துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

30.12.12

இ பாவின் கண்ணன்


கையில் எடுத்து விட்டால் படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாதபடி விறுவிறுப்போடும்...அதே நேரம் ஆழமான தகவல்களைக்  கூட மெல்லிய கிண்டலோடும்,நகைச்சுவையோடும் சேர்த்துத் தரும் ஒரு நூலை வாசித்துப் பல நாட்களாயிற்று. அந்தக்குறையைப்போக்குவது, இந்திரா பார்த்தசாரதியின் நாவலா..கட்டுரை நூலா என்று பிரித்துச் சொல்ல முடியாத ஆக்கமான ’’கிருஷ்ணா..கிருஷ்ணா...’’

இந்துக்கடவுளரில் கண்ணன் மதம் கடந்த பிரியத்துக்கும் நேசத்துக்கும் உரியவன்.பயபக்தியோடு செய்யப்படும் வழிபாட்டை விடவும் ஒரு குழந்தையைச் சீராட்டுவது போன்ற வாஞ்சையே அதில் எப்போதும் ததும்பிக் கொண்டிருக்கும். கண்ணனின் பிள்ளைக் குறும்புகளை அதிகம் கேட்டே அவனைக் குழந்தையாக வரித்துக் கொண்டு விட்ட நம் மனங்களில் அந்தச் சித்திரத்தை இன்னும் அழுத்தமாகத் தீட்டியிருக்கிறது பாரதியின் கண்ணன் பாட்டு.

கண்ணன் ஒரு குழந்தையாக நம் மனங்களில் பதிவாகியிருந்தாலும் அவனுக்குப் பல முகங்கள்,பரிமாணங்கள் உண்டு.இராமனைப்போன்ற ஒற்றைப்படைத் தன்மை கொண்டவன் அல்ல அவன். பாகவதத்தில் தீராத விளையாட்டுப்பிள்ளையாகத் திரியும் அவன், பாரதத்திலோ அரசியல் விளையாட்டில் முக்கியமான அங்கம் வகிக்கும் மதியூகியாகிறான். கண்ணனைக் கடவுளாகவே ஏற்றிருப்பவர்களுக்கும் கூட அவனது செயல்பாடுகளில் பல கேள்விகளும் ஐயங்களும் தலைநீட்டும் இடங்கள் பாரதம்,பாகவதம் இரண்டிலுமே ஏராளமாக உண்டு.அவற்றுக்கெல்லாம் விடை தேட இந்நூல் மூலம் ஒரு முயற்சி மேற்கொண்டிருக்கிறார் இ.பா. அந்த விடைகளை மிக இலகுவான மொழியில்,அவருக்கே உரிய அங்கத நடையில் சொல்லிச் செல்வதால் நூற்றுக்கணக்கான கிளைக்கதைகளும்,தத்துவ விளக்கங்களும் இதில் இடம் பெற்றாலும் கூட அவை துருத்திக் கொண்டோ,எளிதான வாசிப்புக்குத் தடையாக உறுத்திக் கொண்டோ நிற்காமல் ஒரு நாவலுக்குரிய சுவாரசியத்தோடும் வேகத்தோடும் இந்த நூலைப்படித்து விட முடிகிறது.

‘’உபதேசம் என்று எதுவுமில்லாமல் கவனமாக எழுதியிருக்கிறேன்’’என்கிறார் இ.பா.

கண்ணன் என்னும் அந்த அவதாரத்தின் முடிவு ஜரா என்னும் வேடனால்,அவன் எய்யும் அம்பால்  நேர்கிறது.அந்த இறுதிக்கணத்தில் அவன் கேட்கும் கேள்விகளுக்கு விடையாகக் கண்ணன் பல தன்னிலை விளக்கங்கள் அளிக்கிறான்; அதை நாரதர் தனக்கே உரிய பாணியில் விவரிப்பதாக இந்த நூலின் வடிவைக் கட்டமைத்திருக்கிறார் இ.பா.[நாரதரைத் தகவல் கடத்தும் ஒரு நபராக- எல்லாக் காலங்களிலும் சஞ்சரிக்கக்கூடிய ஒரு பத்திரிகையாளராக ஆசிரியர் வடிவமைத்திருப்பதால் பத்திரிகைக்காரருக்கே உரிய,நையாண்டி,விமரிசனம்,மாடர்னிஸம்,போஸ்ட்மாடர்னிஸம்,எக்ஸிஸ்டென்ஷியலிஸம் எனத் தற்காலப்போக்குகளை ஒன்றுகலந்து சொல்வதற்கான வாய்ப்பு இந்தப்படைப்புக்குக் கிடைத்து விடுகிறது]

’700 சுலோகங்களாக விரியும் கீதையைப் போர்முனையில் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா....?’- அதற்கு இப்படி விளக்கம் தருகிறது இந்நூல். நாரதர் சொல்கிறார்...’’எதிர்த்தாற்போல் பகைவர்கள் போராடத் தயாராக நின்றுகொண்டிருக்கும்போது கிருஷ்ணன் மணிக்கணக்கில் இவ்வாறு அருச்சுனனிடம் பேசியிருப்பான் என்பது சாத்தியமா என்பது நியாயமான கேள்வி.நானே கிருஷ்ணனிடம் இது பற்றிக்கேட்டேன்.கிருஷ்ணன் சொன்னான்,’நாரதா வார்த்தைகள் உதவியின்றி மனமும் மனமும் வெறும் எண்ண மொழியில் பேசினால் இந்த உரையாடல் நிகழ அதிகபட்சம் ஐந்து நிமிஷங்களாகும் என்று....நீங்கள் இப்போது சொல்லுகிறீர்களே     அதுவேதான் கிருஷ்ணன் சொல்லும் எண்ண மொழி-telepathy’’

போர் முனைக்கு வந்தபோது அர்ச்சுனனுக்கு நேர்வது  ஓர் existentialistic dilemma என்று கூறும் இ.பா.,
‘செய்கைதான் எல்லாவற்றுக்கும் தீர்வு,மனப்போராட்டம் என்பது,காரியம் மேற்கொள்ளாமல் இருப்பதற்கான மனச்சமாதானம்’என்பதையே கண்ணன்
கீதையாக உரைப்பதால், அது எந்தக்காலத்துக்கும் பொருந்தி வரும் ஓர் அரசியல் manual ஆவதையும், அதனாலேயே கம்யூனிஸ்ட் தோழர் டாங்கே போன்றவர்களும் கூட அதிலிருந்து மேற்கோள் காட்டுவதையும் சுட்டிக்காட்டிச் செல்கிறார்.

ஜராசந்தனின் உடல் எப்படிக்கூறு போட்டாலும் ஒட்டிக்கொள்ளும் என்பதால் துரும்பைக்கிள்ளித் தலை கீழாக மாற்றிப்ப்போட்டு சங்கேதம் காட்டியது...., மற்போர் விதிகளுக்கு மாறாக துரியனின் தொடையில் அடிக்குமாறு பீமனைத் தூண்டியது...,கர்ணனின் தேர்ச்சக்கரங்கள் இறங்கி விட்ட நிலையில் அவன் மீது அருச்சுனனை அம்பு தொடுக்கச் செய்தது என தர்மத்துக்கு மாறான பல செயல்களுக்குத் தான் தூண்டுதல் தந்ததற்கான காரணம் பற்றி பீஷ்மர் துரியோதனன் ஆகியோரிடம்
‘’யுத்தம் என்கிறபோது தர்மம் அதர்மம் என்று எதுவுமில்லை;அநியாயத்தை நியாயத்தால் வெல்ல முடியவில்லையென்றால் அநியாயத்தை அநியாயத்தால் வெல்வதில் தவறேதுமில்லை....நீ ஆடும் ஆட்டத்தைப்பார்த்து அதற்கேற்ப ஆட்ட விதிகளைப்புதுப்பித்துக் கொண்டு ஆடுகின்றேன் நான்...இதுதான் என்னுடைய இப்பொழுதைய தர்மம்..உன் தர்ம விதிகளுக்கு ஏற்பத்தான் நான் என் தர்மவிதிகளை அமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது;இதில் தவறேதுமில்லை...வாழ்க்கை என்பது ஒரு சதுரங்க ஆட்டம்.நீ காய்களை நகர்த்துவதற்கு ஏற்பத்தான் நானும் காய்களை நகர்த்தியாக வேண்டும்.....இதில் உணர்ச்சிகளுக்கு இடமே இல்லை....இதைத்தான் நான் போர்த் துவக்கத்தில் அருச்சுனனிடம் சொன்னேன்..’’என்று குறிப்பிடுகிறான் கண்ணன்.

பெண்ணினத்தின் மீது கண்ணன் கொண்ட பெருங்கருணையே அவர்களுக்கு விடுதலையளிக்கும்  ராச லீலையாக மலர்கிறது.
‘’ஒவ்வொரு கோபிகையும் அவரவர் கற்பனையில் விரிந்த இலட்சிய புருஷனை அவளுடன் குழல் இசைத்து நடனமாடிய கிருஷ்ணனிடம் கண்டாள்’’என்று சொல்லும் இ பா.,
‘’அந்தக்காலத்தில் ஒவ்வொரு ஆணுக்கும் எத்தனை மனைவிகள் தெரியுமா......ஆண்கள் இப்படியிருக்கும்போது பெண்களுக்குத் தங்கள் விருப்பப்படி கற்பனை செய்து கொள்ளக்கூடவா உரிமையில்லை...? அவர்கள் கற்பனையின் வடிகாலாகத் தன்னை அவர்களுக்கு அர்ப்பணித்தான் கண்ணன்’’என்று அதற்கு மேலும் விளக்கம் தருகிறார்.

கௌரவர் அவையில் பாஞ்சாலிக்கு இழைக்கப்பட்ட அநீதியே எந்த தர்ம வரம்பையும் கடந்து தீயதை மாய்க்க வேண்டும் என்னும் உத்வேகத்தைக் கண்ணனுக்கு அளிக்கிறது...! மரணப்படுக்கையில் இருக்கும் பீஷ்மர் ‘நீ நினைத்திருந்தால் இந்தப்போரைத் தடுத்திருக்க முடியாதா’’என்று கேட்கும்போது,
‘’அரை நிர்வாணத்துடன் ஒரு பெண் உன்னிடம் நியாயம் கேட்டபோது உன்னால் என்ன செய்ய முடிந்தது.....? இப்பொழுது நினைத்தாலும் அந்தக்காட்சி என் மனத்தை உலுக்குகிறது.பெண்களுக்குக் கொடுமையிழைத்து விட்டு யாராலும் தப்பித்துக் கொள்ள முடியாது;இதைத் தவிர வேறு தர்மம் எனக்குத் தெரியாது’’என்பதே கண்ணன் சொல்லும் விடை.
நூல் முழுவதும் கண்ணன் வருவது பெண்களின் உற்ற தோழனாகவே....

பீஷ்மன்,கர்ணனாகிய ராதேயன் இருவரையும் கிட்டத்தட்ட ஒரே தட்டில் நிறுக்கிறார் இ பா. இருவரும் சூழ்நிலைக் கைதிகளாகித் தங்கள் மனச்சாட்சியின் உட்குரலைக்கடந்து செல்பவர்கள். அநீதியான செயல் என்று உணர்ந்தாலும் அரச நீதியைக் காப்பதற்காகவே பிறந்தவனாகத் தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் பீஷ்மன் அநீதியின் பக்கம் நின்று போராடுகிறான்;அதே போல நட்புக்காக அநியாயத்தின் பக்கம் சேர வேண்டியதாகி விடுகிறது கர்ணனுக்கு.
‘’பீஷ்மன்,ராதேயன் இருவருமே கிரேக்கத் துன்பவியல் நாடகங்களில் வரும் கதாநாயகர்கள் போன்றவர்கள்’’என்னும் இ பாவின் அவதானிப்பு மிகக்கூர்மையானது.

’’கிருஷ்ணன் ஒவ்வொரு காலத்துக்கும் அந்தந்தக் காலத்துக்கேற்ப அர்த்தப்படும்படியான பல பரிமாணங்களையுடைய மஹாபுஷன்.நீ இந்தக் கதையைச் சொல்லும்போது இந்த அர்த்தப்பரிமாணங்கள் கேட்கின்றவர்களுக்குப் புலப்பட்டால்தான் கிருஷ்ணனைப்புரிந்து கொண்டதாக அர்த்தம்..’’என்று ஜரா, நாரதரைப் பார்த்துச் சொல்லும் வார்த்தைகள் இந்த நூலை எழுதும்போது இ.பா.,தனக்குத்தானே வகுத்துக் கொண்ட நியதியாகவே ஒலிக்கிறது.அந்த நியதியை மிகத் துல்லியமாக இப்படைப்பில் செயலாக்கி எல்லாக் காலங்களுக்கும் உரிய நாயகனாகக் கண்ணனை நிலை நிறுத்தியிருக்கிறார் இ பா.

கண்ணனின் கதை ஜராவின் அம்பினால் முடிவதற்கு முன் தன் அன்புக்காதலி ராதாவை இறுதியாகத் தேடிப் போகிறான் கண்ணன்.அங்கே அவன் காண நேர்வது ராதைப் பாட்டியையைத்தான்..இளமைப்பருவத்தில் அவனோடு கொஞ்சி விளையாடி,மழலை பேசி மகிழ்ந்திருந்த அந்த இளைய ராதையை அல்ல...அவனுள் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த இளம்பெண்ணைத் தொலைத்துக் கொள்ளவிரும்பாமல் அவளைப்பார்க்காமலே திரும்பி விடுகிறான் கண்ணன். மூப்பு இளமை இவையெல்லாம் சரீரத்துக்குத்தான்..ஆத்மாவுக்கில்லை என்று அர்ச்சுனனுக்கு உபதேசித்த தானே இவ்வாறு நடந்து கொண்டதை ஒரு கணம் நினைத்துப் பார்க்கவும் செய்கிறான். துண்டு துண்டான நிகழ்வுகளும் குட்டிக்கதைகளும் நிறைந்த இந்நூலின் ஒருமுகத்துக்கு உதவி இதற்கு ஒரு  நாவல் வடிவு தர உதவுகிறது இந்த இறுதிக்கட்டம்.

இ.பா.,இயல்பிலேயே ஒரு நல்ல கதை சொல்லி...
எள்ளலும்,எளிமையான கதை மொழிபும் அவரது எழுத்துக்கு வாய்த்த ஒரு வரம்; கூடவே கண்ணனின் கதைகளும் சேர்ந்து கொள்ள சுவாரசியத்துக்குப் பஞ்சமில்லாதபடி விறுவிறுப்புடன் செல்கிறது கிருஷ்ணா கிருஷ்ணா...
க்‌ஷத்திரிய வம்சத்தையே பூண்டோடு அழிப்பதுதான் உன் இலக்கா என்கிறாள் காந்தாரி..அதற்கு இவ்வாறு விடை சொல்கிறாணன் இ பாவின் கண்ணன்.
’’பிறவியினால் யாரும் எந்த ஜாதியுமில்லை..குணத்தினால் வருவது ஜாதி..அரசியலில் ஆக்கிரமிப்பு மனப்பான்மை உடையவர்கள் க்‌ஷத்திரியர்கள்; அறிவினாலும் கலாசாரத்தினாலும் ஆக்கிரமிப்பு மனப்பான்மை உடையவர்கள் பிராமணர்கள்....எந்த விதமான ஆக்கிரமிப்பாக இருந்தாலும் அதை எதிர்க்கின்ற கலகக்காரன் நான்...’’

‘’எந்தக்கோட்பாடாக இருந்தாலும் சரி அது காலத்துக்கு ஏற்றவாறு தன்னைப்புதிப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்’’
என்று நூலின் ஓரிடத்தில் கண்ணன் குறிப்பிடுவது போலவே வழக்கமான காலட்சேப பாணிகளிலிருந்து மாறுபட்ட ஒரு நவீன,பின் நவீன கண்ணனை நமக்குப் படிக்கத் தந்திருக்கிறார் இ பா.

கண்ணனின் கதைகள் முழுவதையும் ஒரே இடத்தில் தொகுத்துப்பார்க்கவும்,சமகாலநோக்கில் அவை மறு ஆக்கம் செய்யப்படுவதை மனதுக்குள் அசை போட்டு உள்வாங்கவும் இந்நூலை விட்டால் வேறு புகல் இல்லை என்ற அளவுக்குக் கண்ணனின் அனைத்துப் பரிமாணங்களின் இண்டு இடுக்குகளுக்குள்ளெல்லாம் பயணப்பட்டிருக்கிறார் இ.பா.

கிருஷ்ணா கிருஷ்ணா இப்போது ஒலிப்புத்தகமாகவும் கிடைக்கிறது.
இதைப் படிக்கவோ..கேட்கவோ தவறினால் இழப்பு நமக்குத்தான்....
‘’

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....