துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

24.4.09

பின்சாரில் ஒரு பொன் அந்தி



கதிரவன் மறையும் முன் வானில் கடைசித் தீற்றல்கள்



பைன், தேவதாரு மரக் கூட்டங்களுக்கு நடுவே......







இடை இமயத்திற்குள் ஒளிந்து கொண்டிருக்கும் மலை அடுக்கங்களில் ஒன்று ,உத்தரகண்ட்
மாவட்டம், அல்மோராவிற்கு அருகிலுள்ள பின்சார். கடல் மட்டத்திற்கு மேல் கிட்டத்தட்ட 2800 மீட்டர் உயரத்தில் இருக்கும் இங்கிருந்து சூரிய அஸ்தமனக் காட்சியைக் காணும் அனுபவம் ,மகத்தான மனச் சிலிர்ப்பூட்டுவது;இயற்கையோடு கரைந்து ,பிரபஞ்ச தரிசனத்தில் ஒருமித்துக்
கலக்கும் உன்னதமான அந்த வாய்ப்பு ,அண்மையில் நைனிடால், அல்மோரா, பின்சார் ஆகிய இடங்களுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது வாய்த்தது.மலை முடிகளிலிருந்து காணும்போது கதிரவன் மலை அடுக்குகளுக்குள் மறைந்து போவதில்லை என்பது ஒரு சுவாரசியமான விஷயம். தூரத்தில் தெரியும் தொடுவானத்திற்குள் மட்டுமே அவன் படிப்படியாக மூழ்கிக்கொண்டே போகிறான்.நெஞ்சில் நிலைத்த அந்தக் காட்சியை நான் எடுத்த சில புகைப்படங்களின் வாயிலாகப் பகிர்ந்து கொள்வதொடு வானம் வரையும் அந்திக் காட்சி பற்றிய அற்புதமான சில கவிதை வரிகளும்...கூடவே.......

'' பாரடீ இந்த வானத்திற் புதுமையெல்லாம் ..

..கணந்தோறும் மாறிமாறி...........

உவகையுற நவ நவமாத் தோன்றும் காட்சி

யாரடி இங்கிவை போலப் புவியின் மீதே

எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார்

சீரடியால் பழ வேத முனிவர் போற்றும்

செழுஞ்சோதி வனப்பையெல்லாம் சேரக் காண்பாய்


கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்

கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்

கணந்தோறும் நவ நவமாம் களிப்புத் தோன்றும்

கருதிடவும் சொல்லிடவும் எளிதோ ஆங்கே

கணந்தோறும் ஒரு புதிய வண்ணம் காட்டிக்

காளி பராசக்தி அவள் களிக்கும் கோலம்

கணந்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர்

கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய் ''( பாரதியின் பாஞ்சாலி சபதத்திலிருந்து....)


''வானத்துச்சூரியன்

வர்ணங்களின் தலைவன்

அதனால்தான்

அந்தி மயானத்தில்

அவன் சிதையின் அருகே

அத்தனை நிறங்களின்

அனுதாபக் கூட்டம் ''
(அப்துல் ரஹ்மானின் 'அந்தி ')


''தங்கத்தை உருக்கி விட்ட

வானோடை தன்னிலே

செங்கதிர் மாணிக்கத்துச்

செழும்பழம் முழுகும் மாலை

செங்குத்தாய் உயர்ந்த குன்றின்

மரகதத் திருமேனிக்கு

மங்காத பவழம் போர்த்து வைத்தது வையம் காண ! ''

( பாரதிதாசனின் 'அழகின் சிரிப்பு')




ஒரு பின் குறிப்பு:

ஐம்பதுகளில் இருந்த வட இந்தியர் ஒருவர், எண்பதுகளில் இருந்த தன் வயது முதிர்ந்த தாயையும் ,தந்தையையும் இந்தக் காட்சியைக் காண்பதற்கென்றே அழைத்து வந்திருந்தார். சற்றுத் தொலைவில் நாற்காலியில் அமர்ந்தபடி மாலை மயக்கத்தை ரசித்துக் கொண்டிருந்த அவர்களை -மிகச் சரியாகச் சூரியன் மூழ்கும் தருணத்தில் கைலாகு கொடுத்து அந்த அற்புதக் காட்சியைத் தரிசிக்க வைத்த அவரது பாசம் நெஞ்சை நெகிழ்த்தியது. குழந்தையைப் போலக் குதூகலித்த அவர்கள் ''பை பை சன் ''என்று கையாட்டியபடி அன்றைய கதிரவனுக்குப் பொக்கை வாய்ப் புன்னகையுடன் விடை கொடுத்த அழகு , அஸ்தமனக் காட்சியைப் போலவே ஒரு கவிதை.






















Posted by Picasa

2 கருத்துகள் :

ushadeepan சொன்னது…

pinsaaril oru pon anthi padithen. kathiravan uthayamum, asthamanamum manathai negilviththana. aththanai padankalaiyum appadiye download seithu vitten. oru vidumurai naalin (26th Ap.) inimaiyaana pozhuthu. anbudan< Ushadeepan

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

அம்மா வணக்கம். எத்தனைக்கோடி இன்பம் வைத்தாய் இறைவா என பாரதி வியந்து போல் இயற்கை ஒவ்வொரு நாளும் புதுப்புது வடிவம் கொண்டு நம்மை மயக்குகிறது.இயற்கையின் சூச்சமத்தை அறிந்தவன் ஞானியாகிறான்.மிக அருமையாக காட்சி பதிவுகள்.மனதை மயக்கம் புகைப்படங்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....