துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

17.2.11

நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா-தில்லியிலிருந்து (3) நாஞ்சிலின் ஏற்புரை

ஏற்புரை வழங்கும்
நாஞ்சில் நாடன்
.பாராட்டு விழாவுக்கே உரிய வழக்கமான சம்பிரதாயங்கள்...மாலை,சால்வை மரியாதைகள் முடிவதற்குச் சிறிது நேரமாகி விட்டபோதும் -
ஊசி குத்தும் குளிரிலும் தனது நிறைவுரைக்காக ஆவலுடன் காத்துக் கிடந்த சிறு கூட்டத்தை ஏமாற்றத்துக்கு ஆளாக்கி விடாமல் அரியதொரு உரையை நிகழ்த்தினார் நாஞ்சில் நாடன்.

அன்று காலை சாகித்திய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர்களின் அனுபவப்பகிர்வுக் கூட்டம்(Writer's meet), வானொலி நேர்காணல் போன்ற பல நிகழ்வுகளில் பங்கு பெற்று வந்திருந்தபோதும் அந்தக் களைப்பையும்,சோர்வையும் புறந்தள்ளி விட்டு,..உற்சாகமான மனநிலையுடன் கூடியதாய் அமைந்திருந்தது நாஞ்சிலின் உரை.

டிச. மாதம் தில்லியில் நிகழ்ந்த தமிழ்2010 நிகழ்வில் கலந்து கொண்டு விட்டுத் திரும்புகையில் ’அடுத்து நான் ’பாரத ரத்னா’ வாங்கவே இங்கு வருவேன் ‘என நாஞ்சில் வேடிக்கையாகச் சொல்ல..,நண்பர் ஒருவர் ‘நீங்கள் அதிகார பூர்வமாகவே இங்கு வர வேண்டியிருக்கும்’என்று குறுஞ்செய்தி அனுப்பி வைத்திருந்தாராம்.
‘என்ன இது...நான் அப்படி ஒன்றும் ஒன்றே முக்கால் கோடி ஊழல்செய்து விடவில்லையே’
என்ற திகைப்பாம் இவருக்கு!
எழுத்தைப் போலவே நக்கல் ஊடாடாத பேச்சு எதுவும் நாஞ்சிலிடம் இல்லைதான்!

 சங்க காலம் தொடங்கி எழுத்தாளனின் வாழ்க்கை என்பது ‘பரிசில் வாழ்க்கை’யாக மட்டுமே அமைந்திருப்பதைச்சுட்டிக் காட்டிய நாஞ்சில்நாடன் அதிலும்கூடச் சம்பந்தமே இல்லாத பலரும் பங்கு போடப் பரிதவிக்கும் அவலத்தைத் தனக்கே உரிய நையாண்டியோடு முன் வைத்தார்.
கடந்த ஓரிரு நாட்களாகப் பரிசு பெற்றவர்களோடு பழக நேரிட்ட தனக்கு அந்தப் பரிசுகள் எந்தெந்த வழிகளிலெல்லாம் பெறப்பட்டவை என்பதைக் கேட்பது  சங்கடமாகத்தான் இருந்தது என்றாலும்...தமிழில் பரிசு வாங்குவது,அதிலும் தகுதிக்கு உரிய ஒருவர் வாங்குவது என்பது ஒரு சிக்கலான விஷயமாகத்தான் இருந்து வருகிறது என்றார்.

‘முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே’ என்ற சங்கப் புறநானூற்றுப்பாடலை எடுத்துக்காட்டிய நாஞ்சில்,அரசன் இறந்து கிடக்கும்போது பூக்கள் பூத்தால் அதைச் சூடிக் கொள்ளக்கூட ஆள் கிடைக்காதது போல - சரியான வயதும்,வாழ்க்கையும் தொலைந்த பின்பு கிடைக்கும் பரிசுகளும் அப்படித்தான் என்றார்.
 ‘பிணத்தின் முன் அமர்ந்து திருவாசகம் படிப்பது போன்ற செயலே அது எனக் கூறி,அந்தத் தலைப்பில் தான் எழுதிய கதையையும் எடுத்துக் காட்டிய அவர், தனக்கும் முன்னால்... முன் வரிசையில் இருந்தும் கூடப் பரிசு கிடைக்கப் பெறாத பல முன்னோடி எழுத்தாளர்களை (அசோகமித்திரன்,சுந்தரராமசாமி,லா.ச.ரா.,)நினைவு கூர்ந்து அவர்களின் பிரதிநிதியாக மட்டுமே தான் இந்தப் பரிசைப் பெறுவதாகக் குறிப்பிட்டார்.
தமிழில் காத்திரமாக எழுதும் பல படைப்பாளிகளை-அதுவும் 45 வயதுக்கு உட்பட்ட பலரைத் தன்னால் சுட்டிக் காட்ட முடியும் எனவும் அவர்களுக்காவது வாழ்வின் உரிய தருணத்தில் பரிசுகளும்,அங்கீகாரங்களும் போய்ச் சேர வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் உரையில் பதிவு செய்தார்.

தற்போது கிடைத்திருக்கும் விருது...தான் மேற்கொண்டிருக்கும் நீண்ட நெடும் பயணத்தின் நடுவே ஊக்கப்படுத்துவதற்காகக் கிடைத்திருக்கும் க்ளூகோஸ்
மட்டுமே என்றார் நாஞ்சில்.
சென்னை புத்தகக் கண்காட்சியில் , வியர்வை ஈரம் கசிந்த உள்ளங்கையில் தன்னிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு, பாட்டியிடம் காட்டப் போவதாகச் சொல்லிச் சென்ற (பாட்டி ஒருவேளை கதை ஆர்வம் மிக்கவராக இருக்கலாம்)
ஒரு சிறுமியின் செயல் தனக்கு அளித்த மகிழ்வு வேறு எந்த விருதுகளையும் விட மேலானது என்றார் அவர்.

தனது வாசிப்பு அனுபவம் பற்றியும் அவையில் பகிர்ந்து கொண்ட நாஞ்சில் நாடன்,
விற்பனைப் பிரதிநிதியாகத் தான் பணியாற்றிய நாட்களில் மேலாளர்களைக் காணக் காத்திருந்த பொழுதுகளும்,பயண நேரங்களுமே மிகப்பெரிய நூல்களை வாசிக்கக்கிடைத்த தருணங்களாகத் தனக்கு வாய்த்தன என்பதை எடுத்துக் காட்டினார்.
எழுத்தாளன் என்பவன் தொடர்ந்த வாசகனாகவும் இருந்தாக வேண்டும் என்பதையும் தானும் அவ்வாறே தொடர்ந்து கொண்டு வருவதையும் தன் உரையின் பல இடங்களில் சுட்டிக்காட்ட நாஞ்சில் தவறவில்லை.
எழுத்தாளனின் அம்பறாத் தூணி எப்போதும் வற்றாமல் இருந்தபடி அவனுக்கு ஏவல்செய்யுமானால் அதுவே படைப்பூக்கத்தின் உச்சத்தை நோக்கி அவனை நகர்த்திக் கொண்டு செல்லும் என்ற அவர்,.
கட்டுரைகளை எழுதுவது ஒருபுறம் இருந்தாலும்....
 ‘நான் மீண்டும் என் புனைவுலகத்துக்கு-நாவலுக்கும்,சிறுகதைக்கும்-திரும்பிச் செல்லப்போகிறேன்’என்று ராஜாமணியின் வேண்டுகோளை ஏற்றபடி அவையில் பிரகடனமும் செய்தார் .

கிராமங்களில் ‘கொடை’என்ற திருவிழாவின்போது பறை முழங்கிச்சங்கு ஊதுவதுவழக்கம்; பல நாட்கள் விழா நீளுகையில் கொடை முடிந்த பிறகும்கூட அந்தச் சங்குச் சத்தமும்,கொம்புச் சத்தமும் காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருப்பதைப்போல...விருது கிடைத்தபிறகு ஓயாது ஒலித்துக் கொண்டிருந்த தன் கைபேசியின் அழைப்புத் தொனியும் தனக்கு ஆகி விட்டிருப்பதை  வேடிக்கையாகக் குறிப்பிட்டார் அவர்.
 அண்மைக் காலமாகத் தன் மீது விழும் கூடுதலான புகழ் வெளிச்சம் சற்று தர்மசங்கடமாக இருந்தாலும் தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் விருது , தனது மொழி என்றதொரு வலிமையான ஊடகத்திற்கு வழங்கப்பட்டிருப்பதால் அது பற்றித் தான் பெருமை கொள்வதாகவும், அந்த மொழிக்குத் தான் ஆற்ற வேண்டிய கடமையைத் தன்னால்செய்யமுடியும் என்ற ஊக்கத்தை இந்த விருது அளித்திருப்பதால் அது குறித்து மகிழ்வதாகவும் கூறித் தன் உரையை நிறைவு செய்தார்.

படைப்பாளியிடம் கேள்விகள்கேட்க நேரம் ஒதுக்கப்பட்டபோதும்
சதுரங்கக்குதிரை நாவலின் பெயர்க்காரணம் பற்றிய ஒரு வினாமட்டுமே ஒரு அன்பரிடமிருந்து எழுந்தது.தன் முடிவை..தன் இலக்கைத் தான் தீர்மானிக்க முடியாத ஒரு பாத்திரத்தின் குறியீடு அது என விளக்கமளித்த நாஞ்சில் , பொதுவாகவே தன் படைப்புக்களின் தலைப்புக்கள் வெகு கவனத்தோடு தன்னால் முயற்சி எடுத்துச் சூட்டப்படுபவை என்று குறிப்பிட்டார்.

கூட்டம் முடிவுக்கு வந்து விட்ட பிறகும் ‘கும்பமுனி’நாஞ்சிலைச் சுற்றி வளைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் மேலும் சில ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளவும் நண்பர்கள் வந்து கொண்டே இருந்ததைப் பார்க்கும்போது ஒரு படைப்பாளிக்கு ஏற்ற விருது இதுவாகத்தான் இருக்க முடியும் என்று தோன்றியது.

பனியும்,குளிரும் விரவிக் கிடந்த சூழலிலும் அவற்றின் தீண்டலை உணர முடியாத அளவுக்கு இலக்கியம் மட்டுமே அனைவரின் நெஞ்சு பூராவுமாக நிறைந்து தளும்பிக் கொண்டிருந்த அற்புதத் தருணம் அது..

பி.கு;
தில்லி வலைப்பதிவு நண்பர்கள் திரு விட்டலன்,முத்துலட்சுமி, அகஸ்டஸ்,காயத்ரி ஞானம் ஆகியோரையும்,ஜெயமோகன் கூகிள்குழுமத்தைச் சேர்ந்த நண்பர் திரு காமராஜ்மணி அவர்களையும் (காஸியாபாதிலிருந்து இதற்காகவே வந்திருந்தார் அவர்)கூட்டத்தில் சந்திக்க முடிந்தது பெரும் நிறைவையும்,மகிழ்வையும் அளித்தது..






   

5 கருத்துகள் :

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

இடைவெளி அதிகம் விடாமல், உட னுக்குடனேயே நாஞ்சில் நாடனின் ஏற்புரையை வலையேற்றம் செய்திருப்பது நிறைவாக இருக்கிறது. சாஹித்ய அகாடெமி விருதின் கனம் தலைக்கேறிவிடாத நிதானம் மன நிறைவை அளித்தது.

விருதும் வெளிச்சமும் இருந்தால் தான் இங்கே நிறையப்பேருடைய கவனத்துக்கு வரமுடியும் என்ற நிலையைப் பார்க்கும்போது சக வாசகர்களுடைய நிலையை நினைத்துக் கொஞ்சம் சங்கடப்படவேண்டியிருக்கிறது.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

இடைவெளி அதிகம் விடாமல், உட னுக்குடனேயே நாஞ்சில் நாடனின் ஏற்புரையை வலையேற்றம் செய்திருப்பது நிறைவாக இருக்கிறது. சாஹித்ய அகாடெமி விருதின் கனம் தலைக்கேறிவிடாத நிதானம் மன நிறைவை அளித்தது.

விருதும் வெளிச்சமும் இருந்தால் தான் இங்கே நிறையப்பேருடைய கவனத்துக்கு வரமுடியும் என்ற நிலையைப் பார்க்கும்போது சக வாசகர்களுடைய நிலையை நினைத்துக் கொஞ்சம் சங்கடப்படவேண்டியிருக்கிறது.

Unknown சொன்னது…

திரு.நாஞ்சில் நாடன் அவர்களின் ஏற்புரையை தொடர்பதிவாக அருமையாக தொகுத்திருக்கீங்க அம்மா.பகிர்வுக்கு நன்றி.பதிவில் என்னையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி.

அப்பாதுரை சொன்னது…

நாடன் அவர்களின் பேச்சு நெஞ்சைத் தொட்டது. அசோகமித்திரன் போன்றவர்களுக்கு இந்த விருது இன்னும் வழங்கப்படவில்லையென்பது வருத்தமே.

ஆயிஷா சொன்னது…

அருமையாகதொகுத்திருக்கீங்கமா. வாழ்த்துக்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....