வாய்ச்சொல் அருளாதீர் எனச் சென்ற பதிவில் நான் சொன்னதில் சற்றும் மிகை இல்லை என்பதைத் தொடர்ந்து வரும் செய்திகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
பொறுப்பான பதவியும் பாரம்பரியமும் கொண்ட குடியரசுத் தலைவரின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான அபிஜித் முகர்ஜி அளித்திருக்கும் பேட்டி இன்று கடும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
‘’மாணவியர் என்ற பெயரில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அழகான பெண்கள்; அவர்கள் வர்ணம் பூசிக்கொண்டு,பற்களைக்காட்டியபடி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்’’- 28.12.12/ தினமணி,தில்லி பதிப்பு
அபிஜித்தின் திருவாயிலிருந்து உதிர்ந்திருக்கும் இந்த முத்தான கருத்தை அவரது சகோதரியும் குடியரசுத் தலைவரின் மகளுமான சர்மிஷ்டாவே கடுமையாக எதிர்த்திருப்பதோடு அதிர்ச்சியோடு கூடிய தனது வேதனையை வெளிப்படுத்தியிருப்பதும்,அபிஜித்தின் சார்பில் மன்னிப்புக் கோரியிருப்பதும் சற்றே ஆறுதலளித்தாலும்
Sharmishtha said she was highly embarrassed with this remark. "I don't know in what context my brother said that, it's highly insensitive. I'm embarrassed," she said.]
சமூகத்தில் பெண் சார்ந்த ஆணின் கண்ணோட்டங்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
என்னதான் நினைக்கிறார் அந்தப் ‘’பெரிய மனிதர்’’?
அழகான பெண்களென்றால் அவர்கள் முட்டாக்குப்போட்டபடி மூலையில் முடங்க வேண்டும்,இப்படி வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடக்கூடாதென்கிறாரா?
தில்லிக் குளிருக்குக் கம்பளி எப்படி அவசியமோ அதுபோலவே ஒரு அவசியப்பொருளாக ஆகிப்போன உதட்டு வண்ணத்தை அவர்கள் பூசியிருப்பது தவறென்கிறாரா?
குழந்தைகளோடு கூட சில பெண்கள் வருகிறார்கள்,அவர்கள் மாணவியரா என்பது சந்தேகமாக இருக்கிறது என்று வேறு சொல்லியிருக்கிறார்....
இளம் தாய்மார்களாக இருந்தால்தான் என்ன...தில்லியின் இப்போதைய நடுக்கும் குளிரில் தங்கள் ஒருமித்த உணர்வைக்காட்ட அவர்கள் ஒன்றுகூடுகிறார்களே....அதுவே பெரிய விஷயம் இல்லையா..
மாணவியர் நடத்தும் போராட்டத்தில் இவர்கள் கலந்து கொள்வதால் என்ன நேர்ந்து விடும் என்று இப்படிப்பதைக்கிறார் இவர்?
அண்மையில் ஒரு நண்பர் கீழ்க்காணும் வாசகங்களை எனக்கு அனுப்பி மொழியாக்கம் செய்யக் கோரியிருந்தார்...
ஏதோ ஒரு சலிப்பிலும் மனச்சோர்விலும்- நம் ஆண்மக்கள் ஒன்றும் இந்த அளவு மோசமானவர்கள் அல்ல என்ற நம்பிக்கையிலும் அதைச் செய்ய அப்போது மனம் வரவில்லை.
அதை இங்கே தந்திருக்கிறேன்.
[ஆனாலும் இப்போதும் கூட மனிதத்தின் மீது...ஆணினத்தின் மீதான நம்பிக்கை என்னுள் எஞ்சியிருக்கவே செய்கிறது...அதைச் சற்று உலுக்கி விடவே இதை இங்கே தந்திருக்கிறேன்]
’’Don't go out alone at night - That encourages men
இரவில் தனியே செல்லவேண்டாம்-அது ஆணைச் சபலப்படுத்தும்
Don't go out alone at any time - Any situation encourages some men
எந்த நேரமென்றாலும் தனியே செல்லவேண்டாம்-எந்தச் சூழ்நிலையும் ஆணை சபலத்துக்குள்ளாக்கும்
Don't stay at home - Intruders and relatives can both rape
வீட்டில் இருக்க வேண்டாம்-உறவுக்காரர்களும் உள்ளே வருபவர்களும் கூடப்பாலியல் சேட்டைகள் செய்து விடலாம்
Don't go without clothes - That encourages men
சரியாக ஆடை அணியாமல் வெளியே செல்ல வேண்டாம்-அது ஆணைச் சபலப்படுத்தும்
Don't go with clothes - Any clothes encourage some men
ஆடைகளை அழகுற அணிந்தும் செல்ல வேண்டாம்-அதுவும் ஆணைச் சபலப்படுத்தும்
Avoid childhood - Some rapists are turned on by little girls
குழந்தைப்பருவத்தைத் தவிர்த்து விடலாம்-சிலரின் குறி சின்னப்பெண்களின் மீதுதான்
Avoid old age - Some rapists prefer aged women
வயோதிகத்தையும் தவிர்ப்பதே நல்லது-சிலரது கண் வயதான பெண்கள் மீதுதான்
Don't have father, grandfather, uncle or brother - These are the relatives that often rape young women
அப்பா,தாத்தா,மாமா,சித்தப்பா,சகோதரன் என யாருமே வேண்டாம்-இவர்களிலும் கூட இளம் பெண்களைக் குறி பார்ப்பவர்களே அதிகம்
Don't have neighbours - They often rape
அண்டை வீட்டாருடன் பழக வேண்டாம்-அங்கும் ஆபத்து காத்திருக்கிறது
Don't marry - Rape is legal within marriage
திருமணம் வேண்டாம்-அது சட்டஅங்கீகாரமுள்ள பாலியல் குற்றம்
To be quite sure - DON' T EXIST !
எதைச் செய்தால் எதுவும் நடக்காது என்று உறுதியாக இருக்கலாம்?
பேசாமல் ......பெண் என்பவள் இல்லாமலே போய்விடலாம்..அதுதான் நல்லது.’’
இன்னும் ஒன்று....
வாய்ச்சொல் அருளாதீர் பதிவில் நான் சொன்னவற்றை வேண்டுமென்றே புரிந்து கொள்ள மறுத்து அதிலுள்ள நியாயத்தை ஏற்கத் துணிவின்றிக் கீழ்க்காணும் பின்னூட்டம் ஒன்று ’குலசேகரன்’என்பவரால்
[மேல்விவரம் தெரிந்து கொள்ள முடியாமல் மறைந்து எழுதுபவர்]
எனக்கு அனுப்பப்பட்டிருந்தது.அதை அந்தப்பதிவிலேயே வெளியிட்டாலும் அதற்கான மறுமொழியைஎல்லோரும் காணும் வகையில் இங்கு விரிவாக அளிக்க விரும்புகிறேன்.
குலசேகரன் மொழி....
காந்தி சொன்னது, உண்மையான சுதந்திரம் என்பது இரவில் ஒரு பெண் அணிகலன்களோடு தன் வீடு திரும்ப எப்போது முடியுமோ அப்போதுதான். ஆந்திர அமைச்சர் சொன்னது: நள்ளிரவில் பெண்கள் நடமாட வேண்டாம்.
இரண்டையும் நீங்கள் உய்த்துணரவில்லையென்பதே என் அச்சப்பாடு.
காந்தி சொன்னது நாம் ஆகஸ்து 1947 ல அடைந்த சுதந்திரம் வெள்ளைக்காரனிடமிருந்து மட்டும்தான். அது நாட்டுச்சுதந்திரம். மக்கட் சுதந்திரமன்று. என்று நம் நாட்டில் பெண்கள் பயமில்லாமல் வாழ்கிறார்களோ அன்றுதான் நமக்கு உண்மைச்சுதந்திரம்.
இதையே ஆனந்தப்பள்ளு பாடும்போதுபாரதியார் குறிப்பிட்டார். அப்பாட்டில், முதலில் பறையருக்கும் புலையருக்கும் சுதந்திரம். பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே என்று கற்பனையாகக் குறிப்ப்ட்டார். அதாவது எப்படிப்பட்ட சுதந்திரம் வரவேண்டும்? தீண்டாமையில்லா ஏற்றத்தாழ்வுகளில்லாச்சுதந்திரமனைவருக்கும். வந்துவிட்டதா? இல்லையென்பதை உங்கள் ஊரே நிருபித்துக்கொண்டு வருகிறது. மொததம் 12 பேர் தேவர் குருபூஜையின் போது மதுரை சிந்தாமணியில் கொல்லப்பட்டார்கள். மூவர் பரமக்குடிக்கருகில் கொல்லப்பட்டார்கள். ஒரு போலீசு ஆய்வாளர் அடித்துக்கொல்லப்பட்டார் சாதிவெறியர்களால். இருவர் என்கவுன்டரில் டிஎஸ்பி வெள்ளைத்துரையால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். வந்ததா பாரதி சொன்ன சுதந்திரம் உங்கள் ஊரில்? இல்லை. அதே போல,
காந்தி சொன்ன அந்தச்சுதந்திரம் இன்று வந்துவிட்டதா? பெண்களுக்குப் பாதுகாப்பு வந்துவிட்டதா? இல்லையென்பதை தில்லிச்சம்பவமட்டுமன்று; நாடோறும் நடக்கும் பல பெண்ணெதிர் வன்கொடுமைகள் நிருபிக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் பெண்கள் முன்னெச்சரிக்கையாக வாழ வேண்டும் என்கிறார் ஆந்திர அமைச்சர்.
ஐயமேயில்லை. அவர் வாக்குச்சரியே.
பெண்கள் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளைத் தாங்களே எடுத்துக்கொண்டு காப்பாற்றிக்கொள்ளட்டும். All other helps from other sources are secondary.
என் மறுமொழி
இதைப்படிக்கநேரும் வாசகர் எவருக்காவது குலசேகரன் சொல்வது,சொல்ல வருவது என்னவென்று புரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள்....
நான் சொல்ல வருவதையே தன் வார்த்தைகளில் சொல்லி விட்டுக் கடைசியில் ஆந்திர அமைச்சர் சொன்னது சரி என்கிறாரே....இதை எங்கே போய்ச் சொல்ல?
காந்தியடிகள் விரும்பியது அரசியல் விடுதலை மட்டுமல்ல....
சமூக விடுதலையும்தான்.அதைத்தான் நானும் சொல்லியிருக்கிறேன்.
சமூக விடுதலை பெறாத நாட்டில் அரசியல் விடுதலைக்கு அர்த்தமில்லை என்பதாலேயே நாடு விடுதலை பெற்ற தருணத்திலே கூட மதப்பூசல்கள் மலிந்து கிடந்த கொடுமையைப்பார்த்துப்பார்த்து மனம் குமுறிக்கொண்டு தவித்தபடி இருந்தார் அவர்.
நள்ளிரவில் பெண்கள் நடமாடலாகாது எனப் பெண்களின் தனி உரிமையைப் பறித்தவரில்லை காந்தி. நள்ளிரவில் பெண்களும் அச்சமின்றி நடமாடும் வண்ணம் நம் நாடு பக்குவம் பெற வேண்டும் என்பதே அவர் விரும்பியது.
நாடு அரசியல் சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும்-
உயர் அதிகார மையங்களில் இருந்து கொண்டு காந்தியாரின் ஒரு சின்னக்கனவைக் கூட நனவாக்காமல் இருந்து விட்டு....-அதை நிறைவேற்றும் பொறுப்பிலிருந்தும் நழுவி விட்டுப் பெண்களுக்குப் புத்திமதி சொல்ல முன் வருகிறார்களே இந்தப்போலி உபதேசிகள்...அதைச் சுட்டிக் காட்ட மட்டுமே நான் நினைத்தேன்;ஏதோ பெண்கள் எச்சரிக்கையாக இருந்து விடால் ஏதுமே நடக்காது என்பது போன்ற பூச்சாண்டித்தனங்களை எவரும் காட்ட வேண்டாம் என்பதற்காகவே மேலே என் நண்பர் அனுப்பிய வாசகங்களையும் தமிழில் தந்திருக்கிறேன்....
குலசேகரனுக்கு மற்றும் ஒன்று..
அந்தப்பெண் சென்றது ஆந்திர அமைச்சர் சொன்னது போல நள்ளிரவில் இல்லை.இரவு ஒன்பதரைக்கு.
//பெண்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தாங்களே எடுத்துக்கொண்டு காப்பாற்றிக்கொள்ளட்டும்.//
இதற்குப்பெண்கள் தயார்.....ஆனால் அதற்கான வயது வருவதற்கு முன்பே ஏற்படும் அசம்பாவிதங்களால் செய்தித் தாள்களின் பக்கங்கள் நாளும் நிரம்பிக் கொண்டிருக்கின்றனவே....அதற்கு என்ன பதில் சொல்ல முடியும்?
ஏற்கனவே பச்சைப்புண்ணிலிருந்து குருதி ஆறாய் ஓடிக்கொண்டிருக்கிறது....
அதில் வேல்பாய்ச்சும் வேலையைச் செய்வதை விட்டு விட்டு உருப்ப்படியாக வேறு ஏதாவது இருந்தால் செய்யுங்கள்...
இல்லையென்றால் அரசியல்வாதிகளே..அரட்டையாளர்களே....எங்கள் பாட்டை நாங்கள் பார்த்துக்கொள்ள விட்டுவிட்டு வாயையாவது தயவு செய்து மூடிக்கொள்ளுங்கள்...
நாங்கள் வேண்டுவது அது ஒன்றைத்தான்...!
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக