துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

27.8.12

ஓர் உயிர் விலைபோகிறது..!

ஜன சந்தடி மிகுந்த நகர வீதி ஒன்றிலிருந்து நரம்பாய்க் கிளை பிரியும் ஒரு சந்து.அங்கே ஒன்றோடொன்று இடித்து நெருக்கிக்கொண்டு முன்னும் பின்னுமாய்த் தலையை நீட்டியபடி நிற்கும் பழங்காலத்து வீடுகள்.அவற்றுள் ஒன்றின் மாடிப்போர்ஷனில் நடுக்கூடத்திலுள்ள சுவரின் மத்தியில் ஆணி அடிக்கப்பட்டுத் தொங்கும் நான்கு சட்டங்களுக்கிடையில் சிறைப்பட்டுக் கிடக்கிறேன் நான்.புன்னகை என் முகத்தில் உறைந்து போயிருக்கிறது.என்னைச் சுற்றியுள்ள அவலங்களுக்கும் அழுகைகளுக்கும் அப்பாற்பட்ட மனுஷியாக,மூன்றாவது நபராக,அங்கே நடக்கிறவைகளை வேடிக்கை பார்ப்பதில் எனக்குக் கொஞ்ச நாட்களாக ஒரு சுவாரசியமே ஏற்பட்டிருக்கிறது.

‘’என்னைத் தனியாத் தவிக்கவிட்டுட்டுப் போயிட்டியேடீ பாவீ’’-
தன் நினைவற்று மயங்கிக் கிடக்கிற நேரங்களைத் தவிர மற்ற பொழுதெல்லாம் இப்படியே புலம்பிக் கொண்டிருக்கிறாள் அம்மா.வாயிலே துண்டை அழுந்தப்பொத்தியபடி அவளுக்கு ஆறுதல் சொல்லக் கூடத்துக்கு வருவதும் எங்கே தலையைக் கொஞ்சம் நிமிர்த்தினாலும் என் ‘முகம்’ கண்களில் தெறித்து அழுகையை வெளிப்படுத்தி விடுமோ என்று பயந்தபடி தலையைக் குனிந்து கொண்டு வெளியேறுவதுமாக அப்பா தவிக்கிறார்.தம்பிகள் இருவரும் ஆளுக்கொரு புத்தகத்தைக் கையில் ஏந்தியபடி ஜன்னல் வழியாகத் தெரியும் தெருவை வெறித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘’அம்மா..அம்மா...அங்கே பாரேன்...அத்திம்பேர் வந்திண்டிருக்கார்...ஆமாம்..அவரேதான் வந்திண்டிருக்கார்’’-அம்பிப் பயல் கத்துகிறான்.

‘’நம்மாத்துக்குத்தாம்மா..’’-இது முரளி.

அம்மாவின் சலனமற்ற முகத்தில் ஓர் இறுக்கம் படர்கிறது.அப்பா உணர்ச்சிகளைக் கல்லாக்கிக் கொண்டு மாடிப்படி ஓரமாக நின்று வரப்போகிற மாப்பிள்ளையை எதிர்கொள்ளத் தயாராகிறார்.அம்பியும் முரளியும் ஒரே பாய்ச்சலில் படிகளைக் கடக்கிறார்கள்.

நிமிடங்கள் யுகங்களாகின்றன.
சென்றவர்கள் மூச்சிரைக்கத் திரும்புகிறார்கள்.
‘’அத்திம்பேர்..அத்திம்பேர்னு கத்திண்டு ரோடிலே பின்னாடியே ஓடினோம்.அவர் திரும்பிக் கூடப் பாக்காம போய்ட்டார்ப்பா’’
‘’......................’’
‘’தாலி கட்டின பொண்டாட்டிக்கு ஒரு கொள்ளி போட வரக்கூட மனசில்லாதவர் இப்ப வருவார்னு எல்லாரும் என்ன நம்பிக்கையிலேதான் எதிர்பார்த்தேளோ..’’
அம்மாவின் விசும்பல் வலுக்கிறது.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

‘’ட்டாயம் வைரத் தோடு போட்டுத்தான் ஆகணுமா ராஜம்...அவா ஒண்ணும் வற்புறுத்தறதாத் தெரியலியே..’’

‘’நமக்கு இருக்கிறேஅது ஒரே பொண்ணு...ஆயுசுக்கும் இனிமே வேற யாருக்குப் போட்டு அழகு பார்க்கப் போறோம்?அவா கேக்கறதுக்காகவா ஒண்ணொண்ணும் பண்றோம்..?’’

அம்மாவின் ஆசை மின்னும் வைரங்களாய்க் காதுகளில் ஜொலிக்க,மாலையும் கழுத்துமாய் மடிசார்ப்புடவையுடன் மாமியாரை நமஸ்காரம் பண்ணி எழுந்தபோது அவள் வாயெல்லாம் பல்லாய்....இனிமேல் தேக்கிக் கொள்வதற்குக் கொஞ்சங்கூட பாக்கியில்லை என்கிற மாதிரி அன்பை வார்த்தைகளாலேயே பொழிந்து தள்ள,இதுவே என்றைக்கும் சாஸ்வதமாகி விடலாகாதா என்ற பேராசையுடன் பொழுதுகளைப் பொன்னாய்க் கழித்த நாட்கள்....

வாழ்க்கையின் நிஜங்கள் அவற்றின் உண்மையான பரிமாணத்துடன் குரூரத்துடன் தாக்கிய பிற்பாடு...சூறாவளியில் சிக்கிய மரக்கலமாய்,சிறகுரிந்த கோழியாய்...மண்ணாய்,ஜடமாய்ப் பிறந்த வீட்டுக்குள் திரும்ப அடியெடுத்து வைத்த அவலம்...

‘’உங்காத்து மாட்டுப்பொண்ணுக்கு என்ன உடம்பு?ரெண்டு மாசமா ஆஃபீஸுக்குக் கூட வரலையாமே..என் பொண்ணு சொன்னா..’’

பரிவோடு கேட்பது போன்ற பாவனையில் அடுத்தவர் புண்ணைச் சொறிந்து ஆனந்தம் காண்பதைப் பொழுதுபோக்காகவே கொண்டிருக்கும் இத்தகைய ஜீவன்களுக்கு மாமியார் தரும் மறுமொழி செவிப்பறையில் மோதுகிறது.

‘’அது என்னதான் உடம்போ போங்கோ..கல்யாணம் ஆகி இந்த ஒரு வருஷத்திலே அவ படுத்துக்காம இருந்த நாளை விரல் விட்டு எண்ணிடலாம்.என்னவோ சம்பாதிக்கிற பொண்ணா இருக்காளேன்னு பார்த்தா இப்ப லாஸ் ஆஃப் பேயிலே வேற லீவு போட்டாறது! அதை விட்டுத் தள்ளுங்கோ..காசு இன்னிக்கு வரும்;நாளைக்குப் போகும்.ராஜா மாதிரி இருக்கிற எங்க பாபு தலையிலே இப்படி ஒரு நோஞ்சானைக் கட்டிண்டு அவஸ்தைப்படணும்னு எழுதிட்டானே பகவான்...அதை நெனச்சாத்தான் எனக்கு ஆறவே மாட்டேங்கிறது..இப்பன்னா தெரியறது அவா வலிய வந்து வைரத்தோடு போட்டதோட மர்மம்.என்ன சீர் செஞ்சு என்ன பிரயோஜனம்..எல்லாத்தையும்தான் வைத்தியம்ங்கிற பேரிலே அவ வட்டி போட்டு வாங்கிண்டிருக்காளே’’

இன்னும்..இன்னும்..இன்னும்....

தேள்கொடுக்காகக் கொட்டுகிற அந்த வார்த்தைகளைக் கேட்க மனசுக்குத் தெம்பில்லை.

அம்மாவின் அரவணைப்பில் இல்லாமல், சென்னை ஹாஸ்டலில் இருந்தபோதுகூடக் கல்லுக் குண்டாக இருந்த உடம்புக்கு இப்போது என்ன கேடு வந்து விட்டது...வலது மார்பில் பருப்பளவுக்குச் சிறிதாக முளைத்த கட்டியைப் பற்றி முதலில் கூச்சத்தினாலும் பிறகு அச்சத்தினாலும் சொல்லாமல் விட்டது எவ்வளவு பெரிய தப்பு?யானைப்பசி கொண்ட அரக்கனைப்போல அது ஒரு மார்பைப் பூராவாக அரித்து உளுத்து விட்டு அடுத்ததிலும் கால் கொள்ள ஆரம்பித்திருக்கும் இந்த நிலையில்.....
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ந்த ஜெனரல் வார்டின் முனகல்களோ வெண்புறாக்களாய்ப் பரபரக்கும் நர்ஸுகளின் சுறுசுறுப்போ டெட்டாலும்,மருந்தும் கலந்து வரும் நெடியோ ....எதுவும்..எதுவும்...என் மோனத்தை ஈர்க்க முடியாத நிலையில் கண்களை உத்தரத்தில் பதித்தபடி படுத்திருக்கிறேன்.ஆப்பரேஷன் முடிந்து ஒரு மாதமாக இதேமாதிரித்தான்! நான்கு நாட்களுக்கு ஒரு முறை வந்து கடனைக் கழித்து விட்டுப் போகும் மாமியார்,ஆப்பரேஷனன்று மட்டும் கூடவே நின்று விட்டு அதன் பிறகு ஒப்புக்குக் கூட வந்து எட்டிப் பார்க்காத கணவர்....இவர்களெல்லாம் போகட்டும்!அம்மா..நீ எப்படி?’

மனதில் ஒரு சிறு நெருடல்.
‘’சிஸ்டர் ஒரு போஸ்ட்கார்டும் பேனாவும் கிடைக்குமா?’’

‘’நன்னாத்தான் காரியத்தைக் கெடுத்தே போ.டாக்டர் உன்னை உட்காரவே கூடாதுன்னு சொல்லியிருக்கார்.நீ என்னடான்னா படுக்கையிலே எழுது உக்காந்து கடிதாசி வேற எழுத ஆரம்பிச்சுட்டியே....உங்காத்து மனுஷாளுக்குத் தெரிவிக்கணும்னு எங்களுக்குத் தெரியாதா என்ன? அவா மனசு கஷ்டப்படப்போறதே..பக்குவமா விஷ்யத்தை எடுத்துச் சொல்லணுமேன்னுதான் காத்துண்டு இருக்கோம்!’’

தேன் தடவிய விஷத் துளிகள்!
இன்று மாமியாரின் ‘விஸிட்டிங் டே’என்பது எப்படி மறந்தது எனக்கு?

‘பரவாயில்லே... உனக்குத் தெரிவிக்காம இருக்கிறதே நல்லதுதான் அம்மா! எனக்கு ஒரு தலைவலி வந்தாக் கூடத் துடிச்சுப் போற நீ...ஒரு ஜலதோஷம் பிடிச்சிட்டாக் கூடத் தலையிலே பத்துப் போட்டுக் கஷாயம் வச்சுக் கொடுத்து...ராப்பூரா முழிச்சிருக்கிற நீ...உன் பொண்ணுக்குக் ‘கான்ஸர்’ங்கிற அதிர்ச்சியை எப்படித் தாங்குவே....அதுவும் ஆபரேஷனுக்கு அப்பறம் அவ மென்மையான தன்னோட பெண்மைச் சின்னங்களை இழந்திட்டுக் கிழிச்ச நாரா ஒரு ஜெனரல் வார்டிலே கிடக்கறதை உன்னாலே எப்படிப் பொறுத்துக்க முடியும்..’’

ஆஸ்பத்திரியிலிருந்து ‘டிஸ்சார்ஜ்’ஆகி வீட்டுக்கு வந்தது முதல் எனக்குப் புகல்,நட்பு,சொந்தம் எல்லாம் இந்தக் காமரா உள் ஒன்றுதான்.சாப்பாடு கூட என்னைத் தேடி வந்து விடுகிறது.

கதவு ஓசைப்படும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறேன்.அவர்தான்! நான் இங்கே வந்த பிற்கு எண்ணி இரண்டு முறை என்னைப் பார்க்க வந்திருக்கிறார்.ஏதோ ஆஃபீஸ் தொடர்பான பேப்பர்களில் என்னிடம் கையெழுத்து வாங்குவதற்காக. அதுதான் டாக்டர்கள் என் ஆயுளுக்குத் திட்ட வட்டமாக இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் என்று கெடு வைத்து விட்டார்களே..எத்தனை நாட்களுக்குத்தான் லீவை நீட்டித்துக் கொண்டு போவது? இருந்தாலும் ஆஃபீஸில் கறக்க முடியும் வரை கறக்கலாமே என்று இவர்களுக்கு ஒரு சபலம் இருக்கும்போது ..எந்த வகையாலும் உடம்பால் ஒத்துழைப்புத் தர முடியாத நிலையில் இருக்கும் நான் இதையும் ஏன் மறுக்க வேண்டும்?

எப்பொழுது உள்ளே வந்தாலும் காரியத்தை முடித்துக்கொண்டு வெளியேறுவதிலேயே கவனமாக இருக்கும் அவர்..இன்றென்னவோ நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு உட்காருகிறார்...தொட்டால் கூட ஒட்டிக் கொண்டு விடுமோ என்ற பயத்தில் கட்டிலிலிருந்து நாலடி விலகித்தான்..!

வார்த்தைகளை மென்று விழுங்கியபடி பேச ஆரம்பிக்கிறார்.
‘’கஸ்தூரி..!இதைச் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது என்னவோ கஷ்டமாத்தான் இருக்கு.ஆனா..சொல்லாம இருக்கவும் முடியலை.உன்னைப் பார்த்தா எனக்கு ரொம்பப் பரிதாபமாத்தான் இருக்கு.ஆனா..இதுக்கு மேலே என்னாலே என்ன செய்ய முடியும்னு தெரியலை..’’
‘’..................................’’
’’என்னைப்பத்தியும் நீ கொஞ்சம் நெனச்சுப் பாக்கணும்.நான் ஆசாபாசங்களோட இருக்கிற ஒரு சராசரி மனுஷன்.எனக்கு இன்னும் உணர்ச்சிகள் மரத்துப் போயிடலே.இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி உப்புச்சப்பில்லாம ஒரு வாழ்க்கையை ஓட்டிண்டிருக்கறதுன்னு....அம்மா..இங்கேயே மாதுங்காவிலே ஒரு பொண்ணப்பாத்துப் பேசி வச்சிருக்கா.நீ இந்தப் பேப்பர்லே கையெழுத்து மட்டும் போட்டியானா...’’

பணமாற்றுப் பேப்பர்களில் கையெழுத்துப்போடுவது,எனக்குக் கஷ்டமாக இருக்கவில்லை.ஒரு வகையில் சொல்லப்போனால்,ஏதோ கடன்பட்டுப்போனதைப்போன்ற மனச்சுமையைக் குறைக்கக்கூட அவை உதவியிருக்கின்றன.

ஆனால்..வாழ்க்கை கூட ஒரு பண்ட மாற்றுத்தான் என்று உணர்ந்த அந்த வினாடியில் என்னுள் உடைந்து நொறுங்கிப்போன ஏதோ ஒன்று சிரிப்பாய்ப் பீறிட்டுக் கொண்டு வந்து அலை அலையாய்த் தெறிக்கிறது...முகத்தில்..கண்களில்...நரம்புகளின் அசைவில்...!ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் வெடித்துக் கிளம்பிய மனம்’விட்ட’ஒரு சிரிப்பு.

‘கோபால்ட் ட்ரீட்மெண்ட்’என்ற பெயரில் பெண்மை வடிவிழந்து,வனப்பிழந்து நிற்கும் நான்...கண்ணாடியில் பார்த்தால் எனக்கே அச்சத்தை உண்டாக்கும் என் பாங்கரத் தோற்றம்...அத்துடன் இணைந்து கொண்ட அந்தப்பேய்ச்சிரிப்பு அவருக்குத் திகிலூட்டியிருக்க வேண்டும்.எழுந்து போய் விடுகிறார்.

‘இத்தனை நாள் என்னோட வாழ்ந்ததுக்கு இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்கப் பொறுமை இல்லையா..’
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்து எத்தனை நாளாயிற்று என்பது கூடத் தெரியவில்லை எனக்கு.அவர் கொண்டு வந்து விட்டதும்,அப்பொழுது நடந்த பேச்சு வார்த்தைகளும் மட்டும் கனவில் நடந்தவை போல நினைவில் மின்னி மறைகின்றன.

‘’என்ன இருந்தாலும் இவ்வளவு நடந்திருக்கும்போது நீங்க எங்களுக்கு எதையுமே தெரிவிக்காம விட்டதை எங்களால ஏத்துக்கவே முடியலை மாப்பிள்ளை..உங்களால முடியாமப் போனாலும் ஏதோ எங்களாலே முடிஞ்ச வைத்தியத்தை செஞ்சிருப்போமே..?’’

‘’மாமா நீங்க புரியாமப் பேசிண்டிருக்கீங்க.இந்த வியாதிக்கு அங்கே கிடைச்ச மாதிரி ட்ரீட்மெண்ட் இங்கெல்லாம் கெடைக்கறது கஷ்டம்.எனக்கு இருக்கிற எத்தனையோ ‘கமிட்மெண்ட்ஸ்’லே இவளுக்கு நான் ராஜ வைத்தியம் செஞ்சிருக்கேன்னு சொல்லணும்.நீங்க போட்ட நகையெல்லாம் மருந்துச்செலவிலே கரைஞ்சு போய் அதுக்கு மேலே இன்னிக்குத் தேதியிலே இரண்டாயிரம் ரூபா கடனும் இருக்கு எனக்கு’’

அம்மா செய்து போட்ட நகைகள் எல்லாம்-ஒரு திருகாணி உட்படப் பத்திரமாக மாமியாரின் டிரங்குப்பெட்டியில் தூங்குவதும்,என் மருத்துவச் செலவுகள் எல்லாம் எனக்கு நானே என் ஆஃபீஸ் மூலம் இலவசமாக சம்பாதித்துக் கொண்ட தர்மக்கொள்ளி என்பதும் என் மனது மட்டுமே அறிந்த உண்மை இல்லையா?

‘’தங்கம் போனாப் போகட்டும்னா..! தங்க விக்கிரகமாத்தாரை வாத்துக் கொடுத்தோமே இப்படி அரூபமா ஆகி அழகழிஞ்சு நிக்கிறாளே..ஏண்டி..நீ படிச்சவதானே..எங்களுக்கு ஒரு வார்த்தை சொல்லணும்னு உனக்குத் தோணலையாடி...இந்த சொத்துப் பூராப் போனாலும் பரவாயில்லேன்னு சீமைக்குக் கூடப்போய் வைத்தியம் செஞ்சிருப்போமேடி..’’
அம்மா புலம்பிப் புலம்பியே மாய்ந்து போகிறாள்.அத்தனைக்கும் ஒரு புன்னகைதான் என் பதில்.

‘அம்மா..உன் மடியில் விழுந்து என் தாபங்களைச் சொல்லிக் கதற வேண்டும் போல என் நெஞ்சு துடிக்காமல் இல்லை.ஆனால் என் இழப்பு என்கிற ஒரு சோகச்சுமையையே தாங்கிக் கொள்ள முடியாமல் துடிக்கப்போகிற உன் பலவீனமான இதயத்தில் இன்னும் எத்தனை பாரங்களைத்தான் ஏற்றுவது..’’

இப்பொழுது அம்மா எதுவுமே கேட்பதில்லை.வாய்ச் சொற்களை விட,கை விரல்களில் வழிந்து நெஞ்சையே நீவி விடுகிற பரிவு கலந்த இந்த ஸ்பரிசம்தான் எத்தனை இதமாயிருக்கிறது! எலும்புக் கூடாகி விட்ட இந்த உடம்பை ஏந்திப் பாசமுடன் பரிவதில் அம்மா..நீ என்ன சுகம் காண்கிறாய்?தன்னலக் கலப்பற்றுப் பொழியும் அந்த அன்புப்புனலில் ஆழ்ந்திருந்த ஒரு வேளையில் ...கூட்டை விட்டுப் பறக்கும் ஆன்மப்பறவை ஆகிறேன்.

துக்கம் விசாரிக்க வருவோரின் உண்மையான துக்க விசாரணை..
‘’அவாத்திலேஇருந்து யாருமே வரலை போலிருக்கே’
என்பதுதான். புண்பட்டுக் கசியும் மனத்தின் ரணங்களைச் சூட்டுக் கோலால் கிளறிப்பார்க்கும் சொற்கள்.

கஸ்தூரி என்றொரு பெண் வாழ்ந்ததும்,மலர்ந்ததும்,கருகிப் போனதும்...எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்ப் போய் வெறும் நினைவாய் மட்டுமே நிலைத்து விட்ட இந்த வேளையிலேதான் அவரது திடீர் வருகை ,ஒரு சலனத்தைக் கிளப்பிப் பழைய தூசுப்படலங்களை மீண்டும் எழுப்பியிருக்கிறது.

உள்ளே புயலாய்நுழைகிறார் அப்பா.அவர் முகம் கறுத்துச் சிறுத்திருக்கிறது.நிதானமின்றி வார்த்தைகள் கொட்டுகின்றன.
‘’அந்த ராஸ்கல் இங்கே ஏன் வந்திருக்கான்னு தெரிஞ்சு போச்சு ராஜம்..’’
‘’..................................’’
‘’அந்த ராமநாதனோட வீட்டிலேதான் தங்கியிருக்கானாம்.அவா மட்டும் அப்ப என்னை வற்புறுத்தாம இருந்திருந்தா இந்த சம்பந்தத்துக்கே ஒத்திண்டிருக்க மாட்டேன்..’’

இப்பொழுது இதைப்பேசி என்ன பயன் என்ற பாவனையில் அம்மாவின் முகம் அவரை வெறிக்கிறது.
குரல் கம்ம அவர் தொடர்கிறார்.
‘’நம்ம கஸ்தூரி வேலை பார்த்திண்டிருந்த பம்பாய் ஆஃபீஸிலேயிருந்து அவளுக்குச் சேர வேண்டிய பி.எஃப்,கிராச்சுவிடி எல்லாத்தையும் தான் கிளெய்ம் பண்ணிக்கிறதுக்காக அவளோட ‘டெத் சர்டிஃபிகேட்’வாங்க வந்திருக்காண்டீ...‘டெத் சர்டிஃபிகேட்’வாங்க வந்திருக்கான்...’’

மலை போன்ற அப்பாவின் பொறுமை ஆட்டம் காணுவதைப்போல அவர் உடல் குலுங்குகிறது.

விம்மல்கள் அணை கடந்த வெள்ளமாய்ச் சங்கமிக்கும் அந்த நடுக்கூடத்தில் உறைந்து போன புன்னகையால் அவர்களை அரவணைக்கிறேன் நான்.

[’கல்கி’இதழ் நடத்திய 1979-அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில் முதற்பரிசு பெற்று அச்சில் வந்த என் முதல் கதை]

2 கருத்துகள் :

தமிழ் பையன் சொன்னது…

நல்ல கதை. அந்தக்கால வாழ்க்கையை நன்கு பிரதிபலித்தாலும், பெண்கள் படும் துயரம் இன்றும் விளங்குகிறது. பாபுவுக்கு தண்டனை கிடைக்குமாறு கதை முடிப்பீர்கள் என்று நினைத்தேன். அப்படி முடிக்காமல் இயல்பாக முடித்தது மற்ற அறிமுக எழுத்தாளர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்தி இருக்கும் என்று நினைக்கிறேன். வாழ்த்துகள்.

சித்திரவீதிக்காரன் சொன்னது…

பணத்துக்காக வாழும் மனிதர்களோடு வாழாமல் இறந்துவிடுதலேமேல். அவனோடு வாழ்ந்தாலும் அவள் சம்பளத்தின் மீதே குறியாய் இருந்திருப்பான்.

ஒரு உயிர் விலைபோகிறது..!
நல்ல சிறுகதை.

பகிர்விற்கு நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....