துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

10.12.12

பாரதி பிறந்த திருநாளில்

என் எழுத்தின் ஆதர்சம்...,என் தமிழின் ஆதர்சம்..,என் ஆளுமையின் ஆதர்சம் மகாகவி பாரதி. பாரதி பிறந்த இந்தத் திருநாளில் அவன் சார்ந்த ஒரு நூல்,ஒரு ஓவியம்,ஒரு பாடல்...ஒரு காணொளி...இங்கே பகிர்வுக்கு..


முதலில் ஓவியம்...
தற்காலத்தில் புழக்கத்தில் இருக்கும் மகாகவி பாரதியாரின் படத்தினை வரைந்த ஆர்யா தொடங்கிப் பலரும் பாரதி படத்தை வரைந்துள்ளபோதும் என்னை எப்போதும் ஈர்ப்பது நண்பர் தீம்தரிகிட ஞாநியின் [இதழியலாளர்,நாடக இயக்குநர்,தேர்ந்த அரசியல்,சமூக விமரிசகர்]கீழ்க்காணும் பாரதி ஓவியம்தான்.அது ஞாநி வரைந்த ஓவியம் என்று கூட அறியாமல்....அவரிடம் அனுமதி கூடக் கேட்காமல் பலரும் பலவாறு பயன்படுத்தி வருவது ’’தமிழ்நாட்டுக்கே உரிய தனிப்பண்பு....’’

தனது இந்த ஓவியம் பற்றி ஞாநியின் வார்த்தைகளில்..


//1982ல் தீம்தரிகிட தொடங்கியபோது அதன் தலைப்பெழுத்தையும் நானே எழுதினேன். தீம்தரிகிடவின் சின்னமாக அப்போது நான் வரைந்த பாரதி ஓவியம் தீம்தரிகிடவுக்கும், தொடர்ந்து என் ஞானபாநு பதிப்பகம், ஞானபாநு வீடியோ&சினிமா தயாரிப்பு நிறுவனம் அனைத்திற்குமான சின்னமாகப் பதிவு செய்யப்பட்டு பயன்படுத்தி வருகிறேன்.
இதை இன்று பலரும் திருடி, பொட்டு வைத்தோ, வைக்காமல் தட்டையாக்கியோ சிதைத்தும் சிதைக்காமலும் பயன்படுத்தி வருகிறார்கள். இது சட்டப்படி குற்றமாகும். ஏற்கனவே இப்படி என் அனுமதியின்றி என் ஓவியத்தைப் பயன்படுத்திய முறைகேட்டிற்காக, குமுதம், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், இன்னும் சில அமைப்புகள் ஆகியவற்றுக்கு நான் நோட்டீஸ் அனுப்பி அவர்கள் மன்னிப்பும் வருத்தமும் கேட்டுள்ளனர்.
என் பாரதி ஓவியத்துக்கு வெள்ளி விழா ஆண்டு முடிந்துவிட்டது. ஓவியனாக எனக்கு இன்னும் நீண்ட காலம் பெருமை சேர்க்கும் படைப்பாக என் பாரதியைக் கருதுகிறேன்.//


பாடல்....
சிறந்த கவிஞரும் குறுபட,ஆவணப்படத் தயாரிப்பாளருமான ரவிசுப்பிரமணியன் மிகச்சிறந்த பாடகரும் கூட...
பாரதி பிறந்த நாளில்
’’தெளிவுறவே அறிந்திடுதல்
தெளிவு தர மொழிந்திடுதல்
சிந்திப்பார்க்கே
களி வளர உள்ளத்தில்
ஆனந்த கனவு பல காட்டல்
கண்ணீர் துளிவர உள்உருக்குதல்
இங்கு இவை எல்லாம்
நீ அருளும் தொழில்கள் அன்றோ
ஒளிவளரும் தமிழ்வாணி
அடியநேர்க்கு
இவை அனைத்தும் உதவுவாயே’’

என்னும் பாடலுக்குத் தானே மெட்டமைத்து அவர் பாடியுள்ள பாடலை இந்த இணைப்பில் கேட்கலாம்.

நூல்....
ஒரு படைப்பாளியை முழுமையாக எடை போட,அவனது ஆளுமை வளர்ச்சியின் பரிணாமத்தை அறிந்து கொள்ள,எந்தெந்தக்கால கட்டங்களிலெல்லாம் என்னென்ன  வகையான அக,புற சக்திகளால் அவனது படைப்புலகம் பாதிப்புற்றது...அவனது அகமும்,புறமும் கால வெள்ளத்தில் எப்படியெல்லாம் அலைக்கழிவு பட்டது என்பதைப்புரிந்து கொள்ள அவனது படைப்புக்கள் காலவரிசைப்படி தொகுக்கப்பட வேண்டியது முக்கியமானது.

பாரதி பாடல்களை அவ்வாறு வெளியிட அரசு சார்பில்1953-54இலும்,தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழத்தின் சார்பிலும் 1987,89,2001[மூன்றுபதிப்புக்கள்] சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவற்றில் சில குறைகளும் அச்சுப்பிழைகளும்,தகவல் முரண்களும் இருந்தமையால் அவற்றை நீக்கி பாரதி பாடல்கள் முழுவதையும் கால வரிசைப்படி செம்பதிப்பாக வெளியிடும் முயற்சியைத் தனி ஒரு மனிதராக மேற்கொண்டு அசுர சாதனை ஒன்றைச் செய்திருக்கிறார் திரு சீனி.விசுவநாதன்.பாரதி படைப்புக்களைத் தாங்கி வந்த பத்திரிகைப் பிரதிகளின் ஒளிநகல்கள்,பாரதியின் கையெழுத்தில் அவரே திருத்தம் செய்திருக்கும் சில பகுதிகளின் படங்கள் எனப் பலவற்றோடு பாடல்களுக்கான வரலாற்று அரசியல் பின்புலங்களையும் முன் வைக்கும் மிகப்பெரும் முயற்சி இந்நூல்...
’’நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்’’
என்கிறான் மகாகவி.
இந்த நூலையும் வாய்ச்சொல் வழி நண்பர்களுக்குச் செய்யும் பரிந்துரைகளால் மேலெடுத்துச் செல்லலாம்;
ஓரளவு வசதியும் ஆர்வமும் உள்ளவர்கள், பாரதிக்காதல் கொண்டவர்கள் நூலை வாங்கலாம்;
நூலகங்களில் வாங்கி வைக்கப்பரிந்துரைக்கலாம்.

ஒரு வாழ்நாள் உழைப்பை பாரதிக்கு மட்டுமாகவே செலவிட்டு வரும் திரு சீனி.விசுவநாதனின் அயராத உழைப்புக்கு நம் வந்தனங்கள்.

நூல் விவரம்;
கால வரிசையில் பாரதி பாடல்கள்,
பதிப்பு;சீனி விசுவநாதன்,
கிடைக்குமிடம்-தொடர்புக்கு,
சீனி.விசுவநாதன்,
2,மாடல் ஹவுஸ்,
சென்னை
600 035
விலை; 650.00

காணொளி..
சொற்களில் பாரதி வடித்த  பிரிவின் தாபத்தை எஸ்.பி.பியின் தேன்குரலில் நமக்குக் கொண்டு வந்து சேர்த்து உருக்கி நெகிழ்த்தும் ’’தீர்த்தக்கரையினிலே..’’ [வறுமையின் நிறம் சிவப்பு]

3 கருத்துகள் :

புதியவன் பக்கம் சொன்னது…

நீங்கள் இந்தப் பதிவு குறித்து முகநூலில் வெளியிடும்முன்பே எழுதியது இது. அதற்கு சில நிமிடங்கள் முன்புதான் ரவியின் பாடலையும் கேட்டேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் தலைநகரத் தமிழோசை என்று ஒரு மாத இதழ் நடத்தியபோது அதன் அடையாளச் சின்னமாக பாரதயின் மீசையும் கண்களும் மட்டும் உள்ள படத்தைப் பயன்படுத்தினேன். அது ஞாநி வரைந்த படம் என்பது அப்போது தெரியாது. சில மாதங்களுக்குப் பின் தெரிய வந்தது. உடனே ஞாநிக்கு எழுதி, இந்தப் படத்தைப் பயன்படுத்த அனுமதி கோரினேன். உங்களுக்குத் தேவையானால் வேறொரு படம் வரைந்து தருகிறேன் என்று ஞாநி பதில் எழுதினார். தவறுக்கு வருத்தம தெரிவித்துவிட்டு அடுத்த இதழ் முதல் சின்னத்தை மாற்றி விட்டேன்.

நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்...

எம்.ஏ.சுசீலா சொன்னது…

ஒரு முறை பதிவில் போடக்கூட அவர் அனுமதி கேட்டுத்தான் போட்டேன் ஷாஜகான்.[இத்தனைக்கும் அவர் நண்பர்தான்..]கேட்காமல் பயன்படுத்திக் கொள்வோர் பற்றி அவர் எப்போதுமே வருத்தப்பட்டிருக்கிறார்.

சித்திரவீதிக்காரன் சொன்னது…

பாரதி பிறந்த நாளில் அவரைக் குறித்து ஒரு அற்புதப் பதிவு. கமல்ஹாசன் மகாநதி'யில் 'தேடிச்சோறு நிதந்தின்று' கவிதையை அவர் குரலில் வாசித்திருப்பார். கேட்கும் போதே உணர்ச்சி பொங்கும்.
பகிர்விற்கு நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....