துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

30.4.09

பிண அரசியலுக்கு நடுவே ஒரு மே தினம்

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடீ.....செம்மை மறந்தாரடீ...- பாரதி

முதல் நாள்

என் இடப் பக்கத்து வீட்டுக்காரனைக்

காவலர் கைது செய்தனர்

அவன் ஒரு யூதன் என்று சொல்லிக் கொண்டார்கள்

நான் கண்டு கொள்ளவில்லை

காரணம் நான் ஒரு யூதனில்லை


மறு நாள்

என் வலப்பக்க வீட்டுக்காரனை

அவர்கள் கைது செய்தனர்

அவன் ஒரு கத்தோலிக்கன் என்று சொன்னார்கள்

நான் கண்டு கொள்ளவில்லை

காரணம் நான் கத்தோலிக்கன் இல்லை

அதற்கு மறு நாள்

என் எதிர் வீட்டுக்காரனை

அவர்கள் சிறைப் பிடித்தனர்

அவனை ஒரு கம்யூனிஸ்ட் என்று சொன்னார்கள்

அப்போதும் நான் கண்டு கொள்ளவில்லை

காரணம் நான் கம்யூனிஸ்ட் இல்லை


ஐயோ ...இன்று என்ன நடக்கிறது?

அவர்கள்..........

என்னைக் கைது செய்கிறார்கள்

என் உதவிக்கு யாருமே இல்லை

பரவலாக அறியப்பட்டிருப்பதும், புகழ் பெற்றதுமான இந்த ஜெர்மானியக் கவிதையை இன்றைய மே தினத்தில் நினைவு கூரும் இத் தருணத்தில்,மே தின வாழ்த்துக் கூறவோ, மே தினச் செய்தி விடுக்கவோ இந்தியாவிலுள்ள எந்த அரசியல்வாதிக்குமே - தங்களைத் தலைவர் என்று கூறிக் கொள்ளும் எவருக்குமே தகுதியில்லை என்ற கசப்பான உண்மையை கனத்த இதயத்தோடு எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது.மொழி, இனம் ஆகிய சொற்கள், பொருளிழந்த வெற்றுச் சொற்களாக -
ஓட்டுப் பொறுக்குவதற்கு மட்டுமே கை கொடுப்பவைகளாக மாறிப்போய்ப் பல காலம் ஆகி விட்டது. இப்போது இந்தத் தேர்தல் காலத்தில் அது மேலும் சிறிது வீரியத்தோடு புதுப்பிக்கப்படுகிறது ...அவ்வளவுதான்.மலினமாகி மடிந்து கொண்டிருக்கும் மனித உயிர்களைப் பற்றிய மெய்யான கரிசனம் எவருக்குமே இல்லை.. அற்பப் பூச்சிகளைப் போல ஈழத்தில் அன்றாடம் பலியாகிற...,.பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகிச் சிதைந்து போகிற ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் நம்மைப் பார்த்துக் கெக்கலி கொட்டிச் சிரிக்க , நாம் எந்தக் கவலையும் இன்றி மே தின சிறப்புப் படக் காட்சியில் மூழ்கியபடி , பொழுதை 'இனிமையாகக்' கழித்துக் கொண்டிருக்கிறோம்.

வெற்று விளம்பரத்திற்காக அல்லாமல்,''என்று தணியும் இந்தக் கொடுமையெல்லாம்'' 'என்ற உள்ளார்ந்த ஆதங்கத்துடன்..உண்மையான உண்ணாநோன்பை ஆத்ம சுத்தியோடு கைக்கொண்டு , களத்தில் மெய்யாக இறங்கிப் போராட்டம் நிகழ்த்தும் தோழர், தோழியர்க்கு மட்டும் இந்த மே தினம் சமர்ப்பணம். கள பலியாகும் உயிர்ப்பலிகள் ஓய்ந்து, மனித மாண்புகள் தலையெடுக்க. .......உண்மையான போர் ஓய்வு பிறந்து, அமைதிப் பூக்கள் விரைவில் மலர.......சக மனித உயிரிகளாக விழைவதும் அதற்கான பங்களிப்பை அவரரவர்க்கு இயன்ற வகையில் செய்ய முற்படுவதும் மட்டுமே நம்மால் செய்யக் கூடியவை;அதுவே இத் தருணத்தில் ஒரு மகத்தான மானுடக் கடமையுமாகிறது.

படைப்பாளியின் ஆயுதம் அவனது எழுதுகோல் மட்டுமே.
இலங்கைத் தமிழரின் இன்னல்களுக்குத் தங்கள் எழுத்துக்களைப் போர்ப்படையாக்கிய படைப்பாளிகள் சிலரின் கவிதைகள் கீழே....

இக் கவிதைகளில் பலவும் '80களின் தொடக்கத்தில் எழுதப்பட்டவை. அப்பாவித் தமிழர் வாழ்வில் இது வரை மாற்றம் எதுவுமில்லை என்பதோடு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு போகும் அவர்களது நிலை நம் 'தலைவர்க'ளின் மனச்சாட்சியைக் கொஞ்சமாவது அசைக்க வேண்டாமா?

ஈழக் கவிதை வரிகளிலிருந்து......

காசி ஆனந்தன்

விடுதலை
சாகடிக்கப்படலாம்

நாங்கள் -

தோற்கடிக்கப்பட மாட்டோம்

உலக அமைதி
மாந்த நேயம் பேசின

அணுகுண்டுகள்

புறாக்களைப் பறக்க விட்டன

கழுகுகள்

போராடிக் கொண்டிருக்கிறது அமைதி

சிவசேகரம்
இந்தக் கரும்பனைகள்

இங்கேதான் முளைக்கும்

இடம் பெயரச் சொல்லி எவர்

வேரோடு கிள்ளி வெளியே எறிந்தாலும்

வடலி வளர முதல் வெட்டிச் சரித்தாலும்

இந்தக் கரும்பனைகள் இங்கேதான் முளைக்கும்


சிவரமணி
யுத்தகால

இரவொன்றின் நெருக்குதல்கள்

எங்கள் குழந்தைகளை

வளர்ந்தவர்கள் ஆக்கிவிடும்


ஒரு சிறிய குருவியினுடையதைப் போன்ற

அவர்களின் அழகிய காலையின் பாதையில்

குறுக்காய் வீசப்படும்

ஒவ்வொரு குருதி தோய்ந்த முகமற்ற மனித உடலும்

உயிர் நிறைந்த

அவர்களின் சிரிப்பின் மீதாய்

உடைந்து விழும் மதிற்சுவர்களும் காரணமாய்

எங்களுடைய சிறுவர்கள்

சிறுவர்களல்லாது போயினர்

சேரன்

மரணம்

காரணம் அற்றது

நியாயம் அற்றது

கோட்பாடுகளும் விழுமியங்களும்

அவ்வவ்விடத்தே உறைந்து போக

முடிவிலா அமைதி

நன்றி-படங்கள்:ஊடறு; பேய் ஆட்சி செய்கிறது பிணம் தின்ன வாருங்கள்!!
செல்வி
அமைதியான காலைப்பொழுது

காலைச் செம்மை கண்களைக் கவரும்

காகம் கரைதலும் இனிமையாய் ஒலிக்கும்....

எங்கும் அமைதி எதிலும் அமைதி

...பொழுது புலராக் கருமை வேளையில்

தடதடத்துறுமின வண்டிகள்

அவலக் குரல்கள் ஐயோ அம்மா

தோட்ட வெளிகள் அதிர்ந்து நடுங்கின

அங்குமிங்கும் காக்கி உடைகளாய்....

அள்ளி ஏற்றிய இளைஞர்கள்

மூச்சுத் திணறினர்

தாய்மையும்

தங்கையின் விம்மலும்

பொழுது புலர்தலின்

அவலமாய்க் கேட்டன

காகம் கரைவதும் நெருடலாய் ஒலித்தது

எங்கும் அச்சம் எதிலும் அமைதி

நேற்று வரையிலும் அமைதியான காலைப் பொழுது

மீண்டும் சேரன்
நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களானால் அது கண்ணீரின் குருதி

நீங்கள் ஒடுக்குபவர்களானால் அது குருதியின் கண்ணீர்
............

....எனது நகரம் எரிக்கப்பட்டது

எனது மக்கள் முகங்களை இழந்தனர்

எனது நிலம் எனது காற்று

எல்லாவற்றிலும் அந்நியப் பதிவு

கைகளைப் பின்புறம் இறுகக் கட்டி

யாருக்காகக் காத்திருந்தீர்கள்

முகில்கள் மீது

நெருப்பு

தன் செய்தியை எழுதியாயிற்று

இனியும் யார் காத்துள்ளனர்?

சாம்பல் பூத்ததெருக்களிலிருந்து எழுந்து வருக !

............

அரசியல் பிழைப்பில் ஆழ்ந்து போயிருக்கும்

அனைவரும் உணர்க

உங்கள் முதுகு நாண் கலங்கள்மீதும்

சாதிப்பிரிவினைப் பூஞ்சண வலைகள்

கங்கை கொண்டு கடாரம் வென்று

இமயக் கொடியில் விற்பொறி பொறித்துத்

தலைநிமிர்வுற்ற தமிழர் ஆளுமை

குனிந்த தலையுடன்

அம்மணமாய்த் தெருக்களில் திரிக

மானுட ஆண்மையின் நெற்றிக்கண்ணே இமை திற ! இமைதிற !

29.4.09

மேலாண்மை பொன்னுச்சாமியின் 'மின்சாரப் பூ'உண்மையான மன எழுச்சியுடன் - தான் உணர்ந்த சத்தியமான தரிசனங்களை - சமூகத்திற்கு ஆற்றும் தார்மீகக் கடமையாக, அறச் சீற்றத்துடன் முன்வைக்கும் படைப்புக்களைக் காலம் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தவறுவதில்லை என்பது, மேலாண்மை பொன்னுச்சாமிக்கு அளிக்கப்பட்டுள்ள சாகித்திய அகாதமி விருதின் வழி நிரூபணமாகியிருக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மேலாண்மறைநாடு என்னும் சிற்றூரில் வசித்தபடி, ஒரு புன்செய்க்காட்டு விவசாயியாக - சிறுகடை வியாபாரியாக வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் திரு.பொன்னுச்சாமி, ஐந்தாம் வகுப்பிற்கு மேல் தாண்டியதில்லை என்பது, பலருக்கும் ஆச்சரியமளிக்கும் ஒரு செய்தியாக இருக்கலாம்; ஆனால், ஆத்மாவின் ஆழங்களிலிருந்து தானாய் ஊற்றெடுத்துக் காட்டாறாய்ப் பெருக்கெடுக்கும் படைப்புக்கலை, படிப்போடு தொடர்பு கொண்டதில்லை என்பது ஏற்கனவே பல படைப்பாளிகளின் விஷயத்திலும் உறுதியாக்கப்பட்டிருக்கும் ஒன்றுதான்.
தான் சார்ந்துள்ள இடதுசாரி (முற்போக்கு இலக்கிய) நிலைப்பாட்டிற்கு ஏற்றகோட்பாடுகளைத் தான் அறிந்து பழகியுள்ள எளிமையான வாழ்க்கைக் களத்தோடு பொருத்தி, சிறுகதை, நாவல் இலக்கிய வடிவங்களாக்கித் தமிழுலகிற்கு அளித்திருப்பவர் மேலாண்மை பொன்னுச்சாமி.
தான் மிக நன்றாக அறிந்து ஆழங்கால் பட்ட ஒன்றை, தனது மூச்சு முழுவதும் நிரம்பி உட்கலந்து போன ஒன்றை - ஒரு படைப்பாளி, தன் படைப்புக்களில் முன் வைக்கும்போது, அங்கே செயற்கையான - போலித்தனமான எழுத்து ஜாலங்களும், சாகசங்களும் மறைந்து, யதார்த்தமான நிஜம் மட்டுமே மேலோங்கி நிற்பதைக் காண முடியும். இவரது எழுத்துக்களில் நாம் உணர முடிவதும் அந்த யதார்த்தத்தையும், பாசாங்குகளற்ற உண்மையான வாழ்க்கையையும் மட்டும்தான்!
பொதுவாகத் தொடர்ந்த இலக்கியப் பங்களிப்பையும், இலக்கியக் களத்தில் பல்லாண்டுக் காலம் இடையறாது இயங்கி வருவதையும் விருதுகள் கருத்தில் கொண்டிருந்தாலும் கூட - ஒரு எழுத்தாளரின் குறிப்பிட்ட ஒரு படைப்பே விருதிற்குரியதாகத் தேர்வு செய்யப்படுகிறது. அவ்வகையில் இவரது விருது பெற்றபடைப்பாகிய 'மின்சாரப் பூ', ஒன்பது சிறுகதைகளையும், ஒரு குறுநாவலளவுக்கு நீண்டு செல்லும் பெரியதொரு சிறுகதையையும் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது; அச்சிறுகதையின் தலைப்பே நூலின் தலைப்பாகவும் அமைந்திருக்கிறது.
இத்தொகுப்பிலுள்ள கதைகளில் இடம் பெறும் மையப் பாத்திரங்கள் - பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ்ப்பட்ட நிலையில் வாழும் அடித்தட்டு மக்கள்; விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகள். வறண்டு போன நிலப்பரப்பில் விவசாயம் கடினமாய்ப் போனதாலோ அல்லது, தங்கள் நிலங்களை ஆதிக்க வர்க்கத்தினரிடம் பறிகொடுத்து விட்டதாலோ மாற்றுத் தொழிலைச் செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு சிலரும் இவரது கதைகளில் உண்டு. வறுமையே வாழ்வாக அமைந்தபோதும், வாழ்வியல் அறங்களை முற்றாகத் தொலைத்து விடாதவர்கள் இவர்கள் என்பதையே பெரும்பான்மையான இவரது கதைகள் மையச் செய்தியாக முன்னிறுத்துகின்றன.
இத்தொகுப்பின் மிகப் பெரிய கதையாகிய 'மின்சாரப் பூ'வின் முதன்மைப் பாத்திரம் செந்தட்டி, சாதி அடுக்கில், தன்னை விடச் சற்று உயர்ந்த நிலையிலிருக்கும் வீரபாண்டியுடன் நெருங்கிய நட்புக் கொண்டவன். செந்தட்டியின் தந்தை மின்சாரம் தாக்கி இறந்து போகப் படிக்க வழியின்றி ஆடுமேய்க்கும் தொழிலைச் செய்துவரும் அவனுடன், ஒரு கட்டத்தில் வீரபாண்டியும் இணைந்து கொள்கிறான். வயதில் மூத்தவர்கள், சாதிப் பிரிவினைகளை அழுத்தமாக முன்வைத்தபோதும் சிறுவனான செந்தட்டிக்குள் அது அதிர்ச்சிகரமான உண்மைகளை உட்செலுத்திய போதும் - அவற்றாலெல்லாம் பாதிக்கப்படாத வகையில் அவர்களின் நட்புத் தொடர்கிறது. ஆனாலும் தன் சாதியைச் சேர்ந்த எளிய பெண்ணொருத்தியின் மீது இழைக்கப்பட்ட பாலியல் வன்முறைக்குத் தனது நண்பனே காரணமாக இருந்திருக்கக் கூடுமோ என்று அவனுள் ஏற்படும் ஐயம், நண்பனுக்காக விரிக்கப்படும் மின்சாரப் பொறி பற்றி அவனிடம் எச்சரிக்க விடாதபடி தடுத்து விடுகிறது. அவனது தந்தையைப் போலவே நண்பனும் மின்சாரப் பூவுக்கு இரையான பிறகுதான் அந்தப் பெண்ணின் வாழ்க்கைச் சீர்குலைவுக்கு நண்பன் காரணமில்லை என்பது அவனுக்குத் தெரிய வருகிறது. குற்ற உணர்வின் குமைச்சலால் மனநிலைப் பிறழ்வுக்கு ஆளாகி விடுகிறான் அவன். சாதிமுரண், வர்க்க முரண், பெண்மீதான சுரண்டல் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து முன்வைக்கிறது இப்படைப்பு.
புறஉலகின் பொருளாதாரச் சிக்கல்களுக்கும், உள்மனச்சாட்சியின் உறுத்தலுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் சாமானிய மனிதனின் போராட்டம் 'நீரில்லா மீன்' என்றகதையில் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. மண்ணைப் பொன்னாக்கி உலகத்திற்கே சோறுபோடும் ஒரு சம்சாரி (விவசாயி) - மண்ணைத் தவிர வேறு ஒரு மண்ணும் தெரியாத ஒரு சம்சாரி, ஆட்டுச் சந்தைக்கு வந்து விட்டு ஆடுகளை விற்க வழிதெரியாமல் மலைத்து நிற்கிறான். வியாபார சூட்சுமம் தெரியாமல் திகைத்து நிற்கும் அவனுக்கு - ஒரு காலத்தில் சம்சாரியாக இருந்துவிட்டுப் பிறகு மாற்றுத் தொழிலான தரகுத் தொழிலைத் தேர்ந்து கொண்டவன் உதவி செய்கிறான். அந்த உதவிக்குப் பதிலாக அவனுக்கு நானூறு ரூபாய் லாபமாகக் கிடைத்தாலும் - 'விதையில்லாமல் நடந்த அந்த விளைச்சல்', 'வலையில்லாமல் வந்தமீன்' அவன் மனதில் முள்ளாய் உறுத்துகிறது. ஆனாலும் புறஉலகின் யதார்த்த வாழ்க்கைப் போராட்டம் - மூர்க்கமான அதன் தாக்கம், அவளது உள்ளக் காயத்தைத் தழும்பாக்கி விடுவதை அற்புதமாகப் பதிவு செய்கிறார் படைப்பாளி.
நல்ல சிறுகதை என்பது, தேர்ந்த முரணை உள்ளடக்கியிருப்பது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள 'சிதைவுலகம்', அத்தகைய முரணான சூழலொன்றை முன்வைக்கிறது. தன் மனைவியின் சகோதரியிடம் பணத்தைக் கடனாக வாங்கிக் கொண்டு சைக்கிளில் வரும் நொடித்துப்போன ஒரு விவசாயி, சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, போதையில் தன்னிலை இழந்து கிடக்கும் ஒருவனைக் காப்பாற்றிக் கரை சேர்க்கிறான். மறுநாள் இவனைத் தேடி வரும் அந்த மனிதன், நன்றி சொல்வதற்கு மாறாகத் தன் சட்டைப் பையிலிருந்த பணத்தை அவன்தான் எடுத்திருக்கக் கூடுமென்று பழி சுமத்துகிறான். "இரக்கப்பட்டு நெருங்கியவனுக்கு, எடுத்துச் சுமந்தவனுக்கு இந்தத் தண்டனையா...'' என்று அந்தப் பாத்திரம் ஒரு கணம் நினைத்தாலும் கூட - ஆசிரியர், தன் கதைகளில் தொடர்ந்து பரிந்துரைப்பது, மனித நேயத்தையும், இரக்கத்தையும் மட்டும்தான்!
சாதி, வர்க்க பேதங்களற்ற சமூக அமைப்பும், மானுட அன்பில் தோய்ந்த வாழ்வுமே அவர் வலியுறுத்த எண்ணுபவை.
முற்போக்கு இலக்கியத்தின் முகங்களில் ஒருவராக அறியப்படும் மேலாண்மை பொன்னுச்சாமியின் எழுத்துக்கள் அவை சொல்லும் செய்திகளைச் சற்று உரத்துச் சொல்லுவதாக விமரிசிக்கப்பட்டபோதும், அவை மனிதகுலத்திற்கு அடிப்படைத் தேவைகளான அன்பையும், அறத்தையும், தனிமனித ஒழுங்கையும், சமத்துவ சமூகத்தையும் எடுத்துரைக்கும் பயனுள்ள செய்திகள். சமூக ஒழுங்கைக் குலைத்துப் போடும் நச்சு எழுத்துக்களாக அவை ஒருபோதும் இருந்ததில்லை.
"நாம பேசறபேச்சும் துணிமணி உடுத்தியிருக்கணும்டா'' என்கிறது இத்தொகுப்பின் கதையொன்றில் இடம்பெறும் பாத்திரம். அந்தக் கண்ணியம் இந்நூலிலுள்ள கதைகள் அனைத்திலும் விரவிக் கிடக்கிறது.
'மின்சாரப் பூ'
மேலாண்மை பொன்னுச்சாமி
கங்கை புத்தக நிலையம்
13, தீனதயாளு தெரு
தியாகராயநகர், சென்னை-600 017.
விலை ரூ.70/-
நன்றி: 'வடக்கு வாசல்'-மார்ச்'09

24.4.09

பின்சாரில் ஒரு பொன் அந்திகதிரவன் மறையும் முன் வானில் கடைசித் தீற்றல்கள்பைன், தேவதாரு மரக் கூட்டங்களுக்கு நடுவே......இடை இமயத்திற்குள் ஒளிந்து கொண்டிருக்கும் மலை அடுக்கங்களில் ஒன்று ,உத்தரகண்ட்
மாவட்டம், அல்மோராவிற்கு அருகிலுள்ள பின்சார். கடல் மட்டத்திற்கு மேல் கிட்டத்தட்ட 2800 மீட்டர் உயரத்தில் இருக்கும் இங்கிருந்து சூரிய அஸ்தமனக் காட்சியைக் காணும் அனுபவம் ,மகத்தான மனச் சிலிர்ப்பூட்டுவது;இயற்கையோடு கரைந்து ,பிரபஞ்ச தரிசனத்தில் ஒருமித்துக்
கலக்கும் உன்னதமான அந்த வாய்ப்பு ,அண்மையில் நைனிடால், அல்மோரா, பின்சார் ஆகிய இடங்களுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது வாய்த்தது.மலை முடிகளிலிருந்து காணும்போது கதிரவன் மலை அடுக்குகளுக்குள் மறைந்து போவதில்லை என்பது ஒரு சுவாரசியமான விஷயம். தூரத்தில் தெரியும் தொடுவானத்திற்குள் மட்டுமே அவன் படிப்படியாக மூழ்கிக்கொண்டே போகிறான்.நெஞ்சில் நிலைத்த அந்தக் காட்சியை நான் எடுத்த சில புகைப்படங்களின் வாயிலாகப் பகிர்ந்து கொள்வதொடு வானம் வரையும் அந்திக் காட்சி பற்றிய அற்புதமான சில கவிதை வரிகளும்...கூடவே.......

'' பாரடீ இந்த வானத்திற் புதுமையெல்லாம் ..

..கணந்தோறும் மாறிமாறி...........

உவகையுற நவ நவமாத் தோன்றும் காட்சி

யாரடி இங்கிவை போலப் புவியின் மீதே

எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார்

சீரடியால் பழ வேத முனிவர் போற்றும்

செழுஞ்சோதி வனப்பையெல்லாம் சேரக் காண்பாய்


கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்

கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்

கணந்தோறும் நவ நவமாம் களிப்புத் தோன்றும்

கருதிடவும் சொல்லிடவும் எளிதோ ஆங்கே

கணந்தோறும் ஒரு புதிய வண்ணம் காட்டிக்

காளி பராசக்தி அவள் களிக்கும் கோலம்

கணந்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர்

கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய் ''( பாரதியின் பாஞ்சாலி சபதத்திலிருந்து....)


''வானத்துச்சூரியன்

வர்ணங்களின் தலைவன்

அதனால்தான்

அந்தி மயானத்தில்

அவன் சிதையின் அருகே

அத்தனை நிறங்களின்

அனுதாபக் கூட்டம் ''
(அப்துல் ரஹ்மானின் 'அந்தி ')


''தங்கத்தை உருக்கி விட்ட

வானோடை தன்னிலே

செங்கதிர் மாணிக்கத்துச்

செழும்பழம் முழுகும் மாலை

செங்குத்தாய் உயர்ந்த குன்றின்

மரகதத் திருமேனிக்கு

மங்காத பவழம் போர்த்து வைத்தது வையம் காண ! ''

( பாரதிதாசனின் 'அழகின் சிரிப்பு')
ஒரு பின் குறிப்பு:

ஐம்பதுகளில் இருந்த வட இந்தியர் ஒருவர், எண்பதுகளில் இருந்த தன் வயது முதிர்ந்த தாயையும் ,தந்தையையும் இந்தக் காட்சியைக் காண்பதற்கென்றே அழைத்து வந்திருந்தார். சற்றுத் தொலைவில் நாற்காலியில் அமர்ந்தபடி மாலை மயக்கத்தை ரசித்துக் கொண்டிருந்த அவர்களை -மிகச் சரியாகச் சூரியன் மூழ்கும் தருணத்தில் கைலாகு கொடுத்து அந்த அற்புதக் காட்சியைத் தரிசிக்க வைத்த அவரது பாசம் நெஞ்சை நெகிழ்த்தியது. குழந்தையைப் போலக் குதூகலித்த அவர்கள் ''பை பை சன் ''என்று கையாட்டியபடி அன்றைய கதிரவனுக்குப் பொக்கை வாய்ப் புன்னகையுடன் விடை கொடுத்த அழகு , அஸ்தமனக் காட்சியைப் போலவே ஒரு கவிதை.


Posted by Picasa

20.4.09

'சிலம்பி தன் கூடிழந்தவாறு..'

தமிழ் மொழியின் பண்பாட்டுக் கருவூலமாகக் கற்பனைக் களஞ்சியமாகக் கருத்துப் பெட்டகமாக வாய்த்திருக்கும் அரியதொரு நூல் முத்தொள்ளாயிரம். முடியுடை மூவேந்தர்களாகிய சேர, சோழ பாண்டிய மன்னர்களின் பெருமையைப்பேசும் இலக்கியச் செழுமை வாய்ந்த ஒப்பற்ற படைப்பு அது. வாராது போல் வந்த மாமணியான அந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படாமல் இருப்பதும், 900 பாடல்களும் முழுமையாகக் கிடைக்காமல் இருப்பதும் தமிழுக்கு ஒரு பேரிழப்புத்தான் என்றபோதும், கிடைத்துள்ள ஒரு சில பாடல்களின் கலையழகும், பொருள் நயமும் எண்ணி எண்ணி இன்புறத்தக்கவை. ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதுப்பொருளும்...புது நயமும் வழங்குபவை.மன்னர்களையும், அவர்களது வீரப் பிரதாபங்களையும் பாடியதோடு நின்றுவிடாமல், மிகச் சாதாரண உயிரினங்களுக்காகக் கூடக் கசிந்து கண்ணீர் மல்கியிருக்கிறார்கள், முத்தொள்ளாயிரக் கவிஞார்கள். அப்படிப்பட்ட அபூர்வமான பாடல் ஒன்று, உலக வழக்கில் அற்பமான உயிராகக் கருதப்படும் சிலந்திப் பூச்சியை மையப் பொருளாக்கிக் கவி உள்ளத்தின் நேசத்தையும் நெகிழ்வையும் அற்புதமாகச் சொல்லில் வடிக்கிறது.


பொதுவாக விடாமுயற்சிக்கும்,சுசுறுப்புக்கும் முன் உதாரணமாகக் காட்டப்படுவது, சிலந்தி! அது நெய்யும் கூடும், அந்தக் கூட்டின் நுட்பமான மெல்லிய இழைகளும் நம்மைப் பிரமிக்க வைப்பவை.


மனிதர்கள் வல்லவர்கள்தான்; ஆனால் அவர்களாலும் செய்ய முடியாத செயல்கள் இந்த மண்ணில் உண்டு என்ற பொருள்பட,

''வான் குருவியின் கூடு ...வல் அரக்குத் தொல் கரையான்
தேன் சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால்..''

என்பாள் ஔவை.

அத்தகைய சிலந்திக்கு ஒரு சிக்கல் வருகிறது. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த சோழ மன்னனுக்குப் பிறந்த நாள் விழா . ஊர் முழுவதும் விழாக் கோலம் ! அங்கே மகிழ்ச்சியைத் தவிர மனக் கவலைகள் ஏதுமில்லை. பாணர்களும், புலவர்களும் அரசனைப் பாராட்டு மழையால் குளிர்விக்க...,அவன் அவர்களைப் பரிசுகளால் சீராட்டுகிறான். வேத மந்திரங்களை ஓதி வேள்வி நடத்திய அந்தணர்கள்,பசுக்களையும் ,பொன்னையும் மன்னனிடமிருந்து பெற்றுச் செல்கிறார்கள். அவனை வாழ்த்திப் பாடல் இயற்றிய புலவர்கள், மந்தர மலையைப்போலக் கம்பீரமான ஆண் யானை சுமக்கும் அளவுக்குப் பல வகையான பரிசுகளை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு போகிறார்கள்.ஆனால் என்ன ஒரு பரிதாபம்? இல்லாதவர்களின் இல்லாமை , இல்லாமல் போகிற அந்த அருமையான நேரத்தில், பாவப்பட்ட சிலந்தி மட்டும் தன் வீட்டை இழந்து பரிதவிக்கிறது; அரசனின் பிறந்த நாளுக்காக நகரம் முழுவதும் வெள்ளையடிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டபோது ,அதன் கூடு சிதைந்து போயிற்று;எல்லோரும் பரிசு பெறும் அந்தத் திரு நாள் மங்கலத்தில், எவரிடமும் எந்தப் பரிசுக்காகவும் கை ஏந்தாமல் தன் முயற்சியால் தானே முனைந்து கட்டிய கூட்டை அந்தச் சிலந்தி மட்டும் ஏன் இழக்க வேண்டும் ?வற்றாமல் வள்ம் கொழிக்கும் சோழ நாட்டில் ஏன் இந்த ஓர வஞ்சகம் ? கவியின் மனத்துடிப்பு பாட்டாகப் பொங்கிப் பெருக்கெடுக்கிறது.


வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலாரைப் போல்... உணவுக்காக வைத்திருந்த அரிசியைக் காக்கை குருவிக்கு இரைத்து மகிழ்ந்த பாரதியைப் போல்... குற்றுயிராய்த் துடித்துக் கொண்டிருந்த மீன்களைக் கூடைக்காரியிடமிருந்து அப்படியே விலைக்கு வாங்கித் தேம்ஸ் நதிக்குள் தூக்கி வீசிய கவி ஷெல்லியைப்போல். முத்தொள்ளாயிரக் கவிஞனின் மனமும் பாடலாய்க் கசிகிறது.

''அந்தணர் ஆவொடு பொன் பெற்றார் ,நாவலர்
மந்தரம் போல் மாண்ட களிறு ஊர்ந்தார் -எந்தை
இலங்கிலைவேல் கிள்ளி இரேவதி நாள் என்னோ ?
சிலம்பி தன் கூடிழந்தவாறு.''ஒருவரின் களிப்பும் ,அடுத்தவரின் கவலையும்- ஒருவரின் வேடிக்கையும், மற்றவரின் கவலையும் நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல வாழ்க்கை என்னும் விந்தையான களத்திலுள்ள விசித்திரமான முரண்பாடுகள் என்பதை நுட்பமாக மனதிற்குள் நுழைக்கும் இக் கவிதை, மனிதத்தை மாண்புறுத்தும் மகத்தான உயர் கவிதை. இன்றைய பின் நவீன காலத்திலும் கூடத் தன் பொருட்சிறப்பை இழந்து விடாமல் நின்று நிலைத்திருக்கும் செவ்வியல் பாடல் இது.

19.4.09

தமிழ்ப் படைப்பாளிகளை அறிமுகம் செய்யும் தளம்உலகத் தமிழ்ப் படைப்பாளிகளை ஒருங்கிணைத்து அவர்களையும், அவர்களது படைப்புக்களையும் இலக்கிய ஆர்வலர்களின் பார்வைக்கு முன் வைக்கும் அரியதொரு முயற்சியாகக் கீழ்க் காணும் முகவரியில் ஒரு வலைத் தளம் இயங்கத் தொடங்கியிருக்கிறது.http://www.tamilauthors.com

படைப்பாளர்கள்,தங்களைப்பற்றிய குறிப்புக்களையும் ,படைப்புக்கள்,வெளியீடுகள் குறித்த தகவல்களையும் editor@tamilauthors.comஎன்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பி வைத்தால் அவை தொகுக்கப்பட்டுத் தளத்தில் சேமிக்கப்படுகின்றன; தேவைப்படும் எழுத்தாளர்கள் பற்றிய தகவல்கள் அனைத்தையும்,தமிழ் வாசகர்களும், ஆய்வு மாணவர்களும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வழி அமைத்துத் தரவிருக்கும் இத் தளத்திற்குத் தமிழிலக்கிய உலகின் சார்பாக நல் வாழ்த்துக்கள்.

16.4.09

பாவண்ணனின் 'நதியின் கரையில்......'


கண்ணையும், காதையும் மட்டுமன்றி, மனதையும் கூர்மைப் படுத்திக்கொண்டு தன் சுற்றுப் புறத்தை உற்று நோக்கும் படைப்பாளிக்கு, நெருக்கடியான வாழ்க்கைச் சூழல்களில் நேரிடும் சின்னச் சின்னச் சம்பவங்களும் கூட அனுபவக் கொள் முதல்களாக அமைந்து போவதை 'நதியின் கரையில்' என்ற தலைப்பில், காவிரி,துங்கபத்திரா ஆகிய நதிக் கரைகளிலிருந்து பாவண்ணன் எழுதிய பதினேழு கட்டுரைகளும் மெய்ப்பிக்கின்றன.
முன்னொரு காலத்தில், நதிக் கரை ஓரமாக நாகரிகங்கள் செழித்துத் தழைத்ததைப் போலப் பாவண்ணனின் எழுத்து நதியிலும் சக மனிதர்களின் மீதான கரிசனமும், காருண்யமும் பிரவாகமெடுத்து ஓடுவதைக் காண முடிகிறது.வாழ்வை விலகி நின்று வேடிக்கைபார்க்கும் எழுத்தாளன், அதே வேளையில் அந்த அனுபவத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கரைத்துக் கொண்டு விடுவதற்கு அத்தாட்சி இக் கட்டுரைகள்.
தான் அவ்வப்போது படித்த சிறுகதைகளை வாழ்வியல் அனுபவத்துடன் பொருத்திப் பார்த்துப் பாவண்ணன் முன்பு எழுதிய கட்டுரைத் தொடரைப் பற்றி இந்நூலின் பதிப்புரையில் கோ.ராஜாராம் குறிப்பிட்டுள்ளார். இத் தொகுப்போ அதற்கு நேர் மாறான வேறொரு கோணத்தில் அமைந்திருக்கிறது. இதிலுள்ள கட்டுரைகள்,வாழ்வியல் அனுபங்களைச் சுவையான சிறுகதைகளைப் போல விவரித்துக்கொண்டு போகின்றன.
''மலை மேலே ஒரு வீட்டைக் கட்டிய பின்னர், விலங்குகளுக்கு அஞ்சினால் எப்படி ஐயா''என்ற அக்க மாதேவியின் கவிதையை வாழ்வாகவே ஆக்கிக்கொள்ளும் நாடோடிச் சாமியார்,
பி.எஸ்.ராமையாவின் ' நட்சத்திரக் குழந்தைகள் 'சிறுகதையைப் போலச் சூரியன் ஓய்வெடுக்க ''அதுக்கும் ஒரு வீடு உண்டா?''என்று கேள்வி கேட்கும் குழந்தை,
தொலக்காட்சி வழியே சுனாமியைப் பார்த்துச் சுருண்டு போய் மருளும் பிஞ்சு,
கல்வியைப் பாதியிலேயே கை நழுவ விட வேண்டிய ஏழைக் குழந்தைகளுக்கு எழுதவாவது கற்பித்து விட வேண்டும் என்று அதையே ஒரு வேள்வியாக்கிக் கொண்டு...தொலைதூரக் கிராமங்களுக்கு வேண்டி, விரும்பி மாறுதல் கேட்கும் வித்தியாசமான- விதிவிலக்கான ஆசிரியர் கோபால் மேஷ்ட்ரூ,
''இந்த உலகத்திலே ஒரு சுப்பக்கா போதாதா?...ஆளாளுக்கு ஒரு சுப்பக்காவை உண்டாக்கிக்கிட்டே இருக்கணுமா?''என்று ஒரு புறம் சுய அலசல் செய்து கொண்டே மறு புறம் கட்டுக்களை மீறும் சுப்பக்கா
எனப் பாவண்ணனின் கட்டுரைப்பாத்திரங்களும் கூடக் காலத்தில் அழியாத கதா பாத்திரங்களைப் போல நெஞ்சில் நிரந்தரமாக இடம் பிடிக்கின்றன.

கள்ளங் கபடமற்ற குழந்தைப் பருவத்தைப் படம் பிடித்ததைப்போலவே, பிடிமானம் இழந்ததைப் போலக் கலவரம் கொண்டு தவிக்கும் முதுமையின் தவிப்பையும் பதிவு செய்கிறார் பாவண்ணன்.

இத் தொகுப்பில், தவற விட்டு விடக் கூடாத கட்டுரைகளில் ஒன்று , 'முதுமையின் கோரிக்கை'. தனிமையில் வாழ நேர்ந்த முதிய தம்பதியினருடன் சந்திப்பு, கறுப்பினப் பெண் கவிஞர் எழுதிய முதுமை பற்றிய கவிதை, அயல் நாட்டு நண்பர் அனுப்பி வைத்த படக் காட்சித் தொகுப்பில் இடம் பெறும் முதுமையின் கோரிக்கை -இம் மூன்றையும் ஒருசேரத் தொகுத்து நினைவு கூரும் இக் கட்டுரை, பாவண்ணன் ஒரு தேர்ந்த மொழிபெயர்ப்பாளர் என்பதையும் தெளிவுபடுத்துகிறது; நினைவுபடுத்துகிறது.

'' அன்புள்ள மகனே ! வயது முதிர்ந்தவனான என்னை நீ முதன் முதலாகப் பார்க்கும் நாளில் சற்றே பொறுமை கொள். என்னைப் புரிந்து கொள்ள முயற்சி செய். உன்னோடு உரையாடும்போது, சொன்னதையே திரும்பத் திரும்ப ஆயிரத்தோரு முறை சொல்லக் கூடும். தயவு செய்து அப்போது குறுக்கிடாதே. நீ குழந்தையாக இருந்தபோது உனக்கத் தூக்கம் வரும் வரை ஒரே கதையை ஆயிரத்தோரு முறை நான் படித்துக் காட்டியதுண்டு.

சோர்ந்து தளர்ந்த என் கால்களுடன் அடியெடுத்து வைத்து நடக்க முடியாதபோது பற்றிக் கொள்ள உன் கைகளைக் கொடு. நீ முதன் முதலாக அடியெடுத்து வைத்து நடக்கக் கற்றுக்கொள்ளும்போது ,உன் கைகளைப் பற்றிக்கொண்டதைப் போல என்னைப் புரிந்து கொள்ளவும், எனக்கு உதவியாக நிற்கவும் தயவு செய்து முயற்சி செய்.நீ வாழத் தொடங்கும்போது உனக்குத் துணையாக நான் நின்றதைப் போல''

என முதுமையின் கோரிக்கையை, வெளிநாட்டுத் துண்டுப் படத்திலிருந்து மொழிபெயர்த்துத் தரும் பாவண்ணனின் வரிகள், இளைய தலைமுறையினரின் இதயங்களில் மிக இலேசானதொரு அசைவை ஏற்படுத்தினாலும் கூட முதியோர் சிக்கல் அறவே அழிந்து மானுடப் பிரபஞ்சம் தழைக்க வழி பிறக்கக் கூடும்.

பாவண்ணனின் மொழிநடை, வாசிப்பிற்கு வெகு சுகமானது. குளிர் தருவின் நிழலில் நிற்கையில் வருடி விட்டுச் செல்லும் தென்றலுக்கு இணையானது. இந்நூலிலுள்ள எல்லாக் கட்டுரைகளிலும் அந்தத் தண்மையும், மென்மையும் நீக்கமற நிறைந்திருப்பதை அனுபவித்துத்தான் உணர்ந்து கொள்ள முடியும். 'புதிய பார்வை' இதழில் வெளிவந்த இக் கட்டுரைகளுக்கு முழுமையான நூல் வடிவம் தந்து , அற்புதமான ஒரு அனுபவத்தை நுகர்வதற்கு வழி அமைத்துத் தந்திருக்கும் எனி இந்தியன் பதிப்பகத்தார் பாராட்டுக்குரியவர்கள்.

'நதியின் கரையில்..'-கட்டுரைகள்,பாவண்ணன்,எனி இந்தியன் பதிப்பகம்,102,எண்57,பி,எம்.ஜி.காம்ப்ளெக்ஸ்,தெற்கு உஸ்மான் சாலை,தி.நகர்,சென்னை- 17(044- 24329283)விலை,ரூ.70.00.

நன்றி:இம் மதிப்புரையை வெளியிட்ட 'வடக்கு வாசல்'( மார்ச் '08) இதழுக்கு

5.4.09

பத்ம விருது பெற்றோரின் பாராட்டு விழாவில்....

ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தலைவரிடமிருந்து பத்ம விருதுகளைப் பெறும் அறிஞர்களையும், கலைஞர்களையும் (குறிப்பாகத் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள்),அவர்கள் விருது பெற்ற உடனேயே பாராட்டிக் கௌரவிப்பதைத் தில்லித் தமிழ்ச் சங்கம் பல்லாண்டுக் காலங்களாக ஒரு நல்ல மரபாகக் கடைப்பிடித்து வருகிறது.அந்த வரிசையில், மார்ச் 31 அன்று பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருது பெற்ற சான்றோர்களைப் பாராட்டும் விழா, அதே நாள் மாலை 6.30 மணிக்குத் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.பத்மபூஷண் விருது பெற்ற எழுத்தாளர் திரு ஜெயகாந்தன்,புகழ் வாய்ந்த நாட்டியக்கலைஞர்களாகிய திரு தனஞ்சயன், திருமதி சாந்தாதனஞ்சயன், பத்மஸ்ரீ விருது பெற்ற தொல்லியல் அறிஞர் திரு ஐராவதம் மகாதேவன்,தொழுநோய் ஒழிப்பில் முனைப்புக் கொண்ட மருத்துவர் திரு ஷேக் காதர் நூர்தீன் ஆகிய ஐவரும் தமிழ்ச் சங்கத்தின் அழைப்பை ஏற்றுப் பாராட்டு விழாவுக்கு வருகை புரிந்தனர்.

மேடையில் தமிழ்ச் சங்கச் செயலர் திரு பெருமாள்,சங்கத் தலைவர் திருகிருஷ்ண மூர்த்தி ,திரு ஐராவதம் மகாதேவன்,திரு ஜெயகாந்தன்,திரு ஷேக் காதர் நூருதீன்,திரு தனஞ்சயன்,திருமதி சாந்தா தனஞ்சயன்,மற்றும் நான்.
பத்ம விருது பெற்றோரைப் பாராட்டிப் பேசி வாழ்த்துரை வழங்க ,என்னையும்,வடக்கு வாசல் ஆசிரியர் திரு பென்னீஸ்வரன் அவர்களையும் தமிழ்ச் சங்கத்தினர் அழைத்திருந்தனர்.

மதுரையில் '90களில் நடைபெற்ற ஜெயகாந்தனின் மணிவிழாவின்போது,விழாப் பேச்சாளர்களில் ஒருவராகச் சிறப்புரை ஆற்றும் வாய்ப்பை மீனாக்ஷி புத்தக நிலையத்தின் நிறுவனர் திரு செல்லப்பன் அவர்கள், எனக்கு அளித்திருக்கிறார்.அதற்கு முன்பும், பின்பும் பலமுறை நான் பணியாற்றிய மதுரை பாத்திமாக் கல்லூரியிலும்,அமெரிக்கன் கல்லூரியிலும்,வேறு பல பொது நிகழ்வுகளிலும் ஜெயகாந்தனோடு கலந்துரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. இங்கு - தில்லி வந்த பின்னும், தமிழ்ச் சங்கத்தின் வழி அது தொடர்வதில் நான் மிகுந்த மன நிறைவும், மகிழ்வும் கொண்டேன்.

நவீன தமிழ் இலக்கியத்தின் பிதாமகர்களில் குறிப்பிடத்தக்க ஒருவரான திரு ஜெயகாந்தன் மட்டுமன்றித் தமிழுக்குச் செம்மொழித் தகுதி சேர்க்கும் மிகச் சிறப்பான கல்வெட்டு-நாணய ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கும் அறிஞர் திரு ஐராவதம் மகாதேவன், இந்தியாவின் பண்பாட்டுத்தூதர்களாய்ப் பரதக் கலையின் புழை உலகெங்கும் பரப்பிவரும் திரு தனஞ்சயன் தம்பதியினர்,தொழு நோய் சிகிச்சைக்கன மருந்துக் கண்டுபிடிப்பு - மற்றும் அந்நோயாளிகளின் மறு வாழ்வு என்னும் இவையே குறியாக அர்ப்பணிப்பு உணர்வோடு( உலகச் சுகாதார நிலையத்தின் அங்கீகாரம் பெற்று) உழைத்த மருத்துவர் ஷேக் காதர் நூர்தீன்- என விருது பெற்ற அனைவருமே -குறிப்பிட்ட ஒரு துறையைத் தங்களின் இலக்காகத் தேர்ந்து கொண்டு,அது ஒன்றில் மட்டுமே கருத்துச் செலுத்தித் தங்களையும், சமூகத்தையும் உயர்த்தியவர்கள். அவர்களைப் பாராட்டுவதென்பது, மிகையற்ற ,செயற்கைத் தனங்கள் தவிர்த்த ஒரு செயலாக இலகுவாகவே இருந்தது.அத்தகைய வாழ்த்துரை, பார்வையாளர்களின் அங்கீகாரத்தையும் பெற்றதாக அமைந்திருந்ததென்பதை எனக்குக் கிடைத்த சில எதிர் வினைகளின் வழி விளங்கிக்கொண்டேன்.ஜே.கே.,வெளித் தோற்றத்தில்...பழகும் தோரணையில் ரொம்பவே மாறியிருக்கிறார்.சிங்கம் போலச் சிலிர்த்தெழும் ஆவேசமும் ஆரவாரமும் அடங்கிப் போய்த் தளர்ந்த உடலும், கனிவான ,சாந்தமான புன்னகையும், குறைந்த சொற்களுமாக இருந்த ஜே.கே.யை..அப்படிப் பார்த்தபோது கொஞ்சம் ஏமாற்றமாகக் கூட இருந்தது.விழாவில் ஏற்புரை வழங்கும்போது கூடத் தன்னை முன்னிறுத்தாமல், உடன் விருது பெற்ற மற்றவர்களைப் பற்றி மட்டுமே மிகக் குறைந்த நேரம் அவர் உரையாற்றினார்.புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக அழைத்தபோது தயங்காமல், மறுப்புச் சொல்லாமல் முன்வந்தார். படம் எடுக்கும்போது மறக்காமல் என் பேத்தியைக் கூப்பிட்டுப் பக்கத்தில் நிறுத்திக் கொண்டார்.புது தில்லியில் பதிவு செய்யப்பட்டுத் 'திரைகடல் ஆடி வரும் தமிழ் நாதம்'என்ற பெயரில் த்மிழ் நாட்டில் ஒலிபரப்பாகும்(குறிப்பாகத் திருச்செந்தூர் , தூத்துக்குடி பகுதிகளில் இந்த ஒலிபரப்பைத் தெளிவாகக் கேட்கலாம்)வானொலி நிகழ்ச்சியின் நேர்காணலுக்காக ,வானொலி நிலைய நிகழ்ச்சி அமைப்பாளர் திரு குருமூர்த்தி அவர்கள் திரு ஜே.கேயை அணுகியபோது சிறிதும் தயக்கமின்றி ,மகிழ்வோடு அவர் ஒப்புதல் அளிக்க ஜெயகாந்தனை வானொலிக்காக நேர்காணும் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொண்டேன்..விழா முடிந்தபின் அனைவரும் கலைந்து போக..அந்த மேடையிலேயே நேர்காணல் பதிவு செய்யப்பட்டது.

வானொலி நேர்காணலின்போது அவரிடமிருந்து ஓரிரு வார்த்தைகளாக உதிர்ந்த நறுக்குத் தெறித்தாற்போன்ற - நிர்த்தாட்சண்யமான - சமரசம் செய்துகொள்ளாத விடைகள் மட்டுமே அவர் இன்னும் பழைய ஜெயகாந்தனாகத்தான் இருக்கிறார் என்பதைப் பொட்டில் அடித்தாற்போலப் புரிய வைத்தன.முதுமையால், நோயால் உடல் தளர்ந்தாலும்....வயது அவரைப் பக்குவப்படுத்தியிருந்தாலும் ஜே.கே. என்றுமே ஜே.கே யாக மட்டும்தான் இருக்க முடியும்....... வேறெப்படி இருப்பதும் அவருக்குச் சாத்தியமில்லை என்று ஏனோ எனக்கு அப்போது தோன்றியது.

இணைப்புக்கள்:
பத்ம பூஷண் ஜே.கே.
ஐராவதம் மகாதேவனுக்கு வாழ்த்து
Posted by Picasa

1.4.09

குற்றமும் தண்டனையும் :மேலும் கடிதங்கள்

திரு கு.சின்னப்ப பாரதி(எழுத்தாளர்)
நாமக்கல்.
அன்புச் சகோதரி சுசீலா அவர்களுக்கு,வணக்கம்.தாங்கள் மொழிபெயர்த்த குற்றமும் தண்டனையும் படித்து முடித்தேன்.அற்புதமாக மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள். வார்த்தைகள் லாவகமாக, அழகு கொஞ்ச, தமிழின் இனிமை குலையாமல் படைத்தளித்திருக்கிறீர்கள். தர்மராஜன் அவர்கள் அன்னா கரீனினாவை அற்புதமாக மொழியாக்கம் செய்து தமிழுக்குப் பெருமை சேர்த்தது போலத் தாங்களும் பெருமைப்படும் விதத்திலே செய்து முடித்திருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
திரு கோணங்கி(எழுத்தாளர்)
உங்கள் மொழியாக்கம், ரஸ்கோல்நிகாவின் குற்ற உணர்வால் நிரம்பிய இருட்டு அறைகளில், மனக் குகை ஓவியங்களாக வரைந்து எழுதப்பட்ட மொழி. எம்.ஏ.சுசீலாவின் பெயர்ப்பில் சிறப்பாக வந்து விட்டது, அந்த....குற்றமும் தண்டனையும்.

தேனம்மை,மதுரை.
சின்ன வயதில் மிக்கேல் ஷோலகோவ் கதைகளை (தமிழ் மொழிபெயர்ப்பு)என் அம்மா வாங்கித்தந்து படித்திருக்கிறேன்.உலகத்தைச் சுற்றிவரும் ஒரு சிறுவனின் கதையையும் படித்திருக்கிறேன்.அதற்குப்பின்பு தற்போதுதான் ஒரு மிகச்சிறந்த ரஷிய எழுத்தாளரின் படைப்பைத் தமிழில் படிக்கும் பேரனுபவம் ஏற்பட்டது.பாராட்டுக்கள். உங்கள் முயற்சி அளவிடற்கரியது.எவ்வளவு பாராட்டினாலும் சொல்லில் அடங்காதது.
தனி மனிதர்களின் மன மேன்மைகளை,உன்னதங்களை,உயர் இலட்சியங்களை மட்டுமல்லாது குறைகளை,குணக்கேடுகளை,நோய் பிடித்த மனத்தின் சிறுமைகளை, சீரழிவுகளை,வக்கிரங்களை, அவலங்களை உங்கள் மொழியாக்கத்தின் மூலம் தரிசனம் செய்தபோது நிறைய ஆத்ம விசாரங்களும்,ஆத்ம விசாரணைகளும் ஏற்பட்டன.
சோனியாவின் ஜீவனோபாயமும்,ரஸ்கோல்நிகோவின் மனச்சங்கடமும், ஸ்விட்ரிகைலோவின் மன விகற்பமும் என்னை அவர்களுள் ஒருத்தியாக்கி,வேதனைப்படவும், அழவும்,வெகுண்டெழவும் வைத்தன. தன் உடன் பிறவாச் சகோதர,சகோதரிகளுக்காகவும், குடும்பத்தை இரட்சிக்கவும் அவள் விபச்சாரியாகும் காலகட்டத்திலும், முகஸ்துதிகள் மூலம் துனியாவை ஸ்விட்ரிகைலோவ் ஏமாற்றும் இடத்திலும் தவிர்க்க இயலாமல் அழுது கொண்டும், ஸ்விட்ரிகைலோவ் என் கையில் கிடைத்தால் கொன்று விடும் உத்தேசத்துடனும் இருந்தேன்.

ரஸ்கோல்நிகோவைப் பற்றித்தான் முன்பு நிறைய எழுத நினைத்தேன். ஆனால் நீண்ட நாட்களுக்குப் பின்பும் அந்த இரண்டு பெண்களும்தான் என்னை மிகவும் பாதித்து இருக்கிறார்கள். காரணம்,-அபலைகள்; தங்கள் வாழ்வைத் தாங்களே தீர்மானிக்க முடியாமல்-பணத்தின், சூழ்நிலையின், வாழ்க்கைத் தேவைகளின் கைப்பாவையாக- ஆனால்...உயர்ந்த கொள்கைகளிலும், உயர்ந்த பண்புகளிலும் உறுதியும், திடமும் உள்ளவர்களாக இருக்கும் அபலைகள்.

ஜூலை மாத மாலைநேரக் கசகசப்பில் ஆரம்பிக்கும் ரஸ்கோல்நிகோவின் வாழ்வைப்பற்றி நினைக்கும்போது-இனிப்பு உண்ணும்போதும் நாவினடியில் ஏற்படும் ஒரு சமயக் கசப்பு
போல ஒரு சோகம் ஏற்படுகிறது.எப்படி வர வேண்டியவன் தன் வாழ்வை எப்படி ஆக்கிக்கொண்டான் என்றும்,சோர்வுற்ற மனமே சூழ்நிலைகளையும், தங்குமிடத்தையும் எப்படி மாற்றி விடுகிறது என்றும் எண்ணினேன். Once wearஉடைகளை ரஸுமிகின் வாங்கி வந்து கடை பரப்பும்போது, ஏழைகளின் வாழ்வு இவ்வளவு துயரங்களுக்கு உள்ளானதா என்று தோன்றியது.'ஏழை படும் பாடு' நாவலில் வரும் ஜீன்வால்ஜீனையும்,கோஸத்தையும் நினைத்துக்கொண்டேன். இந்தியாவில் தீவிரவாதிகள் என்றும்,நக்ஸலைட்கள் என்றும்,மாவோயிஸ்டுகள் என்றும், சாராயம் காய்ச்சினான்...கஞ்சா விற்றான்...கொள்ளையடித்தான் என்றும் போலீசால் என்கௌண்டர் செய்யப்படும் தாதாக்கள்,குண்டர்கள்,அடியாட்கள் ஆகிய அனைவருமே குற்றம் செய்தவர்தானா என சிலர்

முகங்களைப்பார்க்கும்போது தோன்றும்.ரஸ்கோல்நிகோவ் போல தடி எடுத்தவன் எல்லாமே தண்டல்காரனாக ஆகிவிடமுடியாது.அது அடிப்படையிலேயே தவறு.

இந்தக்கதையின் மையக்கருவே ரஸ்கோல்நிகோவ் தன் குற்றத்தைத் தானாகவே ஒப்புக்கொண்டு தண்டனையை ஏற்றுக்கொள்கிறானா என்பதுதான். மனித மனம் எத்தனை விசித்திரங்கள் நிரம்பியது என்பதை ...நான் பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியைப் படித்துத்தான் புரிந்து கொண்டேன். சாதாரண விஷயத்திற்கே சிலர் உண்மையைக்கூறாதபோது 'எவ்வளவு பொய், நெஞ்சழுத்தம்' என்று நினைத்துக்கொள்வேன். ரஸ்கோல்நிகோவ் நம் மனமே ஆயாசப்படும் வகையில் -கடைசி வரையில் குற்றத்தை முழுமனதோடு தானாக ஒப்புக்கொள்ளவே இல்லை.சோனியாவின் அன்பு, காதல், மற்றும் அவளது வார்த்தைகளுக்காகத்தான் ஒப்புக்கொள்கிறான் என உணர்ந்தபோது -மனித மனதில் கடைசிவரை போராடிப்பார்க்கும்....தன் செயலை எல்லாம் நியாயப்படுத்த நினைக்கும் ஒரு extreme corner இருக்கிறது(எல்லோருக்குமே) என உணர்ந்து கொண்டேன்.
ஆனால் ஒன்று சொல்ல வேண்டும்; ரஸ்கோல்நிகோவின் உடல் உபாதைகள்,மனச்சோர்வு,கொள்கை உறுதி, செயலில் நிலையாக நிற்பது ...இவை எல்லாமே நம்மைப்பிடித்து ஆட்டுகின்றன. அவன் போலீசில் மாட்டி விடக்கூடாதே என்ற பேராசையும், அவனைத்துன்பப்படுத்தும் போர்பிரி பெத்ரோவிச்சை ஏதாவது செய்து விடலாமா என்ற விபரீத எண்ணங்களும் நமக்கே உதிக்கின்றன.

ரஷியாவில் ஏற்பட்ட பலவித புரட்சி மாற்றங்களைக் கதை பேசுகிறது.அந்த எண்ணச்சிக்கல்களுக்குள் மாட்டிக்கொண்ட ஏழை இளைஞன் ரஸ்கோல்நிகோவின் வாய்க்கசப்பும், எதோ ஒரு தாகத்தில் தவிப்பவனைப்போல அலையும் அலைச்சலும், அவனுடைய பழைய உடைகளும், தொப்பியும், ஷூக்களும் நம்மைத் தீவிரமாகப் பாதித்துக் காய்ச்சலை உண்டு பண்ணுகின்றன.

துனியாவுக்குத்தான் எவ்வளவு சோதனைகள்...இடர்ப்பாடுகள்! ரஸ்கோல்நிகோவின் மீது அவன் தாய் பல்கேரியா அலெக்ஸேண்ட்ரோவ்னா வைத்த பாசமும் , நம்பிக்கையும் நம் மனதை நெகிழச்செய்கிறது. காதரீனா இவானோவ்னா இந்திய ஏழைத் தாய்களின் பிரதிநிதியாகவும், மர்மெலாதோவ் இந்தியக்குடிகாரத் தந்தையின்(மனைவி தாலியைப்பறித்துக்கொண்டுபோய்க்குடிப்பது) பிரதிநிதியாகவும் இருக்கிறார்கள்.

அல்யோனா- பணக்காரர்களின், அடாவடிக்காரர்களின், அக்கிரமக்காரர்களின் குறியீடு; ரஸ்கோல்நிகோவ்- ஏழைகளின், இயலாதவர்களின்,புரட்சிச் சிந்தனையாளர்களின் கோபத்தின் குறியீடு; ஸ்விட்ரிகைலோவ் ,லூசின் -கயவர்களின் குறியீடு;துனியா, சோனியா -நேர்மைகளின்,நம்பிக்கைகளின், நன்னெறிகளின், நல்லொழுக்கங்களின் குறியீடு(அறியாமையினாலோ, குடும்பத்தேவையினாலோ பிறழ்ந்தவர்களை நான் மோசமானவர்களாகக்கருதவில்லை);.
காதரீனா, மர்மெலாதோவ்-இயலாதவர்களின், வறுமையின் குறியீடு.

போர்பிரி பெத்ரோவிச்-கடமை தவறாதவர்களின் குறியீடு.

லெபஸியாட்னிகோவ், ரஸுமிகின் போன்ற இளைஞர்கள்தான் நல்ல,,இனிமையான எதிர்காலத்துக்கான குறியீடு.

இவ்வளவு உணர்வுகளையும் படித்து...புரிந்து...உணர்ந்து...அனுபவித்து எங்களுக்காகக்கொடுத்திருக்கிறீர்களே ,உங்கள் கரங்களுக்கு ஆயிரம் வந்தனங்கள்.

ரஸ்கோல்நிகோவ் ஓவியம்-நன்றி:

http://www.fyodordostoevsky.com/index.php

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....