25.5.10
ஒரு பெண்துறவியின் போராட்ட சரிதம்
சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளிவந்த தலித்திய நாவலாகிய பாமாவின் ‘கருக்கு',கிறித்தவப் பெண்துறவியர் சார்ந்த அமைப்புக்களின் மீது கடுமையான சில விமரிசனங்களை முன் வைத்தது.
தீண்டாமையின் தீய கொடுக்குகளைக் களைவது ,மத மாற்றத்தாலோ துறவியாக மாறுவதாலோ சாத்தியமாகிவிடவில்லை என்பதைத் தன் துறவு வாழ்க்கை அனுபவத்தால் அறிந்து தெளிந்து அந்நாவலில் பதிவு செய்திருந்தார் பாமா.
தீண்டாமை என்ற ஒன்றை மட்டுமல்லாது குறிப்பிட்ட அந்தச்சூழலில் நிலவும் பன்முகச் சிக்கல்களையும்,அவற்றின் பரிமாணங்களையும் மிக விரிவான பின்புலத்துடன் அலசி ஆராய்கிறது சகோதரி ஜெஸ்மியால் எழுதப்பட்டு வெளிவந்திருக்கும் ’ஆமென்’ என்னும் அவரது சுயசரிதம்.
முதலில் மலையாளத்திலும்,பிறகு ஆங்கிலத்திலும் அதே சகோதரியால் எழுதப்பட்டு 2009இல் பதிப்பிக்கப்பட்டிருக்கும் இந்நூல் கசப்பான பல உண்மைகளை மனத்தடைகள் இன்றி நேர்மையாக முன்வைக்கிறது.
இத் தடைகளைக்கடக்கவும்,துறவு வாழ்வில் தான் கைக்கொண்ட வாக்குறுதியைக் கைவிடவும் இச் சகோதரிக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலான அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது.
குறிப்பிட்ட அந்தக் காலகட்டத்தில்....தன் உள்ளம் உணர்த்திய உண்மைக்கும்,துறவு மேற்கொண்டபோது,தான் செய்த சத்தியப்பிரமாணத்தால் கைக்கொள்ள வேண்டி வந்த சில சமரசங்களுக்கும் இடையே சிக்கித் தவித்த அவரது ஆன்மாவின் அவஸ்தையே அவரது சுயசரிதமாக உருப்பெற்றிருக்கிறது.
1974இல் ஆன்மீகப் பாதையில் அடியெடுத்து வைத்த சகோதரி ஜெஸ்மி,பாமாவைப் போலவே தான் சார்ந்த துறவியர் அமைப்பைத் துறந்துவிட்டு ஒரு சாதாரண மனுஷியாக 2008இல் வெளியே வந்தவர்.
‘உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும்
எல்லாம் கண்ணன் எம்பெருமான்’ எனச் சரணாகதி அடைந்த ஆழ்வார்களைப்போல இயேசுவிடம் மட்டுமே தன்னைச் சரணாக்கி ஒப்புவிக்கத் துடித்த உள்ளத்தின் குரலுக்குச் செவி கொடுத்தபடி உலகியல் வாழ்விலிருந்து ஒதுங்கித் துறவின் நிழலில் அடைக்கலம் தேடிக் கொண்ட இச்சகோதரிக்கு ,அந்நிழல் கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவின் நிழலாக இல்லை;
மாறாக அந்த நிழலின் குரூர நிஜங்கள் கொடூர வெம்மையுடன் அவரது ஆன்மாவையே சுட்டெரித்துப் பொசுக்கிப் போட்டிருக்கின்றன.
நொந்து போன அவரது ஆன்மாவின் அவலமுனகல்களே அவரது ஒப்புதல் வாக்குமூலமாக ‘ஆமென்’னிலும் பதிவாகி இருக்கின்றன.
இயேசுவும் நானும் என்ற பொருள்பட ஜெஸ்மி(Jesus and me-JES ME-Jesme) என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு துறவுஅமைப்புக்குள் பிரவேசித்த அவருக்கு அங்கே மிகுதியாகக் காத்திருந்தவை ,அவர் நம்பி நேசித்த வழிமுறைகளுக்கு முற்றிலும் நேர்மாறான ...அவர் சற்றும் எதிர்பார்த்திராத குரூரமான அதிர்ச்சிகள் மட்டுமே.
தங்களை இறைவன் ஒருவனுக்கு மட்டுமே ஒப்புக்கொடுத்தவர்களாய் ஒத்தநிலையில் வாழும் சகோதரிகளுக்கிடையேதான் எத்தனை வேறுபாடுகள் !
சமையலறையிலும் அன்றாடப்பணியிலும் ஈடுபடுத்திக் கொள்ளும் துறவிகளுக்கும் பிறருக்கும் இடையே வர்க்க வேறுபாடு,
படிப்பால்..உயர்குடிப்பிறப்பால்...நிறத்தால்..இனத்தால் பேதம் என்று ரகம் ரகமான பல வேறுபாடுகளைக் கண்டு அவர் உள்ளம் அதிர்கிறது.
பொறாமை,சினம்,பற்றுள்ளம் ஆகியவற்றை விட்டுவிட்டுச் சமரச நெறியில் வாழ
உறுதி பூண்டவர்களிடம்தான் எத்தனை சிறுமைக் குணங்கள்!
எல்லா அலைகளுக்கும் ஈடுகொடுத்து எதிர்நீச்சல் போட்டபடியே தன் தேர்வுகள் அனைத்திலும் சிறப்புத் தகுதியோடு வெற்றி பெறும் சகோ.ஜெஸ்மி ஆங்கில இலக்கியத்தில் பிஎச்.டி பட்டம் வரை எட்டிவிடுகிறார்;கல்லூரிப் பேராசிரியராகவும்,துணை முதல்வராகவும்,முதல்வராகவும் உயர்கிறார்.
ஒவ்வொரு கட்டத்திலும் மடத்தில் கூடவே இருப்பவர்களால்...மடத்தின் மேலிடப் பொறுப்பாளர்களால் தொடர்ந்து எழும் சிக்கல்களைத் தனது மாறாத இறைப் பற்று...துறவின்போது கைக் கொண்ட கீழ்ப்படிதல்நெறி இவற்றால் மட்டுமே எதிர்கொண்டபடி தன் பயணத்தைத் தொடர்கிறார் ஜெஸ்மி.
ஆன்மீகப்பிடிப்போடு ஒரு இலக்கியவாதியுமான சகோ.ஜெஸ்மியின் அழகியல் ரசனைகள்...,ஆன்மீகநெறிகளோடு அவற்றை ஒருங்கிணைக்க அவர் காட்டிய ஆர்வம்,தரமான திரைப்படங்கள் உலகத் திரைப்படங்கள் ஆகியவற்றில் அவர் கொண்ட ஈடுபாடு,அவற்றைத் தகுந்த விவாதங்களுடன் கல்லூரி மாணவியருக்கு எடுத்துச் செல்ல அவர் மேற்கொண்ட முயற்சி,பாலியல் தொழிலாளியான ஜமீலாவின் சுயசரிதத்தை வெளியிட முன்வரும் அவரது முற்போக்கான இயல்பு,வர்க்கபேதமின்றி எளியோரிடமும் யதார்த்தமாகப் பழகும் பாங்கு இவை அனைத்துமே தவறான புரிதலோடு பார்க்கப்பட்டு அவற்றுக்காகவே குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படுகிறார் அவர்.
கல்லூரி நிதி திரட்டவும்..கல்லூரியில் மாணவரைச் சேர்த்துக்கொள்ளவும் கைக்கொள்ளும் வழிமுறைகள் பற்றி அவர் எழுப்பும் நியாயமான கேள்விகளால் தங்கள் மனச் சாட்சிக்குத் தொந்தரவு ஏற்படுவதைச் சகித்துக் கொள்ள அவரது மேலிடம் தயாராக இல்லாததால் அடுக்கடுக்கான பல நெருக்கடிகளை அவர் எதிர்கொள்ள வேண்டிய நிலை.
துறவுநெறியில் கைக்கொண்ட ’கீழ்ப்படிதல்’என்னும் கோட்பாட்டுக்கு முரணாகச் செயல்படக் கூடாது என்ற ஒரே காரணத்தால்.. மனம் விரும்பாத பல சமரசங்களுக்கு அவ்வப்போது உடன்பட நேர்ந்தாலும்
‘கீழ்ப்படிதல்’என்பது குருட்டுத்தனமானதாக இருக்கலாகாது,அது பொறுப்புணர்வுடன் கூடிய கீழ்ப்படிதலாக மட்டுமே இருக்க வேண்டும் என்று தனக்கு மேல்நிலையில் உள்ள சகோதரியிடமே உரத்து முழங்கும் துணிவு கொண்டவராகவும் விளங்கியிருந்திருக்கிறார் ஜெஸ்மி.
(''...in this ultra modern age why do you still lecture on 'blind obedience'? Recently we were asked to develop 'responsible obedience'.But how can you still emphasize on the past explanations?'')
சகோ.ஜெஸ்மிக்குத் தரப்பட்ட நெருக்கடிகள் உச்சத்தை எட்டியும் அவற்றுக்கு அடி பணியாது ஆன்ம உரத்தோடு அவர் நின்றபோது அவரது மிகச் சிறிய உடல் உபாதையைப் பெரிது படுத்தவும்,அவர்க்கு மனப் பிறழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகக் கூறியபடி முதல்வராக இருக்கும் அவரை நீண்ட விடுமுறையில் சிகிச்சைக்கு அனுப்பவும் கூடத் துணிந்து விடுகிறது அவர் தொடர்பு கொண்ட அந்த மத அமைப்பு.
தான் நேர்ந்து கொண்ட ஆன்மவாழ்வு..தனது தனி மனித ஆளுமை ஆகிய இரண்டுமே காயப்பட்ட நிலையில் அதற்கு மேலும் அதைப் பொறுத்துப் போகும் சகிப்புத் தன்மையைக் கைகழுவிவிட்டு......
இயேசுவின் மீது மாத்திரமே நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு சாதாரணப் பெண்மணியாக அந்த அமைப்பிலிருந்து ஒரு வெளிநடப்புச் செய்கிறார் ஜெஸ்மி.
தில்லியிலிருந்து கேரளா நோக்கிச் செல்லும் பதட்டமான ரயில் பயணத்தில் தொடங்கி அவரது நினைவோட்டமாக விரியும் இந்த வாழ்க்கை வரலாற்று நூல் சுவாரசியமான ஒரு நாவலைப் போன்ற விறுவிறுப்போடு தொடங்கி முடிவு வரை தான் முன்வைக்கும் நிஜங்களால் மட்டுமே வசகர்களைக் கட்டிப்போட்டு விடுகிறது.
லௌகீக வாழ்வில் நிலவும் ஆண் பெண் ஏற்றத் தாழ்வுகளுக்கு மத அமைப்புக்களும் உட்பட்டவையே என்பதையும் ஜெஸ்மி குறிப்பிடத் தவறவில்லை.
பொது இடங்களுக்குச் செல்லுகையில் பெண்துறவிகளைப் போல உடுப்பணிந்து கொண்டு சென்றாக வேண்டிய அவசியம் ஆண் பாதிரிமார்களுக்கு இல்லை.
திருக்கோயில் பூசை நடத்தும் உரிமை,பாவமன்னிப்புக் கோரிக்கைகளுக்குச் செவிகொடுத்தல்,இறுதிச்சடங்குப் பூசை செய்தல் இவையெல்லாமே பெண்துறவிகளுக்கு மறுக்கப்படுவதோடு பெண்துறவிகளுக்கு இல்லாத வலுவான பொருளாதாரப்பின்புலமும் ஆண்பாதிரிமாருக்கு அமைந்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ஜெஸ்மி.
துறவுக்குள் ஆண் நுழையும் சடங்கு புனிதமாகப் போற்றப்படுவது போலப் பெண்ணின் அத்தகைய பிரவேசம் மதிக்கப்படுவதில்லை என்பதையும் ஆதங்கத்தோடு எடுத்துக் காட்டும் இவ்வாழ்க்கை வரலாறு பெண்ணிய நோக்கிலும் கவனம் பெற வேண்டிய ஒன்றாகிறது.
ஒரு முறை பாவமன்னிப்புக் கோரியபோது தனக்கும் பாதிரியாருக்கும் நடந்த உரையாடலை இவ்வாறு வருணிக்கிறார் ஜெஸ்மி.
‘’நீங்கள் திரைப்படங்களுக்குச் செல்லக்கூடாது என்று உங்களுக்கான விதிமுறைகளில் எழுதப்பட்டிருக்கிறதா சிஸ்டர்’’-இது பாதிரியார்.
‘’இல்லை ‘’-இது ஜெஸ்மி.
‘’பாதிரியார்களுக்கான விதிமுறைகளின்படி அவர்கள் மது அருந்தக்கூடாது என்ற சட்டம் இருக்கிறதா’’
‘’அது பற்றி எனக்குத் தெரியாது’’
‘’ஆமாம்.விதிமுறை அப்படித்தான் சொல்கிறது.அதை மீறும்போது அவர்கள் பாவமன்னிப்பு கோரியாக வேண்டும்.ஆனால் நீங்கள் திரைப்படம் பார்ப்பதற்காகப் பாவமன்னிப்பு கோர வேண்டியதில்லை’’
ஒரு சில ஆண் துறவிகளின் சபலசித்தம்,பெண்துறவிகளைத் தங்கள் பாலியல் இச்சைக்குப் பலியாக்கும் அவர்களது இழிந்த போக்கு,பெண்துறவியர் மடங்களில் காணப்படும் இயற்கைக்கு முரணான சில மறைவான பாலியல் நடவடிக்கைகள் ஆகியவற்றையும் கூடப் பிற செய்திகளைப்போலவே ஒளிவுமறைவின்றிப் பதிவு செய்திருக்கிறார் ஜெஸ்மி.
ஆனால்,அவரது புத்தகம் வெளியானபோது (178 பக்கங்களைக் கொண்ட அவரது நூலில்) கிட்டத்தட்ட 5 பக்க அளவில் மட்டுமே இடம்பெற்றிருக்கும் இத்தகைய செய்திகளிலேயே மிகுதியான கவனத்தைச் செலுத்திய ஊடகங்கள் அவற்றில் மட்டுமே கூடுதல் வெளிச்சத்தைப் பாய்ச்சி அந்தச்சகோதரியின் வாழ்வையே ஒரு பரபரப்புப் பொருளாக மலினப்படுத்திவிட்டது மிகவும் வேதனைக்குரியது.
பெண் என்பவள் இல்லறத்தில் இருந்தாலும் துறவறத்தில் இருந்தாலும் இந்தச் சமூகத்தின் அக்கறை அவளது உடல் மீது மட்டும்தான் என்பதையே கரிசனத்தோடு விமரிசனம் எழுதுவதான பாவனையில் இதழுலகம் காட்டிக் கொண்டிருக்கிறது.
தான் சார்ந்திருந்த அமைப்பின் நான்கு சுவர்களுக்குள்ளிருந்து வெளியே வந்துவிட்டபோதும் தான் இன்னமும் கூடத் திருச்சபையின் தீரமான,விசுவாசமான ஒரு பெண்ணாகவே தொடர்வதான பிரகடனத்தோடு முடிகிறது ஜெஸ்மியின் வாழ்க்கைச் சரிதம்.
திருச்சபைத் துறவிகளுக்கான வழிகாட்டுதல் நெறிகளைத் தீவிரப்படுத்தும் முனைப்புடன் வாடிகன் இயங்கிக் கொண்டிருக்கும் தருணம் இது; அத்துடன் காலமாற்றத்திற்கேற்ற வேறு சில கருத்தியல்களையும் இணைத்துத் தகுந்த களையெடுப்புக்களைச் செய்து திருச்சபைக்குப் புதுரத்தம் பாய்ச்சியாக வேண்டிய தேவையை முன்மொழிந்திருக்கும் ஜெஸ்மியின் வாக்குமூலம் காலத்தின் குரலாக உண்மைகளை ஒலித்திருக்கிறது.
நூலை முழுமையாய்ப் படிக்க;
AMEN,THE AUTOBIOGRAPHY OF A NUN,
SISTER JESMIE,PENGUIN BOOKS2009.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
6 கருத்துகள் :
நல்ல பகிர்வு சுசீலா அம்மா. பகிர்வுக்கு நன்றி.
உங்கள் ஒரு பெண்துறவியின் போராட்ட சரிதம் என்ற பதிவு மனதை தொட்டு சென்றது . புத்தகம் பற்றிய அறிமுகம் கிடைத்தது . நன்றி மேடம் .
நல்ல விமர்சனம். பகிர்வுக்கு நன்றி!
ஆமென் நூலை சென்ற ஆண்டுதான் வாசித்தேன். வாசிக்கும்போது அவர் மடத்தைவிட்டு விரைவில் வெளியே சீக்கிரம் வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது. ஒருவரின் மீது மற்றவர் செலுத்தும் ஆதிக்கம் துறவியானாலும் விடாதுபோல. அன்பேசிவம் படத்தில் வரும் இறுதிவரிகள் ஞாபகத்திற்கு வருகிறது, 'பறவைகளுக்கும், துறவிகளுக்கும் நிரந்தரமான சரணாலயம் தேவையில்லை. நானும் ஓர் பறவைதான், நிரந்தரம் என்ற சொல்லையே அசௌகர்யமாக கருதும் பறவை'.பகிர்விற்கு நன்றி.
அன்பின் சுசீலா = ஆமென் நூலினைப் பற்றிய பதிவு அருமை. பெண் துறவியின் போராட்டச் சரிதம் நன்று. நல்வாழ்த்துகள் சுசீலா - நட்புடன் சீனா
நன்றி.இது இப்போது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுக் கிடைக்கிறது.
கருத்துரையிடுக