துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

16.8.24

வசந்த காலத்து உணவுப்பட்டியல்-மொழியாக்கச் சிறுகதை

வசந்த காலத்து உணவுப்பட்டியல்

சொல்வனம் 324 ஆம் இதழில் வெளிவந்திருக்கும் என் மொழியாக்கச் சிறுகதை.

https://solvanam.com/2024/07/29/%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/

மூலம் : ஓ ஹென்றி

தமிழாக்கம்: எம் ஏ சுசீலா



அது மார்ச் மாதத்தின் ஒரு நாள்.

நீங்கள் கதை எழுதுவதாக இருந்தால் ஒருபோதும் அதை இப்படித் தொடங்க வேண்டாம். இதை விடப் படுமோசமான ஒரு தொடக்கம் இருக்க முடியாது. இதில் கற்பனை வளம் இல்லை. மொண்ணையாக, வறட்சியாக…,வெற்று வேட்டாக , உள்ளீடற்றதாக இருக்கிறது. ஆனாலும் கூடக் குறிப்பிட்ட இந்த சந்தர்ப்பத்தைப் பொறுத்த வரை இது அனுமதிக்கப்படக்கூடியதுதான். இதைத் தொடர்ந்து பின்னால் வரும் பத்திதான் கதையின் தொடக்கமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் போதிய வகையில் தயாரிப்பில்லாத வாசகர்களின் முன்ன்னிலையில் பெரிதும் மிகைப்படுத்தப்பட்டதும், பொருட்படுத்தத் தேவையில்லாததுமான அதனை வெளிப்படுத்த முடியாது என்பதால் இப்படி ஒரு தொடக்கம்.

சாரா, தனக்கு முன்னால் இருந்த உணவுப்பட்டியலைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள். நியூயார்க் நகரத்தில் வாழும் ஒரு பெண் மெனு கார்டைப் பார்த்துக் கண்ணீர் விடுவதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். ஒருக்கால் அந்தப் பட்டியலில் நண்டுகளுக்கு இடம் இல்லாமல் இருந்திருக்கலாம்; ஈஸ்டர் தவக்காலம் என்பதால் ஐஸ்கிரீம் சாப்பிடக்கூடாது என்று அவள் உறுதி எடுத்திருக்கலாம்; ஒருவேளை அவள் வெங்காயத்துக்கு ஆர்டர் கொடுத்திருக்கலாம், அல்லது அப்போதுதான் நடிகர் ஹேக்கட்டின் மதிய வேளைத்திரைக்காட்சியிலிருந்து அவள் திரும்பி வந்திருக்கலாம்,இப்படிப் பல வகையாக நீங்கள் ஊகம் செய்ய இடமிருந்தாலும் அவை எல்லாமே தவறானவைதான்.

தயவு செய்து கதை மேலே செல்ல அனுமதியுங்கள்!

இந்த உலகமே ஒரு சிப்பியைப்போன்றதுதான் என்றும் அதைத் தனது வாளால் திறந்து விட முடியும் என்றும் அறிவித்தவர், தன் தகுதிக்கு மீறிய பெரிய பாராட்டைப் பெற்றது உண்மைதான். வாளால் சிப்பியைத் திறப்பது கடினம் அல்ல. ஆனால் யாராவது ஒரு தட்டச்சுப்பொறியைக் கொண்டு பூமிப்பந்தைத் திறக்க முயற்சிப்பதை நீங்கள் எப்போதாவது கவனித்தீர்களா? அந்த வழியில் ஒரு டஜன் முறை அது திறக்கப்படும் வரை காத்திருக்க விரும்புகிறீர்களா?

கையாளக்கடினமான தன் ஆயுதத்தால் அந்தச் சிப்பியைப் பிளந்து உள்ளே இருக்கும் குளிர்ச்சியும் ஈரப்பதமுமான உலகத்தைச் சிறிது சிறிதாகக் குடையத் தொடங்கியிருந்தாள் சாரா. சாராவுக்கு சுருக்கெழுத்து அதிகம் வராது. தொழிற்கல்லூரியில் பயிலும் வாய்ப்பு நழுவிப்போயிருக்காவிட்டால் அவள் சுருக்கெழுத்தில் பட்டம் பெற்றிருப்பாள். சுருக்கெழுத்து தெரியாதென்பதால் பிரகாசமான வேலை வாய்ப்புக்களை அவளால் பெற முடியவில்லை. அதனால் சுயேச்சையாகத் தட்டச்சு செய்யும் பணியை அவள் மேற்கொண்டு வந்தாள். பிரதி எடுக்கும் விதவிதமான வேலைகளைத் தேடிக் கண்டுபிடித்து அவள் செய்து வந்தாள். இந்த உலகத்தோடு சாரா செய்து வந்த யுத்தத்தில் மிகவும் புத்திசாலித்தனமானதும், அவளது உச்சபட்ச சாதனை என்று சொல்லக்கூடியதும் ஷூலென்பர்க் ‘வீட்டு உணவ’கத்தோடு அவள் செய்து கொண்டிருந்த ஒப்பந்தம்தான். அவள் குடியிருந்த அறை இருந்த பழைய காலத்து சிவப்புக் கட்டிடத்துக்கு அடுத்தாற்போலத்தான் அந்த உணவகமும் இருந்தது. நாற்பது செண்டுக்கு ஐந்து வகையான பதார்த்தங்களைப் பரிமாறும் உணவு மேசையில் உட்கார்ந்து ஒரு நாள் மாலை சாப்பிட்டு முடித்த சாரா, கையோடு அந்த உணவுப்பட்டியல் அட்டையையும் எடுத்துச் சென்று விட்டாள். ஆங்கிலமா,ஜெர்மனா என்று வேறுபடுத்திப் பார்க்க முடியாத ஒரு மொழியில், படிக்கச் சகிக்காத முறையில் அந்தப்பட்டியல் எழுதப்பட்டிருந்தது. பட்டியலின் வரிசைமுறையும் குளறுபடியாகத்தான் இருந்தது. நீங்கள் சிறிது கவனமாக இல்லையென்றால் பல்குத்தும் குச்சியிலும்,அரிசிக்கஞ்சியிலும் தொடங்கி சூப்பில் முடிக்கும்படி அதை வாசிக்க வேண்டி வரும். அதிலிருந்த வார நாட்கள் வரிசைப்படுத்தப்பட்டிருந்ததும் அப்படித்தான்.



மறுநாளே உணவு வகைகளை வரிசைப்படுத்தி அழகாகத் தட்டச்சு செய்து ஒரு சீரான மெனு கார்டைத் தயாரித்துக்கொண்டு போய் ஷூலென்பர்கிடம் காட்டினாள் சாரா. சாப்பிட வருபவர்களை ஈர்க்கும் வகையில் சரியான தகுந்த தலைப்புக்களுக்கு அடியில் உணவுப்பொருட்களை அவள் தட்டச்சு செய்திருந்தாள். பசியைத் தூண்டுவதற்கான தொடக்கச்சிற்றுணவுகள் தொடங்கி ‘சாப்பிட வருபவர்கள் மறந்து போய் விட்டு விட்டுப் போய்விடும் குடைகளுக்கும்,கோட்டுகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல’ என்ற வாசகம் வரை எல்லாவற்றையும் சரிவர வகைப்படுத்தி அமைத்திருந்தாள் அவள். அந்தக்கணத்திலேயே அவளிடம் அபிமானம் கொண்ட பிரஜையாகி விட்டார் ஷூலென்பர்க். அங்கிருந்து புறப்படும் முன்பு அவராகவே தன்னுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளவும் வைத்து விட்டாள் அவள் . அந்த உணவகத்தில் இருந்த இருபத்தோரு மேசைகளுக்கும் உரிய மெனு கார்டுகளை அவள் தினந்தோறும் தட்டச்சு செய்து கொடுக்க வேண்டும். காலை , மதியம் ,இரவு என ஒவ்வொரு வேளைக்கும் தனியே அவற்றைத் தயாரிக்க வேண்டும். உணவுவகைகளில் மாற்றம் செய்யும்போதும் அதற்கேற்ப அடிக்கடி நேர்த்தியாகத் தட்டச்சு செய்து தந்து விட வேண்டும். இதற்கு பதிலாக ஒரு நாளைக்குரிய மூன்று வேளை உணவுகளையும் ஷூலென்பர்க் ஒரு பணியாள் மூலமோ சர்வர் மூலமோ சாராவுக்கு தினமும் கொடுத்தனுப்பி விட வேண்டும். மறுநாள் ஷூலென்பர்க் வாடிக்கையாளர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ அந்த மெனு கார்டின் வரைவையும் தட்டச்சு செய்வதற்காக அவளுக்கு அனுப்பி வைத்து விட வேண்டும்.

இந்த ஒப்பந்தம் இரண்டு தரப்பினருக்குமே பரஸ்பரம் வசதியாக இருந்தது. தாங்கள் என்ன உணவைச் சாப்பிடுகிறோம் என்பதே தெரியாமல் சில சமயம் குழம்பிக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு அதன் பெயர் என்ன என்பதையாவது தெரிந்து கொள்ள முடிந்தது. சாராவுக்கு மிகவும் குளிரான மந்தமான காலங்களிலும் கூட உணவு கிடைத்தது. அவளைப் பொறுத்தவரையிலும் அது மிகவும் முக்கியமானது.

பிறகு சிறிது காலம் போனபின் வசந்தகாலம் வந்து விட்டதாக நாட்காட்டி பொய் சொல்லிற்று. வசந்தம் வரும்போதுதான் வரும். குறுக்கும் நெடுக்குமாக இருந்த நகர வீதிகளில் ஜனவரி மாதப்பனிக்கட்டிகள் இன்னும் கூட அப்படியே அசையாமல் உறைந்து கிடந்தன. டிசம்பர் மாதத்து மனநிலையைத் தெளிவாகப் பிரதிபலிப்பது போல் அந்தப்பழைய காலத்து வசந்த காலங்களைப்பற்றி இசைக்கருவிகள் கொட்டி முழங்கிக்கொண்டிருந்தன. ஈஸ்டருக்குரிய உடைகள் வாங்குவதற்காகான சிறு சேமிப்பை மக்கள் தொடங்கியிருந்தார்கள். காவலாளிகள் நீராவியை அணைத்து விட்டார்கள். ஒருபக்கம் இதெல்லாம் நடந்து கொண்டிருந்தாலும் ஊரென்னவோ இன்னும் கூடக் குளிர்காலத்தின் பிடியில்தான் இருந்தது.

ஒரு மதிய வேளையில் தன் நேர்த்தியான படுக்கையறையில் குளிரால் நடுங்கியபடி இருந்தாள் சாரா. வீட்டை சூடேற்றியாயிற்று, எல்லாவற்றையும் துல்லியமாய் சுத்தம் செய்து எல்லா வசதிகளும் செய்து கொண்டாயிற்று, ஷூலென்பர்க் உணவகத்துக்கான மெனு கார்ட் தயாரிப்பதைத் தவிர சாராவுக்கு இப்போது வேறெந்த வேலையும் இல்லை. மெதுவாக முனகியபடி அசைந்து கொண்டிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள் சாரா. ‘ சாரா இதோ பார் வசந்தம்…, வசந்தம் வந்து விட்டேன் பார், என் கண்கள் அதைக்காட்டவில்லையா உனக்கு? நீ நல்ல அழகான வடிவோடு இருக்கிறாய் சாரா! வசந்த காலத்துக்கு ஏற்ற வடிவம், ஆனால்…ஏன் இவ்வளவு சோகத்தோடு ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறாய்’ என்று சுவரில் இருந்த நாட்காட்டி அவளைப்பார்த்துக் கரைந்து கொண்டிருந்தது.

சாராவின் அறை வீட்டின் பின் பகுதியில் இருந்தது. அங்கிருந்து அவளது ஜன்னல் வழி பார்த்தால் அடுத்த தெருவில் இருக்கும் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையின் ஜன்னல்கள் இல்லாத செங்கல் சுவர் கண்ணில் படும். அந்தச் சுவர் மிகத் தெளிவாக, படிகம் போல் இருந்தது. செர்ரி மரங்களும் உயரமான எல்ம் மரங்களும் அடர்ந்து பரவி நிழல் தந்து கொண்டிருக்கும் புல்வெளிபோர்த்திய தெருவையும் குனிந்து பார்ப்பாள் சாரா. ராஸ்ப்பெரி புதர்களும், செரோகி ரோஜா மலர்ச்செடிகளும் அந்தத்தெருவுக்குக் கரை கட்டியது போல் இருக்கும்.

வசந்தத்தின் வரவைக் குறித்துக் கட்டியம் கூறும் முன்னோட்டங்கள் கண்ணாலும் காதாலும் நுகர முடியாத அளவுக்கு மிகவும் நுட்பமானவை. அவற்றுள் சில, பூக்கும் குரோக்கஸாகவோ , சிறு தண்டுகளைத் துளிர்க்க வைக்கும் டாக்வுட் மரங்களாகவோ அல்லது நீலப்பறவையின் குரலாகவோ இருக்கலாம் . பசுமையின்றி வறண்டு கிடக்கும் பூமிக்கு வசந்தத்தை வரவேற்றபடி, அதன் வருகையை நினைவூட்டியபடி கைகுலுக்கி விடைபெறும் மர கோதுமையாகவோ சிப்பியாகவோ கூட இருக்கலாம். ஆனால் பழமையான பூமியின் மிக விருப்பமான உறவினருக்கு – அவர்களாகத் தேர்ந்து கொள்ளும் வரை மாற்றாந்தாய் மக்கள் என்று யாருமில்லை என்பதை உணர்த்தும் வகையில் அவரது புதிய மணமகளிடமிருந்து நேரடியாக, இனிமையான செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

போன கோடை காலத்தில் கிராமத்துக்குச் சென்றிருந்தபோது அங்கிருந்த ஒரு விவசாயியின் மீது காதல் வயப்பட்டாள் சாரா. ( நீங்கள் கதை எழுதும்போது இப்படி ஒரு நாளும் பின்னோக்கிப் போகாதீர்கள். அது கலை வடிவத்தை சிதைத்து ஆர்வத்தையும் குலைத்து விடுகிறது, கதை தன் போக்கில் வளர்ந்து கொண்டு செல்லட்டும்)

சாரா சன்னிப்ரூக் பண்ணையில் இரண்டு வாரம் தங்கியிருந்தாள்.அப்போது ஃப்ராங்க்லின் என்ற வயதான விவசாயியின் மகன் வால்டரைக் காதலிக்கக்கற்றுக் கொண்டாள். பொதுவாக விவசாயிகள் காதலிப்பார்கள், கல்யாணமும் செய்து கொள்வார்கள். ஆனால் குறுகிய காலத்திலேயே அது வறண்டு போய்விடும். ஆனால் இளைஞனான வால்டர் ஃப்ராங்க்லின், ஒரு நவீன விவசாயி. அவனது மாட்டுப்பண்ணையில் ஒரு தொலைபேசி இருந்தது. தேய்பிறைக்காலத்தில் பயிரிடப்படும் உருளைக்கிழங்குகள் மீது கனடாவின் அடுத்த ஆண்டு கோதுமை விளைச்சல் எப்படிப்பட்ட தாக்கத்தைச் செலுத்தும் என்பதைக்கூட அவனால் துல்லியமாக சொல்ல முடியும்.

ராஸ்ப்பரி புதர்கள் மண்டிய நிழல் அடர்ந்த பகுதி ஒன்றிலேதான் வால்டர் அவள் மனதைக்கவர்ந்தான், அவளை வென்றான். அவர்கள் இருவருமாய்ச் சேர்ந்து அமர்ந்து அவள் கூந்தலில் சூடுவதற்கான டேண்டலைன் மலர்களைத் தொடுத்தார்கள். அந்த மஞ்சள் நிற மலர்கள் அவளது பழுப்பு நிற உடையில் எவ்வளவு எடுப்பாகத் தோன்றுகின்றன என்று வஞ்சகமில்லாமல் புகழ்ந்து தள்ளினான் அவன். அவள் தன் தலைக்கிரீடத்தை அங்கேயே விட்டு விட்டுக் கைகளில் தனது வைக்கோல் தொப்பி ஊசலாட, அங்கிருந்து அகன்றாள்.

வசந்த காலத்தில்- வசந்தத்தின் அறிகுறிகள் தென்படத்தொடங்கிய உடனேயே அவர்களது திருமணம் நிகழும் என்று வால்டர் சொல்லியிருந்தான். சாராவும் தன் தட்டச்சுக்கருவியை எடுத்துக்கொண்டு வேலை செய்வதற்காக நகரத்துக்குத் திரும்பி வந்து விட்டாள்.

அந்த மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகளில் மிதந்து கொண்டிருந்த சாராவை வாசல் கதவை எவரோ தட்டும் ஓசை கலைத்துப்போட்டது. தட்டச்சு செய்வதற்காக மறுநாளின் மெனு கார்டை எடுத்து வந்திருந்தான் ஷூலென்பர்க் பணியாளன். ஷூலென்பர்கின் கோணல் மாணலான கையெழுத்தில் பென்சிலால் எழுதப்பட்டிருந்த வரைவு அது.

சாரா டைப்ரைட்டரில் உட்கார்ந்து அதன் உருளைகளுக்கு இடையே ஒரு அட்டையை செருகினாள். பொதுவாகவே அவள் விரைவாகத் தட்டச்சு செய்பவள். ஒன்றரை மணி நேரத்தில் இருபத்தோரு மெனுகார்டுகளும் தட்டச்சு செய்யப்பட்டுத் தயாராகி விட்டன.

இன்றைய உணவுப்பட்டியலில் வழக்கத்தை விட அதிக மாற்றங்கள் இருந்தன. சூப் வகைகள் மிதமானவையாக இருந்தன. பட்டியலிலிருந் து போர்க் நீக்கப்பட்டிருந்தது. வறுத்த உணவுகளில் ரஷ்ய டர்னிப்புக்கு மட்டுமே இடம் இருந்தது. மெனுகார்ட், முழுக்க முழுக்க

வசந்த காலத்துக்கேற்றபடியே அமைந்திருந்தது.

சமீப காலம் வரை பசுமையான மலைப்பரப்புக்களில் துள்ளி ஓடிக்கொண்டிருந்த ஆட்டுக்குட்டிகள் உணவுக்காகச் சுரண்டப்பட்டு , அவற்றின் களியாட்டத்தை நினைவு கூர்ந்து பெருமைப்படுத்தும் வகையில் மெனு கார்டில் சாஸுடன் இடம் பெற்றிருந்தன. இசைபாடும் சிப்பிகள் ஒரேயடியாய் இல்லாமல் போகவில்லை, ஆனால் அவற்றின் மீது கொண்ட அன்பினால் ஏதோ கொஞ்சம் மட்டுமே இருந்தன. வறுக்கும் வாணலிக்கு அதிகம் வேலை இல்லை,அது பிராய்லெர் கம்பிகளுக்குப் பின்னால் பயன்படுத்தப்படாமல் கிடந்தது. ‘ பை’ எனப்படும் உணவு வகைகள் மிக அதிகமாக இருந்தன. செழுமையான புட்டிங் வகைகள் இடம் பெற்றிருக்கவில்லை. மர கோதுமையுடனும் இனிப்பான மேப்பிளுடனும் அலங்காரத்துணி போர்த்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த இறைச்சி வகைகள், மரணத்தை நினைவுபடுத்துவது போல் இருந்தன.

கோடைகாலத்து நீரோடை மீது துள்ளிக்குதித்துக்கொண்டிருக்கும் குட்டிப் பையன்களைப்போல் சாராவின் விரல்கள் தட்டச்சுக்கருவியின் மீது நடனமாடிக்கொண்டிருந்தன. உணவு வகைகளைத் தெளிவாக மனதில் வாங்கிக்கொண்டு ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான இடம் ஒதுக்கியபடி தட்டச்சு செய்தாள் அவள். இனிப்பு வகைகளுக்கு முன்னால் காய்கறிகளின் பட்டியலைச் சேர்த்தாள். காரட்,பட்டாணி, சதாவரிக்கிழங்கு, எப்போதும் கிடைக்கும் உருளைக்கிழங்கு, சோளம், சக்கோடாஷ், லீமா பீன்ஸ், முட்டைக்கோஸ்…இன்னும் இன்னும்..

மெனு கார்டின் மீது கண்ணீர் விட்டாள் சாரா. இதயத்திலிருந்து குமுறி எழுந்த ஆழமான ஆத்ம வேதனை அவள் கண்களில் கண்ணீராய்த் தேங்கி நின்றது. தட்டச்சுக்கருவியின் மீது தலையைக் கவிழ்த்துக்கொண்டாள். அவளது அழுகைக்கும் குமுறலுக்கும் ஏற்றபடி தட்டச்சுப்பொறியின் விசைப்பலகையும் சோகமாக ஓலமிட்டுக் கொண்டிருந்தது.

இரண்டு வாரங்களாக வால்டரிடமிருந்து அவளுக்குக் கடிதம் எதுவும் வரவில்லை. மேலும், உணவுப்பட்டியலின் அடுத்த பொருள் டேண்டலைனாக இருந்தது. டேண்டலைனும், ஏதோ ஒரு வகை முட்டையும். முட்டையைக்கூட விட்டுத் தள்ளி விடலாம். ஆனால் தன் காதல் அரசிக்கு, வருங்கால மணமகளுக்கு எந்தப்பொன்மயமான மலர்களால் வால்டர் மகுடம் சூட்டினானோ அதே டேண்டலைன். அந்தப்பூக்கள் வசந்தத்துக்குக் கட்டியம் கூறுபவை; இப்போதோ அவளது மகிழ்ச்சியான நாட்களை நினைவுபடுத்தியபடி அவை அவளது துயரத்துக்கு மகுடம் சூட்டிக்கொண்டிருந்தன.

மேடம், நீங்கள் இந்த சோதனையை எதிர்கொள்ளும் வரை புன்னகையோடு இருக்க நான் உங்களுக்கு தைரியம் தருகிறேன்: பெர்சியிடம் உங்கள் இதயத்தை அளித்த அந்த இரவில் பெர்சி உங்களுக்காகக் கொண்டு வந்த மரேஷல் நீல் ரோஜாக்கள், ஷூலென்பர்க் உணவு மேசையில் உங்கள் கண்களுக்கு முன்பாக பிரெஞ்சு முறைப்படி அலங்கரிக்கப்பட்டு

சாலட்டாகப் பரிமாறப்படட்டும். தன் காதல் காணிக்கைகள் அவமதிக்கப்படுவதை ஜூலியட் பார்த்திருந்தாலுமே கூட, ஒரு மருந்தகத்தின் துணையோடு உயிர் கொல்லும் மூலிகைகளை நாடி விரைந்து போயிருப்பாள்.

ஆனாலும் கூட இந்த வசந்தம்தான் எப்படிப்பட்ட ஒரு சூனியக்காரி! கல்லாலும் இரும்பாலும் ஆன குளிர் மிகுந்த இந்தப்பெரிய நகரத்தில் ஒரு செய்தி அனுப்பப்பட வேண்டும். கரடுமுரடான வயல் வெளிகளையும், அதன் மீது படிந்திருக்கும் சொரசொரப்பான பச்சை நிறப் போர்வையையும் அங்கு வீசும் மிதமான காற்றையும் தவிர அந்த செய்தியைக் கொண்டு போக வேறு எவரும் இல்லை. சிங்கத்தின் பல் என்று ஃபிரெஞ்சு சமையல்காரர்கள் குறிப்பிடும் டேண்டலைன் அதிருஷ்டத்தின் உண்மையான தூதுவர். பூக்களாய்ப் பூத்துச் சொரியும் வேளையில் , காதலியின் இலேசான பழுப்புக்கலந்த முடியில் மலர்க்கிரீடம் சூட்டத் துணை வந்தபடி அவர் காதலர்களுக்கு உதவுவார். அரும்பாக, முழு மலர்ச்சி அடைந்திராத நிலையில் கொதி நிலைக்குச் சென்று தனது மதிப்புக்குரிய எஜமானியின் வார்த்தையை வழங்குவார்.

சாரா சிறிது சிறிதாகத் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டாள். மெனு கார்டுகளைத் தயாரித்து முடிக்க வேண்டும். ஆனாலும் டேண்டலைன் பற்றிக்கண்ட கனவின் மிக மெல்லிதான பொன்னிழை அவளுக்குள் இன்னும் தங்கியிருந்ததால் தன் எண்ணங்களை அந்த இளம் விவசாயியுடன் கழித்த புல்வெளியில் ஓடவிட்டபடி சிறிது நேரம் ஏதோ அநிச்சையாக டைப் செய்து கொண்டிருந்தாள். ஆனாலும் வெகு விரைவிலேயே அதிலிருந்து தன்னை மீட்டுக்கொண்டு பாறை போன்ற தெருக்களைக்கொண்ட மன்ஹாட்டனுக்குத் திரும்பியபடி தன் தட்டச்சுக்கருவியால் ஓசை எழுப்பத் தொடங்கி விட்டாள். அதுவும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாதவனின் மோட்டார் கார் போல குதித்தோட ஆரம்பித்து விட்டது.

ஆறுமணியளவில் அவளது உணவை எடுத்து வந்து தந்து விட்டு மெனுகார்டுகளை வாங்கிக்கொண்டு சென்றான் பணியாள். சாப்பிட உட்கார்ந்த சாரா டேண்டலைனுடன் வேறு பொருட்களைக்கலந்து தயாரிக்கப்பட்டிருந்த உணவு வகையை ஒரு பெருமூச்சோடு தள்ளி வைத்தாள். பிரகாசமாக மின்னியபடி காதலின் அடையாளமாய்த் திகழ்ந்த மலர் இப்படிக்காய்கறியாய் சுருங்கிப் போய்க் கரிய நிற உணவாக மாறிவிட்டது போல் அவள் கொண்டிருந்த நம்பிக்கைகளும் உதிர்ந்து வாடிப்போய் விட்டன. ஷேக்ஸ்பியர் சொல்வதைப்போல் காதல் என்பது தன்னைத்தானே உண்டுகொள்ளும் போல் இருக்கிறது. ஆனால் இதயத்தில் கொண்ட நேசத்துக்கு வைக்கப்பட்ட ஆன்மீக விருந்தைப்போல அலங்காரமாக அவளுக்கு அணிவிக்கப்பட்ட டேண்டலைன் மலர்களைச் சாப்பிடுவது மட்டும் அவளால் முடியவில்லை.

ஏழரை மணி அளவில் அடுத்த அறையிலிருந்த ஜோடி சத்தம் போட ஆரம்பித்தது. அவளது அறைக்கு மேல் குடியிருந்தவன் தன் புல்லாங்குழலை வாசிக்க ஆரம்பித்தான். நீராவி சற்றே தணிந்திருந்தது. நிலக்கரி ஏற்றிவந்த மூன்று வண்டிகளிலிருந்து பாரம் இறக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஒலிப்பதிவுக்கருவிகள் பொறாமை கொள்ளும் ஒரே ஓசை அதுதான். பின்பக்க வேலியிலிருந்த பூனைகள் தங்கள் பதுங்கு குழிகளுக்குள் முடங்கிக்கொள்ளத் தொடங்கியிருந்தன. தான் வழக்கமாய்ப் படிக்கும் நேரம் அது என்பதை இந்த அடையாளங்களை வைத்து உணர்ந்து கொண்டாள் சாரா. அந்த மாதத்தில் விற்பனையாகாத சிறந்த புத்தகமான ‘தி க்ளோஸ்டர் அண்ட் தி ஹார்த்’ தைப் பிரித்து வைத்துக்கொண்டாள். தன் கால்களைத் தூக்கி டிரங்குப்பெட்டியின் மீது வைத்தபடி ஜெரார்டுடன் சஞ்சரிக்க ஆரம்பித்தாள்.

வாயிற்பக்கத்து அழைப்பு மணி ஒலித்தது. வந்திருப்பது யாரென்று பார்த்தாள் வீட்டின் சொந்தக்காரி. ஜெரார்டையும் டெனிஸையும் ஒரு கரடியோடு மரத்தடியில் விட்டு விட்டு வந்த சாரா , யாரென்று தானும் பார்த்தாள் . ஆமாம்! அவள் இடத்தில் நீங்கள் இருந்திருந்தாலும் அதைத்தான் செய்திருப்பீர்கள்.

கீழ் ஹாலில் ஒரு கனத்த குரல் கேட்கவும் சாரா கதவை நோக்கித் துள்ளிக்குதித்து ஓடினாள். அவள் கையிலிருந்த புத்தகம் தரையில் கிடந்தது. முதல் சுற்று கரடிக்கு வசமாயிற்று.

நீங்கள் ஊகித்தது சரிதான். அவள் மாடிப்படிக்குச் செல்வதற்கும், அவளது காதலனான அந்த விவசாயி படியேறி மேலே வருவதற்கும் சரியாக இருந்தது. மூன்றே தாவலில் மேலே வந்து சேர்ந்த அவன் எதையும் விட்டு வைக்காமல் அவளை அப்படியே அறுவடைசெய்து கொண்டான்.

“ ஏன் நீங்கள் கடிதமே எழுதவில்லை” என்று சிணுங்கினாள் சாரா.

“ நியூயார்க் ஒரு மிகப்பெரிய நகரம்” என்றபடி பேச ஆரம்பித்தான் வால்டர்.

“நான் ஒரு வாரத்துக்கு முன்னாலேயே உன் பழைய முகவரிக்கு வந்து விட்டேன். வியாழக்கிழமை நீ அந்த இடத்தை விட்டு போய் விட்டாய் என்று சொன்னார்கள். சிலருக்கு அது ஆறுதலாக இருந்திருக்கும். வெள்ளிக்கிழமை துரதிருஷ்டம் ஏற்படுவதை அது தடுக்கிறதல்லவா? ஆனால்…காவல் துறை மூலமும் வேறு சில வழிகளிலும் நான் தொடர்ந்து உன்னைத் தேடி வேட்டையாடிக்கொண்டுதான் இருந்தேன்”

“ நான் உங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன்” என்று உறுதியாகச்சொன்னாள் சாரா.

“ அது எனக்கு வரவே இல்லையே”

“ பிறகு என்னை எப்படிக்கண்டுபிடித்தீர்கள்? “

இளைஞனான அந்த விவசாயி ஒரு வசந்தகாலப்புன்னகையை உதிர்த்தான்.

“ இன்று மாலை பக்கத்திலுள்ள உணவு விடுதிக்கு நான் போயிருந்தேன்” என்றபடி பேசத்தொடங்கினான் அவன்.

“ இந்த சீஸனுக்கேற்ற பசுமையான காய்கறி உணவு வகை வேண்டுமென்று நான் ஆசைப்பட்டேன். மற்றவர்களிடம் அது பற்றி விசாரிக்காமல் அழகாகத் தட்டச்சு செய்யப்பட்டிருந்த மெனு கார்டில் பார்வையை ஓட்டியபடி அப்படி ஏதாவது இருக்கிறதா என்று வரிசைப்படி பார்த்துக்கொண்டு வந்தேன். முட்டைக்கோஸுக்குக்கீழே பார்த்ததும் என் நாற்காலியைத் தள்ளி விட்டு விட்டு உணவக உரிமையாளரிடம் ஓடிப்போய் அவரைத்துளைத்தெடுத்தேன். நீ இருக்கும் இடத்தை அவர் எனக்கு சொல்லி விட்டார்”

“ ஆமாம், எனக்கு ஞாபகம் இருக்கிறது. முட்டைக்கோஸுக்குக் கீழே டேண்டலைன்தான் இருந்திருக்கும். “ என்று சந்தோஷப் பெருமூச்சு விட்டாள் சாரா.

“ இந்த உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உன் டைப்ரைட்டர் பெரிய டபுள்யூவை எப்படிக்கிறுக்குத்தனமாக- வரிசைக்கு மேல் வரும்படி அடிக்கும் என்பது எனக்குத் தெரிந்ததுதானே? “

“ அதை எதற்கு இப்போது சொல்கிறீர்கள்? ஆமாம்,டேண்டலைனில் டபிள்யூ எங்கே இருக்கிறது?”

அந்த இளைஞன் தன் சட்டைப்பையிலிருந்து மெனு கார்டை எடுத்து அதிலிருந்த ஒரு வரியை அவளிடம் சுட்டிக் காட்டினான்.

அன்று மதியம் தன்னால் தட்டச்சு செய்யப்பட்ட முதல் உணவுப்பட்டியல் அது என்பதை அடையாளம் கண்டு கொண்டாள் சாரா. அதன் வலதுபுற மூலையில் கண்ணீர்க்கறை படிந்த அடையாளம் கூட இலேசாக இருந்தது.

ஆனால் அவள் நெஞ்சில் எப்போதும் தொத்திக்கொண்டிருக்கும் பொன்மயமான பூக்களைக்கொண்ட அந்தப்புல்வெளித் தாவரத்தின் பெயர் இருந்திருக்க வேண்டிய இடத்தில் அவளது விரல்கள் வித்தியாசமான வேறு சில எழுத்துக்களை அழுத்தி விட்டிருந்தன.

மெனுகார்டில் சிவப்பு முட்டைக்கோஸ் உணவுக்கும், பச்சை மிளகை வைத்துச் செய்யப்பட்ட பண்டத்துக்கும் இடையே

‘ அன்புள்ள வால்டர், வேக வைத்த முட்டையுடன்’

என்று டைப் செய்யப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....