துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

30.10.14

வேர்ப்பலா...கிளைப்பலா


[சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-தொடர்]

மலை சார்ந்த குறிஞ்சிநிலப்பகுதி , பலவகையான பலாக்களின் தாய்வீடு.
 மர உச்சியிலிருந்து மிகச் சிறிய கிளையில் தொங்கும் பலாப்பழங்களும் அங்கே உண்டு. மரத்தின் அடித் தூரில் மண்ணில் கிடந்தபடி பழுத்துக் கிடக்கும் வேர்ப்பலாக்களையும் அங்கே பார்க்க முடியும்.
பலாவின் வெவ்வேறு ரகங்களை வெறுமே உண்டு ரசிப்பதோடு ஒரு கவிஞனின் உள்ளம் நிறைவு பெற்று விடுவதில்லை. தன் கவிதையின் சாரத்தையே வேறுபட்ட அந்தப் பலாக் கனிகளுக்குள் பொருத்திப் பார்க்கத் துடிக்கிறது அவன் நெஞ்சம்.

தனது மலை நாட்டுக்குப் பக்கத்திலுள்ளமற்றொரு மலை நாட்டுக்காரனைக் காதலிக்கிறாள் ஒரு தலைவி.
இருவர் உள்ளங்களும் முழுமையாகக் கலந்து நெருங்கிய பிறகும் திருமணத்தை மட்டும் விரைவாகப் பேசி முடிக்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறான் தலைவன்.
அவனை விரைவுபடுத்துவதற்காக ஓர் உத்தியைக் கையாளுகிறாள் தோழி.

தலைவனின் நாடு,தலைவியின் ஊர் இரண்டிலுமே பலாக்கள் உண்டென்றபோதும், தலைவன் நாட்டிலுள்ள கனிகள் பெரும்பாலும் வேரில் பழுப்பவை ; மேலும் அந்தக் கனி மரங்களைச் சுற்றிலும் மூங்கிலால் செய்யப்பட்ட படல் /வேலி வேறு போடப்பட்டிருக்கிறது.

தலைவியின் ஊரில் பழுக்கும் பலவுகளோ கொம்பில் பழுப்பவை ; அந்த மரங்களுக்கு வேலிகளும் இல்லை.
சிறுகோட்டுப் பெரும்பழம்

இந்த வேறுபாட்டை எடுத்துக் காட்டி ஓர் உண்மையை அவனுக்குப் புரிய வைக்க முயல்கிறாள் தோழி.
தலைவியின் உள்ளம் ....உயிர் ஆகியவை , அவள் கொண்டிருக்கும் மிகப் பெரிய காதலின் பாரம் தாங்காமல்....சிறியதொரு கிளையில் தொங்கும் பெரும்பழம் போலத்துடித்துக் கொண்டிருக்கின்றன. எந்த வினாடியும் கிளை இற்றுப் போய்ப் பழம் விழுந்து விடலாம் என்பது போலக் காதலின் வேதனையும்  அவளை மாய்த்து விடக் கூடும்.
மேலும் அவள் நாட்டுப் பலவுக்கு வேலியில்லை என்பதால் வேறு எவராவது அவளைத் திருமணம் என்ற பெயரில் கவர்ந்து செல்லவும் வாய்ப்பிருக்கிறது என்ற குறிப்பான ஒரு பொருளையும் இதற்குள் பொதிந்து வைக்கிறாள் தோழி.


தலைவனோ வேர்ப்பலாவுக்கேபழகிப் போனவன் ; அது கிளையிலிருந்து விழும் சேதாரம் பற்றி அவனுக்கு அதிகம் தெரியாது.
அத்தோடு அவன் நாட்டுப் பலாவுக்கு மூங்கில் வேலியும் கூடவே இருப்பதால் அதைப் பிறர் கவர்ந்து செல்லும் அபாயம் பற்றியும் அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இக்கருத்தை வைத்தே அவனைத் திருமணத்துக்கு விரைவில் ஆயத்தமாகும்படி தூண்டுகிறது கபிலரின் குறுந்தொகைப்பாடல்.
 ''மூங்கிலை வேலியாகக் கொண்ட வேர்ப் பலாக்கள் பழுக்கும் சாரல் நாடனே
  சற்று விழிப்பாய் இருந்து கொள் !
  நடக்கப் போவது என்னவென்று எவருக்குத் தெரியும் ?
  மலைச் சாரலிலுள்ள பலா மரங்களில்
  சின்னஞ்சிறு கொம்புகளில் பெரிய பெரிய பழங்கள் தொங்கியபடி
  எப்போது விழுமோ என ஊசலாடிக் கொண்டிருக்கின்றன
  அது போலத்தான் உன் தலைவியும்....
  சிறு கோட்டுப் பெரும்பழம் போல
  அவள் உயிர் மிகச் சிறியது...
  ஆனால் அவள் உன் மேல் கொண்டுள்ள அன்போ மிகப் பெரிது’


 ‘’வேரல் வேலி வேர்க்கோட்பலவின் 
    சாரல் நாட செவ்வியை ஆகுமதி
    யாரதறிந்திசினோரே சாரற்
    சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு
    இவள் உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே’’
என்னும் இச் சிறிய பாடலுக்குள் இயற்கையோடு ஒருங்கிணைத்தபடி வாழ்வியலையே கற்பித்துவிடுகிறான் புலவன்.


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....