துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

19.7.12

’’ஊசியின் விரைந்தன்று .....’’

'நன்றி;
பயணம் இதழ்-கட்டுரைத்தொடர்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-5


இலக்கியப் படைப்புக்கள் ,உருவம், உள்ளடக்கம் ,உத்தி என மூன்று கூறுகளாலேயே கட்டமைக்கப்படுவன.இவற்றுள் உருவ அழகு துலங்குவதும் , உள்ளடக்கம் தெளிவாக விளக்கம் பெறுவதும் உத்தியைப் பொறுத்தே அமைகின்றன.
உத்திகளில் உவமைக்கென்று தனியான ஓர் இடம் உண்டு.பக்கம் பக்கமாக மணிக்கணக்கில் விளக்கிக் கொண்டிருந்தாலும் புரியாத செய்திகள் , உவமையின் வாயிலாக எடுத்துக் காட்டப்படும்போது ஒரே நொடியில் விளங்கி விடுகின்றன.
தலைவன் மீது தலைவி கொண்டிருக்கும் அன்பை நேரடியாகக் கூறுவதை விட 
''நிலத்தினும் பெரிதே
வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே''
என்று உவமைகளைப் படிபடியாக அடுக்கிக் கூறுகையில் அவளது அன்பின் ஆழம் , படிப்பவர்களின் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்து விடுகிறது.

சங்க இலக்கியத்தை உவமை இலக்கியம் என்றே கூறிவிடும் அளவுக்கு அதில் உவமத்தின் பலவகை நுட்பங்களைக் காண முடிகிறது. உலக நடப்பில் இல்லாத ஒன்றை மிகைபட மொழியாமல் நடப்பியல் வாழ்வைக் கூர்த்த பார்வையோடு ஊன்றி நோக்கி உவமையாக்கியவன் சங்கப் புலவன்.சான்றுக்கு ஒரு புறநானூற்றுப் பாடல் !

சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளிக்கும் , மற்போரில் தனக்கு நிகர் எவருமில்லை என்று தோள் தட்டி வரும் ஆமூர் மல்லனுக்கும் இடையே கடுமையான மல்யுத்தப் போட்டி நடக்கிறது. சோழ மண்ணின் மானம் காக்க முயலும் நற்கிள்ளி , மல்யுத்தத்தின் நுணுக்கங்கள் பல காட்டி ஆமூர் மல்லனை வளைக்கிறான் ; ஒடிக்கிறான்.
அந்தக் காட்சி , இயற்கையோடு இயைந்து போய் அதிலேயே ஊறித் திளைத்திருக்கும் சங்கப் புலவருக்கு ,ஒரு பசி கொண்ட மத யானை ,மூங்கில் மரத்தை வளைப்பதையும் , ஒடிப்பதையும் நினைவுபடுத்துகிறது.

''பசித்துப் பணை (மூங்கில்) முயலும் யானை போல''
என்று அன்றாடம் தான் கண்டிருக்கும் காட்சியை இதே சூழலுக்கு உவமையாக்கி அழகு செய்கிறார் அவர்.


போரின் நேர்முக வருணனை ஒருபுறமிருக்க , அந்தப் போரின் இறுதி வெற்றி யாருக்கு , அந்தப் போர் நிகழ்ந்த நேரம் எவ்வளவு என்ற கேள்விகளும் கூடவே எழுகின்றன. குறைவான கால அவகாசத்திற்குள் நிறைவான சாதனைகளைச் செய்து முடிக்கும் திறமைசாலியாக....அற்புதமான ஒரு போராளியாக நற்கிள்ளியை வினோதமான ஒரு உவமை வழியாகத் தனது புறப்பாடலில் காட்டி விடுகிறார் சாத்தந்தையார்.

ஒரு சிற்றூர் . அங்கே கையில் ஊசி ஒன்றைப் பிடித்தபடி கட்டில்பின்னும் ஒரு தொழிலாளி.
ஊரில் திருவிழா நடந்து கொண்டிருக்க எங்கும் ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது.
அவனது மனைவி நிறை மாத கருப்பிணி . 
எந்த நேரமும் அவளுக்குக் குழந்தை பிறந்து விடலாமென்ற நெருக்கடியான சூழல் .
நேரம் ஒரு மழைக் காலத்தின் மாலைப் பொழுது.
இப்படிப்பட்ட நெருக்கடிகளுக்கு இடையே அந்தத் தொழிலாளியின் கையிலுள்ள ஊசி எத்துணை விரைவாக இயங்கியாகவேண்டும்? செயற்கை விளக்குகள் புழக்கத்திற்கு வந்திராத அந்தக் காலகட்டத்தில் ,இருட்டுப் படருவதற்குள் நுணுக்கமான தன் கை வேலையை அவன் முடித்தாக வேண்டும். திருவிழா சமயத்தில் கூடும் கூட்டத்தைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு விழாச் சந்தையில் அதை விற்றுக்காசாக்கினால்தான் மனைவியின் குழந்தைப் பேற்றுக்குப் பொருள் திரட்டுவது அவனால் முடியும் . இவ்வளவு நெருக்குதல்களும் , அழுத்தங்களும் இருப்பதாலேயே அவன் கை ஊசி மிக வேகமாகச் செயல்படுகிறது. பொருள் தேடியே ஆக வேண்டும் என்ற ஊக்கம் , அவனது முயற்சிக்கு உந்துதல் அளிக்க அந்த நெருக்கடியான சூழலிலும் தான் எடுத்த செயலை விரைவாக முடிக்கிறான் அவன்.

ஆமூர் மல்லனோடு நலங்கிள்ளி செய்த போரும் கூட ஒரு வகையில் அப்படிப்பட்டதுதான்.
கட்டில் பின்னும் தொழிலாளிக்குப் பணப் பிரச்சினை என்றால் , நலங்கிள்ளிக்கு மானப் பிரச்சினை.
இந்த இரண்டு சிக்கல்களையும் உவமை என்ற புள்ளியின் வழியாக ஒருங்கிணைத்து , மல்லனோடு நற்கிள்ளி நிகழ்த்திய போர் , கட்டில் பின்னும் தொழிலாளியின் கையிலுள்ள ஊசியின் வேகத்தோடு -அத்தனை விரைவாக முடிந்தது என்பதையும் தன் மற்போரின் திறமையை வைத்து அந்த ஊரையே தனக்கு அடிமையாக்கி விடலாம் என்ற எண்ணத்துடன் வந்த ஆமூர் மல்லனோடு சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி நிகழ்த்திய போர் , எவ்வாறு துரித கதியில் நிகழ்ந்து முடிந்தது என்பதையும் 
’’போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று ’’என்ற உவமையில் மிகச் சுருக்கமாகக் கூறி... மற்போரின் துரிதமான கதியை , இயக்கத்தை வெகு எளிதாக விளக்கி விடுகிறார் கவிஞர்...
''சாறு தலைக் கொண்டெனப் பெண் ஈற்று உற்றெனப்
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
ஊர் கொள வந்த பொருநனொடு
ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே..’’
-சாத்தந்தையார்,புறநானூறு,82.
[சாறு-விழா; பெண் ஈற்று உறல்-கருவுறல்; பட்ட மாரி-மழைக்காலம்; ஞான்ற ஞாயிறு-சூரியன் மறைந்த மாலைப்பொழுது;போழ்தூண்டு ஊசி- கட்டில் நாரைத் துளைபோட்டுத் தைக்கும் ஊசி]

மேலோட்டமான பார்வைக்குச் சம்பந்தமே இல்லாததுபோலத் தோன்றும் வேறுபட்ட இரு செய்திகள் உவமை என்ற கண்ணியால் இணைவதே இப் பாடலின் அற்புதம்.

1 கருத்து :

சித்திரவீதிக்காரன் சொன்னது…

அருமையான பாடல்.
\\நிலத்தினும் பெரிதே
வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே\\ குறிஞ்சிநாடனோடு கொண்ட நட்பை தோழியிடம் விளக்கும் இந்த பாடலை வாசிக்கும் போது ஒரளவு புரிகிறது. அடுத்த பாடலை விளக்கி கூறும் போதுதான் புரிகிறது. இது போன்ற பாடல்களை நீங்கள் விளக்கி எழுதும் போது எல்லோரையும் சங்க இலக்கியம் சென்றடையும். பகிர்விற்கு நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....