துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

16.10.12

இலங்கையை நோக்கி...

நினைவு மலரத் தொடங்கிய குழந்தைப்பருவ நாட்களில் இலங்கையோடு எனக்கு ஏற்பட்ட முதல் பிணைப்பு இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பால் நேர்ந்தது. குடும்பத்தில் ஒற்றைக் குழந்தையாகத் தனிமையில் வளர்ந்த எனக்கு உற்ற துணையும் தோழியும் அதுவாக மட்டுமே இருந்த காலம்...’50களின் பிற்பகுதியும்,’60களும்... !

இலங்கை வானொலியின்  கூட்டுத்தாபன சேவையெல்லாம் தொடங்குவதற்கு முன் அது வெறும் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பாக இருந்த நாளிலிருந்தே நான் அதன் ரசிகையாக இருந்திருக்கிறேன். இன்றும் கூட, இனிமையான பழைய திரைப்பாடல்கள் காதுகளை வருடும்போது முதன்முதலாக இலங்கை வானொலி வழி அவை எனக்கு அறிமுகமான அந்த நாள் நினைவுகளே நெஞ்சில் அலையடிக்கின்றன.பாடல்களை வறட்டுத்தனமாக ஒலிபரப்பாமல் ரசனையோடும் அவை பற்றிய பின்னணியோடும் உற்சாகமான தொனியில் விவரிக்கும் மூத்த அறிவிப்பாளர் திரு மயில்வாகனன் அவர்களின் தமிழும்,குரல்வளமும் இன்னமும் கூட என்னுள் ஒலிப்பதை என்னால் உணர முடிகிறது. 
மயில்வாகனன்

தொடர்ந்து பிற அறிவிப்பாளர்களான திருமதி ராஜேஸ்வரி..., அட்டகாசமான ஆக்கத்திறன் கொண்ட கே.எஸ். ராஜா,முன்னோடிகளின் பாதையில் பயணப்பட்டாலும் தனக்கென ஒரு பாணியைத் தேர்ந்து கொண்ட அப்துல்ஹமீத்,
[படங்கள்;நன்றி,http://yazhsuthahar.blogspot.in/]
மயில்வாகனன் சர்வானந்தா எனப்பலரையும் ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை நான் தொடர்ந்து வந்திருக்கிறேன்.

இலங்கை வானொலி, திரைப்பாடல்ரசனையை மட்டும் எனக்கு அளிக்கவில்லை...’இசையும் கதையும்’ போன்ற நிகழ்ச்சிகளின் வழி என்னுள் இருந்த கதைசொல்லியை வளர்த்தெடுத்ததிலும் அதற்குப்பங்குண்டு.[பள்ளி நாட்களில்..’இசையும் கதையும்’ மீது பெரும் மோகம் கொண்டிருந்த நான்..ஒரு கதையை எழுதி அதற்கேற்ற பாடல்களைப் பொருத்தமாக இயைத்து அந்நிகழ்ச்சிக்கும் கூட அனுப்பி வைத்திருக்கிறேன்.] அவ்வப்போது வானொலி நடத்தும் போட்டிகளில் பங்கு பெற்று ஒரு போஸ்ட் கார்டில் விடை எழுதி அனுப்பி[அப்போதெல்லாம் இந்திய போஸ்ட்கார்ட் இலங்கைக்கும் செல்லும்] அதற்குப் பரிசாக எனக்குப் பிடித்த பாடல் ஒன்று ஒலிபரப்பப்படுவதைக் கேட்டுப்பூரித்திருக்கிறேன்[நான் அவ்வாறு பெற்ற முதல் பரிசு என் விடையின் வெற்றிக்காக,என் பெயரோடு ஒலிபரப்பான’நான் பேச நினைப்பதெல்லாம்..’பாடல்-பாலும் பழமும்]

பணியில் சேர்ந்து...தமிழ் இலக்கியத்தில் தீவிர முனைப்பு கொண்ட பின்பு பேராசிரியர்கள் கலாநிதி கைலாசபதியும்,கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களும் சங்க இலக்கியம்,மற்றும் இக்கால இலக்கியம் சார்ந்த என் அணுகு முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை,தாக்கங்களை ஏற்படுத்தி என்னை செழுமைப்படுத்திக் கொள்ள உதவியிருக்கிறார்கள்.
கலாநிதி கைலாசபதி
கார்த்திகேசு சிவத்தம்பி 
ஈழத்தின் போராட்டம் வலுப்பெறத் தொடங்கிய பிறகு அதன் படைப்பாளிகள் - குறிப்பாக சேரன்,வில்வரத்தினம்,காசி ஆனந்தன்,சங்கரி,செல்வி சிவரமணி,சுமதி ரூபன்,றஞ்சி போன்ற கவிஞர்கள் என்னை நெகிழ்த்தி அசைத்து உருக்கியவர்கள்.
யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது எமது மக்கள் பல வன்கொடுமைகளுக்கு ஆளானதைப் பார்க்க படிக்க நேர்ந்தபோதெல்லாம் புலம்பிக் கையற்றுத் தவித்திருக்கிறேன்.

புலம் பெயர்ந்த வாழும் படைப்பாளிகள் சிலரோடு நட்புக்கொள்ளும் சூழலும் எனக்கு வாய்த்தது.லண்டனில் வசிக்கும் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் நான் பணியாற்றிய கல்லூரிக்கே வருகை தந்து சொற்பொழிவாற்றியதோடு,நான் ஓய்வு பெற்றபின் தில்லி வீட்டுக்கும் வந்திருக்கிறார்.

இப்போது இணையம் பல ஈழப்படைப்பாளிகளைத் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை மிகுதியாகவே ஏற்படுத்தித் தந்திருக்கிறது. 
குற்றமும் தண்டனையும் என்ற என் மொழியாக்கம், ரஞ்சகுமார் சோமபால என்னும் அற்புதமான கதைக்காரரை 
ரஞ்சகுமார் சோமபால 
என் மகனாகவே ஆக்கியிருக்கிறது.

தமிழ் எழுத்தாளர்களுக்கான தளத்தை நடத்தி வரும் அகில் ’கூடுகள் சிதைந்தபோது’என்ற சிறுகதைத் தொகுப்பை அண்மையில் எனக்கு அனுப்பி வைத்தபோது நான் பெரிதும் நெகிழ்ந்தேன்.

முத்துலிங்கத்தின் படைப்புக்கள்,பெண்ணிய நோக்கில் நடத்தப்படும் ஊடறு இணைய தளம் இவை அடிக்கடி நான் செல்லும் தளங்கள்.

உலகின் எந்த மூலைக்குப் புலம் பெயர்ந்தாலும் தமிழை மறக்காமல்...இணையத்தில் தமிழ் வலம் வர ஈழத் தமிழர் செய்த பங்களிப்பை நான் ஒவ்வொரு நொடியும் நன்றியோடு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறேன்.

என்னிடம் முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்த ஒரு மாணவி தேர்ந்து கொண்ட தலைப்பு ‘புலம்பெயர் ஈழக்கவிதைகள்’.அதை நெறிப்படுத்தும் காலகட்டத்தில் ஈழத்தின் பன்முகச்சிக்கல்கள்,அவலங்கள் ஆகியவற்றை வரலாற்று ரீதியாகவும்,படைப்புக்களின் வழியாகவும் என்னால் மிக விரிவாக உள் வாங்கிக்கொள்ள முடிந்தது.

இலங்கை மண்ணில் இதற்கு முன் இரு முறை நான் கால் பதித்திருக்கிறேன்.
2008 டிசம்பரில் மலேசியா செல்லும் வழியில் விமானநிலையத்தில் மட்டுமே தங்கி இருந்து அடுத்த விமானத்தில் ஏற வேண்டியதாக இருந்ததால் நிலையத்தின் கண்ணாடி ஜன்னல் வழி மட்டுமே அம்மண்ணைப்பார்க்க முடிந்தது.
மலேசியா செல்லும் வழியில்,இலங்கை விமான நிலையத்தில்...

 பின்பு 2009 ஆகஸ்டில் ஐரோப்பா பயணத்தின்போது 7,8 மணி நேரம் கொழும்பில் மட்டுமே சற்று நேரம் செலவிட முடிந்தது.  
அப்போதுதான் நிகழ்ந்து முடிந்திருந்த இனப்படுகொலையின் ஈரம் காயாத...பச்சையான குருதியின் வாடை உலராத அந்தப் பொழுதில் என்னால் இலங்கையை உள்வாங்க இயலவில்லை
[காண்க;   

தற்போது 6 நாள் பயணமாக[அக்.17 முதல் 22 வரை] இலங்கை செல்கிறேன்.சுற்றுப்பயணக்குழு ஒன்றுடன் செல்வதால் அவர்கள் தேர்ந்தெடுத்து அழைத்துச் செல்லும் இடங்களுக்கு மட்டுமே சென்றாக வேண்டிய நிலை..
கண்டி,கதிர்காமம்,நுவரேலியா,கலி,கொழும்பு என அங்குள்ள சில இடங்களைச் சுற்றிக்காட்ட குழுவினர் திட்டம் வகுத்திருக்கிறார்கள்.
கொழும்பு ஏற்கனவே சென்ற ஊர் என்பதால் 22 காலை கொழும்பு வந்து சேர்ந்ததும், பிற்பகல் விமானம் ஏறுமுன் நண்பர்கள் யாரேனும் தொடர்பு கொள்ள முடிந்தால் சந்திக்க எண்ணியிருக்கிறேன்.

நம்மவர்கள் வாழ்ந்து மடிந்த மண்.....
இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மண்....
நம் தமிழ் இனத்தின் உழைப்பால் உயர்ந்து நிற்கும் மண்....
சீதை சிறையிருந்த பூமி....
அங்கே செல்கிறேன்...
சிலிர்ப்பாக இருக்கிறது..

இது ஒரு சுற்றுலா அல்ல...
இலங்கை பற்றி என்னுள் பதிந்த நினைவுகளை அசைபோட...
எம் மக்கள் வாழ்ந்த- வாழும் இடத்தில்,அவர்களின் வாழ்க்கை ஓட்டம் குறித்த என் நினைவுகளை உசுப்பி எழுப்பிக்கொள்ள...

மயில் வாகனனின் குரலால் என் காதுகளில் ஒலித்து, பெயரளவில் மட்டுமே அறிமுகமாகியிருக்கும் இலங்கை ஊர்களில் சிலவற்றையாவது காட்சிப்படுத்திக் கொள்ள.... 
அங்கே கால் பதிக்க........

தொடர்புள்ள இணைப்புக்கள்;

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....