துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

29.6.10

முள்

மீண்டும் ஒரு சுய சரிதம்.
இதுவும் ஒரு பெண்ணின் போராட்ட வாழ்க்கைதான்.
தொழுநோய் என்ற கொடுநோயின் தாக்குதலிலிருந்து தீரத்தோடு மீண்டெழுந்த ஒரு பெண்ணின் வரலாறு இது.

முத்துமீனாள் என்பவர் எழுதி ஆழிபதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டிருக்கும் முள் என்னும் நாவல்தன்மை கொண்ட சுயசரிதை, உண்மையும்,நேர்மையுமான வாழ்க்கைச் சித்திரங்களை அலங்கார வார்த்தை ஜோடனைகள் அற்ற மிக எளிமையான பதிவுகளாக நம் கண்முன் விரிக்கிறது.

வாழ்வின் பல நிலைகளிலும் சிக்கல்களையும் போராட்டங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தாலும் எந்த ஒரு நிகழ்விலும் தன்னுணர்ச்சி என்பதைக் கொஞ்சமும்  கலவாமல் ஒரு தன்வரலாற்றை எப்படி எழுத முடிந்தது  என்ற வியப்பை ஊட்டும் வித்தியாசமான நூலாக இருப்பதே முள்ளின் சிறப்பு.

நூலின் தலைப்பு முள் என்று இருந்தாலும் வாழ்வில் எதிர்ப்படநேரும் எதையும் ஒரு முள் உறுத்தலாகவோ, இடையீடாகவோ எண்ணாதவராகவே நூலாசிரியர் தன் வாழ்க்கையை எதிர்கொண்டிருக்கிறார்.

கன்னத்தில் தொழுநோயின் அறிகுறி தென்பட்டாலும்,காலில் முள்தைத்துப் புரையோடிப் போனாலும் வீட்டார் கலங்குகிறார்களே தவிர இவர் சற்றும் தளரவில்லை.அவற்றிலிருந்து மீளக் கிடைக்கும் வழிகளை இறுகப்  பற்றியபடி போய்க்கொண்டே இருக்கிறார்.அந்த நிகழ்வுகள் பற்றி விவரிக்கும்போதும் மனக் குமுறலோ,துயரமோ சிறிதுமின்றி யாருக்கோ எப்போதோ நடந்துபோன ஒன்றைச்  சொல்லுவதைப் போலச் செய்தி வாசிக்கும் பாவனையில் அடுக்கிக் கொண்டே போகிறார்.அவற்றிலிருந்து மீண்டு வந்த மகிழ்ச்சியையும் கூட வீரதீர சாகசம் போல விவரிக்காமல் இயல்பான ஒரு டயரிக் குறிப்பாகவே முன்வைக்கிறார்.

தனக்குக் கல்வியளித்து,சிகிச்சையும் அளித்த மாற்றுமதத்தாரை நன்றியோடும்,விசுவாசத்தோடும் நினைவுகூரும் இவர் அதற்குக் காணிக்கையாக மதமாற்றம் செய்து கொண்டு தன் சுய கௌரவத்தைத் தொலைத்துக் கொள்ளச் சற்றும் உடன்படவில்லை.
வறுமை வாட்டினாலும் வெளிநாட்டுத் தம்பதியருக்குத் தத்துப் பிள்ளையாகவும் மனம் கொள்ளவில்லை.

கல்வியைத் தவிர இவர் கொள்ளும் பற்றுக் கோடு வேறெதுவுமில்லை.
அதுவே இவருக்குத் தன்னம்பிக்கை அளிக்கிறது.
வாழ்வின் மேடு பள்ளங்களை உள்ளபடி ஏற்று முன்னேறிக் கொண்டே செல்ல  வைக்கிறது.
தொழுநோயின் பிடியிலிருந்து முற்றாக விடுபட்டபோதும்,பழைய கண்ணோட்டத்துடன் மட்டுமே அவரைப் பார்க்கும் சமூகம் திருமணத்துக்கு முட்டுக்கட்டை போடும் தருணங்களையும் கூட முத்துமீனாள்,சம்பவங்களாகச் சொல்லிக் கொண்டு போகிறாரே தவிர அவற்றால் மனம் கலங்கிப் போய்விடுவதில்லை.

தற்பொழுது,இலக்கியவாதியாகிய பௌத்த ஐயனாரின் மனைவியாய் , ஒரு மகனுக்கு அன்னையாய் ,சைவதீட்சை பெற்றுத் தன் அகத் தேடலையும் நிறைவு செய்து கொண்டு வாழும் முத்துமீனாளின் வாழ்க்கை வரலாறு.,.சின்னச் சின்னத் துயரங்களுக்கெல்லாம் மாய்ந்து போய்த் தங்களையே மாய்க்கத் துடிப்போர்க்கும்,சிறிய வெற்றியைப் பெரிய சாதனையாய்க் கொண்டு இறுமாப்புக் கொள்வோருக்கும் ஒரு பாடம் என்றே சொல்லலாம்.

’யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
  அதனின் அதனின் இலன்’’
என்ற குறளின் வாழ்க்கைச் சான்றாய், வாழ்வின் கதிக்குத் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டு - வியத்தலும் இகழ்தலும் இன்றி வாழ்ந்த முத்துமீனாளின்
முள் ’’குறையொன்றுமில்லை’’என்ற ராஜாஜியின் பாடலையே மனதுக்குள் ஒலிக்க வைக்கிறது.

நூலைப் படிக்க;
முள்,முத்துமீனாள்,ஆழி பதிப்பகம், சென்னை
http://www.aazhipublishers.com/

24.6.10

'இராவணன்'- சில ஏமாற்றங்கள்

மணிரத்தினத்தின் படங்களின் மீது  ஆங்காங்கே சில விமரிசனங்கள் இருந்தபோதும் வெவ்வேறான அவரது கதைக் களங்கள், சில வித்தியாசமான பார்வைகள், புத்திஜீவித் தனமான அணுகுமுறைகள்,காமரா கோணங்கள் ஆகியவற்றின் மீது ஓரளவு மதிப்பு இருந்து கொண்டிருந்தது உண்மைதான்.....!ஆனால் ஆயுத எழுத்தில் சிதைந்துபோகத் தொடங்கிய மணியின் பிம்பம் இராவணனில் அடியோடு சிதைந்து நொறுங்கிப் போகுமென்பதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இராவணன் வெளியீட்டை ஒட்டித் தமிழகப்பயணம் இருந்ததால் அதையும் ஒரு கை பார்த்துவிட எண்ணித்  திரையரங்கின்  உள்ளே நுழைந்துவிட்டுப் பிறகு ஒரு இயக்குநரின் வீழ்ச்சியை எண்ணி மனம் கனத்துப் போக.....வீணே வரவழைத்துக் கொண்ட சித்திரவதைதானே இது!

கர்ணன் கதையைத் தளபதியாக்கிய பாணியில் கூட ஒரு நயமும் நறுவிசும் இருந்தது. இராவணனிலோ குழப்பம் என்ற ஒன்றைத் தவிர வேறெதுவுமே மிச்சமில்லை.

சூர்ப்பனகையின் இடத்தில் சிறுமைப்பட்ட சகோதரிக்காகப் பழி  வாங்க வேண்டித்  தன் கணவனைக் கடவுளாக(ராமன்?) எண்ணும் ராகினியாகிய சீதையைக் கவர்ந்துவரும் வீரா என்ற இராவணன் , மனதுக்குள் சலனம் சம்பவித்தபோதும் அவளைத் தீண்டாமல் காட்டுச் சிறையில் வைக்க , வாலியை மறைந்து நின்று கொன்ற இராமனைப் போலத் தன மனைவியின் கற்பைக் கேள்விக் குறியாக்கி அந்தக் கவசத்துக்குள் மறைந்து நின்றபடி வீராவைக் கொன்று தீர்க்கிறான் ராகினியின் போலீஸ் கணவனாகிய இராமன்.
இடை இடையே கும்பகர்ணனை நினைவுபடுத்த ஒரு பிரபு ,அனுமனை நினைவுகூர ஒரு கார்த்திக் என்று அடுக்கடுக்கான கத்துக் குட்டித் தனங்கள்.

இப்படி ஒரு சிறுபிள்ளைத் தனமான கதைக்கு மணிரத்தினம் எதற்கு?

விக்கிரம்,ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் அற்புதமான நடிப்பும்,படக் குழுவினரின் கடும் உழைப்பும் காட்சிக்குக் காட்சி கண்ணில் பட்டுக் கொண்டே இருந்தாலும் சாரமில்லாத கதை பிற எல்லாவற்றையும் பொருளற்றதாக...கேலிக் கூத்தாக ஆக்கி விடுகிறதே?

படத்தின் ஒரே ஆறுதல் பிரம்மாண்டமான காட்சி அமைப்புக்களும், காடு மலை அருவிகளில் சுற்றி அலையும் காமராவும்தான் என்றாலும்  அங்கேயும் ஒரு நெருடல்! காட்டின் அழகையும் அமைதியையும்  ஒருபுறம் ரசித்தாலும் அவற்றைக் காட்சிப்படுத்தக் காட்டின் அமைதி எந்த அளவு குலைந்திருக்கும் என்பதை ஒரு கணம் எண்ணிப் பார்த்தாலும் கூட  இயற்கையை நேசிப்பவர்களுக்கு மனம் அதிலிருந்தும் அன்னியமாகிவிடுவது உறுதி.

நாயகனில் படிப்படியாக வேலு நாயக்கரின் நாயக பிம்பத்தை வளர்த்தெடுத்த  மணிரத்தினம்,வீராவின் நாயக பிம்பத்துக்கான காரணத்தை   எங்குமே தெளிவாகக்  காட்டவில்லை.
பொதுப்படையாக   ஒரு போற்றிப் பாடல் ....ஒடுக்கப்பட்டவன்,மேட்டுக்குடி என்ற வசனம்  ..அந்த அளவில்  எந்த மண்வாசனையும்  படத்தில் இனம் காணக் கூடியதாக இல்லை..

தன் மீது  சந்தேகம் கொண்டு அதையே எதிரியைப் பிடிக்க வலையாய் விரித்த   கணவனை ராகினி (ஐஸ்வர்யா) நிராகரித்துவிட்டுப்போவது  போலக் குறிப்பாகவாவது      இறுதியில் ஒரு காட்சி வந்திருந்தால் குறைந்த பட்சம் அந்தத் துணிவுக்காகவாவது படத்தைக் கொஞ்சம் பாராட்டியிருக்கலாம்.(அக்கினிப் பிரவேசம் செய்ய மறுக்கும் சீதையாக )
ஆனால் இயக்குனருக்கு யார் மீது அச்சமோ ....ராகினி உறைந்து நிற்பதோடு படம் முடிந்து விடுகிறது.

சண்டையும் கூச்சலுமாக ....இரைச்சலும் குத்துவெட்டுமாகப் படமெடுக்க நிறையப் பேர் உண்டு.
ஆனால் மௌன ராகம்,ரோஜா,பம்பாய்,அலைபாயுதே,கன்னத்தில் முத்தமிட்டால், இருவர் தந்த மணிரத்தினத்திடம்   அவற்றை எதிர்பார்க்காததால் ஏமாற்றமே எஞ்சி நிற்கிறது.
மணிரத்தினத்தின் பழைய பொற்காலங்களில் இளைப்பாறிக் கொள்ள வேண்டியதுதான் போலிருக்கிறது !

21.6.10

’அசடன்’ ஒரு முன்னோட்டம்

இளவரசன் மிஷ்கின்/இடியட்
இரண்டு ஆண்டுக்காலம் நீண்டு போன பணி நிறைவுற்றிருக்கிறது.

மாமேதையும்,உலகப் புகழ் பெற்ற நாவலாசிரியருமான தஸ்தாயெவ்ஸ்கியின் இடியட் நாவலை (அசடன்) முழுமையாக மொழியாக்கம் செய்து  முடித்திருக்கிறேன்.
 இத் தருணம் ஒரு வகையில் நிறைவளித்தாலும் நாவலுக்கு நெருக்கமாகப் போய் அதோடு ஒன்றியிருந்த கணங்கள் முடிவுக்கு வந்து விட்டதே என்ற வருத்தத்தையும் கிளர்த்துகிறது.

2006இல் தஸ்தாயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ நாவலை மொழியாக்கம் செய்திருந்தேன்.அது 2007இன் இறுதியில் வெளிவந்து இலக்கிய வட்டத்தில் வரவேற்புப் பெற்றது.
'குற்றமும் தண்டனையும் மொழியாக்க அனுபவம்
http://masusila.blogspot.com/2008/10/blog-post_31.html

குற்றமும், தண்டனையும் - கடிதங்கள்
http://masusila.blogspot.com/2009/03/blog-post_24.html

குற்றமும் தண்டனையும் மேலும் கடிதங்கள்
http://masusila.blogspot.com/2009/04/blog-post.html

குற்றமும், தண்டனையும் : இன்னும் சில கடிதங்கள்
http://masusila.blogspot.com/2009/05/blog-post_20.html

அதனால் விளைந்த ஊக்கமே என்னையும்,பதிப்பகத்தாரையும் இடியட் நாவலை மொழிபெயர்க்கும் தூண்டுதலை அளித்தது.

குற்றமும் தண்டனையும் நாவலை விடவும் அளவில் பெரிய நாவல் இடியட்.(4பாகங்கள்).
மேலும் அந்த நாவலைப் போல ஒரே சீரான  ஒருமுகத் தன்மை அற்றதாய்ப் பல்வேறு முடிச்சுக்களும் பலரின் உணர்வுப் போராட்டங்களும் இணைந்த ஒரு கலவை இடியட்.

பல இடங்களில் திணறவும் தடுமாறவும் வைத்தாலும் மனித மனங்களின் ஆழங்காண முடியாத புள்ளிகளைத் தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்தின் வழி எட்டவும்,தரிசிக்கவும் முடிந்தபோது ஏற்பட்ட பரவசச் சிலிர்ப்பு வார்த்தையில் விவரிக்க ஒண்ணாதது.

என் கையெழுத்துப் பிரதியாக 1400 பக்கங்களைத் தொட்டிருக்கும் ’அசடன்’ அச்சுக்காகப் பதிப்பாளர் வசத்தில் இப்பொழுது இருக்கிறது.
2,3, மூன்று மாதங்களில் அச்சுக் கோத்துப் பிழைதிருத்தம் செய்து முடித்து ஆண்டு இறுதிக்குள் - புத்தகக் கண்காட்சிக்கு முன் - அது வெளிவந்துவிட
வேண்டுமென்பதே என் விழைவும்,பதிப்பகத்தாரின் விழைவுமாகும்.

என் எழுத்தின் மீது நம்பிக்கை வைத்து ஒப்பற்ற இப் பணியை என் வசம் ஒப்புவித்த
மதுரை பாரதி புத்தக நிலைய உரிமையாளர் திரு துரைப்பாண்டி அவர்களுக்கு இப் பதிவின் வழி என் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிஉணர்வை உரித்தாக்குகிறேன்.

குற்றமும் தண்டனையும் போலவே மிகச் சிறப்பான பதிப்பாக - உரிய திரைப்படக் காட்சிப் படங்களுடன்- ‘அசடன்’நாவலையும் அவர் வெளியிடவிருக்கும் நாள் நோக்கி வாசகர்களைப் போலவே நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

முன் பதிவு மற்றும் நூலைப் பெற முகவரி;
Mr.Duraippaandi,
BARATHI BOOK HOUSE,
D - 28 , CORPORATION SHOPPING COMPLEX(SOUTH INSIDE),
OPP.PERIYAR BUSSTAND,MADURAI-625 001

2.6.10

சங்கப்பெண்ணெழுத்தில் தாய்மை

பெண்ணால் மட்டுமே அனுபவித்து உள் வாங்கி வெளிப்படுத்தக்கூடிய அபூர்வமான ஒரு உணர்வு தாய்மை.

ஆண் கவிஞர்கள் தாய்மையின் சிறப்பைப் பாடலாம்;
ஆனால் அந்த உணர்வைக் கருப்பொருளாக்கிப் பெண்கள் கவி புனைகையில் உண்மையில் தோய்ந்து வருவதால் அது ஆழமும்,அழுத்தமும் பெற்றுவிடுகிறது.

கடல் நீரைச் சுமந்து வானில் மெள்ள அசைந்து செல்லும் கார்காலத்துக் கரிய மேகத்தைக் காண்கிறார் நன்னாகையார் என்னும் சங்கப் பெண்புலவர்.
நிறைமாதக் கருப்பிணி ஒருத்தி மெள்ள அசைந்தபடி நடந்து செல்லும் காட்சியை அது அவருக்கு நினைவுபடுத்துகிறது.

புளிப்புச் சுவையின் மீது வேட்கை கொண்ட கருவுற்ற பெண்கள்,வயிற்றுச் சூலின் சுமையைப் பொறுத்துக் கொண்டபடி தள்ளாடி நடப்பதைப் போல நீர்கொண்ட மேகங்கள் வானில் ஏறமாட்டாமல் தத்தளித்துத் தவிப்பதாக அதைக் காட்சிப் படுத்துகிறார் அவர்.


‘’.........பசும்புளி வேட்கைக்
  கடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு’’
தடுமாறும் மேகம் பற்றி அவர் தீட்டும் கவிச் சித்திரம் பெண்ணெழுத்தில் மட்டுமே காணக் கூடிய தனித்துவம் பெற்றதாய்ச் சிறக்கிறது.

ஒக்கூர் மாசாத்தியார் என்ற இன்னுமொரு சங்கப் பெண்புலவர், மழையால் தழைத்துச் செழித்திருக்கும் முல்லைநிலக் காட்டுக்கு உவமை கூற வரும்போது மென்மையான தாய்க்கிளி அருமையாக வளர்த்த முதிர்ச்சியடையாத கிளிக் குஞ்சின் இறகைப் போல அந்தக் காட்டில் பயிர்கள் வளர்ந்திருப்பதாக வருணிக்கிறார்.

‘’தளிரியல் கிள்ளை இனிதின் எடுத்த
   வளராப் பிள்ளைத் தூவி அன்ன
   வளர்பெயல் வளர்ந்த பைம் பயிர்ப் புறவு’’
(இலையின் தளிர் போன்ற மென்மையான தாய்க் கிளி அன்புடன் பெற்ற்றெடுத்த வளர்ச்சியடையாத கிளிப் பிள்ளைகளின் மெல்லிய இறக்கையைப் போல மழையால் தழைத்திருக்கும் பசுமையான முல்லைநிலப்பயிர்கள்)

தலைவியைக் காண்பதற்காக அடிக்கடி தலைவன்  ஊருக்கு வந்து செல்வதால் எழும் வம்புப் பேச்சுக்களைத் தனது மற்றுமொரு குறுந்தொகைப்பாடலில் வருணிக்க முற்படும்போதும் அதே தாய்மை உணர்வு ஒக்கூர் மாசாத்தியாரை ஆக்கிரமிக்கிறது.
காட்டுப் பூனை ஒன்றின் வருகையைக் கண்ட பெட்டைக் கோழி தன் குஞ்சுகளை அதன் பிடியிலிருந்து காக்க முயலும்போது எழுப்பும் சத்தத்தை ஊரார் பேச்சுக்கு உவமையாக்குகிறார் அவர்.

சேயின் பராமரிப்பு என்பது இன்றைய சூழலிலும் கூடத் தாயின் கடமையாகவே அமைந்து போயிருக்கும் நிலையில்
‘ஈன்று புறந்தருதல்’ தாயின் தலையாய கடனாகக் கருதப்பட்ட சங்கச் சமுதாயத்தில் கவிதை படைக்கும் தருணங்களிலும் கூடப் பெண்ணின்  தாய்மை சார்ந்த சொந்த அனுபவங்களே கவிதைகளாகவும்,வேறு வகையிலும் வெளிப்பாடு கொண்டிருப்பதில் வியப்பில்லை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....