பரத்தமை என்ற பாலியல் தொழிலும், பரத்தையை நாடி ஆடவன் செல்லும் பரத்தையிற் பிரிவும் மிக இயல்பாக அங்கீகரிக்கப்பட்டு வந்த காலம் சங்க காலம்.
மனிதர்களின் வாழ்க்கைமுறையைத் தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்கள் அகம்,புறம் என்று இரண்டாக வகைப்படுத்தியிருந்தன.காதலிக்கும் காலகட்டத்துக்குக் களவு என்றும், திருமணத்துக்குப் பின்னாலுள்ள காலத்துக்குக் கற்பு என்று பெயர் சூட்டியும் இருந்தன. மனைவியோடு இல்லறம் நடத்தும் கற்புக்காலத்தில் தலைவன் தலைவியை விட்டுப் பிரிவதற்குச் சொல்லப்பட்ட காரணங்கள் ஆறு. அவற்றுள்,
கல்விக்காக, நண்பர்களோடு கூடி மகிழ்வதற்காக,
நாடுகாவலுக்காக,தூதுசெல்வதற்காக,
பொருள்தேடுவதற்காக ஆகிய ஐந்து காரணங்களை விடவும் அவன் பரத்தையிடம் பிரிந்து செல்வதே முதல் காரணமாக, முதன்மை தந்து சொல்லப்பட்டிருக்கிறது. பரத்தையிடம் சென்றுவருவது, கடை கண்ணிக்கோ,அலுவலகத்துக்கோ சென்று வருவது போல மிக இயல்பான ஒரு செயலாக - ஏன் ஓர் ஒழுக்கமாகவே கூட அந்த நூல்களில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. தலைவி அதற்காக ஊடல் கொள்ளும்போது வாயில் எனப்படும் தூதை அனுப்பி அவளை சமரசம் செய்து விடுவதும் மிகவும் சுலபமானதாக, எளியதொரு செயலாகவே இருந்திருக்கிறது.
களவியலில் காதலியாக முதன்மை பெற்றிருந்த தலைவி/ மனைவி, கற்புக்காலத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டு அவனுக்குரிய வாரிசைப் பெற்று தரும் ஓர் இயந்திரமாக மட்டுமே ஆக்கப்பட்டு விடுகிறாள். ‘பரத்தையிற்பிரிவு’ சார்ந்த இலக்கிய வரிகளும் இலக்கண நூற்பாக்களும் நமக்கு உணர்த்துவது அதை மட்டுமே.
ஒரு பெண்ணுக்கு மாதவிடாயைத் தொடர்ந்து வரும் சில நாட்கள் கருத்தரிக்க வாய்ப்புள்ள காலகட்டம் என்பதை நவீன அறிவியல் சொல்வது போலவே தொல்காப்பியமும் சொன்னாலும் அது பெண்ணின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடவும் அவளது கருப்பைக்கே முதன்மை இடத்தை அளித்திருக்கிறது.தலைவன் மாதக்கணக்கில் வேண்டுமானாலும் பரத்தையிடம் இருந்து கொள்ளலாம், ஆனால் கரு வயிற்றில் தங்கும் குறிப்பிட்ட ஒரு சில நாட்களில் மட்டும் அவன் தலைவியிடம் திரும்பியே ஆக வேண்டும் என்ற விதியை
‘பூப்பின் பிறப்பாடு ஈராறு நாளும்
நீத்து அகன்று உறையார்’என்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலையான’- (தொல்,கற்பியல் 46)
என்று வகுத்திருக்கிறது தமிழ் இலக்கணம். பரத்தையிடம் பிரிந்திருக்கும் தலைவன், தலைவியின் மாதவிடாய்ச் செய்தி கேட்டதும் காலம் தாழ்த்தாமல் உடனே தனது வீட்டுக்குச் சென்று, நான்காம் நாள் முதல் பன்னிரண்டு நாள் வரை அவளோடு உறவு கொண்டாக வேண்டும்
(‘கூடியுறைய வேண்டும்’ )என்ற பொருள்பட அமைந்திருக்கும் மேற்காணும் தொல்காப்பிய நூற்பா, பலருக்கும் அதிர்ச்சியைத்தரக்கூடிய ஒரு புதிய செய்தியாகக்கூட இருக்கலாம்.
மாதவிடாய்க்காலம் முடிந்து அவள் நீராடிய பின்,
‘கருவயிற்று உறூஉம் காலம் ஆதலின்
பிரியப் பெறாஅன் பரத்தையிற்பிரிவோன்’ (நம்பியகப்பொருள்-91)
என்று தொல்காப்பியத்துக்குப் பின்னால் எழுந்த நம்பியகப்பொருளும் அந்தக் கருத்தையே தொடர்ந்து வழி மொழிகிறது.
கதை இதோடு முடிந்து விடவில்லை…
குறிப்பிட்ட அந்த நாட்களை அவனுக்கு நினைவுபடுத்தும் வகையில் தலைவி தன் தோழிக்குச் சிவப்பாடை அணிவித்துத் தலைவனிடம் அனுப்பியாக வேண்டும்.. (“ செவ்வணி அணிந்து சேடியை விடுப்புழி”) பரத்தையிடம் இருக்கும் தலைவன் உடனே தலைவியிடம் திரும்பியாக வேண்டும் என்பதற்கான சங்கேதம் அது. அதேபோலக் குழந்தை பிறந்த பிறகு அந்தச் செய்தியை அவனிடம் அறிவிப்பதற்காக வெள்ளை உடை அணிந்தபடி தோழி செல்வாள்.அவன் வீடு திரும்புவதற்குத் தரப்படும் சமிக்ஞை அது. இவை வெறும் இலக்கண விதிகளாக மட்டுமல்லாமல் சங்கப் பாடல்களிலும் பதிவாகி இருப்பதால் அன்றைய நடப்பியல் வாழ்வின் போக்கே அப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
“பூத்த கரும்பில் காய்த்த நெல்லில் கழனியூரன்” என்று பூத்த கரும்பாகப் பரத்தையையும், காய்த்த நெல்லாகத் தன்னையும் ஐங்குறுநூற்றுப்பாடலில் (பாடல் எண் 4) உருவகப்போக்கில் குறியீடாகக் குறிப்பிடும் தலைவி, அவனது வம்சத்தைத் தொடர வைப்பதனால் மட்டுமே தனது முக்கியத்துவத்தைத் தக்க வைத்துக் கொள்கிறாள்.அதை அவள் உணர்ந்தும் இருப்பதாலேயே குறிப்பிட்ட அந்த நேரத்தில் மட்டுமே தோழியை அனுப்புவது,தனது தன்மதிப்புக்கு இழுக்கு என எண்ணுவதில்லை.
தலைவன் பரத்தையிடம் பிரியும்போது தலைவி பிரிவுத்துன்பத்தால் வருந்துவதை மட்டுமே அகப்பாடல்கள் சித்தரிக்கின்றனவே தவிர,அவ்வாறு அவன் சென்று வந்ததைத் தவறு என்பதை எந்தத்தலைவியும் எங்கும் சுட்டிக் காட்டுவதில்லை. அந்தச்செயலுக்கு எந்த எதிர்ப்பேச்சும் மறுப்பும் இல்லாமல்.. ஒரு சில நாட்களோ ஒரு சில மணி நேரங்களோ அவனோடு மிக இலேசான ஊடல்/ பிணக்கம் காட்டிவிட்டு இணங்கிப் போவதே அவர்களின் விதி என்ற கோணத்திலேதான் இலக்கண இலக்கியங்கள் திருமணம் கடந்த உறவான(post marital) தலைவனின் புறத்தொழுக்கத்தைப் பார்த்திருக்கின்றன. சங்கத்தைத் தொடர்ந்து வந்த காலகட்டங்களிலும் கூட அதிக மாற்றங்கள் இல்லாமல் பெண்ணின் நிலை இப்படியேதான் தொடர்ந்திருக்கிறது.
தலைவனின் புறத்தொழுக்கத்தைத் தவறு என்று கூடச் சொல்லத் தயங்குபவர்களாய், அழுகிப்போன ஒரு பின்புலத்தோடு மறுகிக்கொண்டிருந்த பெண்களுக்கு நடுவே, அடங்கிப் போவதையும் பணிந்து போவதையும் அன்றி வேறு எதையும் அறிந்திராதவர்களும், முகமற்றவர்களும் - பல நேரங்களில் பெயரும் கூட அற்றவர்களுமான சமய இலக்கியங்கள் காட்டும் மகளிர் சிலரிடம் இருந்து மாற்றுக் குரல்களும் எதிர்க்குரல்களும் எழுந்திருப்பதைக் குறிப்பிட்ட இலக்கிய வரிகளில் ஆழ்ந்து பயணம் செய்யும்போது அறிந்து கொள்ள முடிகிறது.
பொதுவாகத் தமிழ்ச்சமய இலக்கியப் பரப்பில் ஆண்டாளையும் காரைக்கால் அம்மையாரையும் தவிர ஓரளவு தனித்துவம் உடைய பெண்களாக வேறு யாரும் பெரிதும் முன்னிறுத்தப்படுவதில்லை. 63 சைவ நாயன்மார்களின் வரலாற்றைச் சொல்லும் சேக்கிழாரின் பெரிய புராணம்,இறைவனுக்காக எதையும் துறக்கச் சித்தமாக இருக்கும் அடியவர்களின் புகழ் பாடுகிறதே தவிர அவர்களின் எல்லாச் செயல்களையும்.உடன்பட்டு, அவற்றை நிறைவு செய்து தரப் பக்கத்துணையாக உடன் நின்ற மனைவியரின் உணர்வுகளைப் பற்றி அதிகம் பேசுவதில்லை.
'இல்லையே என்னாத இயற்பகைக்கு அடியேன்' என்று போற்றப்படும் இயற்பகை நாயனார், தன் மனைவியையே தருவதற்கும் கூட மறுப்புக்காட்டாமல் முன் வருகிறார். தன் ஒப்புதல் இன்றி அவர் எடுத்த முடிவைக் கேட்டு ஒரு கணம் மனம் கலங்கி நிற்பதைத்தவிர அதை எதிர்க்கவோ,மறுக்கவோ, தன் சம்மதமும் அதற்குத் தேவை என்று வலியுறுத்தவோ அவரது மனைவி துணிவதில்லை. தானே ஒரு பண்டமாக,தானமாக வழங்கப்படும்போதும் கூடக் கணவன் உரைத்ததை நிறைவேற்றுவதைத் தவிர,அதை மறுக்கும் உரிமை தனக்கு இல்லையென்றே அவரது எண்ண ஓட்டம் செல்கிறது.
" என் உயிருக்கு ஒரு நாதர் ,நீ உரைத்தது ஒன்றை நான் செய்யும் அத்தனை அல்லால்
உரிமை வேறு உளதோ எனக்கு "
என்று அப்போது அவர் பேசும் வார்த்தைகள்,அந்தக் காலப் பெண்களின் வாழ்நிலைக்கு ஒரு பதச் சோறு.
மறுப்போ எதிர்ப்போ காட்டாமலோ / காட்ட முடியாமலோ அவலமான பிறிதொரு நெருக்கடிக்கு ஆட்பட்டுப் போனவர் சிறுத்தொண்டரின் மனைவியான திருவெண்காட்டு நங்கையார். (இவரும் திருவெண்காடு என்று ஊரால் மட்டுமே அறியப்படுபவர்). "வாளால் மகவரிந்து ஊட்ட வல்லேன் அல்லேன்"என்று பிள்ளைக்கறி தர முன்வந்த சிறுத்தொண்டரின் பெருமையையே பட்டினத்தார் பாடலும் பேசுகிறதே தவிர, அதற்கு அந்தத் தாயின் சம்மதம் பெறப்பட்டது குறித்தோ ,தாய் பிடித்திருக்கத் தந்தை அதை வெட்ட வேண்டும் என்ற நிபந்தனைக்கு அந்தப்பெண் உட்பட நேர்ந்தது பற்றியோ எங்கும் எவராலும் பெரிதுபடுத்திச் சொல்லப்படவில்லை. படையல் செய்வதற்காகக் குழந்தையை நீராட்டும்போது,அது நிவேதனப்பொருளாகப் படைக்கப்படப் போகிறதே என்ற அச்சத்துடன் உச்சிமுகர்ந்து அதற்கு முத்தம் கொடுக்கக்கூடத் தயங்குகிறாள் அந்த அன்னை. ‘மையும் கண்ணின் மருங்கொதுக்கி, மஞ்சள் அழிந்த அதற்கு இரங்கி’ என்று உள்ளுக்குள் புலம்புவதைத் தவிர வேறு எந்த வகையிலும் தன் துன்பத்தை வெளிக்காட்டி ஆற்றிக்கொள்ள அந்தத்தாய்க்கு வழியில்லை.இங்கும் காப்பியம் முதன்மைப்படுத்துவது கணவர் சொல்லை மறுக்காமல் ஏற்ற அவரது மனோதிடத்தை மட்டுமே.
இறைப்பற்று என்ற குறிப்பிட்ட ஒரே நோக்குடன் பெரும்பாலும் ஆண் அடியார்களின் பெருமையைச் சிறப்பிப்பதற்காக, ஆண் நோக்கில் -ஆண் புலவரால் பாடப்பட்ட ஒரு காப்பியத்தில் பெண்ணின் உணர்வுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாததில் வியப்பில்லை. ஆனால் அப்படிப்பட்ட ஒரு பார்வையுடன் பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடும் சேக்கிழாராலும் கூட ஒரு சில இடங்களில் பெண்களின் தன்மானக்குரல்களை முன் வைக்காமல் முற்றாகத் தவிர்த்து விட முடியவில்லை..
முகம் கரைந்து போய்க் குரல் தேய்ந்து போன அடியவர்களின் மனைவியரே அதிகமாக உள்ள அந்தக்கூட்டத்துக்கு நடுவிலிருந்து, பெயர் குறிப்பிடப்படாத திருநீலகண்டரின் மனைவியும், சுந்தரரின் இரண்டாவது மனைவியான பரவை நாச்சியாரும் தன்னுணர்வு கொண்ட உரமான பெண்களாக வெளிப்பட்டிருப்பது வியப்புக்குரியதுதான்.
மைந்தனைக் காணிக்கையாக்க முன்வந்த சிறுத்தொண்டரைப் பாராட்டிய அதே தொனியில்...
"மாது சொன்ன சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லேன்"என்று திருநீல கண்டரையும் சிறப்பித்துப் பாடுகிறார் பட்டினத்தார். இளமை துறந்த திருநீலகண்டரின் மன உறுதி ஒரு புறம் இருக்க, அதை அவர் துறக்குமாறு தூண்டிய அந்தப்பெண்ணின் மனத்திண்மையும்
உறுதியோடு அவர் சொன்ன சூளுரையின் வீரியமுமே மந்தைக் கூட்டத்திலுள்ள பிறரிடமிருந்து அவரை வேறுபடுத்தி நம் கவனத்தைக் கவரக்கூடியவை.
மண்பாண்டங்கள் செய்வதோடு சிவத்தொண்டும் செய்து வந்தவர் திருநீலகண்டநாயனார். அருந்ததி போன்ற கற்புடைய மனைவியாருடன் இல் வாழ்க்கை நடத்தி வருகையில் "இளமை மீதூர இன்பத் துறையில் எளியரானார்" என்று போகிற போக்கில் மிக இயல்பானதொரு நடப்பாக அவர் விலைமகளிரிடம் சென்ற செயலைச் சொல்லிவிட்டுப் போய் விடுகிறது பெரியபுராணம். அதை அறிந்து கொண்ட அவரது மனைவி, இல்வாழ்க்கைக்குரிய பிற எல்லாக் கடமைகளையும் செய்து விட்டு அவரோடு உடலுறவு கொள்ள மட்டும் உறுதியாக மறுத்து விடுகிறார்.
“கற்புறு மனைவியாரும் கணவருக்கு ஆனவெல்லாம் பொற்புற மெய்யுறாமல் பொருந்துவ போற்றிச் செய்ய..”
என்று அந்த நிகழ்வைச் சித்தரிக்கிறது காப்பியம். இப்படிப்பட்ட தருணங்களில் பெண்கள் வழக்கமாகக் கொள்ளும் மிக இலேசான ஊடல்தான் அது என்று எண்ணும் கணவர், அவரை சமாதானப்படுத்தி அணைத்துக் கொள்ள முற்படுகையில் 'தீண்டுவீராயின் எம்மைத் திருநீலகண்டம்' என்று சினத்தோடு ஆணையிட்டு விடுகிறார் மனைவி. கணவர் தினமும் எந்தக்கடவுளின் பெயரை உச்சரிக்கிறாரோ அதே கடவுளின் பெயரால் ஆணையிட்டபடி ஒரே நொடியில் தன் மறுப்பையும் எதிர்ப்பையும் அழுத்தமாக அவர் பதிவு செய்த பிறகு திருநீலகண்டருக்கு வேறு வழியே இல்லாமல் போகிறது.அதன் பிறகு முதுமை வரும் வரையில் இருவரும் அந்தச் சூளுரையைக் காத்ததும், திருவோட்டை மறைத்து வைத்து இறைவன் நிகழ்த்திய திருவிளையாடலின்போதும் கூட மனைவியின் கையைத்தீண்டாமல் ஒரு கழியின் இரண்டு நுனிகளையும் பிடித்து இருவரும் பிடித்து சத்தியம் செய்ததும், அது முடிந்ததும் கழிந்த இளமையை இருவரும் மீண்டும் பெற்று ஒன்றிணைந்ததும் புராணத் தொன்மங்கள்.
அவற்றையெல்லாம் விட இந்த வரலாற்றில் நம்மை சுவாரசியப்படுத்துவது. 'தீண்டுவீராயின் எம்மைத் திருநீலகண்டம்' என்று அந்தப் பெண் இட்ட வஞ்சினமே.
“எம்மை என்றதனால் மற்றைய பெண்களையும்
என் மனத்தினாலும் தீண்டேன்” என்று திருநீலகண்டரை சபதம் செய்யத் தூண்டுவதும், முதுமைப்பருவம் வரை அதே உறுதியோடு அவரை இருக்க வைத்ததும், ஓடு காணாமல் போன வழக்கில் மனைவியின் கரம் பற்றிக்குளத்தில் மூழ்கி சத்தியம் செய்து தருமாறு பலரும்கேட்டுக்கொண்டபோதும்,
‘எங்களில் ஒரு சபதத்தால் இருவரும் இணைந்து கைகளைப் பிடித்துக்கொண்டு மூழ்க வழியில்லை,குளத்தில் நான் மட்டும் மூழ்கிச் சத்தியம் செய்து தருவதே போதும்’
என்று திருநீலகண்டரைத் தயக்கத்தோடு சொல்ல வைத்ததும், இறுதியில் மிகவும் வற்புறுத்தப்பட்ட கட்டத்தில் தண்டின் நுனிகளை இருவரும் பிடித்து சத்தியம் செய்யலாம் என்று முடிவெடுக்க வைத்ததும் - இவை அனைத்துக்கும் காரணம் உள்ளத் திண்மையோடு அந்தப்பெண்ணிடமிருந்து வெடித்துத்தெறித்த உறுதியான மறுப்பும் அவர் இட்ட ஆணையுமே. இறைவன் மீது ஆணையிட்டதால் அவர் அஞ்சியிருப்பார் என்ற வாதம் ஒருபுறம் இருக்க…,தான் செய்த செயலுக்கு மனைவியிடமிருந்து அப்படிப்பட்ட காட்டமான ஓர் எதிர்வினையை அவர் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் இருந்திருக்க வேண்டும். வீட்டுக்கு வீடு தினசரி நடப்பாக,மிகவும் சாதாரணமான-அற்ப விஷயமாக எடுத்துக்கொள்ளப்பட்டு வந்த ஒரு நிகழ்வுக்கு மனைவி காட்டிய மிகக்கடுமையான அந்த அறச்சீற்றம்,அசாதாரணமானதாக…அவரை அச்சுறுத்துவதாகக்கூட இருந்திருக்க வேண்டும். கணவனாகவே இருந்தாலும் தன் சம்மதம் இன்றி - தான் இசைவளிக்காமல் தன்னைத் தீண்ட முடியாது என்ற உறுதியான மறுப்பைத் தமிழ் இலக்கிய வெளியில் முதன் முதலாகப் பதிவு செய்து ஒற்றைத் தனிக்குரலாக அதை ஒலிக்க விட்டிருப்பவர் திருமதி திருநீலகண்டர் என்றே துணிந்து சொல்லி விட முடியும்.
அயல் ஒருத்தியிடம் சென்று வந்த கணவரை ஏற்க எதிர்ப்புக் காட்டிய மற்றொரு பெரிய புராணப்பெண், சுந்தரரின் முதல் மனைவியாகிய பரவை நாச்சியார். தேவர் உலகப் பெண்களாகிய கமலினியும்,அநிந்திதையும் ஒரு சாபத்தால் மண்ணுலகில் பரவை,சங்கிலி என்று பிறப்பெடுத்து வந்து சுந்தரருக்கு மனைவியாகிறார்கள் என்கிறது தொன்மம். இவர்கள் இருவரில் முதலில் திருவாரூரில் பரவையை மணந்து கொண்ட சுந்தரர் பல சிவத்தலங்களை சுற்றிவிட்டு திருவொற்றியூரில் சங்கிலியைத் திருமணம் செய்து கொள்கிறார்.அது பரவையை எட்டிவிடப் பலகாலம் கழித்து சுந்தரர் தன்னை நாடி வரும்போது அவரை ஏற்பதற்குக் கடும் எதிர்ப்புக் காட்டுகிறார் பரவை. உலக நடப்புத் தெரிந்த ஒரு சிலரைப் பரவைக்கு புத்திமதி சொல்லுமாறு சுந்தரர் அனுப்பி வைக்கிறார். “எம்பிராட்டிக்கு இது தகுமோ” என்ற ரீதியில் அவர்களும் பலவாறு பரவைக்கு ‘நீதி’ புகட்ட முயல, எடுத்த எடுப்பிலேயே அதை நிராகரித்து விடுகிறார் பரவை. ‘இன்னும் ஒரு தடவை அவரை ஏற்குமாறு சொன்னால் என் உயிரைப்போக்கிக் கொண்டு விடுவேன்’ என்று அவர் திட்டவட்டமாகச் சொல்லிவிட, அவர்களும் அச்சத்தோடு திரும்பி வந்து சுந்தரரிடம் அந்தச் செய்தியைச் சொல்கிறார்கள். தம்பிரான் தோழராகக் கருதப்படும் சுந்தரர் சிவபெருமானையே தனக்குத் தூதாகப் பரவையிடம் செல்லுமாறு வேண்டிக் கொள்ள, அவரும் இருமுறை தூது செல்கிறார். முதல் முறை சிவனடியார் கோலத்தில் செல்லும்போது அவரை உபசரித்து,அவர் அங்கே வந்த காரணம் பற்றிக்கேட்கிறார் பரவை. ‘நீ மறுக்காமல் ஏறுக்கொண்டால் சொல்வேன் ” என்று வந்தவர் சொல்ல, அது இன்னதென்பதை உடனே ஊகித்து விடும் பரவை, “அது எனக்கு இசையுமாகில் செய்வேன் “என்று மட்டுமே சொல்கிறார். சிவனடியார் கோலத்தில் எவர் வந்து எது கேட்டாலும், எதைப்பற்றியும் சிந்திக்காமல் அதைத் தட்டாமல் ஏற்றுக்கொண்டு ஒத்துப் போகும் ஆண் நாயன்மார்களுக்கு நடுவே, ‘எனக்கு ஒத்து வந்தால் மட்டுமே செய்வேன்’ என்ற உள்ள உறுதியைக் காட்டுவதன் வழி தான் ஒரு தனித்த ஆளுமை என்பதை வெளிக்காட்டி விடுகிறார் பரவை. சிவனடியார் கோலத்தில் வந்த இறைவன்,சுந்தரரின் கோரிக்கையை முன்வைக்க, ‘திருவொற்றியூரில் சங்கிலியோடு தொடர்பு வைத்துக்கொண்டிருப்பவருக்கு இங்கென்ன வேலை’ என்று சினத்தோடு பதிலடி தந்தபடி
அதை உறுதியாக நிராகரித்தும் விடுகிறார்.
சுந்தரருக்காக இரண்டாவது முறையும் தன் உண்மை உருவிலேயே சிவபெருமான் தூது சென்றதாகவும் அது இறைவன் என்று அறிந்த பிறகு, தன் பக்தனுக்காக, நண்பனுக்காகப் பாதம் வருந்த இரவு முழுவதும் அவர் உழன்றதைக்கண்டு “என் செய்கேன் இசையாது” என்று அரை மனதோடு பரவை அதை ஒத்துக் கொண்டதாகவும் வரலாறு முடிவடைகிறது.கணவரின் புறத்தொழுக்கத்தை ஏற்கச்சொல்லித் தூது வந்த ஊர்ப் பெரியவர்களிடமும் சிவனடியார் வடிவில் வந்த சிவபெருமானிடமும் மூன்று முறை மறுப்புச்சொல்லியபடி கணவரின் புறத்தொழுக்கத்தை ஏற்க மறுக்கும் தனது மன உறுதியைத் திட்டவட்டமாகக் காட்டும் பரவை, பெரியபுராணப் பெண்மாதிரிகளிலிருந்து பெரிதும் வேறுபட்டு நிற்கிறார்.
பொதுவாகத் திருமணம் கடந்த பந்தத்தில் கணவன் இருப்பதை அறிய நேரும் எந்தப்பெண்ணும் அதற்கு
எதிர்ப்புக் காட்டுவதும்,அவனிடமிருந்து விலக்கம் காட்டுவதும் - நிலைமை தீவிரமாகும் அடுத்த கட்டத்தில் சட்டத்தின் துணையை நாடி விவாகரத்து வரை செல்வதும் மிக இயல்பாக ஏற்கப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் பரவையும்,திருநீலகண்டரின் மனைவியும் காட்டியுள்ள குறைந்தபட்ச எதிர்ப்புக்களில் பெரிதுபடுத்திச் சொல்ல ஏதுமில்லை என்று நமக்குத் தோன்றக்கூடும்.
எனினும் குறிப்பிட்ட அந்தக் காலகட்டத்தின் பின்புலங்களை, அவற்றின் முன்வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ளும்போதுதான் அந்த மிகச் சிறிய எதிர்ப்பை வெளிப்படுத்துவதும் கூட அந்தப் பெண்களின் வாழ்நிலையில் எப்படிப்பட்ட அசாத்தியமான ஒரு செயலாக இருந்திருக்க முடியும் என்பதையும்,தங்கள் சுயத்தைக் காத்துகொள்ள அவர்கள் எந்த அளவு போராடி இருப்பார்கள் என்பதையும் புரிந்து கொள்ளமுடியும்.
இயற்கைக்கு மாறான நிகழ்வுகளைப் புனைந்தபடி அவர்கள் எடுத்த முடிவுகளில் காப்பியம் சில மாற்றங்களைச் செய்திருந்தபோதும் பரத்தமைக்கு எதிரான எதிர்ப்புக்குரல்களே கேட்காத ஒரு காலச்சூழலில், மாற்றுச்சிந்தனையின் முதல் அடியை அழுத்தமாக எடுத்து வைத்திருப்பவர்கள் என்ற வகையில் அவ்விருவருவரும் முக்கியத்துவமும்,தனித்துவமும் பெற்றுப் பெண்ணிய வரலாற்றில் நிலைபெற்றிருக்கும் தகுதி பெறுகிறார்கள்.
*****************************
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக