பெண்கள் முன்னிலைப்படுத்தப்படும் - பெண் முதன்மைப்பட்ட ஒரு சமூக அமைப்பு (தாய் வழிச்சமூகம் அல்ல) உருவானால் அது எவ்வாறு இருக்கக்கூடும் என்பதைக் கற்பனையில் கண்டு, அத்தகையதொரு கனவு மயமான குறிக்கோள் (Utopian)சமுதாயத்தை 1945 காலகட்டத்திலேயே தனது நாவல் வழி முன்வைத்திருப்பவர் மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவரான வ.ரா எனப்படும் வ.இராமசாமி ஐயங்கார் என்பது பரவலாகப் பலரும் அறியாத ஒரு செய்தியாக இருக்கலாம். நடப்பியல் தன்மையிலிருந்து மிகவும் வேறுபட்டதாக,அதிபுனைவு நிலையில் எழுதப்பட்டிருக்கும் அவரது ‘கோதைத் தீவு’, தமிழ் நாவல் வரலாற்றில் ‘உயர் கனவு’ நாவல் வகைப்பாட்டில் முதலாவது என்ற சிறப்புத் தகுதியையும் பெற்றிருக்கிறது.
இந்திய நாட்டின் விடுதலைப் போராளிகளில் ஒருவரான வ.ரா., பாரதியின்
சீடர். முதலில் மணிக்கொடி இதழின் ஆசிரியராகவும் பிறகு வீரகேசரியின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். பாரதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவராகத்தான் வ.ரா., பெரும்பாலும் அறியப்படுகிறாரரே அன்றி ஒரு படைப்பாளி என்ற அவரது பக்கம் -ஒரு சில ஆய்வுகள் தவிர- பொதுவான இலக்கியப் பரப்பில் மிகவும் குறைவாகவே கவனப்படுத்தப்பட்டிருக்கிறது.
சுந்தரி (1917), விஜயம்(1934), சின்னச்சாம்பு(1942) என இவர் எழுதிய அனைத்துப் புதினங்களிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளே முன்னுரிமை பெற்றிருக்கின்றன. இவற்றைப் பிரச்சாரப் போக்குடையவை என்று திறனாய்வாளர்கள் மதிப்பிட்டாலும் சமூக மாற்றத்தில் கொண்டிருந்த தீவிரமான நாட்டமே அத்தகைய போக்கைக் கைக்கொள்ள இவருக்குத் தூண்டுதல் அளித்திருக்க வேண்டும். “சமூக சீர்திருத்தத்தில் நம்பிக்கையோ விதவைக் கதைகளில் அனுதாபமோ அற்ற தன்னைக் கூட சுந்தரி என்ற நாவலின் நோக்கம் நெகிழச் செய்து விட்டது” என்பார் விமரிசகரான க.நா. சுப்ரமண்யம்.
தன் காலகட்டத்தில் நிலவிய பெண்களின் அவல நிலையை மேற்குறித்த நாவல்களில் நடப்பியல் போக்கில் காட்டியதோடு வ.ராவின் உள்ளம் அமைதியுறவில்லை. எதிர்காலத்தில் பெண் உயர்நிலை அடைவதை ,ஆட்சி செலுத்துவதை, பெண் ஆதிக்கம் முதன்மை பெறும் சமூக அமைப்பு உருவாவதைக் கற்பனையிலாவது கண்டாக வேண்டும் என்று அவர் கொண்ட விழைவின் விளைவாக உருவான படைப்பே கோதைத்தீவு என்னும் ‘உயர் கனவு’ நாவல்.
‘இலட்சிய சித்திரம்’ என்று ‘கோதைத்தீ'வை மதிப்பிடும் தமிழ் நாவல் ஆராய்ச்சியாளர்களான திரு சிட்டியும், சிவபாதசுந்தரமும் "இலக்கிய உணர்வின் பயனாக நாவல்கள் பிறந்து வந்த ஒரு காலகட்டத்தில் பெண்ணுரிமையை இலட்சியப்படுத்தி ஒரு சோதனை நாவலாகக் கோதைத் தீவை எழுதியவர் வ.ரா" என்று குறிப்பிடுகின்றனர். புதுமைப் பெண்ணைப் பற்றி பாரதி கண்ட கனவு கவிதையாக உருப்பெற்றது போலவே
வ.ரா. கண்ட கனவு, நாவலாக வடிவம் பெற்றிருக்கிறது.
நாடு விடுதலை பெற வேண்டுமென்றால்,சமூக விடுதலை- குறிப்பாகப் பெண் விடுதலையே அதற்கு அடிப்படையாக அமையக்கூடியது என்ற நிலைப்பாட்டிலும் பாரதியை அடியொற்றிச் செல்லும் வ.ரா.,
‘ஆணோடு பெண் சரி நிகர் சமானமாக வாழ்ந்திருந்தால் இந்த நாட்டின் ஆட்சி நம்மவர்களின் கையை விட்டுப் போயிருக்காது’என்ற தனது ஆதங்கத்தை நாவலின் முன்னுரையில் பதிவு செய்கிறார். புனைவின் வழியாகவாவது அந்த ஏக்கத்தைப் போக்கிக்கொள்ள அவருள் விளைந்த அகத்தூண்டுதலும், மன எழுச்சியுமே ‘கோதைத்தீவு’ எழுந்ததற்கான அடிப்படைக் காரணிகள்.
"கோதைத் தீவு என் நீண்ட கால முயற்சி,
நம் நாட்டில் பெண் அடிமையாகப் பிறக்கிறாள் வளர்கிறாள், இறக்கிறாள் அவளுக்கு சொத்துரிமை கிடையாது. இளமையிலேயே தாலி இழந்தால் மறு விவாக பாத்தியம் கிடையாது. மேல்படிப்பு படித்து உயர்ந்த உத்தியோகங்களுக்கு அவர்கள் வர முடியாது. வாய்விட்டு சொல்ல சந்தர்ப்பமும் தைரியமும் உண்டாகுமாகில் பெண்கள் என்ன சொல்வார்கள் என்பதையும்,என்ன செய்வார்கள் என்பதையும் ‘கோதைத்தீவு’ என்ற கற்பனையின் மூலமாக என் சகோதர ஆண்மகன்களுக்கு எடுத்துக் காண்பிக்க எத்தனித்திருக்கிறேன்.” என்று தன் நோக்கத்தைப் படைப்பின் தொடக்கத்திலேயே தெளிவுபடுத்தி விடுகிறார் வ.ரா.
இந்த நாவலின் கதை மிகவும் சுருக்கமானது. நாடோடியாய் அலையும் கணபதிராயன், தன்னைப்போலவே ஊர் ஊராய்ச் சஞ்சரிக்கும் பூபதிராயனைத் தற்செயலாய் எதிர்ப்படுகிறான். பெண் விடுதலையில் ஆர்வம் கொண்டிருக்கும் பூபதிராயன், பெண் ஆட்சி செய்யும் நாடு உண்டா என்று தேடிக் கண்டுபிடிக்க விருப்பம் தெரிவிக்க, இருவருமாய்க் கூச்சல்பட்டி என்ற ஊரை வந்து அடைகிறார்கள். அங்கே நடந்த பொதுக்கூட்டத்தில் கோதைத்தீவைச் சேர்ந்த மாணிக்கக் கோதையாரின் சொற்பொழிவைக் கேட்டுவிட்டு, அந்தத் தீவுக்குச் செல்கிறார்கள். அங்கே அவர்கள் காணும் காட்சிகள், கலந்து கொள்ளும் நிகழ்வுகள்,அங்கே நிலவும் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் வழியே கோதைத் தீவில் நிலவும் மாறுபட்ட சமூக அமைப்பை எடுத்துக்காட்டுகிறார் வ.ரா.
கற்பனைச் சமூகமான கோதைத் தீவின் வாழ்க்கைத் தத்துவமே பெண் சுதந்திரத்தை மையம் இட்டதாக அமைந்திருக்கிறது.மரபு வழிச்சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு மாற்றாக இந்தப் புதிய சமுதாயம் பெண்களாலேயே உருவாக்கப்படுவதை நாவல் இவ்வாறு விவரித்துக்கொண்டு போகிறது.
" இந்தத் தீவுக்குத் துவக்கத்தில் நூறு பெண்கள் வந்தார்கள் அவர்கள் உழைத்துப் பாடுபட்டு நாரிபுரியின்(தீவின் தலைநகரம்)அடித்தளத்தை உண்டாக்கினார்கள். இந்த நூறு பெண்களும் ஏன் இங்கு தனியாக- துண்டாக ஆண்களைக் கூடக் கூட்டிக்கொள்ளாமல் வரவேண்டும்? ஆண் மக்கள் பெண்களைப் படுத்தும் பாட்டைப் பொறாதவர்களாய் இந்த நாட்டுக்குக் குடியேறி வந்தார்கள். பத்து ஆண்டுகள் வரை தாங்களே உழைத்துப் பயிர் செய்து நாரிபுரியைக் கண்டார்கள். பத்து ஆண்டுகளுக்குப் பின், பெண் விடுதலையில் நாட்டம் உள்ள ஆண் பிள்ளைகள் இங்கு வந்தனர். அவர்கள் நூறு கன்னிமார் வகுத்த சட்ட திட்டங்களை ஒப்புக்கொண்டு வாழ்ந்து வந்து இவர்களுடன் மண உறவு செய்து கொண்டார்கள்."
பெண் விடுதலைக்கு ஆண்டாளையே முன்னோடியாகக் கொள்ளும் கோதைத் தீவு மக்கள், அவள் பெயரையே அந்தத் தீவுக்குச் சூட்டியிருக்கிறார்கள்.
ஆண்களின் ஆதிக்கப் போக்கையும் சிறுமைக் குணத்தையும் கண்டு மனம் நொந்து அவர்களைப் புறக்கணிப்பதற்காகவே ‘மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய்’ என்று நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பாடியதாக நாவலில் மீள்வாசிப்பு செய்கிறார் ஆசிரியர். இந்தக்காரணத்தினாலேயே புதியதாக உருவான பெண்ணாதிக்கம் நிலவும் சமூக அமைப்பு அவள் பெயரால் கோதைத் தீவு என்று வழங்கப்படுகிறது.
பெண் விடுதலை பற்றிய ஆசிரியரின் எண்ணங்கள் குறிக்கோள் நிலையில் வெளிப்படப்பட்டபோதும், பெண்மைச் சமத்துவமற்ற நிலையினை நடப்பியல் கண்ணோட்டத்திலும் நாவல் சித்தரிக்கிறது.
"பெண்ணை இந்த தேசத்திலே மனுஷ ஜென்மம் கொண்டவளாகவே கருதவில்லை. அவள் ஆண் பிள்ளையின் சொத்தாகத்தான் பாவிக்கப்பட்டு வந்திருக்கிறாள்" என்று கணபதிராயனும் பூபதிராயனும் நிகழ்த்தும் உரையாடலில் சுட்டும் ஆசிரியர்,அடிமை நிலைக்குத் தாழ்த்தப்பட்ட காரணத்தினாலேயே கணவனுக்குத் துணையாக இருக்க இயலாமல் சுமையாக மாறிப் போகிறாள் பெண் என்றும் குறிப்பிடுகிறார்.
நடப்பியல் சமூகத்தில் பெண்ணுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டதையும்,பொருளாதாரப் பாதுகாப்பு இன்மையால் முறை பிறழ்ந்த உறவு கொள்ளும் நிலைக்கு அவள் தாழ்ந்ததையும், பெண்ணைத் தேவதாசி ஆக்கும் கொடுமையையும் விரிவாக எடுத்துக்காட்டி அவளுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையை விளக்கும் நாவல், அத்தகைய சமூகத்துக்கு மாற்றாக ஒரு இலட்சிய சமூகத்தை நம் கண் முன் விரித்துக்கொண்டு போகிறது. முழுவதும் குறைகளே நிரம்பிய ஒரு சமூகத்தை நடப்பியல் நிலையிலும்,குறைகள் சிறிதும் அற்ற பூரணத்துவம் பெற்ற ஒரு சமூகத்தைக் கனவு நிலையிலும் நாவல் சித்தரிக்கிறது. நடப்பியல் ஆணாதிக்க சமூகத்தில் நிலவும் குறைபாடுகள் களையப்பட்டுப் பெண்ணுரிமைத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுவதை விரிவான பல கோணங்களில் வ.ரா விவரித்துக் காட்டுகிறார்.
கோதைத்தீவில், பெண் சார்ந்தவையே முதன்மை பெற்றாலும் ஆணினத்தை அடியோடு வெறுத்து ஒதுக்கும் போக்கு இல்லை. ஆனால் இங்கே வாழும் ஆண்கள் பெண்களை மதிப்பவர்களாக ,அவளது சுதந்திரப்போக்கை ஏற்பவர்களாக இருந்தாக வேண்டும் என்பது மட்டும் கட்டாய விதிமுறையாக வலியுறுத்தப்படுகிறது. நடப்பியல் சமூகத்தில் பெண் இழிவு படுத்தப்படுவது போலக் கற்பனைச் சமூகத்தில் ஆண் இழிவுபடுத்தப்படுவதில்லை. பெண்ணைப் போலவே அவனும் சமூகத்தில் உரிய அந்தஸ்தும் கௌரவமும் பெறுகிறான்.
கட்டாயத் திருமணம், சீதனம் ஆகிய கொடுமைகள் இந்தச்சமூகத்தில் இல்லை. திருமணங்கள் அவரவர் விருப்பப்படியே நிகழ்கின்றன. திருமண வயது 20 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. காதல்,கலப்புத் திருமணங்களுக்கு எதிர்ப்பு இல்லை, திருமணங்கள் சுயம்வர முறையில் நடைபெறுகின்றன. அத்துடன் கூடவே பெற்றோர் சம்மதமும் கேட்டுப் பெறப்படுகிறது. கணவனை இழந்த மனைவியும், மனைவியைஇழந்த கணவனும் திருமணம் செய்து கொள்வதற்குத் தீவின் சட்டம் அனுமதிக்கிறது. விதவை என்ற சொல் பெண்ணுக்கு மட்டுமே வழங்கப்படுவதால் அது தவிர்க்கப்பட்டுக் கணவனை இழந்த பெண் மூளி என்றும் மனைவியை இழந்த கணவன் மோழை எனவும் ஒத்த நிலையில் அங்கே அழைக்கப்படுகின்றனர்..
"கைம்பெண் நிலைமை சாஸ்வதமான நிலைமை. எனவே அதற்கு சொல் ஏற்பட்டுவிட்டது. தாரம் இழந்த புருஷன் நீண்ட காலத்துக்கு மறு விவாகம் செய்து கொள்ளாமல் இருப்பதில்லை. எனவே அந்த நிலைமை சாஸ்வதம் இல்லை, ஆகவே அதற்குத் தனியாக சொல் தேவையாக இருக்கவில்லை" என்று மனைவியை இழந்த கணவனுக்குத் தனிப்பெயர் எதுவும் வழங்கப்படாததற்குக் காரணமும் சொல்லப்படுகிறது. மறுமணம் புரியும் உரிமை இருபாலருக்கும் அளிக்கப்படுகிறது.
குடும்ப வாழ்விலும் பொது வாழ்விலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒத்த பங்கு அளிக்கப்படுகிறது. அரசியல் பொறுப்பிலும், சமயக் கடமைகளிலும் போர்த் தொழில் பயிர்த் தொழில் ஆகியவற்றிலும் பெண்ணும் பொறுப்பேற்கிறாள். நாவல் எழுதப்பட்ட குறிப்பிட்ட காலகட்டத்தில் ஆணுக்கு மட்டுமே உரியது என மரபு வழி சமூகத்தில் கருதப்பட்ட பல செயல்களைப் (படகோட்டுதல்,காவல் துறையில் பங்கு ,அரசியல் நிர்வாகம், பயிர்த்தொழில் பயிற்சி, போர்ப் பயிற்சி, தேகப் பயிற்சி, நீச்சல், கோயில் பூசை, குஸ்தி விளையாட்டு) பெண்களும் மேற்கொள்கிறார்கள். அதே போலப் பெண்ணுக்கு மட்டுமே உரியவை என ஒதுக்கப்பட்டு இருந்த பொறுப்புக்கள் - குறிப்பாக சமையல் முதலியவை ஆணுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன.
"இந்த நாட்டில் முக்கியமாக ஆண் பிள்ளைகளுக்கு ஓராண்டு கட்டாய சமையல் பயிற்சி போதிக்கப்படுகிறது. எந்த வீட்டிலும் ஆணுக்குத் தோதில்லாத சமயத்தில் பெண்ணும் பெண்ணுக்குத் தோதில்லாத சமயத்தில் ஆணும் சமைக்க வேண்டும். ஒருவரும் முணுமுணுக்கலாகாது.”
இரு பாலாருக்குமே கட்டாய இராணுவப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
"சுதந்திரமுள்ள பெண்களுடன் பிறவி முதல் பழகி வரும் ஆண் குழந்தைகள் திமிருடனும் பொய் கவுரவத்துடனும் வளர மாட்டார்கள்" என்ற நோக்கத்துடன் இளமைப் பருவம் முதலாகவே ஆண் பெண் குழந்தைகள் வேறுபாடு இன்றி வளர்க்கப்படுகிறார்கள். ஆண்களும் பெண்களும் சேர்ந்து பயிலும் பள்ளிகளே சமூகத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பெண்ணுக்கு இன்றியமையாமல் இருக்க வேண்டிய உணர்வுகளாகச் சொல்லப்படும் போலி நாணம்,பொய்க்கூச்சம் முதலிய உணர்வுகள் இங்கே முற்றிலுமாய் அகற்றப்படுகின்றன.
‘ நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்’ என்று கவி பாடிய பாரதி போல, 'நாணம் என்று சொல்லே இந்த நாட்டில் வழங்கப்படுவதில்லை அதற்கு தேவையான சந்தர்ப்பமும் உணர்ச்சியும் இந்த நாட்டில் கிடையாது’ என்கிறது நாவல். கூச்சப்பட்டுக் கொண்டு ஆண்களோடு பழகுவதைத் தவிர்க்காமல் வயதொத்த ஆண்களும் பெண்களும் மரியாதையுடனும், கூச்சம் இல்லாமலும் பேசிக்கொள்வார்கள். பெண்களை ஏளனப்படுத்தும் இழிவுபடுத்தும் ஆண்கள் மட்டுமே இங்கு கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
பெண்ணினத்தை இழிவு படுத்தும் இலக்கியங்கள் தீவில் உறுதியாகத் தடை செய்யப்படுகின்றன.
" பெண்ணுக்கு உயர் உதவி கிடையாது என்று கூறும் நூல்களும் புராணங்களும் இந்த நாட்டில் தலை காட்ட முடியாது. பட்டினத்துப் பிள்ளையார் பாடல்களை இந்த நாட்டில் எவரும் படிக்கலாகாது என்பது கண்டிப்பான உத்தரவு.கம்பன் புகழேந்தி தாயுமானவர் எழுதிய நூல்கள் பரிசோதிக்கப்பட்டுப் புதிய பதிப்புகள் இயற்றப்பட்டு வருகின்றன’’ என்பது நாவல் முன் வைக்கும் ஒரு தனித்துவம். தையலை உயர்வு செய்யும் பாரதிக்கும் ஔவைக்கும் ஆண்டாளுக்கும் இங்கே விழா எடுக்கப்படுகிறது.
பெண்ணிய நோக்கில் பழைய புராணக் கதைகளுக்குப் புது விளக்கங்களும், மறுவாசிப்புக்களும் தரப்படுகின்றன. பொது இடங்களில் நடைபெறும் நாடகங்களிலும் கூட அவற்றுக்கே முதன்மை தரப்படுகிறது. இராமாயணத்தில் இடம்பெறும் துணைப்பாத்திரமான அகலிகையின் கிளைக்கதை, மணிக்கொடி எழுத்தாளரான புதுமைப்பித்தனால் சாப விமோசனம் என்ற சிறுகதையாகக் கற்பனை வடிவம் பெற்றது போலவே பிறிதொரு மணிக்கொடி எழுத்தாளரான
வ.ராவின் வழியாக நாவலில் பெண்ணியக் கண்ணோட்டத்தில் மாற்றம் பெறுகிறது. தீவில் நிகழும் நாடகம் ஒன்றில் அகலிகையின் வழக்கு மறு ஆய்வு செய்யப்படுவதாகவும், அகலிகையின் இளமையைத் தன் தவவாழ்க்கையால் வீணாக்கியதோடு அவளைக் கல்லாகுமாறும் சபித்த கௌதமனே குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்படுவதாகவும் தன் படைப்பில் கற்பனை செய்கிறார் வ ரா.
ஆணாதிக்க சமூகம் அடிமைப்பட்டுக் கிடப்பதற்கு மாறாகப் பெண்ணாதிக்கம் பெற்ற சமூகம் பொதுவான பிற வகைகளிலும் முன்னேற்றம் அடைந்து தன்னிறைவு பெற்றிருப்பதையும் நாவல் விரிவாக விளக்குகிறது. ஏற்றத்தாழ்வற்ற சமூக அமைப்புக்கு எடுத்துக்காட்டாக எல்லோருக்கும் ஒரே வகையான வீடுகள், சாராயக்கடைகள் இல்லாமல் இருப்பது, காவல் நிலையங்களில் குற்றவாளிகள் கண்ணியமாக நடத்தப்படுவது, கல்விச்செலவை அரசே ஏற்பது , ஒவ்வொருவருக்கும் நிலம் வீட்டு மனை ஆகியவை ஒதுக்கப்படுவது , அவரவர் நிலங்களை அவரவரே உழுது பயிரிடுவது,திருமணம் மரணம் ஆகிய இரண்டு செலவுகளும் ஊர்ப் பொதுச் செலவாகப்பகிர்ந்து கொள்ளப்படுவது என்பது போன்ற பல சீர்திருத்தங்கள், பெண் முதன்மை பெற்ற கோதைத்தீவின் சமூக அமைப்பில் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன. வீட்டுக்கென்று மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த பெண், தலைமைப் பொறுப்பேற்றுச் செயல்படும்போது பெண் சமூகம் மட்டுமன்றி ஒட்டு மொத்த சமூகமே சீர்மையும் செம்மையும் பெறும் என்பதே நூலாசிரியர் இதன் வழி உணர்த்த விரும்பும் செய்தி.
மாற்றங்கள் பல நேர்ந்திருக்கும் இன்றைய சூழலில் வைத்துப்பார்க்கும்போது வ.ரா முன் வைத்திருக்கும் பல சீர்திருத்தங்கள் நமக்கு மிக எளிதானவையாக.., பொருட்படுத்த வேண்டாதவையாக,ஏன்…வேடிக்கையானவையாகக்கூடத் தோன்றலாம். ஆனால் இன்றைய நிலையிலும் பெண்ணியவாதிகளால் தொடர்ந்து வற்புறுத்தப்பட்டுச் செயலாக்கம் பெறாமலிருக்கும் பல திட்டங்கள், முற்போக்கு நிலைப்பாடுகள் ஆகியவற்றை - இந்திய விடுதலைக்கும் முற்பட்ட ஒரு காலகட்டத்திலேயே கூரிய எதிர்கால நோக்குடன் சிந்தித்து, வித்தியாசமான தனது படைப்பின் வழியாக அவர் முன்னெடுத்திருப்பதும், இன்றைய பின் நவீனச்சிந்தனைகளில் ஒன்றான புராண மறுவாசிப்புக்கள் போன்றவை நாவலில் இடம்பெற்றிருப்பதும் அந்தப்படைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி, நிராகரிக்க முடியாத ஒன்றாக அதை ஆக்கிவிடுகின்றன.
அரசியல் சமூக அமைப்புக்கள் அப்பழுக்கின்றிச் செயல்படும் ஓர் அதீத அற்புதத் தீவை 1516 ஆம் ஆண்டில் கற்பனையாகப் படைத்துக் காட்டிய சர் தாமஸ் மூரின் Utopia வைப் போலவே எல்லா வகையிலும் மேம்பட்ட ,உயர் நிலை எய்திய ஒரு பெண்முதன்மைச் சமூகத்தின் இலட்சிய உருவகமாக- ஒரு பரிசோதனை முயற்சியைப்போல வ.ரா உருவாக்கிய கோதைத் தீவும்
பெண்ணிய இலக்கிய வரலாற்றில் என்றென்றும் பதிவு செய்யப்பட வேண்டிய அரிதானதொரு ஆவணமாக, அவரது கனவைச்சுமந்தபடி நிலைத்திருக்கும்.
**************************
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக