துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

1.1.25

'பிரம்மாஸ்திரம்' -புதிய மொழியாக்கச் சிறுகதைத் தொகுப்பு


 

 நற்றிணை பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் 'பிரம்மாஸ்திரம்' ,என் புதிய மொழியாக்கச் சிறுகதைத் தொகுப்பு.

என்னுரையில்...

.எழுதப்பட்ட காலத்தாலும், நிலப்பரப்பாலும். கலாச்சாரத்தாலும் ஒன்றுக்கொன்று பெரிதும் மாறுபட்டிருக்கும் 'பிரம்மாஸ்திரம்’ தொகுப்பின் கதைகள் உலகச் சிறுகதை இலக்கியத்தின் பதச்சோறுகள்.

வாசகர்களுக்கு அதிகம் அறிமுகமாகியிராத மகாபாரத விளிம்பு நிலை மக்கள் சிலரின் கையற்ற நிலை, அதன் நடுவிலும்   அவர்கள் கொண்டிருக்கும்  மனத்திண்மை, உயர்மட்டத்தினரிடம் காண அரிதான சுதந்திர மனப்போக்கு ஆகியவற்றைச்  சித்தரிப்பவை இதிகாசப் பின்புலத்தில் எழுதப்பட்ட வங்க எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவியின் கதைகள் என்றால் அதே வங்கத்தின் சமகால கீழ் மத்தியதர வாழ்க்கையின் பதிவுகளாக அமைந்திருப்பவை ஆஷா பூர்ணாதேவியின் சிறுகதைகள். இந்தியாவின் ஒரு பகுதிதான் என்றாலும் ஒட்டியும் விலகியுமாய் இருப்பது மணிப்பூர்; அங்கு நிலவும் பல்வேறு சூழல்கள் காரணமாக மிகவும் வேறுபட்ட வாழ்வியல் முறைகளையும், நடப்பியல் சிக்கல்களையும் , வினோதமான நம்பிக்கைகள் கொண்ட பழங்குடியினரையும் உள்ளடக்கியது அது.  ’வேட்டைநா’யில் அத்தகைய நம்பிக்கையின் கூறுகளைக் காண இயலும். தொகுப்பின் உள்ளடக்கமானவேற்று நாட்டுக் கதைகள் இரண்டும்  எளிமையான கதைக்கருவை லாவகமான சுவாரசியத்தோடும், நகைச்சுவை இழையோடவும் சொல்லவல்ல இரு மேதைகள் சாமர்செட்மாம், ஓஹென்றி என்பதை உறுதிப்படுத்தியபடி அவர்களின் புனைவுலகை ஆர்வத்தோடு  எட்டிப்பார்க்க  வைப்பவை.

ரசனைக்குரிய இந்த ஒன்பது கதைகளையும் மொழிபெயர்த்த அனுபவம், அங்கங்குள்ள மண்ணோடும் மக்களோடும் பிணைந்து வாழ்ந்த உணர்வையே எனக்கு அளித்தது. அதே உணர்வை வாசகர்களும் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் இந்தத் தொகுப்பை நேர்த்தியான அழகுடன் வெளியிட முன் வந்திருக்கும் நற்றிணப் பதிப்பகத்தாருக்கும், நண்பர் யுகனுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

எம் ஏ சுசீலா

மதுரை

..........................................


ஜன. ’25 சென்னை புத்தகக் காட்சியின்போது தினமணியில்  'பிரம்மாஸ்திரம்' பற்றி வெளியான குறிப்பு இந்த இணைப்பில்...

https://www.dinamani.com/book-space/news/2025/Jan/05/new-at-the-book-fair

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....