துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

4.2.11

கதை உதிர் காலம்...!தமிழின் சிறந்தசிறுகதைகளில் இதுவரை படிக்காமல் தவற விட்டவற்றைத் தேடித் தேடிச் சேர்த்து ஒரு நாளைக்கு ஒன்றாகக் குறைந்த பட்சம் வருடத்தில் 300 கதைகளையாவது படித்து முடிக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்தபடி கடந்த வாரம்தான் தீவிர வாசிப்பைத் துவங்கினேன்.ஐந்து வெவ்வேறு படைப்பாளிகளின் அருமையான சிறுகதைகளைப் படித்து நிமிர்வதற்குள்
ஜெயமோகனின் தளத்தில் சிறுகதை மழையாய்க்கொட்டத் தொடங்கி விட்டது.பார்வையை வேறெதிலும் திருப்ப முடியாதபடி மனிதர் தன் எழுத்தால் வசியம் செய்து கட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார். 
ஜெயமோகனைப் பொறுத்தவரை, இது கதை உதிர் காலம்..!

பிரபஞ்சத்தில் ரத்தமும் சதையுமாய் நமக்கு முன் வாழ்ந்து நடமாடிய உண்மையான சில மனிதர்களை - அவர்களின் வாழ்க்கைச் சித்திரங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு அவற்றோடு தனது புனைவுகளையும் ஒருங்கிணைத்தபடி சிறுகதைகளாக்கும் பாணியைக் கையாண்டபடி அடுத்தடுத்து அவர் வெளியிட்டு வரும் கதைகளின் வரிசையில் அற’த்துக்கு (அறம் பாடுதல்-ஒரு மீள் பார்வை)அடுத்தாற்போலப் படிக்கக் கிடைத்திருக்கும் அற்புதமான ஒரு படைப்பு, சோற்றுக் கணக்கு
திருவனந்தபுரத்தில் சிறியதொரு உணவு விடுதி நடத்தி வரும் கெத்தேல் சாகிப் (அவரும் உண்மையாகவே வாழ்ந்து மறைந்த ஒரு மனிதர்தான்;காண்க-விக்கி இணைப்பு) குரான் நெறிப்படி தான் போடும் சோற்றுக்குக் கணக்கு எதுவும் வைத்துக் கொள்ளாமல்...தன் உணவகத்தில் வந்து உணவருந்துபவர்களுக்கெல்லாம் வாரி வழங்கும் ஒரு சூபி.
ஆனாலும் அதனால் எந்த இழப்புமின்றி அங்கே செல்வமே குவிகிறது.அது பற்றியும் அவருக்குக் கவலையில்லை.வந்தோர்க்கு வயிறார,சுவையாக உணவு படைக்கும் தர்மம் ஒன்று மட்டுமே அவர் வரித்துக் கொண்டிருக்கும் ஒரே அறம்.
அப்படி ஒரு அறநெறியைத் தான் நேர்ந்து கொண்டிருப்பதான உள்ளுணர்வைக் கூட வெளிக்காட்டாதபடி தனது செயல் ஒன்றில் மட்டுமே குறியாய் இயங்கும் கர்மயோகி அவர்.

மேற்படிப்புக்காக உறவினர் வீட்டில் தங்கி’இடிசோறு’சாப்பிட நேர்ந்த ஒரு மாணவன் ,அங்கிருந்து தப்பி வந்து சாகிபிடம் தஞ்சமடைகிறான்.
 உணவகத்தில் அவர் வைத்திருந்த உண்டியலில் அவ்வப்போது அவனால் இயன்ற பணத்தைப் போட்டுக் கொண்டே வந்தாலும் சோற்றுக் கணக்குப் பார்க்கும் அவனது உள்ளம் அதைச் சரிவரத் தீர்க்காத குற்ற உணர்வில் குமைகிறது.சாகிபு அதைக் கொஞ்சமும் சட்டை செய்தவரில்லை.பஞ்சைப் பனாதைகளுக்கும், பையன்களுக்கும்,பணக்காரர்களுக்கும் அவரிடமிருந்து கிடைப்பது ஒரே வகையான உணவூட்டல் மட்டுமே.

வறுமை மற்றும் சிக்கனத்தின் காரணமாகத் தன் தாய் அளந்தளந்து போட்ட அன்னத்தை மட்டுமே உண்டு பழகியிருந்த அவன் கட்டற்ற கருணை வடியும் அவர் கரங்களில் மட்டுமே தாய்முலைப் பாலைத் தரிசிக்கிறான்; சுவைக்கிறான்.
படிப்பு முடிந்து நல்ல வேலை கிடைத்ததும் அவரது சோற்றுக் கணக்கைத் தீர்க்கக் கட்டுக்கட்டாய்ப் பணத்துடன் வந்து இரு உண்டியல்களை அவன் நிறைத்தபோதும் அவரிடம் அதற்கான எதிர்வினை ஏதுமில்லை.தான் தற்போது வேலையில் சேர்ந்திருப்பது..வேறு தகவல்கள் ஆகியவை பற்றி அவருக்கு எந்த 
அக்கறையும் இல்லை;
தன் வழக்கமான போக்கில் வாடிக் கிடக்கும் வயிறுகளை நிரப்பும் வேலை ஒன்றில் மட்டுமே நிஷ்காமிய் கர்மியாக முனைந்திருக்கும் அவரைப் புரிந்து கொள்ள முடிவதாலேயே அதையெல்லாம் அவரிடம் தெரிவிக்க வந்து விட்டுச் சொல்லாமலேயே விலகிப் போய்விடுகிறான்.அது அவருக்குத் தேவையற்றது என அவன் உணரும் கணம் அற்புதமான பதிவு.
இந்தக் கட்டத்தில் மிகக் குறைந்த ஒரு காலகட்டத்தில் மட்டுமே அவனுக்குத் ’தண்டச்சோறு’போட்ட மாமி - இப்போது வறுமையில் நொடித்துப் போனவளாய் அவன் முன் வந்து தான் போட்ட சோற்றுக் கணக்கை நினைவூட்டிச் செஞ்சோற்றுக்கடன் தீர்க்க அழைப்பு விடுக்கிறாள்.
சோற்றுக் கணக்கைச் சற்றும் பாராத கெத்தேல் சாகிபிடமிருந்து அவன் பெற நேர்ந்த ஞானம் எந்த வகையான முடிவை நோக்கி அவனை இட்டுச் செல்கிறது என்பதே கதையின் இறுதிக் கட்டம்.

போடாத சோற்றுக்குப் பெண்கட்டத் துடித்த மாமியும்,
போட்ட சோற்றுக்குக் கணக்கே பார்க்காத சாகேபும் 
இச் சிறுகதையில் இரு துருவ சித்திரங்கள்.
மண்ணில் இவ்விரு வகை மனிதரும் உண்டு.ஆனாலும் சாகேபு போன்ற மனிதர்கள் அபூர்வமாகத்தான் ஜனிக்கிறார்கள்
அப்படி ஒருவர் ஜெயமோகனின் கண்ணில் பட்டதால் அது இங்கே கதையாய்ப் பதிவாகியிருக்கிறது.இல்லாவிட்டால் பத்தோடு பதினொன்று!
ஒரு சொட்டுக் கண்ணீரையாவது உதிர்க்காமல் இந்தக் கதையைத் தாண்டிப் போய்விட முடியாது என்பதே இந்தப் படைப்பின் வெற்றி.
அழுத்தமான இன்னொரு கதையைப் படிக்கிற வரையில் சோற்றுக் கணக்கு 
உள்ளுக்குள் சுழன்று கொண்டே இருக்கும்
’’அத்தனைபேருமே சோற்றுக்கணக்குத்தான் பார்க்கிறார்கள். தானும்தான் என ஒரு கணத்தில் அவன் உணர்கிறான். அத்தை போடாத சோற்றுக்கான கணக்கை அவனும் அதுவரை மனதில் வைத்திருக்கிறானே. அந்த கணக்கில் இருந்து அவன் சற்றே மேலெழுவதுதான் கதையின் உச்சம். அந்த எழுச்சியை அக்கணம் கெத்தேல்சாகிப் அளிக்கிறார்’’- 
நண்பர்களோடான கலந்துரையில் கதை பற்றி ஜெயமோகன் பகிர்ந்து கொண்டகருத்து
.

10 கருத்துகள் :

R. Gopi சொன்னது…

கொஞ்சம் கொஞ்சம் என் கதையைப் போல இருக்கிறது.

எங்கள் வீட்டுப் பொருளாதார சூழ்நிலை அவ்வளவு நன்றாக இல்லாத காலகட்டம் அது. ஒரு அம்மா பக்கத்தில் இருக்கும் கிராமத்திலிருந்து பத்துப் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அரிசி கொண்டு வந்து தருவார். ஒரு கணக்கு வழக்கும் கிடையாது. கொடுத்த பணத்தை வாங்கிக்கொள்வார். வீட்டில் அரிசி தீரச் சரியாக ஒருநாள் இருக்கும்போது அவருக்கு எப்படித் தோன்றும் என்று தெரியாது. சரியாக வந்துவிடுவார் (அன்னபூரணி).

ஒவ்வொரு முறையும் அரிசியைப் பாத்திரத்தில் கொட்டிவிட்டு அவருடைய சாக்கு மூட்டையைக் கட்டிக்கொண்டே என்னைப் பார்த்து ‘நல்லாப படிக்கணும், என்ன” என்று சொல்லிக்கொண்டே பதிலை எதிர்பார்க்காமல் நடையைக் கட்டுவார். அரிசிக்கார அம்மா என்றே அவருக்கு எங்கள் வீட்டில் பெயர் வைத்திருந்தோம்.

கதையில் வருவது போல நானும் பார்ட் டைம் வேலை செய்திருக்கிறேன். அதே கால அளவு, மாலை 5 மணியிலிருந்து இரவு 12 மணி வரை! மறுநாள் காலை ஐந்து மணிக்கு எழுந்துவிடுவேன்.

உறவினர் சிலரிடம் அந்தக் காலக் கட்டத்தில் உதவி கேட்டதுண்டு. ஆனால் கேட்ட உதவி கிடைத்ததில்லை. அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான்.
*****

குவித்த தாமரை இலை மேல் சுடுசோறு, அதன்மேல் அடுப்பிலிருந்து நேரே கொண்டு வரும் மீன் குழம்பு ஊற்றப்படும் காட்சி, கோழி பொரியல் - ஜெமோ இதை விவரிக்கும்போதே அந்தக் காட்சி மனதில் விரிகிறது. சாஹிபின் சமையல் சுவையைத்தான் நாம் பார்த்ததில்லை. ஜெமோவின் எழுத்திலாவது படித்துப்பார்த்து ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

அன்னம் பர பிரம்ம சொரூபம், அன்னம் ஆனந்தம். உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர்.

சாஹிபின் கடையில் இருப்பது தேவதை அன்று, ஜின், அதுவும் மலையாளத்து ஜின் என்று சொல்லுமிடம் சுவையாக இருக்கிறது.

ஒரு தொழுகை போல சமையல் செய்வது (செய்யும் தொழிலே தெய்வம்), வயிறு மனம் நிறையும் அளவிற்குப் பரிமாறுவது, ஆத்மார்த்தமான அர்ப்பணிப்புடன் சமையலுக்குத் தேவையான பொருட்களை அவரே நேரில் சென்று வாங்குவது என்று சாஹிப் உயர்ந்து நிற்கிறார்.

இறந்து கிடக்கும் நாய், அதைத் தொடர்ந்து வரும் சில வரிகள் ஒரு புராணக் கதையை நினைவூட்டுகிறது. இப்போது முழுதும் நினைவிலில்லை.

பெயரில்லா சொன்னது…

தமிழில் தவறவிட்ட பல நல்ல கதைகளை தேடி சென்று படிக்க வேண்டும் என்ற உங்கள் உறுதி மொழி என்னையும் ஆட்டுவிக்கிறது. தயவு செய்து அப்படி படித்த நூல்களின் பெயர்களை உங்கள் பதிவில் பட்டியல் இடுங்கள். என் போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
ஒரு உணர்ச்சி பூர்வமான கதை மனதை பாதித்தால், அது போன்று இன்னொரு கதையை படிக்கும் வரை அந்த பாதிப்பு மனதை விட்டு நீங்காது என்பது மிகவும் உண்மை. அதே போல் அந்த கதா பாத்திரம் நம் நினைவில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பதும் உண்மை. நான் பல வருடங்களுக்கு முன் படித்த சில சிறு கதையின் கதா பாத்திரங்கள் இன்றும் என் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
இப்பொழுது 'சோற்றுக் கணக்கு' படித்துவிட்டுதான் மறுவேலை.
உங்கள் பதிவுகளை படிப்பது மனதிற்கு நிறைவாக இருக்கிறது. மிக்க நன்றி!

R. Gopi சொன்னது…

எனக்கு இந்த அளவு சாப்பாடு பரிமாறும் உணவு விடுதிகளில் சாப்பிடப் பிடிப்பதில்லை. ஒருவர் எவ்வளவு சாப்பிடவேண்டும் என்பதை சாப்பிடுபவர்தான் முடிவு செய்யவேண்டும். நான் பார்த்தவரையில் கேரளாவில் அளவு சாப்பாடு விடுதிகள் இல்லை. தமிழ்நாட்டில் நிறைய இருக்கின்றன.

ஒரு கட்டத்திற்கு மேல் போதும் என்று சொல்லக்கூடிய ஒரே விஷயம் சாப்பாடுதான். வேறெந்த ஒரு விஷயமும் போதுமென்று படுவதில்லை. இந்தக் காரணம் பற்றியே தானத்தில் சிறந்தது அன்னதானம் என்றும் சொல்கிறார்களோ.

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. கலங்க வைத்தது இரு கதைகளும்.

Unknown சொன்னது…

நெஞ்சுருக்கும் நெகிழ்வான கதை. நன்றி அம்மா...

அப்பாதுரை சொன்னது…

சோற்றுக்கணக்கு படித்தேன். பல முறை படிக்க வேண்டியிருந்தது; நீளம் ஒரு காரணம்; மனம் நிலைப்படாதது இன்னொரு காரணம். நாயகனின் சுயநல நிம்மதித் தேடலை மனித நேயம் மூடியதா அல்லது நேயத்தை நிம்மதி விலைக்கு வாங்கியதா என்று யோசிக்க வைத்திருக்கிறார். 'என்னுடன் போராடிச் சாக வா' என்று துரியோதனன் வெளிப்படையாகக் கேட்காவிட்டாலும், 'என் மகனைக் கொல்லாதே' என்று குந்தி வெளிப்படையாகக் கேட்டாலும் - இரண்டிலுமே சஞ்சலப்படாத நம் மனம், குற்றம் காணாத நம் மனம், இருவரின் எதிர்பார்ப்புளையும் அல்லது ஒருவரின் எதிர்பார்ப்பையும் கூட ஒதுக்கியிருந்தால் கர்ணன் பேரில் குறை கண்டிருக்கும் என்று நினைக்கிறேன். சாகேபின் அமைதியில் தவறில்லையெனில் மாமியின் முறையீட்டிலும் தவறில்லை என்றே நினைக்கிறேன். இங்கே மாமி கேட்பது தனக்காக அல்லவே? எனக்கென்னவோ நாயகனின் தாய் மகா சுயநலக்காரி போல் தோன்றியது.

அறிமுகத்துக்கு நன்றி.

அப்பாதுரை சொன்னது…

அன்னதானம் பற்றிய insightful comment கோபி.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நன்றி நண்பர்களே...ஒரு அசலான எழுத்து நம் அடிமனங்களில் உறையும் உண்மையான உணர்வை எவ்வாறு வெளிக் கொணர முடியும் என்பதற்கு கோபியின் அனுபவப் பகிர்வே சான்று.
கோபி!அது விஸ்வாமித்திரர் நாய் ஊன் சாப்பிட்ட கதையாக இருக்கலாம்.
அன்னதானம் ஒன்றே முழுநிறைவுஅளிக்க வல்லது என்ற கோபியின் கருத்தை நானும் எழுத எண்ணி விடுபட்டு விட்டது.கோபி சேர்த்து விட்டார்.
மீனாஷி.கட்டாயம் நான் வாசிக்கும்கதைகளைப் பட்டியலிட்டுப் பகிர்வேன்.
திரு அப்பாதுரை,மாமி எதிர்பார்ப்பது அவள் வறுமையால் என்றால் கூட ஏற்கலாம்;ஆனால் அவள் பார்ப்பது சோற்றுக் கணக்கல்லவா?
நாயகனின் தாய் சுயநலக்காரி என்பதை விட வறுமையிலும்,அதனால் விளைந்த சிக்கனத்திலும் பழகியவள்;அவள் அப்படி இருப்பதே யதார்த்தம்...

Thenammai Lakshmanan சொன்னது…

ஜெமோவின் கதைகள் ஏற்படுத்தும் பாதிப்பை உங்கள் பகிர்வும் பின்னூட்டங்களும் தருகின்றன அம்மா. சில சமயம் ஒரு படைப்பை படித்து உணர்ந்து செல்வதே அதற்கான ஒரு நிறைவான செயலாய் இருக்கிறது.. பலமுறை நான் பின்னூட்டமிடாத காரணமும் அதுதான்.

சித்திரவீதிக்காரன் சொன்னது…

சோற்றுக்கணக்கு' கதையை இனிதான் வாசிக்க வேண்டும். மேலும், தினம் ஒரு சிறுகதை என்னும் யோசனையை நானும் பின்பற்றலாமென்று நினைக்கிறேன். பகிர்விற்கு நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....