துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

1.10.12

ஈழத்தமிழ் இந்தியில்....


ஓய்வுக்கே ஓய்வைத் தருவர்களாய் -ஊக்கமான மன எழுச்சியோடு ஆக்க பூர்வமான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்களைக் காணும்போது மனம் சொல்ல இயலாத மகிழ்ச்சியில் மிதக்கும்; நாமும் அதை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் பெருகும்.
அண்மையில் அந்த மகிழ்ச்சியையும் பிரமிப்பையும் அளித்தவர்...80 வயதுக்கு மேலாகியும் தொடர்ந்து பல இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வரும் புதுதில்லியைச் சேர்ந்த [ஓய்வு பெற்ற என்று அவரை எப்படிச் சொல்வது?] இந்திப்பேராசிரியர் டாக்டர் எச்.பாலசுப்பிரமணியம் அவர்கள்.


மொழியாக்கத்துக்காக சாகித்திய அகாதமி விருது போன்ற இலக்குகளையெல்லாம் எப்போதோ அடைந்து விட்டபோதும் துடிப்பான உத்வேகத்துடன் -அதே சமயம் இருக்குமிடம் தெரியாத எளிமையோடு இயங்கிக் கொண்டிருக்கும் வித்தியாசமான இந்த மனிதர் இப்போது தொல்காப்பியத்தை இந்தியில் அளிக்க முயன்று கொண்டிருக்கிறார்.கிட்டத்தட்ட 20 இயல்கள் தாண்டியாயிற்று’அதற்காகவே ஜே என் யூ பல்கலைத் தமிழ்ப்பேராசிரியர்களிடம் ஒரு மாணவனைப்போல வந்து அவர் பாடம் கேட்டுத் தெளிவு பெற்றுச் செல்லும் காட்சியை நான் பல முறை கண்டதுண்டு...

கு.சின்னப்ப பாரதியின் ‘தாகம்’நாவல் உட்படப் பல நவீன தமிழ் ஆக்கங்களையும் இந்தியில் தந்திருக்கும் திரு பாலசுப்பிரமணியம் அவர்கள், புலம் பெயர்ந்து வாழும் சில ஈழஎழுத்தாளர்களின் நாவல்,சிறுகதை,கவிதைக்காப்பியம் முதலியவற்றை அண்மையில் இந்தியில் கொணர்ந்திருக்கிறார்.

அந்நூல்களின் வெளியீட்டு விழாவும், அதனுடன் தொடர்புடையதாகப் புலம் பெயர் இலக்கியக்குரல்கள் என்னும் கருத்தரங்கும் வியாழனன்று[27/9/12] புதுதில்லி ஜே என் யூ பல்கலைக்கழகத்தின் மொழிப்புலங்களுக்கான துறையில் நடைபெற்றது.

தற்போது புலம் பெயர்ந்து வசிக்கும்  இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களாகிய வவுனியூர் உதயணனின் [லண்டன்],பனிநிலவு,நூலறுந்த பட்டங்கள் ஆகிய இரு நாவல்கள்,
 கலாநிதி ஜீவகுமாரனின்[டென்மார்க்] ‘இப்படிக்கு அன்புள்ள அம்மா’
[இந்நூலை கலாநிதி அவர்கள் டேனிஷ் மொழியில் எழுத அவர் கணவர் ஜீவகுமாரன் தமிழாக்கித் தந்திருக்கிறார்.தமிழ் வழி இந்தியில் அது மொழியாக்கப்பட்டிருக்கிறது]
 வி.டி.இளங்கோவனின்[ஃபிரான்ஸ்]சிறுகதைகள் என நான்கு நூல்களையும் தனி ஒருவராக  மொழிபெயர்த்துத் தந்திருப்பதோடு குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து இந்தி மொழியில் நடந்த அந்த நிகழ்வுகள் முழுவதையும் தொகுத்து வழங்கும் பொறுப்பையும் ஏற்று  செயலாற்றிய வேகம் பேரா.எச்.பாலசுப்பிரமணியம் அவர்களிடமிருந்து இளைய தலைமுறையினர்  பயின்றாக வேண்டிய ஒரு பாடம்.

நூல்கள் வெளியீடு
நூல் வெளியீட்டுக்குப் பிறகு, இந்தி மொழியாக்கத்தின் அடிப்படையில்  தில்லிபல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சிலர் நூல்கள் குறித்து மதிப்புரையாற்றினர்.

பிறகு மூலநூல் எழுத்தாளர்களாகிய திரு உதயணன்,திருமதி கலாநிதி,வி.டி.இளங்கோவன் ஆகியோர் தமிழில் அளித்த ஏற்புரைகள் நெஞ்சை நெகிழ்த்துவனவாக அமைந்திருந்தன...


ஆர்மிக்காரர்களின் துப்பாக்கி குண்டிலிருந்து மயிரிழையில் தான் தப்பி வந்த சம்பவத்தை உணர்ச்சிகரமாக விவரித்தார் திரு உதயணன்.

‘’உங்களில் யாருக்காவது எங்களைப்போலப் போரின் மிரட்டலோடு  நாடு விட்டு ஊர் விட்டு சொத்துக்களை சொந்தங்களைத் துறந்து புலம் பெயர்ந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா ‘என்ற நேரடியான வினாவோடு தன் உரையைத் தொடங்கினார் திருமதி கலாநிதி. தங்களை அரவணைத்துக் கொண்ட நாட்டுக்கு நன்றிக்கடனாகவும்,தங்களது புலம்பெயர் சோகங்கள் டென்மார்க்கிலேயே பிறந்து வளர்ந்து அந்த மொழி மட்டுமே தெரிந்த தன் குழந்தைகளுக்கும் தெரிந்தாக வேண்டுமென்பதற்காகவுமே ‘இப்படிக்கு அன்புள்ள அம்மா’ என்ற தன் கவிதை நூலைத் தான் டேனிஷ் மொழியில் எழுதியதாகவும்  அவர் விவரித்தார்.

புலம்பெயர் இலக்கியம் என்பது அண்மைக்காலமாகப் புலம்பல் இலக்கியமாகவே மதிப்பிடப்பட்டு வருவதால்,அந்தக் கட்டத்தையும் தாண்டியதாக அதனை எடுத்துச் செல்ல வேண்டிய கடப்பாடு எழுத்தாளர்களுக்கு இருப்பதைத் தன் உரையில் அழுத்தமாகவே   குறிப்பிட்டார் திரு இளங்கோவன். தமிழ் தெரியாமலே வளரும் தங்கள் அடுத்த தலைமுறையைப் பார்க்கும்போது புலம்பெயர் இலக்கியம் என்பதே வருங்காலத்தில்  இருக்கக்கூடுமா என்பது ஐயமே என்றார் அவர்.

கருத்தரங்கில் பேசிய ஈழ எழுத்தாளர்கள் அனைவரிடமுமே வெவ்வேறு நாடுகளில் சிதறுண்டு வாழும் தங்கள்  அடுத்த  தலைமுறை குறித்த பண்பாடு மற்றும் அதோடு தொடர்புடைய மொழி குறித்த கவலை மேலோங்கியிருந்ததைக் காண முடிந்தது.

உஸ்பெகிஸ்தானிலிருந்து வருகை புரிந்திருந்த மக்தூத் என்னும் எழுத்தாளர் கு.சின்னப்பபாரதியின் பவளாயி நாவலை அம்மொழியில் தந்திருப்பவர்.இந்தியில் உரையாற்றிய அவரைத் தொடர்ந்து என் தலைமையுரை அமைந்தது.

தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களிடையே மட்டுமே பரவலாக அறியப்பட்டிருக்கும் இலங்கைப்பிரச்சினையை,இலங்கைத் தமிழர்களின் போர்த்துன்பங்களை- பலப்பல நாடுகளில் புலம் பெயர்ந்தும் அகதிகளாகவும் வாழ நேரும் அவர்களின் அவலங்களை இந்தியாவின் பிற பகுதியினரும் அறிவதற்கான வாயிலைத் திறப்பதற்கு வழிவகை செய்வதால் ஈழப்படைப்புக்கள் இந்தியில் மொழியாக்கம் செய்யப்படுவதென்பது, மிகப்பெரும் வரலாற்று நிகழ்வு என்பதை என் உரையில் குறிப்பிட்டேன். 

புலப்பெயர்வு,புலப்பெயர்வால் நேரும் சோகங்கள் ஆகியவற்றை வில்வரத்தினம்,சேரன் ஆகியோரின் கவிதைகள் மூலமும்,
 வரதட்சிணை போன்ற மூடத்தனமான சில பழைய மரபுகளிலிருந்து விடுபட வழியமைக்கும்போது ஒரு வகையில் புலப்பெயர்வால் தன்னையறியாது ஏற்பட்டு விடும் சில சில நன்மைகளை வசந்தி ராஜாவின் கவிதை மூலமும் எடுத்துக் காட்டிய நான்,
’கலாநிதி ஜீவகுமாரனின் ’இப்படிக்கு அன்புள்ள அம்மா’ என்னும் படைப்பை வங்க மொழியில் மஹாஸ்வேதாதேவி எழுதியிருக்கும் 1084இன் அம்மா என்னும் நாவலுடனும், இலங்கை எழுத்தாளர் ரஞ்சகுமாரின் ’கோசலை’என்னும் சிறுகதையோடும் ஒப்பு நோக்கிச் சில கருத்துக்களை முன்வைத்தேன்.


ஜே என் யூ பல்கலைக்கழகத் தமிழ்ப்புலத்தின் பேராசிரியர் முனைவர் திரு சந்திரசேகரன் அவர்களின் நன்றி உரைக்குப் பின்பு காலை அமர்வுகள் நிறைவுற்றன.


உணவு இடைவேளைக்குப் பிறகு, தமிழ் நிறைநிலை,முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுடன் இலங்கை எழுத்தாளர்கள் தங்கள் வாழ்க்கை மற்றும் இலக்கிய அனுபவங்களைப்பகிர்ந்து கொண்டு கலந்துரையாடினர்.

அன்று மாலை தில்லி தமிழ்ச்சங்கத்தில் மேற்குறித்த இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதோடு ’கலாநிதி ஜீவகுமாரனின் ’இப்படிக்கு அன்புள்ள அம்மா’வின் ஆங்கில மொழியாக்க நூலும் வெளியிடப்பட்டது.[மொழிபெயர்ப்பாளர் பிரபல தமிழ் எழுத்தாளர் திரு சிட்டி அவர்களின் புதல்வர்]

பல்கலைக்கழக நிகழ்வில்....
பேரா.சந்திரசேகரன்,வவுனியூர் உதயணன்,பேரா.எச்.பாலசுப்பிரமணியம்,வி.டி.இளங்கோவன்,
கலாநிதிஜீவகுமாரன்,நான்,உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர் மக்தூபா


காண்க; இணைப்பு, புலம்பெயர் இலக்கியக்குரல்கள்


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....