துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

9.2.11

சாபமும்,வரமும்...


’’வகுப்பறைப் பாடங்களுக்கு நடுவே வாழ்க்கைப் பாடங்களையும் சேர்த்துப் புகட்டும் தெளிவும் நல்லுணர்வும் ஆசிரியர்களுக்கு வாய்க்கட்டும்’’
’’இன்றைய அன்றைய பேராசிரியர்களை ஒப்பிட்டு
மத்துறு தயிராய் அலைக்கழிகிறது மனம்..!’’


ஒரே வாரத்துக்குள் இரு வகைப்பட்ட பேராசிரியர்களைப் பற்றி அறியக் கிடைத்த வாய்ப்பு..ஒரு புறம் சாபமாகவும் மறு புறம் வரமாகவும் இருந்தபடி மனதை அலைக்கழித்து ஆட்டிப்படைக்கிறது.
*சாபம்...
கடந்த வார தினமலரில் வெளியான கீழ்க்காணும் செய்தி!.
ஒரு மாணவி தவற விட்ட பணத்துக்காக வேறு சில மாணவியரைப் பரிசோதனைக்கு ஆளாக்கி (அதிலும் நிர்வாணமாக்கிச் சோதனை செய்தார்கள் என்கிறது செய்தி) – அவமானப்படுத்திய அவலம் பொறுக்க மாட்டாமல் அமுதா என்ற பெண் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டுவிட,குறிப்பிட்ட பேராசிரியைகள் கைது செய்யப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தச் செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது எந்த அளவு கொடுமையான மனித உரிமை மீறல் என்பதைச் சொல்லவும் நா எழவில்லை.

குறிப்பிட்ட செய்தியில் தொடர்புபடுத்தப்பட்டிருக்கும் ஆசிரியைகளின் சராசரி வயது 35 என்பதைக் காணுகையில் அதிர்ச்சி மேலும் கூடுதலாகிறது.பழங்காலத்து மூத்த ஆசிரியர்கள் கொடுமைக்காரர்கள் என்பதல்ல இதன் பொருள்.அந்தத் தலைமுறையிடம் கனிவான கண்டிப்பு இருந்த்து;மாணவத் தலைமுறை அதை ஏற்கவும் செய்தது.இன்றைய மாறி வரும் சூழலில் பதின் பருவத்து மாணவியர் எதிர்ப்படும் பதட்டமான போட்டிகள் மலிந்த வாழ்க்கை முறை,அதனால் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் இவற்றை ஓரளவாவது விளங்கிக் கொண்டு நட்பு முறையில் அவர்களை அணுகக் கூடியவர்களே நல்லாசிரியர்களாக இருக்க முடியும்.இளம் ஆசிரியர்களான இவர்கள் இந்தஎளிய உளவியலைப் புரிந்து கொள்ளத் தவறியதோடு ஆடை களையும் துச்சாதனத் தனத்துக்கு எப்படிக் கீழிறங்கிப் போனார்கள் என்பது அதிர்ச்சியை விடவும் அதிக அளவு வெட்கத்தையும் வேதனையையுமே மிகுதியாய்த் தருகிறது.அதிலும் ஏழ்மையின் விளிம்பில் இருக்கும் ஒரு மாணவி தற்கொலைசெய்து கொண்டிருப்பது இச் செய்தியின் பரிமாணத்தைப் பல மடங்கு கூட்டுகிறது.

இந்தத் தற்கொலைக்குப் பலமுகங்கள் உண்டு.
தற்கொலை என்ற உணர்வே இளம் உள்ளங்களில் மொட்டு விடாதபடி தடுத்தாட்கொள்ள வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்பதும்,வாய்ப்பு நேரும்போதெல்லாம் வகுப்பறைகளில் அதற்கான விதைகளை அவர்கள் தூவிக்கொண்டே வரவேண்டுமென்பதும் என் கருத்து. புற உலக மயக்கங்களும்,பல வகையான மனச் சுமைகளும் மலிந்து போயிருக்கும் இன்றைய காலகட்டத்தில் அது ஒரு ஆசிரியரின் கட்டாயக் கடமையுமாகிறது.
தற்கொலைக்குத் துணிந்த அந்தப் பெண்ணுக்கு அதைத் தாங்கி நிற்கும் மன உரமும்,தன்னம்பிக்கையும் அளிக்க இயலாத அளவுக்கு நம் சமூகமும் கல்வி அமைப்புக்களும் பல போலி மதிப்பீடுகளின் பிடியில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்றன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.தன்னைத் திருடி என்று பழித்ததை விடவும் நிர்வாணமாக்கிய சிறுமையையே அந்தப் பெண்ணால் தாங்கிக் கொள்ள முடியாமல் போயிருக்கிறது என்பதையே அந்தச் செய்திகள் வழி உணர்ந்து கொள்ளமுடிகையில் சமூக அளவுகோல்கள் செய்து வைத்திருக்கும் மூளைச் சலவைகளின் ஆக்கிரமிப்பு எந்த அளவு கடூரமானது என்பதை ஊகிக்க முடிகிறது.

ஆசிரியப் பணி புரிந்த காலத்தில் என்னைச் சுற்றி நிகழ்ந்த சில இளம் தற்கொலைகள் கண்டு பெரிதும் மனம் சோர்ந்துபோயிருந்த நான் தொடர்ந்து பணி ஓய்வுபெறும் வரை இளம் மாணவ உள்ளங்களில் அந்த உணர்வு தலையெடுக்காமல் தடுப்பதை வலிந்து ஒரு பணியாகவே மேற்கொண்டிருந்ததுண்டு.இறுதி ஆண்டில் மாணவியர் கல்லூரியிலிருந்து விடை பெற்றுப் போகும்போது அவ்வாறான தற்கொலைக்கான தூண்டுதல் ஏற்படும் சூழல் வாழ்வின் எந்தத் தருணத்திலாவது வாய்த்தால்....அதை ஒரு நிமிட மறு பரிசீலனைக்குப் பிறகு புறந்தள்ளிக் கடந்து போய் விட வேண்டும்-காரணம் அந்தக் குறிப்பிட்ட ஒரு நொடி விலகிப் போனால் அந்த எண்ணமும் கழன்று போய் விடும்-என்று அறிவுறுத்தி,விடை பெற்றுப் பிரியும் தருணத்தில் அதை ஒரு குருதட்சிணையான வாக்குறுதியாகவே எனக்கு அளித்தாக வேண்டும் என்றும் அவர்களிடம் கோரிப் பெற்றுக் கொண்டிருந்தேன் நான்....
அதனால்தான் இந்தச் செய்தியின் பாதிப்பு...பிற அலைக்கற்றைகளுக்கு நடுவில் என்னைப்பெரிதும் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது.
.
வகுப்பறைப் பாடங்களுக்கு நடுவே வாழ்க்கைப் பாடங்களையும் சேர்த்துப் புகட்டும் தெளிவும் நல்லுணர்வும் ஆசிரியர்களுக்கு வாய்க்கட்டும் என வேண்டுவதைத் தவிர இக் கணத்தில் வேறென்ன செய்து விட முடியும்?
.........................................................................................................
*வரம்...
அடுத்தது பேராசிரிய மாணவ(சிஷ்ய)உறவு சார்ந்ததாய் ஜெயமோகன் எழுதியிருக்கும் ‘மத்துறு தயிர்’ சிறுகதை ஏற்படுத்திய தாக்கம்.
 வகுப்பறையில் இருப்பவர்கள் மட்டும்தான் மாணவர்கள் என்பதில்லை.
குருவின் வார்த்தைகளைப் பொக்கிஷம் போல அடை காத்து அவரது அலைவரிசைக்குள் வந்து ,அவரின் தொடர்ச்சியாக அடுத்த கட்டத்துக்குத் தன்னை முன்னெடுத்துச் செல்லும் சீடனே உண்மையான மாணவன்.
அவ்வாறான குரு-சீடப் பரம்பரை ஒன்றைக் கண்முன் விரிக்கிறது மத்துறுதயிர்.

ஏசுவைக் கடவுளாகப் போற்றினாலும் இலக்கியத்தில் சாதி,மத வேறுபாடு காணாமல்..கம்பனின் கவிநயத்தில் இதயம் பறிகொடுத்து அவனது கவிநயத்தை ரசனையோடு விளக்கும் (உண்மையாக வாழ்ந்து மறைந்த )பேராசிரியர்,அவரது அன்புக்குப் பாத்திரமாக ஒரு காலகட்டத்தில் இருந்து,சொந்த வாழ்க்கைச் சூழலால் குடிக்கு அடிமையாகி அவர் கண்முன் வரவே கூச்சப்பட்டுக் கொண்டு. அவர் கிளம்பிச் சென்ற பிறகு   அந்தத்திக்கு நோக்கித் தொழும் சீடன், முதுமையால் தளர்ந்து முடிவு சமீபிப்பதை உணர்ந்தபடி ஒரு முறையாவது தன் சீடனைப் பார்த்து விட மாட்டோமா எனப்பரிதவிக்கும் பேராசிரியர்..எனச் சிறுகதை ஓவியமாக்கும் காட்சிச் சித்திரங்கள் நெஞ்சில் கல்வெட்டாகப் பதிபவை!.. .

ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி’ என்ற அபிராமி அந்தாதி வரிகளின் முன்னோடியாகக் கம்பன் கவியில் உருவான ‘மத்துறுதயிர்என்னும் சுந்தரகாண்ட,சூடாமணிப் படலப் பாடலுக்குப்(அனுமன் சீதை சந்திப்பின்போது இராமனின் பிரிவுத் துயரை அவளிடம் எடுத்துரைக்கும் கட்டம்).. பேராசிரியர் தரும் விளக்கம்...துன்பத்தால் உயிரும் உடலும் அலைக்கழிவு படும் உக்கிரமானதொரு காட்சியைக் கண் முன் கொணர்கிறது
நல்ல பேராசிரியருக்குத் தன் மாணவரைப் பிரிந்த - உயிரோடு பறி கொடுத்த சோகம் கொடியது!தங்கள் சொந்தப் பிள்ளைகளை விடவும் சீடர்களை நேசித்த ஆசிரியர்கள்தான் எவ்வளவு உயர்வானவர்கள்?.

‘’குருவுக்கு என்ன குடுக்கோம்வேறெ என்னஇந்தா இங்க நெஞ்சுக்குள்ள கோயில கெட்டி வச்சிருக்கோமே. அதுதான். எங்க இருந்தாலும் இப்ப இந்த வார்த்தைய மகராஜன் கேக்காமயா இருப்பாருஇந்த ஏழை சங்கு உருகி அவரை நெனைக்குதேன்னு அய்யனுக்கு தெரியாமலா போயிரும்’’என்று ஒருபுறம் தன் குருநாதரை நினைந்து உருகியும் கண்ணீர் சொரிகிறார் பேராசிரியர்.

தன் குருவின் நினைவாலும் சீடனின் பிரிவாலும் ஒரே நேரத்தில் மத்துறுதயிராக அவர் படும் அலைக்கழிப்புக்களும்,
//பேராசிரியர் மிதித்துச் சென்ற மண்ணை குனிந்து நடுநடுங்கும் கரங்களால் மெல்லத்தொடும் அவரது சீடரான அண்ணாச்சி ராஜமும்
குரு சிஷ்யப் பரம்பரையத் தன் தலைமுறையில் தக்க வைத்துக் கொண்டு விட்ட பேராசிரியரால் ,தனது சீடன் மூலம் அந்தக் கண்ணியின் தொடர்ச்சி அறுபட்டதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போய்விடும் பெரும் சோகமும்

கல்வி என்பதே வணிக மயமாகிப் போய்,ஆசிரிய-மாணவ உறவுகள் மேலோட்டமாய்ப் போயிருக்கும் இன்றைய தலைமுறைக்கு விளங்காமலும் கூடப் போய்விடலாம்!


ஆனால் ......ஆசிரியப் பணியைக் காசுக்காக மட்டும் பார்க்காமல் அதை ஒருசுவாசமாகவே கொண்டு இயங்கிப் பழகி விட்ட எனக்கு...
நாளிதழ் செய்தியையும் 
இந்தக் கதையையும் ஒருசேரப் படித்த பிறகு.. இன்றைய அன்றைய பேராசிரியர்களை ஒப்பிட்டு மத்துறு தயிராய் அலைக்கழிகிறது மனம்....!
9 கருத்துகள் :

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

உங்கள் குருதட்சணை நல்ல விசயமா இருக்கு ..

suneel krishnan சொன்னது…

அம்மா ஒரு நல்ல ஆசிரியராக -உங்கள் உள்ள பதபதைப்பு புரிகிறது அம்மா .உங்கள் கொந்தளிப்பு நியாயமானதே .நிர்வாண சோதனை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் -அதன் பின்பு தேர்ந்த அரசியல்வாதி போல் இதய நோயாளி வேடமிட்டு ஆஸ்பத்திரியில் மூவரும் ஒரு சேர ஒளிந்தது மேலும் கீழ் தரமானது !!
அம்மா -இன்று ஆசிரியர் /பேராசிரியர் என்பவர் -தனது பொருளாதார தேவைக்கு இந்த வேலையை கடனுக்கு செய்கின்றனர் , நாம் ஒரு சமூகத்தை உருவாக்குகிறோம் எனும் உணர்வு அவர்களுக்கு இருக்கிறதா என்பது கேள்விக்குறியே !!
இன்னொரு விஷயம்- பொசுக்கென்று இப்படி உயிரை மாய்த்து கொள்வது -இது ஒரு வித மன நோயாக ,சில இடங்களில் தாகமாக ,வீரமாக சித்தரிக்க படுகிறது -இது மேலும் பலரை இந்த முடிவை நோக்கி செல்ல சமூகம் அமைக்கும் சாவு மேடை என்று உணர்கிறேன் .நான் எனது நெருங்கிய நண்பன் ஒருவனை இப்படி முட்டாள் தனமான காரணத்தால் இழந்தும் இருக்கிறேன் .
ஒரு படித்த இளைஞன் வீனாகிறான் என்றால் -அவன் ஒரு நல்ல ஆசிரியனை கூட இது வரை சந்திக்கவில்லை என்று பொருள் .சொந்த பிள்ளைகளாக பாவித்த ஆசிரியர்கள் இப்பொழுதும் அங்காங்கு இருக்கிறார்கள் ,ஆயினும் எல்லா துறையிலும் நுழைந்து விட்ட அறமின்மை இங்கும் வந்து விட்டது .
ஜெ வின் கதை அவரவருக்கு அவர்களுடைய ஆசிரியரை நினைவு படுத்துகிறது என்பது உண்மை .

இளங்கோ சொன்னது…

தற்கொலையைத் தடுக்க ஆசிரியர்கள், பெற்றோர்கள், நண்பர்கள் என முன்வர வேண்டும். ஏனெனில் யாராவது ஒருவர் கொஞ்சம் பாசமாக இருந்திருந்தால் யாரும் இந்த முடிவை எடுக்கத் தயங்குவார்கள்.


'ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி' - இந்தப் பாடலை நான் அர்த்தம் தெரியாமல்தான் படித்திருக்கிறேன். ஆனால், விளக்கம் இப்பொழுது தெரிந்து, ஒரு சில சொற்களில் எவ்வளவைச் சொல்லி விட்டுச் சென்று இருக்கிறார்கள் என்பதே மலைப்பாக இருக்கிறது. ஜெமோவின் கதைக்குப் பிறகு, கம்ப ராமாயணம் படிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.
பகிர்வுக்கு நன்றிகள் அம்மா.

R. Gopi சொன்னது…

\\குரு சிஷ்யப் பரம்பரையத் தன் தலைமுறையில் தக்க வைத்துக் கொண்டு விட்ட பேராசிரியரால் ,தனது சீடன் மூலம் அந்தக் கண்ணியின் தொடர்ச்சி அறுபட்டதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போய்விடும் பெரும் சோகமும்\\

இது பெரும் சோகம். அனுபவிப்பவருக்குத்தான் தெரியும்.

அந்த சிஷ்ய பரம்பரை அறுபடும்போது தவறு நம்முடையதோ என்ற என்ற மன உளைச்சல் அதிகமாக வரும். இதே சிக்கலை வேறு சில தொழில்களிலும் நான் நடைமுறையில் பார்த்திருக்கிறேன் (ஆடிட்டர், வக்கீல்). அது தரும் மன உளைச்சல் தாங்க முடியாத ஒன்றாக இருக்கும்.

இது கதையுதிர் காலம். கதைகள், அது சம்பந்தமான பதிவுகள் அனைத்தையும் புத்தகமாகப் பதிப்பித்தால் அது ஒரு நல்ல வாசிப்பு அனுபவமாக அமையும்.

Unknown சொன்னது…

அம்மா , இந்த பதிவை வாசிக்கும் பொழுது , இன்றைய கல்விச் சூழலை எண்ணி மிகவும் மனம் வருந்துகிறேன் .
கல்வி எப்படி நன்றாக இருக்கும் . அந்த கல்வியை அளிக்கும் ஆசிரியர்களே மிக மோசமான எண்ணங்களில் மூழ்கி இருக்கும் பொழுது , இளைய தலைமுறைக்கு நல்வழி எப்படி காட்டுவார்கள் ..

நாளிதழில் இந்த செய்தியை படித்து விட்டு மன வருத்ததுடன் எனது ராணுவ நண்பர்களுடன் இன்று மதிய வேளையில்தான் பேசினேன் .

எனது தாத்தாவும் ஆசிரியர்தான் அவரை பார்க்க பல நபர்கள் எங்களது வீட்டிற்கு வந்து கொண்டே இருப்பார்கள் .

நான் என்றும் கொண்டாடும் கணபதி வாத்தியார் , கந்தசாமி வாத்தியார் , ஜெயா டீச்சர் என அவர்களின் நினைவுகள் எல்லாம் இப்போது வந்து செல்கிறது .

BD சொன்னது…

ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணத்துக்காக சோதனை செய்த பேராசிரியையைக்கைது செய்வது உணர்ச்சிபூர்வமான முடிவே தவிர அறிவுபூர்வமானது அன்று.

சம்பந்தப்பட்ட மாணவியை இத்தனைக்கும் ஒரு பெண் தான் சோதனை செய்தார். அது அந்த மாணவியை பாதித்தால் அது மாணவியின் உளவியல் பிரச்சினை. தனது கடமையை செய்த ஆசிரியை/அதிகாரி இங்கு எங்கணம் குற்றவாளி?
இன்றைய சமுதாயத்தில் பிரச்சினை இது தான்...... தற்கொலை செய்து கொண்டவுடன் அந்த மாணவி மேல் அனுதாபம். ஆசிரியை அந்த மாணவியை சாகச்சொன்னாரா என்ன? என் தனிப்பட்ட அபிப்ராயம் என்னவென்றால், ஒரு பெண்ணை ஒரு பெண் அதிகாரி தேவை ஏற்பட்டால் நிர்வாணமாக்கி சோதனை செய்வதில் தவறில்லை; மொத்த சமுதாயத்தின்/பிறர் நலன் கருதி ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கைகளை/மான அவமானங்களைப்புறக்கணிப்பதில் தவறில்லை.

ஆசிரியை செய்தது தவறா சரியா என்பது கிடக்கட்டும்........ இந்த மாணவிக்கு சுய அறிவு என்று ஒன்று இல்லையா? இந்த சம்பவம் தன்னை அவமானப்படுத்துவதாக உணர்ந்திருந்தால் புகார் செய்திருக்கலாம்....... காவல் துறை உண்டே? அதை விடுத்தது உயிரை மாய்த்துக்கொண்டாள்........ அது கோழைத்தனம்......... நான் கேட்கிறேன், இது கொடுமையாகக்கூட இருக்கலாம், இத்தகைய, உலகை சந்திக்கத்தைரியமில்லாத, மன உறுதியற்ற, தன பெற்றோரைப்பற்றியும் உற்றார் படும் பாட்டைப்பற்றியும் கவலைப்படாத, அப்பட்டமான சுயநலத்தோடு தன்னை மாய்த்துக்கொண்ட இந்தக்கோழை, சுயநலவாதி, வாழ்ந்து சாதிக்கப்போவது தான் என்ன?

பி.கு : நானும் என் தங்கையை தற்கொலையினால் இழந்தவன்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

அன்பிற்குரிய நண்பர்களுக்கு,
உங்கள் எதிர்வினைக்கு நன்றி.தற்கொலை செய்து கொண்டதற்கு அந்தப்பெண்ணின் கோழைத்தனமும்,தன்னைச் சார்ந்தவர் குறித்துச் சற்றும் எண்ணிப்பாராத மனப்போக்குமே காரணம் என்பதையும் அது ஒரு உள நோயாகவே மாறி வருகிறது என்பதையும் நான் முழுமையாக உடன்படுகிறேன்.நான் அந்தப் பெண் செய்தது நியாயமானது எனக் கூற வரவில்லை
//தற்கொலைக்குத் துணிந்த அந்தப் பெண்ணுக்கு அதைத் தாங்கி நிற்கும் மன உரமும்,தன்னம்பிக்கையும் அளிக்க இயலாத அளவுக்கு நம் சமூகமும் கல்வி அமைப்புக்களும் பல போலி மதிப்பீடுகளின் பிடியில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்றன//என்றே சொல்லியிருக்கிறேன்.
சந்தேகம் ஏற்பட்டால் காவல்துறையில் தெரிவித்தோ வேறு பக்குவமான முறைகளைக் கையாண்டோ அந்தப்பிரச்சினையை நுட்பமாகக் கையாண்டிருக்க வேண்டும் என்பதையேநான் சொல்ல முனைந்தேன்.நிர்வாணமாக்கிச் சோதனை செய்து விட்டதாலேயே தான் உயிரை மாய்த்துக் கொண்டுதான் ஆக வேண்டும் என அந்தப் பெண் நினைத்ததும் தவறுதான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.அப்படிப்பட்ட மனப்போக்கே ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய ஆசிரியர்களே இப்படி அதைத் தூண்டும் வேலையைச் செய்து விட்டார்களே என்பதுதான் என் வருத்தம்.

அப்பாதுரை சொன்னது…

bhuvaneshwar கருத்தில் ஆழமிருப்பதாக நினைக்கிறேன்.

பொதுவாக இது போன்ற சோதனைகளின் போது இரண்டு பேர் சாட்சிக் கையெழுத்துப் போடும் வழக்கம் உண்டே? சாட்சிக் கையெழுத்தே சில சமயம் சோதனையின் தீவிரத்தைக் குறைத்து விடுவதைப் பார்த்திருக்கிறேன்.

முழு நிர்வாணச் சோதனைகளைச் செய்ய ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார்களா என்ன? பயிற்சி பெறாமல் உடல் சோதனைகள் செய்வது ஆபத்தானதே.

எந்தக் காரணத்தினால் இந்தச் சோதனை அவசியமானதென்று தெரியாது - தொழிற்சாலைகளில் வேலை பார்த்த நாட்களில் தினம் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படும். காபி, சாக்லெட், ஊறுகாய் பாகெட்டுகளை ரவிக்கைக்குள்ளும் ஜட்டிக்குள்ளும் வைத்துக் கடத்தும் பெண்களையும் ஆண்களையும் எதிர்கொண்டிருக்கிறேன். சோதனை செய்யும் அவசியம் ஏற்பட்டால், 'தீவிர சோதனையின் தேவை'யை எழுதி உத்தரவு/சாட்சி பெற்ற பின்பே செய்ய வேண்டும் - இது பயிற்சியின் அடிப்படை. அதற்கு மேல் முறைகள் இருக்கின்றன. இவற்றை அறியாமல் இது போன்ற நடவடிக்கைகளில் இறங்குவது இருதரப்பிலும் வேண்டாத தொல்லையைத் தரும்.

மேலும், சோதனைக்குட்பட்டக் காரணத்தினால் தற்கொலை செய்து கொள்வது தீவிர உளவியல் சிக்கல்களைக் காட்டுவதாக நினைக்கிறேன்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

அன்புள்ள அப்பாதுரை ,புவனேஷ்வரின் கருத்துக்கு நான் தந்த மறுமொழியைப் பாருங்கள்.அப்படி உணர்ச்சிவசப்பட்டுச் செய்யும் தற்கொலையை நான் ஆதரிக்கவில்லை என்பதை அதில் தெளிவுபடுத்தியிருக்கிறேன்.நிர்வாண சோதனை செய்ய அந்த ஆசிரியர்கள் உரிமை பெற்ற அதிகாரிகளும் அல்லர்;அந்த அளவு கடும் சோதனை போட வேண்டிய கொடூரக் குற்றமுமில்லை இது.இச் செய்தி பொடர்பான மேலதிகமான தகவல்கள் ஜூனியர் விகடன் -9/2/11இதழில் ‘கவரிங்மான்கள் கூட்டத்தில் கவரி மான்’என்ற தலைப்பில்-ப.29- வெளியாகி இருக்கிறது.முடிந்தால் தயவு செய்து படித்துப் பாருங்கள்.நடந்தது என்ன என்ற முழு விவரங்கள் அதில் கிடைக்கும்.(பெரிய பெரிய கொலைகாரர்களும்,முழுப் பூசணி சோற்றில் மறைக்கும்பொருளாதார மோசடிவாதிகளும் சட்ட ஓட்டைகளில்புகுந்து புறப்பட...அமுதா போன்றவர்கள் மட்டுமே பலியாகிப் போகிறார்கள்)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....