துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

29.5.20

யாதுமாகி-ஒரு வாசகப்பார்வை

யாதுமாகி - எம்.ஏ.சுசீலா
டி என் ரஞ்சித் குமாரின் முகநூல் பதிவிலிருந்து..
"Marriage can wait, education cannot... A society has no chance of success if its women are uneducated..."
~A Thousand Splendid Suns~Khaled Hosseini.
ஒரு புத்தகத்தை வாசித்து முடித்து அதைப் பற்றி எழுத சிறிது அவகாசம் எடுத்துக் கொள்ளும் போது வாசிப்பின் போது உணர்ந்திராத அதன் நீள அகல ஆழங்களை கண்டு கொள்ள முடிகிறது. சில சமயங்களில் வாசிப்பனுபவத்தை சொந்த அனுபவங்களில் அறிந்தவற்றோடு பொருத்திக் கொள்ள மனதிற்கு அளிக்கும் கனவுநிலைத் துயில் தான் அந்த இடைவெளி. சில படைப்புகளை வாசித்த உடன் அதுபற்றிய அனுபவங்களைப் பகிர்வதை, குறிப்பிட்ட அந்தப் படைப்பின் மைய இழையோடு சம்பத்தப்பட்ட ஓர் தருணப்பொறி சிமிட்டல் புத்தகத்திற்கு வெளியிலிருந்து அகப்படும் வரை ஒத்திப்போடுவது என் வழக்கமாகிப் போனது. அந்தந் தருணப்பொறி சிமிட்டலிலிருந்து நூல் பிடித்து வாசிப்பனுபவ நினைவுக்குள் பின்னகர்கையில் நூலின் கதையடக்கத்தின் தோற்றமும் காட்சிக் கோணங்களும் வேறு பல கற்பிதங்களையும் கேள்விகளையும் மனதுக்குள் விதைப்பதை உணர முடிகிறது.
அதன்படி மூன்று நாட்களுக்கு முன்பாகவே நிறைவு செய்யப்பட்ட எம்.ஏ.சுசீலா அம்மாவின் யாதுமாகி புத்தகம் பற்றி இன்று பகிர்ந்து கொள்ளத் தூண்டியது சமீபத்தில், கண் முன்னால் வந்து விழுந்த A Thousand Splendid Suns நாவலில் இடம்பெறும் மேலே குறிப்பிடப்பட்ட வாசகமே.
தஸ்தயேவ்ஸ்கியின் பல பெரும்படைப்புகளை தமிழுக்கு கொண்டு வந்து சேர்ந்த பெருமைக்குரியவராக பரவலாக நன்கு அறியப்பட்ட சுசீலா அம்மா அவர்களின் சொந்தப் படைப்பே யாதுமாகி என்னும் இந்நூல்.
கதையின் மையக்கதாபாத்திரம் தேவி. 1930 களில் பள்ளி கல்லூரி நாட்களான தேவியின் இளம்பருவமும், 1960 இல் அவரது பள்ளியின் தலைமையாசிரியராக இருந்து வந்த போதான அவரது முதுமைப் பருவமும் அத்யாயத்திற்கு அத்யாயம் முன்னும் பின்னும் சென்று கதை சொல்லப்படுகிறது.
கல்வி மறுக்கப்படும் பெண்ணினத்தில் பிறந்து குழந்தைமை அகலாத வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்ட தேவியின் அந்த முகமறியாத கணவன் ஒரு விபத்தில் இறந்து போய்விட திருமணம் பற்றியோ கணவன் பந்தம் பற்றியோ பருவ ரீதியாக ஏதும் புரிந்திராத அவள் துளியும் கலங்காமல் இருக்கிறாள். பின் வரும் காலம் முழுவதும் கணவனை இழந்தவளாக உறவுகளால் பாவிக்கப்பட இருக்கும் சூழ்நிலை பற்றிய கவலையின்றி அதேசமயம் தன்னால் இனி சுதந்திரமாக கல்வி கற்க இயலும் என்ற சந்தர்ப்பம் வாய்க்கப்பெற்றதை எண்ணி மகிழ்ச்சியடைகிறாள்.
கணவனின் பேச்சுக்கு மறுபேச்சு பேசும் தைரியம் இல்லாத அன்னம் தேவியின் தாய், கல்வியறிவு அற்றவள். சிறுவயதிலேயே மகளின் புத்திக்கூர்மையை மெச்சும் தேவியின் தந்தை சாம்பசிவம் சொந்தங்களின் முதுகுக்குப் பின்புறம் பேசும் அவதூறுகளைப் பொருட்படுத்தாத முற்போக்குச் சிந்தனை உடையவர். தேவியின் கல்வி கற்கும் விருப்பத்திற்கு ஆதார ஊன்றுகோலாக இருக்கிறார் சாம்பசிவம். தேவு கல்லூரிப் படிப்பிலிருக்கும் சமயம் சாம்பசிவம் இறந்து விட அன்னம் மற்றும் தேவியின் வாழ்க்கை முதல் மீளமுடியாத இக்கட்டுக்குள் அகப்படுகிறது. எதிர்கொண்டே ஆகவேண்டிய தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தவாறு நெகிழ்ந்து கொடுத்தும் அதேசமயம் எண்ணத்தில் உள்ளூர உறுதியாகவும் இருக்கும் தாய் அன்னம் தேவியை அவள் தன் சொந்தக் காலில் வேரூன்றி நிற்கும் வரை உறுதுணையாக இருக்கிறாள்.
உடன்பிறப்புகள் கூட பிரதிபலன் எதிர்பார்த்து தேவியின் கல்வியறிவைப் பயன்படுத்திக் கொள்ள இருக்கும் நிலையில், காந்திய வழியில் செல்லும் சகோதாரனால் சொந்தங்களின் கசப்பான முணுமுணுப்புகளையும் மீறி மறு திருமணம் செய்து வைக்கப்படுகிறாள் தேவி. இராணுவத்தில் பணியாற்றி வரும் கணவனுடனான வாழ்க்கையும் நெடுநாள் நீடிப்பதில்லை. கணவன் திரும்பி வராத நிலையிலும் மகளுக்காக தன் உணர்ச்சியையும் கையறு நிலையையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர் கொள்கிறாள்.
தனிமை விரும்பியான தேவிக்கு இந்த உலகில் இருக்கும் ஆறுதல்கள் இளவயதில் கற்றலின் மீதிருக்கும் தீராத ஆவலும், விதவிதமான பூக்களை ரசிப்பதும், முதுமையில், குழந்தைகளோடு நேரத்தை செலவிடுதலும், கல்வி கற்றலுக்கான வாய்ப்புகள் தடைபட்டு போனவர்களுக்கு உதவுவதும் மட்டுமே. பள்ளியில் தலைமையாசிரியையாக இருந்து வரும் தேவி பள்ளியில் எவ்வளவு கண்டிப்பானவரோ வீட்டில் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும் நேரங்களில் அதற்கு நேர்மாறாக இளகிய மனமும் தாய்மையின் வாஞ்சைக் குணமும் கொண்டவர்.
கதை முழுவதும் தேவியின் ஒரே மகளான சாரு வின் மூலமாக சொல்லப்படுகிறது. தேவியின் அம்மா அன்னம், தேவி, சாரு, சாரு வின் மகள் நீனா என்று நான்கு அடுத்தடுத்த தலைமுறைப் பெண்களின் வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை மையச்சரடாகக் இணைத்துச் செல்கிறது தேவியின் வாழ்க்கைப் பதிவுகள். சாரு வின் நிகழ்கால நினைவுகளின் வழியாக தேவியின் கடந்த காலமும், கடந்த காலத்தின் பாதிப்புகளாக நிகழ் கால முரண் மாற்றங்களும் ஒன்றை ஒன்று தொட்டு இணைந்து முழு வடிவான வாழ்க்கைச் சித்திரம் உருவாகிறது.
கதையில் வரும் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் தேவியுடன் விடுதியில் தங்கிப் படிக்கும் சில்வியா. சில்வியா மற்றும் தேவிக்கு இடையே உருவாகும் நட்பு கதையின் வலுவுக்கு ஆதாரமாக இருக்கிறது, குறிப்பாக தன் சொந்த வாழ்க்கை பற்றி தேவி பெரிதாக யாரிடமும் அவ்வளவாக பகிர்ந்து கொள்ளாத போது கதையச் சொல்லும் அவளது மகளான சாரு வுக்கு தன் அம்மாவின் சிநேகிதியான சில்வியாவிடமிருந்தே அவர்களின் இளவயது நாட்களின் அனுபவங்களைக் கேட்டறிய முடிகிறது. முதுமையில் தேவியின் உடல் நிலை எதிர்கொள்ளும் பகுதியில் அடிக்கடி முதுகு வலி வருவதாக சொல்லும் என் அம்மாவின் வலி எப்படிப்பட்ட வேதனையைத் தரக்கூடியதாக இருந்திருக்கும் என்று புரிய வைத்து என்னைத் துவண்டுப் போகச் செய்தது.
தன் தாயை மையக்கதாபாத்திரமாக்கி, அவர் தன் அர்த்தம் செறிந்த வாழ்க்கையின் அடுத்தடுத்த நிலைகளில் எதிர்கொண்ட இடர்களையும், துணிச்சலாக அதேசமயம் எள்ளளவும் எவருக்கும் இடையூறின்றி அவற்றைக் கடந்து வந்த நிகழ்வுகளை பதிவு செய்யும் நோக்கிலும், தனக்கு மட்டுமல்லாமல் தன் அண்டை மனிதர்களிடேயும் பாரபட்சமின்றி ஒரு அன்னையைப் போல உள்ளார்ந்த பரிவுடனும் கண்டிப்பான அக்கறையுடனும் வாழ்க்கையைக் கடந்து வந்து பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளி ஏற்றச் செய்ததற்கு நன்றிக்கடனாகவும் இந்நாவலைப் படைத்துள்ளார் சுசீலா அம்மா. பெண் கதாபாத்திரங்களில் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள் சிங்கிஸ் ஐத்மாத்தவின் கதைகளில் வரும் பெண்கள் தான். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்கொள்ளும் சோதனைகளை ஆரவாரமற்ற நிதானத்துடனும் எதிர்காலம் மீதான நம்பிக்கையுடனும் பக்குவமாக ஒவ்வொரு செயலையும் தீர்க்கமாக முடிவெடுத்து செயல்படுபவர்கள் அவர்கள். கதைகளில் மட்டுமே அதுபோன்ற அம்சங்கள் பொருந்தியதாக இருக்கக்கூடும் என்று நினைத்திருந்த வெற்றிடம் (அல்லது யதார்த்தத்தில் இன்னும் கண்டு கொள்ளாத) யாதுமாகி தேவியின் மூலம் பூர்த்தி செய்யப்பட்டதை உணர முடிகிறது.

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....