துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

17.7.12

மொழி உறவுகள்-தில்லிகை

ஜூலை 14ஆம் நாளன்று நிகழ்ந்த தில்லிகை இலக்கிய வட்டக் கூட்டம் குறைவான பார்வையாளர்களோடு தொடங்கினாலும் நிறைவான மகிழ்வை அளிப்பதாக அமைந்திருந்தது.

இந்தி-தமிழ் உறவு பற்றிப் பேசிய திரு ஷாஜகான் அவர்களின் உரை வங்கம்,மராத்தி,மலையாளம் ஆகிய மொழிகளோடு தமிழுக்கு நேர்ந்திருக்கும் விரிவான தொடர்புகளையும் முன் வைத்தது.
திரு ஷாஜகான்(புதியவன்)

வங்கத்திலிருந்து தமிழுக்கு அரிய பல நூல்களைக் கொணர்ந்த தொடக்க காலகட்டத்தைச் சேர்ந்த த.நா.சேனாபதி,த.நா.குமாரசுவாமி தொடங்கி இன்று அப்பணியை முழு மூச்சாகச் செய்து வரும் கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி வரை பல மொழிபெயர்ப்பாளர்களையும் சுட்டிக் காட்டிய ஷாஜகான், காண்டேகர் மராத்தியில் பெற்ற புகழை விடவும் அவரது மொழிபெயர்ப்பாளராக வாய்த்த கா.ஸ்ரீ.ஸ்ரீயால் தமிழில் பெரிதும் அறியப்பட்டதையும் எடுத்துக் காட்டினார்.இந்தியில் சரஸ்வதி ராம்நாத்தில் தொடங்கி இன்று தொல்காப்பியத்தை இந்தியில் கொணர அரிய முயற்சி மேற்கொண்டுவரும் சாகித்திய அகாதமி விருது பெற்ற எச்.பாலசுப்பிரமணியம் வரை பலரின் செயல்பாடுகளும் அவரது உரையில் விரிவாகக் காட்டப்பட்டன.இன்றைய தலைமுறை இலக்கிய ஆர்வலர்களுக்கு அவரது உரை பெரிதும் முன்மாதிரியாக,பயனுள்ளதாக அமைந்திருந்தது.
[முழுஉரையினையும் திரு ஷாஜகானின் தளத்தில் காணலாம்]

கொங்கணி-தமிழ் உறவு குறித்துப் பேசியவர் ஜே என் யூ பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழ்ச்செல்வன்.
தமிழ்ச்செல்வன்..
கொங்கணி சார்ந்தே தன் முனைவர் பட்டத்தையும் தொடர்ந்து வரும் அந்த மாணவர் முன் வைத்த செய்திகள் அதிகம் அறியப்படாதவை;பரவலான தளத்தில் இன்னும் அறிமுகமாகாதவை.பெரு முயற்சி மேற்கொண்டு கொங்கணி மொழியைக் கற்று அம்மொழியிலிருந்து நேரடியாகவே தமிழுக்கு இரு சிறுகதைகளை மொழிபெயர்த்தும் அளித்திருப்பவர் தமிழ்ச்செல்வன்.அக்கதைகள் அவரது எம் ஃபில்பட்ட ஆய்வேட்டில் இடம் பெறிருப்பதோடு அண்மையில் அவற்றில் ஒரு படைப்பான ’சிடுமூஞ்சி’ என்னும் சிறுகதை ‘திசை எட்டும்’ இதழிலும் வெளிவந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒரு செய்தி.
பார்வையாளர்களில் நான்,பேராசிரியர் நாச்சிமுத்து
ஷாஜகான்,பதிவர் வெங்கட்
’’வெளிச்சத்தைப் பற்றி ஏன் விரிவுரை ஆற்றுகிறாய்..விளக்கை ஏற்று’’என்கிறது அப்துல் ரஹ்மானின் கவிதை ஒன்று...
அத்தகைய சிற்றகல்களை ஏற்றி இளம் நெஞ்சங்களில் இலக்கிய ஆர்வத்துக்கான பொறிகளைப் பதிய வைக்கும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடனான இத்தகைய நிகழ்ச்சிகளும்  இன்றில்லை எனினும் என்றோ...எப்பொழுதோ...எவருக்கோ பலனளிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனஎன்று நானும் ஜே என் யூ பேராசிரியர் திரு நாச்சிமுத்துவும் சொல்லிக் கொண்டோம்...

இக்கூட்டத்துக்கான முன் முயற்சிகளில் முழு வீச்சுடன் இயங்கி வரும் திரு ஸ்ரீதரன் ஐ எஃப் எஸ் அவர்களும் விஜய்ராஜ்மோகன் மற்றும் துணை நிற்கும் நண்பர்கள் அனைவரும் நம் பாரட்டுக்குரியவர்கள்...


2 கருத்துகள் :

kaialavuman சொன்னது…

கலந்து கொள்ள எண்ணியிருந்தேன். சில தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்து கொள்ள முடியவில்லை. தங்களின் தொகுப்பில் தவறவிட்டவைகள் புலனாகின்றன. பதிவிற்கு நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வெளிச்சத்தைப் பற்றி ஏன் விரிவுரை ஆற்றுகிறாய்..விளக்கை ஏற்று’’என்கிறது அப்துல் ரஹ்மானின் கவிதை ஒன்று..

தமிழ் வளர்த்து மிளிரும் அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....