'இரவு வேளையில் பாரீஸின் இளவரசி,
பகற்பொழுதிலோ பாரீஸின் ராட்சசி’’
தொன்மையான பிரெஞ்சுக் கட்டிடக்கலை வடிவங்களுடன் ஒத்துப்போகாமல் - சற்று மாறுபட்டு அமைந்திருப்பதாலேயே பல பிரெஞ்சுக்காரர்கள் இதை அவ்வளவாக விரும்புவதில்லை.
புகழ்பெற்ற பிரெஞ்சுப் படைப்பாளி ஒருவர்,இதன் உச்சியிலிருந்தபடியே தன் படைப்புக்களை எழுதிக் குவிப்பார்; அதற்கான காரணத்தைக் கேட்டால் ’பாரீஸில் வேறு எங்கே இருந்தாலும் இதைப் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறதே’ என்பாராம் அவர்.
‘ஒட்டகச் சிவிங்கி’,’அழுது வடியும் விளக்குக்கம்பம்’என்றெல்லாம் ஈபில் கோபுரத்தின் மீது பலவகையான எதிர்மறை விமரிசனங்கள் ஒருபுறம் வைக்கப்பட்டாலும் இன்றைய பிரெஞ்சு மக்கள் பலரும் இதைக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்; இரவு ஒன்பது மணிக்குப் பிறகு மின்னி மின்னித்(glittering lights) தகதகக்கும் விளக்கொளியில் ஈபில் கோபுரத்தை ஜொலிக்கவைத்துப் பாரீஸின் அழகு பிம்பமாக இதைத் தாங்களும் ரசித்து, இதைக் காண்பதற்காகவே கூடும் சுற்றுலாப் பயணிகளையும் மகிழ்வில் ஆழ்த்துகிறார்கள்.
பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி 1889 ஆம் ஆண்டில் ஈபில் என்னும் பொறியாளரால் 7000 டன் எடை கொண்ட 15,000 இரும்புத் துண்டுகளால் உருவாக்கப்பட்ட இரும்பின் அற்புதம் ஈபில்கோபுரம் .
(ஈபிலின் மிகச் சிறிய மார்பளவுச் சிலை கோபுரத்துக்குக் கீழே ஒரு ஓரமாக வைக்கப்பட்டிருக்கிறது; விஷயம் தெரிந்தவர்கள் தேடிப் போய்ப் பார்த்தால்தான் தன்னுடைய படைப்புக்குப் பக்கத்திலேயே ஈபிலும் கூட (ஒரு ஈயைப்போல)இருப்பது கண்ணில் படும்).
பொறியியலாளர் ஈபிலின் சிலை |
முதலில் இப்படிப்பட்ட கோபுரம் ஒன்றைக் கட்டுவதற்கான திட்ட வரைவுடன் ஈபில் சென்றது பாசிலோனாவுக்குத்தான்;அவரது திட்டம் அங்கே ஏற்கப்படாததால் ஸ்பெயினில் அமைய வேண்டிய இக்கோபுரம்,பாரீஸின் அடையாளமாக நின்று கொண்டிருக்கிறது.
கிட்டத்தட்ட 1000 அடி உயரத்தில் 1710 படிகளோடு இக் கோபுரம் நிர்மாணிக்கப்பட்டபோது, ஒரு வேளை இது விழுந்துவிடக் கூடும் என்ற ஐயம் பல தரப்புக்களிலிருந்தும் வலுவாக எழுப்பப்பட்டது. அதனால் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களும்,உலகப் பொருட்காட்சியும் நிறைவு பெற்ற பிறகு இதை உடைத்து விடலாம் என்ற எண்ணமும் கூட வலுவாக எழுந்தது.
அப்போது இதை உருவாக்கிய கலைஞராகிய ஈபிலே இதை ரேடியோ சமிக்ஞைகளை ஏற்கும் கோபுரமாக மாற்றிவிடலாம் என்று பரிந்துரைக்க...தகவல் தொழில் நுட்பம் பெரிதும் வளர்ச்சி பெறாத அந்தக் கால கட்டத்தில்-குறிப்பாக உலகப் போரின்பொழுது அந்த வகையில் மிகவும் கை கொடுத்திருக்கிறது ஈபில் கோபுரம்.
ஜெர்மானியர்கள் பாரீஸை வெற்றி கொண்ட காலத்திலும் கூட இதன் உச்சியில் கொடியேற்ற அவர்களால் இயலவில்லை என்பதால் ’ பாரீஸை வென்றாலும் ஈபில் கோபுரத்தை அவர்களால் வெல்ல முடியவில்லை’ என்று பெருமிதம் கொள்வார்களாம் பிரெஞ்சுக்காரர்கள்.
இந்தக் கோபுரத்தைத் தகர்க்குமாறு ஹிட்லர் ஆணையிட்டபோது, ’இது ஜெர்மனிக்கு எந்தக் கேடும் செய்யவில்லயே’ எனக் கூறி ஹிட்லரின் தளபதி அதைச் செய்ய மறுத்ததற்கான வரலாற்று ஆதாரமும் கூடச் சொல்லப்படுகிறது.
எனது ஐரோப்பியச் சுற்றுலாவின்போது(ஆகஸ்ட்2009),பாரீஸில் தங்கியிருந்த மூன்று நாட்களில்- டிஸ்னியில் கழித்த ஒரு நாள் தவிரப் பிற இரண்டு நாட்களிலும் ஈபிலுக்கு அருகே சென்று கொண்டேதான் இருந்தோம்;முதல் நாள் மதியத்தின்
படகுப் பயணம் தொடங்கியது ஈபிலின் அடியிலிருந்துதான்; அன்றிரவு பாரீஸின் இரவுத் தோற்றங்களைக் காணச் சென்றபோது பத்து மணி அளவில்,ஈபில் கோபுரத்தைத் தகதகக்கச் செய்யும் வாண வேடிக்கையையும் அதைக் காண்பதற்காகவே -குறிப்பிட்ட அந்த நேரத்துக்காகவே கூடியிருந்த மக்கள் திரளையும் காண முடிந்தது;
ஆனாலும் அப்போதெல்லாம் கூட என் மனதில் ஒரு அசைவையும் ஏற்படுத்தாத இக் கோபுரம், மூன்றாம் நாள் மதியம் , கண்ணாடிக் கூண்டாலான மின் தூக்கியில் கோபுரத்தின் மூன்றாம் நிலைவரை 900 அடிக்கு மேற்பட்ட உயரம் வரை சென்றபோது - அதன் உறுதியான கட்டமைப்பையும்,அதன் பின்னணியில் இருந்த உரமான உழைப்பையும் கண்டு நெகிழ்ந்து கசிந்தது;புறப்பார்வையில் - மேலோட்டமாக ஒன்றை எடைபோடுவது மிக மிக எளிது,ஆனால்....அதை உழைத்து உருவாக்குவதல்லவா உன்னதம் என்பதை எனக்கு உணர்த்திக் காட்டியது அந்த ‘லிப்ட்’ பயணம்.
கோபுரத்தின் உரமான கட்டுமானத்திற்கு அடியில் நான்.. |
கோபுரத்தின் முதல்,இரண்டாம் நிலைகளிலிருந்து புலப்படும் பாரீஸ் நகரத்தின் எழிலும் ஒயிலுமான காட்சிகளும்,வளைந்து நெளிந்து ஓடும் சீன் நதியின் தரிசனமும் பேரானந்த மகிழ்ச்சிப் பெருக்கைக் கிளர்த்திப் பரவசத்தில் ஆழ்த்துபவை.
ஈபில் கோபுரத்தின் மேல்நிலையிலிருந்து புலனாகும் பாரீசும்,சீன் நதியும் |
25 ஆண்டுகள் கூட நிலைக்காது என்று மதிப்பிடப்பட்ட இந்தக் கோபுரம் , 120 ஆண்டுகள் கடந்தும் தன் பயணத்தைத் தொடர்ந்தபபடி... மனிதக் கணிப்புக்களின் துல்லியமின்மையைப் பறை சாற்றிக் கொண்டு, உலக வரலாற்றின் சில நிகழ்வுகளுக்கு மௌன சாட்சியாய் நின்று கொண்டிருக்கிறது.
பின் குறிப்பு;
(ஈபிலை ஏலம் விட்ட கதை)
ஈபில் கோபுரத்தைப் பார்த்து முடித்து விட்டுத் திரும்புகையில் அதைப்
பற்றிய சுவாரசியமான (உறுதிப்படுத்தப்படாத!?) தகவல் ஒன்றை எங்கள் சுற்றுலா வழிகாட்டி எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
1960ஆம் ஆண்டு வாக்கில் , ஈபில் கோபுரம் தகர்க்கப்பட்டு , அதன் பழைய இரும்புத் துண்டுகள் ஏலம் விடப்படவிருக்கின்றன என்று மோசடிப் பேர்வழி ஒருவன் பொய்யான ஒரு டெண்டரை நிஜம் போலவே உருவாக்கி விட,அதை நம்பிய ஒரு பணக்கார வியாபாரி ,அதை மதிப்பீடு செய்து ஏலத்தில் எடுப்பதற்காக ஒரு பொறியாளரையே அழைத்துக்கொண்டு வந்து விட்டார்.காவல் துறை வந்து சுற்றி வளைத்த பிறகு சாயம் வெளுத்தாலும், அந்த ஏமாற்றுக்காரன் ஆறேழு ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கை வரிசையைக் காட்டத் தவறவில்லை.
ரஜினியும்,சுருளிராஜனுமாகச் சேர்ந்து கொண்டு தங்களுக்குச் சொந்தமில்லாத வீட்டைச் சாமர்த்தியமாக விலை பேசி முடிக்கும் மகேந்திரனின் ‘ஜானி’ திரைப்படக் காட்சி,ஒரு கணம் மனதுக்குள் வந்து போயிற்று.
ஏமாறுவதும்..ஏமாற்றுவதும் உலகத்தின் ஏகபோக உரிமை !
ஈபில் கோபுரம் மட்டும் அதிலிருந்து தப்பித்து விட முடியுமா என்ன?
புகைப்படங்கள்;
முதல் ஒரு படம் தவிரப்பிற...ஐரோப்பியப் பயணத்தின்போது,பதிவர் எடுத்தவை
5 கருத்துகள் :
உங்க அனுபவமும், உங்க விமர்சனமும் மிகவும் நன்றாக இருக்கிறது அக்கா! மிகவும் ரசித்துப் படித்தேன். வாழ்த்துக்கள்!
அருமையாக சொல்லியிருக்கீங்க.
அக்கா!
இதைப் பாரிசின் அடையாளமென்பதிலும் பிரான்சின் அடையாளம் என்பதே பொருத்தம். இந்தியாவுக்கு தாஸ் மகால் போல்.
இதை உலக வர்த்தகக் கண்காட்சிக்காக அமைத்ததாகவே அறிந்தேன். பிரன்சுப் புரட்சியின் நூற்றாண்டையோட்டியுமென்பது புதிய செய்தி!
இதை அமைத்த ஈபிலுக்கு புள்ளிகள் பற்றாமையால்
பாரிஸ் பொறியியல் கல்லூரியில் இடமின்றி சார்ஸ்பூக் கல்லூரியில் படித்துப் பொறியியலாளரானாராம்.
இவரே நியோர்க் சுதந்திரச் சிலையை உருவாக்கியவர்
இவருக்கு எதையுமே சிறிதாகச் செய்யத் தெரியாதென நகைச்சுவையாகக் கூறுவர்.
இருள் சூழ்ந்தபின் மணிக்கொரு தடவை சுமார் 5 நிமிடங்கள் பளிச்சிடும் மின் விளக்கின் மினுமினுப்பில் ஒளிரும்.
பிரான்சின் தொலைக்காட்சி, வானொலி, தொலைபேசி மின்காந்த அலைகள் யாவும் இக்கோபுர உச்சியில் இருந்தே பரப்பப்படுகிறது.
இத்துடன் வரும் தொடுப்பில் இதன் அழகை ரசியுங்கள்.
http://www.photojpl.com/under-the-eiffel-tower-in-360-photo/-/VYgGh9fNbR/
படங்களுடனான பகிர்வு சுவாரஸ்யம்.
//எனது ஐரோப்பியச் சுற்றுலாவின்போது(ஆகஸ்ட்2009),பாரீஸில் தங்கியிருந்த மூன்று நாட்களில்- டிஸ்னியில் கழித்த ஒரு நாள் தவிரப் பிற இரண்டு நாட்களிலும் ஈபிலுக்கு அருகே சென்று கொண்டேதான் இருந்தோம்;முதல் நாள் மதியத்தின்
படகுப் பயணம் தொடங்கியது ஈபிலின் அடியிலிருந்துதான்; அன்றிரவு பாரீஸின் இரவுத் தோற்றங்களைக் காணச் சென்றபோது பத்து மணி அளவில்,ஈபில் கோபுரத்தைத் தகதகக்கச் செய்யும் வாண வேடிக்கையையும் அதைக் காண்பதற்காகவே -குறிப்பிட்ட அந்த நேரத்துக்காகவே கூடியிருந்த மக்கள் திரளையும் காண முடிந்தது;
ஆனாலும் அப்போதெல்லாம் கூட என் மனதில் ஒரு அசைவையும் ஏற்படுத்தாத இக் கோபுரம், மூன்றாம் நாள் மதியம் , கண்ணாடிக் கூண்டாலான மின் தூக்கியில் கோபுரத்தின் மூன்றாம் நிலைவரை 900 அடிக்கு மேற்பட்ட உயரம் வரை சென்றபோது - அதன் உறுதியான கட்டமைப்பையும்,அதன் பின்னணியில் இருந்த உரமான உழைப்பையும் கண்டு நெகிழ்ந்து கசிந்தது;புறப்பார்வையில் - மேலோட்டமாக ஒன்றை எடைபோடுவது மிக மிக எளிது,ஆனால்....அதை உழைத்து உருவாக்குவதல்லவா உன்னதம் என்பதை எனக்கு உணர்த்திக் காட்டியது அந்த ‘லிப்ட்’ பயணம்// நீங்கள் சென்று வந்த பிறகு இரண்டு மாதம் சென்று அக்டோபரில் நான் இல்லத்தினரோடு அங்கு சென்றேன். இனிமையாக அமைந்த அந்த பயணத்தின் நினைவை தங்கள் பதிவு மீட்டுத் தந்திருக்கிறது. நன்றி.
கருத்துரையிடுக