மணல் வீடு இலக்கிய வட்டம் நிகழ்த்திய மக்கள் கலை இலக்கிய
விழாவில் பங்கேற்று அவர்கள் வழங்கிய அமரர் ராஜம்கிருஷ்ணன் நினைவு விருதைப்பெற்றது இந்தப்புத்தாண்டுக்கு
ஒரு நல்ல தொடக்கத்தைத் தந்திருக்கிறது.
’மணல் வீடு’ இலக்கியச் சிற்றிதழைத் தரம் குன்றாமல் வெளியிட்டு
வருவதோடு கூத்துக்கலை மேம்பாட்டினைக் குறிக்கோளாகக்கொண்டபடி அதை மீட்டெடுப்பதற்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற
கூத்துக்கலைஞர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும் ’களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள்
மேம்பாட்டு மையம்’ என்ற அமைப்பு ஒன்றை நிறுவி அதன் வழியாகவும் இந்த இலக்கிய வட்டம்
செயல்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்களாகவே மணல் வீடு திரு ஹரிகிருஷ்ணன் அவர்கள் அங்கே
வருமாறு எனக்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தபோதும் இம்மாதம் 6ஆம் தேதியன்று நிகழ்ந்த
கலை இலக்கிய விழாவிலேதான் அது சாத்தியமாயிற்று.
சேலத்திலிருந்து கிட்டத்தட்ட 30 கிலோ
மீட்டர் தாண்டி சேலம் -மேட்டூர் பிரதான சாலையில் பொட்டனேரி நிறுத்தத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள சிற்றூர்
ஏர்வாடி. இராமநாதபுரம் அருகிலுள்ள ஏர்வாடியை மட்டுமே அதுவரையில் அறிந்து வைத்திருந்த எனக்கு அந்த
ஊரைப்பற்றிய அறிமுகம் வியப்பு என்றால் மேலும் பலப்பல வியப்புகள் அங்கே எனக்காகக் காத்திருந்தன.
பேரூர்களிலும்
பெருநகரங்களிலும் கூட - தீவிர இலக்கிய விழாக்களை ஒருங்கிணைப்பதும் அவற்றில் பங்கேற்பதற்கான
இலக்கியவாதிகளையும் வாசகர்களையும் வருவிப்பதும் கடினமாக உள்ள இன்றைய சூழலில் எங்கோ
எட்டாத தொலைவில் இருக்கும் கடைக்கோடி கிராமம் ஒன்றில் நவீன இலக்கிய முயற்சிகளை எடுத்துச்சென்று
அம்முயற்சிகளில் ஈடுபட்ட முன்னோடிகளையும் அம்முன்னோடிகளின் தடம் பற்றி இன்றைய களத்தில்
பணியாற்றி வரும் எழுத்தாளர்களையும் கௌரவித்திருக்கிறது
மணல் வீடு இலக்கிய வட்டம்.
திரு ஹரிகிருஷ்ணனின் அறிமுகம் |
’அஃ’ சிற்றிதழ் பரந்தாமன் பெயராலும் முன்னோடிப் புதுக்கவிஞர்
சி மணி பெயராலும் கு அழகிரிசாமி. மற்றும் ப சிங்காரம், ராஜம் கிருஷ்ணன் ஆகிய புனைகதையாளர்கள்
பெயராலும் விருதுகள். குறிப்பிட்ட அந்தக்காலகட்டத்தில் ஒரு சிற்றிதழை அச்சாக்குவதில் அஃ பரந்தாமன் மேற்கொண்ட மிகக்கடுமையான
முயற்சிகளையும், சி மணியின் கவிதைத் தருணங்களையும் எந்த ஜனரஞ்சக வாடையும் இன்றித் தீவிரமாய்
முன் வைக்கிறார் பேராசிரியரும் கவிஞருமான பிரம்மராஜன்.சிற்றிதழ் நடத்துவதைக் குடும்பத்தின்
மொத்தக்கடமையாய்க்கொண்டு சுந்தர சுகனின் சுற்றத்தினர் செயலாற்றியதை விவரித்துக்கொண்டு
போகிறார் கவிஞர் இலக்குமி குமார ஞான திரவியம்.கு அழகிரிசாமி பற்றியும் ப சிங்காரம்
குறித்தும் மேலும் விருது பெறும் திரு நக்கீரன்,அழகிய பெரியவன்,என் டி ராஜ்குமார் மற்றும்
என்னைப்பற்றியும் குறிப்புக்களும் வாசிக்கப்படுகின்றன. ஓவியர் கே.எம். கோபாலின் தாந்திரீகத்
தன்மை கொண்ட விநாயகர் ஓவியங்கள் பற்றியும் விருது பெறும் ஷாராஜ் பற்றியும் அடர்த்தியான
கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. கூட்டத்தினர் அயராத ஆர்வத்தோடு கேட்டுத்
தங்கள் பாராட்டை வெளிப்படுத்துகின்றனர். பெருநகரங்களில் நடக்கும் இலக்கியக்கூட்டங்களைப்போல
இடையிடையே எழுந்து செல்வதோ தங்களுக்குள் பேசிக்கொள்வதோ எந்த ஒரு சலசலப்பும் இல்லை;
மேடையில் நடப்பதை அமைதியாய் ஆர்வத்தோடு உள் வாங்கிக்கொள்ளும் அப்படிப்பட்ட கள்ளமற்ற
மக்கள் கூட்டத்தைக்காண்பதே ஒரு பேரனுபவமாக இருந்தது.அங்கே பேசப்பட்ட படைப்பாளிகளை அவையில்
இருந்த மிகப்பலர் அறியாமலும் படிக்காமலும் கூட இருக்கலாம். ஆனாலும் படித்தது போலப்பம்மாத்து
செய்யும் அரை வேக்காட்டு அறிவுஜீவிப்பொய்மைகள்
அங்கே இல்லை என்பதும் இலக்கியம் சார்ந்தவர்கள் பெருமைப்படுத்தப்படும்போது அதற்கு உரிய
மதிப்பு தர வேண்டும் என்ற உண்மையான உணர்வு மட்டுமே அங்கே மேலோங்கி இருந்தது என்பதும்
மனதுக்கு மிகவும் ஆறுதலான நல்லம்சங்கள்.
ஒவ்வொரு படைப்பாளியும் அவரது முன்னோடியும்
அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக களரி இசைக்கலைஞர்களின் களரி கூட்டல் எனும் பல கருவி
இசை முழக்கம்[நாதஸ்வரம் தவில் புல்லாங்குழல் எனப்பலவற்றின் கலவையாக]அவர்களை வரவேற்றுப்பாராட்டும்
வகையில் இசைக்கப்பட்டது இக்கலைவிழாவின் தனிச்சிறப்பு.
அரங்கில் சி மணியின் படைப்புக்களை மொத்தமாய்
வெளியிட்டதோடு நூலின் தொகுப்பாசிரியர் திரு கால சுப்பிரமணியம் அது குறித்து உரையாற்றியதும்
இந் நிகழ்வுக்கு சி மணியின் குடும்பத்தார்
அழைக்கப்பட்டுப்பெருமைப்படுத்தப்பட்டதும் மணல்வீடு இலக்கிய வட்டத்தாரின் உண்மையான ஆர்வத்துக்கு
ஓர் எடுத்துக்காட்டு.
கபடில்லாத மக்கள்.முக மலர்ச்சியோடு
விருந்தோம்பியபடி பரிமாறப்பட்ட எளிய கிராமத்து
உணவு. பந்தலை விட்டு வெளியே வரும்போது குற்றமும் தண்டனையும் படித்தோம்,அசடன் வாசித்தோம்
என்று சொல்லியபடி அறிமுகம் செய்து கொண்ட சில கிராமத்து வாலிபர்கள். ரஸ்கோல்னிகோவை மன்னிப்புக்கேட்கத்
தூண்டிய சோனியாவின் வார்த்தைகளை நினைவுபடுத்தியபடி நெகிழ்ந்த விவசாயக் கூலிப் பணியாளர்களான
வாசகர்கள்.
எத்தனையோ விருதுகளுக்கு நிகரான- அவற்றினும் மேலான வாசக எதிர்வினைகளைப்பெற்று விட்ட மனநிறைவோடு ஊரை விட்டுக்கிளம்பிய
அந்த நொடியில் காதில் வந்து விழுந்த மேளத்தின் ஒலி, இரவு நடக்கும் கூத்துக்களைத் தவற
விட்டுவிட்டுச்செல்கிறோமே என்ற ஏக்கத்தையும் கூடவே கிளர்த்தியது.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக