துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

6.10.23

“அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்” ...-நாவல் வெளியீடு

 இன்று ,

‘’அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்”

என்னும் என் மூன்றாவது நாவல் வெளிவரவிருக்கிறது.
சென்னை ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகத்தார் தங்கள் வேறு வெளியீடுகளுடன் சேர்த்துக் கோட்டூர்புரம் அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தில் என் நாவலையும் வெளியிடுகிறார்கள்.( என் அன்புக்குரிய மாணவி தேனம்மை லக்‌ஷ்மணனின் நூல் ஒன்றும் இந்தப்பட்டிலில் இடம் பெற்றிருப்பதில் ஓர் ஆசிரியராகவும் பெருமிதம் கொள்கிறேன்)நாவலிலிருந்து…( தலைப்புக்கும் இது விளக்கமாகலாம்)
//“அற்புதம் டாக்டர்! ‘மானுடப்பிறப்பில் மாதா உதரத்தில் ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்னு ஆரம்பிச்சு… ‘ஈரிரு திங்களில் பேரிருள் பிழைத்தும்… அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்… ஏழுதிங்களில் தாழ் புவி பிழைத்தும்’னு ஒவ்வொரு மாசமும் கருவோட வளர்ச்சியையும் அது படற அவஸ்தையையும் போராட்டத்தையும் காட்டற மாதிரியே பொருத்தமான வரிகள், அப்படியே அசந்து போயிட்டேன்’’
“அது திருவாசகத்திலே போற்றித் திரு அகவல்ங்கிற பகுதியிலே இருக்கிற வரிகள் சுமதி. ‘புல்லாகிப் புழுவாகி எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்’னு சொல்ற மாணிக்கவாசகர் மனுஷப் பிறப்பு எடுக்கிறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்குங்கிறதை அந்தப் பத்து பன்னிரண்டு வரிகளிலே சொல்றார். ஒவ்வொரு மாசமும் என்ன பாடு..? எல்லாமே சர்வைவலுக்கான யுத்தம்தான்கிறதை கைனகாலஜிஸ்டோட நிலையிலே இருந்து ஒரு ஆன்மீகவாதி எப்படிசொல்லியிருக்கார் பாரு. ஆனா பரமபத ஏணி மாதிரி இத்தனை படிகளிலே தப்பித் தப்பிப் பிழைச்சு வந்து அருமையாக் கிடைக்கிற மனிதப் பிறவியை நாம ஒழுங்காப் பயன்படுத்திக்கிறோமா, பல வழிகளிலே விரயமாக்கித் தொலைச்சுக்கறோமாங்கிறதுதான் அவர் எழுப்பற அடுத்த கேள்வி” //
என்னுரையிலிருந்து…
“அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்” என்ற இந்த நாவலும் கூட ஒரு யுக சந்தியின் கதைதான். சென்ற தலைமுறை மரபுச்சட்டகங்கள் பெண்கல்வியின் பாதையை மறித்ததென்றால், அதன் அடுத்த பரிமாணமாய்த் தனக்கென்ற சுயதேடல் ஒன்றை சுமந்தபடி,தன் தனிப்பட்ட ஆர்வத்தையும் கனவுகளையும் - குடும்பம் என்ற எல்லை தாண்டி நிறைவேற்றும் பெண், தனது அடுத்த தலைமுறையாலேயே குற்றக்கூண்டில் நிறுத்தப்பட்டு விடுவதை இந்த நாவல் வழி எடுத்துக்காட்ட முயன்றிருக்கிறேன். தொழில் நுட்ப வளர்ச்சியில், நடை, உடை ,நாகரிக பாணிகளில் அடுத்த நூற்றாண்டுக்கே கூடத் தாவிச் செல்லத் தயாராக இருக்கும் இன்றைய இளைய தலைமுறை,மரபு வழி மனப்போக்குகளில் சற்றுப் பின்னோக்கி நகர்ந்தபடி - தாய் என்னும்பங்கு நிலை ( role) ஒன்றை மட்டுமே பெண்ணிடமிருந்து எதிர்பார்க்கிறதோ என்ற ஐயம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை.
இந்த நாவலின்காயத்ரியைப்போலத் தங்களைக் கொண்டு செலுத்திக் கொண்டிருப்பதும், இரவும் பகலுமாக ஆட்டிப்படைப்பதுமான அகத்தேடலை இறக்கி வைக்க வழியின்றித் தங்கள் கனவுகளை மனதுக்குள்ளேயே போட்டுப் புதைத்துக் கொள்ளும் பெண்கள், குறிப்பிட்ட சில துறைகளை மட்டும் சார்ந்தவர்கள் அல்ல, வெளி உலகத்தில்…, புறப்பணிகளில் ஈடுபடாமல் வீட்டளவில்,குடும்பத் தளத்தில் மட்டுமே இயங்கும் பெண்களும் அவர்களில் உண்டு.
வீட்டு வாழ்க்கை,வெளி வாழ்க்கை என்ற பங்கு நிலைப் போராட்டத்தில் வெற்றியும் தோல்வியுமாய் ஊடாடிக்கொண்டிருக்கும் அனைத்து அன்னையருக்கும் இது சமர்ப்பணம்.
இதை வெளியிடுவதில் ஆர்வம் காட்டியதோடு மிக விரைவாகவும் வெளியிட்டிருக்கும் ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகத்தார்க்கு என் நன்றி.

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....