துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

30.7.10

’’மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்....’’லண்டன்,சிங்கப்பூர்,பாரீஸ் ஆகிய பெரு நகரங்களில் நகரத்தின் மையத்தில் ஆற்று சவாரி செய்து அந்தந்த ஊர்களைச் சுற்றிப் பார்த்த கணங்களிலெல்லாம் சென்னையின் கூவமும்
அப்படி இருந்தால் ...என்ற கனவு எழுவதுண்டு.

சென்னையும் கூவமும் அப்படித்தான் இருந்திருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறது ’மதராசபட்டினம்’.

எமியின் காதல், பரிதியின் வீரம் ஆகியவற்றை விடப் படத்தில் விஞ்சி நிற்பது அன்றைய சென்னையின் நிலக் காட்சிகளும்,கொச்சின் ஹனீபாவின் மிக நுட்பமான நகைச்சுவையும்தான்.
ஆள் புழக்கம் அதிகமில்லாத மெரீனாக் கடற்கரை....
வாகனப் போக்குவரத்துக்கள் அதிகமின்றித் துடைத்து விட்டது போலிருக்கும் மவுண்ட் ரோட்....
உல்லாசப் படகுப் பயணம் செய்ய ஏற்றதாய் நாற்றமில்லாத கூவம்
(எமி , மூதாட்டியாய்த் திரும்ப வருகையில் அதே நதிக் கரை அவளை மூக்கைப் பொத்திக் கொள்ள வைக்கிறது)
கை வண்டி மற்றும் கை ரிக்‌ஷாக்கள்,அந்தக் காலத்துக் கார்கள்
கவர்னர் மாளிகையாய்க் காட்டப்படும் ரிப்பன் கட்டிடம்....
ஸ்பென்ஸர்....செண்ட்ரல் ஸ்டேஷன்.....

இவற்றையெல்லாம் ........பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றிய என் தாத்தாவும்(’20களில்),
ராணி மேரி கல்லூரியில் பயின்ற என் அம்மாவும்(’30களில்)
நிஜமாய்க் கண்டிருக்கக் கூடும்...
நான் ....நிழலாய்த் திரைப்பட வழி மட்டுமே....!
ஆனாலும் ஒரு காலகட்டத்தில் நிஜமாக இருந்ததை இன்றைய சூழலின் நெருக்கடியான சென்னையில் நிழலாக்கிக் காட்ட எத்தனை உழைப்பு உட்செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது வியக்க வைக்கிறது;படக் குழுவைப் பாராட்ட வைக்கிறது.

மதராச பட்டினத்தின் மற்றுமொரு மைய ஈர்ப்பு , காலம் சென்ற திரு ஹனீபா அவர்கள்.
எமி தன்னைப் புகைப்படம் எடுக்க முயலும்போதெல்லாம் முகத்தில் தெரியும் குழந்தைத்தனமான ஆர்வம்,
பிரிட்டிஷ் காலத்து துபாஷிகளை(மொழிபெயர்ப்பாளர்கள்) அப்பட்டமாகப் பிரதி எடுத்தது போன்ற மிகையற்ற சித்தரிப்பு,
ஆங்கிலேயனிடம் வாலைக் காட்டிக் குழையும் அடிமைப் புத்தி,
தேவையற்ற அங்க சேட்டை எதுவுமின்றிக் குரல் உயர்த்தாத நுண்ணிய நகைச்சுவையால் பார்வையாளர்களை வசப்படுத்தும் திறம்
என்று ஹனீபா படத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறார்.
படங்களில் அவரை இனிமேல் சந்திக்க முடியாத ஏக்கத்தையும் கிளர்த்துகிறார்.

தமிழ்ப் பட உலகில் இது வரவேற்கத்தக்க காலங்களின் மாற்றம்.
அதில் மதராசப்பட்டினத்துக்கும் குறிப்பிடத்தக்க ஓரிடம் உண்டு


மேலும் படங்கள் ;
http://www.kollywoodzone.com/img-madharasapattinam-01-83898.htm

http://www.kollywoodzone.com/img-madharasapattinam-02-83899.htm.

14 கருத்துகள் :

'பரிவை' சே.குமார் சொன்னது…

உங்கள் பார்வையில் நல்ல விமர்சனம் அம்மா.

VMC.ஹனீபாவின் இழப்பு விலை மதிப்பில்லாதது.

ராம்ஜி_யாஹூ சொன்னது…

மேடம் நான் முரண் படுகிறேன்
ஹனீபா வின் நகைச்சுவை நடிப்பை விட, நாகேஷ்,கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு வின் நகைச்சுவை நடிப்பு அதிக சிறப்பு வாய்ந்தது.
எத்தனையோ படங்களில் ஹனீபாவின் நகைச்சுவை நடிப்பு மொக்கையாக, சலிப்பாக இருக்கும்.

நீங்கள் கரகாட்ட காரன், உதயகீதம், சூரியன், வின்னர், வெற்றி கொடி கட்டு , பாமா விஜயம், காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் பார்த்து இருக்கிறீர்களா.

Unknown சொன்னது…

அம்மா
மதராசபட்டினம் என் மனதில் பெரும் ஏக்கத்தை
உண்டாக்கிய படம் அக்கால சென்னையின் காட்சிகள்
மனதில் நிலைத்து நிற்கிறது.
" வாம்மா துரையம்மா
இது வாங்க கரையம்மா
வணக்கம் சொல்லியே
வரவேற்கும் ஊரம்மா "
மனதை மயக்கும் அந்த பாடலில்
மயங்கி களித்தேன் .
கூவம் என்ற அழாகான அந்த
நதியின் இன்றைய கோலம்
பெரும் பாரத்தை உண்டு பண்ணுகிறது ..

பெயரில்லா சொன்னது…

அன்பின் அம்மா,
படம் பழைய நாட்களை நினைவு படுத்திவிட்டது போலும்! கண்களைக் கவரும் படம் மதராஸபட்டணம் என்பதில் எனக்கு எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் இதைவிட சிறைச்சாலை கருத்தையும் கவர்ந்தது. அந்தப் படத்தின் அளவிற்கு இதில் அழுத்தம் குறைவோ என்கிற நினைப்பு எனக்கு உள்ளது. ஓருவேளை அதிகப்படியான விளம்பரத்தின் விளைவோ என்னவோ.

தவிற மலையாள நடிகர்களை சிறப்பாக நாம் பயன்படுத்திக்கொள்ளவில்லை (மம்மூட்டி, ஜெயராம் தவிர்த்து.) அந்த வர்க்கத்தில் இணைந்தவர் அனீபா. அவரது திறமைக்கேற்ற பாத்திரம் தமிழில் அமையவில்லை என்று சொல்லலாம்.

ஆனால் முரண்பாட்டைப் பாருங்கள். அந்தக் காலத்திலிருந்தே மலையாள நடிகைகளை தமிழ் மண் என்றுமே மண் கவ்வ வைத்ததில்லை. இது எப்படி இருக்கிறது.!?

பொன் மாலை பொழுது சொன்னது…

ராம்ஜி -யாஹூ சொல்வது சரிதான்.

எனக்கு தெரிந்த வரை நிறைய மலையாளிகள் நம் தமிழ் பட நகைச்சுவை நாயகர்களின் விசிறிகள்.
"மலையாளத்தில இவர்களிப்போல காமெடி நடிகர்கள் இல்லையே " என்று ஏங்குவார்கள்.
தமிழில் மற்றது எப்படி இருப்பினும் நகைச்சுவை நடிகர்களை அவர்களின் திறமைகளை குறைத்து மதிப்பிட இயலாது.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

கருத்துரையிட்ட இனிய நண்பர்களுக்கு என் நன்றி.
ராம்ஜியின் கருத்தை மனதில் அசை போட்டுப் பதில் எழுதுவதற்குள் கக்கு-மாணிக்கமும் அதையே வழி மொழிந்து விட்டார்.
ராம்ஜி எழுதிய பட்டியலில் பெரும்பாலான படங்களை அவற்றின் நகைச்சுவைக்காகவே ரசித்துப் பார்த்திருக்கிறேன்.
காதலிக்க நேரமில்லை, பாமா விஜயங்களின் நாகேஷ்-பாலையா கூட்டணிகளையும்,கரகாட்டக்காரனின் வாழைப்பழத்தையும்,விவேக்கின் ரன்னையும்,வடிவேலுவின் வெற்றிக்கொடி கட்ட்டையும் ரசிக்காமல்..சிரிக்காமல் கூட இருந்து விட முடியுமா என்ன.
நான் அப்படி எழுதியதற்குக் காரணம் அண்மைக்காலமாக நகைச்சுவை என்ற பெயரில் புகுந்து கொண்டிருக்கும் சில அருவருப்பான வக்கிரங்களைக் கண்ட விரக்தியிலேதான்.(அப்போதும் சுருளிராஜன் அப்படிச் செய்ததுண்டு)
மற்றொன்று, நம் நகைச்சுவை நன்றாக இருந்தாலும் கொஞ்சம் கூடுதலாகவே சத்தம் போடுகிறது;
‘’நான் இருக்கிறேன் பார்’’ என்று வெளிப்படையாகப் பிரகடனப்படுத்திக் கொள்கிறது.
நான் சொல்ல முற்பட்டது அதைத்தானே தவிரக் கலைவாணர்...மற்றும் சந்திர பாபு தொடங்கி...மனோரமா என்ற மாமேதையில் வளர்ந்து இன்றைய விவேக்,எம்,எஸ்.பாஸ்கர் வரை
தொடரும் தமிழ் நகைச்சுவைக் கலைஞர்களைக் குறைத்து மதிப்பிடுவது என் நோக்கமில்லை.
குறிப்பிட்ட அந்த வரி அவ்வாறான தவறான சிந்தனையைத் தூண்டுவதாக இருப்பதால் அடைப்புக் குறிக்குள் சிறைப்பட்ட அந்த வரியைப் பதிவிலிருந்து நீக்கி விட்டேன்.
மதராஸப்பட்டினத்தின் பின்னணி பற்றியது மட்டும்தான் என் பதிவு;அந்த ஊரின் தொன்மையான நிலக் காட்சி அதில் சிறப்பாகப் பதிவாகியிருக்கிறது
என்பதை மட்டுமே நான் குறிப்பிட எண்ணினேன்.
காலகட்டச் சித்திரிப்புக் காட்டும் படங்களில் இதை விடச் சிறைச்சாலையே அழுத்தமும்,கனமும் கூடியது என்ற நண்பரின் கருத்தே என்னுடையதும்.

என் பழைய நாட்கள் என்றுமே சென்னையை மையமிட்டு அமைந்ததில்லை.சென்னயைத் தாண்டிப் போகும் ஒரு வழிப்போக்கராக மட்டுமே நான் எப்போது இருந்திருக்கிறேன்.எப்போதாவது தன் பழைய கல்லூரிக் காலங்களை என் அம்மா பகிரும் கணங்களில் மட்டுமே சென்னை எனக்குக் கொஞ்சம் பக்கத்தில் வரும்.
நான் எப்போதும் மதுரையின் புதல்வி மாத்திரமே.

கக்கு-மாணிக்கம் சொன்னது…

மேடம் உங்கள் கருத்துக்களையும் ஏற்றுகொள்கிறேன். இதே போன்ற எண்ணமும் எனக்குண்டு. அண்மைகாலமாக தமிழ் பட நகைச்சுவை காட்சிகள்
வெறுப்பையும் மன கிலேசத்தையுமே தருகின்றன. இதற்காகவே நான் டி.வி நிகழ்சிகளை பார்ப்பதே இல்லை.
இதற்குக் காரணம் நகைச்சுவை நடிகர்கள் அல்ல. அவர்களை இயக்கும் இயக்குனர்களும் "கதை"அமைப்பவர்களுமே.
பழைய படமான ''அனுபவிராஜா அனுபவி '' தலைசிறந்த நகைச்சுவைப் படங்களில் ஒன்று. இன்றும் அப்படத்தை சிலாகித்துப் பேசும் சில மலையாளிகளை நான் அறிவேன்.
இதே படத்தைப் பல வருடங்களுக்கு பிறகு இந்தி நகைச்சுவை நடிகர் மெஹ்மூத் இந்தியில் தயாரித்தபோது தமிழில் வநத அதே பாத்திரத்திற்கு அதே மனோரமாவையே நடிக்க வைத்தார் அல்லவா?
மொத்தத்தில்,திறமையில் நம் தமிழ்ப் பட நகைச்சுவை நடிகர்கள் தலைசிறந்தவர்கள். ஹனீபா மலையாளத்திலும் நகைச்சுவை வேடமிட்டு நடித்தாலும் அவர் எதிர்நாயகன் - வில்லன் வேடத்தில் தான் அங்கு பெயர் வாங்கியுள்ளார். எனினும் அவர் ஒரு நல்ல குணச்சித்திர நடிகர்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

ராம்ஜி_யாஹூ சொன்னது…

நன்றிகள் மேடம்
பொதுவாகவே நான் இந்த இனம், மொழி, சாதி, மாநிலம், நாடு பாகுபாட்டிருக்குள் ஆர்வம் காட்ட மாட்டேன்,

நான் கவுண்டமணி(+ செந்தில்)யின் தீவிர ரசிகன். ஒரு வேளை அந்த உணர்வு என்னை இப்படி பின்னூட்டம் இட வைத்து விட்டதோ என்னவோ.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நல்லதுதான் ராம்ஜி.
தங்கள் பின்னூட்டம் என்னைச் சற்று மறுபரிசீலனைக்குக் கொணர்ந்ததல்லவா.

ஜெயந்தி சொன்னது…

நல்ல விமர்சனம். பழைய சென்னை காட்சிகள் அனைவரையும் ஏங்கத்தான் வைக்கிறது.

Umapathy சொன்னது…

படம் பார்த்து கனத்த இதயத்துடன் என்ன எழுதுவது என நினைத்து நினைத்து எழுதாமல் போனேன்
தங்களின் பதிப்பு என்னுள் நிலைபெற செய்தது

Sattanathan சொன்னது…

மேடம், மொழி பெயர்ப்பாளர்களை " துபாஷி" என்று சொல்வார்கள் என நினைக்கிறேன். - சட்டநாதன் , கழுகுமலை

எம்.ஏ.சுசீலா சொன்னது…

ஆமாம்.விதூஷி என்பது இசை,நடனம் போலக் குறிப்பிட்ட வித்தையில் தேர்ந்த பெண்ணைக் குறிக்கும் சொல்.துபாஷி என்பதே மொழிபெயர்ப்பாளரைக் குறிப்பது.அவசரத்தில் நேர்ந்த தவறு..சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.மாற்றி சரி செய்து விடுகிறேன்.

Kripa சொன்னது…

Dear Admin,
You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

நன்றிகள் பல...
நம் குரல்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....