நாற்பது ஆண்டுக் காலமாக இடைவிடாமல் எழுதி வரும் நாவலாசிரியர்,சிறுகதையாசிரியர்,கட்டுரையாளர் என்ற பெருமைகளுக்குரியவர் நாஞ்சில் நாடன். அவரது முதல் நாவலான ‘தலைகீழ் விகிதங்க’ளைப் படித்தபோது நான் அடைந்த கொந்தளிப்பான உணர்வுகள் இன்னும் கூட என் நினைவில் எஞ்சியிருக்கின்றன.[சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமானது அந்த நாவலே]
அலுவல் காரணமாக மும்பையில் புலம்பெயர்ந்து வாழ்ந்ததால் விளைந்த மன உளைச்சல்களை..சொந்த மண்ணின் மீதான ஏக்கத்தைத் தனது ‘மிதவை’நாவலிலும்,சிறுகதைகளிலும் சிறப்பாகப் பதிவு செய்திருக்கும் இவரது புகழ் பெற பிற நாவல்கள்
சதுரங்கக்குதிரை,
என்பிலதனை,
எட்டுத்திக்கும் மதயானை
ஆகியன.
இவரது சிறுகதைகளும் இரு பெரும் பகுதிகளாக- முழுமையான தொகுப்பாக வெளிவந்திருக்கின்றன.’சூடிய பூ சூடற்க’என்னும் இவரது சிறுகதைத் தொகுப்பு 2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது.சிறுகதைகளுக்கான இலக்கியச் சிந்தனை விருது (1975, 1977, 1979), தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருது (1993), கண்ணதாசன் விருது (2009), கலைமாமணி விருது (2009) எனப் பல்வேறு விருதுகளையும் இவர் பெற்றிருக்கிறார்.
நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கைத் தமது புனைவுகளில் பெரிதும் கையாண்டு வரும் ஜி.சுப்பிரமணியம் என்னும் புனைபெயர் கொண்ட நாஞ்சில் நாடன், கட்டுரைகளைக் கூடக் கதைக்குரிய புனைவுத் தன்மையோடு முன்வைத்து வருபவர்; சங்க இலக்கியத்திலும், கம்பனிலும் தேர்ந்த புலமை படைத்தவர். விரைவில் வெளிவரவிருக்கும் இயக்குநர் பாலாவின் பரதேசி படத்துக்கான உரையாடல்களையும் நாஞ்சில் நாடன் எழுதியிருக்கிறார்.
இந்த ஆண்டு கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012ஆம் ஆண்டுக்கான இயல் விருது, நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்படவிருக்கிறது. கேடயமும் 2500 கனடிய டாலர்கள் மதிப்பும் கொண்ட இந்த விருது, சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி, எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரைத் தொடர்ந்து, இவ்வருடம் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
நாஞ்சில் நாடனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...!
இணைப்புக்கள்;
2 கருத்துகள் :
நாஞ்சில் நாடன் அவர்களுக்கு இயல் விருது கிடைப்பது மகிழ்ச்சி.
அவருக்கு வாழ்த்துக்கள்.
பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.
நாஞ்சில்நாடனுக்கு இயல் விருது கிடைத்ததில் அவரது வாசகன் என்ற முறையில் பெருமகிழ்வடைகிறேன்.
கருத்துரையிடுக