துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

16.4.09

பாவண்ணனின் 'நதியின் கரையில்......'


கண்ணையும், காதையும் மட்டுமன்றி, மனதையும் கூர்மைப் படுத்திக்கொண்டு தன் சுற்றுப் புறத்தை உற்று நோக்கும் படைப்பாளிக்கு, நெருக்கடியான வாழ்க்கைச் சூழல்களில் நேரிடும் சின்னச் சின்னச் சம்பவங்களும் கூட அனுபவக் கொள் முதல்களாக அமைந்து போவதை 'நதியின் கரையில்' என்ற தலைப்பில், காவிரி,துங்கபத்திரா ஆகிய நதிக் கரைகளிலிருந்து பாவண்ணன் எழுதிய பதினேழு கட்டுரைகளும் மெய்ப்பிக்கின்றன.
முன்னொரு காலத்தில், நதிக் கரை ஓரமாக நாகரிகங்கள் செழித்துத் தழைத்ததைப் போலப் பாவண்ணனின் எழுத்து நதியிலும் சக மனிதர்களின் மீதான கரிசனமும், காருண்யமும் பிரவாகமெடுத்து ஓடுவதைக் காண முடிகிறது.வாழ்வை விலகி நின்று வேடிக்கைபார்க்கும் எழுத்தாளன், அதே வேளையில் அந்த அனுபவத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கரைத்துக் கொண்டு விடுவதற்கு அத்தாட்சி இக் கட்டுரைகள்.
தான் அவ்வப்போது படித்த சிறுகதைகளை வாழ்வியல் அனுபவத்துடன் பொருத்திப் பார்த்துப் பாவண்ணன் முன்பு எழுதிய கட்டுரைத் தொடரைப் பற்றி இந்நூலின் பதிப்புரையில் கோ.ராஜாராம் குறிப்பிட்டுள்ளார். இத் தொகுப்போ அதற்கு நேர் மாறான வேறொரு கோணத்தில் அமைந்திருக்கிறது. இதிலுள்ள கட்டுரைகள்,வாழ்வியல் அனுபங்களைச் சுவையான சிறுகதைகளைப் போல விவரித்துக்கொண்டு போகின்றன.
''மலை மேலே ஒரு வீட்டைக் கட்டிய பின்னர், விலங்குகளுக்கு அஞ்சினால் எப்படி ஐயா''என்ற அக்க மாதேவியின் கவிதையை வாழ்வாகவே ஆக்கிக்கொள்ளும் நாடோடிச் சாமியார்,
பி.எஸ்.ராமையாவின் ' நட்சத்திரக் குழந்தைகள் 'சிறுகதையைப் போலச் சூரியன் ஓய்வெடுக்க ''அதுக்கும் ஒரு வீடு உண்டா?''என்று கேள்வி கேட்கும் குழந்தை,
தொலக்காட்சி வழியே சுனாமியைப் பார்த்துச் சுருண்டு போய் மருளும் பிஞ்சு,
கல்வியைப் பாதியிலேயே கை நழுவ விட வேண்டிய ஏழைக் குழந்தைகளுக்கு எழுதவாவது கற்பித்து விட வேண்டும் என்று அதையே ஒரு வேள்வியாக்கிக் கொண்டு...தொலைதூரக் கிராமங்களுக்கு வேண்டி, விரும்பி மாறுதல் கேட்கும் வித்தியாசமான- விதிவிலக்கான ஆசிரியர் கோபால் மேஷ்ட்ரூ,
''இந்த உலகத்திலே ஒரு சுப்பக்கா போதாதா?...ஆளாளுக்கு ஒரு சுப்பக்காவை உண்டாக்கிக்கிட்டே இருக்கணுமா?''என்று ஒரு புறம் சுய அலசல் செய்து கொண்டே மறு புறம் கட்டுக்களை மீறும் சுப்பக்கா
எனப் பாவண்ணனின் கட்டுரைப்பாத்திரங்களும் கூடக் காலத்தில் அழியாத கதா பாத்திரங்களைப் போல நெஞ்சில் நிரந்தரமாக இடம் பிடிக்கின்றன.

கள்ளங் கபடமற்ற குழந்தைப் பருவத்தைப் படம் பிடித்ததைப்போலவே, பிடிமானம் இழந்ததைப் போலக் கலவரம் கொண்டு தவிக்கும் முதுமையின் தவிப்பையும் பதிவு செய்கிறார் பாவண்ணன்.

இத் தொகுப்பில், தவற விட்டு விடக் கூடாத கட்டுரைகளில் ஒன்று , 'முதுமையின் கோரிக்கை'. தனிமையில் வாழ நேர்ந்த முதிய தம்பதியினருடன் சந்திப்பு, கறுப்பினப் பெண் கவிஞர் எழுதிய முதுமை பற்றிய கவிதை, அயல் நாட்டு நண்பர் அனுப்பி வைத்த படக் காட்சித் தொகுப்பில் இடம் பெறும் முதுமையின் கோரிக்கை -இம் மூன்றையும் ஒருசேரத் தொகுத்து நினைவு கூரும் இக் கட்டுரை, பாவண்ணன் ஒரு தேர்ந்த மொழிபெயர்ப்பாளர் என்பதையும் தெளிவுபடுத்துகிறது; நினைவுபடுத்துகிறது.

'' அன்புள்ள மகனே ! வயது முதிர்ந்தவனான என்னை நீ முதன் முதலாகப் பார்க்கும் நாளில் சற்றே பொறுமை கொள். என்னைப் புரிந்து கொள்ள முயற்சி செய். உன்னோடு உரையாடும்போது, சொன்னதையே திரும்பத் திரும்ப ஆயிரத்தோரு முறை சொல்லக் கூடும். தயவு செய்து அப்போது குறுக்கிடாதே. நீ குழந்தையாக இருந்தபோது உனக்கத் தூக்கம் வரும் வரை ஒரே கதையை ஆயிரத்தோரு முறை நான் படித்துக் காட்டியதுண்டு.

சோர்ந்து தளர்ந்த என் கால்களுடன் அடியெடுத்து வைத்து நடக்க முடியாதபோது பற்றிக் கொள்ள உன் கைகளைக் கொடு. நீ முதன் முதலாக அடியெடுத்து வைத்து நடக்கக் கற்றுக்கொள்ளும்போது ,உன் கைகளைப் பற்றிக்கொண்டதைப் போல என்னைப் புரிந்து கொள்ளவும், எனக்கு உதவியாக நிற்கவும் தயவு செய்து முயற்சி செய்.நீ வாழத் தொடங்கும்போது உனக்குத் துணையாக நான் நின்றதைப் போல''

என முதுமையின் கோரிக்கையை, வெளிநாட்டுத் துண்டுப் படத்திலிருந்து மொழிபெயர்த்துத் தரும் பாவண்ணனின் வரிகள், இளைய தலைமுறையினரின் இதயங்களில் மிக இலேசானதொரு அசைவை ஏற்படுத்தினாலும் கூட முதியோர் சிக்கல் அறவே அழிந்து மானுடப் பிரபஞ்சம் தழைக்க வழி பிறக்கக் கூடும்.

பாவண்ணனின் மொழிநடை, வாசிப்பிற்கு வெகு சுகமானது. குளிர் தருவின் நிழலில் நிற்கையில் வருடி விட்டுச் செல்லும் தென்றலுக்கு இணையானது. இந்நூலிலுள்ள எல்லாக் கட்டுரைகளிலும் அந்தத் தண்மையும், மென்மையும் நீக்கமற நிறைந்திருப்பதை அனுபவித்துத்தான் உணர்ந்து கொள்ள முடியும். 'புதிய பார்வை' இதழில் வெளிவந்த இக் கட்டுரைகளுக்கு முழுமையான நூல் வடிவம் தந்து , அற்புதமான ஒரு அனுபவத்தை நுகர்வதற்கு வழி அமைத்துத் தந்திருக்கும் எனி இந்தியன் பதிப்பகத்தார் பாராட்டுக்குரியவர்கள்.

'நதியின் கரையில்..'-கட்டுரைகள்,பாவண்ணன்,எனி இந்தியன் பதிப்பகம்,102,எண்57,பி,எம்.ஜி.காம்ப்ளெக்ஸ்,தெற்கு உஸ்மான் சாலை,தி.நகர்,சென்னை- 17(044- 24329283)விலை,ரூ.70.00.

நன்றி:இம் மதிப்புரையை வெளியிட்ட 'வடக்கு வாசல்'( மார்ச் '08) இதழுக்கு

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....