துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

12.7.10

காலாட்படை

’’வரலாற்றின் பக்கங்களில் தானைத் தலைவர்களின் பெயர்கள் பொன் எழுத்துக்களில் எழுதப்பட்டு ஜொலிக்கும்.
அவர்களது வீரத்தையும்,நாட்டுப் பற்றையும் போற்றிப் பக்கம் பக்கமாக எழுதப்படும்.
ஆனால் வாழ்க்கைப் போரில் பங்கு பெற்ற காலாட்படைக்கு  வாழ்க்கைப்போரில்  தோல்விதான் மிச்சம்’’......

தான் பணி புரியும்  அலுவலகச் சங்க ஊழியர்களுக்கிடையே உரை நிகழ்த்த இவ்வாறானதொரு ஆக்ரோஷமான உரையைத் தயார் செய்து கொண்டிருக்கிறாள் ஜெயந்தி.
அந்த எண்ண ஓட்டத்தில் தொடர்ந்து பயணிக்க இயலாமல்,...அந்த இழையைப் பிடித்தபடி கருத்தைக் கோவையாகக் கொண்டு செல்ல முடியாமல் வீட்டுச் சூழலின் இரைச்சலும் குழப்பமும் அவளைத் தடுக்கிறது.

வீட்டு வேலைச் சுமையின் பளுவைத் தாங்க மாட்டாமல் அம்மா சாவித்திரி முழுநேரமும் புலம்பிக் கொண்டே இருப்பது அவளுக்குக் கடுமையான எரிச்சலையும், சில வேளைகளில் ஆச்சரியத்தையும் தோற்றுவிக்கிறது.

‘ஒரு சிறிய குடும்பத்தைச் சமாளிப்பது , அதிலுள்ளவர்களுக்குச் சாப்பாடு தயாரித்துப் போடுவது அவ்வளவு கஷ்டமான விஷயமா’ என்று நினைக்கும் அவளுக்குத் தானும் தந்தையும் வெளிவேலைக்குப் போய்ப் பொருளீட்டி வருவது மட்டும்தான்  மிகவும்  சிரமமான வேலை என்று தோன்றுகிறது.

ஒரு சோறும் பருப்பும் வைக்க இந்த அம்மா ரொம்பவும்தான் அலட்டிக் கொள்கிறாள் என்றே அவளுக்குத் தோன்றுகிறது.
’’ஒழைக்காம யாரு சோறு திங்கிறாங்க . அனத்தலுக்கும் புலம்பலுக்கும் எல்லை கிடையாதா ? அம்மா என்ன பைத்தியமா’’என்கிறாள் அவள்.

’தன்னை அழைத்துச் செல்ல எமன் வர மாட்டானா’ என்று எப்பொழுது பார்த்தாலும் கத்திக் கொண்டே இருந்த சாவித்திரி அம்மா  திடீரென்று மயக்கம் போட்டு விழ , அவளுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி மண்டையிலுள்ள ரத்தக் குழாய் வெடித்து விட்டதாகவும் இனி சாவுக்குக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும்  தீர்ப்பு எழுதிவிட்டுப் போகிறார் மருத்துவர்.

வீட்டுப் பொறுப்புக்கள் இப்போது ஜெயந்தியின் தோளில்...

அடுப்புக்குள் குவிந்து கிடக்கும் சாம்பல் ......
(கதை நிகழ் காலம் சற்றுப் பின்னோக்கியது என்பதால் கீழ் மத்தியதர வர்க்கம் கூட இன்று பயன்படுத்தும் எரிவாயு அடுப்பு இல்லை)
இரைந்து கிடக்கும் முதல்நாள் பாத்திரங்கள் ....
குவிந்து கிடக்கும் துணி மூட்டைகள்......

டீ போட அடுப்புப் பற்ற வைக்கக் கூட முடியாமல் தவிக்கும் ஜெயந்தி..,மற்றும் அவள் சகோதரி மீனா.....
அவர்கள் படும் பாட்டைப் பொறுக்க முடியாமல் கடையில் தேநீர் அருந்தி விட்டு ரொட்டியும் பலகாரமும் வாங்கி வரும் தந்தை..

எலும்பும் தோலுமாய் உணர்ச்சியற்றுக் கிடக்கும் தாயையே பார்த்துக் கொண்டு நிற்கிறாள் ஜெயந்தி.
இந்த உடம்போடு இரவும் பகலும் அந்த வீட்டுச் சுமையை அவள் ஏற்று வந்திருக்கிறாள்.....
அவள் இயங்கிக் கொண்டிருந்தவரை ஒருநாள் கூட அவர்கள் ரொட்டி சாப்பிட்டு இரவைக் கழிக்க நேர்ந்ததில்லை.
குழாய்க் கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வர நேர்ந்ததில்லை.
அப்பா சமையலறைப் பக்கம் உதவிக்காகப் போக நேர்ந்ததில்லை.

இரவில் எல்லோரும் உறங்கிய பிறகும் வெகுநேரம் சமையலறையில் வேலை செய்து கொண்டிருப்பாள் அம்மா.
அடுப்பைச் சுத்தம் செய்து, பாத்திரம் கழுவி ,அறையைக் கழுவி அடுக்கடுக்காய் ஆயிரம் வேலைகள்..
மண்ணெண்ணையை மிச்சப்படுத்த விளக்கைச் சிறிதாய் எரிய விட்டபடி , சத்தம் போட்டுப் பிறர் தூக்கம் கெடுக்காதபடி, மறுநாள் சமையலுக்கானவற்றை அமைதியாய் ஆயத்தம் செய்து வைத்து....

அம்மா படுக்கப் போவதைப் பற்றி ,அவளும் தூங்கவேண்டுமென்பதைப்  பற்றி அப்போதெல்லாம் ஒரு நாளும் நினைத்துப் பார்த்ததில்லை ஜெயந்தி.

இப்போது அம்மாவைப் பற்றி நினைத்துப் பிரயோசனமில்லை...
‘அம்மா குடும்பத்திலிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு படுத்துக் கிடக்கிறாள்’

தினமும் சோறும் பருப்பும்தானா என்று அம்மா இருக்கும்போது அலுத்துக் கொண்ட அவளுக்கு அதை மட்டும் தயார் செய்து அந்தச் சிறிய குடும்பத்துக்குப் பரிமாறவே மதியம் மணி இரண்டாகி விடுகிறது.

நாளை...நாளை மறு நாள்....அதற்கும் மறு நாள்.....
இனி என்றுமே இந்த வேலைகளை அம்மா செய்யப் போவதில்லை.
ஒரு நாள் , ஒரு வேளைப் பாட்டைச் சமாளிக்கவே திணறித் திண்டாடி விட்ட அவளுக்கு எங்காவது ஓடிப் போய் விடலாமா என்று தோன்ற ஆரம்பிக்கையில் ,மணி ஐந்தடிக்கிறது.

 அலுவலகச் சங்கக் கூட்டத்தில் அவள்  பேசுவதற்கான நேரம் அது.

காலாட்படை வீரர்கள் அலட்சியப் படுத்தப் படுவதைப் பற்றித்தானே அவள் பேச இருந்தாள் ?

‘’காலாட்படை வீரர்கள் யார் ?
தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்கள் மட்டும்தானா...?’’
 என்ற கேள்வியைப் பூடகமாக  முன் வைத்தபடி  முடிகிறது
வங்க எழுத்தாளர் ஆஷா பூர்ணிமா தேவியின் ’காலாட்படை ’ என்னும் மேற்குறித்த சிறுகதை.
(மொழியாக்கம்; திரு சு.கிருஷ்ணமூர்த்தி - தொகுப்பு; கருப்பு சூரியன்)

அலுவலகத்தில் பணி ஓய்வு கிடைத்தாலும் வீட்டுப்பணியிலிருந்து பெண்ணுக்கு ஒரு நாளும் ஓய்வு கிடைப்பதில்லை.

பெயர் தெரியாத ஒரு கன்னடப் படம்...(கதையைப் படிக்கும் வாசகர்கள் எவருக்காவது பெயர் தெரிந்தால் சொன்னால் உதவியாக இருக்கும்.தமிழ் நடிகை லட்சுமி நடித்ததாக நினைவு)

அலுவலக வேலையிலிருந்து ஓய்வு பெற்று வீடு திரும்பும் கணவர் தன் மனைவியை அழைக்கிறார்.
’இனிமேல்தான் என் உடம்பை நீ பக்குவமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் பெண்ணே... குறிப்பிட்ட நேரங்களில்  ஆரோக்கிய பானங்கள் , பழச்சாறுகள்,காய்கறிச் சாறு என்று எந்தெந்த நேரத்தில் என்னென்ன என்பதற்கு ஒரு பட்டியல் தயார் செய்து வைத்துவிடப் போகிறேன்...
அதன்படி அனுசரித்து நடப்பது உன் கடமை ’ என்கிறார்....
55 ஐக் கடந்த அவள் உடலும் மனமும் கூட ஓய்வுக்காகக் கெஞ்சும் என்பது அவரது புத்திக்குப் புலனாவதில்லை.
தனக்கும் ஒரு ரிடையர்மெண்ட் - பணி ஓய்வு வேண்டுமென்றபடி அவரை நீங்கிச் செல்கிறாள் அவள்.

சில வருடங்களுக்கு  முன் என் தோழி பேராசிரியை அனுராதா எழுதிய
 ‘ சும்மாத்தான் இருக்கா’  என்ற சிறுகதை இதே கருத்தை மிகச் சுவையாக முன் வைக்கிறது.
வீட்டுக்கு வரும் நண்பர்களிடம்
 ‘அவ வேலைக்கெல்லாம் போகலை சும்மாதான் வீட்டில இருக்கா’என்று தன் மனைவியை அறிமுகப்படுத்தி வைக்கிறான்  கணவன்.
ஆனால் அவள் ஒரு நொடி...ஒரு நிமிடம் சும்மா இருப்பதில்லை என்பதையே கதை நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
வீட்டிலிருக்கும் பெண்  சும்மாதான்  இருப்பாள் என்ற  மாயையைப் பகடி செய்கிறது இந்தக் கதை.


பரீக்‌ஷா ஞாநி அவர்கள் நிகழ்த்திய ஒரு நாடகமும் கூட இந்தக் கருப் பொருள் சார்ந்தது.
அதிபுனைவு கொண்ட அப்படைப்பில்  எப்போதும் எரிச்சலூட்டும் தன் மனைவியைப் பயப்படுத்துவதற்காகவே  எலி வடிவம் எடுத்து வீட்டுக்குள் ஒளிந்து கொள்கிறான் கணவன்.
ஒரு நாள் முழுக்க மறைந்திருந்து அவளை ....
அடுக்கடுக்கான அவள் வேலைகளைப் பார்க்கும்போதுதான் இதுநாள்வரை அவன் காணத் தவறிய காட்சிகள் அவனுக்குத் தரிசனமாகி
அவளது மகத்துவத்தைப் புரிய வைக்கின்றன.

அசட்டுத்தனமான தொலைக் காட்சி உரையாடல்களில்
’‘ஒண்ணும் வேலை பாக்கலை...சும்மா வீட்டிலதான் இருக்கேன்...’’
என்று தங்களுக்கே தங்களைப் பற்றித் தெரியாத பேதமையோடு பெண்கள் யாரேனும் சொன்னால் தயவு செய்து யாரும் நம்ப வேண்டாம்..

அவர்கள் சும்மா இல்லை என்பது மட்டுமே நிதரிசன நிஜம்.

1 கருத்து :

Unknown சொன்னது…

தங்கள் வாழ்வையே குடும்ப நலனுக்காக உழைத்துவிட்டு உயிர் நீக்கும் பெண்களை பற்றிய மைய ஓட்டமாக இந்த காலாட்படை நூல் இருக்கிறது . நல்ல பகிர்வு .
தங்களுடைய "தடை ஓட்டங்கள் " என்ற சிறுகதையும் கூட இந்த கருப்பொருளை சேர்ந்ததுதானே ..

தேடலுடன்
தேவராஜ் விட்டலன்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....