துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

2.8.12

தப்பவிடக்கூடாத தமிழ்ச்சிறுகதைகள்-அறிமுகம்

சிறுகதை என்பது மிக இளம் வயதிலிருந்தே என்னை வசீகரித்த ஓர் இலக்கிய வடிவம்.’குறுகத் தரித்த குறள்’போல வளவளப்பே இல்லாத சிக்கனமான சொற்களில் வேண்டாத வருணனைகளைத் தவிர்த்தபடி- தேவையானதை மட்டுமே நறுக்கெனச் சொல்லி வாழ்வின் ஒரு பக்கத்தைக் காட்டி அதன் மூலம் முழு வாழ்க்கைத் தரிசனத்தின் ஒரு துளியை உணர வைக்கும் அற்புத வடிவம் சிறுகதை.ஒரு நல்ல படைப்பைப் படித்ததும் ‘இதை எங்கோ கண்டிருக்கிறோமே’என்றோ...’இதை உணர்ந்திருக்கிறோமே’என்றோ கணநேரம் எண்ண வைத்து விடுவதே அந்தப் படைப்பின் வெற்றி.

சிறுகதை எழுதும் ஆசை பலர் மனதிலும் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டுதான் இருக்கிறது.ஒரு சிலரே அந்தக்கனலை ஊதிப்பெருக்கிக் கொழுந்து விட்டெரியச் செய்பவர்கள்.அதற்குத் தேவை இசையில் மேற்கொள்ளும் சாதகம் போன்ற இடை விடாத முயற்சியும் பயிற்சியும் என்றாலும் கூட -அதே நேரத்தில் அவற்றோடு கூடவே இன்னொன்றும் தேவையாக இருக்கிறது...அதுவே தொடர்ந்த வாசிப்பு.


சிறுகதை எழுதுவது எப்படி எனக் கேட்டுக் கேட்டுப் பல வாசல்களுக்குச் செல்கிறோம்;பல எழுத்தாளர்களிடம் ஆலோசனை கேட்கிறோம்; அவற்றாலெல்லாம் கிடைக்காத பயனை- பலப்பல வழிகாட்டி நூல்களும் ,கட்டுரைத் தொகுப்புக்களும், பயிற்சிப்பட்டறைகளும் புகட்ட முடியாத சிறுகதை பற்றிய சூட்சுமத்தை.....சிறுகதை எழுதும் கலையை  - நாம் தெரிவு செய்து வாசிக்கும் தரமான எண்ணிக்கையற்ற சிறுகதைகளால் மட்டுமே இலகுவாக மனதில் பதிய வைக்க முடியும் என்பதே  நான் அனுபவத்தில் கண்டடைந்த உண்மை..

தாகூர்,பிரேம்சந்த் போன்றோரின் மொழியாக்கச் சிறுகதைகளில் தொடங்கி
பாரதி, வ வே சு ஐயர்,புதுமைப்பித்தனில் கால் கொண்டு ஜெயகாந்தனில் வளர்ந்து இன்று ஜெயமோகன்,பாவண்ணன்,எஸ் ரா வரை -படிப்படியாக ஒவ்வொரு வளர்ச்சிக் காலகட்டத்திலும் சிறுகதை இலக்கியத் தளத்தில் முத்திரை பதித்த பல நூறு கதைகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்த பிறகுதான் சிறுகதை எழுதும் இலக்கணம்...அதன் மர்ம முடிச்சு என்னுள் அவிழ்ந்து நானும் ஏதோ எழுதத் தொடங்கினேன்...இன்றும் கூட எழுத்தை ஒரு பயிற்சியாக மட்டுமே கொண்டு அதை மேலும் பயிலவும் எழுத்தை இன்னும் கூர்தீட்டிக் கொள்ளவும் - தேர்ந்த சிறுகதைகளைத் தொடர்ந்து வாசிக்கும் பயிற்சியே எனக்குத் துணையாக இருந்து கொண்டிருக்கிறது.

தமிழின் சிறுகதைப்பரப்பு நீண்ட பாரம்பரியமும் பன்முகத் தன்மையும் கொண்டது. தமிழ்ச் சிறுகதை தான் அரும்பிய தொடக்க கட்டத்திலிருந்தே பல்வேறு சோதனை முயற்சிகளுக்கு இடமளித்துக் கொண்டு வருகிறது. குறிப்பிட்ட ஒரே ஒரு எழுத்தாளர் அல்லது குறிப்பிட்ட ஒரு வகைப்பாட்டிலான சிறுகதை என்றுமட்டுமே எல்லைகட்டி வாசிக்கையில் நமக்குள் தானாகவே ஒரு வரையறைக்கோடு விழுந்து விடுகிறது.ஆனால்..சிறுகதை அந்த வரையறைகளையெல்லாம் மீறியது..சிறுகதைக்கு எவ்வளவு கட்டுப்பாடுகள் உண்டோ அதே அளவுக்கு வரம்பற்ற சுதந்திரங்களும் உண்டு. அவை அனைத்தையும் சிறிதாவது சுவைத்துப் பார்க்க நினைத்தால்- பல்வேறு வகைப்பாடுகளில்[variety], பல்வேறு கோணங்களில் எழுதப்பட்டிருக்கும் - பலவகை நிலைப்பாடுகளையும் different schools of thought ஐயும் கொண்ட வேறுபட்ட பலப்பல எழுத்தாளர்களின் சிறந்த ஆக்கங்களைப் படிக்க வேண்டும். அதற்கான வாய்ப்புக்கள் இன்று ஏராளமாகக் கிடைகின்றன.

சென்னையிலுள்ள ‘இலக்கியச் சிந்தனை’அமைப்பு ஒவ்வொரு ஆண்டிலும் வெளிவரும் 12 சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து நூலாக்கித் தொடர்ந்து  பல ஆண்டுகளாக[வானதி பதிப்பக வெளியீடாக] வெளியிட்டு வருகிறது.’இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்’என்ற தலைப்பில் திரு விட்டல்ராவ் அவர்கள் வெவ்வேறு காலகட்டத்தின் சிறந்த தமிழ்ச்சிறுகதைகளை மூன்று தொகுதிகளாக்கித் தந்திருக்கிறார்.[வெளியீடு-கலைஞன் பதிப்பகம்].

ஓரியண்ட் லாங்க்மேன் பதிப்பகத்தின் வெளியீடாக ‘அன்று..’என்னும் தலைப்பில் தேர்ந்த சிறுகதைகள் [1917-1981- 2 தொகுதிகள்] மாலனைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்திருக்கின்றன.

’சிறந்த தமிழ்ச்சிறுகதைகள்’என்ற தலைப்பில் குறிப்பிட்ட சிறுகதையாசிரியர்கள் குறித்த முன் குறிப்போடு கலைஞன் பதிப்பகத்துக்காகவே இன்னுமொரு தொகுப்பை உருவாக்கித் தந்திருக்கிறார் விட்டல்ராவ்.

சாகித்திய அகாதமிக்காக அசோகமித்திரன் செய்திருக்கும் தொகுப்பு,சிறந்த இந்திய மொழியாக்கச் சிறுகதைகளின் தொகுப்பு,பெண்ணியக் கதைத் தொகுப்புக்கள் எனப் பலவும்[இன்னும் கூட விடுபட்டவை இருக்கலாம்;என் பார்வைக்குப் பட்டு என்னிடம் இப்போது உள்ளவற்றை மட்டும் இங்கே தந்திருக்கிறேன்] வேறுவேறான சிறுகதைப் பார்வைகளை நாம் அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கின்றன. இவற்றில் அவ்வப்போது ஒரு சிலவற்றைப் படித்து வந்தாலே சிறுகதை என்னும் அந்த வடிவத்தின் மீதான நமது ஆளுமையில் -அது சார்ந்த நமது புரிதலில் அழுத்தமும்,கனமும்,தன்னம்பிக்கையும் கூடுதலாகும்...

இணையத்தைப் பொறுத்தவரை எழுத்தாளர்கள் திரு ஜெயமோகனும் எஸ்.ராமகிருஷ்ணனும் படித்தே ஆக வேண்டிய அருமையான பல சிறுகதைகளைத் தங்கள் தளங்களில் பட்டியலிட்டிருக்கிறார்கள்;தொடர்ந்து மேலும் பல ஆக்கங்களைச் சுட்டிக் காட்டிக் கொண்டும் இருக்கிறார்கள்.அவற்றில் பல ‘அழியாச் சுடர்கள்’போன்ற தளங்களில் கிடைக்கின்றன.

இந்த வரிசையில் ’தப்ப விடக்கூடாத தமிழ்ச்சிறுகதைகள்’என்னும் தலைப்பில் என்னைப் பாதித்த ஒரு சில சிறுகதைகளை அறிமுகம் செய்து ஒரு கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து வெளியிட இருக்கிறேன். மேற்குறித்த தொகுப்புக்கள் அல்லது பட்டியல்களில் இடம் பெற்றிருக்கும் சிறுகதைகளோடு வேறு சில கதைகளும் இத் தொடரில் இடம்பெறும்.
கூடியவரை கதை ஆசிரியர் குறித்த தகவல்கள் ,கதை இடம் பெற்றுள்ள தொகுப்பு/அல்லது இணைய இணைப்பு ஆகியவற்றையும் கட்டுரையில் குறிப்பிட முயல்கிறேன்..
[முதல் கட்டுரை-அடுத்த பதிவில் ]


3 கருத்துகள் :

ராம்ஜி_யாஹூ சொன்னது…

இது ஒன்லி த்ரைலரா

புதியவன் பக்கம் சொன்னது…

எண்பதுகளில் வந்த இலக்கியச் சிந்தனை தொகுப்புகள் என்னிடம் - சென்னையில் - இருந்தன. அதற்குப் பிறகு புதிய தொகுப்புகள் காணக்கிடைக்கவில்லை. சங்கர நாராயணன் இரண்டோ மூன்றோ பெரிய தொகுப்புகளைக் கொடுத்ததாக நினைவு. சாகித்ய அகாதமி தொகுப்புகளும் என்னிடம் உள்ளன, இவை அருமை என்று சொல்ல மாட்டேன். ஆனால் அசோகமித்திரன் போன்ற பெருமைக்குரிய எழுத்தாளர்களிடம் இல்லாத ஒரு மனோபாவம் இன்றைய பெரிய எழுத்தாளர்களுக்கு உண்டு. யார் தொகுக்கிறார்களோ அவர்களுக்குப் பிடித்த, தெரிந்த, கருத்தொற்றுமை உள்ள எழுத்தாளர்களை மட்டுமே சேர்ப்பது மற்றவர்களை விட்டுவிடுவது - இருட்டடிப்பு செய்வது - என்பதே பெரும்பாலானவர்களின் வழக்கமாக இருக்கிறது. இப்பின்னணியில் உங்கள் அறிமுகங்கள் நல்ல சிறுகதைத் தேடலுக்கு உதவலாம் - உங்களுக்கே கூட. இங்கும் என் வீட்டில் பல தொகுப்புகள் உண்டு. ஒரே பிரச்சினை - நீங்களே வந்து தேர்வு செய்து கொண்டால்தான் உண்டு. சில நாட்களுக்கு முன்னால் தேடியபோது கிடைத்த ஒரு சுட்டி - சிறுகதைத் தொகுப்புகளின் பட்டியல் - உங்களுக்குப் பயன்படலாம்.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=20442&Itemid=139

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நன்றி திரு ராம்ஜி,ஷாஜகான்..
இந்தப் பதிவை நானே அறிமுகம் என்றுதானே சொல்லியிருக்கிறேன் ராம்ஜி!இதைத் தொடர்ந்து இந்த வரிசையில் முதல் பதிவு வெளியாகும்.ஷாஜகான் இங்கு எடுத்துக் காட்டியிருப்பதைப் போல நண்பர்கள் வேறு தரமான நல்ல சிறுகதைகளைப் பரிந்துரைத்தால்-அவை எனக்குப் படிக்கவும் கிடைத்தால்-அவை பற்றி எழுதவும் விருப்பமே.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....