’’செல்லி! அந்த ஷெல்ஃபிலே இருக்கிற புஸ்தகத்தையெல்லாம் எடுத்துத் தூசிதட்டி ஒழுங்கா அடுக்கி வை!நானும் பப்பியும் கடைத் தெரு வரைக்கும் போயிட்டு வந்திடறோம்’’
கதவைத் தாளிட்டு விட்டுப் புத்தக அடுக்குகளைப் பிரித்துத் துடைக்க ஆரம்பிக்கிறாள் செல்லி.அவளுக்குப் புஸ்தகமென்றால் கொள்ளை ஆசை.பளபளப்பான வண்ணங்களில் வழுக்கிக் கொண்டு போகும் அட்டைகளை அணிந்திருக்கும் அந்தப் புத்தகங்களை ...ஒவ்வொன்றாக எடுத்து ஆசை தீரத் தழுவி,அவற்றின் வாசனையை முகர்ந்து நெஞ்சு கொள்ளாமல் நிரப்பிக் கொள்கிறாள் . அவள் இங்கே வந்து சேர்ந்த இத்தனை நாட்களில் ஒரு பொழுது கூட இந்த வீட்டிலிருப்பவர்கள் இவற்றையெல்லாம் பிரித்துப் பார்த்ததாய் அவளுக்கு ஞாபகமில்லை.கண்ணாடி அலமாரிக்குள் அடுக்கப்பட்டிருக்கிற அலங்கார அழகுப் பொருட்களைப் போல இந்தப் புத்தகங்களும் கூடப் பணம் படைத்தவர்களின் அந்தஸ்தைக் கட்டியம் கூறும் அடையாளச் சின்னங்கள் மட்டுமே என்ற உண்மை புரியாதவளாய் அவற்றை வெற்றுப் பார்வையோடு வெறித்துப் பார்க்கிறாள்.அவளுக்கிருந்த அரைகுறைஞானத்தில் அந்தப் புத்தகங்களில் பரவிப் படர்ந்திருக்கிற ஆங்கில எழுத்துக்களை எழுத்தளவில் இனம் காண முடிகிறதே ஒழிய எழுத்துக் கூட்டிச் சொல்லவோ,உச்சரிக்கவோ முடியாத குறை,உள்ளுக்குள்ளிருந்து முட்டிக்கொண்டு வருகிறது.கண்ணைக்கூடச் சரியாக விழித்துப் பார்க்கத் தெரியாத கோழிக் குஞ்சை எங்கிருந்தோ பறந்து வந்த பருந்து,தூக்கிக்கொண்டு போவதைப் போல விதி அவளை ஒரே தூக்காய்த் தூக்கி இங்கே கொண்டுவந்து போட்டுவிட்டது!
’’எல்லாரும் ஒரு தடவை சத்தமாய்க் கை தட்டுங்க!இந்த மாசமும் நம்ம செல்லிதான் முதல் ராங்க் வாங்கியிருக்கா.செல்லி! வா..வந்து ராங்க் கார்டை வாங்கிக்க...’’
கூச்சமும்,பெருமிதமும் பின்னலிடும் உணர்ச்சிக் கலவைகளுடன் வகுப்பாசிரியரை நோக்கி வருகிறாள் அவள்.
‘’இங்கிலீஷிலே மட்டும் எல்லார் மார்க்குமே மோசம்தான்.செல்லி கொஞ்சம் பரவாயில்லாம அம்பது மார்க் வாங்கியிருக்கா...ஆனாலும் இது போதாதுதான்...’’
ஆசிரியர் பேசிக் கொண்டே போகக் கையில் பிடித்திருக்கிற மார்க் அட்டையில் மனசு ஒட்டாமல்,செல்லியின் கவனம் ஆத்தாவின் நினைப்பில் வழுக்கிக்கொண்டு போகிறது.படிக்க வேண்டும் என்ற பொறியை அவளுக்குள் பதிய வைத்து,நேரம் கிடைத்தபோதெல்லாம் அதை விசிறி விட்டுக் கொண்டே இருந்த ஆத்தா.....
‘’எங்க பொளப்புத்தான் இப்படித் தற்குறித்தனமா..நாறப்பொளப்பாப் போயிடுச்சு.
நீயாச்சும் இதிலே முங்கி முக்குளிச்சுப் போயிடாம,எம்பி மேல வந்துடணும் கண்ணு.இந்தக் கண்ணுக்குள்ளே உசிரை வச்சுக்கிட்டு நானும் ஒரு மனுசின்னு நடமாடிக்கிட்டு இருக்ககிறதே அதுக்குத்தான்...’’
-அப்படித்தான் இருந்தாள் ஆத்தா.நாலெழுத்துப் படிக்கத் தெரியாத பாவத்துகாக ஒரு துண்டளவு வயல் காட்டையும்,ஒரு ஏக்கர் புன்செய்க் காட்டையும் நீட்டிய இடத்தில் கைநாட்டுப் போட்டு ஏமாந்து விட்டு,அந்தத் துயரத்திலிருந்து மீள முடியாமலே அப்பன் செத்துப் போன பிறகு,அந்தத் தாய் ஜீவித்ததற்கான அர்த்தமே அவள்தான்.
ஐந்து மைல் தொலைவு நடந்து போய்க் களை எடுக்க வேண்டுமா?கருவேல முள்ளிகளைக் கட்டுக் கட்டாய்ச் சுமந்து வர வேண்டுமா?எந்த வேலையுமே கிடைக்காத நாட்களில் பெரிய வீட்டுக்காரர்களுக்குப் பீப்பாய் பீப்பாயாகத் தண்ணீர் இறைத்து ஊற்ற வேண்டுமா?எதற்குமே எப்போதுமே அலுத்துக்கொண்டதே இல்லை அவள்.ஆனால் எது எப்படிப்போனாலும்,மணி ஆறடித்துவிட்டால்,ஆத்துமேட்டில் உட்கார்ந்து,மூன்று கல் தாண்டியுள்ள பள்ளிக்கூடத்திற்குப் போயிருக்கிற செல்லியை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவாள்.அவள் வந்த பிறகு,சுடுநீர் வைத்து மகளைக் குளிக்க வைத்துவிட்டு,சத்துணவு சாப்பிட்டு மரத்துப் போன அந்த நாக்குக்கு ருசியான காரத் துவையலின் துணையோடு கூழோ,கஞ்சியோ ஆக்கிப் போடுவாள்.எப்படி எப்படியெல்லாமோ காசை மிச்சம் பிடித்து வாங்கி வந்திருக்கிற சவுக்காரக் கட்டியில் செல்லியின் சீருடைகளைத் துவைத்துப்போட்டுவிட்டுத்தான் படுக்கையில் சாய்வாள்.அப்படியும் சும்மா இருக்க மாட்டாள்.
‘’செல்லி!அந்தப் பொஸ்தகத்தைப் பிரிச்சு வச்சு ரெண்டு பாடத்தைப் படி!கேப்போம்.காதுலே நாலு நல்ல வார்த்தையாவது வந்து விழட்டும்.அதென்னவோ நீ சத்தமாப் படிக்கிறதைக் கேக்கிறப்ப எங்க வயக்காட்டுப் பக்கத்துலே பாட்டுப் படிக்கிறதைக் கேக்கிற மாதிரி இருக்கு!’’
பிறகு திருநீறு போட்டு அவள் துலக்கி வைத்த அரிக்கேன் விளக்கின் ஒளியில் செல்லி படிக்க,அதைக் கேட்டுக் கொண்டே கண் கிறங்கி அசதியோடு உறங்கிப்போவாள்.
சிறகுக்குள்ளே மகளைப் பொத்திப் பொத்திக் காத்த அந்தத் தாயையும் அவள் பசி மயக்கத்தோடு பாதையில் நெல் உலர்த்திக் கொண்டிருந்தபோது பாழும் லாரிக்காரன் ஒருவன் அடித்துப்போட்டுவிட்டுப் போய்விட,நாதியற்றுப் போனாள் செல்லி.இரக்கம் கொஞ்சம் மிச்சமிருந்த தூரத்து உறவுக்காரர் ஒருவர் அனாதை விடுதியில் அவளைக் கொண்டுவந்து சேர்க்க,நொண்டி நொண்டிக்கொண்டு அவள் படிப்பும் ஏதோ தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஆத்தாவின் நினைப்பு,கண்களில் ஆறாய்ப் பெருகி வர,தாயைத் தடவித் தரும் பாவனையில்,கைகள் அனிச்சையாய் மார்க் அட்டையை வருட,மனசு ஊமையாய் அரற்றுகிறது.
‘’இந்தச் சீரையெல்லாம் பாக்காம நீ போயிட்டியே ஆத்தா...’’
‘எப்படியாவது எதைச் செய்தாவது படித்தே ஆக வேண்டும்...நீ ஏத்தி வச்ச விளக்கை அணைய விட்டுறக் கூடாது.படித்த படிப்புக்குத் தகுந்தபடி,சின்னதாய் ஒரு டீச்சர் உத்தியோகம்.பிறர் கையை எதிர்பார்க்காமல் அதிலிருந்து கொண்டே மேலும்..மேலும்..’
''என்னடி செல்லி கையிலே கார்டை வச்சுக்கிட்டுக் கனாக் கண்டுக்கிட்டிருக்கே....!அங்கே அரை மணி நேரமா வார்டன் டீச்சர் ஒன்னைக் கூப்பிட்டு ஆளு மேல ஆளு விட்டுக்கிட்டிருக்காங்க...போய் என்னன்னு கேளு’’- கூடப் படிக்கும் சரோஜா அவளைப் பிடித்து உலுக்குகிறாள்.
‘என்ன..ஏதாச்சும் வேலை வச்சிருப்பாங்களா இருக்கும்..’
-விடுதியிலுள்ள பெண்கள் ஒரு வகையில் அந்த வார்டனுக்குக் கொத்தடிமைகள் போலத்தான்.ஹாஸ்டலை ஒட்டியுள்ள அவள் வீட்டில் வெங்காயம் உரிப்பதிலிருந்து..குழாய்த் தண்ணீர் பிடித்து வைப்பது வரை சகலத்துக்கும் உழைப்புச் சுரண்டல்...அந்தக் குழந்தைகளிடமிருந்துதான்.
இன்றென்னவோ வார்டனின் சிடுசிடுத்த முகத்திலும்கூடச் சின்னதாய் ஒரு பூரிப்பு!
‘’செல்லி...ஒனக்கொரு நல்ல சேதி வச்சிருக்கேன்...அடுத்த வாரம் நீ மெட்ராஸ்போகப் போறே..’’
‘’....................................’’
‘’என்னடி இது மூஞ்சியிலே ஒரு எழவையும் காணோம்.இதோ பாரு செல்லி...எனக்குத் தெரிஞ்ச நல்ல குடும்பம்.ரொம்ப செல்வாக்கானவங்க.காசு பணத்துக்கும் எந்தக் கொறச்சலுமில்லே.ஏவின வேலையைச் செஞ்சுகிட்டு அடக்க ஒடுக்கமாக் கூடவே இருக்கிறதுக்கு உன் வயசுப் பொண்ணு வேணுமுன்னு ரொம்ப நாளாவே என் கிட்டே சொல்லிக்கிட்டிருந்தாங்க.சுத்தபத்தமா...நறுவிசா..நாசூக்கா நடந்துக்க ஒன்னை விட்டா இந்த ஹாஸ்டலிலே வேற எந்தக் கழுதை இருக்கு?அதுதான் ஒன்னை அனுப்பலாம்னு முடிவு செஞ்சிருக்கேன்’’
எதிர்பாராத நேரத்தில் தாக்கிய மின் அதிர்வின் பாதிப்பு செல்லியிடம் சொல்லாக வெடிக்கிறது.
‘’டீச்சர்..அப்ப என்னோட படிப்பு...?நான் படிக்கணும்..’’
‘’ஆமா...நீ படிச்சுப் பெரிய கலெக்டர் உத்தியோகத்துக்கு வந்து கிழிக்கப் போறியாக்கும்!நெலமையைப் புரிஞ்சு நடந்துக்க...தொடர்ந்து நீ இங்கேயே தங்கியிருந்தாலும்,எட்டாவதுக்கு மேலே படிக்க வழியில்லை.அப்பறம் நீ கைத் தொழிலோ வேற ஏதாவது வேலையோ செஞ்சுதான் பொழச்சாக வேண்டியிருக்கும்.இந்தக் காலத்திலே வேலைன்னு ஒண்ணு கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?ஏதோ இந்தமட்டும் கிடைச்சிருக்கிற பிடிமானத்தை வச்சுக்கிட்டு மேலே போவியா...அதை விட்டுட்டு..’’
‘’இல்லே டீச்சர்...நான் படிக்கணும்...’’
-அவள் குரலில் உறுதி கூடுவது கண்ட வார்டன் கடுமையாகிறாள்.
‘’இத பாரு...உன் கிட்டே கெஞ்சிக்கிட்டு இருக்க எனக்கு நேரமில்லை.ஒன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தாரே ஒங்க மாமாவா..சித்தப்பாவா?அவர்கிட்டேயும்பேசி இதுக்குச் சம்மதம்னு எழுதி வாங்கிட்டேன்.மூக்குப் பிடிக்க மூணு வேளை சாப்பாடு...வருஷத்துக்கு ரெண்டு புது உடுப்பு....கசக்குதாக்கும் உங்களுக்கு...!..போ..போ...போய் உருப்படற வழியைப் பாரு..’’
வாழ்க்கை இங்கென்னவோ வளப்பமாகத்தான் இருக்கிறது.புத்தகத்தைத் தூசி தட்டுவது மாதிரியான சுலபமான வேலைகள்,முன்பின் கேள்விப்பட்டே இருக்காத ருசியான உணவுப் பண்டங்கள் தரும் ஊட்டம்,பழசானவை என்று ஒதுக்கப்பட்டு வந்து சேர்ந்திருந்தாலும்,அவள் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத சொகுசான ஆடைகள் ,வேலைக்காரி என்பதையும் மறந்து விடாமல்-அதே வேளையில் வார்டனைப்போல் சிடுமூஞ்சித்தனமும் காட்டாமல் தேன் தடவிய வார்த்தை பேசியே விரும்பிய வேலைகளைக் கறந்து கொள்ளும் லாகவம் ,24 மணி நேரமும் சேனலுக்குச் சேனல் தாவிக் கொண்டே இருக்கும் தொலைக் காட்சி.....!நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் கொஞ்சம் ஆவதைப் போலத் தன் உடம்பிலும் சற்றே பளபளப்பும் ,மெருகும் ஏறத் தொடங்குவதைச் செல்லி உணர்கிறாள்.ஆனால்,சகலமும் இருந்தும் எதையோ தொலைத்துவிட்ட ஆற்றாமயின் சுமையைத் தாங்க முடியாமல்.....வீட்டுத் தலைவி ஓய்வாக உட்கார்ந்திருந்த ஒரு பிற்பகல் வேளையில் தயங்கித் தயங்கி மெள்ளப் பேச்செடுக்கிறாள்.
‘’அம்மா....அக்காவும்,அண்ணனும் காலேசுக்குக் கெளம்பிப் போனபெறகு..நான் சும்மாத்தானே இருக்கேன்...அடுத்தாப்பிலே இருக்கிற பள்ளிக்கூடத்திலே சேர்த்து விட்டீங்கன்னா..ஏதோ கொஞ்சம் படிச்சுக்குவேன்.மதியம் கூட ஒரு தரம்,வீட்டுக்கு வந்து ஏதாச்சும் வேலை இருந்தா செஞ்சு கொடுத்திட்டுப் போறேன்.என் சம்பளத்திலே கொஞ்சத்தை வேணுமானாலும் பிடிச்சுக்கங்க...நான் படிக்கணும்...’’
வீட்டம்மாவின் முகம் இறுக்கமடைகிறது.
‘’ஏண்டி...உனக்குக் கிறுக்குப் பிடிச்சுப் போச்சா?உன்னை என்ன ஸ்கூல்லே சேக்கிறதுக்கா ஹாஸ்டல்லேயிருந்து கூட்டிக்கிட்டு வந்தோம்?எனக்கு...பிரஷர்,ஷுகர்னு ஏகப்பட்ட வியாதி இருக்கு.ஒரு அவசரம்,ஆத்திரம்னா ஏவின வேலையைச் செய்யறது யாரு?வாசலிலே வந்து பெல் அடிக்கிறவனுக்கும்,வர்ற ஃபோன்கால்களுக்கும் பதில் சொல்லறது யாரு?போடீ போ!..ஏதாச்சும் வேலை இருந்தாப் போய்ப் பாரு..போ’’
வாயிலில் அழைப்பு மணி ஒலிக்க,அவள் ஓடிப்போய்க் கதவைத் திறந்து விடுகிறாள்.அந்த வீட்டின் செல்ல மகன் சுரேஷ்,நான்கைந்து நண்பர்களோடு உள்ளே வர,அம்மா ஆச்சரியப்படுகிறாள்.
‘’என்னடா இது இந்த நேரத்திலே..’
‘’போம்மா..மத்தியானம் செம அறுவையா ரெண்டு கிளாஸ் இருக்கு! ’கட்’அடிச்சிட்டு ஜாலியா வந்திட்டோம்.கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தப்புறம்.,எல்லாரும் ஒரு ரவுண்ட் வெளியே போகப் போறோம்’’
‘’ஏண்டா..அப்பாவுக்குத் தெரிஞ்சா....’’
‘’இதையெல்லாம் போய் அப்பாகிட்டே ஏம்மா சொல்றே நீ! சரி சரி..செல்லி!எங்களுக்கெல்லாம் காஃபி ரெடி பண்ணு.அப்படியே என் கான்வாஸ்ஷூ இருக்கு பாரு..அதைக் கொஞ்சம் தொடச்சு வச்சிடு.’’
ஆணையிட்டபடியே நண்பர்களோடு மாடிக்குச் செல்கிறான் அவன்.
அன்று இரவு உணவுக்காகச் சாப்பாட்டு மேசையைச் சுற்றி எல்லோரும் உட்கார்ந்தபோது,செல்லி படிக்க வேண்டும் என்பதற்காக வைத்த கோரிக்கைஅவர்களின் கேலிக்குரிய ஒரு பேசுபொருளாக மாறிப் போகிறது.
‘’நாங்க எல்லாம் எப்படா இந்தப் படிப்புக்குக் குட்பை சொல்லலாம்னு காத்துக்கிட்டிருக்கோம்.உனக்கென்ன செல்லி...ஜாலியா லைஃபை அனுபவிக்கிறதை விட்டுட்டு இப்படி ஒரு அப்பாவியா இருக்கியே!’’
‘’பப்பி!நான் கூடப் பார்த்திருக்கேன்...கொஞ்ச நேரம் கெடச்சாப் போறும்.இவ பரணிலேயிருந்து தன்னோட தகரப் பெட்டியை இறக்கி வச்சுக் குடைய ஆரம்பிச்சிடுவா! அப்படி என்னதான் புதையல் இருக்கோ அதிலே..’’
பிள்ளைகள் மாறி,மாறிப் பேச அப்பா ஒரு முத்தாய்ப்பு வைக்கிறார்.
‘’சரி..சரி..எதுக்கு வீணா வளவளன்னு பேசிக்கிட்டு இருக்கீங்க எல்லாரும்?செல்லிக்கு இங்கே என்ன குறை?இன்னும் கொஞ்சம் வருஷம் போனா..நம்ம கிட்டே வேலை பாக்கிறவங்கள்ளேயே ஒருத்தனைப் பார்த்துக் கல்யாணமும் பண்ணி வச்சிடப்போறோம்.அப்பறமா...அவங்க பிள்ளை,குட்டிங்க வேணுமானா படிச்சிட்டுப் போறாங்க...’’
‘அவங்களைக் கூட இவங்க படிக்க விட்டுடப் போறாங்களாக்கும்?அப்ப மட்டும்,இவங்களோட பேரன்,பேத்தியைத் தூக்க..எடுக்க ஆள் தேவைப்படாதா என்ன?’-மனசு,விரக்தியின் உச்சத்தில் முனக,எச்சில் பாத்திரங்களைப் பொறுக்கிக்கொண்டு அங்கிருந்து போகிறாள் செல்லி.
என்ன காரணமோ தெரியவில்லை..ஒரு வாரமாக அந்த வீடே பரபரப்பாக இருக்கிறது.விசா,பாஸ்போர்ட்,அமெரிக்கா என்று அவளுக்கு எதுவுமே புரிபடாமல் ஏதேதோ பேச்சுக்கள்! நடுவில் அவளையும் ஒரு முறை வெளியேகூட்டிக் கொண்டு போய் நிழற்படம் எடுத்துக்கொண்டு வருகிறார்கள்.வாசகம் விளங்காத சில ஆங்கிலக் கடிதங்களில் அவளிடம் கையெழுத்தும் வாங்குகிறார்கள்..
‘’என்ன இருந்தாலும் செல்லியோட கையெழுத்து சூப்பரா இருக்கும்மா! படிக்க மட்டும் செஞ்சிருந்தா...நம்மளையெல்லம் தூக்கி சாப்பிட்டிருப்பா...’’
‘’அக்கா..இதெல்லாம் எதுக்குங்கக்கா?’’
-செல்லி இவ்வாறு கேட்க,பப்பி வியப்பின் விளிம்புக்குப் போகிறாள்.
‘’அட....உனக்கு இன்னும் விஷ்யம் தெரியாதா?அம்மா ஒண்ணும் சொல்லலையா?அடுத்த மாசம் நீ அமெரிக்கா போகப் போறே செல்லி!’’
‘’போங்கக்கா...தமாஷ் பண்ணிக்கிட்டு..’’
‘’சீ..தமாஷ் இல்லேடீ...நிஜம்தான்.அமெரிக்காவிலே இருக்கிற எங்க அண்ணனோட குழந்தையைப் பாத்துக்க ஆளு தேவைப்படுது.அண்ணன்,அண்ணி ரெண்டு பேரும் வேலைக்குப் போறாங்க.நம்ம ஊரு மாதிரி முழு நேரமும் வீட்டிலேயே இருந்து விசுவாசமாப் பிள்ளகளப் பாத்துக்க அங்கே எல்லாம் ஆளு கிடைக்குமா என்ன...?அதுதான் உன்னை அனுப்பலாம்னு அப்பா-அம்மா முடிவு பண்ணியிருக்காங்க.ஆனாலும் உனக்கு ரொம்ப ‘லக்’தான் செல்லி.நாங்களே இன்னும் அங்கே எல்லாம் போனதில்லே....ம்..கொடுத்து வச்சவ’’-பப்பி பெருமூச்செறிகிறாள்...
‘’ஆமாமாம்....இப்ப செல்லிக்குப் பதிலா உன்னை அனுப்பி வச்சா அவ செய்யற வேலையெல்லாம் நீ செஞ்சு கிழிச்சிடுவியாக்கும்..’’
-இடையில் குறுக்கிட்ட அவள்தாய்,இப்பொழுது நேரடியாகவே செல்லியிடம் பேசுகிறாள்.
‘’நீ என்ன மாட்டேன்னா சொல்லிடப் போறேன்னுதான் நாங்களே முடிவெடுத்து எல்லா ஏற்பாடும் செஞ்சிருக்கோம்.இந்த ஜன்மத்திலே உனக்கு இப்படி ஒரு சான்ஸ்கிடைக்கப் போகுதா என்ன?நாளைக்குக் கடைக்குப் போய் உனக்குப் புதுசாக் கொஞ்சம் துணிமணி,செருப்பு எல்லாம் எடுத்துத் தரேன்.காலையிலே இவங்க எல்லாம் கிளம்பிப் போனப்பாறம் ரெடியா இரு..என்ன..!’’
‘’அம்மா....’’-ஏதோ பேச வாயெடுக்கிறாள் செல்லி.
‘’ஓ....தனியாப் போகணுமேன்னு பயப்படறியா?இதோ பாரு....இங்கே நாங்க வந்து பிளேனிலே ஏத்தி விட்றுவோம்.எறங்கற எடத்திலே அவங்க வந்து கூட்டிக்கிட்டுப் போவாங்க...சரிதானே...?’’
‘’ஹூம்...ராஜ யோகம்தான்!பேசாமே வேலைக்காரங்களா ஆயிடலாம் போலே இருக்கு...ம்....டிரெயினிலே கூடச் சரியா ஏறிப் போயிருக்காதவளுக்குப் பிளேன்லே யு.எஸ்.ட்ரிப்..’’- அவளைப் பார்த்து விசிலடிக்கிறான் சுரேஷ்.
தொடர்ந்து அவர்கள் அடுக்கிக் கொண்டு போகும் அந்த அந்நிய மண்ணின் அற்புதங்களும்,’வாராது போல் வந்து வாய்த்த மாமணி’யாய் அவளுக்கு வாய்த்திருகிற அதிர்ஷ்டம் பற்றிய அவர்களின் அங்கலாய்ப்புக்களும் காதில் வந்து விழுந்தாலும் மனசை எட்டிப் பிடிக்க முடியாதபடி உறைந்து போயிருக்கிறாள் செல்லி.
ஆத்தாவின் கனவு...தன்னுடைய ஆசை...இதற்கெல்லாம் அர்த்தமே இல்லாமல்....எல்லாவற்றிலிருந்தும் அந்நியப்பட்டவளாய் எங்கோ தூரப் போய்விடப் போகிறாள் அவள்.கழுத்தில் கிடந்த சுருக்கு இறுகி இறுகி....மூச்சு முட்டுகிறது.கண்ணுக்குத் தெரியாத கழுகுப் பிடிகள் அவளைக் கவ்விக் கொண்டுபோய்க் குதறிச் சிதைக்க....அவளுக்குத் தலை சுற்றுகிறது.
வீட்டிலிருப்பவர்கள் எல்லோரும் உறங்கச் சென்ற பிறகு வாய்த்த தனிமையில்...தான் பொக்கிஷமாய்ப் பதுக்கி வைத்திருக்கும் பாடப் புத்தகங்களுக்கு இடையே இருந்து,எப்போதோ தன் ஸ்கூலிலிருந்து மாற்றலாகிச் சென்ற...தன் மீது அன்பும்,அக்கறையும் கொண்டிருந்த தமிழ் டீச்சரின் முகவரியைத் தேடி எடுத்துப் பத்திரப்படுத்திக் கொள்கிறாள்.தன் பயணத்தைத் தீர்மானித்து விட்ட திருப்தியுடன் நிம்மதியாகத் தூங்கிப் போகிறாள்.
அடுத்த நாள் காலையில்...அந்த வீட்டில் இருந்தவர்கள் கண் விழித்து பெட்காப்பிக்காகச் செல்லியைத் தேடியபோது...அவள் அங்கே இல்லை...........!
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
-’தினமணி கதிர்’வார இதழில் வெளியாகி,இயக்குநர் பாலு மகேந்திரா அவர்களின் இயக்கத்தில் உருவான‘கதை நேரம் ’ தொலைக்காட்சித் தொடரின் 36’ஆம் பகுதியாக(Episode)’நான் படிக்கணும்’என்ற தலைப்பில் ஒளிபரப்பான என் சிறுகதை.
9 கருத்துகள் :
அடேடே அது உங்கள் கதையா? பாலு மகேந்திராவின் டைரக்ஷனில் கதை நேரத்தில் அதை பார்த்தேன். மனதைக் கவர்ந்தது.
சற்றே கதையை மாற்றியிருப்பாரோ? சம்பந்தப்பட்ட வார்டன் பணிபுரிந்த ஹாஸ்டல் குழந்தை தொழிலாளிகளை மீட்டு அவர்களுக்கு படிப்பு சொல்லித்தருவதற்காக நிறுவப்பட்டது என அப்படத்தில் கூறப்பட்டதாக என் ஞாபகம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல கதை சுசீலாம்மா..
எங்கவீட்டுல வேலை பாத்த பெண்ணுக்கு எங்கம்மா எழுதப்படிக்க சொல்லிக்கொடுக்க முயன்றது நினைவுவந்தது..
வருகைக்கு நன்றி.
சிறுகதையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல்தான் ஒளிவடிவமாக்கப்பட்டது டோண்டு சார்.
அருமையான கதை அம்மா ..
பல செல்லிகள் நமது செட்டிநாட்டில் உண்டு .குடும்பம் குடும்பமாக போனிமையாக உழைத்து கொட்டுவார்கள் .கனவுகளை தொலைத்து இவர்களின் வாழ்கையே மாறி விடுகிறது .மனம் கனக்கிறது
ஆம்மாம் டாக்டர்..’பிள்ளை தூக்க’ என்ற பெயரில் இவர்களின் பிள்ளைப் பருவங்களே தொலைந்து விடும் அவலத்தை நான் நிறையப் பார்த்திருக்கிறேன்.
நன்றி.
வறுமை பலபேருடைய கற்றல் ஆர்வத்தை கனவாக்கியுள்ளது.
இந்த அவலங்களையெல்லாம் அன்றாடப்பார்த்து மறத்துப்போன எங்களுக்கு நல்ல ஒரு விழிப்புணர்வு கொடுத்தற்க்கு நன்றி. வேதாத்திரி மஹரிஷி அவர்களின் “ நடந்து செல்லும் பிணங்களல்ல நாம் இவற்றைப்பார்த்து
நமது கடமை தேர்ந்து நலம் செய்யாதிருக்க “ என்ற கருத்துப்படி, நாம் என்ன செய்யலாம் என்று கூட்டாக முடிவு செய்து ஏதாவது செய்வோம்.
எத்தனையோ ஏழைக் குழந்தைகளுக்கு படிக்கும் ஆசையிருந்தாலும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. அதை அற்புதமாய்ச் சித்தரிக்கிறது இக்கதை. இந்த அவலங்களுக்கெல்லாம் முடிவு - ?????
பகிர்வுக்கு நன்றி அம்மா.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
பாவம் செல்லியின் நிலைமை கஷ்டம் தான்.
கருத்துரையிடுக