துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

11.12.09

பாரதியின் உரைவீச்சு



நன்றி;
பாரதி பிறந்த நாளை ஒட்டி இந்த வலைப் பதிவை இட எண்ணியபோது என் நெஞ்சிற்கு மிகவும் நெருக்கமான பாரதியின் ஓவியம் இப் பதிவில் இடம் பெற வேண்டுமென்று விழைந்தேன்;அது திரு ஞாநியின்(’தீம்தரிகிட’,பரீக்‌ஷா’,’ஓ பக்கம்’) பாரதியன்றி வேறெதுவுமில்லை.அந்த ஓவியம் முறையான ஒப்புதலின்றிப் பலராலும் பயன்படுத்தப்படுவதும்,விருப்பம் போல மாற்றியமைக்கப்படுவதும் ஞாநியின் உள்ளத்தைப் பலமுறை புண்ணாக்கிக் காயப்படுத்தியிருப்பதை அறிந்திருக்கிறேன்.அதனால் மின் அஞ்சலில் அவரது முழு ஒப்புதலைப் பெற்ற பிறகே என் தளத்தில் அதை வெளியிட முனைந்தேன்.
பாரதியின் சமூகக் கோபத்தை வாழையடி வாழையெனத் தொடர்ந்து, அவன் கொளுத்தி வைத்த ‘அக்கினிக் குஞ்சுக்கு’ எழுத்து நெய் ஊற்றிப் பெருந்தணலாக்கப் பல தடைகளுக்கிடையிலும் இடைவிடாது முயன்றுவரும் சமூகச் சிந்தனையாளரும்,பத்திரிகையாளரும்,நாடக,ஓவியக்கலைஞருமான ஞாநிக்கு-அவர் தந்த ஒப்புதலுக்காக நன்றி.

இனி...கட்டுரை....
கல்வித் தளத்திலும்,அறிவுசார் ஆய்வுத் தளங்களிலும் சிறந்த கட்டுரையாளனாகவும்,உரைநடைப் படைப்பாளியாகவும் அறியப்பட்டுள்ள பாரதியை வெகுஜனத் தளத்தில் அவ்வாறு முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்றே தோன்றுகிறது.ஓரளவு படிப்பறிவு பெற்ற மக்கள் மத்தியிலும் கூட மகாகவிஞன் என்ற பாரதியின் பிம்பமே அழுத்தமாகப் பதிவாகி இருக்கிறது.

மேற்குறித்த நிலைப்பாட்டுக்கு நேர்மாறாகப் பாரதியின் சமகாலத்தில் வாழ்ந்த பொதுமக்கள்,அவனது உரை வீச்சை நுகரும் பேறு பெற்றிருந்தனர்.பாரதி ஒரு பத்திரிகையாளன் என்பதும்,நாளிதழ்களுக்காக அன்றாட அரசியல்,சமூக நடப்புக்களையும் ,பரவலான பிற செய்திகள் பலவற்றையும் எழுதியாக வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்ததுமே அதற்கான முதன்மைக் காரணங்கள்.
’சக்கரவர்த்தினி’,’விஜயா’ எனப் பல இதழ்களிலும் பொறுப்பேற்றுப் பணியாற்றிக் கொண்டிருந்த பாரதிக்குத் தான் சொல்ல நினைத்த செய்திகளை உரைநடை என்ற ஊடகம் வழியே கொண்டு சென்றாக வேண்டிய கடப்பாடு இருந்தது.
கவிதைக்கு உரிய இயல்புகளான இறுக்கம், செறிவுஆகியவற்றைத் தளர்த்திக் கொண்டு,நேரடியான நடையில் , மிக எளிமையான போக்குடன் தன் கருத்துக்களை இதழ்க் கட்டுரைகளில் முன் வைத்தாக வேண்டிய பொறுப்பைப் பாரதி மிகத் தெளிவாக உணர்ந்திருந்ததை வசன நடை குறித்த கீழ்க்காணும் அவனது விளக்கம் எடுத்துக் காட்டுகிறது.

’தமிழில் வசன நடை இப்போதுதான் பிறந்து பல வருஷமாகவில்லை....ஆதலால்,இப்போதே நமது வசனம் உலகத்தில் எந்த பாஷையைக்காட்டிலும் தெளிவாக இருக்கும்படி முயற்சிகள் செய்ய வேண்டும்.கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என் கட்சி.எந்த விஷயம் எழுதினாலும் சரி,ஒரு கதை அல்லது தர்க்கம்,ஒரு சாஸ்திரம்,ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது.....கோணல்,திருகல் ஒன்றுமில்லாமல் நடை நேராகச் செல்ல வேண்டும்.....வசன நடை, கம்பர் கவிதைக்குச் சொல்லியது போலவே தெளிவு,ஒளி,தண்மை,ஒழுக்கம் இவை நான்கும் உடையதாக இருக்க வேண்டும்.இவற்றுள் ஒழுக்கமாவது தட்டுத் தடையில்லாமல் நேரே பாய்ந்து செல்லும் தன்மை’’(பாரதி கட்டுரைகள்-பக்.232-233)

பிறவிக் கவிஞனாகவே அமைந்திருந்த பாரதி மேற்சொன்ன அளவுகோலின்படி அமைந்த நெகிழ்வான உரைநடையையும் - கவிதையோடு சேர்ந்தாற்போல் -அதே காலகட்டத்திலேயே லாவகமாகக் கையாண்டிருப்பது , மொழியைத் தன் வசமாக்கி வைத்திருந்த அவனது மேதமையினையே எடுத்துக்காட்டுகிறது.

மிக இறுக்கமாகப் பின்னிக்கொண்டுபோகும் கவிதைவரிகள், கூடியவரை வடசொற்கலப்பைத் தவிர்த்தனவாய் அவற்றில் காணக் கிடைக்கும் தமிழ்ச்சொற்கள் எனக் கவிதையில் தான் கையாளும் போக்குக்குக் கொஞ்சம் கூடத் தொடர்பே இல்லாதபடி
’ஜீவ ஹிம்சை கூடாது;மதுமாம்ஸங்களால் பெரும்பான்மையோருக்குத் தீங்கு உண்டாகிறது.மது மாம்ஸங்கள் இல்லாதிருத்தல் ...பெரிய தவம்.அது கிருத யுகத்துக்கு வேராகக் கருதக்கூடிய அநுஷ்டானம்’’
(பாரதிகட்டுரைகள் பக்.289)
எனச் சரளமாக வட சொற்கள் வந்து விழுவதைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல் சிறு சிறு வாக்கியங்களில் தன் கட்டுரைகளை நேராகக் கட்டமைக்கிறான் பாரதி.

கவிதை அழகியலுக்காகவும்,அதன் வடிவச் சுருக்கத்திற்காகவும் நுட்பமாகவும்,குறிப்பாகவும் கூறிய செய்திகளை எந்தப் புறப்பூச்சும் இல்லாமல் பட்டவர்த்தனமாகப் பிரகடனம் செய்யவும்,உள்ளது உள்ளபடி நேரடியாக முன் வைக்கவும் கூடப் பாரதிக்குக் கட்டுரை என்ற ஊடகம் கை கொடுக்கிறது.
''ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால்
அப்போது பெண்மையும் கற்பழிந்திடாதோ?
நாணமற்ற வார்த்தையன்றோ வீட்டைச் சுட்டால்
நலமான கூரையும்தான் எரிந்திடாதோ..
’’
என்று தான் முன்வைத்த கவிதை வரிகளுக்குத் தன் கட்டுரை வழி மிக விரிவான-மிகக்கடுமையான விளக்கத்தைப் பின்வருமாறு அளிக்கிறான் பாரதி.

‘’ஸ்த்ரீகள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமென்று எல்லோரும் விரும்புகிறார்கள்.அதிலே கஷ்டம் என்னவென்றால் ஆண்பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை.ஆண்மக்களில் ஒவ்வொருவனும் தம் மனைவி மக்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமென்பதில் எத்தனை ஆவலோடு இருக்கிறானோ அத்தனை ஆவல் இதர ஸ்த்ரீகளின் பதி விரத்யத்திலே காட்டுவதில்லை....அட பரம மூடர்களா ! ஆண்பிள்ளைகள் தவறினால்,ஸ்த்ரீகள் எப்படி பதிவிரதைகளாக இருக்க முடியும்?.....பெரும்பாலோர் வ்யபசாரிகளுடனேதான் வாழ்கிறார்கள். இதனிடையே பதிவ்ரத்யத்தைக் காப்பாற்றும் பொருட்டாக ஸ்த்ரீகளைப் புருஷர்கள் அடிப்பதும்,திட்டுவதும்,கொடுமை செய்வதும் எல்லையின்றி நடைபெற்று வருகின்றன’’
(பாரதி கட்டுரைகள் பக்.293-294)

சமூகச் செய்திகளை எழுதும்போது இவ்வாறு சினத்தோடு வெடித்துக் குமுறும் பாரதியின் உரைநடை , இயற்கை சார்ந்த..ஆன்மீகம் சார்ந்த கருத்துக்களை மையப்படுத்துகையில் கவித்துவம் பெற்றுவிடுவதையும் காண முடிகிறது.
சிட்டுக் குருவியைப் போல ‘விட்டு விடுதலை’யாகி நிற்க வேண்டுமென்று பெரிதும் விரும்பி,விடுதலையின் குறியீடாகவே அதைக் கொண்டாடிய பாரதி,
‘’சிறிய தானியம் போன்ற மூக்கு;சின்னக் கண்கள்;சின்னத்தலை;அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு;கருமையும்,வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப்போர்த்த முதுகு;சிறிய தோகை;துளித்துளிக் கால்கள்’’
எனச் சிறு சிறு சொற்றொடர்களைத் தொடுத்தபடி தனது உரை வருணனையாலேயே சிட்டுக் குருவிக்கு ஒரு தூல வடிவத்தை அளித்து விடுகிறான்.

தமிழ்ப் புதுக் கவிதைக்கு அடித்தளம் அமைத்துத்தந்த வசன கவிதையின் முன்னோடி,பாரதி.வசன கவிதைக்கான அந்த வித்துக்களைத் தத்துவம் சார்ந்த அவனது கட்டுரைகளில்தான் மிகுதியாகக் காண முடிகிறது.

’’நான் அமரன்;எனக்குச் சாவு கிடையாது. நாழிகைகள் கழிக...,நாட்கள் ஒழிக...,பருவங்கள் மாறுக...,ஆண்டுகள் செல்க...,நான் மாறுபட மாட்டேன்.நான் என்றும் உயிர்வாழ்வேன். எப்போதும் ஸத்யமாவேன்.எப்போதும் களித்திருப்பேன்....
நான் கடவுள் , ஆதலால் சாக மாட்டேன்....
நான் எப்போதும் வீர்யமுடையேன்;ஜாக்ரதை உடையேன்;
எப்போதும் தொழில் செய்வேன்;எப்போதும் காதல் செய்வேன்;
அதனால் சாதல் இல்லேன்.......
நான் தீராத இளமை சார்ந்தேன்.....
நான் கவலையை ஒழித்தேன்
ஆதலால் எப்போதும் வாழ்வேன்...எப்போதும்
வாழ்வேன்’’
(பாரதி கட்டுரைகள்-பக்.172,173.)
என்பது போன்ற பாரதியின் கட்டுரை வரிகளை அவனது வசன கவிதை வரிகளுக்குப் பக்கத்தில் நிறுத்திப் பார்க்கும்போது இரண்டுக்கும் இடையிலுள்ள கட்டமைப்பு ஒற்றுமை மிகத் தெளிவாகப் புலப்படுவதோடு,பாரதியின் தத்துவ வேட்கையும்,அதன் மீதான அவனது தேடல்களும் ,தரிசனங்களுமே மரபார்ந்த எல்லைக் கோடுகளை மீறி வசன கவிதைக்கு அவன் வாயில் அமைத்துக்கொண்டதற்குக் காரணம் என்பதையும் புரிய வைக்கின்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும்,இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழில் செல்வாக்குப் பெறத் தொடங்கியிருந்த தமிழ் உரைநடையின் புனைகதை வடிவங்களாகிய சிறுகதை,நாவல் ஆகிய உரை ஊடகங்களிலும் பாரதியின் எழுதுகோல் குறிப்பிடத்தக்க முத்திரைகளைப் பதிக்கத் தவறவில்லை.

தமிழ்ச் சிறுகதையின் தளர்நடைப் பருவத்தில் அதன் முன்னோடிகளில் ஒரு சிறப்பிடம் பெற்றவனாகப் பாரதி திகழ்ந்திருக்கிறான். மேலை இலக்கிய அளவுகோல்களை அவனது சிறுகதை வடிவங்களுக்குப் பொருத்திப் பார்க்க முடியாதென்றபோதும் - இந்திய வாய்மொழி மரபின் வழிவந்த புனைகதைப் பாணியை உட்செரித்துக்கொண்டு,பஞ்ச தந்திரக்கதைகளின் போக்கைத் தழுவி ‘நவதந்திரக் கதை’களையும்,சிறு சிறு வேடிக்கக்கதைகள் பலவற்றையும் உருவகப் போக்கில் உருவாக்கிக் கதை இலக்கியம் சார்ந்த உரைநடைப் பரப்பை விரிவும்,ஆழமும் பெறச் செய்திருக்கிறான் பாரதி.

தலித்தியம்,பெண்ணியம் ஆகிய நவீன இலக்கியக் கோட்பாடுகள் பரவலாக அறியப்பட்டிருக்காத காலகட்டத்தில் அவனது ‘பஞ்ச கோணக் கோட்டை’யும்,’சந்திரிகையின் கதை’யும் முறையே அவ்விரு கோட்பாடுகளையும் மக்களிடம் கொண்டு சென்றிருக்கின்றன.நவீன,பின் நவீன இலக்கியத் தளங்களில் இன்று முன்னிறுத்தப்படும் மீயதார்த்த,மாய யதார்த்தக் கூறுகளின் சில சாயல்கள் , பாரதியின் மிகு கற்பனை உரைநடைக் காவியமான ‘ஞான ரத’த்தில் காணக் கிடைக்கின்றன.

விதவை மறுமணத்தை வலியுறுத்துவதற்காகவே பாரதி எழுதத் தொடங்கிய ‘சந்திரிகையின் கதை’என்ற நாவலும்,அவனது தன் வரலாற்றைக் கூறும் ‘சின்னச் சங்கரன் கதை’யும் அரைகுறையாக முடிந்து விடாமல் அவனால் முழுமைப்படுத்தப்பட்டிருக்குமானால்,நாவலாசிரியன் என்ற பரிமாணத்தையும் பாரதி குறைவறப் பெற்றிருக்கக்கூடும்.

பாரதியின் பாடல்களில் ஆங்காங்கே தலை காட்டும் அங்கதச்சுவை , அதன் முழுமை குன்றாமல் விரிவாக வெளிப்பட அவனது கதை இலக்கியம் துணை செய்திருப்பதைப் பல இடங்களில் காண முடிந்தாலும் அவனது ‘சின்னச் சங்கரன் கதை’அங்கத உரைநடையின் உச்சமாகவே விளங்குவதை எடுத்துக் காட்டக் கீழ்க்காணும் ஒரு சான்றே போதுமானது.

‘’....வெளி முற்றத்தில் கோழிச் சண்டை நடக்கும்.வெளியூரிலிருந்து யாரேனுமொரு கவுண்டன் ஒரு நல்ல போர்ச் சேவல் கொண்டு வருவான்;அரண்மனைச் சேவலுக்கும் அதற்கும் சண்டை விட்டுப் பார்ப்பார்கள்....பெரும்பாலும் சண்டை முடிவிலே அரண்மனைக் கோழிதான் தோற்றுப் போவது வழக்கம்....பிறகு பழைய அரண்மனைச் சேவலைத் தள்ளிவிட்டுப் புதிதாக வந்த சேவலைச்’சமஸ்தான வித்வா’னாக வைப்பார்கள்....எத்தனை வீரமுள்ள சேவலாக இருந்தாலும் கவுண்டனூர் அரண்மனைக்கு வந்து ஒரு மாதமிருந்தால் பிறகு சண்டைக்குப் பிரயோஜனப்படாது.ஜமீன் போஷணையிலேயே அந்த நயம் உண்டாகிறது’’
(பாரதியார் கதைகள்-’சின்னச் சங்கரன் கதை’ப.278)

தமிழ்க் கவிதைப் பரப்பைச் செழுமைப்படுத்தியது போலவே தமிழ் உரைநடையிலும் வீரியத்தோடும்,முழுவீச்சோடும் முனைந்து இயங்கியிருக்கிறான் பாரதி என்பதற்குக் கட்டியம் கூறிக் கொண்டிருப்பவை அவனது உரைநடை ஆக்கங்கள் என்பது உண்மை..வெறும் புகழ்ச்சியில்லை.

(04.12.,09 அன்று,மதுரை பாத்திமாக் கல்லூரித் தமிழ்த் துறையும்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸும் இணைந்து நடத்திய ’பாரதியின் பன்முகப் பார்வை’குறித்த தேசியக் கருத்தரங்கிற்கு அனுப்பப்பட்ட கட்டுரை)

3 கருத்துகள் :

ராஜசேகர் சொன்னது…

அருள்நிதி ராஜசேகர்

சுசீலா அம்மா அவர்கட்கு,
நீங்கள் கண்ட பாரதியை நான் என்னவென்று கூறுவேன். அந்த ஞானியைப் பற்றி அக்குஅக்காக பிரித்து வைத்து காட்டிவிட்டீர்கள். ஆஹா ஆஹா, அருமையான எழுத்துக்களை உங்கள் கட்டுரையில் காண முடிந்தது.

உங்கள் பலமான ஆராய்ச்சி திறனை புலப்படுத்துகிறது இந்த கட்டுரை. நிச்சயமாக உங்கள் எழுத்து பெரிய மாற்றத்தை சமுதாயத்தில் ஏற்படுத்தும். நான் முதன் முறையாக வேறு விதமான பாரதியின் கருத்தினை உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.இதே போன்ற ஆராய்ச்சியினை வேதாத்திரி மகரிஷியின் தத்துவங்களில் மேற்கொண்டு எங்களுக்கு புதுவிதமான படைப்புகளை தர, இந்த சிறியோன் உங்களிடம் தாழ்மையான வேண்டுகோளை வைத்து விடை பெறுகிறான்.

வாழ்க வளமுடன். வாழ்க உங்கள் தமிழ் எழுத்துக்கள்.

எனது எழுத்தில் ஏதேனும் பிழையிருப்பின் மன்னித்து, அதனை திருத்தி என் எழுத்து புலமையை மேம்படுத்த உதவவும்.

niram சொன்னது…

சுஷீலா ஜி

மிக சூட்சுமமாக பாரதியை வரைந்துள்ளீர்கள் . பாரதியின் எழுத்தின் பின்னணியில் வரும் தைரியம் ,கவலை , எதிர்ப்பார்ப்பு , சமூகவியல் , அரசியல் ஆகியவை கட்டுரையில் தெளிவாக தெரிகிறது. பிற மொழிகளுக்கு நம் தமிழ் மொழியின் வளர்ச்சி தூண்டுதலாக மாற வேண்டும் என்ற ஒரு உயர்வான எண்ணம் கொண்ட பாரதியை நினைவுப்படுத்தியமைக்கு மிக்க நன்றி, பெண்களை மதித்து எழுதிய அந்த மகா கவியின் புகழ் என்றும் அழியா ஒன்று. இஸ்லாமியா எழுத்துக்களிலும் மற்றும் பெண்கள் தான் பெண்களின் துயரங்களை அல்லது சுதந்திரமினமையை எழுதுகிறார்கள் , மேலை நாடுகளிலும் சரி இது தான் நடக்கிறது. ஆண்களின் எழுத்துக்கள் குறைவாகவே இதை வெளிப்படுத்துகிறது. ஆனால் பாரதி பெண்களுக்காகவும் எழுதியவன். ஏனென்றால் அவனிடம் சுய மரியாதை இருந்ததால் ஒழுக்கவும் இருந்தது . ஒழுக்கம் இருந்ததால் பெண்களின் ஆளுமையை ஏற்று கொள்ள முடிந்தது .அவர்களின் அறிவாற்றலை வியக்க முடிந்தது .

நன்றி வாழ்த்துக்களுடன்

பூஷணா

niram சொன்னது…

சுஷீலா ஜி

மிக சூட்சுமமாக பாரதியை வரைந்துள்ளீர்கள் . பாரதியின் எழுத்தின் பின்னணியில் வரும் தைரியம் ,கவலை , எதிர்ப்பார்ப்பு , சமூகவியல் , அரசியல் ஆகியவை கட்டுரையில் தெளிவாக தெரிகிறது. பிற மொழிகளுக்கு நம் தமிழ் மொழியின் வளர்ச்சி தூண்டுதலாக மாற வேண்டும் என்ற ஒரு உயர்வான எண்ணம் கொண்ட பாரதியை நினைவுப்படுத்தியமைக்கு மிக்க நன்றி, பெண்களை மதித்து எழுதிய அந்த மகா கவியின் புகழ் என்றும் அழியா ஒன்று. இஸ்லாமியா எழுத்துக்களிலும் மற்றும் பெண்கள் தான் பெண்களின் துயரங்களை அல்லது சுதந்திரமினமையை எழுதுகிறார்கள் , மேலை நாடுகளிலும் சரி இது தான் நடக்கிறது. ஆண்களின் எழுத்துக்கள் குறைவாகவே இதை வெளிப்படுத்துகிறது. ஆனால் பாரதி பெண்களுக்காகவும் எழுதியவன். ஏனென்றால் அவனிடம் சுய மரியாதை இருந்ததால் ஒழுக்கவும் இருந்தது . ஒழுக்கம் இருந்ததால் பெண்களின் ஆளுமையை ஏற்று கொள்ள முடிந்தது .அவர்களின் அறிவாற்றலை வியக்க முடிந்தது .

நன்றி வாழ்த்துக்களுடன்

பூஷணா

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....