மேடையில் தமிழ்ச் சங்கச் செயலர் திரு பெருமாள்,சங்கத் தலைவர் திருகிருஷ்ண மூர்த்தி ,திரு ஐராவதம் மகாதேவன்,திரு ஜெயகாந்தன்,திரு ஷேக் காதர் நூருதீன்,திரு தனஞ்சயன்,திருமதி சாந்தா தனஞ்சயன்,மற்றும் நான்.
பத்ம விருது பெற்றோரைப் பாராட்டிப் பேசி வாழ்த்துரை வழங்க ,என்னையும்,வடக்கு வாசல் ஆசிரியர் திரு பென்னீஸ்வரன் அவர்களையும் தமிழ்ச் சங்கத்தினர் அழைத்திருந்தனர்.
மதுரையில் '90களில் நடைபெற்ற ஜெயகாந்தனின் மணிவிழாவின்போது,விழாப் பேச்சாளர்களில் ஒருவராகச் சிறப்புரை ஆற்றும் வாய்ப்பை மீனாக்ஷி புத்தக நிலையத்தின் நிறுவனர் திரு செல்லப்பன் அவர்கள், எனக்கு அளித்திருக்கிறார்.அதற்கு முன்பும், பின்பும் பலமுறை நான் பணியாற்றிய மதுரை பாத்திமாக் கல்லூரியிலும்,அமெரிக்கன் கல்லூரியிலும்,வேறு பல பொது நிகழ்வுகளிலும் ஜெயகாந்தனோடு கலந்துரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. இங்கு - தில்லி வந்த பின்னும், தமிழ்ச் சங்கத்தின் வழி அது தொடர்வதில் நான் மிகுந்த மன நிறைவும், மகிழ்வும் கொண்டேன்.
நவீன தமிழ் இலக்கியத்தின் பிதாமகர்களில் குறிப்பிடத்தக்க ஒருவரான திரு ஜெயகாந்தன் மட்டுமன்றித் தமிழுக்குச் செம்மொழித் தகுதி சேர்க்கும் மிகச் சிறப்பான கல்வெட்டு-நாணய ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கும் அறிஞர் திரு ஐராவதம் மகாதேவன், இந்தியாவின் பண்பாட்டுத்தூதர்களாய்ப் பரதக் கலையின் புழை உலகெங்கும் பரப்பிவரும் திரு தனஞ்சயன் தம்பதியினர்,தொழு நோய் சிகிச்சைக்கன மருந்துக் கண்டுபிடிப்பு - மற்றும் அந்நோயாளிகளின் மறு வாழ்வு என்னும் இவையே குறியாக அர்ப்பணிப்பு உணர்வோடு( உலகச் சுகாதார நிலையத்தின் அங்கீகாரம் பெற்று) உழைத்த மருத்துவர் ஷேக் காதர் நூர்தீன்- என விருது பெற்ற அனைவருமே -குறிப்பிட்ட ஒரு துறையைத் தங்களின் இலக்காகத் தேர்ந்து கொண்டு,அது ஒன்றில் மட்டுமே கருத்துச் செலுத்தித் தங்களையும், சமூகத்தையும் உயர்த்தியவர்கள். அவர்களைப் பாராட்டுவதென்பது, மிகையற்ற ,செயற்கைத் தனங்கள் தவிர்த்த ஒரு செயலாக இலகுவாகவே இருந்தது.அத்தகைய வாழ்த்துரை, பார்வையாளர்களின் அங்கீகாரத்தையும் பெற்றதாக அமைந்திருந்ததென்பதை எனக்குக் கிடைத்த சில எதிர் வினைகளின் வழி விளங்கிக்கொண்டேன்.
ஜே.கே.,வெளித் தோற்றத்தில்...பழகும் தோரணையில் ரொம்பவே மாறியிருக்கிறார்.சிங்கம் போலச் சிலிர்த்தெழும் ஆவேசமும் ஆரவாரமும் அடங்கிப் போய்த் தளர்ந்த உடலும், கனிவான ,சாந்தமான புன்னகையும், குறைந்த சொற்களுமாக இருந்த ஜே.கே.யை..அப்படிப் பார்த்தபோது கொஞ்சம் ஏமாற்றமாகக் கூட இருந்தது.விழாவில் ஏற்புரை வழங்கும்போது கூடத் தன்னை முன்னிறுத்தாமல், உடன் விருது பெற்ற மற்றவர்களைப் பற்றி மட்டுமே மிகக் குறைந்த நேரம் அவர் உரையாற்றினார்.புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக அழைத்தபோது தயங்காமல், மறுப்புச் சொல்லாமல் முன்வந்தார். படம் எடுக்கும்போது மறக்காமல் என் பேத்தியைக் கூப்பிட்டுப் பக்கத்தில் நிறுத்திக் கொண்டார்.
வானொலி நேர்காணலின்போது அவரிடமிருந்து ஓரிரு வார்த்தைகளாக உதிர்ந்த நறுக்குத் தெறித்தாற்போன்ற - நிர்த்தாட்சண்யமான - சமரசம் செய்துகொள்ளாத விடைகள் மட்டுமே அவர் இன்னும் பழைய ஜெயகாந்தனாகத்தான் இருக்கிறார் என்பதைப் பொட்டில் அடித்தாற்போலப் புரிய வைத்தன.முதுமையால், நோயால் உடல் தளர்ந்தாலும்....வயது அவரைப் பக்குவப்படுத்தியிருந்தாலும் ஜே.கே. என்றுமே ஜே.கே யாக மட்டும்தான் இருக்க முடியும்....... வேறெப்படி இருப்பதும் அவருக்குச் சாத்தியமில்லை என்று ஏனோ எனக்கு அப்போது தோன்றியது.
இணைப்புக்கள்:
பத்ம பூஷண் ஜே.கே.
ஐராவதம் மகாதேவனுக்கு வாழ்த்து
1 கருத்து :
மிக நல்லதொரு வலைப்பூவை கண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தங்கள் வலப்பூவை தேன்சிட்டு வளையத்தில் இணைத்துக் கொள்ளலாமே. இதனால் ஒரே வகை சிந்தனைகள் இணையவும் மேலும் பலர் வாசிக்கவும் கூடும்.
வளர்க தங்கள் எழுத்து பணி
கருத்துரையிடுக