துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

29.6.10

முள்

மீண்டும் ஒரு சுய சரிதம்.
இதுவும் ஒரு பெண்ணின் போராட்ட வாழ்க்கைதான்.
தொழுநோய் என்ற கொடுநோயின் தாக்குதலிலிருந்து தீரத்தோடு மீண்டெழுந்த ஒரு பெண்ணின் வரலாறு இது.

முத்துமீனாள் என்பவர் எழுதி ஆழிபதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டிருக்கும் முள் என்னும் நாவல்தன்மை கொண்ட சுயசரிதை, உண்மையும்,நேர்மையுமான வாழ்க்கைச் சித்திரங்களை அலங்கார வார்த்தை ஜோடனைகள் அற்ற மிக எளிமையான பதிவுகளாக நம் கண்முன் விரிக்கிறது.

வாழ்வின் பல நிலைகளிலும் சிக்கல்களையும் போராட்டங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தாலும் எந்த ஒரு நிகழ்விலும் தன்னுணர்ச்சி என்பதைக் கொஞ்சமும்  கலவாமல் ஒரு தன்வரலாற்றை எப்படி எழுத முடிந்தது  என்ற வியப்பை ஊட்டும் வித்தியாசமான நூலாக இருப்பதே முள்ளின் சிறப்பு.

நூலின் தலைப்பு முள் என்று இருந்தாலும் வாழ்வில் எதிர்ப்படநேரும் எதையும் ஒரு முள் உறுத்தலாகவோ, இடையீடாகவோ எண்ணாதவராகவே நூலாசிரியர் தன் வாழ்க்கையை எதிர்கொண்டிருக்கிறார்.

கன்னத்தில் தொழுநோயின் அறிகுறி தென்பட்டாலும்,காலில் முள்தைத்துப் புரையோடிப் போனாலும் வீட்டார் கலங்குகிறார்களே தவிர இவர் சற்றும் தளரவில்லை.அவற்றிலிருந்து மீளக் கிடைக்கும் வழிகளை இறுகப்  பற்றியபடி போய்க்கொண்டே இருக்கிறார்.அந்த நிகழ்வுகள் பற்றி விவரிக்கும்போதும் மனக் குமுறலோ,துயரமோ சிறிதுமின்றி யாருக்கோ எப்போதோ நடந்துபோன ஒன்றைச்  சொல்லுவதைப் போலச் செய்தி வாசிக்கும் பாவனையில் அடுக்கிக் கொண்டே போகிறார்.அவற்றிலிருந்து மீண்டு வந்த மகிழ்ச்சியையும் கூட வீரதீர சாகசம் போல விவரிக்காமல் இயல்பான ஒரு டயரிக் குறிப்பாகவே முன்வைக்கிறார்.

தனக்குக் கல்வியளித்து,சிகிச்சையும் அளித்த மாற்றுமதத்தாரை நன்றியோடும்,விசுவாசத்தோடும் நினைவுகூரும் இவர் அதற்குக் காணிக்கையாக மதமாற்றம் செய்து கொண்டு தன் சுய கௌரவத்தைத் தொலைத்துக் கொள்ளச் சற்றும் உடன்படவில்லை.
வறுமை வாட்டினாலும் வெளிநாட்டுத் தம்பதியருக்குத் தத்துப் பிள்ளையாகவும் மனம் கொள்ளவில்லை.

கல்வியைத் தவிர இவர் கொள்ளும் பற்றுக் கோடு வேறெதுவுமில்லை.
அதுவே இவருக்குத் தன்னம்பிக்கை அளிக்கிறது.
வாழ்வின் மேடு பள்ளங்களை உள்ளபடி ஏற்று முன்னேறிக் கொண்டே செல்ல  வைக்கிறது.
தொழுநோயின் பிடியிலிருந்து முற்றாக விடுபட்டபோதும்,பழைய கண்ணோட்டத்துடன் மட்டுமே அவரைப் பார்க்கும் சமூகம் திருமணத்துக்கு முட்டுக்கட்டை போடும் தருணங்களையும் கூட முத்துமீனாள்,சம்பவங்களாகச் சொல்லிக் கொண்டு போகிறாரே தவிர அவற்றால் மனம் கலங்கிப் போய்விடுவதில்லை.

தற்பொழுது,இலக்கியவாதியாகிய பௌத்த ஐயனாரின் மனைவியாய் , ஒரு மகனுக்கு அன்னையாய் ,சைவதீட்சை பெற்றுத் தன் அகத் தேடலையும் நிறைவு செய்து கொண்டு வாழும் முத்துமீனாளின் வாழ்க்கை வரலாறு.,.சின்னச் சின்னத் துயரங்களுக்கெல்லாம் மாய்ந்து போய்த் தங்களையே மாய்க்கத் துடிப்போர்க்கும்,சிறிய வெற்றியைப் பெரிய சாதனையாய்க் கொண்டு இறுமாப்புக் கொள்வோருக்கும் ஒரு பாடம் என்றே சொல்லலாம்.

’யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
  அதனின் அதனின் இலன்’’
என்ற குறளின் வாழ்க்கைச் சான்றாய், வாழ்வின் கதிக்குத் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டு - வியத்தலும் இகழ்தலும் இன்றி வாழ்ந்த முத்துமீனாளின்
முள் ’’குறையொன்றுமில்லை’’என்ற ராஜாஜியின் பாடலையே மனதுக்குள் ஒலிக்க வைக்கிறது.

நூலைப் படிக்க;
முள்,முத்துமீனாள்,ஆழி பதிப்பகம், சென்னை
http://www.aazhipublishers.com/

1 கருத்து :

மகாவிட்டலன் சொன்னது…

நான் சமீபத்தில் வாசித்து பிரமிப்படைந்த நாவல் முள் - திருமதி .முத்துமீனாள் அவர்கள் எழுதிய அந்த நாவலை வாசிக்கும் போது , புத்தகத்தை மூடி வைக்க தோன்றவே இல்லை . ஒரே முறையில் முழுவதுமாய் வாசித்து விட்டேன் . முள் நாவலுக்கு பின் இதே போன்று வாசிப்பு சுகத்தை அனுபவித்து வாசித்த நாவல் திரு . அசோகமித்திரன் அவர்களின் தண்ணீர் .
தங்களின் பதிவில் முள் நாவலை பற்றி வாசித்தேன் . மீண்டும் பழைய நினைவுகள் பருவ காலங்களைப் போல வந்து சென்றது .
முள் நாவலின் மையவோட்டமே தன்னம்பிக்கைதான்.
முள் பற்றி எழுதிய என்
அன்னைக்கு கோடி வணக்கங்கள் .

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....