துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

3.8.09

கல்வித் தரத்தில் அக்கறை கொண்டோரின் மேலான கவனத்திற்கு....அண்மையில் என் வழிகாட்டுதலில் முனைவர்-பி.ஹெச்.டி- பட்ட ஆய்வை மேற்கொண்ட மாணவியின் வாய்மொழித் தேர்வுக்காக மதுரை சென்றிருந்தேன்.
குறிப்பிட்ட அந்த வாய்மொழித் தேர்வு வழக்கமான சம்பிரதாயச் சடங்காக இல்லாமல் பொருத்தமான பல கேள்விக்கணைகளை எதிர்கொண்டபடி சிறப்பாகவே நடந்து முடிந்தது என்பது ஒருபுறமிருக்க அதை ஒட்டி எழுந்த சில சிந்தனைகளின் வதை என்னை வாட்டியடுக்கிறது.

பொதுவாகவே ஆய்வேடுகளின் தரம் - அதுவும் தமிழ் இலக்கியத்துறையில் இருப்பதால் அந்தத் துறை சார்ந்த ஆய்வேடுகளின் தரம் கவலையளிப்பதாகத்தான் இருக்கிறது. (முன்னொரு முறை வடக்கு வாசல் ஜூலை 2008 இதழில் இதே பொருள் சார்ந்த என் வருத்தங்களை, 'மெல்லத் தமிழினி நீர்க்கு(ம்)மோ' என்ற தலைப்பில் பதிவு செய்திருந்தேன்)

இலக்கிய ஆய்வேடுகள் புதிதான கண்டுபிடிப்புக்களை நிகழ்த்திவிட முடியாதென்றபோதும் நுணுக்கமான ஆய்வுத் தேடல்களையும் , நடுநிலையோடான விமரிசனங்களையும் அவற்றால் தாராளமாக முன்வைக்க முடியும்; ஆனாலும் பெரும்பாலான ஆய்வு மாணவர்களும் , ஆய்வுகளை வழிகாட்டுபவர்களும் அதைச் செய்யத் துணியாமல் - முதன்மைப் பொருளில் இருக்கும் செய்தியை மட்டுமே- கூறியது கூறல் போல - சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போலச் சொல்லிக் கொண்டிருப்பதைப்பார்க்கும்போதுதான் இலக்கிய ஆய்வேடுகளின் மீது நமக்கு நம்பிக்கை குறைந்து போகிறது.

மரபார்ந்த தமிழ்க் கல்வி பெறாமல் , சுய ஆர்வத்தால் விமரிசகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் உருப் பெற்றுப் பிறகு தங்கள் தமிழிலக்கியக் கல்விப் பின்னணியைச் செழுமைப்படுத்திக் கொண்ட இன்றைய கட்டுரையாளர்களையும், நவீனக் கதை சொல்லிகளையும் பார்க்கும்போது தமிழ்க் கல்வியிலும் , ஆய்விலும் கல்வித் துறை எந்த அளவுக்குப் பின் தங்கிப் போய்விட்டது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.எல்லாத் துறைகளையும் போல இங்கும் சற்று விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் அது விரல்விட்டு எண்ணிவிடக் கூடியது மட்டுமே.

இது சொந்த இனத்தின் மீது சேறு பூசும் வேலையல்ல; புண்ணாகிக் கிடக்கும் உள் நெஞ்சின் உண்மையான ஆதங்கம்.

வெந்த புண்ணில் பாய்ச்சப்பட்ட வேலாக இன்னுமொரு செய்தியையும் கூடவே கேள்விப்பட நேர்ந்தது.

குறிப்பிட்ட ஒரு காலகட்டம் வரை, முனைவர் பட்டத்திற்கு ஆய்வேட்டைச் சமர்ப்பித்து வந்தவர்கள், தங்கள் ஆய்வேடு தமிழிலக்கியம் சார்ந்ததாக இருந்ததாலும் கூட அதை ஆங்கிலத்தில் மட்டுமே அளித்தாக வேண்டும் என்ற விதி இருந்தது. ஆங்கிலத்தை உயர்த்திப் பிடிக்கும் நோக்கமாக அது கொள்ளப்படவில்லை; மாறாகத் திறமான புலமையெனில் மேல்நாட்டார் அதை வணங்கும்...பாராட்டும் செயலாகவே அது கருதப்பட்டது. மேலும் ஆய்வேட்டை மதிப்பீடு செய்யும் தேர்வாளர்களில் கட்டாயம் ஒரு வெளிநாட்டுக்காரரும் (தமிழிலக்கிய நுட்பம் அறிந்தவர்) இடம் பெற்றிருப்பார்.அதனால் தமிழ் ஆய்வேட்டை ஆங்கிலத்தில் சமர்ப்பித்தாக வேண்டிய கட்டாயம் அப்போது இருந்தது.

காலப் போக்கில் அந்த வழக்கம் கைவிடப்பட்டுத் தமிழ் ஆய்வேடுகள் தமிழிலேயே சமர்ப்பிக்கப்படலாம் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டது.திருத்துபவர்களில் வெளிநாட்டுக்காரரும் ஒருவர் என்றிருந்த நிலையும் படிப்படியாகக் கைவிடப்பட்டு வெளிநாடுவாழ் தமிழராக மட்டும் அவர் இருந்தாலே போதுமானது என்ற நிலை உருவாயிற்று.

தற்பொழுது -வழிகாட்டி விருப்பப்பட்டாலன்றி -அதுவும் கூட அவ்வளவு தேவையில்லை என்பதாகச் சொல்லப்பட்டு வருகிறது. அதைக்கூட ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.ஆனால் பின்னால் தொடரவிருக்கும் செய்தி அதை விடக் கொடுமையானது ; ஆய்வுகளின் தரத்தையும் அவற்றின் நம்பகத் தன்மையையும் அதல பாதாளத்தில் வீழ்த்துவது.

ஆய்வேட்டை மதிப்பீடு செய்யும் தேர்வாளர்கள் மூவர் -
(அண்மைக்காலம் வரை)

அவர்களில்....
தமிழகப் பல்கலைக் கழகங்களிலிருந்து ஒருவர் ,
தமிழகம் தவிர்த்த பிற மாநிலப் பல்கலைகழகங்களிலிருந்து ஒருவர்,
வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் சார்ந்த ஒருவர்.

இந்த மூவரும் யார் என்பது வாய்மொழித் தேர்வுக்குச் சற்று முன்பு வரையிலும் கூட வழிகாட்டிக்குத் தெரியாது
(இது நேர்மையானவர்களுக்கு மட்டும்தான்...குறுக்குச் சால் ஓட்டுபவர்களுக்கு அல்ல)

மேற்குறித்த மூன்று தரப்புக்களிலும் இருந்து ஆய்வுப் பொருளை மதிப்பிட வல்லவர் யார் என்பதைச் சிந்தித்துக்
(இதுவும் கூடக் காலப்போக்கில் தனக்கு சாதகமாக நடந்து கொள்ளக் கூடியவர்கள் யார் என்பதாகவும் , உன் ஆய்வேட்டை நான் தேற்றுகிறேன் , என் ஆய்வேட்டை நீ தேற்று என்பது போன்ற மலிவான பேரமாகவும் மாறிப் போய்விட்டது)
கிட்டத்தட்ட 15 பேரின் பெயர்களை முகவரியோடு ஆய்வேடு சமர்ப்பிக்கப்படும் நாளன்று பல்கலைக் கழகப் பதிவாளரிடம் , நெறியாளர் (வழிகாட்டி) தந்தாக வேண்டும்.அவற்றுக்குள்ளிருந்து மூன்று பெயர்களைப் பதிவாளர் தெரிவு செய்வார்; அவர்களுக்கு ஆய்வேட்டின் பிரதிகள் அனுப்பப்படும்.அவர்களில் யாரேனும் அந்தத் தேர்வுப் பணியை மறுத்தால் தன் கையிலுள்ள மீதப் பட்டியலிலிருந்து பதிவாளர் தேர்ந்தெடுப்பார். ஆய்வின் இறுதி அறிக்கை , நெறியாளருக்கு வந்து சேரும்போது கூட இப் பெயர்கள் அவரிடமிருந்து மறைக்கப்பட்டுத்தான் இருக்கும். வாய்மொழித் தேர்வுக்கு நாள் குறிக்கும் கட்டத்தில் மட்டும் அதை நடத்தும் தேர்வாளரின் பெயர் மற்றும் முகவரிகள் வழிகாட்டிக்குத் தரப்படும்.அதைக் கொண்டு அவரோடு தொடர்பு கொண்டு வாய்மொழித் தேர்வுக்குரிய நாள் நேரம் இவற்றைக் குறிப்பது மட்டுமே வழிகாட்டியின் வேலை. இறுதிக் கட்டதேர்வு முடிந்த பிறகு கூடப் பிற தேர்வாளர்கள் யார் என்பது நெறியாளருக்குத் தெரியாது; அவர் உண்மையானவராக இருந்தால் அவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியமும் அவருக்கு இருக்காது.

மிகச் சமீப காலம் வரை வழக்கத்திலிருந்த இவ்விதிமுறைகளில் சில விரும்பத்தகாத மாற்றங்கள் - குறிப்பாகச் சில தமிழகப் பல்கலைக் கழகங்களில்- கொண்டு வரப்பட்டிருப்பதாக - நம்பகமான ஆனால் அதிர்ச்சிதரத்தக்க ஒரு செய்தியை அண்மையில் கேள்விப்பட நேர்ந்தது.

அச் செய்தி...இதுதான் !

தான் வழிப்படுத்தியிருக்கும் ஆய்வேட்டைத் திருத்தும் புற நிலைத் தேர்வாளர்கள் யார் , யார் என்பதை இனிமேல் வழிகாட்டியே முடிவு செய்து கொண்டு அவர்களுக்கு ஆய்வேட்டை அனுப்ப ஆவன செய்யலாம்.

அடுத்தது.....மூன்று புறநிலைத் தேர்வாளர்கள் தேவையில்லை . அதிலும் வழிகாட்டி விரும்பினால் வெளிநாட்டுப் பலக்கழகத்திலுள்ள பேராசிரியர் கூடத் தேவையில்லை.

அது மட்டுமல்ல; இரு புற நிலைத் தேர்வாளர்களோடு வழிகாட்டியும் ஒரு தேர்வாளராக அந்த ஆய்வேட்டை மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். இது உண்மையில் அபத்தத்தின் உச்சம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்வது?

வழிகாட்டிகளின் நடுநிலை, நேர்மை...இவை ஒருபுறமிருக்க, தானே நெறிப்படுத்தி , வழிகாட்டியிருக்கும் ஆய்வில் அவரால் என்ன குற்றம் கண்டுவிட முடியும்? அப்படியே குற்றம் கண்டுபிடிப்பதாகவே வைத்துக் கொண்டாலும் கூட - வழிகாட்டும்போது அவற்றை அவர் செம்மைப் படுத்தாமல் விட்டது ஏன் என்ற கேள்வி கூடவே எழக் கூடுமல்லவா ?

பல்கலைக் கழகத்தின் அதிகாரிகளோடும் , உயர்மட்டக் குழுவிலுள்ள பேராசிரியர்கள் சிலரோடும் இத் திருத்தம் குறித்து உரையாடியபோது மாணவர்களுக்கு விரைவான பலன் உடனடியாகக் கிடைப்பதற்காகச் செயலாக்கப்பட்ட திட்டம் இது என்கிறர்கள் ; அனாவசியமான தாமதங்கள் தவிர்க்கப்படவேண்டியது நல்லதுதான் ; ஆனால் அதே வேளியில் அரை வேக்காட்டு ஆய்வுகளும் கூடவே கை கோர்த்துக் கொண்டு பீடு நடை நடை போடப்போகும் காட்சியை எண்ணிப் பார்க்கவே மனம் கூசுகிறது.

இதற்கெல்லாம் பதிலாக........ முனைவர் பட்டத்திற்காக ஒருவர் பதிவு செய்து கொண்ட மறுகணமே அவருக்கு டாக்டர் பட்டத்தைக் கொடுத்துவிட்டால் தாமதத்தை இன்னும் கூடத் தவிர்த்துவிடலாமல்லவா?

முன்பு சில வட மாநிலப் பல்கலைக் கழகங்களில் நடந்து வந்ததைப் போல எந்தக் குப்பையை எழுதிக் கொடுத்தாலும் டாக்டர் பட்டம் என்பது,
தமிழை...தமிழ் ஆய்வைக் கீழ்மைப்படுத்தும் பாதகச் செயல்;

.எந்தப் பலனுக்காகவும் ஆய்வு செய்யாமல் தமிழார்வத்தினால் மட்டுமே தூண்டப்பட்டுக் கால் தேய நடந்து அலைந்து எங்கெங்கிருந்தெல்லாமோ ஓலைச்சுவடிகளைத் தேடித் தேடிப்பதிப்பித்த உ.வே.சா. போன்ற தமிழ்ச் சான்றோர்களைப் பெற்றிருக்கும் தமிழிலக்கியக்களம் இப்படித் தரம் தாழ்ந்து போகலாமா ?

இதைச் சொல்லக் கொதிக்குது நெஞ்சு.வெந்து புண்ணாகுது உள்ளம்.

கடும் உழைப்புக்குப் பிறகு வரும் நற்பயனே என்றும் நின்று நிலைக்கக் கூடியது; நம் பெயரைக் காலக் கல்வெட்டில் நிரந்தரமாகப் பொறிக்கக்கூடியது அது மட்டும்தான்.

கல்வித் துறையில் பல புரட்சிகரமான மாற்றங்கள் நடந்து வருவதாகச் சொல்லிக் கொள்ளும் இந்தக் கால கட்டத்தில் உயர்கல்வியின் தரம் தரைமட்டமாகித் தகர்ந்து போவதைக் கல்வித் துறை தடுத்தே ஆக வேண்டும் ;

அரைகுறைஅறிவுஜீவிகள் வெள்ளமாகப் பெருகிவருமுன் அதற்கு ஒரு அணை கட்டாயம் போடப்பட்டே ஆகவேண்டும்.

நன்றி:வடக்கு வாசல் ஆக.09

http://www.vadakkuvaasal.com/

இணைப்பு:மெல்லத் தமிழினி நீர்க்கு(ம்)மோ?

1 கருத்து :

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

உண்மைதான் அம்மா இன்று கல்வியின் நிலை தரம் தாழ்ந்து போய்கொண்டுதான் இருக்கின்றது......உங்களின் ஆதங்கம் புரிகின்றது இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லுமா? இல்லை இதனைச் சார்ந்தவர்கள் சிந்திப்பார்களா?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....