துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

24.3.18

மொழியாக்கப்பயிலரங்கில்..
திருவனந்தபுரத்தில் உள்ள கேரளப்பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை,    தமிழ்- மலையாளம்- இந்தி- ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கிடையிலான மொழியாக்க உத்திகள் குறித்த மொழியாக்கப்பயிற்சிப்பயிலரங்கு ஒன்றை மார்ச் 19 தொடங்கி ஒரு வாரம்  நிகழ்த்தியது.  தமிழ்நாடு மற்றும் கேரளப்பல்கலைக்கழகத்தோடு இணைந்த 20,25 கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர்களும் உயர் ஆய்வு மாணவர்களும்  இப்பணிமனையில் பங்கேற்றார்கள்.

இப்பயிலரங்கில் பயிற்சி அளிக்கவும்,  ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பதற்கான உத்திகள், அனுபவ பூர்வமாக அவற்றை  எதிர்ப்படும்போது உள்ள சிக்கல்கள்  ஆகியவை குறித்து என் கருத்துக்களை முன் வைக்கவும் 22/3/18 அன்று   நான் சென்றிருந்தேன்.

கேரளப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஜெயகிருஷ்ணன் அவர்களின் இனிய எதிர்கொள்ளலும் விருந்தோம்பலும் பங்கேற்ற மாணவ ஆசிரியர்கள் காட்டிய ஆர்வமும் மிகுந்த மன நிறைவை அளித்தது.

இலக்கணத்திலிருந்து தொடங்காமல் இலக்கணத்தோடு முடிக்க வேண்டும் என்று கூறிய என் அணுகுமுறை பயிற்சி பெற்றோருக்கு ஊக்கமூட்டியிருக்க வேண்டும்.  குற்றமும் தண்டனையும்,அசடன், நிலவறைக்குறிப்புக்கள் மற்றும் அவ்வப்போது மொழிபெயர்த்து  வந்திருக்கும் இந்திய மொழிச்சிறுகதைகள் ஆகிய என் மொழியாக்க அனுபவங்களின் அடிப்படையில் மூலப்படைப்பாளியின் மையப்புள்ளி எதுவோ அதைத் தொடுவதாக மொழியாக்கம் அமைய வேண்டுவதே முதன்மையானது என்பதையும் இணையான சொற்கள், வாக்கிய அமைப்புக்கள் இவை எல்லாமே அதை நோக்கியவைதான் என்பதையும் என் வகுப்பில் பகிர்ந்து கொண்டேன். படைப்பாக்கத்துக்கு நிகரான மிக அதிக பட்ச உழைப்பைக்கோரும் ஒரு சவால் மொழியாக்கம் என்பதையும் வே ற்றுமொழிக் கலாச்சார வேறுபாடுகளையும் வெவ்வேறு மொழி அமைப்புக்களிலுள்ள வேற்றுமைகளையும் எதிர்கொள்வது  எப்படி என்பதைப் பல  எடுத்துக்காட்டுக்கள் வழி சுட்டிக்காட்டினேன். சிறு சிறுபத்திகள் தந்து பயிற்சி அளித்தபோது பங்கேற்பாளர்களிடமிருந்து  பல நல்ல மொழியாக்கத் தெறிப்புக்கள் வெளிப்படத் தொடங்கியிருந்தன. பயிலரங்கின் பயன் காலப்போக்கில் சிறந்த மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்குவதாக அமையலாம் என்ற அந்த சமிக்ஞை தந்த  நம்பிக்கையோடு   விடை பெற்றேன்


பகல் உணவு இடைவேளையிலும் மாலை பயிலரங்கு முடிந்த பின்னும் அங்குள்ள ஆய்வு மாணவர்களும் ஆசிரியப்பங்கேற்பாளர்களும் தொடர்ந்து என்னோடு உரையாடுவதில் காட்டிய உண்மையான ஆர்வம் என்னைப்பழைய பணி நாட்களுக்கே கொண்டு சென்றது.

மாலை ஆறுமணிக்குப்பின் திருவனந்தபுரம் அனந்தபத்ம நாப சுவாமி ஆலயத்துக்கு சில ஆசிரியர்களோடும் ஆய்வு மாணவர்களோடும் சென்றதும் அங்குள்ள தொன்மையான சிற்பங்கள் ஓவியங்கள் குறித்து நெடுநேரம் அவர்களோடு உரையாடிக்கொண்டிருந்ததும்..அந்த நாளை இன்னும் கூட அர்த்தப்படுத்தியபடி மறக்க முடியாததாக்கி விட்டது.


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....