துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

2.6.10

சங்கப்பெண்ணெழுத்தில் தாய்மை

பெண்ணால் மட்டுமே அனுபவித்து உள் வாங்கி வெளிப்படுத்தக்கூடிய அபூர்வமான ஒரு உணர்வு தாய்மை.

ஆண் கவிஞர்கள் தாய்மையின் சிறப்பைப் பாடலாம்;
ஆனால் அந்த உணர்வைக் கருப்பொருளாக்கிப் பெண்கள் கவி புனைகையில் உண்மையில் தோய்ந்து வருவதால் அது ஆழமும்,அழுத்தமும் பெற்றுவிடுகிறது.

கடல் நீரைச் சுமந்து வானில் மெள்ள அசைந்து செல்லும் கார்காலத்துக் கரிய மேகத்தைக் காண்கிறார் நன்னாகையார் என்னும் சங்கப் பெண்புலவர்.
நிறைமாதக் கருப்பிணி ஒருத்தி மெள்ள அசைந்தபடி நடந்து செல்லும் காட்சியை அது அவருக்கு நினைவுபடுத்துகிறது.

புளிப்புச் சுவையின் மீது வேட்கை கொண்ட கருவுற்ற பெண்கள்,வயிற்றுச் சூலின் சுமையைப் பொறுத்துக் கொண்டபடி தள்ளாடி நடப்பதைப் போல நீர்கொண்ட மேகங்கள் வானில் ஏறமாட்டாமல் தத்தளித்துத் தவிப்பதாக அதைக் காட்சிப் படுத்துகிறார் அவர்.


‘’.........பசும்புளி வேட்கைக்
  கடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு’’
தடுமாறும் மேகம் பற்றி அவர் தீட்டும் கவிச் சித்திரம் பெண்ணெழுத்தில் மட்டுமே காணக் கூடிய தனித்துவம் பெற்றதாய்ச் சிறக்கிறது.

ஒக்கூர் மாசாத்தியார் என்ற இன்னுமொரு சங்கப் பெண்புலவர், மழையால் தழைத்துச் செழித்திருக்கும் முல்லைநிலக் காட்டுக்கு உவமை கூற வரும்போது மென்மையான தாய்க்கிளி அருமையாக வளர்த்த முதிர்ச்சியடையாத கிளிக் குஞ்சின் இறகைப் போல அந்தக் காட்டில் பயிர்கள் வளர்ந்திருப்பதாக வருணிக்கிறார்.

‘’தளிரியல் கிள்ளை இனிதின் எடுத்த
   வளராப் பிள்ளைத் தூவி அன்ன
   வளர்பெயல் வளர்ந்த பைம் பயிர்ப் புறவு’’
(இலையின் தளிர் போன்ற மென்மையான தாய்க் கிளி அன்புடன் பெற்ற்றெடுத்த வளர்ச்சியடையாத கிளிப் பிள்ளைகளின் மெல்லிய இறக்கையைப் போல மழையால் தழைத்திருக்கும் பசுமையான முல்லைநிலப்பயிர்கள்)

தலைவியைக் காண்பதற்காக அடிக்கடி தலைவன்  ஊருக்கு வந்து செல்வதால் எழும் வம்புப் பேச்சுக்களைத் தனது மற்றுமொரு குறுந்தொகைப்பாடலில் வருணிக்க முற்படும்போதும் அதே தாய்மை உணர்வு ஒக்கூர் மாசாத்தியாரை ஆக்கிரமிக்கிறது.
காட்டுப் பூனை ஒன்றின் வருகையைக் கண்ட பெட்டைக் கோழி தன் குஞ்சுகளை அதன் பிடியிலிருந்து காக்க முயலும்போது எழுப்பும் சத்தத்தை ஊரார் பேச்சுக்கு உவமையாக்குகிறார் அவர்.

சேயின் பராமரிப்பு என்பது இன்றைய சூழலிலும் கூடத் தாயின் கடமையாகவே அமைந்து போயிருக்கும் நிலையில்
‘ஈன்று புறந்தருதல்’ தாயின் தலையாய கடனாகக் கருதப்பட்ட சங்கச் சமுதாயத்தில் கவிதை படைக்கும் தருணங்களிலும் கூடப் பெண்ணின்  தாய்மை சார்ந்த சொந்த அனுபவங்களே கவிதைகளாகவும்,வேறு வகையிலும் வெளிப்பாடு கொண்டிருப்பதில் வியப்பில்லை.

2 கருத்துகள் :

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அருமையான பகிர்வு.

“ஆண் கவிஞர்கள் தாய்மையின் சிறப்பைப் பாடலாம்;
ஆனால் அந்த உணர்வைக் கருப்பொருளாக்கிப் பெண்கள் கவி புனைகையில் உண்மையில் தோய்ந்து வருவதால் அது ஆழமும்,அழுத்தமும் பெற்றுவிடுகிறது.“


சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?..


உண்மைதான்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நன்றி பேரா.குணசீலன்.
பேனாவில் தாய்ப்பாலை மையாக அடைத்துக் கொண்டு பெண்கள் எழுத வேண்டும் என்று கூறும் இன்றைய பெண்ணியத் திறனாய்வாளர்களின் கருத்துக்களோடு என்றோ எழுதுகோல் ஏந்திய நம் சங்கப் பெண்புலவர்கள் ஒத்துப் போயிருப்பது விந்தையினும் விந்தைதான்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....