துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

3.8.09

ஐரோப்பியப் பயணம்


எழுத்துக்கும் , படிப்புக்கும் அப்பால் என்னைச் சுவாரசியப்படுத்துபவை..பயணங்கள்.

எத்தனை நீண்ட நெடிய பயணங்களும் என்னை அலுப்பூட்டியதில்லை;களைப்பாக்கியதில்லை.

இந்தியாவிற்குள் தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும் ,கேரளத்திலும் ,வடநாட்டிலும் சில பகுதிகளுக்கும் பயணப்பட்டிருந்தபோதும் கடல்தாண்டிச் செல்லும் கனவு ஒரு தொலைதூரக் கனவாக என்னுள் உறைந்து கொண்டே இருந்தது.

பேராசிரியப் பணியில் இருந்தபோது அந்தக் கனவுக்குச் செயலாக்கம் தர இயலாதபடி பல பணிச் சுமைகள்; மேலும் பற்பல சடங்கு சம்பிரதாயங்களைக் கடந்துதான் வெளிநாடு செல்ல அனுமதி வாங்க முடியும் என்ற நிலை.

தற்பொழுது பணி நிறைவு பெற்று, உடலும்,மனமும் உயிர்ப்புடன் இருக்கும்போதே.... பாரதி சொன்னதைப் போல ‘மனம் வேண்டியபடி செல்லும் உடலாக’ இருக்கும்போதே உலகின் முக்கியமான - தவறவிடக் கூடாத சில இடங்களையாவது பார்த்தே தீர வேண்டும் என்ற தணியாத தாகம்.

அதன் முதல் கட்டமாக டிச.08இல் மலேசியாவிற்கும்,சிங்கப்பூருக்கும் ஒரு மிகச் சிறு பயணம் சென்று வந்தேன்.அதில்கிடைத்த அனுபத் துணிவு சற்று அகலக் கால் வைக்கும் துணிவை அளித்துவிட...சென்னையிலுள்ள ஒருதனியார் சுற்றுலாக் குழுவுடன் சேர்ந்து 18 நாட்கள் இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுக்குச் செல்லவிருக்கிறேன்.

பயணத் திட்டம்:

6.8.09;இலங்கை
சென்னை பன்னாட்டு முனையத்திலிருந்து பயணத் தொடக்கம்.அன்று காலை 11.30 மணியளவில் கொழும்பு நகரை அடைந்து இரவு வரை அங்கு கழித்தல்.நள்ளிரவு விமானத்தில் பாரீஸுக்குப்பயணம்.

7,8,9/08.09;
பிரான்ஸ்
பாரீஸ்
நகரின் பல பகுதிகளைக் காணுதல்
(இம் மூன்று நாட்களும் பாரீஸில் தங்குமிடம்-
NOVOTEL ORLY RUNGIS
ZONE DU DELTA
1,RUE DU PONT DES HALLES
F-94656 RUNGIS CEDEX,
FRANCE
ph;+33145124413

10,11,12/08.09;
சுவிட்சர்லாந்து
பாரீஸிலிருந்து சுவிட்சர்லாந்து சென்று மூன்று நாட்கள் தங்கிச் சுற்றிப்பார்த்தல்.
(சுவிஸ்ஸில் தங்குமிடம்-
HOTEL CENTRAL
MORGARTENSTRASSE4
CH-6002 LUCERNE
SWITZERLAND
ph;+41 41210 5060

13,14,15,16/8.09 ;
இத்தாலி -ரோம்,வெனிஸ்,பிளாரன்ஸ்,பைசா
வாடிகன்

17,18/8.09;ஆஸ்திரியா,ஜெர்மனி

19,20/8.09;நெதர்லாந்து (ஹாலந்து)
தங்குமிடம்;
NH HOTEL ZANDVOORT
BURGEMEESTER VAN ALPHENSTRAAT,63
2041 KG ZANDVOORT
THE NETHERLANDS
ph;+31235760760

21,22/8.09;பெல்ஜியம்,லண்டன்(யு.கே)
தங்குமிடம்-லண்டனில்(21,22)
BEST WESTERN BURNS HOTEL
KENNSINGTON,LONDON,SW5 OEN
+31235719094

மேற்குறித்த நாடுகளில் வாழும் தமிழ் ஆர்வலர்கள்- என் எழுத்துக்கள் மற்றும் வலைவழி என்னை அறிந்திருப்பவர்கள் என்னைக் காண விரும்பினால்- அன்றைய சுற்றுலா முடிந்தபின்,ஆங்காங்கே குறிப்பிட்டுள்ள தங்குமிடத்தில் சந்திக்கலாம்.அயற்புலத் தமிழர்களைக் காணும் ஆவலுடன் இருக்கிறேன்.

என் பயணம் முடிந்து 25.08.09 புது தில்லி திரும்பிய பின்னர் வலைப் பதிவுகளைத் தொடர்கிறேன்.

அதுவரை வலை வாசக அன்பர்களிடமிருந்து தற்காலிகமாக விடை பெறுகிறேன்.
எம்.ஏ.சுசீலா

கல்வித் தரத்தில் அக்கறை கொண்டோரின் மேலான கவனத்திற்கு....



அண்மையில் என் வழிகாட்டுதலில் முனைவர்-பி.ஹெச்.டி- பட்ட ஆய்வை மேற்கொண்ட மாணவியின் வாய்மொழித் தேர்வுக்காக மதுரை சென்றிருந்தேன்.
குறிப்பிட்ட அந்த வாய்மொழித் தேர்வு வழக்கமான சம்பிரதாயச் சடங்காக இல்லாமல் பொருத்தமான பல கேள்விக்கணைகளை எதிர்கொண்டபடி சிறப்பாகவே நடந்து முடிந்தது என்பது ஒருபுறமிருக்க அதை ஒட்டி எழுந்த சில சிந்தனைகளின் வதை என்னை வாட்டியடுக்கிறது.

பொதுவாகவே ஆய்வேடுகளின் தரம் - அதுவும் தமிழ் இலக்கியத்துறையில் இருப்பதால் அந்தத் துறை சார்ந்த ஆய்வேடுகளின் தரம் கவலையளிப்பதாகத்தான் இருக்கிறது. (முன்னொரு முறை வடக்கு வாசல் ஜூலை 2008 இதழில் இதே பொருள் சார்ந்த என் வருத்தங்களை, 'மெல்லத் தமிழினி நீர்க்கு(ம்)மோ' என்ற தலைப்பில் பதிவு செய்திருந்தேன்)

இலக்கிய ஆய்வேடுகள் புதிதான கண்டுபிடிப்புக்களை நிகழ்த்திவிட முடியாதென்றபோதும் நுணுக்கமான ஆய்வுத் தேடல்களையும் , நடுநிலையோடான விமரிசனங்களையும் அவற்றால் தாராளமாக முன்வைக்க முடியும்; ஆனாலும் பெரும்பாலான ஆய்வு மாணவர்களும் , ஆய்வுகளை வழிகாட்டுபவர்களும் அதைச் செய்யத் துணியாமல் - முதன்மைப் பொருளில் இருக்கும் செய்தியை மட்டுமே- கூறியது கூறல் போல - சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போலச் சொல்லிக் கொண்டிருப்பதைப்பார்க்கும்போதுதான் இலக்கிய ஆய்வேடுகளின் மீது நமக்கு நம்பிக்கை குறைந்து போகிறது.

மரபார்ந்த தமிழ்க் கல்வி பெறாமல் , சுய ஆர்வத்தால் விமரிசகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் உருப் பெற்றுப் பிறகு தங்கள் தமிழிலக்கியக் கல்விப் பின்னணியைச் செழுமைப்படுத்திக் கொண்ட இன்றைய கட்டுரையாளர்களையும், நவீனக் கதை சொல்லிகளையும் பார்க்கும்போது தமிழ்க் கல்வியிலும் , ஆய்விலும் கல்வித் துறை எந்த அளவுக்குப் பின் தங்கிப் போய்விட்டது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.எல்லாத் துறைகளையும் போல இங்கும் சற்று விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் அது விரல்விட்டு எண்ணிவிடக் கூடியது மட்டுமே.

இது சொந்த இனத்தின் மீது சேறு பூசும் வேலையல்ல; புண்ணாகிக் கிடக்கும் உள் நெஞ்சின் உண்மையான ஆதங்கம்.

வெந்த புண்ணில் பாய்ச்சப்பட்ட வேலாக இன்னுமொரு செய்தியையும் கூடவே கேள்விப்பட நேர்ந்தது.

குறிப்பிட்ட ஒரு காலகட்டம் வரை, முனைவர் பட்டத்திற்கு ஆய்வேட்டைச் சமர்ப்பித்து வந்தவர்கள், தங்கள் ஆய்வேடு தமிழிலக்கியம் சார்ந்ததாக இருந்ததாலும் கூட அதை ஆங்கிலத்தில் மட்டுமே அளித்தாக வேண்டும் என்ற விதி இருந்தது. ஆங்கிலத்தை உயர்த்திப் பிடிக்கும் நோக்கமாக அது கொள்ளப்படவில்லை; மாறாகத் திறமான புலமையெனில் மேல்நாட்டார் அதை வணங்கும்...பாராட்டும் செயலாகவே அது கருதப்பட்டது. மேலும் ஆய்வேட்டை மதிப்பீடு செய்யும் தேர்வாளர்களில் கட்டாயம் ஒரு வெளிநாட்டுக்காரரும் (தமிழிலக்கிய நுட்பம் அறிந்தவர்) இடம் பெற்றிருப்பார்.அதனால் தமிழ் ஆய்வேட்டை ஆங்கிலத்தில் சமர்ப்பித்தாக வேண்டிய கட்டாயம் அப்போது இருந்தது.

காலப் போக்கில் அந்த வழக்கம் கைவிடப்பட்டுத் தமிழ் ஆய்வேடுகள் தமிழிலேயே சமர்ப்பிக்கப்படலாம் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டது.திருத்துபவர்களில் வெளிநாட்டுக்காரரும் ஒருவர் என்றிருந்த நிலையும் படிப்படியாகக் கைவிடப்பட்டு வெளிநாடுவாழ் தமிழராக மட்டும் அவர் இருந்தாலே போதுமானது என்ற நிலை உருவாயிற்று.

தற்பொழுது -வழிகாட்டி விருப்பப்பட்டாலன்றி -அதுவும் கூட அவ்வளவு தேவையில்லை என்பதாகச் சொல்லப்பட்டு வருகிறது. அதைக்கூட ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.ஆனால் பின்னால் தொடரவிருக்கும் செய்தி அதை விடக் கொடுமையானது ; ஆய்வுகளின் தரத்தையும் அவற்றின் நம்பகத் தன்மையையும் அதல பாதாளத்தில் வீழ்த்துவது.

ஆய்வேட்டை மதிப்பீடு செய்யும் தேர்வாளர்கள் மூவர் -
(அண்மைக்காலம் வரை)

அவர்களில்....
தமிழகப் பல்கலைக் கழகங்களிலிருந்து ஒருவர் ,
தமிழகம் தவிர்த்த பிற மாநிலப் பல்கலைகழகங்களிலிருந்து ஒருவர்,
வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் சார்ந்த ஒருவர்.

இந்த மூவரும் யார் என்பது வாய்மொழித் தேர்வுக்குச் சற்று முன்பு வரையிலும் கூட வழிகாட்டிக்குத் தெரியாது
(இது நேர்மையானவர்களுக்கு மட்டும்தான்...குறுக்குச் சால் ஓட்டுபவர்களுக்கு அல்ல)

மேற்குறித்த மூன்று தரப்புக்களிலும் இருந்து ஆய்வுப் பொருளை மதிப்பிட வல்லவர் யார் என்பதைச் சிந்தித்துக்
(இதுவும் கூடக் காலப்போக்கில் தனக்கு சாதகமாக நடந்து கொள்ளக் கூடியவர்கள் யார் என்பதாகவும் , உன் ஆய்வேட்டை நான் தேற்றுகிறேன் , என் ஆய்வேட்டை நீ தேற்று என்பது போன்ற மலிவான பேரமாகவும் மாறிப் போய்விட்டது)
கிட்டத்தட்ட 15 பேரின் பெயர்களை முகவரியோடு ஆய்வேடு சமர்ப்பிக்கப்படும் நாளன்று பல்கலைக் கழகப் பதிவாளரிடம் , நெறியாளர் (வழிகாட்டி) தந்தாக வேண்டும்.அவற்றுக்குள்ளிருந்து மூன்று பெயர்களைப் பதிவாளர் தெரிவு செய்வார்; அவர்களுக்கு ஆய்வேட்டின் பிரதிகள் அனுப்பப்படும்.அவர்களில் யாரேனும் அந்தத் தேர்வுப் பணியை மறுத்தால் தன் கையிலுள்ள மீதப் பட்டியலிலிருந்து பதிவாளர் தேர்ந்தெடுப்பார். ஆய்வின் இறுதி அறிக்கை , நெறியாளருக்கு வந்து சேரும்போது கூட இப் பெயர்கள் அவரிடமிருந்து மறைக்கப்பட்டுத்தான் இருக்கும். வாய்மொழித் தேர்வுக்கு நாள் குறிக்கும் கட்டத்தில் மட்டும் அதை நடத்தும் தேர்வாளரின் பெயர் மற்றும் முகவரிகள் வழிகாட்டிக்குத் தரப்படும்.அதைக் கொண்டு அவரோடு தொடர்பு கொண்டு வாய்மொழித் தேர்வுக்குரிய நாள் நேரம் இவற்றைக் குறிப்பது மட்டுமே வழிகாட்டியின் வேலை. இறுதிக் கட்டதேர்வு முடிந்த பிறகு கூடப் பிற தேர்வாளர்கள் யார் என்பது நெறியாளருக்குத் தெரியாது; அவர் உண்மையானவராக இருந்தால் அவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியமும் அவருக்கு இருக்காது.

மிகச் சமீப காலம் வரை வழக்கத்திலிருந்த இவ்விதிமுறைகளில் சில விரும்பத்தகாத மாற்றங்கள் - குறிப்பாகச் சில தமிழகப் பல்கலைக் கழகங்களில்- கொண்டு வரப்பட்டிருப்பதாக - நம்பகமான ஆனால் அதிர்ச்சிதரத்தக்க ஒரு செய்தியை அண்மையில் கேள்விப்பட நேர்ந்தது.

அச் செய்தி...இதுதான் !

தான் வழிப்படுத்தியிருக்கும் ஆய்வேட்டைத் திருத்தும் புற நிலைத் தேர்வாளர்கள் யார் , யார் என்பதை இனிமேல் வழிகாட்டியே முடிவு செய்து கொண்டு அவர்களுக்கு ஆய்வேட்டை அனுப்ப ஆவன செய்யலாம்.

அடுத்தது.....மூன்று புறநிலைத் தேர்வாளர்கள் தேவையில்லை . அதிலும் வழிகாட்டி விரும்பினால் வெளிநாட்டுப் பலக்கழகத்திலுள்ள பேராசிரியர் கூடத் தேவையில்லை.

அது மட்டுமல்ல; இரு புற நிலைத் தேர்வாளர்களோடு வழிகாட்டியும் ஒரு தேர்வாளராக அந்த ஆய்வேட்டை மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். இது உண்மையில் அபத்தத்தின் உச்சம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்வது?

வழிகாட்டிகளின் நடுநிலை, நேர்மை...இவை ஒருபுறமிருக்க, தானே நெறிப்படுத்தி , வழிகாட்டியிருக்கும் ஆய்வில் அவரால் என்ன குற்றம் கண்டுவிட முடியும்? அப்படியே குற்றம் கண்டுபிடிப்பதாகவே வைத்துக் கொண்டாலும் கூட - வழிகாட்டும்போது அவற்றை அவர் செம்மைப் படுத்தாமல் விட்டது ஏன் என்ற கேள்வி கூடவே எழக் கூடுமல்லவா ?

பல்கலைக் கழகத்தின் அதிகாரிகளோடும் , உயர்மட்டக் குழுவிலுள்ள பேராசிரியர்கள் சிலரோடும் இத் திருத்தம் குறித்து உரையாடியபோது மாணவர்களுக்கு விரைவான பலன் உடனடியாகக் கிடைப்பதற்காகச் செயலாக்கப்பட்ட திட்டம் இது என்கிறர்கள் ; அனாவசியமான தாமதங்கள் தவிர்க்கப்படவேண்டியது நல்லதுதான் ; ஆனால் அதே வேளியில் அரை வேக்காட்டு ஆய்வுகளும் கூடவே கை கோர்த்துக் கொண்டு பீடு நடை நடை போடப்போகும் காட்சியை எண்ணிப் பார்க்கவே மனம் கூசுகிறது.

இதற்கெல்லாம் பதிலாக........ முனைவர் பட்டத்திற்காக ஒருவர் பதிவு செய்து கொண்ட மறுகணமே அவருக்கு டாக்டர் பட்டத்தைக் கொடுத்துவிட்டால் தாமதத்தை இன்னும் கூடத் தவிர்த்துவிடலாமல்லவா?

முன்பு சில வட மாநிலப் பல்கலைக் கழகங்களில் நடந்து வந்ததைப் போல எந்தக் குப்பையை எழுதிக் கொடுத்தாலும் டாக்டர் பட்டம் என்பது,
தமிழை...தமிழ் ஆய்வைக் கீழ்மைப்படுத்தும் பாதகச் செயல்;

.எந்தப் பலனுக்காகவும் ஆய்வு செய்யாமல் தமிழார்வத்தினால் மட்டுமே தூண்டப்பட்டுக் கால் தேய நடந்து அலைந்து எங்கெங்கிருந்தெல்லாமோ ஓலைச்சுவடிகளைத் தேடித் தேடிப்பதிப்பித்த உ.வே.சா. போன்ற தமிழ்ச் சான்றோர்களைப் பெற்றிருக்கும் தமிழிலக்கியக்களம் இப்படித் தரம் தாழ்ந்து போகலாமா ?

இதைச் சொல்லக் கொதிக்குது நெஞ்சு.வெந்து புண்ணாகுது உள்ளம்.

கடும் உழைப்புக்குப் பிறகு வரும் நற்பயனே என்றும் நின்று நிலைக்கக் கூடியது; நம் பெயரைக் காலக் கல்வெட்டில் நிரந்தரமாகப் பொறிக்கக்கூடியது அது மட்டும்தான்.

கல்வித் துறையில் பல புரட்சிகரமான மாற்றங்கள் நடந்து வருவதாகச் சொல்லிக் கொள்ளும் இந்தக் கால கட்டத்தில் உயர்கல்வியின் தரம் தரைமட்டமாகித் தகர்ந்து போவதைக் கல்வித் துறை தடுத்தே ஆக வேண்டும் ;

அரைகுறைஅறிவுஜீவிகள் வெள்ளமாகப் பெருகிவருமுன் அதற்கு ஒரு அணை கட்டாயம் போடப்பட்டே ஆகவேண்டும்.

நன்றி:வடக்கு வாசல் ஆக.09

http://www.vadakkuvaasal.com/

இணைப்பு:மெல்லத் தமிழினி நீர்க்கு(ம்)மோ?

2.8.09

ஆழியாறு தந்த அமுதம்


பொதுவான தளத்தில் ஆன்மீகம் என்பது தனிமனித அகமுகத் தேடலுக்கும்,மேம்பாட்டுக்கும் உரிய ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது.இந்தப் பொதுப் போக்கை மாற்றி ஆன்மீகத் தேடல்களைச் சமூக நலனுக்கும்,வளத்திற்கும் உரியதாக மடை மாற்றம் செய்த ஞானியர் சிலரில் வேதாத்ரி மகரிஷி அவர்களும் ஒருவர்.

கூடுவாஞ்சேரி என்னும் சிற்றூரில் ,எளிய தறி நெசவுக் குடும்பத்தில் பிறந்து ,வறுமையின் கொடுமையை அணு அணுவாக நுகர்ந்து அதை மாற்றும் வழியை ஆன்மீகப் பாதையில் தேடியவர் அந்த மகான்.

வாழ்க வையகம்.வாழ்க வளமுடன்’என்று பரந்த உலகப் பொது நோக்கிலான தாரக மந்திரத்தை அளிப்பது அவருக்குச் சாத்தியமானது அதனால்தான்.

அரிதான யோகக் கலை, சாமானியர்களையும் எட்டும் வகையில் ,எளிய குண்டலினி யோகமுறையை(Simplified Kundalini Yoga)மனவளக்கலையாக வடித்துத் தந்து அறிவுத் திருக் கோயிலை ஆழியாறில் அமைத்தளித்த சிற்பி அவர்.

’யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’’ என்ற உயர் மரபின் தொடர்ச்சி அவர்.

மகரிஷி அவர்களின் ஜெயந்தி 14.08.09 கொண்டாடப்படுவதை ஒட்டி, அவர் நிறுவிய புதுதில்லி மனவளக்கலைமன்றத்தில் யோகம் பயிலும் பேற்றைப் பெற்றிருக்கும் நான் கீழ்வரும் சிறு கவிதையைக் குருகாணிக்கையாக்குகிறேன்.


என்னை அறியாமல்...
ஏதேதோ செய்திருந்தேன்
தன்னை அறியவில்லை
தன்னறியும் திறனுமில்லை

ஆசை வலைப்பட்டு
அகந்தையின் பிடியில் சிக்கி
மாயச் சுழலுக்குள்
மயங்கியே நான் கிடந்தேன்


சிற்றறிவில் சினம் கொண்டு
பேரறிவாம் பகுத்தறிவைச்
செயல்படுத்த அறிந்திடாமல்
செயலற்றுப் போய்க் கிடந்தேன்

மாயையெனும் பேய் பிடிக்க
மனிதத்தைத் துறந்துவிட்டு
ஆணவ அழுக்கு மூட்டை
அடுக்கடுக்காய்ச் சுமந்திருந்தேன்


உடம்பார் அழிந்துவிட்டால்
உயிராரும் போய்மடிவார்
திருமூலர் வாக்கு இது
திருத்தமான வாக்கு இது

உயிரார் உறைகின்ற
உன்னதமாம் கோயிலென
ஒருபோதும் என்னுடம்பை
உயர்வாய் எண்ணவில்லை


தூல உடல் பேணுகின்ற
சூக்குமம் விளங்கவில்லை
சூக்குமம் புரிந்தாலும்
சோம்பல் என்னை விடவில்லை

அன்றாடக் கவலைகளில்
அலைக்கழிந்து அலமந்து
இலக்குகளைத் தவறவிட்ட
தருணங்கள் ஏராளம்


சகமனிதம் சகித்திடாமல்
சாதனைகள் புரிந்தென்ன
பொறுமைதனைக் கொண்டிடாமல்
பெருமைகள்தான் சேர்ந்தாலென்ன

எண்ண அலை ஓயவில்லை
எதிலும் மனம் பதியவில்லை
ஓயாத உளைச்சலோடு
உழன்றபடி நானிருந்தேன்


வேதனையைத் தீர்க்க வந்த
வேதாத்ரி காணும் வரை
வேண்டாத பயங்களையே
கொண்டாடி வாழ்ந்திருந்தேன்

ஆழியாறு என்னுமொரு
அமுதத்தைக் காணுமட்டும்
அயர்ச்சியோடு சலித்தபடி
அன்றாடம் உளைந்திருந்தேன்



வளமுடன் வாழ்கவென்றே
வந்ததொரு மாமருந்து!
நலமுடனே சிறப்பதற்குக்
கண்கண்ட பெரு மருந்து!

கண் முற்றும் கெடுவதற்குள்
கண்டுகொண்டேன்கண்டுகொண்டேன்
காயகல்பக் கலை கொடுத்த
தவ யோகி கண்டுகொண்டேன்


ஆன்மீக வாழ்வென்றால்
அஞ்சியே ஓட வேண்டாம்
கற்றை முடிதரித்துக்
காட்டுக்குள் செல்ல வேண்டாம்
அவரவர் பணியினையே
அலுக்காமல் சளைக்காமல்
அன்புடனே ஆற்றிவந்தால்
அதுதான் தவமென்ற
தத்துவத்தைப் புரியவைத்துத்
தவம் செய்ய வைத்திட்ட
ஞான குரு நமக்கு வாய்த்தார்


உள்ளுக்குள் ஒடுங்கிப்போய்த்
தன்னிலை கண்டபோதும்
உலகப் பொது நன்மை
உன்னதமாய்ப் பேணுதற்காம்
கடப்பாடு நமக்கிருக்கும்
காரியத்தை எடுத்துக் காட்டி
வையகம் வாழ்கவென்ற
வாசகம் தன்னைத் தந்தார்


மனவளக்கலை தந்த
மாமருந்து ஏராளம்
சொல்லி முடியாது
சொல்லவும் நாள்போதாது


கைகளுக்கும் கால்களுக்கும்
கண்ணுக்கும் ஏற்றதுவாய்
மூச்சுப் பயிற்சிக்கும்
முதன்மைதரும் முறையினிலே
உடல்நலத்தைக் காப்பதற்காய்
உயர்ந்த பல பயிற்சிமுறை

வச்சிரம் மகரமென்று
வெவேறாய் ஆசனங்கள்


உடம்பென்ற கோயிலுக்குள்
உறைகின்ற ஆன்மாவைத்
தட்டியே எழுப்புதற்காய்த்
தனித்தனியே தியானமுறை

ஆக்கினையில் தொடங்குமது
துரியத்தில் தான் வளர்ந்து
துரியாதீதமென்றே
துரிதமாய் வளர்ந்துவரும்


ஒன்பதாம் கோள்களுமே
நல்வினையை நமக்களிக்க
நவக்கிரகத் தவமென்ற
நல்லதொரு தவமுமுண்டு

பஞ்ச பூதம் கண்டுநாமும்
அஞ்சியே வாழ்ந்திடாமல்
நிலம் வளி வான் காற்றோடு
நெருப்பான ஒன்றைச் சேர்த்து
ஐம்பூதம் மேல் செய்யும்
அரியதொரு தவமுமுண்டு
.

ஐந்தடக்கல் ஆற்றி நன்றாய்
ஐம்புலனைக் காப்பதற்கே
ஐம்பொறிமேல் நாம் செய்யும்
அழகான தவமுமுண்டு

அகத்தாய்வு பல அளித்து
அகத்தூய்மை பெறுவதற்கு
அருமையான வழிகாட்டும்
படிநிலைகள் பலவுண்டு
முத்தாய்ப்பாய்ப் பிரமஞானம்
முக்தி வேறு தேவையில்லை


இத்தனையும் தந்து வைத்த
சித்தராம் மகரிஷியை........

வளமுடன் வாழ்கவென்ற
வாசகத்தை வடிவமைத்து
வேதத்தின் சாரத்தை
வெகுலகுவாய் ஆக்கிவைத்த
வேதாத்ரி மகரிஷியின்
விருப்பத்தை நெஞ்சில் வைத்து
நாம் பெற்ற இன்பத்தை
வையமெல்லாம் பெற்றிடவே
வேண்டியதைச் செய்திடுவோம்


அற வாழ்வின் நாட்டத்தில்
பிறழாமல் பணிசெய்து
ஆழியாறு அளித்தவாக்கை
அகிலமெங்கும் பரப்பிடுவோம்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....