைபெயர் கொண்ட திருமதி லட்சுமி கண்ணன் தமிழ்,ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதி வரும் படைப்பாளி. தற்போது புது தில்லியில் வசித்து வரும் இவரது படைப்புக்கள் ப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன், அரபிக், இந்தி, மராத்தி ஆகிய பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சிறுகதை, குறுநாவல், நாவல், கவிதை, மொழிபெயர்ப்பு எனப்பல துறை ஆக்கங்களிலும் ஈடுபட்டு வரும் இவர் தி.ஜானகிராமனின் மரப்பசு நாவலையும் [Wooden Cow], இந்திரா பார்த்தசாரதியின் திரைக்கு அப்பால் நாவலையும் [Through The Veils] ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ஓசைகள், வெண்மை போர்த்தியது, எங்கும் வானம் ஆகிய தனது சிறுகதைத் தொகுதிகளிலுள்ள பல கதைகளை இவரே ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருப்பது சிறப்பு.இவரது கதைகளின் முழுத்தொகுப்பை இரு தொகுதிகளாக ‘காவேரி கதைகள்’என்ற பெயரில்’மித்ர’பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
‘ஆத்துக்குப் போகணும் ‘என்னும் இவரது நாவல் அண்மையில் காலச்சுவடு பதிப்பகத்தால் மூன்றாம் பதிப்பாக வந்திருக்கிறது. Impressions, The Glow and the Grey, Exiled Gods ஆகியவை,இவரது ஆங்கிலக் கவிதை நூல்கள்.
இனி..கட்டுரை
‘80களில் முதல் பதிப்பாக வெளிவந்த ஒரு நாவல் அது வெளிவந்த காலகட்டத்தில் படித்தபோது ஏற்படுத்திய அதே அதிர்வுகளையும், மனப் பதட்டங்களையும், நிலைகொள்ளாமையையும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு அது மூன்றாம் பதிப்பாக வந்திருக்கும் இப்போதும் தோற்றுவித்துக் கொண்டிருப்பது ஒரு வகையில் வீரியமான அந்த எழுத்துக்குக் கிடைத்த மகத்தான வெற்றிதானென்றபோதும் அந்தப் படைப்பு முன் வைத்த பெண் சார்ந்த நிலைப்பாட்டில் மேலதிகமான மாற்றங்கள் இன்னும் நேரிட்டு விடவில்லை என்பது வேதனையைக் கிளர்த்துவதாகவும் இருக்கிறது.
மைசூரில் உள்ள தாத்தாவின் பிரம்மாண்டமான வீட்டில் தன் பாலியப்பருவத்தைக் கழித்தவள் காயத்ரி. மழமழப்பான மரவேலைப்பாடுகளும், சுற்றிலும் பரந்து விரிந்திருக்கும் தோட்டமும், முகப்பு வராந்தாவில் தேக்கு மர ஊஞ்சலும் கொண்ட அந்த வீடு அபாரமான ஆனந்தத்தையும் கட்டற்ற மகிழ்வையும் தரும் ஒரு வெளியாக அவளது ஆழ் மனதில் பதிவாகியிருக்கிறது.
திருமணமாகிக் கணவனுடன் தில்லி சென்று எலிப் பொறி போன்ற அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வாழ நேரிடுகையிலும், அதே போன்ற இன்னொரு எலிப்பொறி வீடான ’டிடிஏஃப்ளேட்டை’ வாங்க முற்படும்போதும் தாத்தாவின் விசாலமான வீடு குறித்த நினைவுகளே அவளுள் கிளர்ந்து அவளை ஏக்கத்துக்குள்ளாக்குகின்றன. தாத்தாவின் பெண்ணான தன் தாய்க்கு அந்த வீட்டின் மீதான உரிமை மறுக்கப்பட்டு அதன் அருமையை அறியாத தன் தாய் மாமன் கைக்கு அது மாறும் கட்டத்தில் ’’அந்த வீட்டுப் பெண்ணான என் அம்மா மீனாட்சியின் கையிலிருந்து வழுக்கிக் கொண்டு கண்ணைச் சிமிட்டிக் கொண்டு யாருக்கோ சொந்தமாக நழுவிப் போன வீடு.கனவு போலத் தேய்ந்த வீடு’’ என்று உணர்ச்சிவசப்பட்டுக் கொந்தளிக்கிறாள் அவள். அந்த வீட்டின் மீதான உரிமையை நிலைநாட்டி வழக்குத் தொடுக்குமாறு தன் தாயைத் தூண்டுகிறாள்.காயத்ரியின் விருப்பத்தை அவள் தாய் அப்போதைக்கு ஏற்றாலும் வழக்கில் வெற்றி கிடைக்காதபோது அதை இயல்பாக ஏற்றுக் கொண்டு தன் கணவரின் ஊதியத்துக்கேற்ற சிறு வீடு ஒன்றில் மன நிம்மதியுடன் வாழப் பழகி விடுகிறாள்.
அதற்கு நேர் எதிரான மாற்று மனநிலையில் குமுறிக் கொண்டிருக்கும் காயத்ரிக்கோ அம்மா மீனாட்சியின் பக்குவமான மனநிலை வியப்பையே அளிக்கிறது. காயத்ரியின் தாயைப்போலவே அவளது கணவன் சங்கரும் , இருப்பதில் நிறைவு காண்பவன். குருவிக்கூடு போன்ற தில்லியின் அடுக்கு மாடிக் குடியிருப்பிலும் கூடத் தன் மனைவியின் அண்மையே அவனுக்குச் சாந்தமும் அமைதியும் தரப் போதுமானதாக இருக்கிறது.அவளது அருகாமையிலான தனது இருப்பைக் ‘’கப்பலுக்கு நங்கூரம் பாய்ச்சக் கிடைத்த மண். அலைந்து திரிந்த யாத்திரிகன் கண்ட குளுமையான ஆசிரமம்… இதிலேயே வீடு வந்து சேர்ந்து விட்டது போன்ற உணர்வு’’ என்று குறிப்பிட்டு எளிமையாக நிறைவு கண்டு விடுகிறான் அவன்.
காயத்ரியின் வீடு சார்ந்த புறப்போராட்டம் அவள் மகனுக்குத் திருமணமாகி மருமகள் வந்த பின்னும் தொடர்கிறது. பார்த்துப் பார்த்துப் பணம் சேமித்துத் தானும் கணவனுமாய்க் கட்டிய அந்தக் குருவிக்கூட்டிலிருந்தும் கூடத் தங்களை அப்புறப்படுத்தி விட்டு அதை முழுமையாகச் சொந்தம் கொண்டாடத் துடிக்கும் மருமகளின் பேராசை அவளை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. எனினும் அவ்வாறு எதுவும் சம்பவித்து விடாமல் மகன் அதைத் தடுத்து விடுவதோடு அந்தக் குடும்பத்தின் புது உறுப்பினராக- அந்த எலிவளைக்குள் வாழ நேரும் சிறு எலிக் குஞ்சாக அவள் பேரன் சித்தார்த் வந்த பின் அந்த வீட்டின் சூழல் மாறிப்போக அவளும் ஓரளவு ஆறுதல் அடைவது போலத் தோன்றினாலும் வீடு சார்ந்த அவளது அகத் தேடல்-ஆன்மீகத் தேடல் அதன் மற்றொரு தளத்தில் தொடர்ந்து கொண்டே இருப்பதை உணர்த்தியபடி நாவல் முடிகிறது.
மூலக் கதையில் இடம் பெறும் வீடு பற்றிய சரடு நாவலின் பின்புலத்திலும் பதிவாகிறது. வீடு பற்றிய பலவகையான செய்திகளை நாவல் தொடர்ந்து தந்து கொண்டே செல்கிறது. இந்திரா காந்தி கொலைப்பட்டபோது எரித்துச் சிதைக்கப்பட்ட சீக்கியர்களின் வீடுகள், மிகப் பெரிய வீட்டில் வாழ்ந்தாலும் அதைத் தனித்துச் சொந்தம் கொண்டாட முடியாமல் ஒரு பெரும் பணக்காரரின் [திருமணமற்ற] துணைவியாய் வாழ்ந்து வெறுமையில் காலம் கழிக்கும் ஷோபா என காயத்ரி எதிர்ப்பட நேரும் வீடு சார்ந்த பல தகவல்களும் அதன் அநித்தியத்தை நிலையாமையை அவளுக்குப் புகட்டிக் கொண்டே வருகின்றன.
இவற்றுள் காயத்ரியின் தோழி ரமாவின் வாழ்வு அவளுக்கு மிகப் பெரிய திறப்பு ஒன்றை அளிக்கிறது. கட்டிடவடிவில் - பரு வடிவத்திலிருக்கும் வீடு மட்டுமல்லாமல் குடும்பம்,அதன் உறுப்பினர்கள் எனப் பலரும் ஒன்று சேர்ந்து அமையும் அகமாகிய ’வீடு’ம் கூடப் பெண்ணுக்குச் சொந்தமாவதில்லை என்பதை காயத்ரியின் தோழியாகிய ரமாவின் வாழ்க்கை காயத்ரிக்கு உணர்த்துகிறது. மூலக் கதைக்கு இணையாக நாவல் நெடுகப் பயணிக்கும் ரமாவின் வாழ்க்கை ஓட்டச் சித்தரிப்பில் அவளது பிறந்தகம்,திருமணம் என்ற பெயரில் அவளைத் தள்ளிவிட்டு ஒதுங்கிக் கொள்ள உணர்ச்சியுள்ள ஒரு ஜீவனாகப் பார்க்காமல் அவளது புக்ககமும் அவளை நிராகரிப்புச் செய்கிறது. அதையெல்லாம் மீறி- குடும்பம்,குழந்தை வளர்ப்பு,தன் திறமையை அங்கீகரிக்காத கணவன்,கல்லூரிப்பணி எனப் பல நெருக்குதல்களுக்கு இடையிலும் ஓர் எழுத்தாளராக மேலெழுந்து செல்லும் அவளது உத்வேகமும் தாகமும் காயத்ரியை அவளோடு ஆன்மநெருக்கம் கொள்ளச் செய்கிறது.
குழந்தைமை விலகாத சிறுமிப் பருவத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்று பிற குழந்தைகளோடு விளையாடும்போதும் கூட காயத்ரியின் மனம்,’’ஆத்துக்குப் போகணும்’’ என்பதிலேதான் லயித்துக் கிடந்திருக்கிறது. சிறுமி காயத்ரியின் அந்த விழைவுக்கான காரணங்கள் வீடு தரும் இதம் மற்றும் அரவணைப்பு,பாதுகாப்பு இவை சார்ந்தவை. வளர்ந்து அறிவு முதிர்ச்சி பெற்ற பிறகு அந்த வீடு தன் தாயின் கைநழுவிப் போகும்போது அதன் மீது உரிமைப் போராட்டம் நடத்தும் எழுச்சி கொண்டவளாகிறாள் அவள். இவை அனைத்தும் நாவல் முன் வைக்கும் வீடு சார்ந்த புறத் தேடல்கள் மட்டுமே…’’பூர்வீகச் சொத்து அதில் உரிமை என்ற விஷயங்கள் …என் மனதில் இருந்திருக்கலாம்.ஆனால் கதை புனையத் தொடங்கினால் …பொருளாதார வரையறைகளுக்கும் அப்பால்…தன் மட்டில் ஒரு திசையைத்திறந்து விட்டுக் கொண்டு செல்கிறது’’என்று இம் மூன்றாம் பதிப்பின் முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுவது போல ’வீடு’ என்பது பலவகைகளிலும் ஒரு குறியீடாகவே நாவலில் இடம் பெற்றிருப்பதை இனங்காண முடிகிறது.
பெண் சார்ந்த சொத்துரிமை குறித்த இழையில் தொடங்கினாலும் இந்நாவலின் மையம் அதில் மட்டுமே நிலை கொண்டிருக்கவில்லை என்பதே இந்நாவலை வித்தியாசமான தனித் தன்மையுடையதாகவும் காட்டுகிறது.
வீடு என்பது விடுபடுவது…, விடுபட வைப்பது…எல்லாச் சிறைகளிலிருந்தும் தளைகளிலிருந்தும் விட்டு விடுதலையாகிச் சுதந்திரக் காற்றின் சுவாசத்தை நுகர முடிபவர்களே விடுபட்ட நிலையை அடைகிறார்கள். இந்நாவல் குறியீட்டு நிலையில் முன் வைப்பது அவ்வாறான ஒரு விடுபடலையே. வீடாக இப்படைப்பில் வரும் அனைத்தும் குவிவது அந்த மையப்புள்ளியை நோக்கியே.
தாத்தாவின் பெரிய வீட்டில் அதன் வெளியில் சுதந்திரமாக உணரும் காயத்ரி, தில்லியில் வசிக்கும் சிறிய அடுக்கு மாடி வீட்டை மூச்சடைக்க வைக்கும் எலிப்பொறியாக உணர்வது ஸ்தூலமான இடம் சார்ந்தது மட்டுமல்ல…பரந்த வெளியின் கட்டற்ற விடுதலையை மனம் அவாவும் நுட்பமான தேடலின் குறியீடே அது. அந்தத் தேடலே தன் உடலும் ஒரு சிறையே என இறுதிவரை அவளை உணர வைக்கிறது. ‘’நான் என் உடம்புக்குள் வாடகைக்குக் குடியிருப்பது போல’’என்பது அடிக்கடி அவள் வாயிலிருந்து உதிரும் ஒரு வாசகம்.
சின்னஞ்சிறு பொறிகளைப் போன்ற வீடுகளில் குடியிருக்கும் மனிதர்கள் போல ஆன்மாவும் உடலுக்குள் குடியிருக்கிறது. மூச்சுத் திணற வைக்கும் எலிப் பொறி வீடுகள் போல உடலாகிய அகமும் அவளை மூச்சடைக்கச் செய்யும்போதெல்லாம் ’மனம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்’ என்று அலைமோதித் தவித்த பாரதி போல காயத்ரியும் தத்தளிக்கிறாள்.அதைத் தன் கட்டுக்குள்கொணரவே தான் செய்யும் யோகப் பயிற்சியும் முன்பு கற்ற நடனப் பயிற்சியும் உதவுகின்றன என்பதை அவள் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தாலும் அவற்றையும் மீறிக் கட்டற்றுப் பீறிட, விட்டு விடுதலையாகி வேறேதோ ஒரு புகலுக்குள் புகுந்து கொள்ளவே அவள் உள்ளம் இறுதி வரை அவாவுகிறது. ’’மூச்சை முட்டும் இந்த வீட்டைப் பெயர்த்து மூச்சை முட்டும் இந்த உடம்புக் கூட்டைப் பெயர்த்து மண்டை ஓட்டையும் பிளந்து இந்த மையத்திலிருந்து திமிறி ஓடிடணும்… ஓடிடணும்…’’என்ற அவளது அகக் குரலுடனேயே நாவல் நிறைவு பெறுகிறது.
வீடு என்னும் கருத்துநிலை சார்ந்து பெண்ணின் இருப்புக் (existence) குறித்த நிராகரிக்க முடியாத பல வினாக்களை இந்நாவல் முன் வைத்திருப்பது ஆழ்ந்த வாசிப்பின் அவதானத்துக்குரியது. உலக வழக்கில் வீடு என்பது பாதுகாப்பும் அரவணைப்பும் தருவதாக, அமைதியும் ஓய்வும் அளித்து இளைப்பாறுவதற்குரிய இடமாகவே பொதுவாகக் கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் கல்வி அறிவும் அதனால் விளைந்த தனித்த ஆளுமையும் பெற்றுத் தனிப்பட்ட சிந்தனை ஓட்டங்கள் கொண்டவர்களாய் இரட்டைச் சுமைகளை முதுகில் ஏற்றபடி ஓடிக் கொண்டிருக்கும் நவீன உலகத்தின் பெண்களுக்குப் பருவடிலான வீடு,குடும்பம் என்னும் அமைப்பைச் சுட்டும் வீடு ஆகிய இரண்டுமே அவ்வாறான ஓர் இளைப்பாறும் இடமாக அமையாமல் மேன்மேலும் சுமைகளைக் கூட்டித் திணற வைக்கும் இடமாகப் போய் விடும் அவலத்தையே காயத்ரி,ரமா என்னும் பாத்திரங்களின் வழி முன்வைக்கிறார் காவேரி.அதிகம் படிக்காத காயத்ரியின் தாய் கிடைத்ததை ஏற்று அமைவதும் காயத்ரி ரமா ஆகியோரால் அது சாத்தியப்படாது போவதும் இது சார்ந்ததே.
இந்நாவலின் அடிநாதமாகத் தொடக்கம் முதல் இறுதி வரை ஒலிக்கும் உட்குரல், ’ஆத்துக்குப் போகணும்’ என்பதும், ஒரு பெண்ணைப் பொறுத்தவரை அது எந்த அளவு சாத்தியமாகிறது என்பதான விமரிசனமுமே. “அந்த வீட்டின் முகப்பைப் பார்த்தமட்டில் என் மனது அமைதி அடைந்து பரவலாக ஒரு சாந்தம் புகுந்து கொள்ளும்” என்று தன் தாத்தா வீட்டைப் பிரிந்து வெகு காலம் ஆன பின்னும் காயத்ரியின் நெஞ்சு ஆதங்கத்துடன் சொல்லிக் கொண்டே இருக்கிறது. குழந்தைப்பருவத்தில் அவளுக்குக் கிட்டிய எல்லையற்ற அந்த மன அமைதியும் நிறைவும் பின் ஒருபோதும் அவளுக்குச் சாத்தியமின்றிப் போவதால் அந்த நிறைவின்மையின் அலைக்கழிப்பே “ஆத்துக்குப் போகணும்…’’ என்னும் தேடலாக- லௌகீகம்,ஆன்மீகம் எனப் பல தளங்களிலும் வாழ்நாள் முழுவதும் அவளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தனி ஒரு பெண்ணின் தேடலாக மட்டுமன்றித் தனித்துவம் கொண்ட பெண்ணினத்தின் பொதுக் குரலாக நாவலில் அது ஒலிப்பதனாலேயே இப் படைப்பு பெண்ணிய நோக்கில் கவனம் பெறும் சிறந்த ஆக்கங்களில் ஒன்றாகிறது.
1 கருத்து :
பிரமிப்பூட்டும் கதைக்கரு. புத்தக விவரங்களைச் சேர்க்க முடியுமா?
கருத்துரையிடுக