துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29.9.22

விஜயா வாசகர் வட்ட மொழியாக்க விருது

 விஜயா வாசகர் வட்டம் சார்பில் இவ்வாண்டு -2022, திரு கே எஸ் சுப்பிரமணியன் அவர்களின் நினைவாகப் புதிதாக நிறுவப்பட்ட மொழியாக்க விருது எனக்கும் கன்னட த்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யும் திரு நல்லதம்பி அவர்களுக்கும் 28/8/2022 அன்று அளிக்கப்பட்டது. விஜயா பதிப்பக நிறுவனர் திரு வேலாயுதம் அவர்கள் ஜூன் மாதமே  இச்செய்தியை என்னுடன் பகிர்ந்து கொண்டு மனம் நெகிழ்ந்து பாராட்டினார். விருதை விடவும் உளப்பூர்வமான அந்தப்பாராட்டு என்னை மகிழ்வித்தது. திரு வேலாயுதம் அவர்களுக்கும் விஜயா வாசகர் வட்டத்தார்க்கும் என் நன்றி.








12.1.18

மணல் வீடு இலக்கிய விழாவில்...






மணல் வீடு இலக்கிய வட்டம் நிகழ்த்திய மக்கள் கலை இலக்கிய விழாவில் பங்கேற்று அவர்கள் வழங்கிய அமரர் ராஜம்கிருஷ்ணன் நினைவு விருதைப்பெற்றது இந்தப்புத்தாண்டுக்கு ஒரு நல்ல தொடக்கத்தைத் தந்திருக்கிறது.


’மணல் வீடு’ இலக்கியச் சிற்றிதழைத் தரம் குன்றாமல் வெளியிட்டு வருவதோடு கூத்துக்கலை மேம்பாட்டினைக் குறிக்கோளாகக்கொண்டபடி  அதை மீட்டெடுப்பதற்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற கூத்துக்கலைஞர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும் ’களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்’ என்ற அமைப்பு ஒன்றை நிறுவி அதன் வழியாகவும் இந்த இலக்கிய வட்டம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்களாகவே மணல் வீடு திரு ஹரிகிருஷ்ணன் அவர்கள் அங்கே வருமாறு எனக்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தபோதும் இம்மாதம் 6ஆம் தேதியன்று நிகழ்ந்த கலை இலக்கிய விழாவிலேதான் அது சாத்தியமாயிற்று.

சேலத்திலிருந்து கிட்டத்தட்ட 30 கிலோ மீட்டர் தாண்டி சேலம் -மேட்டூர் பிரதான சாலையில் பொட்டனேரி நிறுத்தத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள சிற்றூர் ஏர்வாடி. இராமநாதபுரம் அருகிலுள்ள ஏர்வாடியை மட்டுமே  அதுவரையில் அறிந்து வைத்திருந்த எனக்கு அந்த ஊரைப்பற்றிய அறிமுகம் வியப்பு என்றால் மேலும் பலப்பல வியப்புகள் அங்கே எனக்காகக் காத்திருந்தன.

பேரூர்களிலும் பெருநகரங்களிலும் கூட - தீவிர இலக்கிய விழாக்களை  ஒருங்கிணைப்பதும் அவற்றில் பங்கேற்பதற்கான இலக்கியவாதிகளையும் வாசகர்களையும் வருவிப்பதும் கடினமாக உள்ள இன்றைய சூழலில் எங்கோ எட்டாத தொலைவில் இருக்கும் கடைக்கோடி கிராமம் ஒன்றில் நவீன இலக்கிய முயற்சிகளை எடுத்துச்சென்று அம்முயற்சிகளில் ஈடுபட்ட முன்னோடிகளையும்  அம்முன்னோடிகளின் தடம் பற்றி இன்றைய களத்தில் பணியாற்றி வரும் எழுத்தாளர்களையும்  கௌரவித்திருக்கிறது மணல் வீடு இலக்கிய வட்டம்.


திரு ஹரிகிருஷ்ணனின் அறிமுகம்
 ’அஃ’ சிற்றிதழ் பரந்தாமன் பெயராலும் முன்னோடிப் புதுக்கவிஞர் சி மணி பெயராலும் கு அழகிரிசாமி. மற்றும் ப சிங்காரம், ராஜம் கிருஷ்ணன் ஆகிய புனைகதையாளர்கள் பெயராலும் விருதுகள். குறிப்பிட்ட அந்தக்காலகட்டத்தில் ஒரு சிற்றிதழை  அச்சாக்குவதில் அஃ பரந்தாமன் மேற்கொண்ட மிகக்கடுமையான முயற்சிகளையும், சி மணியின் கவிதைத் தருணங்களையும் எந்த ஜனரஞ்சக வாடையும் இன்றித் தீவிரமாய் முன் வைக்கிறார் பேராசிரியரும் கவிஞருமான பிரம்மராஜன்.சிற்றிதழ் நடத்துவதைக் குடும்பத்தின் மொத்தக்கடமையாய்க்கொண்டு சுந்தர சுகனின் சுற்றத்தினர் செயலாற்றியதை விவரித்துக்கொண்டு போகிறார் கவிஞர் இலக்குமி குமார ஞான திரவியம்.கு அழகிரிசாமி பற்றியும் ப சிங்காரம் குறித்தும் மேலும் விருது பெறும் திரு நக்கீரன்,அழகிய பெரியவன்,என் டி ராஜ்குமார் மற்றும் என்னைப்பற்றியும் குறிப்புக்களும் வாசிக்கப்படுகின்றன. ஓவியர் கே.எம். கோபாலின் தாந்திரீகத் தன்மை கொண்ட விநாயகர் ஓவியங்கள் பற்றியும் விருது பெறும் ஷாராஜ் பற்றியும் அடர்த்தியான கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. கூட்டத்தினர் அயராத ஆர்வத்தோடு கேட்டுத் தங்கள் பாராட்டை வெளிப்படுத்துகின்றனர். பெருநகரங்களில் நடக்கும் இலக்கியக்கூட்டங்களைப்போல இடையிடையே எழுந்து செல்வதோ தங்களுக்குள் பேசிக்கொள்வதோ எந்த ஒரு சலசலப்பும் இல்லை; மேடையில் நடப்பதை அமைதியாய் ஆர்வத்தோடு உள் வாங்கிக்கொள்ளும் அப்படிப்பட்ட கள்ளமற்ற மக்கள் கூட்டத்தைக்காண்பதே ஒரு பேரனுபவமாக இருந்தது.அங்கே பேசப்பட்ட படைப்பாளிகளை அவையில் இருந்த மிகப்பலர் அறியாமலும் படிக்காமலும் கூட இருக்கலாம். ஆனாலும் படித்தது போலப்பம்மாத்து செய்யும் அரை வேக்காட்டு  அறிவுஜீவிப்பொய்மைகள் அங்கே இல்லை என்பதும் இலக்கியம் சார்ந்தவர்கள் பெருமைப்படுத்தப்படும்போது அதற்கு உரிய மதிப்பு தர வேண்டும் என்ற உண்மையான உணர்வு மட்டுமே அங்கே மேலோங்கி இருந்தது என்பதும் மனதுக்கு மிகவும் ஆறுதலான நல்லம்சங்கள்.

ஒவ்வொரு படைப்பாளியும் அவரது முன்னோடியும் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக களரி இசைக்கலைஞர்களின் களரி கூட்டல் எனும் பல கருவி இசை முழக்கம்[நாதஸ்வரம் தவில் புல்லாங்குழல் எனப்பலவற்றின் கலவையாக]அவர்களை வரவேற்றுப்பாராட்டும் வகையில் இசைக்கப்பட்டது இக்கலைவிழாவின் தனிச்சிறப்பு.

அரங்கில் சி மணியின் படைப்புக்களை மொத்தமாய் வெளியிட்டதோடு நூலின் தொகுப்பாசிரியர் திரு கால சுப்பிரமணியம் அது குறித்து உரையாற்றியதும்  இந் நிகழ்வுக்கு சி மணியின் குடும்பத்தார் அழைக்கப்பட்டுப்பெருமைப்படுத்தப்பட்டதும் மணல்வீடு இலக்கிய வட்டத்தாரின் உண்மையான ஆர்வத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு.

கபடில்லாத மக்கள்.முக மலர்ச்சியோடு விருந்தோம்பியபடி  பரிமாறப்பட்ட எளிய கிராமத்து உணவு. பந்தலை விட்டு வெளியே வரும்போது குற்றமும் தண்டனையும் படித்தோம்,அசடன் வாசித்தோம் என்று சொல்லியபடி அறிமுகம் செய்து கொண்ட சில கிராமத்து வாலிபர்கள். ரஸ்கோல்னிகோவை மன்னிப்புக்கேட்கத் தூண்டிய சோனியாவின் வார்த்தைகளை நினைவுபடுத்தியபடி நெகிழ்ந்த விவசாயக் கூலிப் பணியாளர்களான வாசகர்கள். 

எத்தனையோ விருதுகளுக்கு நிகரான-  அவற்றினும் மேலான வாசக எதிர்வினைகளைப்பெற்று விட்ட மனநிறைவோடு ஊரை விட்டுக்கிளம்பிய அந்த நொடியில் காதில் வந்து விழுந்த மேளத்தின் ஒலி, இரவு நடக்கும் கூத்துக்களைத் தவற விட்டுவிட்டுச்செல்கிறோமே என்ற ஏக்கத்தையும் கூடவே கிளர்த்தியது. 

தெருக்கூத்துக் கலை தொடங்கி இன்றைய நவீன இலக்கிய மற்றும் மொழிபெயர்ப்பு முயற்சிகள் வரை அந்த மண்ணுக்குச் சென்று சேர்த்தபடி-  சிற்றூரில் இருந்த வண்ணம் பெருஞ்செயல்களை ஆரவாரமில்லாமல் செய்து வரும் மணல் வீடு இலக்கிய வட்டத்தினரின் கலை இலக்கிய ஆர்வமும் அர்ப்பணிப்பு உணர்வும் நெஞ்சுக்கு நிறைவளிக்க அங்கிருந்து விடைபெற்றேன்.


மணல் வீடு இலக்கிய வட்ட விருதுகள்


14.12.17

மணல் வீடு இலக்கிய வட்ட விருதுகள்


மணல் வீடு இலக்கிய வட்ட விருதுகள்
மணல் வீடு இலக்கிய வட்டத்தின் பொறுப்பாளரான திரு ஹரிகிருஷ்ணன் அவர்கள் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு
சீரிய  எழுத்துச் செயற்பாட்டுக்கான எழுத்தாளர்  ராஜம்  கிருஷ்ணன்  நினைவு  இலக்கியவிருதுக்கு நான் தேர்வாகி இருப்பதாகவும்
ஜனவரி 6ஆம் தேதி நடைபெறும் கலை இலக்கிய விழாவில் பங்கேற்று விருதை ஏற்றுக்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.

நான் ஆழ்ந்த மதிப்பு வைத்திருக்கும் எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர், அமரர் திருமதி ராஜம் கிருஷ்ணன். அவரது பெயரால் வழங்கப்படும் இந்த விருதை ஏற்றுக்கொள்வதில் மகிழ்வதோடு அதற்கு  உரியவளாக என்னை மேலும்  தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும்  எண்ணுகிறேன்.

களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையத்தின் சார்பில் நடைபெறும் மக்கள் கலை இலக்கிய விழாவில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மணல் வீடு இலக்கிய அமைப்புக்கும் களரி தொல்கலை மேம்பாட்டு மையத்துக்கும் திரு ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் என் நன்றி.

விருது பெறுவோரின் பட்டியல்,
அறிவிப்பு மற்றும் அழைப்பிதழ்
மணல் வீடு இலக்கிய வட்டம், முன்னோடிப் படைப்பாளுமைகளைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக விருது வழங்கி கவுரவித்துவருகிறது.
அந்த அமைப்பின் சார்பாக வழங்கப்படும் 
அஃக் பரந்தாமன் நினைவு விருதுக்கு 
சௌந்திர சுகன் இதழும், 
கவிஞர் சி.மணி நினைவு விருதுக்கு என்.டி.ராஜ்குமாரும், 
நாவலாசிரியர் ப.சிங் காரம் நினைவு விருதுக்கு நக்கீரனும், 
கு.அழகிரிசாமி நினைவு விருதுக்கு அழகிய பெரியவனும், 
ராஜம் கிருஷ்ணன் நினைவு விருதுக்கு எம்.ஏ. சுசீலாவும், 
ஓவியர் கே.எம். கோபால் நினைவு விருதுக்கு ஓவியர் ஷாராஜும், 
நிகழ்த்துக் கலைஞர்களுக்கான அமரர் சடையன் வாத்தியார் நினைவு விருதுக்கு 
கூத்துக்கலைஞர் மட்டம்பட்டி பழனியும் 
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
விருது வழங்கும் விழா ஜனவரி 6-ம் தேதி ஏர்வாடியில் நடக்கவிருக்கிறது. 

மேலும் விருது பெறுபவர்கள்....

மக்கள்  கலை இலக்கிய விழா  -  2018

நிகழ்விடம்  -  ஏர்வாடி  , மேட்டூர்

நாள்  - 06-01-2018

நேரம்  - பிற்பகல்  2.30  மணிக்கு

அமர்வு  - 1 களரி கூட்டல்

மிருதங்கம்-நடராஜன் –அம்மாபேட்டை  
முகவீணை-குமார்-நாகமரை

அமர்வு  2 நூல்  வெளியீடு -  பிற்பகல்  3.00 மணிக்கு

பரிசோதனை  சிறுசஞ்சிகை  - வே . நி . சூர்யா
தொக்கம்  -2  சிறுசஞ்சிகை -    திடவைவேசர்
பிரதியின் நிர்வாணம் - சிறுகதைகள் - லைலா  எக்ஸ்
எழுத்தும்  நடையும்  - சி . மணி  படைப்புகள் - தொகுப்பாக்கம் -காலசுப்ரமணியன்

அமர்வு - 3  இலக்கிய  விருதுகள் - பிற்பகல் 3.30  மணிக்கு

சிற்றிதழுக்கான அஃக் பரந்தாமன் நினைவு  இலக்கியவிருது -  சௌந்திர  சுகன்

கவிதைக்கான  சி. மணி நினைவு  இலக்கியவிருது  - என். டி  ராஜ்குமார்

நாவலுக்கான   ப. சிங்காரம்  நினைவு  இலக்கியவிருது-  நக்கீரன்  

சிறுகதைக்கான  கு அழகிரிசாமி  நினைவு  இலக்கியவிருது-  அழகிய பெரியவன்

சீரிய  எழுத்து செயற்பாட்டுக்கான எழுத்தாளர்  ராஜம்  கிருஷ்ணன்  நினைவு  இலக்கியவிருது -  எம் .ஏ . சுசிலா
நுண்கலைகளுக்கான  ஓவியர் கே . எம்  கோபால்  நினைவு  விருது-  ஷாராஜ்

நிகழ்வில்

பால் சக்கரியா  பிரம்மராஜன்  ஜீவானந்தம்   நாஞ்சில்நாடன்  பொ.வேலுசாமி இமயம்   ஆதவன்  தீட்சண்யா  சமயவேல்   மோகனரங்கன்  இரா.நடராசன் குலசேகரன்

அமர்வு -4-   மாலை  5   மணிக்கு

கலைஞர் பெருமக்களுக்கு விருது -பரிசு-பாராட்டு -கௌரவிப்பு

கூத்துச்செம்மல் விருது பெறுவோர்

பெருமாள்  -  முகவீணைக்கலைஞர்    - ஆலமரத்தூர்
ரத்தினம்  -கூத்துக்கலைஞர்- கொக்கராயன்பேட்டை
செல்வம்  --கூத்துக்கலைஞர்-   எலச்சிபாளையம்
ரமேஷ்   - கூத்துக்கலைஞர் -  முதுகம்பட்டி
சத்தி -கூத்துக்கலைஞர்- முதுகம்பட்டி
முருகன்  - கூத்துக்கலைஞர் - முதுகம்பட்டி
செந்தில்  - கூத்துக்கலைஞர் - முதுகம்பட்டி
மாதேஷ் - கூத்துக்கலைஞர்- கோவிந்தப்பாடி
ஆறுமுகம்  -கூத்துக்கலைஞர்-  வத்தல்பட்டி
ரவி -முகவீணைக்கலைஞர் - பள்ளிப்பட்டி
கொழந்தை  - கூத்துக்கலைஞர் - ஒண்டிக்கடை
ராஜமாணிக்ககம்  - கூத்துக்கலைஞர் - ஆரூர்ப்பட்டி
நல்லதம்பி -கூத்துக்கலைஞர் - சாத்தப்பாடி
அம்பேத்கர் - கூத்துக்கலைஞர் -மோடமங்கலம்
வடிவேல் - கூத்துக்கலைஞர் - திருச்செங்கோடு
கோவிந்தன் -கூத்துக்கலைஞர் - மூலக்காடு
மூர்த்தி - மிருதங்க கலைஞர் - கொங்குப்பட்டி

கலைச்சுடர் விருது பெறுவோர்

இந்து  -கூத்துக்கலைஞர்- தோப்பூர்
தனுஷ் -மிருதங்கக் கலைஞர் - அண்ணாநகர்
விஷவா - மிருதங்கக் கலைஞர்- எளச்சிப்பாளையம்  
மகேஷ் - கூத்துக்கலைஞர் - பருவாச்சி  
அவந்திகா - கூத்துக்கலைஞர் -திருச்செங்கோடு
தனபால் -கூத்துக்கலைஞர் -இருசாகவுண்டன் புதூர்   
மகேந்திரன்  - கூத்துக்கலைஞர் - இருசாகவுண்டன் புதூர்
கார்த்திக் -   கூத்துக்கலைஞர் -திருச்செங்கோடு

கூத்துக்கலைஞர்- அமரர் க.ராஜு நினைவு விருது பெறுபவர்

அஸ்வினி  - கூத்துக்கலைஞர்  -  அந்தியூர்
அமரர்  துரைசாமி  வாத்தியார்  நினைவு  விருது

தங்கவேல் - மிருதங்கக்கலைஞர் - செல்லமண்டி
ராஜு - மிருதங்கக்கலைஞர்- பள்ளிப்பட்டி

அமரர்  குரும்பனூர் காளி வாத்தியார்  நினைவு  விருது
அர்ஜுனன்  - கூத்துக்கலைஞர்  - அண்ணாநகர்   .
முனுசாமி   -கூத்துக்கலைஞர் - இலுப்புளி
சின்ன ராசு  - கூத்துக்கலைஞர்- துத்திப்பாளையம்
வீராசாமி  -  கூத்துக்கலைஞர் - எலிமேடு
முனுசாமி   -கூத்துக்கலைஞர் - நல்லூர்

அமரர் சடையன் வாத்தியார்  நினைவு விருது
பழனி - கூத்துக்கலைஞர் – மட்டம்பட்டி

நிகழ்வில்

சுப்ரு வாத்தியார்  மக்குமாணிக்கம்  மாணிக்கக்கம்பட்டி  கணேசன்     செ.ரவீந்திரன் ,
இரா .காமராசு  ந .மம்மது ஹேமநாதன்
மா .சங்கரநாராயணன்  பா. மதிவாணன்   ஜீவகாருண்யன்  ப. கிருஷ்ணஸ்வாமி

நிகழ்வு தொகுப்பு

நறுமுகை - ராதா  கிருஷ்ணன்
நன்றியுரை-மு.ஹரிகிருஷ்ணன்
அமர்வு-5- மாலை  6 மணிக்கு
மயில் ராவண  சம்ஹாரம்  -தோல்பதுமைக் கூத்து
வழங்குபவர்- கணேசன் -அம்மாபேட்டை
அமர்வு-6 - மாலை 7மணிக்கு
பாஞ்சாலக்குறவஞ்சி  கட்ட பொம்மலாட்டம்
வழங்குவோர் - களரி கூத்துப்பள்ளி   

8 மணிக்கு-இரவு உணவு
அமர்வு-6 - பொன்னர்  சங்கர்  - தெருக்கூத்து
வழங்குவோர்  துத்திப்பாளையம்  பொன்னு  கவுண்டர் நாடக  சபா
நிகழ்த்துவோர்
சுப்பிரமணி - கூலிப்பட்டி
தங்கவேல்  - துத்திப்பாளையம்
செல்லமுத்து -  மோர் பாளையம்
சின்னராசு  - துத்திப்பாளையம்
சுப்பிரமணி - துத்திப்பாளையம்
சீரங்கன் - துத்திப்பாளையம்
சிவராஜ் - எஸ் பாலம்
கனகு - பாச்சாலியூர்
மயில்சாமி - துத்திப்பாளையம்
செங்கோட்டுவேல் - துத்திப்பாளையம்
சீனு - கூட்டப்பள்ளி
சதீஷ் - துத்திப்பாளையம்
அருள் - எலிமேடு
மிருதங்கம்-நடராஜன் –அம்மாபேட்டை , கவின் - எலிமேடு
முகவீணை-குமார்-நாகமரை

சி

நிகழ்விடம்

சேலம் -மேட்டூர் பிரதான சாலையில்
பொட்டனேரி நிறுத்தத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது

தொடர்புக்கு

இர.தனபால்
அறங்காவலர்
9677520060
9894605371

நிகழ்ச்சி ஏற்பாடு
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்
&
மணல்வீடு இலக்கியவட்டம்
(KALARI HERITAGE&CHARITABLE TRUST)



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....