தமிழ் மொழியின் பண்பாட்டுக் கருவூலமாகக் கற்பனைக் களஞ்சியமாகக் கருத்துப் பெட்டகமாக வாய்த்திருக்கும் அரியதொரு நூல் முத்தொள்ளாயிரம். முடியுடை மூவேந்தர்களாகிய சேர, சோழ பாண்டிய மன்னர்களின் பெருமையைப்பேசும் இலக்கியச் செழுமை வாய்ந்த ஒப்பற்ற படைப்பு அது. வாராது போல் வந்த மாமணியான அந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படாமல் இருப்பதும், 900 பாடல்களும் முழுமையாகக் கிடைக்காமல் இருப்பதும் தமிழுக்கு ஒரு பேரிழப்புத்தான் என்றபோதும், கிடைத்துள்ள ஒரு சில பாடல்களின் கலையழகும், பொருள் நயமும் எண்ணி எண்ணி இன்புறத்தக்கவை. ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதுப்பொருளும்...புது நயமும் வழங்குபவை.
மன்னர்களையும், அவர்களது வீரப் பிரதாபங்களையும் பாடியதோடு நின்றுவிடாமல், மிகச் சாதாரண உயிரினங்களுக்காகக் கூடக் கசிந்து கண்ணீர் மல்கியிருக்கிறார்கள், முத்தொள்ளாயிரக் கவிஞார்கள். அப்படிப்பட்ட அபூர்வமான பாடல் ஒன்று, உலக வழக்கில் அற்பமான உயிராகக் கருதப்படும் சிலந்திப் பூச்சியை மையப் பொருளாக்கிக் கவி உள்ளத்தின் நேசத்தையும் நெகிழ்வையும் அற்புதமாகச் சொல்லில் வடிக்கிறது.
பொதுவாக விடாமுயற்சிக்கும்,சுசுறுப்புக்கும் முன் உதாரணமாகக் காட்டப்படுவது, சிலந்தி! அது நெய்யும் கூடும், அந்தக் கூட்டின் நுட்பமான மெல்லிய இழைகளும் நம்மைப் பிரமிக்க வைப்பவை.
மனிதர்கள் வல்லவர்கள்தான்; ஆனால் அவர்களாலும் செய்ய முடியாத செயல்கள் இந்த மண்ணில் உண்டு என்ற பொருள்பட,
''வான் குருவியின் கூடு ...வல் அரக்குத் தொல் கரையான்
தேன் சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால்..''
என்பாள் ஔவை.
அத்தகைய சிலந்திக்கு ஒரு சிக்கல் வருகிறது. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த சோழ மன்னனுக்குப் பிறந்த நாள் விழா . ஊர் முழுவதும் விழாக் கோலம் ! அங்கே மகிழ்ச்சியைத் தவிர மனக் கவலைகள் ஏதுமில்லை. பாணர்களும், புலவர்களும் அரசனைப் பாராட்டு மழையால் குளிர்விக்க...,அவன் அவர்களைப் பரிசுகளால் சீராட்டுகிறான். வேத மந்திரங்களை ஓதி வேள்வி நடத்திய அந்தணர்கள்,பசுக்களையும் ,பொன்னையும் மன்னனிடமிருந்து பெற்றுச் செல்கிறார்கள். அவனை வாழ்த்திப் பாடல் இயற்றிய புலவர்கள், மந்தர மலையைப்போலக் கம்பீரமான ஆண் யானை சுமக்கும் அளவுக்குப் பல வகையான பரிசுகளை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு போகிறார்கள்.ஆனால் என்ன ஒரு பரிதாபம்? இல்லாதவர்களின் இல்லாமை , இல்லாமல் போகிற அந்த அருமையான நேரத்தில், பாவப்பட்ட சிலந்தி மட்டும் தன் வீட்டை இழந்து பரிதவிக்கிறது; அரசனின் பிறந்த நாளுக்காக நகரம் முழுவதும் வெள்ளையடிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டபோது ,அதன் கூடு சிதைந்து போயிற்று;எல்லோரும் பரிசு பெறும் அந்தத் திரு நாள் மங்கலத்தில், எவரிடமும் எந்தப் பரிசுக்காகவும் கை ஏந்தாமல் தன் முயற்சியால் தானே முனைந்து கட்டிய கூட்டை அந்தச் சிலந்தி மட்டும் ஏன் இழக்க வேண்டும் ?வற்றாமல் வள்ம் கொழிக்கும் சோழ நாட்டில் ஏன் இந்த ஓர வஞ்சகம் ? கவியின் மனத்துடிப்பு பாட்டாகப் பொங்கிப் பெருக்கெடுக்கிறது.
வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலாரைப் போல்... உணவுக்காக வைத்திருந்த அரிசியைக் காக்கை குருவிக்கு இரைத்து மகிழ்ந்த பாரதியைப் போல்... குற்றுயிராய்த் துடித்துக் கொண்டிருந்த மீன்களைக் கூடைக்காரியிடமிருந்து அப்படியே விலைக்கு வாங்கித் தேம்ஸ் நதிக்குள் தூக்கி வீசிய கவி ஷெல்லியைப்போல். முத்தொள்ளாயிரக் கவிஞனின் மனமும் பாடலாய்க் கசிகிறது.
''அந்தணர் ஆவொடு பொன் பெற்றார் ,நாவலர்
மந்தரம் போல் மாண்ட களிறு ஊர்ந்தார் -எந்தை
இலங்கிலைவேல் கிள்ளி இரேவதி நாள் என்னோ ?
சிலம்பி தன் கூடிழந்தவாறு.''
ஒருவரின் களிப்பும் ,அடுத்தவரின் கவலையும்- ஒருவரின் வேடிக்கையும், மற்றவரின் கவலையும் நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல வாழ்க்கை என்னும் விந்தையான களத்திலுள்ள விசித்திரமான முரண்பாடுகள் என்பதை நுட்பமாக மனதிற்குள் நுழைக்கும் இக் கவிதை, மனிதத்தை மாண்புறுத்தும் மகத்தான உயர் கவிதை. இன்றைய பின் நவீன காலத்திலும் கூடத் தன் பொருட்சிறப்பை இழந்து விடாமல் நின்று நிலைத்திருக்கும் செவ்வியல் பாடல் இது.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக